Tuesday, April 8, 2014

உவங்கள்

தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டார்.பெடியனை பொத்தி பொத்தி வளர்த்தார்.அவரின்ட பெயர் சொல்ல அவன் தான் வாரிசு என்ற ஒரு காரணம் ஆகும்.
சுரேஸும் கந்தரும் வயசு வித்தியாசம் பாராமல் விவாதிப்பார்கள் அதாவது இருவரும் அலட்டுவார்கள் .வெளியே இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் எதோ முக்கியமான விடயம் பற்றி கலந்தாலோசிக்கினம் எண்டு ஆனால் ஒரு சதத்திற்கும் பிரயோசணமில்லாத விடயமாக இருக்கும்.இவர்களின் இந்த அலட்டல் ஊரில் தேர்முட்டியடியில் தொடங்கினது. இப்ப சிட்னியில்முருகன் கோவில்,நண்பர்களின் வீட்டுதண்ணி பார்ட்டி ,தமிழ் பாடசாலை வரை தொடர்கிறது.
கந்தரின் இளமைக்காலம் யாழ்ப்பாணத்தில் பின்பு வேலை கொழும்பில், இளமை குடும்பவாழ்க்கையும் கொழும்பில் .ஊர் கோவில் திருவிழாவுக்கு குடும்பமாக வந்து இரண்டு கிழமை ஊரில் நிற்பார்.சாமி தீர்த்தம் ஆடி முடிந்த அடுத்த நாள் கந்தர் தீர்த்தம் ஆடி பூங்காவனதன்று உச்சநிலையில் இருப்பார். அதற்கு அடுத்தநாள் கந்தர் தாயாரின் வீட்டில் பெரிய விருந்தும் வைப்பார்.
புலத்தில் வீடுகளில் நண்பர்கள் ஒன்று கூடுவது போல ஊரில் ஒன்று கூடுவதில்லை.தேர்முட்டியடி ,வாசிகசாலை போன்றவற்றில் தான் ஒன்றுகூடுவார்கள் .இலவசமாக கிடைக்ககூடிய இடமும் இதுதான்.
மாலை நேரங்களில் தேர்முட்டியடியில் ஐந்தாறு பெரிசுகள் நாலைந்து இளசுகள் கூடி ஊர் விடுப்பு,அரசியல் கதைப்பது வழக்கம் .கந்தர் ஊரில் நின்றால் நிச்சம் கலந்து கருத்தும் பகிர்ந்து கொள்வார்.தமிழர்கள் தனிநாடு கேட்டு போராட தொடங்கிய காலகட்டம்.
"உவங்கள் தனிநாடு கேட்கிறாங்கள்,உதால கொழும்பில் இருக்கிற எங்களுக்குதான் பிரச்சனை" என கந்தர் தன்னுடைய மனக்குறையை கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பெரிசுகள் சிங்களவனோட வாழ முடியாது எங்களை அவன் கல்வி,குடியேற்றம்,மற்றும் சந்தைகட்டிடங்களை தீ வைத்து பலவழிகளில் ஒதுக்கதொடங்கிவிட்டான் ஆகவே தனிநாடு தான் தீர்வு என்றார்கள் .இளசுகலும் உணர்ச்சிவசப்பட்டு தனிநாடுதான் ஒரே வழி என்றார்கள்.
கந்தர் ஊர் திருவிழா முடிவடைந்து கொழும்பு திரும்பினார்.இரண்டு கிழமையால் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு குடும்ப சகிதமாக கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார். அன்று மாலையே தேர்முட்டியடிக்கு வந்தார்.
"உவங்களாட வாழ ஏலாது தனிநாடுதான் ஒரே வழி .நான் இனி திரும்பி போக மாட்டேன் ஊரோடதானிருக்க போகிறேன்" என்று கூறியவர் பிள்ளைகளை எந்த பாடாசாலைக்கு அனுப்பலாம்,மற்றும் எந்த டியுட்டரி,டியுசன் மாஸ்டர் திறம் போன்ற விபரங்களை சுரேஸிடம் இருந்து அறிந்துகொண்டார்.
சுரேஸும் தான் போகும் டியுட்டரியும்,கல்விகற்கும் ஆசிரியர்கள், சிறந்தது என சொல்லிவைத்தான் .இதில் ஒரு உள் நோக்கமும் இருந்தது. கந்தரின் பிள்ளைகள் ஆரம்பகல்வியை கொழும்பிலுள்ள பிரபலமான கிறிஸ்தவ பாடசாலையில் படித்தார்கள். அதுமட்டுமன்றி கொழும்பு நாகரிகமும் அவர்களிடம் அதிகம் காணப்பட்டது.ஊர் இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும் ஒருவித கவர்ச்சி இருந்தது.பெண்களை இரட்டை சடையுடனும், அரைப்பவாடை பிளாவுஸ்,மற்றும் சுருக்குவைத்த முழுச்சட்டையுடன் பார்த்த ஊர் இளைஞர்களுக்கு ,மேலாடயை ஜீன்ஸுக்குள் விட்டு அங்கங்கள் ஒரளவு தெரியும் படி வீதியில் செல்லும் பெண்களை நிச்சமாக இளைஞர்களை திரும்பி பார்க்க வைக்கும்.சுரேஸின் உணர்வுகளையும் அந்த கவர்ச்சி தூண்டியது.
சுரேஸும் கண்ணனும் அனேகமாக ஊரில் ஒன்றாக ஊர்வலம் வருவார்கள்.கன்ன உச்சி வைத்து தலைமுடியை பக்கவாட்டில் இழுத்திருப்பான் சுரேஸ் கண்ணாடி முன்னால் நின்று அழகு பார்ப்பது குறைவு.கண்ணன் தலைமுடியைமேவி இழுத்து நாலுபேர் மத்தியில் தன்னை மற்றவர்கள் வித்தியாசமாக பார்க்க வேணும் என்று உடையணிந்து தன்னை அழகு படுத்திகொள்வான்.படிப்பிலும் சுரேசைவிட கேட்டிக்காரன்.கண்ணனின் இந்த தோற்றமும் கல்வியறிவும் கந்தரின் மூத்தவள் பிரியாவை கவர்ந்துவிட்டது.
கந்தருக்கு உலக அரசியல் ,கொழும்பு அரசியல் தெரிந்தளவுக்கு ஈழ அரசியலில் அறிவில்லை.ஈழநாடு,வீரகேசரி ,பத்திரிகை,கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்திகளை படித்துவிட்டு தேர்முட்டியடி அரசியல் விமர்சனம் செய்வார்.அத்துடன் இயக்கங்களின் பெயர்களோ,அதன் தலைவர்கள் யார் என்பது பற்றிய அறிவுமில்லை.பாதுகாப்பு படைகளுக்கு எதிராக எதாவது தாக்குதல் நடந்தால் ,"பெடியள் அடிச்சு போட்டாங்கலாம் ,நல்ல அடியாம் மகே அம்மே என்று ஆர்மிகாரன் ஒடிட்டானாம்" என சொல்லி புலங்காகிதம் அடைவார்.அவங்களுக்கு உவங்கள் பெடியள் செய்யிறதுதான் சரி என நற்சான்றிதழ் வழங்குவார்.
இப்படிதான் ஒருநாள் கந்தரின் வீட்டுக்கு அருகாண்மையில் பொலிஸ் வணடிக்கு கிரனைட் தாக்குதலை செய்துவிட்டு பெடியள் தப்பி சென்றுவிட்டார்கள்.ஒரு பொலிஸதிகாரி மரணமடைய எனையோர் தலைமையகத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார்கள்.முப்படையும் ஸ்தலத்திற்க்கு விரைந்துவந்தனர்.மக்கள் வீடுவாசலைகளையும்,உடமைகளையும் விட்டு வேறு கிராமத்திற்கு ஒடினார்கள்.கந்தரும் குடும்பத்தோடு வெளிக்கிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
முப்படையினர் தங்களது ஆத்திரத்தை கிராமமக்களின் வீடுகளை,உடமைகளை தீ வைத்தும்,கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் செய்தும் தீர்த்து கொண்டார்கள்.பின்பு இரு நாட்கள் ஊரடங்கு சட்டம் போட்டு ஊரை காவல் காத்தார்கள்.
பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிப்படைந்த கிராம மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும்,அத்துடன் இளைப்பாரிய உச்சநீதிமன்ற நீதி பதியின் தலைமயில் விசாரனை நடை பெறும் என பத்திரிகையில் செய்திகள் வந்தன,ஆனால் நீதியும் ,நிதியும் மக்களுக்கு கிடைக்கவில்லை.மக்கள் தங்களது முயற்ச்சியால் இயங்கத்தொடங்கினார்கள். மீண்டும் தேர்முட்டி அரசியல் வியாக்கியானதை தொடங்கினார்கள்.
"உவங்கள் பெடியள் கிரனைட்டை காட்டுப்பகுதியில் போட்டிருந்தால் ஆர்மிக்காரன் எங்கன்ட இடத்தை உப்படி நாசம் பண்ணியிருக்கமாட்டாங்கள்"... அங்கும் இங்கும் திரும்பி பார்த்துவிட்டு " உவங்கள்பெடியள் செய்தது சரியான பிழை"என்றார் கந்தர்.
"அண்ணே கெரில்லா போர் என்றால் உப்படித்தான் இருக்கும்"
"அடே! பாதிக்கப்பட்டது நாங்கள்"
"அண்ணே நோகாமல் நொங்கு குடிக்கப் பாக்கிறீங்கள்"
ஊர் நிலமைகள் சரியில்லை என அறிந்த கந்தர் மீன்டும் கொழும்பு திரும்பினார் .மூத்தமகள் பிரியாவை மேல்படிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது மகளும்,மகனும் ஊரில் தாயாருடன் இருந்தார்கள்.லண்டனுக்கு ஒப்பின் விசா என அறிந்து விடியற்காலை பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் தவம் இருந்து விசா பெற்று உடனடியாகவே லண்டன் பயணமானார்.
குடும்பத்தை லண்டன் அழைப்பதற்கான ஆயத்தங்களை செய்யத்தொடங்கினார்.மூத்தவளுக்கு அவுஸ்ரேலியா மாப்பிள்ளையை கட்டி கொடுத்தார். இரண்டாவது மகளும் ,மகனும் மருத்துவர்களாக லண்டனில் இருக்கின்றார்கள் .கந்தரும் மனைவியும் சிட்னிக்கும் லண்டனுக்கும் காலநிலைக்கு ஏற்றமாதிரி மாறிமாறி குடியிருப்பினம்.லண்டனில் வின்டர் என்றால் சிட்னியில் குடியிருப்பு. சிட்னியில் இருக்கும் பொழுது பேரப்பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு கந்தர் அழைத்து வருவார்.சுரேஸும் தனது பிள்ளைகளை அதே பாடசாலைக்கு அழைத்து செல்வான்.
"டேய் சுரேஸ் உவங்கள் ஒழுங்கா தமிழ் படிப்பிப்பாங்களோ"
"ஏன் அண்ணே அப்படி கேட்கீறீங்கள் என்ட பிள்ளைகள் உயர்தரம் வரை இங்க படிச்சவயள் அவர்கள் இப்ப நல்லா தமிழ் பேசுவினம்"
"உவங்கள் என்ட பேத்திக்கு போனமுறை மார்க்ஸ் போடும்பொழுது குறைச்சு போட்டாங்கள் அதுதான் கேட்டனான்"

"உவங்கள் இப்ப உந்த கேட்டை பூட்டிப்போடுவாங்கள் நான் போய் காரை உள்ள விடப்போகிறேன்" காரை உள்ளே விட்டுவிட்ட பின்பு வந்த கந்தர் மீண்டும் அரசியல் பக்கம் கதையை தொடங்கினார்
"ஐ.நா தீர்மானம் இந்த முறை உவங்களுக்கு வெற்றி கிடைக்கும்"

"யாருக்கு அண்ணே"

"கூட்டணிக்குத்தான்டா"
"அண்ணே , யாரை நீங்கள் உவங்கள்,உவங்கள் என்று இப்ப 40 வருசமாக சொல்லி கொண்டிருக்கிறீங்கள்.......எப்ப சொல்லப்போறீங்கள் நாங்கள் ,எங்கன்ட......என்று"