Sunday, June 12, 2016

தேடல்

மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்'
வருவதற்கு முதல் நாள் த‌ந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் ச‌லவை தொழிலாளி,சிகை அலங்காரர் எல்லோரும் சந்தோசப்படுவினம். பரம்பரை பரம்பரையாக சிகை அலங்காரம் செய்பவ‌ர் மாமா வந்தவுடன் வீட்டை வருவார் முடி வெட்ட வேண்டிய‌ தேவையிருக்காது ஆனால் மாமா அவ‌ருக்கு பணம் கொடுப்பார் சிகை அலங்கார் போய் சிறிது நேரத்தில் சலவை தொழிலாளி வருவார் அவருக்கும் காசு கொடுப்பார்.
 வீட்டில் சமையல் விசேடமாக இருக்கும் அத்துடன் எனக்கும் கொஞ்சம் காசும் கையில் புரளும் கடைக்கு போய்வந்தால் மிகுதி சில்லறையை என்னை வைத்திருக்க சொல்லுவார்  .திரும்பி போகும் பொழுதும் காசு கொடுப்பார்.அந்த காலத்தில் 10 ரூபா பெரிய காசு.
வருடத்தில் ஒரு தடவை திருவண்ணாமலைக்கு சென்று வருவார் .கொழும்பில் பணிபுரிந்தாலும் பலாலி விமானநிலையம் மூலம்தான் திருச்சி செல்வார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மாகரிஷியின் பக்தன்.ரமண மகாரிஷியுடன் நேரடியாக உரையாடியுள்ளார் ஆத்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர். இளம் வயதில் இந்தியா சென்று ஆத்மீக தேடலில் ஈடுபட்டவர்.முதல்முத‌லாக விமானத்தை கண்டதும் அவரது புண்ணியத்தில் தான். அடுத்த நாள் பாடசாலைக்கு சென்று சகமாணவ‌ர்களுக்கு விமானத்தில் ஏறிஉள்ளே  பார்த்தானான் என்று கதை அடிக்க அவ‌ர்களும் நம்பிவிட்டார்கள்.சின்ன வயசில ந‌ல்லாய் கதை விடுவேன் அதுதான் இப்ப கதை கிறுக்க வசதியாக இருக்கிறது . அப்பொழுது என்னுடன் படித்தவ‌ர்கள் எல்லொரும் விமானத்தை வானத்தில் பார்த்திருந்தார்கள் ,நான் மட்டும் விமானநிலையத்தில பார்த்திருந்தேன். அந்த விமானநிலையம் சிவில் விமான நிலையமாகத்தான் இருந்தது.விமானபடையினரை கண்ட ஞாபகாமில்லை.
யாழ்ப்பாணம் வந்தால் செல்வச்சன்ன‌நிதிக்கும் எங்களை அழைத்து செல்வார் .சோமரின்ட சோமசெட்டில் குறைந்தது பத்து பேராவது போவோம்.அநேகமான நேரங்களில் எனது பயணம் அம்மாவின் மடியில்தான். இப்ப இருப்பது போன்று அப்பொழுது வான் வசதிகள் இல்லை தட்டிவானை வாடகைக்கு  பிடித்து கொண்டு போகமுடியாது . தொண்டமனாறு வான் கதவுகளை கண்டவுடன் மனதில் ஒரு சந்தோசம்  கோவில் வரப்போகின்றது கடலை வாங்கி சாப்பிடலாம் . ஆனந்தா ஆச்சிரமத்தில் ருசியான சைவ உணவை மதியம் உண்ணலாம் என்ற மற்ற மகிழ்ச்சி ஆகும். சின்ன ஆட்கள் நாங்கள் முதலில் காரிலிருந்து இறங்கினால் தான் பெரியவர்களிறங்க முடியும் .நாங்கள் இறங்கி முதலில் குளத்தை நோக்கி ஓடுவோம் கால் கழுவுவதற்கு ,அம்மா பின்னே நின்று கத்துவார்கள் ஓடாயதயப்பு கவனம் கவ‌னமென்று அவர்கள் வந்து கால் கழுவுவதற்கு முன்பே நாங்கள் காலை கழுவிட்டு கோவிலை நோக்கி ஒடுவோம் காலில் மணல்  பதியும் கோவில் வாசலில் போய் இரண்டு கால்களையும் ஒரு தட்டு தட்டி போட்டு உள்ளே செல்வோம்.
கோவிலை சுற்றி கும்பிட்டு முடிய அம்மாவிடம் போய் கடலைக்கு காசு கேற்பேன். இருடா ,சாமி கும்பிட்டு முடிய நான் வந்து வாங்கிதாறன் என்பார். முகத்தை தொங்கப்போட்டபடி நிற்பதை பார்த்த மாமா கூப்பிடு ஒரு ரூபா தருவார் சிறுவர்கள் நாங்கள் கடலைகடைப் பக்கம் ஒடி .பட்டானிக்கடலையும் ,கச்சான் கடலையும் வாங்கி சாப்பிடுவோம்.
மதியம்  அன்னதான‌த்திற்கு காசு கட்டுவதற்கு மாமா ஆனந்தா ஆச்சிர‌மத்திற்கு செல்வார் அவ‌ருடன் நானும் செல்வேன் மற்றவர்கள் சிலசமயம் எங்களுடன் வருவார்கள்.ஆனந்தா ஆச்சிரமத்தை நிர்வகித்து வந்த மயில்வாகனம் சுவாமிகளும் ரமண மரிஷியின் பக்தன் .இருவரும் ஒருவரை ஒருவர் கைகூப்பி வணங்கி சுகம் விசாரித்து கொள்வார்கள் என்னை தங்கையின் மகன் என சுவாமிகளுக்கு அறிமுகபடுத்துவார்.இருவரும் ரமணர் மற்றும் யோக சுவாமிகள் பற்றியும் இன்னும் பல சாமிகளை பற்றியும் பேசுவார்கள், நான் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்துகொண்டிருப்பேன். நூறு அல்லது நூற்றைம்பது ரூபாவை மேசை லாச்சில் வைப்பார்  பத்து பேர் வந்திருக்கின்றோம் மதியம் வருவோம் என்று மாமா சொல்லுவார் .
புலிக்குட்டி,நரிக்குட்டி ,பூணைக்குட்டி ,ஆணைக்குட்டி,நாய்குட்டி என்று கதைத்தார்கள் என‌க்கு ஒன்றும் புரியவில்லை.கோவிலுக்கு திரும்பும் பொழுது மணல் சுடத்தொடங்கி விட்டது ஒட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி போகும் வழியில் இரு வெள்ளைக்காரர்கள் வேஸ்டியுடன் வந்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒருவர் மாமாவுக்கு அறிமுகமானவர் .மாமாவை தனது கூடிலுக்கு வரும்படி அழைத்தார்.நானும் அவ‌ர்களுக்கு பின்னால் சென்றேன்.
.
கடற்கரையோரம் தென்னைமரங்களுக்கு நடுவே ஒரு சிறிய சீமேந்தால் கட்டப்பட்ட அறை ,சற்று உயரத்தில் அமைந்திருந்தது.ஆறு எழு படிகள் ஏறித்தான் உள்ளே செல்லகூடியதாக இருந்தது.உள்ளே பாய் ஒன்றும் சீமந்தால் கட்டப்பட்ட கட்டில் போன்ற ஒரு அமைப்பும் இருந்தது வெள்ளை வேஸ்டிகள் ,சால்வைகள் சிலதும் இருந்தன.மாமாவும் அவர்களும் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார்கள்.என்னத்தை பேசினார்கள் என்று ஒன்றும் புரியவில்லை ,அப்பதான் புரிந்து கொண்டேன் என்னுடன் வந்த மற்றைய சிறுவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளாமைக்குறிய காரணத்தை.நான் அந்த வளவில் சுற்றிதிரிந்து அணிலை ஏறவிட்ட நாய் மாதிரி தென்னை மரங்களை சுற்றி விளையாடிகொண்டிருந்தேன்.
சன்னதியானின் மதிய பூஜைக்குறிய மணியோசை கேட்க மூவரும் தங்களது உரையாடலை முடித்துகொண்டார்கள் நானும் மாமாவும் கோவிலை நோக்கி சென்றோம் . உதுல தாடியுடன் இருப்பவரை  நாய்க்குட்டி சாமி அல்லது ஜெர்மன் சாமி என்று சொல்லுறவையல் ஜேர்மனியிலிருந்து வந்திருக்கிறார், மற்றவர் நரிக்குட்டிசாமி அவுஸ்ரெலியாவிலிருந்து வந்திருக்கின்றார் இப்ப திருவண்ணாமலையில் இருக்கின்றார் என மாமா சொல்லிகொண்டு வந்தார் .  நடக்க முடியாமல் மணல் சுடாக இருந்தது.மாமாவின் கதைகளை கேட்க கூடிய நிலையில் நான் இருக்கவில்லை மாமா கால் ச‌ரியாக சுடுகிறது நான் ஒடப்போறேன் என்று சொல்லி அவரின் பதிலுக்கு பார்த்து கொண்டிருக்காமல்  ஒரே ஒட்டத்தில கோவிலை போய் சேர்ந்தேன்.மாமா ஆறுதலாக நடந்துவந்தார்.
பூஜை முடிந்தவுடன் எல்லோருமாக ஆன‌ந்தா ஆச்சிரமம் நோக்கி நடக்கலானோம்  .மணல் சூடாக இருந்தது ஒட்டமும் நடையுமாக சென்று ஆச்சிரமத்தை அடைந்தோம் உள்ளே செல்ல முடியவில்லை, உண்மையிலயே அன்னதான‌ம் தேவைப்பட்டோர் பலர் அன்னதானத்திற்காக வெளியே காத்திருந்தார்கள் .மாமாவும் மற்ற பெரியவ‌ர்களும் வந்தவுடன் அவர்களுடைய உறவினர்கள் நாங்கள்  என அறிந்த நிர்வாகத்தினர் எங்களை உள்ளே அனுமதித்தனர் .மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை .

உள்ளே ஒரு மண்டபத்தில் மயில்வாகணம் சுவாமிகள் ,அங்கிருந்த சாமிபடங்களுக்கு கற்பூர ஆரத்தி செய்துவிட்டு எங்களை உள்ளே அமரும் படி சொன்னார் .வாழை இலை பாரிமாறப்பட்டது ஐந்தாறு மரக்கறியுடன் உணவு தரப்பட்டது. .வெள்ளைக்கார சாமிமாரும் எங்களுடன் உள்ளிருந்து உணவு உட்கொண்டனர். .சிறிது நேரத்தில் பலத்த கூக்குரலுடன் வெளியே நின்ற அன்னதானம் தேவைப்பட்டோர் ஒடி வந்தார்கள் .அவ‌ர்களுக்கு வேறு இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.எமக்கு கிடைத்த உணவும் ,உபசரிப்பும் அவர்களுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்கு இன்றும் சந்தேகமாயிருக்கு.
மீண்டும் கடலைக்கார ஆச்சியிடம் ஒரு ரூபாவுக்கு கடலை வாங்கி கொண்டு வீடு சென்றோம்.
அன்று எம் மண்ணில் ஆத்மீக தேடலுக்காக பிற நாட்டவர்கள் பலர் வந்துள்ளார்கள், அந்த மண்ணின் பூர்வீக  குடிகள் நாம் பொருள் தேடலுக்காக‌ அவர்களின் மண்ணில் வாழ்கின்றோம்.அவர்களின் தேடலில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள் .எமது தேடலை நாம் அவர்களின் மண்ணில் தொடர்கிறோம்.