Tuesday, September 29, 2015

ஒபன் விசா


சுன்னாகம் ரயில் நிலையத்தில்  வழமைக்கு மாறாக அன்று சன நடமாட்டம் அதிகமாக இருந்தது.வழமையாக பாடசாலை விடுமுறை நாட்களிலும்,கோயில் திருவிழா காலங்களிலும் தான் வழமைக்கு மாறாக சன நடமாட்டம் இருக்கும் ஆனால் இன்று ஏன் இப்படியிருக்கு என்றவினா எனக்கும் , அப்பாவுக்கும் ஏற்பட்டது
"பள்ளிக்கூட விடுதலை விட்டாச்சோ"
"இல்லை பப்பா"
"ஏன் இவ்வளவு சனமாக இருக்கு,ரெயினில இருக்க இடம் கிடைக்குமோ தெரியவில்லை,இப்படி தெரிதிருந்தால் முதலே கே.கே.எஸ் க்குபோய்யெறியிருக்கலாம்"
"நான் முன்னுக்கு ஒடிப்போய்  ஏறி இடம் பிடிக்கிறேன் நீங்கள் பின்னுக்கு வாங்கோ"
"நீ ஒன்றும் ஒடிப்போய் இடம் பிடிக்கதேவையில்லை ,இடம் இல்லயென்றால் நின்று கொண்டு போகலாம் ஒடிப்போய்யெறி கை காலைமுறிச்சுப்போடதை"
தந்தையின் பேச்சை கேட்டு நல்ல பிள்ளையாக நின்றான் சுரேஸ்.
இளைஞர்களும் டுத்தர வயதினரும் அதிகமாக காணப்பட்டனர்எங்கள் ஊர் அண்ணர் ஒருத்தரும் அந்தகூட்டத்தில் நின்றார்.
விடுப்பு அறிவதில் சிறுவயதிலிருந்தே  எனக்கு நல்ல விருப்பம்.உடனே அவர் நின்ற இடத்திற்கு சென் றேன் விடுப்பு அறிவதற்காக‌  .
"அண்ணே,கொழும்புக்கே"
"இல்லை ஜேர்மனுக்கு"
"பகிடி விடாதையுங்கோ எங்க போறீயள்"
"உண்மையடா பொய் என்றால் அந்த நிற்கிறார் எங்கன்ட வாத்தியார் அவரிட்ட போய் கேள்"
வாத்தியாருக்கு நாற்பது வயது இருந்திருக்கும் நாடகம்,சினிமா,கவிதை ,கதை என்று திரிந்தவர் நிலையான ருமானம் இல்லை .வீடுவீடாகசென்று டியுசன் கொடுப்பார்.ஆனால் அதுவும் நிரந்தரம் இல்லைவழமையாகஇந்த மனுசனுக்கு ஒரு நிரந்தர வேலையில்லை கதை ,கவிதை,நாடகம் என்று ஒரு சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத வேலையை பார்த்துகொண்டு திரியுது என திட்டும்  விமலாக்கா அன்று அவருக்குபக்கத்தில் இரு குழந்தைகளுடன் அழுதுகொண்டிருப்பதை கண்டவுடன் உண்மையாகவே இவர்கள் ஜேர்மன் போகதான் போறார்கள் என்பதுஉறுதியாகிட்டுது ,என்னை கண்ட விமலாக்கா ஏற்கனவே போர்த்தியிருந்த முந்தானையை தனது கழுத்து தெரியாத படி இழுத்து கொண்டேமூக்கை சீறினார் . புகையை தள்ளியபடியே  ஆடி அசைந்து வந்து கொண்டிருந்த புகைவண்டியை கண்டவுடன் விமலக்காவின் அழுகைஎல்லை மீறியது.ஏற்கனவே புகையிரதம் மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்ததுசுன்னாக ரயில் நிலையத்தில் ஏறிய எமக்கு இருப்பதற்குஇடம் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது.
கமலண்ணரும்வாத்தியாரும் பாய்ந்து ஏறி மூன்று இடம் பிடித்திருந்தனர்.என்னை அங்கு வருமாறு சைகை காட்டினர்.நானும் அப்பாவும்அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றோம் அப்பருக்கு இடத்தை கொடுத்துவிட்டு அருகில  எமது சூடகேஸை வைத்து நான் அதன் மேல்இருந்து கொண்டேன்.புகையிரதம் வெளிக்கிட தொடங்க விமலக்கா விக்கி விக்கி அழத்தொடாங்கிட்டா அதை பார்த்து பிள்ளைகள் அழஅவர்களை பார்த்து வாத்தியாரும் கண் கலங்கி நின்றார்.
புகையிரதத்தில் பெரும்பான்மையினர் இளைஞர்களாக இருந்தனர்.எங்கன்ட ஊரிலிருந்தே குறைந்தது ஐந்து பேர் அந்தபுகையிரத்திலிருந்தார்கள் எல்லோரும் ஜேர்மன் செல்வதற்கான பயணத்திலிருந்தார்கள்.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை தாண்டும் வரை எல்லோரும் மிகவும் அமைதியாக இருந்தனர் .உறவினரை பிரிந்த கவலை அவர்களின்முகங்களில் தெரிந்தது.
கமலண்ணர்தான் அந்த அமைதியை களைத்தார்.
வாத்தியார் உங்கட்ட   எஜன்ட் காரனின் நம்பரும் விலாசமும் பத்திரமா இருக்கோ ?"
"இருக்கு , இந்த பாக்கில என்ட எதிர்காலம்  தங்கியிருக்கின்றது,இதில பாஸ்போர்ட் எடுக்க வேண்டிய பொலிஸ் கிளியரன்ஸ் பிறப்புச்சன்றிதழ்அது ,இது எல்லாம் இதுக்குள்ளதான்....."என சொல்லியபடி தனது சிறிய கைப்பையை மடியில் மிகவும் கவனமாக வைத்திருந்தபடியே 
ன்னையும் அப்பாவையும் பார்த்து
 "நீங்கள் எந்த எஜன்ட் எவ்வளவு காசு கட்டினீங்கள்"
"நாங்கள் கொழும்புக்கு போறோம் அதற்கு ஏன் எஜன்ட்"என்றார் அப்பா.
"அண்ணே பகிடி விடாதையுங்கோ அப்பரும் மகனுமா வெளிக்கிட்டியள்சும்மா பொய் சொல்லதையுங்கோ"
"எனக்கு உனக்கு பொய் சொல்ல வேணும் என்று அவசியமில்லை உண்மையை சொன்னால் நம்புங்கோ,என்ட மூத்தவன் சவுதிக்கு இரண்டுநாளையில போறான் அவனை வழியனுப்ப கொழும்புக்கு போறன்"
"சொறி அண்ணே! ,நான் நினைச்சன்  எல்லோரையும் போல நீங்களும் ஜேர்மனுக்கு போகப்போறீயள்  என்று"
"அது சரி எல்லோரையும் ஜேர்மன் காரன் சும்மா கூப்பிடுறானே"
"ஜேர்மனுக்கு ஒபன் விசாவாம்,எஜன்ட் காரன் தான் எல்லாம் செய்யிறான்.மனிசியின் தாலிகொடியையும் நகையையும் அடைவு வைச்சுதான்எஜன்டகார்னுக்கு காசை கொடுத்தனான்சொல்லும் பொழுது அவரது கண்கள் கலங்கியது.
அப்பாவும் நானும் அமைதியாக இருந்தோம் .அப்பா தொடர்ந்து அவரிடம் கேள்விகளை கேட்பதை தவிர்த்தார்எனது விடுப்பு கேட்கும் ஆர்வம்அந்த அமைதியை குழப்பியது.
"ஒபன் விசா என்றால் என்ன"
ஜேர்மனுக்கு செல்ல இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
ஒரு நாட்டில இருந்து இன்னோரு நாட்டுக்கு போறதற்கு விசா எடுக்கிறதற்கு காரணம் காட்ட வேணும் ,ஜேர்மன்பிராண்ஸ் போன்ற நாடுகள்சில சமயம் அரசியல் தஞ்சம் கொடுக்கிறவையள்.பலஸ்தீனம் லெபனான் போன்ற நாடுகளிலிருந்து போறவையளுக்கு நேரடியாக அரசியல்தஞ்சம் கொடுத்திருக்கினம்.....அது போன்று 77 ஆம் ஆண்டு இனக்கல்வரத்திற்கு பிறகு எங்கன்ட ஆட்களுக்கும் கொடுக்கினமாம் என்றுவீரகேசரியில ஒரு கட்டுரை கிடந்தது அதுதான் சனம் வெளிக்கிட்டிருக்கு போலகிடக்கு என அப்பர் தனது அரசியல் அறிவால் விளக்கம்கொடுத்தார்.
அந்த கொம்பார்ட்மன்டில் அன்று அதிகமாக பாவிக்கப்பட்ட சொற்கள் எஜன்ட்,விசா,காசு,பாஸ்போர்ட் ,லுவ்தான்சா,டரவலெர்ஸ் செக்.....
லுவ்தான்சா என்ற சொல்லும் எனக்கு புதுசாக இருந்தது.எல்லாத்துக்கும் விளக்கம் கேட்க போய் அப்பாவிடம் ஏச்சு வாங்குவதைதவிர்த்துகொண்டேன்.
"சிங்களம் தெரியாது அண்ணே எங்களை வெள்வத்தைக்கு போற‌   பஸ்சில ஒருக்கா ஏத்திவிடுங்கோஎன கமலண்ணர் கேட்க அப்பரும்
"பாஷை தெரியாத‌ ஜேர்மனுக்கு துணிந்து தனியா வெளிக்கிட்டியள் உதுல இருக்கிற கொழும்புக்கு போக பயப்பிடிறீயள்"
"உவங்கள் சிங்களவன்கள் எங்களை பயப்படுத்தியல்லோ வைச்சிட்டாங்கள்"
"ம்ம்ம்ம்ம்ம்"
மெல்ல மெல்ல சனங்கள் நித்திரை கொள்ளதொடங்கிவிட்டார்கள் நானும் சூட்கேஸ்விட்டு எழும்பி,  இருக்கையின் விழிம்பில் சாய்ந்தபடிநித்திரையை கொள்ளதொடங்கினேன் . இரட்டை கயூ,தெம்லி,அன்னாசி,வட வட ,காப்பி காப்பி ஒலிகள் மக்களை விழிப்படைய வைத்தது.
கோட்டை நிலையம் நெருங்குகின்றது என்பதற்கு அறிகுறியாக மக்கள் தங்களது பொதிகளை  மேலெ இருந்து இறக்கி கொண்டிருந்தார்கள்சிலர் தங்களது தலைமுடியை வாரிகொண்டிருந்தனர்.ஏறுவதற்கு இருந்த சுறு சுறுப்பு இறங்குவதிலும் மக்களிடையே காணப்பட்டது.
புகையிரதம் குலுக்களுடன் நிற்க எல்லோரும் முன் நின்றவர்களின் பின்பக்கத்தில் ஒரு இடி இடித்து சொறியும் சொல்லி இறங்கதொடங்கினோம்.
அவர்களை வெள்ளவத்தை பஸ்ஸில் ஏற்றிவிட்டு நாங்கள் நாரகேண்பிட்டிக்கு சென்றோம்.போய் கடிதம் போடுவதாக சொன்னார்கள் கடிதம்இன்றுவரை போடவில்லை .அவர்கள் எங்களது விலாசத்தை கேட்கவில்லை பிறகு எப்படி பதில் போடுவது.
ஒரு கிழமையால் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றோம் .நண்பர்கள் கேட்டார்கள் ஜேர்மனுக்கு போகாமல் ஏன் திரும்பி வந்தனீஎஜன்ட் ஏமாத்திபோட்டானாஎன்று உண்மையை சொன்னேன் நம்புவதற்கு கஸ்டப்பட்டார்கள் . வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார் ஏன்டா ஒரு கிழமையாவரவில்லை ஜேர்மனுக்கு போக முயற்சித்தனீயோ?.இல்லை சேர் அண்ணாவை சவுதிக்கு பயணம் அனுப்ப போனனான்,அவரும் நம்பாமல்லீவு லெட்டர் கொண்டு வந்தனியோ என்றார்.கொடுத்த பின்பு சரி போய் இருந்து படிக்கிற பாட்டை பார் .வெளிநாடுகளுக்கு போய் அழிஞ்சுபோகாதையுங்கோ,என்றார்.இரண்டு மூன்று கிழமைகளின் பின்பு ஜேர்மன் போகும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவடைய தொடங்கியது.
ஒபன் விசா அறிவி த்த‌காலகட்டத்தில் லுவ்தான்சா விமானத்தில் ஜெர்மனுக்கு பயணிப்பதற்கான டிக்கட்டும் 500 யு.எஸ் டொலருக்கு டிரவலர்ஸ் செக்கும்  இருந்தால் போதும்.இந்த வசதியை பாவித்து ஒரு தொகுதி இளைஞர்கள் ஜேர்மன் போய் சேர்ந்துவிட்டார்கள் .இரண்டு மூன்று கிழமையால் அந்த கதவும் அடை பட்டுவிட்டது. இதனால் சில இளைஞர்கள் ஊருக்கு திரும்பி வந்தார்கள்.எஜன்ட் மீண்டும் வேறு பாதைகளால் அழைத்து செல்வதாக உத்தரவாதம் தந்ததாக‌ ஊர் திரும்பிய இளைஞர்கள் சொன்னார்கள்.சில இளைஞர்களை கொழும்பு இரத்மலான‌ விமானநிலையத்தில் ஏற்றிவிட்டு பாலாலியில் இறக்கிவிட்டதாக பத்திரிகையில் செய்திகள் வந்தன.
சந்திகடையில் மரக்கறி வாங்கி கொண்டு நிற்க்கும் பொழுது,
"சுரேஸ் அவர் சுகமாய் போய் சேர்ந்திட்டார் நேற்றுத்தான் கடிதம் வந்தது"
சந்தோசம்பிறகென்ன அடுத்த பிளைட் உன்கன்ட தான்"
"இரண்டு ருசம் எடுக்கும் நான் போறதற்கு"
விமலாக்கா தனது கழுத்து தெரியாமால் மீண்டும் முந்தானையை  இழுத்து மூடினார் .அவர் முந்தானையை ஏன் எனக்கு முன்னாள்இழுக்கின்றார் எதாவது சிக்னலாக இருக்குமோ என எனது அடி மனத்துக் குரங்கு உசுப்பேத்தியது.பதின்ம வயது ஆசைகள் கற்பனைகள்தட்டிவிட்டது.
வெளிநாடுகளில்பணிபுரியும்  ஆண்களின் மனைவிமார் வேறுஆண்களுடன் பேசிபழகினால் உடனே நாங்கள் அந்தபெண்ணைபற்றி ஒரு விததப்பு கணக்கு போட்டு கொள்வோம்.அப்படி விமலக்காவை நான் எடை போட்டேன்.
"அக்கா நான் பின்னேரம் வீட்டை வாரன் எதாவது உதவி தேவையென்றால் சொல்லுங்கோ"
"நீ வீட்டை வராதை ,உனக்கு வீண் கஸ்டம் எதாவது தேவை என்றால் நான் உன்ட வீட்டை வாரன்என முகத்தில் அடித்தால் போல சொன்னார்.
.அந்த காலத்தில்தான் மடிச்சு வைக்கிற குடை சந்தைக்கு வந்திருந்தது.அத்துடன் புது நைலக்ஸ் சேலைகளும் கலர் கலராக பாவனைக்குவரதொடங்கியிருந்தது.விமலக்கா இவற்றின் சொந்தகாரார் என்ற நிலைக்கு உயர்ந்திருந்தார்.வங்கியில் பணம் எடுக்க வந்தவர் தவறுதலாககுடையை மேசைமேல் வைத்து விட்டு சென்றுவிட்டார்.அதை கண்டவுடன் அடியேனின் மனம் அலை பாய்ந்ததுஉடனே அந்த குடையைகொடுத்திருக்கலாம் ஆனால் மனம் வீடு சென்றுகொடு என்றது.சில மணித்தியாலங்களின் பின்பு அவரது வீட்டு படலையைதட்டினேன்.மூத்தமகள் வந்து
 "அங்கிள் என்ன வேணும் அம்மா வீட்டில வேலையாக இருக்கின்றா"
"அம்மாவின் குடை பாங்கில விட்டிட்டா அதுதான் கொடுக்க வந்தனான்"
"தாங்க் யூ அங்கிள்குடையை பறித்து கொண்டு அம்மா உங்கன்ட குடை என கத்தியபடி உள்ளே ஒடினாள்
அதன் பின்பு நான் அங்கு செல்வதை தவிர்த்து கொண்டேன்.
இரண்டு வருடங்களின் பின்பு ஊரில சனம் கதைச்சுதுகள் விமலக்கா ஜேர்மனுக்கு போய்விட்டார் என்று.அவர் ஒபன் விசாவில போனவராஅல்லது சுடன்ட் விசாவில போனவரா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.விமலக்கா ஜேர்மனுக்கு போனது மனதில்கவலையை ஏற்படுத்தியது.எனது உயர்தர படிப்புக்களும் பெரிதாக கை கொடுக்காமையால்  எஜன்ட் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும்முயற்சியில் ஈடுபட தொடங்கினேன்.
பத்திரிகைகளில் சில எஜன்ட காரரின் விளம்பரங்களை வாசித்துகொண்டிருக்கும் பொழுது ஒரு சில செய்திகள் என்னை பயத்தில் ஆழ்த்தியது.அதில் ஒன்று எல்லை தாண்டும் பொழுது பெற்றொல் பவுசரில் 7 பேர் மரணம்.பெற்றோல் பவுசரில் எப்படி பயணிப்பது என்ற கேள்விதான்முதலில் எழுந்தது.பெற்றொல் பவுசர் என்றவுடன் எங்கள்  நாட்டில் உள்ள  இலங்கை என எழுதிய எழுத்துடன் சிவப்பு நிறத்தில்  ஒடித்திரியும்பவுசரின்  நினைவு வந்ததுஅதில ஏழு பேர் போவது எப்படி ?பின்னுக்கு பெற்றோல் இருக்கும் அதில எப்படி பயணிப்பது என்ற கேள்வி என்னைதுளைத்தெடுத்தது.
ஏற்கனவே எல்லைதாண்டப்போய் பிடிபட்டு நாடு திரும்பிய அண்ணமார் சிலர் ஊரில இருந்தார்கள் .அவர்கள் எனது சந்தேகத்தை தீர்த்துவைத்தார்கள்.சில நாடுகளில் பெற்றோலை முற்றாக காலிசெய்த பின்பு ,வெறும் பெற்றோல் வண்டி திறும்பி  வேறு நாடுகளுக்கு போகும்பொழுது அதனுள்ளே பயணிக்க வேண்டும் சில மணித்தியாலங்கள் என்றால் தாக்கு பிடிக்கலாம் ஆனால் பல மணித்தியாலங்கள் என்றால் ஆளுக்கு மேலோகத்திற்கு விசா கிடைச்சிடும் என நகைச்சுவையாக அண்ணமார் சொன்னார்கள். அவர்கள் மேலும் பல பயங்கர சம்பவங்களை சொன்னார்கள்,கொன்டைனைரிலும் சிலசம‌யம் எல்லை கடக்க வேண்டிவ‌ரும்,கொன்டைனரில சாமான்களை ஏற்றி நடுவில  ஆட்களை இருத்தி மீண்டும் சாமான்கள் மூலம் மறைத்து கதைவை மூடிவிடுவார்கள் எல்லை தாண்டியவுடன் உயிர் தப்பினால் விசா கிடைக்கும்  .காடுகளினுடாக கட‌க்கும் பொழுது குளிர்தாங்கமுடியாமல் மரணித்தவர்கள் பலர். பொலிஸில் மாட்டுப்பட்டால் எங்களை மாதிரி திரும்பி நாட்டுக்கு வர வேண்டும்.
இவ்வளவு பய‌ங்கர சம்பவங்களின் அறிந்த பினபும் அவ‌ர்கள் மீண்டும் வெளிநாட்டுக்கு புகலிடம் தேடும் தங்கள் முயற்சியை கைவிடவில்லை.    சிலந்தி வலைபின்னும் பொழுது பல முறை தோல்வியடைந்தாலும் தனது முயற்சியை கைவிடாது என சின்ன வயசில படிச்சது இந்த அண்ணன்மாருக்கு இப்ப சரி வ‌ருது நினைத்து கொண்டேன். ஆனால் அடியேன் ஏஜன்ட் மூலம் வெளிநாடு போவதில்லை என சபதமே எடுத்திட்டேன்.
முப்பதைந்து வருடங்களுக்கு முதல் சமுக வலைத்தளங்கள் தொலைகாட்சிகள் பாவனையில்லாத காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தில் மாங்காய் அமைப்புடைய ஒரு தீவின் ஒரு மூலையில் அந்த மாவட்டத்தின் பத்திரிகை செய்திகள் மூலம் நாம் அறிந்தோம் அனுபவித்தோம்.
இணைய‌த்தை பார்த்துகொண்டிருக்கும் பொழுது தேனீருடன் வந்த மகள்
"அப்பா டிட் யு கியர் த நியூஸ்"
"என்ன யஸ்டின் பீபர் கலியாணம் கட்டிட்டானா,அல்லது அவனின்ட அடுத்த அல்பம் ரிலீஸ் ஆகிவிட்டதா"
வழ‌மையாக இப்படியான செய்திகள் தான் அவளுக்கு முக்கிய‌மாக தெரிபவை ஆகவே நானும் அவளின் கேள்விக்கு அப்படியான பதில்களை கொடுத்தேன்.
"நோ அப்பா ,ரெவுஜியாக ஜேர்மனுக்கு போகும் பொழது ஒரு கியூட் போய் டைட்,அவ‌ரின்ட நியூஸ்தான் இப்ப எல்லா சனலிலும் டெலிகாஸ்ட் பண்ணினம்."
"உங்களுக்கு உது செய்தி, எங்க‌ன்ட சன‌த்திற்கு உந்த‌ அனுபவம் முப்பதைந்து வருடங்களுக்கு முதல்தொடங்கி விட்டது.  சமுக வலைத்தளங்கள் தொலைகாட்சிகள் பாவனையில்லாத காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தில் மாங்காய் அமைப்புடைய ஒரு தீவின் ஒரு மூலையில் அந்த மாவட்டத்தின் பத்திரிகை செய்திகள் மூலம் நாம் அறிந்தோம் அனுபவித்தோம்"
ஜேர்மன் இலக்கிய மன்றத்தால் 2015 ஆம் ஆண்டிக்கான‌ இலக்கியவிருது "வாத்தி" என்ற புனைபெயரில் எழுதும் சுப்பிரம‌ணியனுக்கு வழங்கப்பட்டது.இதை ஜேர்மன் நாட்டின் தமிழ் ஆர்வாளர் கமலகண்ணன்  வழங்கினார் என்ற குறிப்புடன் வாத்தியாரும் விமலக்காவும் நிற்க்கும் படம் பிரசுரமாகியிருந்தது.விமலக்காவின்  முந்தானையால்  போர்க்கப்படாத‌ கழுத்தில் தாலிக்கொடி வைரம் பதித்த முகப்புட‌ன் பிரகாசித்துகொண்டிருந்தது.