Monday, May 17, 2010
உந்தவயசில...
அதை தூக்காதையுங்கோ பிறகு நாரிகுள் பிடித்துவிடும்,உந்த வயசில ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று மனிசி சொன்னது சுரேஷின் மனசு சிறிது சங்கடபடதான் செய்தது.இப்ப ஜம்பதொன்பது வயசு தானே என்னும் அறுபது ஆகவில்லையே என்று மனதில் எண்ணி கொண்டான்."உந்த வயசு" என்ற வார்த்தையால் அவன் பல தரம் பாதிக்கபட்டுள்ளான்.அவனுக்கு பத்து வயது இருக்கும்,பாடசாலையால் வீடு திரும்பும் போது பக்கத்து வீட்டு அக்காவுடன் ஒரு பெடியன் கதைத்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு அதை அம்மாவிடம் சொல்ல,அம்மா சந்நிநாதமே ஆடிவிட்டாள் உந்த வயசில உப்படியான கதைகள் ஒன்றும் தேவையில்லை என்று அதட்டி கொண்டு இருக்கும் போது அப்பாவும் அவ்விடதிற்கு வரவே அம்மா அவரிடம் விடயத்தை சொல்ல அவர் தனது பங்கிற்கு கன்னத்தில் இரண்டு அடி போட்டு ஓடி போய் புத்தகத்தை எடுத்து படி உந்த வயசில உதுகள் எல்லாம் உனக்கு தேவையில்லாத கதை என்றார்.அவன் அதன் பிறகு காதல் ஜோடிகளை கண்டால் தான் மட்டும் பார்பான் வீட்டில் சொல்வதில்லை இன்று வரை.உயர் வகுப்பு படிக்கும் போது சக மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்தது அவளது அண்ணணுக்கு தெரியவரவே இவனை கூப்பிட்டு உந்த வயசில என்ன காதல் வேண்டி கிடக்கு இனிமேல் தங்கச்சியுடன் சேட்டை விட்டியோ கை,காலை முறித்து விடுவேன் என்று திட்டியது இன்றும் அவனது நினைவுகளிள் வந்து சென்றன.பல்கலைகழகத்தில் காதலியின் கைகளை பிடித்த போது உது எல்லாம் இப்ப வேண்டாம் கல்யாணதிற்கு பிறகு தான் என்று காதலி ஒதுங்கியது,உந்த வயசில இதுகளிள் நாட்டம் காட்டினோமோ படித்து பட்டம் எடுத்த மாதிரி தான் இருக்கும்,அடுத்த மாதம் நடக்கின்ற இறுதி ஆண்டு பரீட்சையை வடிவாக செய்ய வேண்டும் போய் படியுங்கோ என்று செல்ல அதட்டலுடன் சென்றவள் பரீட்சை முடிந்து மறுகை வெளிநாட்டு மாப்பிளையை கரம்பிடித்து இவனது கைதனை உதறி சென்றது இவனது மனதில் இழையோடியது.மனைவியிடம் எல்லாம் பொம்பிளைபிள்ளைகளாக இருக்குது ஒரு ஆம்பிளை பிள்ளை பெற்றால் என்ன என்று கேட்க ஜயோ! உந்த வயசில உது வேண்டி கிடக்கு,"கப்சியூல்,கார்சீட்" உதுகள் எல்லாம் பூட்டி பழையபடி அ - ஆ வில இருந்து தொடங்க வேண்டும் சும்மா இருங்கோ என்று மனைவி அதட்டியது அவனக்கு நினைவில் வந்தது.கொஞ்சம் "ஸ்டைலாக" பெடியங்கள் போல் வெளிகிட்டால் உந்த வயசில உவருக்கு உந்த மைனர் உடுப்புகள் தேவையோ என்று சிலர் பேசுவதை கேட்டே அலுத்து விட்டது.ஆத்மீகத்தில் நாட்டம் கொண்டு தியானம்,யோகம் என்று கண்ணை மூடி கொண்டு இருக்கும் போது உந்த வயசில உதுகள் எல்லாம் உங்களுக்கு ஏன்?பேசாமல் இருங்கோ உதுகள் செய்வதிற்கு இன்னும் காலம் நேரம் இருக்கு நடக்க வேண்டிய அலுவல்களை பாருங்கோ.உதுகளை மறப்பதிற்காக கணணி உலகில் கருத்துகளம் என்று வைத்திருக்கிறார்கள் அங்கு என்று ஏதாச்சும் எழுதுவோம் என்று பார்த்தால் உந்த வயசில உவரிண்ட கருத்துகளை பாருங்கோ வயசிற்கு ஏற்ற கருத்துகளை எழுங்கோ என்று சிலரின் நையாண்டிகள் முதல் மனசியின் வசைபாடல் வரை கேட்ட சுரேசிற்கு மனித வாழ்க்கை வயசிற்கு தடைகளை மனிதனே வித்திக்கிறான் என்று நினைத்தபடியே அடுத்த வயசிற்கு என்ன தடையாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கினான்.உந்த வயசில,உந்த நேரத்தில உவருக்கு உந்த குட்டிகதை தேவையோ என்று வாசகர்கள் நீங்கள் நினைக்கிறது விளங்குது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment