Saturday, October 12, 2013

முருகா நீயும் சுழியன்டாப்பா

அவுஸ்ரேலியாவுக்கு முதல்முதல் வந்தவுடன் மனிசி முருகன் கோவிலுக்கு போகவேணும் வாங்கோ என அழைத்தாள்.மறு பேச்சு இல்லாமல் வெளிக்கிட்டு போனேன்.புதுசா என்னைத்தை செய்தாலும் ஆண்டவனிடம் அனுமதி பெறுவது எங்கன்ட மனசில் பதிந்த ஒன்று..
காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம்.
அந்த காலகட்டத்தில் அவுஸ்ரேலிய ஜனநாயக கட்சிகள் அரசாண்ட காலம்...சேர சோழர்கள் ஆண்ட காலம் போல் இதுவும் ஒன்று. ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்தும் பக்தர்கள் முருக தரிசனத்திற்கு அலையேனவந்து எம்பெருமானுக்கு ஒரு நிரந்தர ஆலயம் அமைக்க வேணும் என்று எகமனதாக முடிவெடுத்து சிட்னி சைவமன்றம் என ஒரு அமைப்பை உருவாக்கி வைகாசி குன்றில் எம்பெருமான் முருகனுக்கு ஒருசிறு காணியும் வாங்கி ஒரு மண்டபம் அமைத்து அவனை குடியமர்த்தினார்கள் என சிட்னி முருகன் படலத்தை சொல்லிகொண்டே வந்தாள்.
சிவனின் கடைசி பெடி முருகன் வைகாசி குன்றில் இருந்தான்.ஆங்கிலபெயர் .....பெரும் தெருவும் மோட்டார் வீதியும் சந்திக்கும் ஒர் முக்கோணவடிவ காணியில் ஒரு சிறு மண்டபத்தில் தாய் தந்தை சகோதரத்துடன் அலங்கார கோலத்தில் வீற்றிருந்தான். நல்லூரானை அலங்கார கந்தன் என்பார்கள் அதுபோல சிட்னி முருகனை ஆடம்பர முருகன் என்று சொல்லலாம்.முருகா அவுஸ்ரேலியாவுக்கு உன்னை நம்பி குடிபெயர்ந்துள்ளேன்
எல்லாம்தந்து என்னை காத்தருள்வாய் என வேண்டுகொள் வைத்து வழிபட்டேன்...தொடர்ந்து முருகனிடம் சென்று வந்தேன். சென்றும் வருகின்றேன் .தொடர்ந்தும் செல்வேன்... ஒவ்வொரு கிழமையும் அவுஸ்ரேலிய பாடசாலை மண்டபத்திற்கு சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பது கந்தனின் மனதில் நல்லதாக படாதமையால் தனது பக்தர்களின் மனதில் உள்புகுந்து பக்தர்களே நீங்கள் எனக்கு நிரந்தர மண்டபம் அமைத்து ஏன் என்னை வழிபட நடவடிக்கை எடுக்க கூடாது என கேட்டுவைத்தார்.இந்த கேள்வி எல்லா முருக அடியார்களையும் சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும்.இதனால் எழுந்ததுதான் சிட்னிமுருகனுக்கு நிரந்தர கோவில் கட்டும் எண்ணமாகும்.அது இருக்கட்டும் இப்ப விசயத்திற்கு வருவோம் இருபது வருடங்களுக்கு.முதல் எம்மவர்களால் உருவாக்கப்பட்ட முருகனின் மண்டபத்தை சூழ பல குடியிருப்புக்கள் இருந்தன யாவும் அவுஸ்ரேலிய வெள்ளை இனத்தை சேர்ந்தவர்களின் குடியிருப்புக்கள்.மண்டபத்தில் இருந்த முருகனுக்கு கோவிலில் குடியிருந்து தனது பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிவிட்டது.எனக்கும் தொடர்மாடி வீட்டிலிருந்து தனிவீட்டுக்கு குடிபெயர வேண்டும் என்றஎண்ணம் உண்டாக முருகனிடம் வேண்டுகோள் வைத்து வங்கியிடம் கடன் கேட்டேன் வங்கி கேட்ட கடனை தந்தது .தனி வீடு வாங்கி குடி பெயர்ந்தேன். என்னுடைய எண்ணத்தை வங்கி நிறைவேற்ற முருகனின் எண்ணத்தை முருகு பக்தர்கள் நிறைவேற்றினார்கள்.முருகனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது. கோவில் கும்பாபிசேகம் மிகவும் விபரிசையாக நடை பெற்றது.அந்த தெருவில் அப்படியான ஒரு சன நடமாட்டத்தை அந்த வீதிவாசிகள் தங்கள் வாழ்நாளில் கண்டிருக்கமாட்டார்கள்.சனநடமாட்டம் மட்டுமல்ல வாகன நெரிசலையும்தான்.குடியிருப்புக்கான பகுதியில் எப்படி இப்படி மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்தார்கள் என அந்த வீதிவாசிகள் நிச்சயம் குரல் கொடுத்திருப்பார்கள்.கும்பாபிசேகத்தை தொடர்ந்து முருகனின் விசேட தினங்கள் மற்றும் ,வெள்ளிக்கிழமைகள் தோறும் வழிபாடுகள் நடைபெற தொடங்கிற்று.
வீதிவாசிகள் சிறு சிறு தொல்லைகளை எதிர் நோக்கத் தொடங்கினார்கள்.எங்களுக்கு சிறு தொல்லையாகத் தெரிந்த விடயம் வீதிவாசிகளுக்கு பெரியதொல்லையாக தென்பட்டது.நாங்கள் பக்தியுடன் எம்பெருமானுக்கு செய்த விடயங்கள யாவற்றையும் வீதிவாசிகள் தொல்லையாக எடுத்துகொண்டார்கள்.

வெள்ளிக்கிழமை வேலை முடிந்தவுடன் வீட்டை வந்து குளித்து காரில் முருகனை இரவு ஏழுமணி பூஜையில் தரிசிக்க போனால் எனக்கு முதலே பல முருகபக்தர்கள் தங்களது காரை அந்த சிறிய வளவில் நிறுத்தி விடுவார்கள இதனால் எனக்கு அங்கு நிறுத்தமுடியாமல் போய்விடும்.பிறகு என்ன வீதிகளில் தான் நிறுத்த வேண்டும். வீதிகளிலும் எம்மவர்களின் வாகனங்கள்தான் அதிகமாக இருக்கும்.முருகனை தரிசிக்கவேண்டும் என்ற ஆவலால் சில சமயங்களில் யாராவது வீட்டின் ட்ரைவ்வே க்கு முன்னால் ஒருமாதிரி சுழிச்சு காரை நிறுத்தி விட்டு சென்றுவிடுவேன்.செல்லும்பொழுது அவர்களின் வீட்டின் பூந்தோட்டாத்திலிருந்து அழகான ரோஜா பூக்களை பறித்தெடுத்து சென்று காணிக்கையாக கொடுத்ததும் உண்டு. பூஜை முடிந்தவுடன் ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள் ,கோவிலுக்கு அருகாண்மையிலுள்ள வீடுகளின் முன்பு உங்களின் வாகனங்களை தரிக்காதீர்கள்,பூக்களை பறிக்காதீர்கள் என்று ஆனால் நான் கண்டு கொள்வதில்லை.முருகன் கைவிடமாட்டான் என்ற ஒரு துணிவு.
வீதிவாசிகள் பொலிஸில் முறையிட்டார்கள்,நகரசபையில் மனுத்தாக்கல் செய்தார்கள் நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை காலப்போக்கில் எங்களுடைய தொல்லை தாங்கமுடியாமல் வீதிவாசிகள் வீடுகளை விற்பனை செய்துவிட்டு புறநகர்பகுதிகளுக்கு செல்ல தொடங்கினாரகள்.முருகனுக்கும் அவரகளின் காணிகள் மீது ஆசையிருந்தமையால் பக்தர்கள் மூலம் காணிகளையும் வீடுகளையும் தனதாக்கி கொண்டான்.இன்று முருகன் பல இன்வென்ஸ்மன்ட் புரொப்பட்டிக்கு சொந்தகாரன்.அன்று வீதிவாசிகளின் வீடுகளுக்கு முன்னால் ட்ரைவ்வேயில் காரை நிறுத்தியமைக்காக பொலிஸில் முறையிட்டார்கள் ஆனால் இன்று அதேவீதிவாசிகளின் காணிகளின் உள்ளே எமது வாகனங்களை நிறுத்துகிறோம்.எம்பெருமான் மகிமையோ மகிமை....
முருகா நீ சுழியன்டாப்பா..ஆனால் இன்னும் ஒரெ ஒரு வெள்ளை இனத்தவன் அசையாமல் இருக்கின்றான் அவன் உன்னை விட சுழியன்.எம்மவர்கள நம்புகிறார்கள், நீ அவனையும் வெகு சீக்கிரத்தில் வெளியேற்றிவிடுவாய் என்று உன்னை நம்பியோரை கைவிடமாட்டாய் என நானும் நம்புகிறேன்.

பக்தர்கள் சாப்பாட்டுகடை ஒன்றை உனக்காக ஆரம்பித்து பகுதிநேர வருமானத்திற்காக உதவினார்கள்.நீ உனது முழுநேர தொழிலை உட்கார்ந்திருந்து கவனிக்க பக்தர்கள் பகுதிநேர வருமானத்திற்காக நன்றாக உழைத்தார்கள்.நீயும் கோடிஸ்வரன் ஆகிவிட்டாய்.
மண்டபத்தினுள் குடி புகுந்தவுடன் பெற்றோரையும் சகோதரத்தையும் ஸ்பொன்சர் பண்ணி அழைத்த எம்பெருமான் காலபோக்கில் பல உறவுக்காரர்களை ஸ்பொன்சர் செய்து கூட்டுகுடும்பமாக வாழ்கிறான்.பழனிமுருகன்,நல்லூர் கந்தன்,செல்வசந்நிதி முருகன் மற்றும் மாமன்,மாமி எல்லோரும் அடக்கம். சைவனாக இருந்த நீ இப்ப இந்துவாக மாறிவிட்டாய்.இதனால் உனது குடும்பம் இப்ப பெரியது.வரும் காலங்களில் இன்னும் பல உறவுகளை நீ ஸ்பொன்சர் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.உன்னால் முடியும் நீ ஒரு சுழியன்டாப்பா!
சதாரண மக்கள் குடியிருப்பாக(low density zone) இருந்த உனது வாழ்விடத்தை வியாபர அதாவது கொமர்சல் பகுதியாக(commercial zone) மாற்றிவிட்டாய் ,நகரசபை நிர்வாகத்தினரின் சிந்தையில் புகுந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்திய நீ மகா சுழியன் எல்லாம் வல்ல இறைவன் .... கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற எம்மவர்களின் கூற்றுக்கிணங்க பலர் இன்று உனது ஊருக்கே குடியெர்ந்துள்ளன்ர் ,இன்னும் பலர் குடிபெயர இருக்கின்றனர். ஒரு ஊரையே உன்பக்தர்களின் குடியிருப்பு ஆக்கிய பெருமை உன்னையேசாரும்.....

என்னதான் இருந்தாலும் , உன்ட சனம் முள்ளிவாய்காலில் அவதிப்படும் பொழுது கண்டுகொள்ளவில்லை.சிட்னியில வந்து பெரிய நடப்படிக்கிறாய் ..........

எண்டுபோட்டு யாழில் இந்த கிறுக்கலை நாளைக்கு போடுவம் என நித்திரைக்கு சென்றுவிட்டேன்...
" அடெ புறம்போக்கு,முழமாறி ,முடிச்சு அவுக்கி நானே கேட்டனான் சிட்னிக்கு வரப்போறன் எண்டு நீங்கள்
தானே ,சிவனே எண்டு சும்மா இருந்த என்னை இங்க எடுப்பிச்சனியள்...அங்க சுத்த பசுப்பாலில்உடனே கறந்த சுத்த பசுப்பாலில் கிடைச்ச அபிசேகத்தை கெடுத்து போட்டு இப்ப குளிர் பாலை லீட்டர் கணக்காய் மக்கள் ஊத்தக்காரணமே நீங்கள் தானேடா"என கத்தி கொண்டே வேலுடன் என்னைநோக்கி பாய்ந்தார். நான் ஐயோ முருகா! என்னை ஒன்றும் செய்யாதே என கை எடுத்து கும்பிடுகிறேன் ஆனால் முருகன் என்னை நோக்கி வந்து பாய்துகொண்டேஇருந்தார் உடனே ஒம் நமச்சிவாய எனகத்தி கொண்டே சிவனின் காலில் விழுகின்றேன் .....பக்கத்தில் படுத்திருந்த மனிசி என்னப்பா என்ன நடந்தது என என்னை எழுப்பினாள் .முருகன் வேலால் குத்த வாற மாதிரி ஒரு கனவு கண்டனான் .உதுக்குத்தான் நான் சொல்லுறனான் படுக்க போகும்பொழுது விபூதி பூசி நல்ல நினைவுகளுடன் படுக்கவேணும் எண்டு .சொல்லிபோட்டு "நினவு நல்லது வேணும்" என்ற பாரதி பாடலை பாடிக்காட்டினாள்....
நானும் ஒமோம் எண்டு போட்டு ஓம்முருகா,ஓம்நமச்சிவாய,என உரத்தகுரலில் சொல்லிகொண்டு ...மனதில் எவனடி படுக்கப்போகும்பொழுது நல்லெண்ணத்துடன் படுக்கப்பபோறான்.........வாய் ஓம் முருகா என்றது....