Thursday, March 10, 2016

ஐம்பது டொலர் " விவ்டி டொலர்ஸ்"


வெள்ளைக்காரன் சொல்லி தந்த சொறி,தங்க்யூ என்ற‌ இரண்டு வார்த்தைகள் எனக்கு இலகுவாக இருந்ததுஅந்தவண்ணசிங்களத்தியுடன் மன்னிப்பு கேட்பதற்கு.‍பாக்கை மாற்றி கொண்டு அவளிடம் விடைபெற்றேன்.
வரிவிலக்கு கடையில் உற்சாகபாணம் இரண்டை வாங்கி சென்றால் உறவுகளுக்கு கொடுத்து நானும் இன்பம் காணலாம் என்றஎண்ணத்துடன் அருகிலிருந்த கடைக்குள் சென்று விலைகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுது எதை தெரிவுசெய்வது என்பது மிகவும்கடினமாக இருந்தது. குறைந்த விலையில் நிறைந்த இன்பம் காணக்கூடியதாக  இரண்டு புட்டிகளை தெரிவுசெய்து இரண்டின்விலைகளையும்  கூட்டி பார்த்தேன் அமெரிக்கன் டொலர் 50 வந்ததுஅதை அவுஸ்ரேலியா டொலருக்கு மாற்றியபொழுது கிட்டதட்டஇரண்டு 50 டொலருக்கு துட்டு விழுந்தது.
பொருட்களை தள்ளுவண்டியில் வைத்து தள்ளியபடியே பச்சை கதவினுடாக வெளியே வந்துவெள்ளை யூனிபோர்ம் அணிந்து கறுத்ததோல் பட்டிகளுடன்  நின்று அரைட்டை அடித்துகொண்டிருந்த‌ உத்தியோகத்தர்களை பார்த்து புன்னகையை செலுத்த அவர்களும் பதில்புன்னகையுடன் வெளியே செல்ல அனுமதித்தனர்.
வழமையாக ஆயுதங்களுடன் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டிருக்கும் விமானப்படையினரைத்தான் அதிகமாக காணலாம்.ஆனால் இந்த தடவை அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.ஒரு சில படையினர் ஆயுதங்களின்றி நின்றனர் .முன்புஇந்த கோதாரிபிடித்த சிறிலங்கா ஆயுதபடையினரை கண்டால் நேரா முகத்தை பார்ப்பதை தவிர்ப்பதுண்டுஊரில‌ சின்ன வயசிலஅவையளை பார்த்து அடி வாங்கிய அனுபவத்தின் எதிரொலியாக அவர்களை கண்டால் பார்ப்பதில்லை,மற்றும் இன்னுமொரு காரணம் இவன் கொத்துரொட்டி விற்பவன்,கொடி பிடிப்பவன் என  யாராவது போட்டு கொடுத்திருந்தால் என்ற பயம். இந்த தடவை ஆயுதமின்றி நின்றதனால் பார்த்தேன்."குட் மொர்னிங்" என்றார் பதிலுக்கு "குட் மொர்னிங்" சொல்லிவிட்டு சென்றேன்.
நீ ஆயுதமின்றி என்னை வரவேற்பதால் நீயும் உனது படையும் நீ வாழும் நாடும் எனது நண்பன் என்று  நினைக்கவில்லை.நீ விசில் அடித்தால் ஒரு நிமிடத்தில் உன்கையில் ஆயுதம் வந்து சேரும் அத்துடன் மேலதிக நண்பர்களும் உனக்கு துணையாக வந்து பலம் சேர்ப்பார்கள் .நீ மனித உரிமையை மீறினாலும்   உன்னை பாதுகாக்கும் உன் அரசு .நான் பொதுமகன் எந்த குற்றசாட்டையும் நீ வைக்கலாம் என்று மனதில் நினைத்தபடியே வரவேற்பு பகுதியை சென்றடைந்தேன்.
உறவுகள் எனக்காக காத்திருந்தார்கள் .அக்கா வந்து கட்டியணைத்து கண்ணீர் மல்கினார்.
"என்னடா எப்படியிருக்கிறாய் ,மெலிந்து போனாய்,அவுஸ்ரேலியாவில பஞ்சமே" என நக்கலாக  கேட்டார்.இதே கேள்வியை இரண்டு வ‌ருடங்களுக்கு முதல் நான் போகும் பொழுதும் கேட்டவர்.
"நல்லாய் இருக்கிறன் வயசு போகுது அதுதான் அள‌வாய் சாப்பிடுகிறனான்"என போன முறை சொன்ன பதிலை இந்த முறையும் சொன்னேன்.
"நீங்களும் நல்லாய் மெலிந்து போயிட்டியள்"
"நானும் டயட் தான்"இருவரும் கதைத்துகொண்டு நடக்கும்பொழுது மருமகன் மொபைலில் " அண்ணே மாமா வந்திட்டார் வானை கொண்டு வாங்கோ " என்றான் .
மருமகன் வானில் சமான்களை ஏற்றினான் .டுயுட்டி விரி பாக்கை நான் கையில் பத்திரமாக வைத்துகொண்டேன்.
"என்ன உது புதுப்பழக்கம் போல கிடக்கு"
"சித்தப்பாவும் ,சினேகிதப்பெடியனும் கேட்டவையள் "
"சித்தப்பா  ஒருநாளும் எங்கன்ட வீட்டை வரமாட்டார் ,உதை மட்டும் உன்னட்ட அடிச்சு கேட்டிருக்கிறார்,கொண்டுபோய் கொடுக்காத டெலிபோன் அடிச்சு சொல்லு அவ‌ர் வந்து எடுக்கட்டும். "
"ம்ம்ம்ம்ம்"
"இப்ப ம்ம்ம் என்று சொல்லுவாய் பிறகு நீ நினைத்தைதான் செய்வாய்"

குடும்ப அரசியலை நோக்கி கதை போக,
"அத்தான் மைத்திரி என்னவாம்"
"மைத்திரி கொடுக்க நினைத்தாலும் சிங்களவன் விடுகிறானே,இந்தியாகாரன் வேற உதுக்குள்ள நிற்கிறான் ஒன்றும் கொடுக்கவிடமாட்டான்"
"மாமா உங்கன்ட ஆட்கள் எங்களிட்ட நேற்று வாங்கிகட்டிச்சினம்"
"நீங்கள் 13 பேர் விளையாடினா வெல்லுவியள் தானே"
"13 பேரோ"
பின்ன என்னஉங்கன்ட அம்பயரும் சேர்ந்து விளையாடினார்"
"சும்மா நொட்டை சாட்டு சொல்லாதையுங்கோ,தோத்தது ,தோத்ததுதான்"
மருமகனுடன் விளையாட்டைப்பற்றியும்,அக்காவுடன் குடும்ப அரசியல் ,அத்தானுடன் நாட்டு அரசியல் கதைத்துகொண்டு பயணம்தொடர்ந்தது.
"என்னடா புதுப்பாதையால் போறாய்"
"இதுதான்  எங்கன்ட மோட்டர் வே,உங்கன்ட நாட்டை மாதிரித்தான் இப்ப எங்கன்ட நாட்டிலயும் மோட்டர் வே வந்திட்டுது"
 கட்டுநாயக்க கொழும்பு பாதையால் 75 ஆம் ஆண்டளவில் முதல்முறையாக தொடங்கிய எனது பயணம் கடந்த 2015 ஆம்  ஆண்டுமோட்டர் வேக்கு மாறியது .
71 ஆம் ஆண்டு கம்னியூச கிளர்ச்சியை முறியடிக்க பல முதலாளித்துவ நாடுகள் ஆதரவளித்தன.முறியடித்த கையோடுவெளிநாட்டுதலைவர்களை வரவழைத்தனர்
பொது நலவாய நாடுகளின் மாநாடும்,அணிசேரா நாடுகளின் மாநாடும் அடுத்துஅடுத்து கொழும்பில் நடை பெற்றமையால் வெளிநாட்டுபிறமுகர்கள் வந்து செல்வதற்காக அந்த பாதை அகலமாக்கப்பட்டது .பாதை அகலமாக்குவதற்காக வீதிக்கு அருகாமையிலிருந்த‌ பலர்தங்களது வீடுகளை இழக்க  நேரிட்டதுநஷ்டஈடு பலருக்கு கிடைக்கவில்லை .மாநாடுக்கு வந்து சென்றவர்கள் அறிக்கை விட்டார்கள்சிலோன் அழகிய‌ அமைதிப்பூங்கா என்று, அப்பா,பெரியப்பா ,மாமா,சித்தப்பா,பக்கத்துவீட்டு அங்கிள்மார் ஒன்றாக கூடி திண்ணைஅரசியல் பேசும் பொழுதுரொகனா வீஜயவீரா சீனா ஆதரவா செயல்பட்டாரா?ரஸ்யா ஆதரவா செயல்பட்டாராஎனவிவாதிப்பார்கள்.கடைசிவரை அதற்கு விடை தெரியாமல் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
பதின்ம வயதில்  ஊரிலிருந்து வந்த எனக்கு அந்த பாதை மிகவும் ஆச்சரியத்தை தந்தது.இலங்கையில் அப்பொழுது இருந்த மிகவும்அகலமான பாதை அதாகதான் இருக்கும்.
கிறிஸ்தவ தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,விகாரைகள்,என அந்தபாதை ஒரு பல்கலாச்சாரத்துக்கு சாட்சியாக இருந்தது.ஆனால் இந்துகோயில் அந்த பாதையில் மருந்துக்கும் காணவில்லை என்று மனது ஏங்கியது. வீதியோர கடைகளில் "உர மஸ்என  சிங்களத்தில்எழுதியிருக்கும் .சிங்களம் எழுத்துகூட்டி வாசிப்பேன் ஆனால் கருத்து தெரியாது.அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் அதுபண்டிறைச்சி என்று.
பழைய நினைவில் முழ்கி கொண்டிருக்கும் பொழுது,
"மாமா நித்திரையோ"
"இல்லை சொல்லு"
"நீங்கள் போட்டிருக்கிறது பிரான்டட் சப்பாத்தே"
"இல்லைஏன்"
"என்ன மாமா அவுஸ்சில இருந்து வாறீயள் ஒரு பிரான்டட் சூவை வாங்கி போட்டுக்கொண்டு வாரது,நான் பிரான்டட் சூ,சேர்ட் தான்போடுறனான்"
"அதுக்கெல்லாம் காசுக்கு எங்க போறது,அந்த காசுக்கு இப்ப நான் போட்டிருக்கிற சப்பாத்தை போல நாலு சோடி வாங்கி போடுவன்.
"அதுசரி நீ போட்டிருக்கிற சப்பாத்து என்ன விலை" ,
"  அண்ணா அவுஸிலிருந்து போன முறை வரும் பொழுது தந்தவர்,இது அங்க என்ன விலை வரும்"
"உது 200 டொலருக்கு கிட்ட வரும்,நான் போட்டிருக்கிறது 50 டொலர் தான்
ய‌ஸ்ட் ஃபிவ்டி பக்ஸ் "
வீடு வந்ததே தெரியவில்லை அவ்வளவுக்கு விடுப்பு கதைத்தோம்.குளித்து விட்டு அக்கா எனக்காக விசேடமாக தாயாரித்த உணவுகளைபரிமாறினார்.
"அப்பா இன்றைக்கு அம்மா  நல்லாய் ருசியா சமைத்திருப்பா வாங்கோ சாப்பிடுவோம்"
"இல்லாட்டி நீ அப்பாவும் பட்டினிதானே கிடக்கிறனீயள்"என அக்கா அவர்களை பார்த்துமுறைத்தார்.
"இட் இஸ் ஒகே அம்மா...கூல் யஸ்ட் ஃபோ வன்"என்றான்
வயிறுமுட்ட சாப்பிட்டு ,போடவேண்டிய மருந்துகுளிசைகளையும் போட்டுவிட்டு மீண்டும் உரையாடலை தொடர்ந்தோம்.
"மாம்ஸ் நாளயண்டைக்கு டிரிங்கோவுக்கு போவோம்"
"அங்க யாரட இருக்கினம்"
"உங்கன்ட சொந்தக்காரர் இருக்கினம் தானே"
"அவையளுடன் எனக்கு அவ்வளவு தொடர்பில்லையே?"
"அம்மாவுக்கு தொடர்பு இருக்குநீங்கள் தயார் என்றால் ஒரு கோ ல் பண்ணி சொல்லி போட்டு வெளிக்கிட வேண்டியதுதான்"
சிறிலங்காவுக்கு வந்து கொழும்பிலகுந்தியிருந்து போட்டு அவுஸ்க்கு போய் என்னத்தை சொல்லுறது என்று நினைத்து டிரின்கோபோவதற்கு சம்மதித்தேன்.கையிலிருந்த போனை இளையான் கலைப்பது போல கிறுக்கினான் பின்பு காதில தூக்கி வைத்தான் .அண்ணேநாளையண்டைக்கு  டிரிங்கோ போகவேணும்  உங்களுக்கு வசதியா இருக்குமோ?மறுமுனையிலிருந்து சாதகமான பதில் வந்திருக்கவேணும் என்பது அவனது பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.
குறிப்பிட்ட நேரத்திற்கு வான் வந்தது .சாரதியிடம் என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன்.இரவு நேரத்தில் பயணப்பதில்எதாவது பிரச்சனைகள் உண்டோ என்று கேட்டேன்.பல தடவைகள் தான் இரவு நேரங்களில் சென்று வந்ததாகவும் பிரச்சனைகள்எதுவுமில்லை என்றார்.இராணுவ சோதனைகளும் இல்லை என்றார்.மனதிலிருந்த பயம் கொஞ்சம் குறைந்திருந்தது. எல்லோரும்டிரின்கோ நோக்கி பயணத்தை தொடர்ந்தோம்.இரண்டு மணித்தியால ஓட்டத்தின் பின்பு சாரதி வழமையாக‌ தேனீர் அருந்தும் கடைக்குஅருகாமையில் நிறுத்தினார் .
உள்ளே சென்று இயற்கை கடன்களை முடித்துவிட்டு ஒரு மேசையில் வந்து அமர்தோம் .
பக்கத்து மேசைக்கு அருகில் மூன்று வாத்திய கலைஞர்கள் நின்று சிங்கள பைலா பாட்டு பாடிகொண்டிருந்தார்கள் .பின்பு எமது மேசைக்குகிட்ட வந்து பாடத்தொடங்கினார்கள் .நாங்கள் தமிழர்கள் என்று புரிந்து கொண்டு "என்னடி ராக்கம்மாபாடினார்கள்.பேர்ஸை பாதுகாப்புகருதி வெளியே எடுக்காமல் முன் பொக்கற்றில் வைத்திருந்த 500 ரூபா தாளை எடுத்து அவர்களிடம் கொடுத்தேன்.தங்கயூ சொல்லிஅடுத்த மேசைக்கு சென்றார்கள் .மருமகன் சுடச்சுட கோப்பியும் ,மாலு பன்,சீனிபன் எல்லாத்தையும் சர்வர் மூலம் மேசைக்குவரவழைத்தான்.
500 ரூபாகொடுத்திருக்க தேவையில்லை,இருநூறு கொடுத்திருக்கலாம் என்று அத்தான் சொன்னார்,அவுஸ் காசுக்கு 5 டொலர் தான்வருகிறது என நியாயம் சொன்னேன்.  மீண்டும் எமது பயணத்தை தொடர்ந்தோம்இரவு நேரப்பயணம் என்றபடியால் இடங்களைஅறியமுடியாமல் இருந்தது.
அன்றுதான் முதல்முதலாக அந்த பாதையால் சென்றிருப்பேன் என நினைக்கிறேன்.மாலுபன் சாப்பிட்ட‌ யக்கம்,வாகனத்தின்தாலாட்டும் என்னை நித்திரா தேவி மெல்ல அரைவணைக்க தொடங்கினாள்.
விடியற்காலை 3 மணியளவில் ஒன்றைவிட்ட தங்கைச்சியின் வீட்டை சென்ற டைந்தோம்.உறவுடன் வரவேற்றார்கள்,தேனீரா,கோப்பியா எத்தனை சீனி என்ற கேள்விகள் இல்லாம் ,நல்ல பசுப்பாலில் சுடச்சுட தாராளமாக சீனியை போட்டு கோப்பி தந்தார்கள்.
சகோதரி தனது பிள்ளைகளுக்கும்,கணவனுக்கும்  என்னை அறிமுகப்படுத்தினார்.கிட்ட தட்ட முப்பதைந்து வருடங்களுக்கு முதல்தங்கச்சி யாழ் பல்கலைகழகத்திற்கு அனுமதி கிடைத்து வந்த பொழுது கண்டதன் பின்பு அன்றுதான் கண்டேன்.மொபைலில் அலார்ம்அடிக்க‌ எழும்பி வேலைக்கு போய் பழக்கப்பட்ட நான் ,அன்று சகோதரியின் வீட்டுக்கு அருகிலிருந்த கோயில் மணியோசை கேட்டுஎழும்பினது ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது.நாப்பது வருடங்களுக்கு முதல் ஊர் கோயில் மணியோசைகள் கேட்பது உண்டுஆனால் அந்த வயதில் அதனை பெருதாக கணக்கில் எடுக்கவில்லை வயது அப்படி.
காலை அவர்களது வளவை சுற்றி பார்த்தேன் ,இரண்டு பசுமாடுகள் ,இருபது கோழிகள் ,நாலைந்து முயல்கள் அத்துடன் நாய்,பூணை என்பனவும் இருந்தன.தங்கச்சியின் கணவன் தான் சகலதையும் பராமரிக்கின்றார்.ஒரு கையில் செம்பும் தண்ணியும்,மற்ற கையில்கூடையுடன் வந்தவர் "வணக்கம்,எப்படி பிராயாணம்,நல்லாய் நித்திரை கொண்டியளோ"
"ஒமோம் ஒமோம் நல்லாய் நித்திரை கொண்டன் ,"
சொல்லும் பொழுது நுளம்பு காலில் கடித்துகொண்டிருந்தது.அதை கையால் அடித்து கையிலிரிந்த இரத்தை மரத்தில் தடவி சுத்தம்செய்தேன்.
"வளவுக்குள்ள நுளம்பு இருக்கு ,வெளிநாட்டுக்காரர் நுளம்புக்கு ஸ்பிரே ஒன்றை கையில கொண்டுதிரிவினம் நீங்கள் கொண்டுவரவில்லையோ?"
"கொண்டு வந்தனான் அது கொழும்பில விட்டிட்டு வந்திட்டன்நுளம்புக்கு பழக்கப்பட்ட உடம்பு தானே"
தங்கச்சி முட்டை பொறியலும் புட்டு தயார் பண்ணிவைத்திருந்தார் என்னையும் கணவனை சாப்பிட அழைத்தார்.
சாப்பாட்டு மேசைக்கு அருகில் பாவித்த உடைகள் பல குவியளாக இருந்தது .நான் அதை பார்த்தபடி சாப்பிட தொடங்கினேன் .
"அண்ணே!  ஒரு கிராமம் இருக்கு அங்க ரியா கஸ்டப்பட்ட குடும்பங்கள் இருக்கு அதுகளுக்கு இந்த உடுப்புகளை கொடுக்க வேணும்அதுதான் சேர்த்து வைச்சிருக்கிறோம்"
"நல்ல விடயம் புண்ணியம் கிடைக்கும் உங்கள்  எல்லோருக்கும்"
என பெரிய‌ மகான் போன்று சொல்லி விட்டு கையை கழுவி நேராக சென்று பேர்ஸிலிருந்து இரண்டு 5000 ரூபா தாள்களைஎடுத்தேன்.ஐம்பதுடொலரை தானம் பண்ண போறியா நூறு டொலரை தானம் பண்ணபோறீயா?மனம் இருநிலையில்தத்தளித்தது,இறுதியில் ஒரு 5000 தாளை  கொடுத்து இதிலும் எதாவது வாங்கி கொடுங்கள் எனக்கும் கொஞ்சம் புண்ணியம்கிடைக்கட்டும்  என்றேன்.
"அண்ணே இதில எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி கொடுக்கவா,அல்லது ஒரு ஆளுக்கு மட்டும் கொடுத்து எதாவது தொழில் பண்ணஉதவட்டா?"
"ஐயாயிரத்திற்கு என்ன தொழிலை தொடங்கலாம்,.....கி கி"
"ஏன் முடியாது ?அந்த கிராமத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை ஐந்தாறு கட்டை நடந்து போனால் தான் கடைகளே இருக்குஒருஆள் நடந்து போய் அரிசியை வாங்கி கொண்டு வந்து தங்களுடைய ஆட்களுக்கே  விற்கலாம்,இப்படி பல  சின்ன தொழில்களைசெய்யலாம்"
"உங்களுக்கு எது நல்லது என்று படுகுதோ  அதை செய்யுங்கோ"
"மச்சான்,வாங்கோவன் மார்க்கட் பக்கம் போயிட்டு வருவம்"
அவர்களது வீட்டில் கார்,மோட்டார் சைக்கிள்,பிள்ளைகளுக்கு சைக்கிள் என சகல வசதிகளும் இருந்தது.
"அண்ணே மதியம் இறைச்சியா ? மீனா,இறாலா சமைக்க?"
"இறால் நல்லாய் இருக்கும் "
"மச்சான்,வாங்கோவன் மார்க்கட் பக்கம் போயிட்டு வருவம்"
சந்தைக்கு போகும் வழியில் அண்ணாசி வியாபாரி கூடையில் அண்ணாசிகள் வைத்து கூவிகொண்டு திரிந்தார்,இன்னோருவர் கடலைவிற்றுகொண்டிருந்தார் ,அவர்கள் தொழிலுக்கு போட்ட‌ முதல் பத்தாயிரத்தை தாண்டி யிருக்காது.

இறால்,மீன் வாங்கி அதற்கு மூவாயிரம் கொடுத்தார்.நான் கொடுக்க போக தடுத்துவிட்டார்.

வீட்டில் தங்கச்சி மையல் செய்ய மச்சான் அங்கும் இங்குமாக ஒடித்திரிந்தார் .எனக்கும் கடல் உணவுகளின் வாசம் உற்சாக பாணம்இருந்தால் ன்றாக இருக்கும் போல் இருந்தது .ஆனால் மச்சானிடம் எப்படி கேட்பது என்ற கவலையுடன் இருந்தேன்.
அவரே வந்து மச்சான் நீங்கள்தண்ணி பாவிக்கிறணியளோ"
"ஒமோம் ஓமோம் என்று சிரித்தபடியே சொன்னேன்,நான் கொண்டுவந்த‌னான்,நீங்கள் பாவிப்பியளோ தெரியாது அதுதான் பேசாம‌ல் இருந்த‌னான் ,இருங்கோ போய் எடுத்திட்டு வாரன்"
நான் வெளிநாட்டு மதுவை கொண்டுவர அவர் ,உள்நாட்டு மதுவையும் கிளாஸ்,சைட் டிஷ் எல்லாம் தயார் படுத்தினார்.
நான் உள்நாட்டு சர‌க்கை இறால் பொறியலுடன் ருசிக்க அவர் வெளிநாட்டு சரக்கை ருசி பார்க்க......வெளிநாட்டு போத்தல் என்னை பார்த்து விவ்டி டொலர்ஸ் ஒன்லி என்று சொல்வது போல‌வும் ,உள்நாட்டு போத்தல் அவரை பார்த்து இரண்டாயிரம் ரூபா மட்டுமே என்பது போலவும் இருந்தது.