Saturday, May 13, 2017

இளமை என்னும் பூங்காற்று

" உயர்தர பரீட்சை எடுத்தவுடன் ண்பர்களுடன் ஊர் சுற்றி  திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கையடக்க தொலைபேசிஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீதுசாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு  தரிசனங்கள்செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்திலவிளையாடிவிட்டுகோவிலுக்கு  போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக  அந்த திருவிளையாடலை செய்வோம்..
நாலு திசையும் தரிசனம் செல்வோம் .சில நாட்களில் இரண்டு திசைகள் தான் சாத்தியப்படும் தரிசிக்க வேண்டிய ஆட்கள் அதிகமாக இருப்பதால்.தரிசிக்க வேண்டிய ஆட்களின் இயற்பெயர்களை சொல்லி தரிசிக்க செல்வதில்லை பட்ட பெயர்களை சொல்லி தான் செல்வது வழக்கம்.இயற்பெயர் சொல்லாமைக்கு முக்கிய காரணம் காலாச்சார காவலர்களின் இருட்டடிக்கு ஆளாக வேண்டும் என்ற பயம். முடி கட்டையாக வெட்டியிருந்தால் "கிப்பி",முடியை அவிட்டு விட்டிருந்தால் "சடைச்சி",முடி  சுருளாக இருந்தால் "சுருளி",ஆள் வெள்ளையாக்விருந்தால் "கோதுமை", முகத்தில் புள்ளியிருந்தால் "புள்ளி", கட்டையாகவும் கொஞ்சம் மொத்தமாகவும் இருந்தால்" வாத்து "அல்லது "தாரா" , நாங்கள் கிண்டல் பண்ண அவர்கள் முறைத்து பார்த்தால் "காளி", எதிர்த்து கதைத்தால் "வாயாடி"அல்லது "கறிக்காரி"இப்படி அழகாக பட்டங்களை சூட்டி..  கெளரவித்து... மகிழ்வது எங்களது வழக்கம்.
அப்படி ஊர் சுற்றிதிருந்தவர்கள் அநேகர் சொந்தநாட்டிலேயே பட்டங்கள் பெற்று புலம் பெயர்ந்து விட்டார்கள் .இன்னும் சிலர் புலர்பெயர்ந்த பின்பு பட்டங்கள பெற்றார்கள்...சிலர் பட்டங்கள் பெறாமலே வாழ்க்கையை கொண்டு போகிறார்கள். இப்பொழுது அவ‌ர்களில்  அநேகர் ஐம்பது வயதை தாண்டிவிட்டார்கள்.
வட்ஸப்பில்...குறுந்தகவல் வந்துள்ளது என கைத்தொலைபேசி மின்னிமின்னி அறிவித்தது. செய்தியை படித்தான்.
"மீட் அட் த ரெஸ்டொரன்ட்  அட் சிக்ஸ்"
 லண்டனிலிருந்து வந்திருக்கும் நண்பனை சந்திப்பது என்று ஏற்கனவே முடிசெய்திருந்தார்கள் ஆனால் இடம் தெரிவு செய்வில்லை தற்பொழுது தெரிவு செய்துவிட்டு குகன் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறான். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.ரெஸ்டொரன்டில் கார் பார்க் வசதி குறைவாக இருக்கும் தன்னையும் வந்து அழைத்து செல்லுமாறு கேட்டிருந்தான் குகன்.
காரை பார்க் பண்ணிவிட்டு லண்டன் நண்பனை ஒடி போய்கட்டிபிடித்து நீண்ட நாட்களின் பின்பு சந்தித்தது மகழ்ச்சி என்று ரஜனி ஸ்டைலில் அன்பை தெரிவித்தேன்.
"இத்தாலியன்,இந்தியன் ,தாய்,சைணிஸ் எந்த ரெஸ்ரோர‌ன்ட்டிற்கு போகப்போறீயள்"
"மலேசியனுக்கு புக் பண்ணிபோட்டேன் அதை கான்சல் பண்ணுவோமா".
எல்லோருமாக‌ மலேசியனுக்கு போவதாக முடிவெடுத்தோம்.
 மலேசியன் பணிப்பெண் வரவேற்றாள்.
 "எத்தனை பேர்"
"ஐந்து பேர் "
மேசையை காட்டியவள் மெணுப்புத்தகத்தையும் தந்து சென்றாள்.
கலர் கலராக படங்கள் ஒவ்வோரு சாப்பாட்டுக்கும் ஓவ்வோரு பெயர்கள்,சாப்பாட்டை தெரிவு செய்வதே ஒரு குழப்பமாக இருந்தது.

ஆல் இன் ஆல் கந்தர்.
 கந்தையா கடையில் கந்தர் அரைக்கை பெனியனுடன் சார்த்தை மடிச்சு கட்டிக்கொண்டு டி மாஸ்டர்,கசியர்,சேவர் மூன்று வேலையும் பாரத்துகொள்வார் ஆல் இன் ஆல் கந்தர். அவரின்ட கடைக்குள் போனால் மூன்று வடை இரண்டு போன்டா ஒவ்வொரு தடவையும் இதை தான் கொண்டு வந்து வைப்பார்.பத்து பேர் போனாலும் அதே அளவுதான் ஐந்து பேர் போனாலும் அதுதான் அவரின் கணக்கு. அண்ணே டீ என்று மேசையிலிருந்து கத்துவோம் ஐந்து பேர் போனால் மூன்று பேருக்கு போட்டுமேலதிகமாக‌ இரண்டு கிளாஸும் கொண்டுவந்து வைப்பார். அவருக்கு தெரியும் எங்களது பொருளாதார நிலமை.
IMG_1462.jpg
படம் காப்புரிமை ஜீவன் சிவா
கடைக்கு முன்னால் கண்ணாடி அலுமாரியுண்டு அதில் இடியப்பம்,புட்டு,இரண்டுவிதமான வடை உழுந்து வடை ,கடலை வடை  ,போன்டா,சூசியம் இதுதான் அவரின் ஒவ்வொரு நாளைய மெணு.இவற்றுடன் சிகரட்டும் சுருட்டும் கல்லாவிற்கு பக்கத்தில் வைத்திருப்பார். பழைய செய்திதாளை வெட்டி கத்தையாக கட்டி தொங்கவிட்டிருப்பார்.அதுதான் செவியட்.
 கடைக்குள்ளிருந்து சிகரட்டும் தேனீரும் அருந்தும் ஐயா மாரை பார்த்தவுடன் நண்பர்களுக்கும் அந்த எண்ணம் வந்து ,தம் அடிக்க சுத்தந்திரம் கிடைக்கவில்லையே என்று புறு புறுத்தபடி ஒதுக்குப்புறம் தேடுவார்கள்...ஆரம்பகாலங்களில் திருட்டு தம் அடிக்க கல்லுண்டை வெளிவரை சென்றிருக்கிறோம்.சிகரட் வாங்குவதில் எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் யாராவது பெரிசுகள் வீட்டாருக்கு சொல்லி போடுவார்கள் என்ற பயம். ,தம் அடிக்க வேணும் என்று ஒரு சிலருக்கு ஆசை ஆனால் பல‌ உத்தம புத்திரர்களுக்கு விருப்பமிருக்காது.தம் அடிக்கிற கோஸ்டிகள் ஒசியில் பிளேன் டி குடிச்சு போட்டு அந்த காசுக்கு சிகரட் ஒன்று இரண்டை  வாங்கி பொக்கற்றில் வைத்து கொண்டு மறைவிடம் தேடி ஒதுங்குவார்கள். உந்த சிகரட்டிலும் தராதரம் இருந்தது கண்டியளோ மிகவும் மலிவானது வோர் எசஸ்,பிறகு திரி ரோசஸ்,பிரிஸ்டல், விலை உயர்ந்தது கொல்ட்லீவ். மால்பரொ என்ற ஒரு பிராண்ட்டிருந்தது அதை கொழும்புக்கோஸ்டிகள் தான் அதிகம் பாவிப்பினம்.25 சதத்திற்கு   இரண்டு வொர் எசஸ் சிகரட் வாங்கலாம். இப்படிதான் நானும் தம் அடிச்சு பார்ப்போம் என்று ஒன்றை வாயில வைச்சு இழுத்தேன் பிரக்கடிச்சு கண்னிலிருருந்து கண்ணீர் வரத்தொடங்கி விட்டது.வாயும் ஒரு கச்சலாக இருந்தது .அதன்பின்பு சிகரட்டை கைவிட்டு கள்ளை தழுவிகொண்டேன்.
"நண்பர்களை கண்ட சந்தோசம் பழைய கந்தர் கடை என நினைத்து "அண்ணே ஒடர் ரெடி"
என்று கத்த வாய் வந்தது இருந்தும் சுதாகரித்துகொண்டேன் .
மேசைக்கு அருகிலிருந்த மணியை அடிக்க நவீன கருவியுடன் வந்தவள்
"ஒர்டெர் பிளிஸ்" என்றாள்
ஐந்து பேரும் ஐந்து விதமான உணவு வகைகளை ஒடர் கொடுத்தோம்.
prawn mee, prawn noodles
ஒரு நண்பன் சொன்னான் ஐந்து பிளேட் எடுத்து ஐந்து விதமான சாப்பாடுகளையும் எல்லொரும் பகிர்ந்து உண்போம் என்று, அவன் விருப்பபடி பகிர்ந்துண்டோம்.
 சலாட்டுக்குள்ளிருந்த தக்காளி துண்டை முள்ளுக்கரண்டியால் கூத்தி எடுத்தபடியே
"எங்களோட படிச்ச தக்காளி இப்ப எங்கயடாப்பா"
"அவள் இப்ப கனடாவில் இருக்கிறாள்,இரண்டு  மகள் மெடிசின் செய்யினம்"
"மனிசிமார் பக்கத்தில இல்லை என்ற துணிவில பழைய காய்களை பற்றி கதைக்கிறீயள் "
"மனிசிக்கு நான் எல்லா கதையும் சொல்லி போட்டன்,"
"நீ என்ன தக்காளியை காதலிச்சனீயோ"
"நான் காதலிச்சனான் அவள் காதலிக்கவில்லை இரண்டு மூன்று லவ் லெட்டர் கொடுத்தனான் அவள் வாசிக்காமல் கிழிச்சுபோட்டாள்"
"பிறகு ஏன்டா அவளின்ட சரித்திரத்தை இப்பவும் அறிஞ்சு வைச்சிருக்கிறாய்"
"I don't know....I think that's also a kind of love"
தக்காளி,முருங்கை ,வாத்து,கிப்பி,காளி எல்லோரினதும் அப்டெட் வந்து போயின.
பில் கொண்டு வந்தாள் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு கொடுக்க போனோம் ,எதை எடுப்பது என்பது காசாளருக்கு பெரிய தலையிடியாக இருந்திருக்கும்.கடைசியில் ஒருத்தர் வெற்றி பெற்றார்.
வெளியே சிகரட் பிடித்துக்கொண்டு இருவர் நின்றனர்.மூக்கை மற்ற பக்கம் திருப்பிகொண்டு எல்லோரும் சென்றோம்.பப்ளிகா சிகரட் பிடிக்கிறதை தடை செய்ய வேணும் எண்டு பேசிய படி நடந்து செல்லும் பொழுது பப்புக்கு வெளியே மது கிண்ணத்துடன் ஆண்கள் பெண்கள் வயது வித்தியாசமின்றி இயற்கையை ரசித்தபடி இருந்தனர்.
நாம் அதையும் தாண்டி எமது காரை நோக்கி சென்றோம்...

இளமை எனும் பூங்காற்று....என்ற பாடாலை விசிலடித்த படி வீட்டு கதைவை திறந்தேன்
 என்னப்பா 30 வயது குறைந்த மாதிரி துள்ளி கொண்டு வாறீயள்"
அந்த நாள் ஞாபகங்கள் வந்ததே வந்ததே  கண்மணி கண்மணி..