Sunday, April 11, 2010

ரம்பா என்ட கஸ்பனின்ட பிரண்டின்

இஞ்சாருங்கோ...இஞ்சாருங்கோ ஒருக்கா இதை வந்து பாருங்கோ என்று மனைவி கூப்பிட்டதால் ஏதோ அவசரவிடயமாகத்தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடியே,என்னப்பா என்ன நடந்தது என்று அறைக்குள் ஒடினேன்.இஞ்சபாருங்கோ இவள் ரம்பா கலியாணம் கட்ட போறாளாம் பார்த்து கொண்டிருந்த இணையத்தளத்தை எனக்கு காட்டினாள்.அட சீ இதுக்கு போய் இப்படி கத்துறீர்,நானும் ஏதொ அவசரமாக்கும் என்று ஒடிவந்தேன்,புறு புறுத்தபடியே இணையத்தை பார்த்தேன்.அவளும் பெண்தானே கலியாணம் கட்டுவதில் என்ன தப்பு .அவளுக்கும் உம்மைப்போல ஒரு ஆசை வந்திருக்கும் என்றபடியே அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன்.பின் தொடர்ந்து வந்தவள் உங்களுக்கு இப்படியான நல்ல இணையங்களுக்கு போய் நல்ல செய்திகளை படிக்கத் தெரியாதே ? சும்மா வெடிகுண்டு ,துப்பாக்கி,மகிந்தா,சரத் என்ற ஒரு சதத்திற்கு உதவாத செய்திகளை படிக்கத்தான் தெரியும் என்றவள்,அந்த பெடியன் எங்கட யாழ்ப்பாணத்து பெடியனாம் உண்மையோ சந்தேகத்துடன் கேட்டாள்.என்னுடைய சினேகிதனின் தம்பியைதான் கட்டப்போறாள் ,அந்த பெடியனை சின்னவயசில கண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் பில்டப் பண்ணி கதையை சொண்ணதுதான் தாமதம் அவளின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏன் இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்ற செல்ல கோபத்துடன்,தொலை பேசியை எடுத்தவள் மறு முனையில் கலோ சொல்லமுதலே "இஞ்ச ரம்பா கலியாணம் கட்டப்போறது என்ட கஸ்பனின்ட பிரண்டின் தம்பியையாம் "என்றவள் தொலை பேசியை துண்டித்தாள்.தொலைபேசி வீட்டுக்கு வந்தாலோ அல்லது வெளியே தொலை பேசி எடுத்தாலோ "ஜயோ ரம்பா கட்டப்போறது என்ட கஸ்பனின்ட பிரண்டின் தம்பியாம்" என்று சொல்ல மறக்கவில்லைமறுநாள் தொலை பேசியை நான் எடுத்தேன் ,அண்ணே நீங்கள் சரியான ஆள் ரம்பா உங்களின்ட பிரண்டின் தம்பியையாம் கட்டுறாள், நீங்கள் எனக்கு சொல்லவே இல்லையே? உங்களுக்கு இப்பவும் அந்த பிரண்ட்டுடன் தொடர்பிருக்குதோ?என்றாள் உறவுக்கார பெண் ஒருத்தி.போன கிழமையும் டெலிபோன் பண்னினவன் கலியாணத்திற்கு வரச்சொல்லி கூப்பிட்டான் என்று றீல் விட்டேன்,படசாலை விட்டபின்பு அவனை நான் சந்திக்கவுமில்லை டெலிபொனில் கதைக்கவுமில்லை இதைஎல்லாம் இவர்களுக்கு சொல்லி நான் ஏன் என்னுடைய பிரபல்யத்தை குறைப்பான் என்ற நல்லெண்ணம் தான் காரணம் .அன்று மாலை கோயிலில் பிரசாதம் வாங்கி அருகில் இருக்கும் மதிலில் சாய்ந்தபடியே சாப்பிட்டுகொண்டுஇருந்தேன்.என்னடாப்பா ரம்பாவின் பெடியன் உன்களின்ட ஊர் பெடியணாம் உன்னோடைபடிச்சவனின்ட தம்பியாம் என்று எனது முதுகை தட்டியபடியே வந்தார் என்கன்ட கந்தர்,எனக்கு எரிச்சலாக வந்தது இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை.கடந்த மே மாதம் என்னுடன் படித்தவன் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றான். அவனைப்பற்றி எவரும் என்னிடம் விசாரிக்கவில்லை.ஆனால் இந்த ரம்பா யாரையோ கட்டப்போகிறாளாம் அதைப்பற்றி நேரிலும்,தொலை பேசியிலும் விசாரிக்கின்றனர் ,என்னடா உலகம் இது.உயிரை ,உடலை இனத்திற்காக அர்ப்பணித்தவர்களை விட ,உடலைகாட்டி நடித்த நடிகை எம்மவர் மனதில் இடம் பிடித்துள்ளார் என்று எண்ணியபடியே வீடு சென்றேன்.நாட்கள் செல்ல மற்றவர்கள் என்னிடம் ரம்பாவைப்பற்றி கேட்கமுதலே நானேசொல்ல ஆரம்பித்தேன்,என்னுடைய பிரண்டின் தம்பியை தான் ரம்பா கட்டப்போறாள் என்றும் இதனால் எனக்கு எதோ புகழ் வருவது போல எண்ணினேன் .இடக்கிட ரம்பா கனவிலயும் வாரா......நித்திரையில் புலம்பினேன்..,மனைவி என்னப்பா ரம்பா என்று புலம்பினீங்கள் ...அது ஒன்றுமில்லை என்னுடைய பிரண்டின் தம்பியை கனவில கண்டனான் அதால ரம்பா என்று புலம்பிட்டன் போல என சாமாளித்துகொண்டேன். (யாவும் அதிஉச்ச கற்பனையே)

வெற்றி..வெற்றி

வெற்றி,வெற்றி,கொர்..கொர்..என்ற��� புலம்பி கொண்டு படுத்திருந்த கனகரை என்னப்பா கனவு கண்டனியளோ என்று ஆளை தட்டி எழுப்பினாள் மனைவி கமலா திடுகிட்டு எழும்பிய கனகர் மனிசியை பார்த்து ஒரு நல்ல கனவை குழப்பி போட்டாயப்பா என்றபடியே எழும்பி நேரத்தை பார்த்தார் காலை 4 மணி.காலம்காத்தால பார்க்கிற கனவு பலிக்கும் என்று சொல்லுறவையள் நீர் என்ன நினைக்கிறீர் என்று கமலாவிடம் கேட்டார்.கனவை சொல்லுங்கோ பிறகு பார்போம் பலிக்குமோ பலிக்காதோ என்று அரைதூக்கத்தில் சொன்னாள்.எங்கண்ட பெரியவனின்ட மூத்தவன் தினேஷ் அமெரிக்க விமானபடை அதிகாரியின் உடுபோட கம்பீரமா வந்து என்னட்ட கேட்கிறான் தாத்தா நீங்கள் என்னுடன் ஒருக்கா வர வேண்டும் உடனே இப்ப வரவேண்டும்.நான் ஏன் என்று கேட்க இந்து சமுத்திரத்தில் சிறிலங்கா என்ற நாடு இருக்கிறது அந்த நாட்டில் சில முக்கிய இடங்களை காட்ட வேண்டும் என்றான்.நானும் ஒகே என்று அவனுடன் ஏறி பறந்தேன்.அது ஒரு போர் விமானம் அவனும் நானும் தான் இருந்தனாங்கள்.இருந்தா போல "பிறவோ,கமாண்டோ1,2,பிறவோ4,5" இப்படியான சத்தங்கள் கேட்டன.பிளேன் கடலுகுள்ள இறங்கிற மாதிரி இருந்தது எட்டி பார்த்தால் ஒரு மெல்லிய குலுக்களுடன் "பிளேன்"நின்றது.இறங்குங்கோ தாத்தா என்றான்.நானும் இறங்க ஓடி வந்து கை கொடுத்தான் ஒருத்தன்.நிமிர்ந்து பார்த்தேன் எங்கண்ட இரண்டாவதிண்ட குணேஷ் பிரித்தானியா கடற்படை அதிகாரி உடுப்பு போட்டு கொண்டு என்னை கைத்தாங்கலாக இறக்கி விட்டான்.அவனை சுற்றி ஜந்தாறு வெள்ளைகள் அவனுக்கு பாதுகாப்பிற்கு நிற்கீனம்.எங்கண்ட பெடியனிற்கு வெள்ளைகள் சலூட் அடிச்சினம்.அதை கண்ட எனக்கு ஜந்து நிமிசம் புல்லரித்து விட்டது.தாத்தா களைத்து போயிருப்பியள் வாங்கோ கொஞ்சம் "ரெஸ்ட்"எடுபோம் என்றான் குணேஷ்.இது என்ன நடுகடலிற்குள்ள ஒரு தட்டில நிற்கிறோம் இங்க எப்படி "ரேஸ்ட்"எடுக்கிறது என்று முழித்து கொண்டு நிற்கும் பொழுதே தாத்தா இது பிரித்தானியா"விமான தாங்கி கப்பல்"கீழே வாங்கோ காட்டுகிறேன் என்று கூட்டி கொண்டு போனான்.இருந்தா போல பார்த்தேன் தினேஷியும்,குணேஷியும் பிளேனுகுள் இருக்கிறாங்கள் என்னை கூப்பிட்டு நடுவில இருத்திபோட்டு கொழும்பிற்கு கூட்டி கொண்டு போறன் சில இடங்களை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும் என்றான் நானும் ஓம் எந்த இடம் என்று சொல்லுங்கோ என்றேன்.ஜனாதிபதி மாளிகை,பிரதமர் அலுவலகம்,விமானநிலையம்,துறைமுகம்,மத்தியவங்கி போன்றவற்றை நீங்கள் எங்களுக்கு காட்ட வேண்டும் என்றார்கள்.போர்விமானம் சும்மா பறக்கிது தினேஷ் ஏதோ "கொமாண்ட்"பண்ண குணேத் பிளேனை சுற்றி சுற்றி ஓட்டினான்.குண்டு விழும் சத்தங்கள் மேலையும்,கீழையும் கேட்கிறது நானும் உணர்ச்சிவசபட்டு அங்கே போடு,இங்கே போடு என்று கத்தி கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தால "பிளேன்" அநுராதபுரதிற்கு மேலால பறக்கிது நான் உணர்ச்சிவசபட்டு இங்கையும் அடியுங்கடா என்று கத்துறன் அங்கு தாறுமாறாக குண்டுகளை போடுகிறார்கள்.தாத்தா கீழே இறங்கி பார்க்க போறீங்களா என்று கேட்டான் தினேஷ்.நானும் ஓம் என்று போட்டு இறங்கினன்.அங்கே கொமாண்டோ உடுப்புடன் எங்கட பெடியள் நிற்கிறாங்கள் அவர்களுடன் தினேஷ் கைகுலுக்கி போட்டு தாத்தா யாழ்பாணத்திற்கு போக போகிறாறாம் அது தான் கூட்டி கொண்டு போறன் ஏதாவது அவசரம் என்றால் சட்லைட் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கோ என்று எங்கண்ட கமோண்டோ பெடியளிட்ட கூறிபோட்டு யாழ்நோக்கி பறந்தான்.தம்பி எனக்கு சாதுவாக நெஞ்சுகுள்ள நோகுது என்று சொல்ல அவன் பிளேனை உடனே பூநகரி கடலில் இன்னுமொரு விமான தாங்கி கப்பலில் "பிளேனை"இறக்கினான் அங்கே எங்கண்ட நரேஷ் அவுஸ்ரெலிய விமானபடை "யூனிபோர்ம்"போட்டு கொண்டு வாங்கோ தாத்தா என்றான் அவனோட ஜந்தாறு வெள்ளைகள் ஓடி வந்து என்னை பரிசோதித்து விட்டு "கெலிகொப்டலில"ஏத்திச்சீனம் நரேஷ் தான் அந்த "கெலியை"ஓட்டினான்.பத்து நிமிசத்தில் "கெலியை"ஒரு மொட்டை மாடியில் இறக்கினான் நரேஷ்."காய்"தாத்தா என்று ஒருத்தி ஒடி வந்தாள் பார்த்தா உம்மை மாதிரியே இருந்திச்சு உற்று பார்த்தேன் பார்த்தால் எங்கண்ட கடசி துலக்சி ஓடி வந்தாள் தாத்தா இது எங்கண்ட யாழ்பாண பெரிய ஆஸ்பத்திரி கனடாவில இருக்கிற எங்கண்ட டமிழ்ஸ் தான் இதனை கட்டி கொடுத்தார்கள் என்னை தான் இங்கே பொறுப்பாக அனுப்பி இருக்கீனம் என்றாள்.தனது அலுவலகத்தினுள் கூட்டி சென்று அது ஒன்றுமில்லை சும்மா "ஸ்ரெஸ்" ரேஸ்ட் எடுத்து போட்டு எழும்பி ஒரு வோர்க்கிங் போங்கோ என்றாள்.அப்படி தூங்கி கொண்டிருக்கும் போது தான் எனக்கு வெற்றி,வெற்றி என்று கத்த வேண்டும் போல் இருந்தது கத்தி விட்டேன்.இந்த கனவு பலிக்குமோ என்று மனிசியை திரும்பி பார்த்தார்.பலிக்கும் ஆனால் எண்ட பேரபிள்ளைகளை நான் இராணுவத்தில சேர்க்கவிடமாட்டன் அவங்கள் எல்லாரும் டாக்குத்தராக தான் வரவேண்டும்.எண்ட மக்களை சிறிலங்காவிலையே டாக்குத்தராகவும்,இஞ்சினியரா���வும் ஆக்கினான் பேரபிள்ளைகளை டாக்குத்தராக்காமல் விடுவனா வெளிநாட்டில்.அப்ப என்ன என்று எண்ட கனவு பலிக்கும் என்று அப்பாவியாக கேட்டார் கனகர்.அது வேறயாராவதும் இராணுவத்தில சேர்ந்து பலிக்க பண்ணுவீனம் நீங்கள் நித்திரை குளிசையை எடுத்து போட்டு விட்டு கண்ணை இறுக மூடி கொண்டு நித்திரை கொள்ளுங்கோ.சும்மா சின்ன சிறுசுகளுடன் இருந்து கார்டூன் படங்களை பார்க்கிறது பிறகு கனவு கண்டு போட்டு மற்றவங்களை படுக்க விடுறதில்ல என்று புறுபுறுத்தபடியே தூங்கிவிட்டாள்.மு.கு - இது ஒரு கற்பனை கனவுகதை பிழைகள் இருப்பின் சரி செய்து வாசிக்கவும் கனகரின் பேரபிள்ளைகளிள் தினேசிற்கு பதினாலு,குணேசிற்கு பன்னிரண்டு,நரேசிற்கு பத்து,துலக்சிற்கு ஒன்பது வயது.கனகரின் பிள்ளைகள் உலகில் பல பாகங்களிளும் வசிக்கின்றனர்.

அப்பெ ரட்ட (எங்கன்ட நாடு)

"வெடி தியபங் ,ஒக்கம கொட்டியா,காண்டா...." என்று 2ஆம் லெப்டினட் பண்டாவின் குரல் கேட்க அவனின் கட்டளையை மதித்து கீழ் பணிபுரியும் சிப்பாய்கள் துப்பாக்கியால் சாரமாரியாக் சுட்டார்கள்.மக்கள் பதட்டத்தால் நாலாபக்கமும் சிதறிஅடித்து கொண்டு ஒடினார்கள்.ஒடமுடியாதவர்கள் அந்த இடத்திலயே வீழ்ந்து மடிந்தார்கள். பண்டா தனது மேல் அதிகாரிக்கு 6 புலிகளை சுட்டு கொண்று விட்டதாக தகவல் அனுப்பினான்.அவனை பாராட்டிய மேல் அதிகாரி ,இறந்தவர்களின் உடம்பை பெற்றொல் ஊத்தி எரித்துவிடும்படி கட்டளை இட்டான்."மாத்தையா மே ஒக்கம நாக்கிய மினிசு பவ்"(இவர்கள் எல்லாம் வயசு போன கிழடுகள் பாவம்)ஒட முடியாமல் வீழ்ந்து செத்துபோட்டுதுகள் என்றான் ஒரு சிப்பாய்.2ஆம் லெப்டினட் பண்டாவுக்கு கோபம் வந்துவிட்டது,இவன்கள்தான் அந்த கொட்டிகளை பெத்து போட்டவன்கள் ஆனபடியால் இவன்களும் கொட்டிதான்...இங்கு நான் சொல்லுவது தான் சட்டம் நீ எனக்கு கீழ்பணிபுறியும் சிப்பாய் .நான் உன்மேல் அதிகாரி என்று மிரட்டலாக கூறினான்.அத்துடன் அவனுக்கு தண்டனையும் கொடுத்தான்.இறந்தவர்களின் உடல்களை எரிப்பது உனது வேலை என்றான்."மேக்க அப்பெ ரட்ட" தமிழன்கள் இங்க கள்ளதோணியில் வந்தவன்கள் அவன்களை அழிக்க வேண்டும் என்று தனக்கு கீழ் பணிபுரியும் இராணுவத்திற்கு சொல்லியவண்ணமே இருந்தான்.6புலிகளை கொண்றவன் என்றபடியால் உயரதிகாரிகளுக்கு பண்டா மீது நம்பிக்கை பிறந்துவிட்டது.சுற்றிவளைப்புகள்,கைதுகள் என்று வரும்பொழுது பண்டாவைத்தான் அதிகாரிகள் அனுப்புவார்கள்.அப்பாவிகளை கைது செய்வான்,நீ கொட்டிதானே உண்மையை சொல் என சித்திரை வதை செய்வான்,ரோந்து செல்லும் பொழுது டிரக் வண்டியை பார்த்து பயந்து ஒடுபவர்களை சுட்டு கொலை செய்து போட்டு புலிகள் தப்பி ஒடினார்கள் சுட்டுக் கொண்றுவிட்டேன் என்று அதிகாரிகளுக்கு சொல்லுவான் அவர்களும் விசாரனை எதுமின்றி பாராட்டுவார்கள்பண்டாவின் இச்செயல்களால் லெப்டினட் தரத்திற்கு பதவி உயர்தப்படுகிறான்.தரமுயர்த்தப்பட்டவுடனே,இராணுவத்தில் பணிபுரியும் பெண்னை திருமணம் செய்கிறான்.குடும்ப வாழ்க்கையின் பயனாக இரு ஆண்குழந்தையும் ஒரு பெண்னும் புத்தனின் அருளால் கிடைக்கிறது.தெய்யனபிட்ட மூவரும் தாயாருடன் சொந்த ஊரில் வளர்ந்து வரும் வேளையில் பண்டா தமிழர் தாயகத்தில் தமிழர்களை புலி என்ற போர்வையில் அழித்து பல பதக்கங்களும் ,விருதுகளும் பெற்று பதவி உயர்வடைகிறான் ..விடுதலை நாட்களில் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் பொழுது "மெக்க அப்பே ரட்ட " என்று சொல்லி சிங்கள இனவாதகருத்துக்களை புகட்டுவான்.ஒருநாள் கப்டன் பண்டாவை தாயார் அழைத்து உனக்கு ஒரு உண்மை தெரியுமோ? உன்னுடைய சியாவின் தாத்தே(அப்பப்பா வின் அப்பா தமிழன்) தெமிழு என்று சொல்ல இவனால் அதை ஜீரணிக்கமுடியவில்லை.....தங் மம சிங்களய.....மெக்க அப்பெ ரட்ட.......என்று சொல்லிய படியே தாயாருக்கு பதில் அளிக்காமல் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.மகன்மார் இருவரையும் க.பொ.உயர்தரமுடிந்தவுடனே "கொத்தலாவ டிவன்ஸ் அகடமியில்" தனது செல்வாக்கை பயன்படுத்தி சேர்த்துவிடுகிறான்.இருவரையும் விமானப்படை அதிகாரியாக வரவேண்டும் அதற்கான பயிற்சியில் ஈடுபம்படி அன்புகட்டளையிடுகிறான்,இதன் மூலம்தான் புலிகளின் முக்கிய இடங்களை குண்டு போட்டு அழிக்கலாம் வவுனியாவில் பணிபுரியும் மேஜர் பண்டா கிழக்கு பிராந்தியத்திற்கு லெப்டினட் கேர்ணலாக பதவி உயர்வுடன் மாற்றலாகி செல்கிறான்.இவனினது கொடூர சித்திரவதைகள் காரணமாக இவனுக்கு ஒரு பட்டபெயரும் உண்டு அதாவது புள் பண்டா .சாதாரணமக்கள் இவனை புள் பண்டா என்று தான் தங்களுக்குள் கதைத்துக் கொள்வார்கள்.கிழக்கில் பல தாக்குதல்களை நடத்தி கிழக்கின் கட்டளை அதிகாரியாகிறான் கேர்ணல் பண்டா...புலிகளின் கன்னி வெடித்தாக்குதலில் ஒரு கண்ணயும் ஒரு காலையும் இழக்கிறான் கேர்ணல் பண்டா தொடர்ந்து பணி செய்ய முடியாததால் பிரிகேடியர் பண்டா என்ற பதவியுடன் புள் பண்டா ஒய்வு பெறுகிறான்.மகன் பிரியங்க சுமன பண்டா வன்னியில் குண்டு மழை போடப்போகும்பொழுது புலிகளின் விமானஎதிர்ப்பு பீரங்கி படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு மரணமடைகிறான்.தனது இழப்புக்களை பற்றிய கவலையில் இருக்கும் பொழுது இராணுவ பொலிசார் அவனது வீட்டை வருகிறார்கள்.புலிகளுக்கு இராணுவம் பற்றிய சில தகவல்களை வழங்கியமைக்காக விசாரனை செய்ய வேண்டும் என அழைத்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகிறான்.சில சிங்கள பத்திரிகைகளை இராணுவீரன் ஒருவன் கொடுக்கின்றான்....செய்திகளின் தலையங்களை வாசிக்கின்றான் ,எல்லாம் கொட்டிகளின் செய்தியாக இருக்கின்றன.புலிகளின் தளபதியின் தாயார் வெளிநாடு பயணம்.புலிகளின் தளபதி முதலமைச்சர்.புலிகளின் தளபதி கட்சியின் உபதலைவர்,புலிகளின் தளபதி ஜனதிபதியின் பிராந்திய ஆலோசகர்புலிகளின் தளபதியின் மனைவி மேயர் ....புலிகளின் தளபதி ஜனாதிபதி வேட்பாளர்."அப்பெ ரட்ட அப்பெ மினிசு "என்று எனது மகனை இழந்தேன் ,காலையும் ,கண்ணையும் இழந்தேன் ..தங் மம அத்துள(உள்ளே) கொட்டி ஒக்கம எளிய(வெளியில்) கத்தியவன் நெஞ்சை பிடித்தபடியே நிலத்தில் வீழ்ந்தான் .