Tuesday, July 2, 2013

crush....கிரஷ்

பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும் சீன இந்திய,இந்திய வெள்ளை,வெள்ளை சீன என கலப்பின ஜோடிகள் ஆகும்.
ஜோடிகளற்ற மாணவர்கள் குழுக்களாக நின்று கதைத்துகொண்டிருப்பார்கள் இவர்களை கண்டு பொறாமை படவோ ,எரிச்சல் படவோ இல்லை.அதிபர் ,ஆசிரியர்கள் வந்து போவார்கள் சில சமயம் ஆசிரியர்கள் அந்த மரத்தடியிலிருந்து உணவும் உண்பார்கள் ,ஆனால் காதல் ஜோடிகள் தன்னிலை மறந்து அந்த இடத்திலயே இருப்பார்கள்.காதல் ஜோடிகள் ஆசிரியர்களை கண்டு ஒதுங்குவதுமில்லை ஆசிரியர்களும் அவர்களை வெருட்டுவதுமில்லை.இவற்றை பார்த்த சுரேஸுக்கு ஒருவித பய உணர்வும்,பெற்றொர் என்ற அதிகாரமும் தலைதூக்குவதுண்டு.இந்த வெள்ளைகளின் கன்றாவி கலாச்சாரமும் ,பண்பாடும் எங்கன்ட கலாச்சாரத்தை அழிக்கின்றது வாத்திமாரும் கண்டிக்கிறதில்லை என வெள்ளைகள் மீது பலியை போட்டு நிம்மதி அடைவான்.தன்னுடைய கலாச்சாரம் பண்பாட்டை பிள்ளைகளுக்கு புகட்ட தாயகத்திற்கு புலம் பெயர்ந்து செல்லவேண்டும் என எண்ணியதுமில்லை இனிமேலும் எண்ணப்போவதுமில்லை.
.....>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சுரேசுக்கு இந்த காதல் ஜோடிகளை காணும்பொழுதெல்லாம் இளமை காலத்தில் தவறவிட்ட சம்பவங்களை எண்ணி ஏக்கம் வருவதுண்டு.சில சமயங்களில் இரைமீட்பதுண்டு.அவனின் பாடசாலை ஆண்கள் பாடசாலை.சகோதர பாடசாலையின் சகவகுப்பு மாணவியுடன் ஒருவித இது (ஒருதலைகாதல் என்றும் சொல்லலாம்)ஏற்பட்டுவிட்டது.அவளை பார்ப்பதற்காகவும் ,காதலை சொல்ல வேணும் என்ற காரணத்திற்காகவும் அவள் செல்லும் டியுசன் வகுப்புக்களுக்கும் சென்றான்.இருந்தும் காதலை இறுதி வரை சொல்லவில்லை. சுரேஸ் தன்னைச்சுற்றி வருவது தெரிந்திருந்தாலும் சுதா கண்டு கொள்ளவில்லை நீ ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என கேட்கவுமில்லை.இரு வருட கடின சைக்கிள் சுற்றல் மூலம் சுரேசால் தனது ஒருதலை காதலை இருதலை காதலாக மாற்றமுடியவில்லை.
சுதா வீட்டு ஒழுங்கைவாழ்வாசிகள், தேவையற்ற பயணங்களை சுரேஸ் மேற்கொள்வதை அறிந்து கொண்டார்கள்.பெடிப்பயள் இங்குள்ள பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறான் என ஒழுங்கை வாழ் அண்ணன்மாரும் உசார் அடைந்துவிட்டனர்.ஒரு நாள் சுரேஸை பின் தொடர்ந்து இரு அண்ணமார் வந்தனர் அவன் சுதா வீட்டு ஒங்கைக்குள் சென்றவுடன் ஒரு அண்ணன் ஒழுங்கை முகப்பில் நின்றுவிட்டார்.மற்றவர் அவனை முந்தி சென்று சைக்கிளை குறுக்கே நிற்பாட்டினார்.
"தம்பி உம்மை இந்த ஒழுஙகைக்குள் அடிக்கடி காணுகின்றேன் உம்மோட சினேகிதப்பெடியள் யாரும் இந்த ஒழுங்கைக்குள் இருக்கினமோ?"

"இல்லை அண்ணே சும்மா வந்தனான்"சொல்லியபடியே சைக்கிளை திருப்பினான்.

"பிடிடா அவனை " என இந்த அண்ணை கத்த முகப்பில் நின்ற அண்ணை சைக்கிள் கன்டிலை பிடித்துநிறுத்தி சைக்கிளின் முன் டயரை தனது கால்கள் இரண்டுக்குமிடையில் வைத்துக்கொண்டார்.அவனால் ஓடமுடியவில்லை. இரு அண்ணமாரும் ஒன்றாக இணைந்து விசாரணை தொடங்கினர்.
"சும்மாவோ இந்த ஒழுங்கைக்குள் வாறனீ ,உண்மையை சொல்லு அந்த மதில் கட்டின வீட்டிலிருக்கிற சுதாவை சுழற்றத்தானே வாராய்"

"இல்லை அண்ணே"

"பின்னே என்னத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் இந்த ஒழுங்கை வந்து போறாய் ,ஓவ்வொரு தரம் போகும் பொழுது மதில் பக்கம் ஒரு பார்வையை விட்டிட்டு போறாய்...எல்லாம் நங்கள் கவனிச்சுப்போட்டுத்தான் உன்னை இப்ப மடக்கினாங்கள்"

"இல்லை அண்ணே, சுதா என்னோட டியுசன் கிளாசுக்கு வாரவ"

"டியுசன் கிளாசுக்கு வந்தால் நீங்கள் சுழற்றிவியளோ மவனே
இனி இந்த பக்கம் உன்னை கண்டால் வீட்டை உருப்படியா போய் சேரமாட்டாய் ஓடு" என விரட்டீவிட்டனர்.
அதன் பின்பு அந்த ஒழுங்கை பக்கம் செல்வதை குறைத்துக்கொண்டான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பாடசாலயில் இருந்து மகளை கூட்டிவருவதற்கு சென்றவன் காரை வழமையாக தரிக்குமிடத்தில் நிற்பாட்டிவிட்டு அந்த மரத்தடியை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.என்கன்ட பெடியன் போல கிடக்குது என உற்றுப்பார்த்தான்.எங்கன்ட பெடியன் மட்டுமல்ல அவனுக்கு அறிமுகமான ஒருத்தரின் மகன் வேறு.பையனுக்கு அருகில் இருந்தபெண் வேற்று இனத்தை சேர்ந்தவள்.மீண்டும் உறுதி செய்வதற்காக உற்று பார்த்தான்.
"கலோ அப்பா" என்றபடியே மகள் வந்து காரினுள் ஏறிக்கொண்டாள்.

"கலோ"கலோ என மகளுக்கு கூறியபடியே மரத்தடியை பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன அப்பா அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறீங்கள்" என கேட்டபடியே தந்தை பார்த்த திசையை நோக்கி பார்த்தாள்.

"அப்பா அது சுதன் எங்கன்ட கிளாசில் படிக்கிறவர், அவரின்ட girlfriend Korean "

"அவரின்ட அப்பாவின் பெயர் பொன்னம்பலம் தானே"

" உங்களுக்கு தெரியுமோ, Do you know him? நெடுகலும் அங்கேயே பார்த்துகொண்டிருக்க வேண்டாம், it's not nice "

"உப்படி பெடியளும் பெட்டையளும் ஒன்றாக இருக்கிறதற்க்கு டீச்சர்மார்,மாஸ்டர்மார் ஒன்றும் சொல்லமாட்டினமோ"
"They cannot say anything. it's against the law,"
"அப்ப நான் அவரின்ட அப்பாவிட்ட சொல்ல வேணும்"
"No, அப்பா, that is his private business. You cannot interfere in other's business."
"படிக்கிற வயசில உது என்ன இப்படி சேட்டைகள்விடுகிறது,இதை நான் கட்டாயம் அவரின்ட அப்பாவிட்ட சொல்லவேணும் ,எங்கன்ட பெட்டையை பிடிச்சிருந்தாலும் காரியமில்லை போயும் போய் ஒரு சப்பையை பிடிச்சிருக்கிறான்"என்று சொன்னபடியே காரை ஸ்டார்ட் பண்ணினான்.
"இப்ப நீங்கள் உதுக்கு போய் ஏன் டென்சன் ஆகிறீங்கள், this is normal in high school, it's just a crush. நீங்கள் ஸ்கூலில் படிக்கும் பொழுதும் உங்களுக்கும் crush எதாவது இருந்திருகுத்தானே அப்பா அப்ப.........பா"
"ஏய் !யாரோட என்ன கதைக்கிறீர் ,நான் உன்ட அப்பன்டி"
"So what?"
"நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எங்கன்ட அப்பா அம்மாவோட இப்படியெல்லாம் கதைக்க மாட்டோம்,கதைச்சால் அப்பாவின்டா ஐந்து விரலும் கன்னத்தில் பதியும்"
"That is your fault"
"நான் படிக்கிற காலத்தில் லெமன் கிரஷ்,லைம் கிரஷ் என்ற கூல் ரின்க்ஸ்தான் கடையில் வித்தவை அதுகளைக்ப்பற்றி தெரியும் உந்த கன்றாவி கிரஷ்களைப்பற்றி தெரியாது"

"mmmmmm. Like I am going to believe you"