Wednesday, March 21, 2018

விடுப்பு ராணிகள்

வாத்தியார் தோட்ட வேலையை முடித்து விட்டு கைகால் அலம்பி கொண்டு
 "டேய் குகன் ஆட்டுக்கு குழை ஒடிச்சு போட்டனீயே"
"ஒம் அப்பா "
"எங்க அம்மா"
"எங்க போறது இங்க தான் நிற்கிறேன், டி போடுறன்  கொண்டு வாரன்"
.
"உவள் சுதா அவளோட கம்பசில படிக்கிற குகனை லவ் பண்ணுறாள்"
"நீ கண்டனீயே"
"பக்கத்து வீட்டு பவளத்திற்கு முன் வீட்டு பர்வதம் சொன்னவளாம்"
"அவளுக்கு யார் சொன்னதாம்"
"அவளுக்கு செல்வராணி சொன்னதாம்"
"அவளின்ட கதையை கேட்டு ஒரு பொம்பிளை பிள்ளையின் வாழ்க்கையில் விளையாடதையுங்கோ, அவள் 'R Q' வேற வேலையில்லை ஊர்விடுப்புக்களை தன்ட இஸ்டப்படி சொல்லிக்கொண்டு திரிவாள் நீங்களும் நம்பிகொண்டிருங்கோ"
செல்வராணி காலையில் வெளிக்கிட்ட என்றாள் பின்னேரம் வந்தா ஊரில இருக்கிற புதினம் எல்லாம் எடுத்து கொண்டு வந்திடுவா.அடுத்த நாள்கை கால் வைத்து தன்னுடைய இஸ்டப்படி அந்த கிராமத்திற்கு சென்றுவிடும்
செல்வராணிக்கு  "ஆர் க்யூஎன்று பட்ட பெயரை குகன் வைத்து விட்டான் அது அவனது வீட்டிலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரும்   பாவிக்கதொடங்கி விட்டார்கள்.  செல்வராணி என்ற பெயரை ஆங்கிலத்தில் மாற்றி அதன் முதல் எழுத்துக்களை   தான் வைத்தான்.
அதே போன்று அவளது கணவன் பேரம்பலத்தை பிபி என்று அழைப்பார்கள்.மொட்டை கடிதம் போடுதல்,பெட்டிசன் போடுதல்  போன்றவற்றுக்கு பெயர் போனவர்தான் பேரம்பலத்தார்.பெட்டிசன் பேரம்பலம் போடாத பெட்டிசனே இல்லை என்று சொல்லாம்.
இப்படித்தான் ஒரு நாள் குகன் மாமரத்தில ஏறி அக்கம் பக்கத்து வீடுகளை விடுப்பு பார்த்து கொண்டிருந்தான்.
" பரதேசி பேரம்பலம் தான் போட்டிருப்பான்,அவன் வரட்டும் அவனின்ட காலை முறிக்கிறேன்"
என்று நாலு வீடு கேட்க தக்கனா கத்திகொண்டிருந்தார் பாங்கர் பரம்.இவரின்ட சத்ததிற்கு வீட்டுக்குள்ளிருந்த‌ திருமதி பரம் வெளியே ஒடிவந்து
"ஏனப்பா உப்படி கத்திறியள் நெஞ்சு நோகப்போகுது"
"கத்தாமல் என்ன செய்ய சொல்லுறாய்,நாங்கள் ரோட்டோட வீடு கட்டுறமாம் என்று உவன் பரதெசி கவுன்சில்காரனுக்கு அறிவிச்சு போட்டான்,"
"பக்கத்துவீடும் றோட்டொடதானே இருக்கு,பிறகு ஏன் எங்களை மட்டும் கட்டவிடமாட்டாங்களாம்"

"கவுன்சில்காரனுக்கு அவங்கள் காசு கொடுத்தவங்களாம்"
"அப்ப நீங்களும் கொடுக்க வேண்டியது தானே"
"கொடுத்திட்டன் கொடுத்திட்டன் "
"பிறகு ஏன் கத்தி கொண்டிருக்கிறீயள்"
"இப்ப சும்மா நூறு ரூபா வீண் தானே"
"அவனை கண்டன் என்றால் பெட்டிசன் எழுதுற‌ கையை முறிச்சு போட்டுத்தான் மற்ற வேலை எனக்கு"
"சும்மா றோட்டீல நின்று கத்திகொண்டிருக்காதையுங்கோ பிறகு அவன் பொலிஸுக்கு போய் எதாவது அண்டி போடுவான் பெரியவளின்ட  கலியாணம் முடியும் வரை சும்மா இருங்கோ"
"ஏன் அவனின்ட மனிசி போய் குத்தி கித்தி போடுவாள் என்று நீ பயப்பிடுறீயே"
"போன தடவை பவளத்தின்ட மகளுக்கு வந்த   லண்டன் வரனை அவள் தானே தடுத்தி நிறுத்தினவள்"
"அதென்று உமக்கு தெரியும்,"
பவளம்தான் சொன்னவள்,அவள் செல்வராணிக்கு   தனக்கு இரண்டும் பெடியள் என்ற திமிரில ஊர்சனத்தின்ட கலியாணங்களை குழப்பி கொண்டுதிரியிறாள்"
"பவளமும் செல்வராணி யும்  உம்முடைய சொந்தக்காரர் தானே"
"அதுகளின்ட பரம்பரையே எரிச்சல் பிடிச்ச பரம்பரை, ஆனால் நாங்கள் அப்படியில்லை"
"வெளியில் நின்று குடும்பகதைகளை கதைக்காமல் உள்ள போவம் வாரும் ,ஒரு பிளேன் டீ போடும் வாரன்கூறியபடி மனைவியை பின்தொடர்ந்து உள்ளே சென்றார் பாங்கர் பரம்.

அன்று சுரேஸுக்கு நல்ல விடுப்பு கிடைத்து விட்டது ,அம்மா என்று அழைத்த படி வீட்டினுள் ஒடிச்சென்றான்.
"அம்மா உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமே"
"சொன்னால் தானே தெரியும்"
" பாங்கரின்ட வீட்டுக்கு பிபி பெட்டிசன் போடிட்டாராம்"
"யார் சொன்னது"
" பாங்கர் தான் ஊர் கேட்க கத்தினார் நான் மரத்தில இருந்து கேட்டனான், பவளம் அன்ரியின் மகளின்ட லண்டன் வரனையும் செல்வராணிகுழப்பினவவாம் என்று பாங்கரின்ட வைவ் சொல்லி கொண்டிருந்தா"

"உனக்கு ஏன் பெரிய ஆட்களின்ட கதை  ,போய் பெடியளோடா போய் விளையாடு"
"தம்பி கதவு தட்டி கேட்குது போய் பார்,யார் வந்திருக்கினமென்று"

"அம்மாபவளம் அன்ரி வந்திருக்கிறார்"
"வாங்கோ அக்கா வாங்கோ இருங்கோ"

இருவரும் சுகம் விசாரித்த பின்பு
"என்ன அக்கா திடிரென்று இந்த பக்கம்"
"உவள் செல்வராணி இந்த பக்கம் வந்தவளே"
"இல்லை ஏன்"
"உனக்கு விசயம் தெரியுமோ அவளின்ட பெடியன் இந்த முறையும் பாஸ் பண்ணவில்லையாம்"
"அப்படியே பெரிசா புளுகி கொண்டு திரிஞ்சாள்"
"அவளின்ட மனசுக்குத்தான் உப்படி நடக்குது"
"மற்றவன் வெளி நாட்டுக்கு களவாய் போனவன் இப்ப எங்க நிற்கிறானாம்"
"நான் அவளிட்ட கேட்கவில்லை கேட்டாள் புளுகி தள்ளுவாள் மலிந்தா சந்தைக்கு வரும் தானே,சுவிஸ்க்கு தான் போய்யிருப்பான் என்றுநினைக்கிறன்"
"அக்கா ,ஞாயிற்று கிழமை வீரகேசரி பேப்பரில வந்த கதையை படிச்சனீங்களா?"
"இல்லை ஏன்"
"நான் படிச்சனான் உவள் சுதா வின்ட கதை போல இருக்கு உவன் பிபி தான் எழுதியிருக்கான் ஊர்குருவி என்ற புனை பெயரில்"
"அப்படி எழுத முடியாதே"
""எல்லாத்தையும் எழுதி போட்டு கடைசியில் சுத்த கற்பனை எண்டு போட்டிட்டான்"
"பேப்பரை உன்னிட்ட இருக்கோ ஒருக்கா தா நானும் வாசிச்சு பார்ப்போம்"
"உவள் செல்வராணியின்ட பேப்பரைத்தான் நானும் வாசிச்சனான் அவளிட்ட‌ ,வாங்கி தரட்டே"
"சீசீநான் போகும் பொழுது பர்வதத்திட்ட‌ வாங்கி கொண்டு போறன்"
"வந்த விசயத்தை மறந்திட்டு சும்மா கதைச்சுக்கொண்டிருக்கிறன் பெரியவளுக்கு வெளிநாட்டு வரன் ஒன்று வந்திருக்கு ,மாப்பிள்ளை வீட்டார்பெண்னை பார்க்க வேணும் என்று சொல்லுயினம் அது தான் உன்னிட்ட கேட்பம் என்று வத்தனான்"
"போனமுறை செய்த மாதிரி இந்த முறையும் வீட்டை கூப்பிடுங்கோவன்"
,"எனக்கு வீட்டை கூப்பிட விருப்பமில்லை, உவள் செல்வராணி மணந்து பிடிச்சிடுவாள் அது தான் வேற எங்கயாம் காட்டுவோம் என்று நினைக்கிறன், என்ட சிங்காரிக்கும் தெரியாம இருந்தால் நல்லம் "
" அப்ப கோவிலுக்கு கூட்டிகொண்டு போய் காட்டுங்கோ"
"நீ தான் அவளை வெள்ளிக்கிழமை ஒருக்கா கூட்டிகொண்டு போகவேணும்"
"சிங்காரிக்கு சொல்லிபோடாத பொம்பிளை பார்க்கப்போயினம் என்று"
"சரி அக்கா வெள்ளிக்கிழமை நான் கூட்டிகொண்டு போறான்"
இருவரும் கதைத்தபடி படலையை திறக்க,எதிரே சென்ற செல்வ‌ராணி
 "என்ன இரண்டு பேரும் நிற்கிறீயள் எதாவது விசேசமே"
"சும்மா வந்தனான் "
"மகளுக்கு எதாவது வரன் புதுசா வந்திச்சோ"
"இல்லை அக்கா ,உங்களுக்கு எதாவது தட்டுபட்டால் சொல்லுங்கோ"
"சொல்லுறன் சொல்லுறன்"
"உங்கன்ட மகன் வெளிநாடு போனான் எங்க நிற்கிறான்"
"அவன் கனடாவுக்கு போயிற்றான் அவனுக்கு பேப்பர் எல்லாம் கொடுத்திட்டாங்கள் "
மீன்காரன் மீன் ,மீன் என கூவிக்கொண்டு வர எல்லோரும் அவனை மொய்த்துக்கொண்டனர்..
அந்த‌  இடம் ஒரு சின்ன சந்தையாக மாறிவிடும் ஒரு அரை மணித்தியாலத்திற்கு அதன் முதலாளி மீன்கார அந்தோனி தான்.
அவரிடம் கடனுக்கும் மீன் வாங்குவார்கள் .
"என்ன வர வர மீன் விலை கூடிகொண்டு போகுது"
"என்னத்தை செய்ய ஒரு பக்கம் பெடியள் மற்ற பக்கம் நெவி உதுகளை சுழிச்சு கொண்டு மீன் பிடிக்கிறதென்றால் அவன்களுக்கு கஸ்டம் தானே,விடியற்காலை நெவி போர்டுக்கு அடிச்சு போட்டாங்கள் அவன்கள் திருப்பி செல் அடிச்சு தள்ளுறாங்கள்"
"இனி உன்னிட்ட வாங்கிறதிலும் பார்க்க சந்தைக்கு போய் வாங்கலாம்"என்று சொல்லி போட்டு செல்வராணி அந்த இடத்தை விட்டுஅகன்றாள்
"போறபோக்கில நாங்கள் எல்லாம் மீன் சாப்பிட இருப்போமோ தெரியவில்லை"
"ஏன் அப்படி சொல்லுறாய் அந்தோனி "என எல்லோரும் கோரோசாக‌
குரல் கொடுத்தனர்
",கடற்கரை பக்கம் நிலமை நாளுக்கு நாள் மோசமா போய் கொண்டிருக்கு இன்றைக்கு ஒரு பெரிய மீன் மட்டும் தான் கிடைச்சுது சமனாக வெட்டி பிரிப்போம்" கூறிய படி கத்தியை தீட்டி மீனை வெட்டி கொடுத்துவிட்டு கழிவுகளை வீதியோரம் வீசினான்.
 மற்ற தெருவுக்கு இன்றைக்கு மீன் இல்லை என்றவன் சைக்கிளை தனது வீட்டுக்கு பக்கம் செலுத்தினான் .
சந்தை கலைந்து ஒரு மணித்தியாலத்தின் பின் அதே இடத்தில் செல் வந்து விழுந்தது கழிவிகளை தின்றுகொண்டிருந்த நாய்கள் சிதறின.ஒரே ஓலம் பெடிசன் பேரம்பலம்,பாங்கர் பரம்,வாத்தியார் ,குகன், செல்வராணி,பவளம்,சுதா,பர்வதம்,பவளத்தின் மகள் ,செல்வராணியின் இரண்டாவது மகன் எல்லோரும் ஒடினார்கள் .வீட்டை விட்டு ஓடினார்கள் ,ஊரை விட்டு ஒடினார்கள் ,நாட்டை விட்டே ஒடினார்கள் ....மீன்கார அந்தோனி ஊர் விட்டு ஒடி புதிய தொழில் தேடினான்...

காலமும் ஒடியது....