Sunday, June 15, 2014

புத்தரும் அப்பே அளுவா

அப்பொழுது வயது பத்து இருக்கும் என நினைக்கின்றேன்.பத்திரிகைகள் வாசிப்பேன் .அப்பா அரச உத்தியோகம் என்றபடியால் பல இடங்களுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ,அவரது நண்பர்கள் அநேகர் அரச உத்தியோகத்தர்கள்.அவர்கள் எங்கள் வீட்டில் ஒன்றுகூடுவார்கள் இல்லையெனில் நாங்கள் அவர்கள் வீடுகளில் ஒன்று கூடுவோம்.பலர் சைவத்தமிழர்கள், ஒரு சிலர் கிறிஸ்தவர்கள்.எல்லொருடைய வீட்டின் வாசலிலும் ஒரு பிள்ளையார் படம் தொங்கவிடப்பட்டிருக்கும் .இதை சகல சைவத்தமிழர்களின் வீட்டிலும் அன்றைய காலகட்டத்தில் காணலாம்.வீட்டின் உள்ளே இன்னோரு அறையில் சிவன்,உமாபதியார், முருகன் ஒரு மூலையில் குடி கொண்டிருப்பார்கள் .வரவேற்பறையில் யோகசுவாமிகளின் படம் தொங்கிகொண்டிருக்கும்.இவரைப்பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அநேகர் அறிந்திருப்பீர்கள்.தலையில் ஒரு கொண்டை,வெள்ளைத்தாடி,வெள்ளைவேஸ்டி அணிந்து வெள்ளைச்சால்வையால் மேலுடமைப்பை பொர்த்தி சப்பாணிகட்டி அமர்ந்திருப்பார்.பல வீடுகளில் இந்த கறுப்பு வெள்ளை படம்தான் இருந்தது. திருநீற்று குறி அவரை ஒரு சைவ குரு என சமுகத்திற்கு அடையாளப்படுத்தியது. இதுவரை நான் யோகசுவாமிகளின் வர்ணப்படத்தை காணவில்லை

சிவதொண்டன் நிலயங்களின் பிதா இவர் என்று சொல்லலாம். யாழ்ப்பாண சிவதொண்டன் நிலையம்தான் யோகசுவாமிகளின் கருத்துருவாக்க மையம் ,சுவாமிகளின் கருத்துக்களை நற்சிந்தனை என்ற சஞ்சிகை மூலம் பிரசுரித்து கொண்டிருந்தார்கள்.

இதே காலகட்டத்தில் இருபதைந்து வயது மதிக்க தக்க சிலுப்பாதலையுடன் ஒரு இளைஞனின் கறுப்பு வெள்ளை நிழற்படம் இந்த அரச உத்தியோகத்தர்களின் குடும்பங்களில் அறிமுகமாகிறது. எனது அம்மாவிடமும் ஒரு புகைப்படம் கிடைக்கின்றது.
"இஞ்சாருங்கோ இவரின்ட படத்தில இருந்து விபூதி,கும்குமம்,தீர்த்தம் எல்லாம் வருகின்றாதாம் ,சுசிலா இதை தந்தவ"என்று சொல்லி அப்பாவிடம் காட்டினார்.
"உவங்கள் கள்ளச்சாமிகள் உவங்களை நீரும் நம்பிகொண்டிருக்கிறீரோ?"
"எனக்கு நம்பிக்கை இருக்கு "அம்மா அப்படி சொன்னபின்பு அப்பா எதிர்த்து ஒன்றும் சொல்லாமல் உம்மட இஸ்டம் என்றார்.
அந்த படத்தை அம்மா அழகான ஒரு பிறேம் போட்டு சாமியறையில் மாட்டிவிட்டார்
சுசிலாவும் கணவனும் இந்த இளைஞனின் புகைபடத்தில் அதிகமாகவே ஈடுபாடு கொள்ளதொடங்கிவிட்டார்கள் .அவரின் படம் போட்ட கலண்டர்கள் அடித்து நன்கொடை பெற்றுக் கொண்டனர்.இவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் இருந்தனர் .இருவருக்குமிடையே ஒரு வயது வித்தியாசம்தான் இருந்தது.இந்த சிறுவர்கள் இருவரும் பெற்றோரின் வழிகாட்டலில் அந்த இளைஞனின் புகைப்படத்தை வணங்கி பஜனை பாடல்கள் பாடி வழிபட்டுக்கொண்டு வந்தனர்.

நாங்கள் வாழ்ந்த ஊரைவிட்டு இரு குடும்பத்தலைவர்களின் வேலை நிமித்தம் மாறவேண்டிய சூழல் ஏற்பட்டது.சுசிலாஅன்ரி குடும்பம் தலைநகர் கொழும்புக்கு மாற்றலாகி சென்றனர் நாங்கள் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்தோம்.

யாழ்ப்பாணத்தில் அந்த இளைஞனின் பக்தர்கள் சிறுசிறு குழுக்களாக உருவாகி கொண்டிருந்தனர். பஜனைகள் பாடி வீதியில் செல்வார்கள்.அநேகமாக வீடுகளில் பஜனை வைப்பார்கள எனது நண்பர்களின் வீடுகளிலும் இந்த பஜனை நடைபெறும் சுண்டல் சாப்பிடுவதற்காக நான் இதில் கலந்து கொள்வேன். எனது அப்பா மனித தெய்வங்களில் அதிக நாட்டமில்லாத காரணத்தால் எனக்கும் அதில் நாட்டமிருக்கவில்லை.....
உயர்தர பரீட்சை முடித்தவுடன் எனது மாமா கொழும்பில் வசித்தபடியால் விடுமுறைக்கு சென்றேன்.அவர் ரமணமகரிஷியின் பக்தர். திருவண்ணாமலைக்கு அதிகம் சென்றுவருவார். ரமண்மகாரிஷியை நேரில் கண்டு உரையாடியவர். இவர் தனது குருவுக்கு பஜனை வைத்தார் .

திருவண்ணாமலையில் ரமணமகாரிஷியின் ஆச்சிரமம் இருக்கின்றது அங்கிருந்து ரமணரின் கருத்துக்களை மவுடன்பாத் என்ற சஞ்சிகை மூலம் உபதேசித்து வந்தனர் . தலை முடியை மிகவும் குட்டையாக வெட்டி கோமணத்துடன் நிற்க்கும் படங்கள் மக்களிடையே இவரை சாமியார் என அடையாளம் காட்டியது. சில பிரதிகளை மாமா கொண்டுவந்து வீட்டுக்கு வருவோரிடம் கொடுப்பார்.


பம்பலப்பிட்டி பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருந்தேன்,அங்கு சுசிலா அன்ரியும் கணவனும் வழிபட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை .நான் அருகே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.மிகவும் சந்தோசப்பட்டனர் , அடுத்த நாள் வீட்டில் பாபா பஜனை நடைபெறுமாம் வரும்படி சொன்னார்கள்.
வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாபா படம்.சிலுப்பாதலை விலையுயர்ந்த பட்டு காவியாலான உடம்பை மறைத்த ஆடை .கையை உயர்த்தி பக்தர்களை ஆசிர்வதிப்பது போன்ற ஒரு தோற்றம். .
ஜம்பது பேரளவில் அங்கு கூடியிருப்பார்கள் சகலரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.வங்கி,சுங்க இலாகா,தனியார் நிறுவனக்களில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள்.குடும்பமாக சமுகமளித்திருந்தனர்.பஜனை முடிந்தவுடன் சுசிலா அண்ரி சொற்பொழிவாற்றினார் தான் புட்டபக்திக்கு சென்று சுவாமியை தரிசித்ததாகவும்,அவரின் கையால் எடுத்த விபூதி என வந்திருந்த எல்லொருக்கும் விபூதியும்,பாபாவின் போட்டோவும் அன்பளிப்பு செய்தார்.எனக்கும் அன்பளிப்பு கிடைத்தது.அத்துடன் பஜனாவளி என்ற புத்தகமும் எனக்கு கிடைத்தது.
இரு பெண்பிள்ளைகளும் நன்றாக பஜனை பாடினார்கள் அவர்களுக்கு தேவாரம் தெரியாது பஜனைகள் நன்றாகவே தெரியும் . காலங்கள் கரைந்தொடின பெண்கள் இருவரும் கணக்காளராக தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய தொடங்கினார்கள் .
திருமணமாகி இரு பெண்களும் அவுஸ்ரெலியா புலம் பெயர்ந்தனர் .அவர்களின் கணவன்மார்களும் கணக்காளரும்,பொறியியளாலருமாகும்.
சுசிலா அன்ரியும்,கணவனும் தீவிர சாய்பாபா பக்தர்களாகி ஒவ்வோருவருடமும் புட்டபத்தி சென்று வருவார்கள் கலப்போக்கில் அவர்களும் பாபாவின் அடிசேர்ந்தார்கள்.இவர்களின் இரு பெண்பிள்ளைகளும் அதே தீவிரத்துடன் பாபா கருத்துக்களையும்,அடையாளங்களையும் அவுஸ்ரேலியா வாழ் புலம்பெயர்ந்த தமிழ்மக்களியடேயே பரப்பி வந்தனர். கடைப்பிடித்தனர் என்று சொல்வதை விட பரப்பினர் என்பதே சாலச் சிறந்தது. இவர்களின் வாரிசுகள் நாங்கு பேர்கள்.அவர்களும் பாபாவின் பக்தர்கள் புட்டபத்திக்கு அதிகம் செல்வார்கள்.பாபா யுத் செர்க்கில் (பாபா இளைஞர் வட்டம்)என்ற அமைப்பில் அங்கத்துவராக இருக்கின்றனர். புட்டபத்தியின் பிதாவின் கருத்துக்களையும்,அவரின் அடையாளங்களையும் எனைய இளைஞர்களுக்கு காவிசெல்கின்றனர்.

இன்று தாயகத்தை சேர்ந்த யோகசுவாமிகளின் வேஸ்டி, விபூதி இட்ட கறுப்பு வெள்ளை நிழற்படத்தையோ ,மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த கோமணத்துடன் ரமணமகாரிஷியின் ஆண்டிக்கோல படத்தையோகாணமுடிவதில்லை அல்லது அரிதாக காணக்கிடைக்கும். ஆனால் புட்டபத்தி பாபாவின் கலர்புல் போட்டொக்கள் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும். இந்த பாபா குருவை மிஞ்சிய சிஸ்யன் என்றே சொல்லலாம்.இவரின் குரு சிரடி சாய்பாபா .சிரடிக்கு இருந்த பக்தர்களைவிட புட்டபத்திபாபாவுக்கு இருந்த ,இருக்கின்ற பக்தர்கள் அதிகம் என்றே சொல்லலாம். இன்று இருந்திருப்பார்....
மீண்டும் தாயக நினைவுக்கு சென்றால் அதாவது 40வருடத்திற்கு முன்பு சைவர்களின் வீடுகளின் வாசலில் ஒரு பிள்ளையார் படம் இருக்கும் . என்பதின் பிற்பகுதியில் கொழும்பில் ஆஞ்சநேயரின் அறிமுகம் மெல்ல தொடங்கியது.இன்று ஆஞ்ச நேயர் சகல வீடுகளின் வாசலில் பிள்ளையாருக்கு பக்கத்தில் இருக்கின்றார்.....இந்த மாற்றங்களை மக்களே மக்களுக்கு புகுத்துகின்றனர் .....புத்தரும் தமிழரின்ட வீடுகளில் குடி கொண்டிருப்பார் இராணுவம் ஆயுதம் மூலம் புத்தரின் கருத்தையும்,சிலையையும் திணிக்காமல் விட்டிருந்தால்.... புத்தரும் அப்பே அளுவா ... என எம்மவர்கள் வழிபட்டிருப்பார்கள்