Wednesday, December 1, 2021

சைக்கிளும் நானும்....

 

 

சைக்கிளும் நானும்....

 

அப்பா அரச உத்தியோகம், அவரிடம் ஒர் றலி சைக்கிள் இருந்தது அதில் தான் அவர் வேலைக்கு சென்று வருவார் .அந்த சைக்கிளில் தான் நான் சைக்கிள் ஒட கற்றுக்கொண்டது.அப்பா வேலையால் வந்தவுடன்  வீட்டு சுவரின் சாத்திவிட்டு  செல்வார் சைக்கிளுக்கு ஸ்டாண்டு வாங்கி பூட்டுவது வீண் செலவு என நினைத்திருக்கலாம் ...அவர் வைத்து விட்டு சென்றவுடன்   வீட்டு முற்றத்தில உருட்டிக்கொண்டு திரிவேன் ,பிறகு பெடலில் காலை ஊண்டி ஒரு பக்கமாக ஒடி திரிந்தேன் ஒரு படி முன்னேறி

பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்.அந்த காலத்தில் ஆண்களின் சைக்கிள் தான் அதிகம் விற்பனையில் இருந்தது ,பெண்கள் சைக்கிள் யாழ் மாவட்டத்தில் குறைவு பொருளாதாரத்தில் அதிக உச்சத்தில் இருந்த ஒரு சிலர் வாங்கி வைத்திருந்தாரகள் அவர்களும் வீதிகளில் சைக்கிளை ஓடுவதில்லை.

இரண்டு மூன்று தடவை விழுந்து எழும்பி கையில் காலில் இரத்தம் வந்து அதை பாரத்த அம்மா நாளையிலிருந்து நீ சைக்கிளை தொடக்கூடாது என கட்டளை போட , அதை அப்பா தனது அன்பான வீட்டோ அதிகாரத்தால் "அவன் ஆண்பிளை பெடியன் இப்படி விழுந்து எழும்பினால் தான் சைக்கிள் பழக முடியும் நீ எடுத்து ஓடு கவனமா ஒடு "என்றார் .

"இவன் சைக்கிளை உடைச்சு கிடைச்சு போட்டான் என்றால்"

" அது றலி சைக்கிள் லெசில உடையாது நீர் பயப்படாதையும்"

"நான் சொன்னா யார் தான் கேட்கிறீயள் "

அம்மா அப்பாவின் செல்ல சண்டையில் காலமும் ஓட நானும் சைக்கிள் ஓட கற்றுக்கொண்டேன் .

கடைகளுக்கு  சென்று வர அனுமதி அப்பா தந்தார் அம்மா தரவில்லை .

அம்மாவின் அந்த தடையை அப்பாவும் மீறவில்லை.

அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டபின்பு ஒரு நாள் அனுமதி தந்தார் ,தான் நடந்து பின்னுக்கு வருவதாகவும் என்னை மெல்லமாக கரையால் ஓடிக்கொண்டு செல்லும் படி.

எனக்கு ஒரே புளுகம் ,அப்பொழுது எனது வயது பத்து அல்லது பன்னிரெண்டாக இருக்கும் என நினைக்கிரேன்..அடுத்த நாள் பாடசாலை சென்று நண்பர்களிடம் நான் தனியா றோட்டில் சைக்கிள் ஒடி கடைக்கு போனனான் என பெரிய பில்டப் கொடுத்தேன்.சிலருக்கு அது பொறாமையாக இருந்தது சிலர் கண்டு கொள்ளவில்லை காரணம் அவர்கள் ஏற்கனவே சைக்கிள் ஓட தெரிந்தவர்கள்.

 

ஒரு நாள்  அம்மா

 "தம்பி கடைக்கு போய் உப்பு வாங்கி கொண்டு வா" 

"நடந்து போக மாட்டேன்"

"நடந்து போகமுடியாட்டி உன்ட சின்ன காலால் ஒடி போய் வாங்கி கொண்டுவா"

"அம்மா சைக்கிளில் ஓடி போய் வாங்கிட்டு வரட்டே"

" உந்த மூலைகடைக்கு போறதற்கு ஏன்டா சைக்கிள்"

"அம்மா பீளிஸ் அம்மா பீளிஸ்"

"கரையால போய் கரையால வரவேணும்,றோட்டுக்கு போக கூடாது ,வா நான் படலையடியில் பார்த்து கொண்டு நிற்கிறேன் "

" தேவையில்லையம்மா  நீங்கள் சமையலை பாருங்கோ நான் ஒடி போயிட்டு ஒடி வாரன்"

"வந்திட்டார் முளைச்சு மூணு இலை விடவில்லை எனக்கு பாடம் எடுக்க,

வா சைக்கிளை எடுத்துக்கொண்டு"

அம்மா படையலடியில் நின்று பார்க்க நான் சைக்கிளில் போய் பொருட்களை வாங்கி வருவது வழக்கமாகி விட்டது சிறுதுகாலம் போக அம்மா என்னை தனியாக சென்று வர அனுமதித்தார்.அதாவது "பி " பிளேட் கிடைத்த மாதிரி .

"அம்மா நாளைக்கு ஸ்கூளுக்கு சைக்கிளில் போகட்டா"

"மெல்ல மெல்ல தொடங்கிட்டாய் என்ன,கடைக்கு போக,ஸ்கூலுக்கு போக சைக்கிள் வேணும் எண்டு"

"அம்மா பிளீஸ் பிளீஸ்"

"அப்பரை போய் கேள் ...தனியா கடைக்கு அனுப்பினதுக்கு என்னை ஏசினவர்"

தந்தைகள் வழமையாக தாய்மார்கள் ஊடாக தான் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பட்டுத்துவார்கள் என்பது நான் தந்தையான பின்பு தான் புரிந்தது.

."பி"பிளேட் கழட்டி ஏறிந்து விட்டு முழு லைசன்ஸ் உடன் ஓடுவது போன்ற சந்தோசம்.

அடுத்த நாள் தயங்கியபடி போய்

" பப்பா இன்றைக்கு ஸ்கூலுக்கு உங்கன்ட சைக்கிளை கொண்டு போகட்டே"

அவர் முழுசி பார்த்தார், பிறகு  சமதானமாகி

"பெரியவர் சைக்கிளை கொண்டு போனால் நான் வேலைக்கு நடந்தே போவது"

"நீங்கள் பஸ்சில் போங்கோ"

" நான் ரிடையர் ஆன பின்பு நீ சைக்கிளில் போகலாம் அது வரை நடந்து போ"

"எப்ப ரிடையர் ஆக போறீயள்"

"பெரியவர் நீங்களே அதையும் சொல்லுங்கோ"

"பப்பா"

என செல்லமா அழைத்து விட்டு ஓடிசென்று விட்டேன்.

அப்பாவிடம் எனது பேச்சு எடுபாடாது என தெரிந்த கொண்டு மீண்டும் அம்மாவிடம் தஞ்சம் புகுந்தேன்.

"அம்மா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி தாங்கோவன் ஸ்கூலுக்கு போக"

" அடே சும்மா விளையாடதே சைக்கிளின் விலை எவ்வளவு என உனக்கு தெரியுமா?"

"இல்லை அம்மா "

"ஆயிரம் ரூபா வரும் இப்ப அவ்வளவு காசுக்கு எங்கே போவது"

"பப்பாவிடம் கேளுங்கோ "

"அவர் வரட்டும் கேட்கிறேன் ,அவரே பதினைந்து வருசமா ஒரே சைக்கிளை வைத்து கொண்டு ஒடுறார் இரண்டு மாதமா சைக்கிள் டயர் புதுசு போட வேணும் காசு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ புது சைக்கிளுக்கு நிற்கிறாய்"

எனது சைக்கிள் கனவு பேச்சுவார்த்தையிலயே போய் கொண்டிருந்த்தது....தீர்வு இல்லாத தமிழர் பிரச்சனை போல..

ஒரு நாள் உறவுக்கார் புது சைக்கிளில் எங்கன்ட வீட்டுக்கு வந்தார் எனக்கு மீண்டும் ஆசை வந்து விட்டது அவரிடம் சென்று சைக்கிளின் விலை விபரங்களை கேட்டேன்.

அவரது கொம்பனியில் பணி புரிபவர்களுக்கு, ஐந்நூறு முற்பணம் கட்டி மாதம் மாதம் நூறு கட்டினால் கொடுப்பதாக கூறினார்.

"அப்ப எனக்கும் அப்படி எடுத்து தரமுடியுமா?"

"வை நொட் ,அப்பரிட்ட கேள் அவர் சரி என்றால் ஒழுங்கு படுத்தி தாரன்"

அம்மாவிடம் கேட்டு அப்பரின் சம்மதம் பெற்று கொண்டேன்.

அம்மாவின் கணக்கு புத்தகத்திலிருந்து ஐநூறு பணமும் எடுத்து வைத்துகொண்டு எனது புது சைக்கிள்  உறவுக்காரனை காத்துகொண்டிருந்தேன் ஒரு கிழமையல்ல ஒரு மாதமல்ல ....ஐந்தாறு மாதங்கள்

அவரும் வீட்டுபக்கம் வரவில்லை,இறுதிவரை நானும் புது சைக்கிள் ஒடவில்லை.

அப்பாவுக்கு தூர இடத்துக்கு மாற்றலாகி செல்ல வேண்டி வந்தது அப்பாவின் சைக்கிள் எனது சைக்கிள் ஆனது.

அம்மா அல்லது அப்பாவிடம் சொல்லி அனுமதி எடுத்து சைக்கிளை ஓடும் காலம் போய் நானே என்னுடைய விருப்பம் போல சைக்கிளை எடுத்து ஓடும் வயசு வந்துவிட்டது.

சைக்கிள் டயர் அடிக்கடி பஞ்சராகும் உருட்டிகொண்டு சைக்கிள் கடைக்கு போனால் கடைக்காரர் சொல்லுவார்

"அடுத்த முறை வரும் புது டயரும் டியுப்பும் போட காசோட வாரும் இந்த டயர் நல்ல வழுக்கையா போய்விட்டது என்ட மண்டையை மாதிரி .டியூப்பில்   ஒட்டு போட இடமில்லை"

"அண்ணே பார்த்து ஒட்டி தாங்கோ"

"இது தான் கடைசியா போடுறது இதற்கு பிறகு இதை திருத்த ஏலாது"

"சரி அண்ணே"

பிறகு ஒரு மாதிரி அம்மாவிடம் காசு வாங்கி ஒரு டயரும் டியுபுப்பும் போட்டேன் .ஒன்றை திருத்த அடுத்த திருத்த வேலை வந்து விடும் சீட் பிய்ந்து போகும்,பெடல் கழன்று விழும்,சைக்கிள் செயின் அறுந்து போகும் இப்படி பல செலவுகள் அதை எல்லாம் திருத்த காசு வீட்டை கேட்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

பாடசாலலை,டியுசன் போன்றவற்றுக்கு பாவிப்பதற்காக கிடைத்த சைக்கிளை பின்பு நான் ஊர் சுற்றுவதற்கும் பெண்களின் பின் சுற்றுவதற்கும் பயன்படுத்த தொடங்கி விட்டேன் .கல்விக்கு பயன்படுத்தியதை விட காதல் ஒட்டத்திற்கு காதல் வாகனமாக பயன் படுத்தியது அதிகம் .இறுதியில் கல்வியிலும் வெற்றியில்லை காதலிலும் வெற்றியில்லை .

வழமையா நேரம் கிடைக்கும் பொழுது யாழ்.கொமில தான் பொழுதை போகிறனான்....இப்ப கொஞ்ச காலமா உந்த யூடியுப்பில மினக்கெட வெளிக்கிட்டன்..

அப்படி அன்றும் யாழ்ப்பாணத்து யூடியுப்பர்களின் சனலை நோண்டி கொண்டிருந்தேன் பலர் செய்யும் நல்ல சேவைகளை பார்த்து ரசித்துகொண்டிருந்தேன் .....புலம் பெயர்ந்த உறவுகளின் உதவிகள் அந்த மாதிரி போய் சேர்ந்து கொண்டிருந்தது.....

தாயக உறவுகளில் அநேகர் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு  போக சைக்கிள் வேணும் என்ற கோரிக்கையை வைத்து கொண்டிருந்தார்கள் ....புலம் பெயர் உறவுகளும் பணத்தை வாரி இறைத்து சைக்கிளை வாங்கி கொடுக்க யூப்டியுப்பர்களுக்கு துணையாக இருந்தார்கள் ...

 

அன்று ஆயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி ஓட முடியாமல்  இருந்த பலர்   ....இன்று ஊர் பெயர் தெரியாத பலருக்கு இருபதாயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர்.....எல்லாம் அவன் செயல் ....