Thursday, February 14, 2013

கப்டன்

சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள்.

புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள் மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை,இருந்தாலும் அவர்கள் முயற்சியை கைவிடவில்லை.தென்னை மட்டையின் அடிபாகத்தை வெட்டி கைப்பிடிக்கு சைக்கிள் டியூப்பினை போட்டு யாழ்ப்பாண பிராண்டட் கிரிக்கட் மட்டையை செய்து போட்டார்கள். றப்பர் பந்தின் சொந்தகாரன் பக்கத்து வீட்டு ரவி.விளையாட்டு முழுவதும் தானே பந்து போட வேண்டும் என அடம் பிடிப்பான். பந்து போட கொடுக்காவிடில் பந்தை தூக்கி கொண்டு வீடு சென்று விடுவான் .இதனால் ஆத்திரமடைந்த சுரேஸ் சொந்தமாக ஒரு பந்தை வாங்க வேண்டும் என முடிவெடுத்தான் .ஆனால் பந்து வாங்க அவனிடம் பணம் இல்லை.
அங்கு விளையாட வரும் எல்லோரிடமும் காசு சேர்த்து ஒரு பந்தை வாங்குவோம் என தீர்மாணித்து அமுல் படுத்தினான் .அடுத்த நாள் எல்லோரும் 25 சதம் கொண்டு வந்தார்கள் .உடனே மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் தனியாக கடைக்கு சென்றான். கடைக்கரானிடம் "அண்ணே பார்த்து போட்டு தாங்கோ " என கெஞ்சி அரைவாசி விலைக்கு பந்தை வாங்கி போட்டான். தனக்குறிய பங்கையும் போடாமல் விட்டுவிட்டான். இது எனைய குழு அங்கத்தவர்களுக்கு தெரியாது. நண்பர்களிடம் கடைக்காரர் முதலில் சொன்ன விலைக்குத்தான் பந்து வாங்கினதாக சொன்னான் .மிகுதி பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்.
அவனது குழுவில் எட்டு பேர் வரை இருந்தனர்..அநேகர் இவனது வயதை ஒத்தவர்கள் .சின்ன பெடியன்களும் இணைந்து கொண்டனர்.ரவி தனிப்படுத்தபட்டமையால் அயல் கிராமத்திற்கு விளையாட செல்வான்.பற்றையும் பந்தையும் பத்திரப்படுதும் பொறுப்பை சுரெஸ் எடுத்து கொண்டான். இதனால் அந்த குழுவுக்கே அவன் பொறுப்பாளன் போல செயல் பட தொடங்கினான்.குழு அங்கத்தினர் இவனை கிண்டல் அடிப்பதும் உண்டு.
"உவருக்கு தான் கப்டன் என்ற நினைப்பு"என்று சொல்ல
"என்னிடம் தானே பற்றும் பந்தும் இருக்கு அப்ப நான் தானே கப்டன் ,போஸ் எல்லாம் " என்று சிரித்தபடியே கூறுவான்.
"உந்த தென்னை மட்டை பற்றை வைச்சுகொண்டு இங்கிலாந்து டீமுக்கு கப்டன் மாதிரி கதைக்கிறாய்" என சிலர் கிணடல் அடித்தனர்.
ஒரு நாள் சுரேஸ் சிக்சர் அடிக்க முயற்சி செய்ய பந்து பக்கத்துவீட்டு பிலாமரத்தில போய் மாட்டிக்கொண்டுவிட்டது.கையில் இருந்த பற்றும் தவறிவிழுந்து உடைந்து விட்டது.தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.எல்லோருக்கும் விளையாட வேணும் என்ற உத்வேகம் இருந்ததால் உடனடியாக அந்த உத்வேகத்தை தனிக்க பேணி(டின் ...ரின்) விளையாட்டை விளையாட தொடங்கினார்கள்.வீட்டில் அம்மா பலசரக்கு சாமான் போட கழுவி வைத்த லக்ஸ்பிறே ரின்களை யும் பழைய பந்தையும் எடுத்து கொண்டு வந்தான். இதனால் அவன் அம்மாவிடம் திட்டு வாங்கினது ஒரு பெரிய கதை.
"அட ரின் விளையாட்டிலும் இவன் 'கப்...... ரின்'"டாப்பா எனகிண்டலடித்தனர் .அவன் கண்டுகொள்ளவில்லை,கப்டன் என்று சொல்லுறான்கள் அப்படியே அதை நடைமுறைபடுத்த வேணும் என மனதில் எண்ணிகொண்டான்...

டெனிஸ் பந்தும்,ஒரு நல்ல பற்றும் வாங்க வேணும் என எல்லோரும் முடிவெடுத்தனர்.
தச்சு தொழில் செய்யும் ஒருவரிடம் போய் கேட்டார்கள் .பணம் தந்தால் செய்து தருவதாக அவர் சொல்ல, தீவிரமாக காசு சேர்த்து பற்றை செய்து போட்டார்கள்.
அவனது தீவிர முயற்சியும்,அயராத உழைப்பும் சக குழுவினர் அவனை கப்டன் ,கப்ரின் என அழைக்க தொடங்கிவிட்டார்கள்.

சிலர் கப்டனுக்கும் அடைமொழி வைத்து அழைக்க தொடங்கினார்கள்.சில வயசு போனதுகள் "டேய் கப்டன்"என்றும் வயசு குறைந்ததுகள் "கப்டன் அண்ணா" என்றும் அழைத்தார்கள்.
குழு உறுப்பினர்களுக்கு சமனான பந்து வீச்சும் துடுப்பாட்டமும் அனுமதித்தான் இதனால் எல்லோருக்கும் அவன் மீது அன்பு உண்டானது.

ரவி அயல் கிராமத்தில் உள்ள டிமில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு எதிராக விளையாடுவான்.சுரேஸுடன் விரோதமாக பழகியபடியால் அந்த கிராம மக்கள் எல்லோரையும் விரோதமாக பார்த்தான்.
புளியமரத்தடியில் விளையாடுவதை விட்டுவிட்டு இப்பொழுது தெருவிலும் ,பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் விளையாட தொடங்கி விட்டார்கள்.
ஸ்பின்,வாஸ்ட் போல்,அம்பயர்,லெக் அம்பயர்,ஒவர்,எறிபந்து இந்த சொல்லுகளை எல்லாம் பாவிக்கதொடங்கினார்கள்,காலில் எங்கு பட்டாலும் எல்.பி.டபில்யூ. க்கு கத்துவார்கள் ஆனால் அம்பயர் கொடுக்க மாட்டார்.அவரும் அந்த டீமில் தான் விளையாடுவார்.அவர் அடுத்து பற் பண்ண வேணும் என்றால் மட்டும் கையை தூக்குவார்.அவர் ஏற்கனவே பற் பண்ணி அவுட்டானவர் என்றால் கையை தூக்கவே மாட்டார்.
அனேகமாக விக்கட் விழுத்த வேணும்.இல்லாவிடில் கட்ச் பிடிச்சு ஆட்களை அவுட்டாக்க வேணும்...விக்கட்டில பட்ட பிறகு சில வேளை நோ போல் சொல்லுவினம்...பயங்கர அலாப்பி கிங்மார் இருந்தவங்கள்.

விளையாடுபவர்கள் பல வித கட்டளைகளை போடுவார்கள்.
"காலுக்கு நேரா போடு"

"பந்தை தூக்கி போடு என்ட பக்கமா நான் கட்ச் பிடிக்கிறன்"

"லெக்கில சைட்டா போடு கீப்பருக்கு டிப் போகும்"
சில நேரங்களில் கட்ச் விடுபட்டால் இன்னோருதன் வந்து சொல்லுவான் நான் நிக்கிறன் நீ போ எண்டு .அவரின்ட கையுக்கும் பந்து வரும் கட்ச்சை விட்டிடுவார்

மற்ற டீம்காரன் சொல்லுவான் "அடிடா சிக்ஸ்"

"தூக்கி அடிக்காத கட்ச் பிடிச்சு போடுவாங்கள்"

ஆனால் பந்து போடுறவன் தன் இஸ்டத்திற்கு பந்தை போடுவான்.பற் பண்ணுபவன் தன்ட இஸ்டத்திற்கு பற் பண்ணுவான்.

இப்படி எங்கன்ட அரசியல் கருத்துக்கள் மாதிரி விளையாட்டு கருத்துக்களும் தூள் பறக்கும்....

ஒருநாள் இராணுவ சோதனைச்சாவடிக்கு கிட்டடியில் நிற்கும் பொழுது கப்டன் அண்ணே என்று அவனது குழுவை சேர்ந்தவன் கூப்பிட்டான். இவனுக்கு உயிர் போய்விட்டு திரும்பி வந்த மாதிரி இருந்தது ,இவனது நல்ல காலம் அங்கிருந்த இராணுவத்தினருக்கு கேட்கவில்லை.

கிராமத்தில் கிரிக்கட்டில் சூரனாக இருந்தாலும் பாடசாலை டீமில் அவனை நிர்வாகம் தெரிவு செய்யவில்லை.
விமானஒட்டி ,கப்பல் ஒட்டி எல்லோரையும் கப்டன் எண்டு சொல்லுறது மட்டுமல்லாமல் இராணுவத்தில் பணிபுரிபவனையும் கப்டன் என அழைக்கிறார்கள் என்று இவனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.போதாக் குறைக்கு பாடசாலை இல்லங்களிலும் கப்டன் இருக்கு என்னடா இது என மனதில் எண்ணிக்கொண்டான்.

பாடசாலைபடிப்பு முடிந்தவுடன் ,தனது பெயருக்கு முன்னாள் கப்டன் வரக்கூடிய தொழில் பார்க்கவேண்டும் எண்ணியவன் எந்த தொழில் செய்யலாம் என யோசிக்க தொடங்கினான்.

விமான விபத்து நடந்தால் உடம்பே கிடைக்காது அந்த எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டான்.கப்பல் மாலுமியாக வந்தாலும் கலியாணம் கட்டி மனிசியை கூட்டி கொண்டு போக ஏலாது என சிலர் சொல்ல கேட்டதால் அந்த யோசனையும் கைவிட்டான்...
இராணுவத்தில சிங்களவன் சேர்க்கமாட்டான், அப்படி செல்வாக்கை பயன்படுத்தி சேர்ந்தாலும் புலிகள் வைக்கிற கன்னி வெடியில் ஆள் சுக்குநூறு என்று எண்ணியவன் கப்டன் ஆசை மறந்துவிட்டான் (துறந்துவிட்டான்)

"ரவி டேய் மச்சான் எப்படி இருக்கிறாய்,ஊர் பக்கம் போகவில்லையோ"

",சிட்னியில் இருக்கிற டமிழ்ஸின் பிள்ளைகளுக்கு கிறிகட் கோட்ச் பண்ணுகிறன் அத்துடன் ஒவர் 40(40 வயத்துக்கு மேற்பட்டோர்)டிமுக்கு கப்படனா இருக்கிறன் ....உனக்கு தெரியும்தானே நான் எங்கன்ட சனத்தோட பழகிறதில்லை எண்டு,அதுசரி நீ என்ன செய்கிறாய்"

"நான் என்கன்ட சனத்தோட நின்று பந்து உருட்டிறன்.........கி கி..."

முக்கிய குறிப்பு: இது சுத்த கற்பனை கதை கலப்படமில்லை..அத்துடன் கிறிகட்டுக்கும் என‌க்கும் வெகு தூரம்....