Monday, May 10, 2010

மீசை

சுரேஷ் தனது மீசையை தடவிய படியே தனது சிந்தனையை ஓட விட்டான் இந்த மீசை அரும்ப தொடங்கிய காலத்தில் இருந்து அது படும்பாட்டை பத்தி தான் இந்த மீசை வளர்வதிற்கே இத்தனை தடைகள் கட்டுபாடுகள் சூழ உள்ளோர்களாள் உண்டாக்கபடும் போது குழந்தை வளர்ந்து பெரிதாக வளரும் வரை எவ்வளவு கஷ்டங்களை அது எதிர்நோக்க வேண்டிய வரும் என்று அவனால் எண்ணி பார்க்கவே முடியவில்லை.
க.போ சாதாரணம் படிக்கும் போது சுரேஷ்ஷின் மீசை அதிகமாகவே வளர்ந்திருந்தது.ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் படிபிக்கும் போது சிரித்து விட்டான் ஆசியருக்கு கோபமாய் திட்ட தொடங்கிவிட்டார்,வில்லன்கள் மாதிரி மீசையை வளர்த்து கொண்டு படிக்க வந்திட்டான்கள் நாளைக்கு வகுப்பிற்கு வரும் போது உந்த மீசையை எடுத்து போட்டு தான் வரவேண்டும் என்று கட்டளை இட்டார் வேறு வழி இன்றி மீசையை முழுதாக எடுத்து விட்டு பாடசாலைக்கு சென்றான்.சக மாணவர்கள் கிண்டல் பண்ணிணார்கள் பொம்பிளை மாதிரி இருக்கிறது என்று.
தம்பி இப்ப தான் வடிவா இருக்கிது சின்ன பிள்ள மாதிரி நான் சொல்ல சொல்ல எடுக்காமல் இப்ப வாத்தி சொன்னவுடன் எடுத்து போட்டாய்.உண்மையாகவே வடிவாக இருக்கிறது,போய் கண்ணாடியில் முகத்தை பாரு எவ்வளவு வடிவாக சின்னபிள்ள மாதிரி இருக்கு இனி இந்த மீசையை வளர்காதே தம்பி என்று அன்பு கட்டளை இட்டாள் தாயார்.அப்பா மீசை வளர்த்து இருக்கிறார் நான் வளர்க்க கூடாதா என்று சிவா கேட்க அவருடைய வயசிற்கு வடிவாக இருக்கிறது,அது போக அவரின்ட முகதிற்கு அந்த மீசை அழகாக பொருந்துகிறது ஆனால் உனக்கு வடிவில்லை தம்பி அதிகார தோரனையுடன் கட்டளை இட்டாள்.கணவனிற்கு வடிவ் மகனிற்கு வடிவில்லை என்ன தத்துவம் - மனதில் எண்ணி கொண்டன் -
ஒரு நாள் ஊரிலிருந்து யாழ்நகரிற்கு பஸ்சில் போகும் போது சில பெண்கள் சினிமா பற்றி கதைத்து கொண்டிருந்தார்கள் அங்கிருந்த ஒரு பெண் குறும்பிற்காக ஒரு ஆணை காட்டி "அந்த போயின் மீசை பாரடி கமலகாசன் மீசை மாதிரி இருக்கு என்று சொல்லி தங்களுகுள்ள சிரித்து கொண்டார்கள்".
இதை கேட்ட சுரேசிற்கு மீசை வளர்க்க வேண்டும் என்ற ஆசை தொடங்கிவிட்டது இளம் பெண்களிற்கு மீசை மீது ஒரு "இது" இருக்கிறது என்ற கருத்து அவனை அறியாமலே தட்டி கொண்டது அன்றிலிருந்து யார் சொன்னாலும் மீசை வெட்டுவதில்லை என்று நினைத்து வளர்க்க தொடங்கிவிட்டான் அதை அழகு படுத்துவதிலும் பல நேரம் செலவு செய்தான்.மேல் படிபிற்காக கொழும்பு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது சுரேசிற்கு.
தம்பி உந்த மீசையை சின்னதாக வெட்டி தலை மயிரையும் வடிவாக வெட்டி கொண்டு போ உன்னுடைய மாமா உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருவார் அங்கு போய் நல்லா படித்து முன்னுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைத்தார்.
பஸ்சில் போகும் போது ஆனையிரவு சோதனை சாடியில் பொலிஸ் உத்தோயோகத்தர் ஏறினார் ஒரு நோட்டம் விட்டார் கொஞ்சம் இளம் வயதினரை எல்லாம் பார்த்து கேள்வியை கேட்டு கொண்டு இருக்கும் போது ஒரு இராணுவ சிப்பாய் ஏறி அவர் நேரடியாக சுரேஷ் இருக்கும் இருக்கைக்கு வந்தார் "கோயத யன்னே" சுரேஷ் முழுசினான் உடனே பொலிஸ் உத்தியோகத்தர் தமிழில் "எங்க போறாய் ஏன் போறாய்" என்று கேட்க படிக்க போவதாக கூறினான் இராணுவ சிப்பாயிற்கு சந்தேகம் தோன்றவே பொலிஸ் உத்தியோகத்திரிடம் சிங்களத்தில் ஏதோ சொல்ல அவர் தமிழில் சுரேஷேசிடம் மொழி பெயர்த்து உன்னை கீழே இறங்கட்டாம் என்றார்.
சுரேஷிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை பயந்து பயந்து தன்ட ஜடி மற்றும் உயர் கல்வி படிபிற்கான சகல ஆவணங்களையும் எடுத்து கொண்டு கீழே இறங்கினான் கீழே நாலைந்து இராணுவ சிப்பாய்கள் அதற்கொரு சார்ஜன்ட் தர அதிகாரி நின்றிருந்தான் அவர்கள் சிங்களத்திள் ஏதோ கேட்க அதில் இருந்த இன்னொரு இராணுவ சிப்பாய் கொச்சை தமிழில் விசாரனை தொடங்கினான் உனக்கு "கொட்டி" தெரியுமா?? நீ "கொட்டியாவா??" கொட்டி டிரெயினிங் எடுத்ததா??அவன் எல்லாதிற்கும் இல்லை இல்லை என்றே பதில் கொடுத்தான்.சுரேஷிற்கு அழுகை வரும் போல் இருந்தது, உன்ட மீசை புலி மாதிரி இருக்கு என்றான்.
உடனே அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிங்களத்திள் ஏதோ கதைத்தவுடன் அவர்கள் அதட்டலாக "யன்ட யன்ட" என்றார்கள்.பொலிஸ் உத்தியோகத்தர் அதட்டலாக பஸ்சில போய் ஏறு என்றும் டேய் தம்பி உந்த மீசையை வெட்டி போட்டு சின்ன பெடியன்கள் மாதிரி திரியுங்கோ என்று அதட்டி அனுப்பி வைத்தார்.கொழும்பு வந்தவுடன் மாமா வெள்ளவத்தை யாழ் பஸ் நிற்கும் இடத்தில் நின்று என்னை வரவேற்றார்.
மாமாவின் வீட்டில் இரவு உணவு தாயாராக இருந்தது சாப்பிட்டுவிட்டு பயண களைப்பால் நித்திரை ஆகிவிட்டான்.
காலையில் எழுதவுடன் மாமா அறிவுரைகள் சொல்ல தொடங்கிவிட்டார் தம்பி இங்க கொழும்பில் கவனமா இருக்க வேண்டும் யாழ்பாணத்தில் திரிந்த மாதிரி பெடியன்களோட திரிய கூடாது,தமிழன் என்று காட்ட கூடாது தமிழ் பெடியன்களை கண்டால் தமிழில் கதைக்க கூடாது தமிழ் பெடியன்களோட கூட்டம் நிற்க கூடாது முக்கியமாக உன்னுடைய உந்த மீசையை எடுத்து போடு உந்த மீசையும் கன்ன உச்சியும் அப்படியே தமிழன் என்று அடையாளம் காட்டி கொடுத்திடும் மாமாவின் ஆசைக்காக தனது ஆசை மீசையை துறந்தான் சுரேஷ்.
கொழும்பு வாழ்க்கை பிடிபட சிங்களம் ஆங்கிலம் என்று படித்து பட்ட படிப்பையும் முடித்து உத்தியோகம் பெற்று கொண்டான் அதே வேளை மீசையும் வளர்த்து கொண்டான் கணக்காளராக அவுஸ்ரெலியா செல்லும் சந்தர்ப்பமும் கிட்டியது.
விமான நிலைய குடிவரவு குடி அகழ்வு அதிகாரி ஆங்கிலத்தில் பாஸ்போர்ட் படம் வித்தியாசமாக இருக்கு என்று சொல்ல இவனும் அது மீசை இல்லாத போது எடுத்து கடவுச் சீட்டு இப்போது நான் மீசை வைத்திருக்கிறன் என்று கூற அவரும் சிரித்து விட்டு "விஸ் யூ ஒல் ட பெஸ்ட்" என்று முத்திரையை குத்தி கையில் கடவுசீட்டை கொடுக்கும் போது அதிகாரியின் பெயரை பார்த்தான் "பாலேந்திரா" என்று இருந்தது.மனதில் நினைத்து கொண்டான் இவர் தமிழராக்கும் என்று.
திருமணம் முடிந்து மனைவி அவனது மீசையை தடவிய படியே உங்களுக்கு இந்த மீசை வடிவாக இருக்கிறது என்றது இன்னும் அவனுக்கு நினைவில் நிற்கிறது.15 வருடங்களின் பின் இன்று அவனது மகள் உந்த "முஸ்டாக்கை" எடுத்து போடுங்கோ அல்லது "டை" பண்ணுங்கோ வெள்ள முடி தெரிகிறது என்றார் அவன் கண்டு கொள்ளவில்லை.
நீண்ட நாட்களின் பின் நண்பன் இங்கிலாந்தில் இருந்து வந்தான் அவனும் இவனை கண்டவுடன் மச்சான் என்னடாப்பா இந்த மீசை நரைத்து போய் இருக்கிறது வயசு போனது அப்படியே தெரியுது,என்னை பார் நான் முந்தி வடிவாக மீசை வைத்திருந்தனான் எடுத்து போட்டன் நீயும் எடுடாப்பா பத்து வயசு குறைத்து காட்டும் என்றான்.அந்த அறிவுரையும் அவன் கண்டு கொள்ளவில்லை.
"போனால் மயிர் வந்தால் மலை" என்று பழமொழி சொல்லுவார்கள் அதாவது ஒரு மயிற் தான் என்ற ரீதியில் ஆனால் அது வளர்வதிற்கே இவ்வளவு கருத்து வேறுபாடுகள்,தடைகள் வரும் போது ஒரு மனிதன் சமூகத்தில் வாழ்வதிற்கு எவ்வளவு தடைகள் கருத்துக்கள்,முரண்பாடுகள் வரும் என்று நினைத்து பார்க்கவே சுரேஷ்ற்கு முடியவில்லை

No comments:

Post a Comment