Monday, December 30, 2013

வோர்மல்..(Formal)

சுதாவின் நீண்டநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.அம்மா இவ்வுலகைவிட்டு போகமுதல் தான் சிட்னியில் கட்டிய வீட்டுக்கு ஒருமுறை அழைத்துகாட்ட வேணும் என்ற அவளது ஆசை அன்று நிறைவேறியதயிட்டு ஒரே சந்தோசம்.சுதாவின் அம்மா இப்பொழுதுதான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு வெளிக்கிடுகின்றார்.ஊரில் அயலவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு என வெளிக்கிட தானும் ஒரு நாள் மகளிடம் போவேன் என்று நினைத்துக்கொண்டாள்.அவளுக்கு இப்ப 75 வயசு .மிகவும் கஸ்டப்பட்டு தான் விசா எடுத்தார்கள்.பிணை பணம் 10ஆயிரம் அவுஸ்ரெலியா பணம் கட்டி கடைசி குடும்ப அங்கத்தவர் என்ற பிரிவில் ஒரு மாதிரியாக விசாவை எடுத்துப்போட்டார்கள். விமான நிலையத்திற்கு சுதாவும் மகள் சுருதியும் சென்றிந்தார்கள்.சக்கரநாற்காலியில் அம்மாவை விமானப்ணிப்பெண் தள்ளிகொண்டுவருவதை கண்ட சுதா "சுருதி! கிரான்ட்மா இஸ் தெயர்" என்று கத்தியபடியே ஒடிப்போனாள் .மகளை கண்ட தாயும் உடனடியாக சக்கரநாற்காலியை விட்டெழுந்து ஓடிப்போய் கட்டியணைத்துகொண்டாள் .இருவரும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.இந்த காட்சியை கண்ட விமானபணிப்பெண் திகைத்து ஒரு விநாடி அதிர்ந்து போனாள்.சக்கர நாற்காலி எதற்கு பாவிப்பது என்பதின் வரைவிலக்கணத்தை அறிய வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டாள்.
அதே மனநிலையில்தான் சுருதியும் இருந்தாள்.
"அம்மா இவள்தான் மூத்தவள்"

"அப்படியே உன்னை மாதிரி இருக்கிறாள் ,இரண்டு வயசில் கண்டதற்கு பிறகு இப்பதானே பார்க்கிறேன் என்ட மனுசனின்ட உசரம் அவளுக்கு வந்திருக்கு,அவரும் போய் ஐந்து வருசமாகி விட்டது.,மனுசன் இருந்திருந்தால் இப்ப என்னோட வந்திருக்கும் என்ன செய்யிறது காலம் செய்த கோலம்"என்று கூறியபடியே கண்களை துடைத்துகொண்டாள்.

"Hi Grandmamaa how are you........"
" I am good...தமிழ் தெரியாதோ"
"அவளுக்கு தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கமாட்டாள்"
"அப்ப என்னை மாதிரித்தான் என்று சொல்லு,எனக்கு இங்கிளிஸ் விளங்கும் பேசவராது but I can manage"..
"வீல் செயர் ஒன்றை எடுக்கவோ அம்மா?"

"என்ன பகிடியே விடுகிறாய்,நான் நல்லாய் நடப்பன்,வெளிநாட்டுப்பிள்ளைகள் மாதிரி ஐந்து வயசிலயே கண்ணாடி போட்டு வாழ்கிற கோஸ்டிகளே,நான் வாசிக்கமட்டும் கண்ணாடி போடுகிறன் அதுவும் 50 வயசுக்கு பிறகுதான்..."
"காரை தூர பார்க் பண்ணியிருக்கிறன் அதுதான் கேட்டனான்.அம்மா"
"பிள்ளையாரை பார்க்க இரண்டுகட்டை நடந்து போறனான் உது என்ன பெரிய தூரம்" மூவரும் கதைத்த படியே கார்தரிப்பிடத்தை அடைந்தனர்.

காரினுள் ஏறியவுடன் சுருதி அம்மாவின் பெல்டை போட்டுவிட்டு அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
"நீயும் கார் ஒடுவியே சுருதி"
"ஜெஸ் கிரான்ட்மா"
"அது என்ன கிரான்ட்மா, அம்மம்மா என்று சொல்லு"
"ஒகே அம்மம்மா"
"எங்க அப்பா ?வேலைக்கு போயிட்டாரே"
"ஒம் அம்மம்மா ஒவ் சோர்(off shore) வர வண் வீக் ஆகும்"
"நான் திரும்பி ஊருக்கு போகமுதல் உனக்கு தமிழ் படிப்பிச்சு போட்டுதான் போவன் யு வெயிட் அன் சி" சுருதிக்கு சிரிப்பு வந்து விட்டது அம்மம்மாவின் இங்கிலிஸ் உச்சரிப்பை கேட்டு.
"அம்மா பிளெனில் வந்தது களைப்பா இருக்குதோ"
"எனக்கு என்ன களைப்பு,சின்னவன் விமான பணிப்பெண்ணிடம் எல்லாத்தையும் கொடுத்து கதைத்து விட்டவன்,அவள் வடிவாக என்னை கூட்டிக்கொண்டு வந்தவள்.....மற்றது நான் எல்லோரும் வார எக்கனமிக்ஸ் கிளாசில வரவில்லை..பிசினஸ் கிளாசில வந்தனான்...."

"நித்திரை வந்தால் உதுல சாய்ந்து படுங்கோ'சுருதி அம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிடுங்கோ"
சுருதி அம்மம்மாவின் சீட்டை அஜஸ்ட் பண்ணிவிட்டாள். அம்மம்மா பயணகளைப்பில் நித்திரையாகப் போய்விட்டார்.கார் வீட்டினுள் சென்று நிற்பாட்டியவுடன் அம்மம்மா விழித்து கொண்டார்.திடுக்கெட்டு எழுந்த அம்மம்மா
"அடி என்னடி கார் வீட்டுக்குள்ள நிற்குது"
சுதாவின் வீட்டினுள் காரை நிறுத்தினால்நேராக வரவேற்பறைக்கு செல்லலாம்.காருக்கு ஏற்ற வீடு ...வீட்டுக்கு ஏற்ற கார்.தாயாரைஉள்ளே அழைத்துச் சென்றாள். தமிழ்சினிமாவிலும்,நாடகங்களிலும் பார்த்த வீட்டை நேரில் கண்ட அம்மம்மாவுக்கு தான் நிஜவுலகில் இருக்கிறேனா அல்லது கனவு காண்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
கீழ்தரையில் குளியலறை,மலசலகூடத்துடன்கூடிய பெரிய அறை ,அழகான உயர்தர மெத்தை விரிப்புடன் கூடிய கட்டில் ,கட்டிலுக்கு அருகே இரு விலையுயர்ந்த மேசைகளின் மேல் டெபிள் லாம்ப் இருந்தன.உடுப்புக்களை வைப்பதற்கு என ஒரு அறை சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு நட்சத்திர கொட்டல் அறை போல காட்சி அளித்தது.
"அம்மா உள்ளே வாங்கோ இது தான் உங்கன்ட அறை, குளிச்சு போட்டு வாங்கோ சாப்பிடுவோம்"எனகூறிய படியே குளியலறை கதைவை திறந்து சுடுதண்ணி பைப்,குளிர்தண்ணீர்பைப் போன்றவற்றை விளங்கப்படுத்தி தாயருக்கு குளிக்க உதவிகள் செய்தாள்.குளித்து முடித்து வெளியே வந்தாள் அம்மம்மா .
"அம்மா சாப்பிட்ட பிறகு வீட்டை பார்க்க போறியளோ,இப்ப பார்க்க போறியளோ"
" எனக்கு இப்ப பசிக்கவில்லை ,வா உன்ட வீட்டை பார்ப்போம் முதலில"
" இது வோர்மல் லிவ்விங் ,இது வோர்மல் டைனிங்"இரண்டிலும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாற்காலிகளும் ,சோப செட்களும் போடப்பட்டிருந்தது.
"இது குசினி "
"என்னடி அப்படியே எல்லாம் புதுசா கிடக்கு நீ சமைக்கிற இல்லையோ"
"பின்னுக்கு ஸ்பைஸ்கிச்சின் என்று ஒன்று இருக்கு அதிலதான் சமைக்கிறனாங்கள்,இதுக்குள் சமைச்ச வீடெல்லாம் மணக்கும் "
"இது என்னடி ஊர் கோவிலில் சர்பத் கடையில கலர் கலராக அடுக்கி வைச்சிருக்கிற மாதிரி நீயும் வாங்கி அடுக்கி வைச்சிருக்கிறாய் எனக்கும் உதுல கொஞ்சத்தை தாவேன் குடிப்பம் "
"ஐயோ அம்மா அது சர்பத் இல்லை அது இவரின்ட மினிபார்"
"அது என்ன மினிபார்"
"அ....து அம்மா சாராயப்போத்தல்கள் இவர் பார்ட்டி வைச்சா சினேகிதர்மாருடன் சேர்ந்து குடிக்கிறவர்"
"அப்ப வீட்டுக்குள்ள தவறணை வைச்சிருக்கிறார் உன்ட மனுசன்,அதுசரி உன்ட மனுசன் கலியாணம் கட்டும்பொழுது தண்ணி கிண்னி பாவிக்கிறதில்லை என்று சொல்லிச்சினம் "
""உன்ட மனுசனின்ட கொப்பர்ரும் அந்தகாலத்தில நல்ல தண்ணிச்சாமி அதுதான் மகனும் தண்ணிச்சாமி போல கிடக்குது,நானும் நாலு பெடியள் பெத்து வளர்ந்தனான் ஒருத்தனும் தண்ணி பாவிக்கிறதில்லை"
"அம்மா அது எல்லாம் உங்களோட இருக்குமட்டும்தான் இப்ப பெரியண்ணனின் மெல்பெர்ன் வீட்டில் இதை விட பெரிய பார் இருக்கு,சின்னண்ணன்வீட்டையும் இப்படிதான்,,அப்பா குடிக்கிறதில்லை ஆனால் அண்ணன்மார் குடிக்கினம்,அதற்காக பரம்பரை குடிகாரர் என்றே சொல்லுறது"
"தம்பியவையள் குடிக்கிறவங்களோ,அதுகென்ன குடிச்சா ? வெளிநாட்டில் இது எல்லாம் சகயம்"
"அதென்ன உங்களுடைய பிள்ளைகள் குடிச்சா சகயம்,மற்றவங்கள் குடிச்சா பரம்பரை குடிகாரன் என்கிறது..நல்ல நியாயம்"
"அடியே எங்களுடைய உறவுகள் தப்புசெய்தா அதை மறைச்சு போடவேணும் மற்றவன் செய்தா தூக்கி கதைக்க வேணும் ,அதுதான் உலக வழக்கு"
"உலக வழக்கில்லை,உங்கன்ட ஊர் வழக்கு"
"என்ன மனுசனைபற்றி சொன்னவுடன் கோபம் வருகுதுபோலகிடக்கு,சரி,சரி வா மிச்ச வீட்டையும் பார்ப்போம்"
சுதா தனது வீட்டின் பின்பக்கம் உள்ள ஸ்பைஸ் கிச்சின்,மற்றும் ரம்பஸ் , BBQபோடும் இடம் ,தனது வீட்டுதோட்டம் எல்லாம் சுற்றிக்காட்டினாள்.
"எல்லாம் இரண்டு இரண்டா வைச்சிறுக்கிறீயள்,சாப்பாட்டு மேசை,குசினி,டிவி எல்லாம் இரண்டு"
"வாங்கோ அம்மா மேல போய் பார்ப்போம்""இது மாஸ்டர் பெட்ரூம் இது எங்கன்ட அறை உள்ளே வாங்கோ,"
ஸ்பாவுடன் கூடிய குளியலறை,பில்ட் இன் வோர்ரோப் ,பெரிய டிவி எல்லாம் அந்த அறையிலிருந்தது.
"உன்ட பாத்ரூமிலயும்,உடுப்பு வைக்கிற இடத்திலயும் இரண்டு கட்டில் போடலாம் போலகிடக்கு""இது கோம் தியட்டர் அம்மா"
"அதென்னடி கோம் தியட்டர்"இவர்கள் அங்கே இருக்கும்பொழுது சுருதியும் உள்ளே வந்தாள்.
"கிரான்ட்மா ...அம்மம்மா தியட்டருக்கு போய் படம் பார்க்க தேவையில்லை ,வீட்ட இருந்தே படம் பார்க்க முடியும்,இவினிங் ஒரு படம் போட்டு பார்ப்போம்"
வீட்டை எல்லாம் சுற்றிக்காட்டிய பின்பு மதிய உணவை சுதா தயாருக்கு பரிமாறினாள். அம்மம்மா சாப்பிட்டவுடன் ஒரு சிறிய தூக்கம் போடுவது வழக்கம்.நித்திரையால் எழுந்து சுதா கொடுத்த தேனீரை பருகிகொண்டிருக்கும் பொழுது,வீட்டு அழைப்புமணி அடித்தது.கம்மிங்க் என்று குரல் கொடுத்தபடியே சுருதி ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.
"காய் சுணில்"
"காய் சுருதி"
இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டனர்.இதை பார்த்த அம்மம்மா. இங்கு என்ன நடக்குது என்ற ரீதியில் சுதாவை திரும்பி பார்த்தார். அம்மா அவன் சுணில் முன்வீட்ட இருக்கிறவன் .சிங்களவர்கள், நல்ல சனம் இப்ப உங்களை பார்க்கத்தான் வந்திருக்கிறான்.
"சுணில் சீ இஸ் மை மதர்"
"கலோ அன்ரி"
"கலோ"
சுணிலும் சுருதியும் ஆங்கிலத்தில் எதோ பேசி சிரித்துக்கொண்டிரிந்தார்கள்.இவற்றை பார்த்த அம்மம்மாவுக்கு தலைசுற்றுவது போல இருந்தது. சுணில் விடை பெற்று சென்ற பின்பு
"நீ சிங்களவனோட நல்ல கொண்டாட்டம் போலகிடக்கு,உவங்களால் தானே எங்கன்ட சனம் அநியாயமாக செத்தது"
"அம்மா, சும்மா அரசியல் கதைக்காதையுங்கோ"
"இதில என்னடி அரசியல் கிடக்குது, அவங்களின்ட ஆட்கள்தானே இவ்வளவு சனத்தையும் கொண்டவங்க"
"ஏன் என்கன்ட ஆட்களும் அவங்களை கொண்டவங்கள் தானே"
"ஏய் நீ சும்மா விதண்டா வாதம் பண்ணாதே பக்தியும்,படிப்பும் என்று இருந்த சனத்தை துவக்கு தூக்க வைத்தவன் அவன் தான் இதில எனக்கு மாற்றுகருத்து இல்லை "
"சரி சரி உதுகளை பற்றி நாங்கள் கதைச்சு வீணாக சண்டை பிடிக்காமல் வாங்கோவன் வெளியால நடக்கப் போவம்"
"இரு சீலையை சுற்றிகொண்டு வாரன்"
"உப்படியே வாங்கோவன் "
"சீ சீ ஒரு நிமிசத்தில் சீலை சுற்றிகொண்டு ஒடிவாரன்" இருவரும் வெளியால் நடக்கதொடங்கினார்கள்.வீதியில் காண்பவர்களுக்கு தனது தாயாரை அறிமுகசெய்து வைத்து கொண்டிருந்தாள் சுதா.
"அது சரி இவள் சுருதி குமர் பிள்ளை பெடியளை கண்டவுடன் இப்படி கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்கிறது சரியில்லை,நான் இப்பவும் வேறு மனுசங்கள் பக்கத்தில் இருந்தால் விலத்தித்தான் இருக்கிறனான்.ஒரு கூச்சம் இருக்கு"
"அம்மா இங்க உதெல்லாம் சகயம் ,நானே வேலை செய்யிற இடங்களில் சில நேரம் முத்தம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டு,அவள் இங்க பிறந்து வளர்ந்தவள், இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரிதான் வாழ முடியும்"
"சுருதி ஒரு சட்டை போட்டுகொண்டு போனால் உள்ள போட்டிருக்கிறதெல்லாம் தெரியுது நீ உதுகளை பார்த்து ஒன்றும் சொல்லுறதில்லையோ,உங்களை நான் இப்படியே வளர்த்தனான்.."
"அம்மா அது விலையுயர்ந்த சட்டை பாடசாலை வோர்மலுக்கு வாங்கினது,அப்படியான உடுப்புதான் போடவேணும் எல்லா பெட்டைகளும் இப்படித்தான் போடுங்கள் அப்படி போட்டாத்தான் மதிப்பு".
"எதுக்கு எடுத்தாலும் உங்களுக்கு ஒரு கண்டறியாத வோர்மல் ...."
ஒரு கிழமை சென்றும் சுதாவின் கணவனை வீட்டில் காணாதது அம்மம்மாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. பக்கத்துவீட்டு வெள்ளை இனத்தவன் சுதா வீட்டு குப்பை தொட்டியை தள்ளி வைத்துவிட்டு செல்வதை கண்டுவிட்டார்.அம்மம்மாவுக்கு சந்தேகம் உண்டாகிவிட்டது.உந்த வெளிநாட்டில புருசன்மாரும் வொர்மல்,இன்வொர்மல் என்று இருக்குமோ!!!!!!!!!!!!!!!! என்ட கடவுளே...