Tuesday, July 24, 2018

"ஓ வாவ்" Wow

"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்"
" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி"
"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்"
"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்"
" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்"
"ஊ ஊ ஊ "
"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்"
"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ"
"சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா"
"எங்களை கண்ட மையிலரின்ட கடைசி கல்லை வீச கடுவன் என்னை இழுத்து கொண்டு பொட்டுக்காலை ஓடிட்டான்"
"பிறகு"
"பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே  எங்கன்ட இருப்பிடம்"
"இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு"
"விசயம் முடிய வழமையா கடுவன் வீட்டை போய்விடுவான் அவனின்ட கெட்ட காலம் அன்றைக்கு அறுவான்களின்ட காம்ப் பக்கம் போய்விட்டான்"Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯
 "அதுக்கென்ன போனால், நான் ஒவ்வொரு நாளும் அங்க போய் தானே சாப்பிடுறன்"
"அந்த காலத்தில‌ சிங்கம், புலி விளையாட்டு இந்த மண்ணில் நடந்தது"
"வாவ் அப்படி அடர்ந்த காடாவா இருந்தது"
"போடி விசரி ...உந்த மனிதாபம் பேசும் மனிதர்கள் எங்களை நாய்பிறவிகள் என்று திட்டிக்கொண்டு தாங்கள் தங்களுக்குள்ள சுடுப்பட்டவன்கள்"
"புரியல்ல"
"அது சொன்னால் புரியாது அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்,
அந்த சுடுபாட்டில மையிலரின்ட கடுவன் பரலோகம் போய்ட்டான்
ஊஊஊஊஊஊ அதன் பின்பு சிங்கங்களின்ட கூடாரப்பக்கம் நான் தலைவைத்தும் படுப்பதில்லை"
"  ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"
"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .
.."..வாவ்,"
"பிறகு ஏன் ம‌யிலரின்ட கடுவனுக்கு ஒரு பீலிங்கொட பிலிம் காட்டுகின்றாய்"
"அவனின்ட சா ஒரு வீண் சாவு என்ற பீலிங்க் தான் அது போக நேற்று
மயிலரின்ட கடக்குட்டியை கண்டனான் "
.."..வாவ்,"
"அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு",
"உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்"
"என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ"
"சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்"
"அது சரி மயிலரின்ட கடக்குட்டியை  எங்க க‌ண்டனீ? அவன்கன்ட பழைய வீட்டிலயோ" "
"சிங்கம் புலி விளையாட்டில மண்ணையும் வீட்டையும் விட்டிட்டு ஒடி போனவங்கள் தானே...இப்ப சொந்தகாரங்களுக்கு வாடைக்கு கொடுத்து போட்டு ஒரு அறையை தங்களுக்கு என வைச்சிருக்கிறாங்கள்"
"அப்ப அங்க தான் வந்து நிற்கினம் என்று சொல்லுறாயோ அக்கா"
"ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்"
"எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா"
"வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே"
"சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்"
"அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"
"வயசை சொன்னால் நாவூறு பட்டுப்போடும்"
"மையிலரின்ட கடைசி கலியாணம் க‌ட்டினது  விடுப்புராணியின் மகளைத்தான்,இரண்டு குட்டிகளும் இருக்கு"
"அப்படியே அக்கா! விடுப்புராணியின்ட வீட்டுக்கு பக்கத்து சந்தையில் நடந்த செல் வீச்சிலதான் எங்கன்ட மாமா,தாத்தா ,அப்பா எல்லாம் செத்து போனவையள் என்று  அம்மா  சொன்னவ"
" ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் "Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯
"ஏன் அக்கா",
"எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்"
"இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்"
"நாங்கள் மட்டுமல்ல அப்ப  விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்"
"பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்"
"எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு"
"அப்படியே"
"நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம்  என்று கொண்டு நிற்குது"

"ஓ  வாவ்"
"இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்"
 

Tuesday, June 5, 2018

நாய்க்காப்பகம்

ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும்சென்றிருந்தேன்  இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசுகொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு  ஒரு பெருமைஎன்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்திலஇருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில்பின்தங்கியவர்களுக்கு கொடுத்து  அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்துமுகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள்அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய‌ பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று.
எது எப்படியோ  தேவையானோருக்கு பணம் போகின்றது. சந்தோசமடைவோம்

கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு  ஆரம்பமானது .ஒவ்வொரு வருடமும்   பேச்சாளர் தனது உரையில் தாயகத்தில் தனது அமைப்புக்கு என்ன தேவை என்பதனை சொல்லுவார். மக்களும் தங்களால் முடிந்தவற்றை கொடுத்து உதவுவார்கள். ஒவ்வொரு தடவையும் தனது உரையில் ஒன்றைமட்டும் சொல்ல தவ‌றுவதில்லை,இந்திய இராணுவம் கைது செய்து துன்புறுத்தியபடியால் கடுமையாக நோய்வாய்பப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பொழுது ,தான் சுகமாகி தப்பி வந்தால் ஏழைகள்,ஆதரவற்றோர்,ஆதரவற்ற முதியோர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேணும்  என நினைத்ததாகவும் அதை தான் தொடர்ந்து செய்வதாகவும் கூறினார்.
யோகர் சுவாமிகள் நாய்குட்டிகளுக்கு எம்மவர்களால் இளைக்கப்படும் துன்பங்களை எண்ணி கவலைப்பட்டவர் என்றார்.
அதே போன்று புத்தரும் ச‌கல உயிரினங்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கையை உடையவர்.
இதை எங்கோ வாசித்த மகிந்தா கட்டாகாலி நாய்களை பிடிப்பதை தடை செய்து விட்டார்.இதனால் நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது அவைகள் பல்கி பெருகி இப்பொழுது பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது என குறைப்பட்டு கொண்டார் அந்த பெரியவர்.
Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯
இந்த நாய்களுக்கு ஓர் காப்பகம் அமைத்து அதை பாரமரிக்க வேண்டு என்று சொன்னவுடன் ,நான் திகைத்து விட் டேன்.இதை அறிந்த ஐயா நகைச்சுவையாக இப்படி கூறினார்" நீங்கள் இப்ப எனக்கு அடிக்க வந்தாலும் வருவியள் எல்லாம் முடிஞ்சு இப்ப உவர் நாய் பாராமரிக்க வந்திட்டார்.எல்லோரும் கை தட்டினோம்
நாங்கள் வளர்ந்த நாட்டில் நாய்களுக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை  அறிந்தவன்.
சின்ன வயதில் ஞாபகம் இருக்கின்றது சிறு பிள்ளைகளை பயப்படுத்துவதற்கு  நாய் பிடிக்கிறவன் வானிலவந்து பிடிச்சு கொண்டு போய்விடுவான் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.அந்த கால கட்டத்தில்நகரசபைகள் நாய்களை பிடித்து கொண்டு சென்று அழித்துவிடுவார்கள்.
Image result for à®à®à¯à®à®¾à®à®¾à®²à®¿ நாயà¯à®à®³à¯
2006 ஆம் ஆண்டு மகிந்தா நாய்களுக்கும் வாழ உரிமை உண்டு  தெரு நாய்களை பிடித்து கொல்ல கூடாது எனசட்டத்தை கொண்டுவந்த பின்பு நகரசபைகள் நாய் பிடிப்பதை நிறுத்தி விட்டனர் .இதனால் தெரு நாய்கள்பெருகி கொண்டு போகின்றது.
சில நாய்கள் மனிதர்களுக்கு கடித்தும் விடுகின்றனவாம்.
யாழ் நகரில் கட்டாகாலி நாய்களை ஜேர்மன் நாட்டு பெண்மணிஒருவர் பார்த்து கவலை அடைந்து  அவரை சந்தித்து இவை பாராமரிப்பற்று இருப்பதன் காராணத்தை கேட்டதாகவும் சொன்னார்.
அந்தபெண்மணியின் பின்னால் அங்கு நின்ற கட்டாகாலி நாய்கள் எல்லாம் வாலை ஆட்டிகொண்டு சென்றதை பார்த்து ஆச்சரியமடைந்த‌தையும் கூறினார்.
ஜேர்மன் பெண்மணி சொன்னாராம் இந்த நாய்கள் எனக்கு பின்னால் வருவதற்கு காரணம் தனது ரத்தத்தில் நாய்பாசம் கலந்துள்ளது அதுதான் இவைகள் எனக்கு பின்னால் வருகின்றன என்றாராம்.
கோவில்களில் அன்னதானம் வழங்கப்படுவதால் அங்கு அதிக நாய்கள் தஞ்சமடைந்துள்ளன இதனால்பக்தகோடிகளுக்கும் பிரச்சனைகள் உருவாகின்றன எனவே ஐயா இந்த நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்கமுயற்சி செய்துள்ளார் . எமது முன்னாள் பாடசாலை அதிபரின் இரண்டு ஏக்கர் காணி இயக்கச்சி காட்டினுள்உள்ளதாம் அதை அவர் இவரது தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார் . இந்த காணியில் காப்பகத்தைஅமைக்க ஐயா உத்தேசித்துள்ளார்.
அது வெற்றியடையும் என எதிர்பார்க்கலாம்.ஐயா நகைச்சுவையாக இந்த நாய்களுக்கு சாம்பாரும்சோறும்தான் உணவாக வழங்கப்படும் என்று சொன்னார்
சுவாமிகளும் ,எனையோரும் ,நாங்களும் ஐயோ நாய்கள் பாவம் என்று சொல்லுகிறோம் ஆனால் ஒருத்தரும்அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை ஆனால் ஐயா செயலில் ஈடுபட்டமை பாராட்டபடவேண்டிய ஒர் விடயமாகும்.

Thursday, April 12, 2018

முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா (dress code)aa

முருகமூர்த்தி அவனுக்கு  பெற்றோர் இட்ட பெயர்பெற்றோர்கள் எந்த மதத்தை கடைப்பிடிக்கிறார்களோ அந்த மதக்கடவுளின் பெயர்களைவைப்பது எம்மவர்களின் மரபு அந்த வகையில் அவனுக்கும்  அந்த பெயர் அவனின் அனுமதியின்றி ஒட்டிக்கொண்டது.ஆசிரியர் இடாப்புகூப்பிடும்பொழுது மட்டும் முருகமூர்த்தி என்று அழைப்பார்.மற்றும்படி முருகா,முருகு ,முருகன் என்றுதான் அழைப்பார்கள்,
 அவனது வீட்டுக்கு அருகில் முருகன் கோவில் உண்டு பரம்பரை பரம்பரையாக அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த கோவில்.அவன்சிறுபிள்ளையாக இருக்கும் பொழுதே பாட்டி அழைத்து சென்று கற்பூரம் கொழுத்தி விளக்கேற்றி வருவார்,சில சமயம் கோவில் முற்றத்தைதுப்பரவு செய்வார்.நான் இல்லாத காலத்தில் முருகு நீ தான் வெள்ளிக்கிழமைகளில் வந்து விளக்கேற்றி வைக்கவேணும். பாட்டிக்கு ஒம் என்று சொல்லிவிட்டான்
.அவனுக்கு பத்து வயது இருக்கும் பொழுது பாட்டி இறை பதமடைந்து விடவே .அவன் வெள்ளிக்கிழமைகளிள் தாயாருடன் சென்று விளக்கேற்றி வந்தான்.
ஒரு நாள் கோவிலுக்கு பின்னேரம் விளையாட போட்டிருந்த உடுப்புடன் போகதயாரானான்.அதை அவதானித்த தாயார்
"பாட்டி எப்படி கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லி தந்தவ"
"குளித்து சுத்தமா போகவேனும் என்று சொன்னவ,நான் காலம்பிற குளிச்சிட்டன்"
"உந்த புழுதிக்குள்ள உழுது திரிச்சனீயள்ளோ,காற்சட்டையையும் செர்ட்டையும் பார்,கைகாலை கழுவி வேறு சட்டையை போட்டுக்கொண்டு வா"
அவனுக்கு குளிக்கிறது என்றால் கொல்ல கொண்டு போறமாதிரி,கிணற்றடியில் கை காலை கழுவிட்டு ஓடி வந்து தீபாவளிக்கு சீத்தை துணியில் தைத்த சேர்ட்டையும் காற்சட்டையும் போட்டுக்கொண்டு வந்தான்.அந்த சேர்ட்டை அவன் போடமல் வைத்திருந்தமைக்கு காரணம் அதில் வரும் மண்ணெயின் மணம் தான்.
"டேய் கோவிலுக்கு போகும் பொழுது உது என்ன தியட்டருக்கு போற மாதிரி போட்டிருக்கிறாய், ஒடி போய் வெள்ளை சேர்ட்டை போடு"
"வெள்ளை சேர்ட் ஊத்தையாக இருக்கு அப்பா"
"அப்ப ,சேர்ட் போடாமல் போயிட்டு வா "
"ஐயோ நான் மாட்டேன்"
அவனை அழைத்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த தனது சால்வையை அவனது காற்சட்டைக்கு மேல் சுற்றிவிட்டு,விபூதி யை பூசி இப்ப நீ அம்மாவுடன் கோவிலுக்கு போகலாம் என்றார்.அவனுக்கு வெட்கமாக இருந்தாலும் தந்தைக்கு பயத்தில் கோவிலுக்கு தாயாருடன் சென்றான்.
இனிமேல் இப்படித்தான் கோவிலுக்கு வரவேனும் இது உனக்கு வடிவாயிருக்கிறது,ஒம் அம்மா என்று தலையாட்டினான்.தனியாக செல்லும் பொழுது வெள்ளை சேர்ட்டும் போட்டுகொண்டு போவான். அவன் சால்வையை வேஸ்டியாக கட்டும் வயதை தாண்டிவிட்டான் என உணர்ந்த தந்தை தீபாவளிக்கு இந்த தடவை அவனுக்கு வேஸ்டி வாங்கி கொடுத்தார். ஆனால் அவன் தந்தையின் பழைய வேஸ்டியைதான் கட்டிகொண்டு செல்வான் .
அந்த முருகனும் இரண்டு பட்டுத்துணியை மாறி மாறி அணிந்து இருப்பார் அதை அணிய வரும் ஐயரின் வெள்ளை நிற வேஸ்டி பழுப்பு நிறமாக இருக்கும்.அதில கறுப்பு நிறத்தில பட்டிக் டிசைன் தெரியும்.அது வேறு ஒன்றுமில்லை விளக்குதிரியின் முனையை பிடித்த பின்பு வேஸ்டியில் துடைத்தமையால் வந்த டிசைன்.
கால போக்கில் கோவிலுக்கு போறதை நிறுத்தி கொண்டான் .,இறக்குமதி செய்யப்பட்ட சித்தாத்தங்கள் அவனை ஆள் கொள்ள தொடங்க பரம்பரையாக க‌டைப்பிடித்த கொள்கைகள் விடுபட தொடங்கின .தாயார் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வைத்துகொண்டிருந்தார்.முருகா இந்தமுருகை எங்கயாவது வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடு என ஒவ்வொரு நாளும் முருகனை தொல்லை கொடுக்க தொடங்கிவிட்டாள்.
தாயாரின் வேண்டுதலுக்கு முருகன் செவிமடுத்து முருகை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைத்தார்.
"இன்றைக்கு எத்தனை மணிக்கு வேலையால் வருவீங்கள்"
"வழமையா வாற நேரத்திற்கு"
"கொஞ்சம் எர்லியா வர முடியுமோ"
"ஏன்"
"முருகன் கோவில் கொடியெறிவிட்டுதல்லோ"
"எப்ப"
" இரண்டு நாளைக்கு முதல், நாட்டு நடப்புகள் தெரியாது.வேலைக்கு போறது வந்திருந்து  கொம்புயூட்டரை பார்க்கிறது"
"சரி சரி கத்தாதை வயசு போன நேரத்தில உனக்கு கூடாது"
"ஓ ஓ எனக்கு வயசு போய்யிற்று உங்களுக்கு மட்டும் வயசு அப்படியே நிற்குதாக்கும்"
"நான் மார்க்கண்டேயர் பரம்பரை"
"சும்மா கொதியை கிளப்பாதையுங்கோ ,நீங்கள் மார்கண்டேயர் பரம்பரை என்பதை நான் சொல்ல வேணும்"
"சரி பின்னேரம் எர்லியா வாறன்"

"முருகு, வரும் பொழுது சுதாவின்ட வீட்டை போய் என்னுடைய பிளவுஸ் தைக்க கொடுத்தனான் எடுத்துக் கொண்டு வாங்கோ"

"இப்ப என்ன அவசரம் பிறகு எடுக்கலாம் தானே"
"சீ சீ  நான் திருவிழாவுக்கு என்று தைச்ச பிளவுஸ்"
"திருவிழா முடிய இன்னும் ஐந்தாறு நாள் இருக்கே"
"முருகு அதுக்கு போட பிளவுஸ் இருக்கு இன்றைக்கு மஞ்சள் கலர்  சீலை தான் எல்லோரும் உடுப்பினம் அதுக்கு பிளவுஸ் இல்லை அதுதான் முருகு பிளிஸ்"
எதாவது தேவை என்றால் கொஞ்சி குலாவிதனது காரியத்தை முடித்து கொள்வாள்.
வேலை முடிந்து வரும் பொழுது சுதாவீட்டை போனவன் அழைப்புமணியை அழுத்தினான்.கையில் கத்தரிக்கோலுடன் வந்த சுதா
"வாங்கோ,வாங்கோ,உங்கன்ட மிஸிஸ் கோல் பண்ணின‌வ நீங்கள்  வருவீங்கள் எண்டு"
"பிளவுஸ் தைச்சாச்சோ"
"கை தைச்சு முடியல ஐந்து நிமிடம் இருங்கோ ட‌க் என்று தைச்சுதாரன்"
"என்ன பிசியோ"
"ஒமோம் முருகன் கோவில் கொடியெறிட்டுது எல்லோரும் ஆறு எழு பிளவுஸ் என்று தைக்க தந்திருக்கினம் அதுதான்"
"அட கோதாரி ஆறு ஏழு பிளவ்ஸா"
உங்கன்ட மிசிசே பத்து பிளவ்ஸ் தைக்க கொடுத்தவ,மற்ற பிளவ்ஸ்களை முதலே எடுத்துகொண்டு போய்விட்டா,"
கதைத்தபடியே பிளவ்ஸை தைத்து முடித்து முருகிடம்  கொடுத்து விட்டாள் சுதா.

இன்றைக்கு மனிசி கோவிலுக்கு போய்விடும் நிம்மதியா வீட்டிலயிருந்து கதை ஒன்றை கிறுக்குவோம் என்று நினைத்தபடியே வந்தவன்,
"இந்தாரும் அப்ப உம்மட பிளவ்ஸ்"
"ஐயோ தாங்க்ஸ் அப்பா நான் நினைச்சேன் நீங்கள் மறந்துகிறந்து போய்விடியளோ என்று"
"நீர் சொல்லி நான் என்னத்த எப்ப மறந்திருக்கிறன் சொல்லும்"
"உந்த நக்கல் கதைக்கு மட்டும் குறைச்சலில்லை,நீங்களும் குளிச்சு போட்டு வாங்கோவன் கோவிலுக்கு போய்விட்டு வருவோம்"
"நான் வரவில்லை நீர் போயிற்றுவாரும்"
"சும்மா அடம் பிடிக்காமல் வாங்கோமஞ்சள் வேஸ்டி எடுத்து வைச்சிருக்கிறன் சுற்றி கொண்டு வாங்கோ"
முருகு கோவிலுக்கு யாராவது வரச்சொன்னால் போகாமல் இருக்கமாட்டான்.விருப்பமில்லாவிடிலும் பயம் காரணமாக சென்று விடுவான்.
முருகும் மஞ்சள் வேஸ்டி அணிந்து கோவிலுக்கு சென்றான்.
முருகனை பார்த்து அரோகரா என இரு கை தூக்கி கண்ணை மூடி திறந்தான் முருகன் மஞ்சள் பூக்களாலும் மஞ்சள் பட்டுத்துணியாலும்அலங்கரிக்கப்பட்டு அழககாக காட்சியளித்தார்.சற்றே திரும்பினான் தலைசுற்றி போனான் ,நின்ற ஐயர்மாரும் மஞ்சள் வேஸ்டியை அழகாகஸ்திரி பண்ணி அணிந்திருந்தார்கள்பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க மஞ்சள்  சேலைகளினதும் ,மஞ்சள் வேஸ்டிகளினதும் எண்ணிக்கைஅதிகமானது.பக்கத்தில் மெய்மறந்து நின்ற மனிசியிடம்
என்னப்பா எல்லோரும் சொல்லி வைச்ச மாதிரி மஞ்சளில் வந்திருக்கினம் என்ன விசயம்"
"உங்களுக்கு தெரியாதே இன்றைக்கு எங்கன்ட சப்பேர்ப்காரரின்ட திருவிழா"
"அதுக்கும் மஞ்சளுக்கும் என்னடியாத்தை சம்பந்தம்"
ஒவ்வொரு சப்பேர்ப்காரர்களுக்கும் ஒரு கலர் கொடுத்திருக்கினம்"
யார் கொடுத்தது?முருகனே"
திருமதி முருகு அவனை சுற்றெரிப்பது போன்று பார்த்தாள்.
"கூல் கூல் சும்மா ஒரு பகடிக்குத்தான்"
"கோவிலில் நின்று என்ன பகடி வேண்டிக் கிடக்குது"
முருகா போற போக்கில எம்மவர்கள் உனக்கு கோர்ட் சூட் போட்டு அழகு பார்த்தாலும் பார்ப்பார்கள்.எனக்கு மனதில தோன்றியதை சொல்லிபோட்டேன் யாவும் உன் செயலே....உனக்கும் டெர்ஸ்கொட்  கொண்டு வந்திட்டாங்கள் உன் பக்தர்கள்...முருகா உனக்கும் டெர்ஸ்கொட்டா  ......dress code
ஊரிலயும் நீ அலங்கார‌மாகவும் புதுக் கோவிலிலும் வசதியாக இருப்பதாக கேள்வி ..நாற்பது வருடத்திற்கு முன்பு உன்னிட்ட வந்து விளக்கேற்றிய புண்ணியம் இன்றைக்கு என்னையும் உன்ட பக்தர்களின் dress code விளையாட்டுக்குள் இழுத்து  விட்டுள்ளது.
என எண்ணியபடியே முருகனை வலம் வந்தான் முருகு....