Tuesday, September 10, 2013

"என்ட............."

மனிதன் பிறந்தவுடன் தொடங்கிய என்ட என்னுடைய என்ற சொல் அவன் இறக்கும் வரை தொடரும் என்பது யாவரும் அறிந்தது.சுரேஸுக்கும் அது விதிவிலக்கல்ல.
அந்த பாடசாலைக்கு அவன் முதல் காலடி எடுத்து வைத்தவுடன் ஆசிரியை அவனை அழைத்து சென்று இதுதான் உன்னுடைய இடம்,மணி அடித்தவுடன் ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் வந்து இருக்க வேண்டும் என ஆசிரியை கூறியவுடன் "ஒம் டீச்சர்" என்றவன் அதில் அமர்கின்றான்.சிலேட்டும்,சிலேட் பென்சிலும் அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு பக்கத்து கதிரையில் அமர்ந்திருக்கும்பெடியனை பார்த்து சிரிக்கின்றான்.அவன் அழுது கொண்டிருந்தான்.அவனை பார்த்தவுடன் இவனுக்கும் அழுகை வந்துவிட்டது.அம்மாவிட்ட போகப் போறன் என அழத்தொடங்கிவிட்டான். முதல் நாள் பாடசாலைக்கு வருபவர்களில் அநேகர் அழுவார்கள்,பாடசாலைக்கு வரமாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.ஆசிரியர் பெண் என்றபடியால் இருவரையும் சமாதானப்படுத்தினார்,அடுத்த நாள் எல்லாம் சகயமாகி போய்விட்டது.

"டீச்சர் இவர் என்ட சிலேட்டில கீறிப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட சிலேட் பென்சிலை உடைச்சுப்போட்டார்" "டீச்சர் இவர் என்ட கதிரையை எடுத்திட்டார்" ஆசிரியை விசாரனை தொடங்கியவுடன். "ஏன் அவனின்ட சிலேட்டில் கீறினனீ" "அவன் தான் என்ட சீலேட்டில் முதல் கீறினவன்,அதுதான் நானும் கீறினன்" "இல்லை டீச்சர் நான் கீறவில்லை அவன் தான் முதல் என்ட சிலேட்டில் கீறீனவன்.அவன் பொய் சொல்லுறான்" ஆசிரியை இருவரையும் வாங்கின் மேல் எழுந்து நிற்கசொல்லிவிட்டு படிப்பிக்க தொடங்கிவிட்டார்.தண்டனை முடிந்து இறங்கியவுடன் சுரேஸ் தனது சிலேட்டில் இருந்ததை எச்சில் போட்டு அழித்துவிட்டு நல்ல பிள்ளைமாதிரி கதிரையில் அமர்ந்தான்.

ஒரு நாள் தாயாருடன் கடைக்கு சென்றவன் அங்கு டீச்சரை கண்டவுடன்," அம்மா என்ட டீச்சர் நிற்க்கிறா போய் கதைச்சுப்போட்டு வாரன்"என்றவன் ஒடிப்போய் கதைத்தான்.அவனின் ஆரம்பகல்வி பல என்ட என்ற உறவுடன் முடிவுக்கு வந்தவுடன் . டீச்சர் நான் ஆறாம் வகுப்புக்கு என்ட புது பள்ளிகூடத்திற்கு போக போறன் என்று கூறி மகிழ்சிப்பட்டான்.

ஆரம்ப பாடசாலை முடிவடைந்து உயர்வகுப்பு பாடசாலைக்கு சென்றவுடன் அதிபர் உனது வகுப்பு 6பீ உன்ட வகுப்பாசிரியர் வந்து உன்னை அழைத்துசெல்வார் ,அந்த லைன்னில போய் நில்லு என அதிபர் கட்டளையிட்டார். அதிபரின் தோற்றமும் ,குரலும் அவனுக்கு பயத்தை உருவாக்கியது.அந்த பாடசாலையில் நீண்ட கதிரைகளும் மேசைகளும் இருந்தன.வகுப்பாசிரியர் 6பீ குறிப்பிட்ட வகுப்பை காட்டி எல்லோரையும் அந்த வகுப்பில் போய் இருக்கும்படி கூறினார் ,மாணவர்கள் அடிபட்டு,முண்டியடித்து ஒடிப்போய் முதல்வரிசையில் இருந்தார்கள்.சிலர் கடைசி வரிசையில் போய்யிருந்தார்கள்.முதல் இரு வரிசையிலும் படிக்க கூடியவர்கள் இருந்தார்கள். பின் வரிசையில் எனையோர் இருந்தார்கள். ஆசிரியரும் இதைத்தான் விரும்பினார்.படிக்க கூடியவர்களுக்கு சில சலுகைகளும் ஆசிரியரிடமிருந்து கிடைத்தது.படிக்க முடியாதவர்கள்,படிப்பில் அக்கறை இல்லாதோர்,படிப்பில் அக்கறையிருந்தும் படிக்க முடியாதோர்,சிவாஜி,கமல் ரசிகர்கள் கூட்டம் பின்வரிசையில் இருந்தார்கள்.

சுரேஸுக்கு நடுவரிசையில் ஒரு இடம் கிடைத்தது.கொஞ்சம் படிப்பு ,கொஞ்சம் விளையாட்டு என்ற ரகத்திற்க்குரிய வரிசை. அவனுக்கு பக்கத்திலிருந்தவனிடம் பேச்சை தொடங்கினான்.இருவரும் வேறு வேறு பாடசாலையிலிருந்து அங்கு வந்திருந்தார்கள். "உன்ட பெயர் என்ன" "வின்சன்ட் ஞானசீலன்,உன்ட " "சுரேஸ் சுப்பிரமணியன்" "என்ட குடும்ப பெயர் ஞானசீலன்" "உன்ட அப்பாவின் அப்பாவின் அப்பாவின் பெயர் என்ன?" "தெரியாது" "என்ட அப்பாவின்ட அப்பாவின்ட அப்பாவின் பெயர் ஞானசீலன்" சுரேஸ் ஒன்றும்புரியாமல் முழித்துக்கொண்டிருக்கையில் ஆசிரியர் ,பிள்ளைகள் சத்தம் போடாதையுங்கோ,உங்களுடைய வகுப்பாசிரியராகிய நான் தமிழும்,சமயமும் படிப்பிப்பேன் கணக்கு விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கு வேறு ஆசிரியர் வருவார்.வகுப்பு அட்டவணை எழுதுகிறேன் நீங்கள் உங்கன்ட கொப்பியில் எழுதுங்கோ.ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போட்டு பக்கத்து வகுப்பு ஆசிரியையுடன் விடுப்பு கதைக்க சென்றுவிட்டார் மாணாவர்கள் எழுதிபோட்டு கதைக்க தொடங்கிவிட்டார்கள்.

அடுத்த பாடத்திற்கு மணி அடித்தவுடன் ஆசிரியர் உள்ளே வந்து கோபமாக சத்தம் போடாதையுங்கோ,எல்லோரும் எழுதியாச்சோ என கேட்டார்.

"ஒம் சேர்"என எல்லோரும் ஒன்றாக பதில் சொன்னார்கள்.

"அட்டவனையில் இப்ப என்ன பாடம் போட்டிருக்கு என்று பாருங்கோ"

"சமயம் சேர்"

"சரி எல்லோருக்கும் தேவாரம் தெரியுமோ,தெரிஞ்ச ஆட்கள் கையை உயர்ந்துங்கோ"

"ஒம்,சேர் " என கோரொசா குரல் கொடுத்துப்போட்டு அனேகர் கையை தூக்கினார்கள்கையை உயர்த்தாத வின்சன்டை பார்த்து

"ஏன் உனக்கு தேவாரம் தெரியாதோ "
"இல்லை சேர் எனக்கு தெரியாது நான் கிறிஸ்டியன் என்ட மதம் கத்தோலிக்கம்"

".எல்லொரும் கையை கீழ விடுங்கோ இந்தவகுப்பில் எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கின்றீர்கள் ".நாலு பேர் எழும்பி நின்றார்கள்.. உங்களுக்கு நான் அதிபருடன் பேசி கத்தோலிக்கம் படிபிக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிய ஆசிரியர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.எனையோரின் இந்து சமய பாடநேரத்தில் இவர்களுக்கு கத்தோலிக்கம் படிப்பிக்கபட்டது.

எட்டாம் வகுப்பில் சுரேஸ் படிக்கும் பொழுது ஒரு நாள் பக்கத்து வகுப்பு மாணவனுடன் தகராறு ஏற்பட்டு அடித்துவிட்டான்.அவன் எட்டாம் வகுப்பு "சி "பிரிவை சேர்ந்தவன் .அவனது வகுப்பை சேர்ந்த இன்னொருத்தன் கண்டுவிட்டான் எங்கன்ட "சி"வகுப்புக்காரனை "பி" வகுப்புக்காரன் அடிச்சுப்போட்டான் பள்ளிக்கூடம் விட்டு போகும் பொழுது எல்லோரும் வாங்கோடா போய் அவனை அடிப்போம் என அந்த வகுப்பின் சண்டியத்தலைவன் அழைப்புவிட்டான். பாடசாலை விட்டு வெளியே சுரேஸ் வந்தவுடன் c பிரிவையை சேர்ந்த குழுவினர் அவனை ஏன்டா எங்கன்ட வகுப்பு பெடியனுக்கு அடிச்சனீ என கேட்டு தாக்கினார்கள் .சுரேஸ்சின் நல்ல அந்த நேரம்பார்த்து ஆசிரியர்களும் வெளியே வந்தார்கள் .அடிபட்டவர்கள் இடைத்தவிட்டு ஒடிவிட்டார்கள். A,B,C,D என்ற பிரிவுகள் கல்வி தராதரத்தின் அடிப்படையில் பிரிக்கப்படிருந்தன.A பிரிவின் கடைசி மாணவனின் புள்ளிகளை B பிரிவின் முதல் மாணவன் பெற்றிருப்பான் இப்படியே இறங்குவரிசையில் போகும் ,அதேபோல சண்டித்தனத்தில் ஏறுவரிசையில் செல்லும்,அதாவது A பிரிவைசேர்ந்தவர்கள் கல்வியில் அதிகம் நாட்டம் கொண்டிருப்பார்கள் B பிரிவைசேர்ந்தவர்கள் சண்டித்தனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.

பாடசாலை பருவம் முடிவடைந்தவுடன் ஊர் சுற்றும் காலம் தொடங்கியது.ஊர்கோவிலில் பரம்பரைபரம்பரையாக அவனின் குடும்பம் திருவிழா செய்து வந்துகொண்டிருந்த்தது.ஊரார் நாலுதிசையிலும் உள்ளவ்ர்களுக்கு திருவிழாக்களை பிரித்து .'வடக்கு மானிப்பாயிரின்ட ,தெற்குமானிப்பாயிரின்ட என் கொடுக்கப்படிருந்தது.

"தம்பி எங்கன்ட திருவிழா வருகிறது விஞ்ஞாபனத்தை கொண்டுபோய் கொடுத்துப்போட்டு திருவிழாகாசையும் வாங்கிகொண்டு வா,முதலில் மாமாவிட்டயும் ,சித்தப்பாவிட்டயும் போய் வாங்கு,"

"அப்பா,நான்முதலில் கனகுமாமாவின்ட வீட்டை போகட்டே"

"சீ,சீ அந்த மனிசன் கஞ்சன் கொஞ்சமாத்தான் போடுவான் ,பிறகு மற்றசனமும் அதை பார்த்து கொஞ்சமாய்தான் போடும்,சுந்தர் மாமாவிட்ட முதல் போ அவர்தான் போனமுறை அதிகமா போட்டவர் ,பிறகு சித்தப்பாவிட்ட போ,இந்த முறை எங்கன்ட திருவிழாவை நல்ல எழுப்பமா செய்யவேணும் ,நாலு சனம் திருவிழாவை பற்றி கதைக்க வேணும் எங்கன்ட திருவிழாக்காரின்ட வீடுகள் எல்லாம் தெரியும்தானே"

"ஓம் அப்பா" அவர்களுடைய திருவிழா முடிவடைந்து,தேர்திருவிழாவும்வந்தது.தேர்திருவிழாவில் எல்லொரும் எந்த திருவிழாகாரர் நல்லாய் செய்தது என்ற கதைதான் கதைப்பார்கள்.ஓவ்வோருத்தரும் தங்களுடையது சிறந்தது என்பார்கள்.தேர்திருவிழா அன்று வேஸ்டியணிந்து அம்மாவினுடைய சங்கிலியையும் போட்டு தேரின் வடத்தை பிடித்து அரோகரா என கத்தி இழுத்துகொண்டிருத்தவனுக்கு ,சகமாணவி ஒருத்தி பாவாடைதாவணியில் கனகாம்பரபூ தலையில் அலங்கரிக்க நிற்பதை கண்டவன் தன்னிலை மறந்தான். அவளின் காதலை பெறுவதற்காக சகாசங்களை செய்யத்தொடங்கினான்.இதை அறிந்த அந்த பெண் தனது காதலனிடன் சொல்லிவிட்டாள்.ஒரு மாலை நேரம் சுரேஸ் அவளின் பின்னால் தொடர்ந்து செல்லும் பொழுது ஐசே கொஞசம் நில்லும் என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு நின்றான்.

"ஏன் நீ அவளுக்கு பின்னால சுத்துறாய்"

"அதை கேட்க நீ யார்" "அவள் என்ட காய்,அவளை நான் லவ்பண்ணுகிறேன்" சுரேஸ் அவளை பார்த்தான் அவளோ ஏளனமாக பார்த்து சிரித்த படியே சென்றாள்.

எங்கன்ட மொழியை சிங்களவன் அழிச்சு போடுவான் அதை தடுக்க வேண்டும் என்று விசன்ட் போராடபோனான்.சிங்களவன் மொழியையும்,அவனையும் அழித்தார்கள் இதை அறிந்த சுழியன் சுரேஸ் இது என்னடா நாடு வெளிநாடு போய் தப்பிகொள்வோம் என புலம் பெயர்ந்தான். புலத்தில் என்ட மதம் ,என்ட கடவுள் ,என்ட திருவிழா என்ட வீடு ,எங்கன்ட அவுஸ்ரேலியா .... என புலம்பிக்கொண்டு மீண்டும்... என்கன்ட ஊருக்கு போய்வருகிறான்.