Sunday, April 24, 2016

கிறிபத்


வருடம் பிறந்தவுடன் உறவுகளுக்கு தொலைபேசி மூலமும்,  இணைய நண்பர்களுக்கு இணையத்தின் மூலமும்,மின்னஞ்சல் மூலம்பாடசாலை நண்பர்களுக்கும்,முகப்புத்தகத்தின் ஊடாக முகபுத்தக நண்பர்களுக்கும் புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டேன்.பதிலுக்கு அவர்களும் நன்றிகள் உங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றனர்.சிலர் இது எங்கன்ட புத்தாண்டுஇல்லை ஆரியரின்ட புத்தாண்டு என்றனர்.அப்படி சொன்னவரில் கந்தரும் ஒருத்தர்.இவர் உப்படிதான் சொல்லுவார் என்று தெரிந்துஅவரை கண்டவுடன் அண்ணே ஆரிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றேன்..நன்றி ஆனால் நான் தமிழர் புத்தாண்டைதான்கொண்டாடுவேன் இவங்கன்ட புத்தாண்டை கொண்டாமாட்டேன் என்றார். நானும் ஒவ்வொரு முறையும்  சித்திரை புத்தாண்டு,தமிழ்புத்தாண்டு,சிங்கள புத்தாண்டு ,தமிழ்சிங்கள புத்தாண்டு என‌ ஒவ்வோரு விதமாக‌ சொல்லி பார்ப்பேன் ஆனால் மனுசன் அசையாது இதுஎங்கன்ட புத்தாண்டில்லை என அடம்பிடிப்பார்.அதுதான் இந்த முறை ஆரிய புத்தாண்டு என சும்மா சொல்லிப்பார்த்தேன்.அதுக்கும்மனுசன் அசையவில்லை.அவருக்கும் வயசு போய்கொண்டிருப்பதால் தொடர்ந்து அவருக்கு  தொல்லை கொடுப்பதில்லை என முடிவெடுத்தேன்.
வேலையால் வந்து மனிசி கோவிலில் எடுத்து வைத்திருந்த மருத்துநீரை சம்பூ போல தலையில் வைத்து தடவி ஒரு ல்ல முழுக்குமுழுகி போட்டு புது வேஸ்டியை அணிந்து எம் பெருமான் சிட்னிமுருகனிட்ட ஒரு விசிட் அடிக்க போனேன்,கோவிலுக்கு கிட்ட ஒரேபோக்குவரத்து நெரிசலாக இருந்தது ,எனது கார் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது.போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எம்பெருமானைபுத்தாண்டு தினத்திற்கு தரிசிக்க வந்த பக்தர்களின் வாகனங்களால் தான் ஏற்பட்டது என்பது பின்புதான் புரிந்தது.கோவில் வாசலில் "கார்பார்க் வுள்என ஆங்கிலத்தில் எழுதி போர்ட் வைத்திருந்தார்கள்..
இன்று நடைதான் முடிந்த முடிவு என நினைத்தபடி குடும்பத்தினரை கோவில் வாசலில் இறக்கிவிட்டு காரை மீண்டும் கோவிலுக்குவெளியே கொண்டு வந்துஅருகில் உள்ள பாதையில் நிறுத்திவிட்டு   முருகனை தரிசிக்க ஒடிவந்தேன் .கோவிலில் அறிந்தோர் எல்லாம்புதுவருட வாழ்த்து சொல்ல பதிலுக்கு நானும் "தங்க்யூ செம் டு யூஎன்று தேவாரம் போல எல்லொருக்கும் சொல்லிபடியே  முருகனை பார்த்து  கைகூப்பி  அரோகரா சொல்லுவதற்கு பதிலாக புத்தாண்டு வாழ்த்துகள் என வாய்தடுமாறி சொல்ல சுதாகரித்து  மீண்டும்"அரோகா சிட்னி முருகனுக்கு அரோகராசொல்லியபடியே சுற்றிவந்து ,பிரசாதம் வாங்குமிடத்துக்கு சென்றேன்.
அங்கு நீண்ட வரிசை இருந்தது.அதில் நின்றால் முழு பிரசாதமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் குறுக்கால போக முடிவேடுத்து,வரிசையில் தெரிந்தவர்கள் யாராவது நிற்கிறார்களா என பார்த்தேன் .வரிசையின் நடுவில் கந்தர் நின்றார் ,அவருக்கு அருகில் சென்று"அண்ணே புது வருசம் எப்படி போகுதுஎன்று கேட்டபடியே உள்நுழைந்து கொண்டேன்.
"ல்லாய் போகுது நீ சூழியன் மெல்லமாய்வந்து உள்ளே புதுந்திட்டாய்"
"ஒம்மண்ணெ ஒரு அலுவலாய் அவசரம் போக வேணும் அதுதான்"
பிரசாதங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபடியால் மெல்ல மெல்ல வரிசை ஊர்ந்து சென்றது. ஒரு மாதிரி பிரசாத மேசையருகேவந்து கையில் இருந்த கோப்பையை நீட்டினேன் பூரி,பொங்கல்,லட்டு,சதுரமாக வெட்டிய சோத்துக்கட்டி,இன்னும் பெயர் தெரியாத பலபொருட்களும் தந்தார்கள்.
"அண்ணே என்ன இது "கிறிபத்மாதிரிகிடக்குஎன்று சதுர சோத்து கட் "என்ன அண்ணே இன்றைக்கு பிரசாதம் கொஞ்சம் தூக்கலா இருக்கு"
"வருசப்பிறப்பு என்று போட்டு சனம் அள்ளி கொண்டு வந்திருக்கு "
"உனக்கு தெரியுமே சிங்களவ‌ரும்  இப்ப சிட்னி முருகனை கும்பிட வருயினமல்லோ,அவையள் கொண்டுவந்ததுதான் உதுஅவையளின்ட புதுவருடமும் இன்றைக்கு தானே"
"அண்ணே உந்த வருசப்பிறப்பை தவிர எங்களுக்கும் அவங்களுக்கும் வேறு ஒன்றில்லையும் ஒற்றுமையில்லையே...அது எப்படிவருசப்பிறப்பு மட்டும் பொதுவா கிடக்கு?"
நான் எத்தனை வருசமா சொல்லுறன் அது ஆரிய புத்தாண்டு என்று நீ தான் கேட்கிறாயில்லை"
"ஆரிய புத்தாண்டு என்றியள்,வட இந்தியன் ஒருத்தனும் கொண்டாடுறாங்களில்லை"
"ஏன் இல்லை ,ஞாயிற்றுக்கிழமை பங்காளி காரங்கள் ஒலிம்பிக் பார்க்கில கொண்டாடுகிறாங்கள் ,"
என்ன அண்ணே பாங்காளி எல்லாம் முஸ்லிம்கள் அவங்கள் எப்படி இந்துக்களின் கொண்டாடுவினம்"
"இந்தியாவில மேற்கு வங்காளத்தில் இருக்கிறவையள்  இந்துக்கள் அவையள் தான் விமரிசையாக கொண்டாடினம், பங்காளிகளின்டபாஷைக்கும்,சிங்களத்திற்கும் தொடர்பு இருக்கு,அதோட அவங்களும் காளியை கும்பிடுறவங்கள்,சிங்களவங்களும் காளியைகும்பிடுறாங்கள் நாங்களும் கும்பிடுறம்,உவன் விஜயனும் அந்த பக்கதிலைலிருந்துதான் அகதியாக கள்ளத்தோணியில் சிறிலங்காவுக்குவந்திருக்க வேணும்,பாளி ,சிங்கம் ,காளி ,சித்திரை புதுவருடம் எல்லாம் பங்காளிகாரங்களுடன் தொடர்புடையைவை"
என்று ஒரு விரிவுரை நடத்திய கந்தர்  உவங்கள் கிறிபத் கொடுத்தவங்கள் கட்ட சம்பொல்லையும் கொடுத்திருந்தால் நல்லாய்இருந்திருக்கும் என கிறிபத்தை சாப்பிட்ட படியே சொன்னார்.
அண்ணே கோவிலில் வைத்து உப்படி கதைக்க கூடாது ,அதுக்கு மாசி போடுறவையள் அல்லோ"
"மாசியை போடாமல் சம்பலை கொடுக்கலாம் தானே,பூரி,லட்டு இப்படி எத்தனையோ கொடுக்கினம் சம்பல் கொடுத்தா என்ன?"
கோவில்காரர் விட மாட்டினம்"
"அவங்களை பற்றி கதைக்காதே ,எனக்கு கோபம் வரும்"என்றவர் மிகபெரிய ஏப்பம் ஒன்றை விட்டபடியே ,இரவு சாப்பாட்டு இன்றைக்குதேவையில்லை வா போய் கையை கழுவுவோம் என என்னை அழைத்தார்
இருவரும் கையை கழுவி விட்டு வீடு செல்லத்தாயாரானோம்.
"நாளைக்கு சிட்னி கிறிஸ்தவ தேவாலயத்தில தமிழ் சிங்கள புதுவருடம் கொண்டாடினம் வாறீயோ போவம்"
"என்ன அண்ணே தேவாலத்திலயோ,சேர்ச்சுக்கும் சித்திரை வருசப்பிறப்புக்கு என்ன சம்பந்தம்?"
"சிட்னியில் இருக்கின்ற எங்கன்ட மேட்டுக்குடிகளும்,அவங்கன்ட மேட்டுக்குடிகளும் இப்ப நல்லிணக்கத்துக்கு ஓடி திரியினம் அந்தமுயற்சியின் ஒரு செயல் வடிவம் தான் இது"
"சேர்ச் என்ற படியால் கேக் தான் கொடுப்பினம்"
"சீ சீ அங்க கிறிபத்தும் கட்ட சம்பலும் கொடுப்பினம் ,உனக்கு ஒருவிசயம் தெரியுமே அதிக எண்ணிக்கையிலான  தமிழர்களும்சிங்களவர்களும் ஒன்று கூடுமிடம் சேர்ச்சு தான் அவர்களை பெளத்த அடையாளமான கிறிபத் மூலம் ஒன்றி ணைக்கலாம்"
"உதுல உவ்வளவு விசயமிருக்கோ,நான் நல்லிணக்க விளையாட்டுக்கு வரவில்லை நீங்கள் போறதென்றால் போய்யிட்டுவாங்கோஎனசொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.
காரில் வீடு செல்லும் பொழுது சம்சாரம் கேட்டார் ஞாயிற்றுக்கிழமை சாய் பஜனையில் தமிழ்சிங்கள புத்தாண்டு கொண்டாடினம் வாரமுடியுமோ என்று ,மூன்று மாதத்திற்கு முதல் தானே  கிறிமஸ்ஸும் ஆங்கில் புத்தாண்டும் கொண்டாடினீங்கள் பிறகென்ன இப்ப தமிழ்சிங்கள புத்தாண்டு என கேட்க,உங்களுக்கு விருப்பம்மென்றால் வாங்கோ சும்மா விசர் கதைகளை கதையாதையுங்கோ என்ற வர்
.நான் வரவில்லை என்று சொல்ல‌  மெளனமாக வீடு வரை வந்தார்.
.ஞாயிற்றுகிழமை பத்து மணியளவில் முகம் கழுவிய பின்பு கோப்பியை குடிக்க குசினிக்குள் போனேன் .
"மில்க் ரைஸும் சம்பலுமிருக்கு  சாப்பிடுங்கோ"
"மில்க் ரைசோ"
"அது தான் சிங்கள ஆட்களின் பிரசாதம்,என்ன என்று சொல்லுறது"
"  கிறிபத்தோ"
"எப்ப தொடக்கம் கிறிபத்தை பிரசாத லிஸ்ட்டில் சேர்த்தனீங்கள்"
"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடங்கீட்டிங்களா உங்கன்ட அறுவையை,தயிர் ரைஸ் ,புளிரைஸ்,லெமன் ரைஸ் எல்லாம் பிரசாதமாகஇருக்கும் பொழுது ஏன் மில்க் ரைஸ் இருக்கமுடியாது???,உங்களுக்கு சிங்களிஸ் மீது ஒரு கறள் அதுதான் உப்படி"