Wednesday, April 22, 2026

தொடருமா....

 அன்று வருடப்பிறப்பு. தமிழ் சிங்கள வருடப்பிறப்பு .தமிழனின்ட வருசப்பிறப்பை சிங்களவன் திருடினானோ அல்லது சிங்களவரின் வருடப்பிறப்பை தமிழன் திருடினானோ நான் அறியேன்.அல்லது இருவருக்கும் வேறு ஒருத்தன் வந்து திணித்து விட்டு சென்றானோ யார் அறிவார்.ஆனால் இன்று தீவார் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.சிறுவர்களுக்கு வருடப்பிறப்பு என்றால் இரட்டிப்பு. மகிழ்ச்சி கை விஷேசம் கிடைக்கும் அத்துடன் பாடசாலை விடுமுறை வேறு..

அது ஒர்  இறப்பர் தோட்டங்கள் நிறைந்த சிங்கள கிராமம் அங்கு சுரேஸின் முப்பாட்டனார் குடியேறி ஏக்கர் கணக்கில் இறப்பர் தோட்டங்களை வாங்கி வைத்திருந்தார் அதன் பின்பு அந்த தோட்டம் அவரின் வாரிசுகளுக்கு கொடுக்கப்பட்டது .அந்த காலத்தில் வாரிசுகள் இந்த காலம்போல ஒன்று இரண்டு அல்ல குடும்ப கட்டுப்பாடு இல்லாத  காலம் எட்டு ஒன்பது என வாரிசுகள் இருந்த காலம் .... இதனால் சுரேஸுக்கு பல ஒன்றுவிட்ட சகோதரிகளும் சகோதர்களும் இருக்கின்றனர்.விடுதலை நாட்களில் அநேகமாக எல்லோரும் அந்த வீட்டில் சந்திப்பார்கள் . பந்தி போட்டு தான் சாப்பாடு பரிமாறுவார்கள் அவ்வளவுக்கு வாரிசுகள் ,ஆனால் இந்த வாரிசுகள் இன்று ஒருத்தரை ஒருத்தர் தொலைபேசியில் பேசமாட்டார்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில், தொடர்புகளற்று இருக்கின்றனர்.

 

மூன்றாம் தலைமுறையான சுரேஸுக்கு , வருடப்பிறப்பில் வரும் விடுதலைக்கு இங்கு செல்வதென்றால் கொள்ளை பிரியம்,அவனுக்கு அப்பொழுது ஒன்பது அல்லது பத்து வயதுதான் இருக்கும்.சிங்கள பல‌காரங்களான கவுன்கொண்டை,மற்றும் இடியப்பத்தினுள் கொழுக்கட்டைக்கு போடும்  உள்ளுடலை வைத்து பொரித்திருப்பர்கள், மிகவும் பிடித்தவை.

அவனது  பாட்டியின் வீட்டு வாசலில் "அலுத் அவுருது நோனா" என்ற சத்தம் கேட்டதும் பாட்டியும் எழும்பி சென்று "அலுத் அவுருது" பண்டா என்றார்

பண்டா கையில் வைத்திருந்த பழத்தட்டையும் வெற்றிலையையும் கொடுத்து விட்டு காலில் விழுந்தார் .அவருக்கு பக்கத்தில் நின்ற அவரது மகனும் விழுந்தார். பாட்டி இருவருக்கும் வெற்றிலையில் பணம் வைத்து கொடுத்தார்

 

அவர்கள் சென்றதும் தந்தையிடம் "ஏன் அப்பா பாட்டியின் காலில் விழுந்தவர்கள்"

"அவர்களின் கலாச்சாரம் அது"

 "எனக்கும் பாட்டி காசு தந்தவர் ஆனால் நான் விழவில்லை, நீங்களும் பாட்டியின் காலில் விழுந்ததையும் காணவில்லை",

"பாட்டிக்கு காலில் விழுவது பிடிப்பதில்லை அது தான் நான் விழவில்லை மரியாதை நெஞ்சில இருக்க வேணும் எண்டு சொல்லுவா"

"அப்படியென்றல் மச்சான் சூட்டாவும் மச்சாள் சூட்டியும் பாட்டியின் காலில் விழுந்தவையல் நான் பார்த்தனான்"

"அடே! மாமா அந்த கலாச்சாரத்தில இருந்து தானே வந்தவர் அதனால் பிள்ளைகளும் அதை பின்பற்றுகின்றனர் "

"சரி நான் விளையாட‌ போறன், சூட்டாவும் ,பண்டாவின்ற புஞ்சியும் வருயினம் என்னோட"

பதிலுக்கு காத்திராமல் ஓடிச் சென்றான்.

 பின்நேரம் யாழ்ப்பாணம் போக வேண்டும், விளையாடிக் கொண்டிருக்காமல்  சீக்கிரமா வா ராசா”. என்ற தந்தையின் வேண்டுதல் அவன் காதில் விழவேயில்லை..

 சூட்டா,சூட்டி ,சுரேஷ் , பூஞ்சி எல்லோரும் ஒன்றாக விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அவர்களுக்கு பொதுவான மொழி இல்லை, ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக தங்கள் உணர்வுகளை பகிர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் .சூட்டாக்கும் சூட்டிக்கும் கொஞ்சம் தமிழ் தெரியும் ஆனால் பூஞ்சி க்கு தமிழ் தெரியாது.   சில ஆங்கிலச் சொற்களை பாவித்து தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் . அவர்களின் பொழுது அன்று மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது  ..தந்தையின் குரல் கேட்கவே ,சுரேஷ்க்கு பயணம் போக வேண்டிய ஞாபகம் வர‌ நண்பர்களிடம் இருந்து விடைபெற்றுச் சென்றான். ஏனைய  மூவரும் கண்ணீர் வடித்து அவனை வழியனுப்பி வைத்தனர்.

 அடுத்த விடுதலைக்கு வருவேன் no cry அழாதையுங்கோ..” கையை அசைத்து கொண்டே விடை பெற்றான்.

அன்று அவனுக்கு புரிந்திருக்க வில்லை இனி அவன் அந்த மண்ணை வாழ் நாளில் மிதிக்கப்போவதில்லை என்று.

வீடு வந்தவுடன்,  அடுத்த விடுமுறைக்கு போகும் எண்ணம் அவனை தொடர்ந்து  ஆட்கொண்டிருந்தது.

காலங்கள் மெல்ல நகர ஒரு நாள்,

நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது என்ற செய்தியை இலங்கை வானொலி அறிவித்தது , இதைக் கேட்ட அவனது தந்தை சற்று கலக்கம் அடைந்தார். அந்த கலக்கத்துக்குக் காரணம் அவரது தாயார் வாழ்ந்த சிங்கள கிராமத்தின் போலீஸ் நிலையம் பயங்கரவாத அமைப்பினரால் தாக்கி அழிக்கப்பட்டது என்ற செய்தியே ..

தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி அவரது தாயினதும்  சகோதரரினதும் நிலமையை அறிய முடியாத சூழ்நிலை அதேசமயம் போக்குவரத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டு விட்டது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திகளை மட்டுமே நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .

 இரண்டு மாதங்கள் கழித்து நிலைமை  சீரானது . ராணுவ போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின.

அவனது தந்தை  முதல் பஸ்ஸில் தாயாரை சந்திக்கச் சென்றார். மகனை கண்டதும் தாயார் அவரை கட்டி அனைத்து அழத் தொடங்கிவிட்டார்….

 

"அம்மா அழாதையுங்கோ நான் வந்திட்டன் தானே"

"இனி இங்க இருக்க ஏலாது,பயமா இருக்கு தம்பி "

"ஊருக்கு  வாங்கோ என்ட வீட்டில வந்திருக்கலாம்"

நான் தனியாள் என்றால் வந்திடுவேன் செல்வம் தனித்து போய் விடுவான் பிறகு இந்த தோட்டம் ,வீடு எல்லாத்தயும் யார் பார்க்கிறது"

"எங்கே செல்வம் "

"பின்னுக்கு தோட்டத்துக்கு போய்விட்டான் ,றப்பர் பால் எடுக்கிறதுக்கு பண்டா வந்தவன் ,அவனோட தான் போய்ட்டான்"

"எப்படி இருக்கிறார் பண்டா,"

"நல்லாய் இருக்கிறான் அவன் தான் எங்களுக்கு நல்ல‌ துணையா இருந்தவன்"

"அவர் தாத்தாவின் காலத்திலிருந்து   குடும்பமா வேலை செய்யினம் விசுவாசமாக இருப்பார்கள் தானே"

 

தாயார் அங்கும் இங்கும் பார்த்து விட்டு

"பண்டா மாதிரியில்லை அவனின்ட மூத்தவன் லொக்கு "

ஏன் அப்படி சொல்லுறீங்கள் ,அவன்கள் சின்ன வயசு விளையாட்டுபெட்டியள் குறும்பு செட்டைகள் இருக்கும் தானே"

"வந்திடுவாய் அவன்களுக்கு வக்காலத்து வாங்க"

"ஏன் கொதிகிறியல்,அவன்கள் என்ட சொந்தக்காரனே ,நீங்கள் தானே எங்களுக்கு பண்டா குடும்பத்தை அறிமுகப்படுத்தி வைத்தனீங்கள்..."

"நானோ உன்ட கொப்பரும் ,கொப்பரின்ட கொப்பரும் அவங்களுடன் உறவு கொண்டாடினவையள் நான் எப்பவும் விலத்தி தான் பழ‌கிறனான் "

"சரி அதை விடுங்கோ"

"என்னத்தை விடுறது,உனக்கு தெரியுமே இவன் லொக்கு போன வருடப் பிறப்புக்கு வீட்டை வரவில்லை"

"அதற்கு என்ன இப்பஅவன் வரவில்லையென்றபடியால் உங்களுக்கு வருசம் பிறக்கல்லையோ"

என்ன இரத்தினம் எல்லாத்துக்கும் பெரிய ஞானி போல கதைக்கிறாய்"

சற்று கோபமாக சொல்லி கண்ணை கசக்கினார் ,அவர் வழமையாக அவனை தம்பி ,அப்பு என அன்பாக அழைத்து தான் பேசுவார் அவனின் பெயரை சொல்லி கதைத்தார் என்றால் ஏதோ கோபத்தில் இருக்கின்றார் என்ற அர்த்தம் ...அதை புரிந்த அவன்

சொறி அம்மா,சொறி அம்மா பிளீஸ் அம்மா "சொல்லி தாயாரை சமாதானப்படுத்தினான்

"சரி சரி வா தம்பி சாப்பிடுவம்"

"என்ன கறி இருக்கு"

மீன்டின் குழம்பும்,பிலாக்காய் கறியும் தான் வைச்சனான் நீ வருவாய் என்று தெரியாது,நாளைக்கு ஒரு சேவல் நிற்கின்றது ,செல்வத்திட்ட சொல்லி பிடிச்சு உரிக்க வேணும் ,பின்னேரமாய் பார்த்து அமுக்க வேணும் ,விடிய என்றால் பாய்ந்து ஒடி விடும்"

"ஒம் நாளைக்கு சமையுங்கோ கண்ணகி குடும்பத்தையும்  கூப்பிடுவோம்"

"ம்ம்ம் ...கூப்பிடு உன்ட தங்கச்சி வந்தா சந்தோசம் தான்"

"ஏன் அவள் வார இல்லையே"

"ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வருவாள்,பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வாராதும் குறைவு"

"மச்சான் நல்ல மனுசன் ,அந்தாள் தங்கமான மனுசன் தானே"

"ஓ ஒ உன்ட மச்சான் பொன்சேக்கா தங்கம் தான் உங்களுக்கு ஆனால் என்ட தங்கத்தை மாற்றிப்போட்டார்,பொன்னரை நொந்து என்ன பயன் ,எல்லாத்துக்கு காரணம் உன்ட கொப்பர்"

மேல போன அப்பரை ஏன் திட்டுறீயல்  உங்கன்ட  சம்பந்தியும் பண்டாவின் சொந்தகாரர் தானே...நீங்கள் தானே அந்த சமபந்தத்தை செய்து வைச்சனீங்கள்"

",அப்பவும் நான் சொன்னனான் பொம்பிள்ளை பிள்ளையை ஊரில ஹொஸ்டலில் விட்டுஉங்கள் மூன்று பேரையும் போல படிப்பிக்க சொல்லி,மனுசன் கேட்டிச்சே"

"அவளுக்கு என்ன குறை இப்ப நல்லாத்தானே இருக்கிறாள்"

"கண்ணகி என்று தமிழ் பெயர் வைக்க வேணும் ,என  என்னோட சணடை பிடிச்சு உந்த புராண பெயரை வைச்சவர் ஆனால் அவள் இப்ப  பொன்சேகா என்று திரியிறாள் பிள்ளைகளுக்கும் அவங்களின்ட பெயர்களை தான் வைச்சிருக்கிறாள்"

"சரி சரி கட்டி கொடுத்திட்டியள் இனி உதுகளை ஏன் தூக்கி பிடிக்கிறீயள்"

"நான் விரும்பி கட்டி கொடுக்கஇல்லை அதை மட்டும் மனதில வைச்சு கொள்ளுங்கோஇங்கிலிசில படிக்கட்டும் என உந்த சிங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதால் தான் எல்லாம் வந்தது"

"எங்கே செல்வத்தை காணவில்லை எப்ப போனவன்"

வந்திடுவான் ,பண்டாவோட போன படியால் பயமில்லை வந்திடுவான் ,அவனும் ஒரு சிங்களத்தியோட கதைச்சு கொண்டு திரியிரானாம்"

 

Friday, February 21, 2025

கிளீன்.

 அண்மையில் தேசிய பாடசாலை அதிபர் ஒருவர் பாடசாலை கடித தாளில் (லெட்டர் ஹெட்டில்)பாழைய மாணவ சங்கங்களுக்கு "கிளீன் (விரும்பிய பாடசாலையின் பெயரை போடவும்) கல்லூரி"என்ற திட்டத்தை அமுல் படுத்த பணம் தேவை என கடிதம் அனுப்பியிருந்தார் . நல்ல விடயம்  கேட்ட தொகை கிட்டதட்ட 3லட்சம் ...

கிளீன் சிறிலங்கா என ஜனாதிபதி பாடம் நடத்த இவர்கள் புலம்பெயர் மக்களிடம் கிளீன் பாடசாலை என வெளிக்கிட்டினம் ..சிங்கள பாடசாலையிலும் இது நடை பெறுகிறது.

தேசியம் பேசுகிறார்கள்தேசிய ஒற்றுமை என கூவுகின்றனர்.பாடசாலைகளுக்கு குப்பை தொட்டி வாங்குவதற்கு ஏன் புலம் பெயர் தமிழ் தேசிய மக்களிடம் கை ஏந்துகின்றனர் இந்த இடதுசாரிகள்...விகாரை கட்டுவதற்கு ,,இராணுவ கட்டமைப்புக்கு என பணத்தை வாரி இறைக்கின்றனர் ஏன் குப்பை தொட்டிக்கு பணம் கொடுக்க முடியவில்லை...

நாங்கள் படிக்கும்/பாடசாலைக்கு செல்லும் பொழுதும் குப்பைகள் இருக்கவில்லையா அல்லது குப்பைகளுக்குள் இருந்து  படித்து முன்னுக்கு வந்தார்களா அன்றைய மாணவர்கள் என்ற கேள்வி என்னுள் எழுகின்றது.சிறிலங்கா மக்களின் எதிர் பார்ப்பு தான் என்ன ஜனாதிபதி வெளிநாடுகளிடம் கை ஏந்துகிறார் நாட்டு மக்களுக்கு அன்றாட தேவைகளான அரிசி,தேங்காய்,முட்டை போன்றவற்றை வழங்க, .பாடசாலை அதிபர்கள் பழைய மாணவ சங்கத்திடம் கை ஏந்துகின்றனர் குப்பைகளை முகாமைத்துவம் பண்ணுவதற்காக.

வெளிநாடுகளை போல தங்கள் நாடு முன்னுக்கு வர வேணும் என நினைப்பதில் தப்பு இல்லை ஆனால் அதை சொந்த மண்ணில் உற்பத்தி யாகும்  பொருட்களில் இருந்து செய்ய முன்வர வேணும் ...

ஒரு பக்கம் கிளீன் சிறிலங்கா ,என சொல்லி கொண்டு பிளாஸ்டிக் பொருட்களினால் ஆன குப்பை தொட்டிகள்,பிளாஸ்டிக் பைகள் போன்ற வற்றை உபயோகப்படுத்த முயற்சிக்கின்றனர்.

 

எமது தாயக பகுதிகளில் பனை ஒலைகள் தாராளமாக கிடைக்கின்றது ஏன் இதை பயன்படுத்தி பெரிய கடகம் போன்ற குப்பை தொட்டியை உருவாக்க முடியாது ?வர்ணம் பூசி வேரு படுத்தி காட்டலாம்

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஏன் சணல் நூலினால் பின்னப்பட்ட  சாக்குகளை உபயோக படுத்த முடியாது..

பனை மட்டைகளை பயன் படுத்தி பெரிய கூடுகளை அமைக்கலாம் ..

 இப் பொருட்கள் இலகுவில் உக்கி போகும் ..

 

அட்வைஸ் பண்ணுவது இலகுவானது அதை நடை முறையில் நாங்களே(அட்வைஸ் பண்ணும் நானே)  செய்வது கடினம் .

Tuesday, September 10, 2024

சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1

 நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில்

சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார்.

அருகில் சென்று

" எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ"

என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர்

"அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே"

"கி.. கி.. .ஒம் அண்ணே"

"நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே "

"சீ சீ  டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை"

 "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் "

"ஒம் "

"அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்"

"அப்ப நீங்கள் சோறு  சாப்பிடுவதில்லையே "

"ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்"

 

"என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல"

"வயசு போகவில்லை உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்"

"அட கடவுளே பிறகு "

"பிறகு  மகளும்பேரப்பிள்ளைகளும் முதலுதவி  செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை"

"வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்"

"இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை"

"சன் இன் லோவும் 'டைபூசுறவறே"

"ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் "

"புது பிராண்டுக்கு 'ஹினி பிக்நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ"

"புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்"

"அண்ணே உது 'சண் இன் லோவின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி"

அவரும் சிரித்தபடி எழுந்தார் ,

"இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி"

"உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு"

"  சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி"

"எந்த டாக்குத்தர்"

"யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்"

"வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் "

இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது

"டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே "

அவையளுக்கும்  நடேசருக்கும் அட்டாஜ்  கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்"

"ஏன்டா?,"

"நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்"

குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ?

எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்"

"போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும்  வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்"

அப்படியே நடந்து வந்தவர்  மூலஸ்தான பின் சுவரை பார்த்து

"இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்,"

"விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு"

"இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பிசனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்ச‌னான் இப்ப தெளிந்திட்டன்"

"வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ"

"நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்"

"இறைசக்தியோ"

"அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...."

"என்ன அண்ணே சொல்லுறீயல்"

"நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த  முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்"

"அது நடக்குது தானே"

"அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு"

இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு"

"உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் "

"அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு"

"இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது 

என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர்.

"என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?"

"உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள்

அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்"

"யார் நியுசிலாந்துக்காரன்களே"

"உந்த நக்கல் தானே கூடாது"

"ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்"

"ஒம் நல்ல‌ வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் ....  நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம்ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும்  நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்"

"இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்"

"ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்"

"சரி சரி வாங்கோ"

"உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத‌"

"யார் அந்த இலைட் குறூப் அண்ண"

"அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள்

இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...

Edited  by putthan
தலையங்கம் மாற்றுவதற்காக எடிட் செய்யப்பட்டது

Thursday, February 15, 2024

திரு வின் காதலர் தின பரிசு

 திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ)  பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை 

 

....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு...

இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்  காதலர் தினத்திற்காக  வாசுகி  மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வழமை போல லெட்டாக வரவேண்டாம்" என  சிணுங்கலுடன் சொன்னாள்.

திரு வேலை பளுகாரணமாக  "ஒம் " என   சொல்லி தனது குரளை எப்படி எழுதி முடிப்பது என ஆராச்சியில் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தார் .இரு வரிகளில் ஏழு சொற்களில் எல்லாவற்றையும் அழகிய இலக்கிய இலக்கண தமிழில் எழுதுவது  இலகுவான காரியமல்ல என்பது நீங்கள் அறிந்ததே.....தனது நிழலை பார்த்தார், மறைந்து விட்டது வீடு செல்லும் நேரம் என நினைத்து எழுதி கொண்டிருந்த ஒலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் தூக்கி கொண்டு வீடு சென்றார்.

வழமையாக வாசலில் வந்து வரவேற்கும் வாசுகியோ வந்து வரவேற்கவில்லை அதை திரு பெரிதாக கண்டு கொள்ளவில்லை ,வாசுகியோ அவரது கையில் இருப்பது திருநெல்வேலி அல்வா ஆகா இருக்குமோ என ஆசையுடன் எட்டி பார்த்தாள் ,புரிந்து கொண்டாள் கிழவன் வழமை போல ஒலைகளை சுருட்டி கொண்டு வந்திருக்கிறது ..இந்த ஒலைகளினால் என்ன பயன் என மனதில நினைத்தவாறு கையில் இருந்த அகப்பையை தரையில் வீசினாள்..

 

அன்று ஐயன் திரு 1108 ஆவது குரளை எழுதி கொண்டிருந்தார் .

அதுதான்

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படா அ....."

வீடு போகும் வரை இதை எப்படி முடிப்பது என தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்து வீடு சென்றும் எழுத முடியாமல் தவித்த வண்ணமிருக்கையில் திரு ,வாசுகியின் அகப்பை  சத்ததை கேட்டு ஒடிச் சென்று முயக்கினான் (கட்டி தழுவினார்)

ஏற்கனவே திரு மீது மிகவும் கடுப்புடன் இருந்த வாசுகி தள்ளி போங்கள் என கூறி விலகிச்சென்றாள்.

உடனே வள்ளுவனுக்கு தனது 1108 ஆவது குரலின் இறுதிச் சொல் உதிக்கவே ஒடிச்சென்று "முயக்கு" என அந்த குரளை எழுதி முடித்து விட்டு மீண்டும் வாசுகியிடம் வந்தார்.

வாசுகியோ அவரை பார்க்காமல் வேறு திசையை பார்த்தவாறு இருந்தாள்.திருவுக்கு புரிந்து விட்டது மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றாள் ,இருந்தாலும் என் வரவுக்காகவும் என்னை மகிழ்ச்சி படுத்தவும் மல்லிகை பூ அழங்காரத்துடன் இன்னும் இருக்கின்றாள் ....திரு ஏற்கனவே எழுதிய 1108 குரளினால் உணர்ச்சி பிழம்பாக இருந்தார் ...வாசுகியின் அருகே சென்று  கண்ணே ஏன் இந்த ஊடல் என மிகவும் தாழ்மையாக கெஞ்சி குலாவி கேட்க ,

"உங்களுக்கு காலையில் என்ன கூறி வழி அனுப்பினேன் "

சிறுது நேரம் யோசித்த திரு

"மாலையில் சற்று விரைவாக வருமாறு"

"ஏன் வரவில்லை"

"வேலைப்பளு கண்ணே"

"இன்று என்ன நாள் என தெரியுமா"

"தெரியவில்லையே தேனே"

"காதலர் தினம் ,பக்கத்துவீட்டில் அவர்கள் இருவரும்  காலையில் இருந்து கொண்டாடுகிறார்கள்,அவளது கணவன் அல்வா வாங்கி கொடுத்ததாக எனக்கு கொண்டு வந்து தந்தாள் .."

"அவன் அல்வா தான் கொடுத்தான் நான் உனக்காக குரளே எழுதியுள்ளேன் அந்த குரளின் இறுதி சொல்லும் உன்னை கண்டதும் உதித்தது  மலரே"

"எங்கே வாசியுங்கள்"

திரு  உணர்ந்து கொண்டார் தப்பு செய்து விட்டேன் ..உடனே அவளின் அருகில் சென்று அவரது 1108 குரளை வாசித்தார் .

வாசுகி தன்னிலை மறந்தாள் ,திருவும் தன்னிலை மறந்தார் .இருவரும் உச்சத்துக்கு சென்று பிரிந்தனர்.

கண்ணே நீ இன்று என் மீது கோபம் கொண்டாய்,அதன் காரணத்தை உணர்ந்தேன் நீயும் உணர்ந்தாய் முடிவில் கூடினோம், காதல் தினம் அல்வா கொடுப்பதோ பூக்கள் கொடுப்பதோ அல்ல என சிரித்தபடி தனது மீசையும் ,தாடியையும் தடவினார்.

"மலரே,எனக்கு இன்று இன்னோரு குரளும் எழுத கை துடிக்கின்றது"

"எழுதுங்கள் நாதா"

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியோர் பெற்ற பயன்"

"அருமை நாதா"

வாசுகியை தன் வசம் மயக்கிய   மகிழ்ச்சியில்  

"பூவே ,எனது இந்த அதிகாரத்தை எழுதி முடிக்க இன்னுமொரு குரள் தேவை படுகிறது"

"எழுதுங்கோ பிரபு"

" அதற்கும் உன் ஒத்துழைப்பு வேண்டும் இளவ்ரசியே"

" இன்று இவை போதும் நாதா ,நாளை மிகுதி குரளை எழுதுவோம் "

என கூறி திருவின் வயிற்றில் செல்லமாக குத்திவிட்டு சென்றாள்

 

..

Friday, September 29, 2023

 எங்கன்ட வோர்ட்

வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன்

திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்"

"இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே"

"எனக்கோ உங்களுக்கோ...." என  ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள்.

"  எம் பெருமான் முருகனையும் அவன் அப்பன் சிவனையும்  அழைத்தால் கோவிலுக்கு  போகப்போறீங்களோ என கேட்க வேணும் அதைவிட்டிட்டு டொக்ரிட்ட  போகப்போறீங்களோ என கேட்பது எந்த கலாச்சாரம்"

 "கலாச்சாரத்தை பற்றி நீங்கள் கதைக்கிறீயல் என்ன கொடுமை சரவணா"

"யார் அந்த சரவணன்? உம்ம‌ட பழைய பொய்பிரண்ட்..." என கேட்டு சிரிச்சு சமாதனம் பண்ணினேன்.

" உந்த மொக்கை ஜொக்குகளை கேட்டு என்ற காது செவிடாபோச்சு, விடியவெல்லன எழும்பி மனுசருக்கு அலுப்பு கொடுத்து கொண்டு போய் பார்க்கிற அலுவல்களை பாருங்கோ"

"இஞ்சாரும் லீவு போட்டுவிட்டு வாரும் முருகன் கோவிலுக்கு போயிட்டு வருவம்"

"மழை வரப்போகுது இன்றைக்கு"

"உந்த மொக்கை ஜோக்கை 25 வருசமா கேட்டு  புளிச்சு போச்சு ஹி ஹி"

ஒருமாதிரி புடுங்குப்பட்டு முருகனை தரிசிக்க புறப்பட்டோம்.கார் திறப்பை மனிசியிட்ட கொடுத்து

"நீர் ஒடுமப்பா"

" ஏன் என்ன நடந்தது உங்களுக்கு இன்றைக்கு? வழமையாக கார் ஓட தரமாட்டியல், பார்டிகளுக்கு போய்விட்டு திரும்பும்பொழுது மட்டும் கொஞ்சம் தடுமாரி தடுமாரி திறப்பை தருவியல்"

  "பார்வை கொஞ்சம் மங்கலாக இருக்குது "

" கண்ணாடி மாத்த‌ வேணுமோ தெரியவில்லை கோவிலுக்கு போய்விட்டு அங்க போவம்"

" சும்மா போம் இன்றைக்கு கோவிலை தவிர வேற இடத்தை போறதில்லை"

'உங்களுக்கு என்ன நடந்தது "

" விசர்கதையை விட்டிட்டு காரை ஓடும்" கொஞ்சம் அதட்டலாக சொன்னேன்  ,திரும்பி என்னை பார்த்து முழுசியவள்

"உந்த ராங்கி கதைக்களுக்கு குறைச்சலில்லை,அங்க ஒன்றும் வேலை செய்தில்லை ,இப்ப கண் வேற பிரச்சனை ,கார் ஒடுறது மட்டும் ஒழுங்க செய்தியல் அதுவும் இல்லை இனி போல கிடக்கு "

வேகமாக நடந்து  கார் கதவை திறந்து ஏறியவள் என் மீது இருந்த கோபம் ஆத்திரம் யாவற்றையும் கார் கதவின் மீது காட்டினாள்.நான் எதுவும் புரியாதவன் போல முன் சீட்டில் ஏறி அமேர்ந்தேன்.

 கார் ஓடிய விதம் ,என் மீது கோபம் இன்னும்  தனியவில்லை என்பதை காட்டியது.இப்படியே விட்டா என் உயிருக்கு உத்தரவாதமில்லை ,முருகனை சிட்னியில சந்திக்க முடியாது அவனை மேலோகத்தில் தான் சந்திக்க முடியும் என உணர்ந்து     

"இஞ்ச உம்மட வட்சப்புக்கு வீடியோ அனுப்பினேன் பார்த்தனீரே"

"இல்லை"

"நல்ல வீடியோ பார்த்திருக்கலாம் ஏன் பார்க்கவில்லை"

"நேரமில்லை"

வீட்டு வேலை செய்ய நேரமில்லை இதுக்குள்ள இவரின்ட வட்சப் வீடியோக்களை பார்த்து கொண்டிருக்க வேணுமாக்கும் என்ற அவளின்ட மைன்ட் வொஸ் எனக்கு விளங்கினாலும் ,அவளின் ஒற்றை பதில்கள் அவளுக்கு இன்னும் ஆத்திரம் குறையவில்லை என்பதை புரியவைத்தாலும் 

நான் சமாதன முயற்சியை கைவிடவில்லை.

 "வயசு போன நேரத்தில ஏன் கோபிக்கிறீர் ,இன்றைக்கு செத்தால் நாளைக்கு பால்" என சினிமா வசனத்தை சொல்ல

"கோவிலுக்கு போற நேரத்தில் ஏன் உந்த செத்த வீட்டு வசனம் "

இந்த நீண்ட பதில் அவள் சமாதானம் ஆகிவிட்டாள் என்பதை உணர்த்தியது.

" அந்த வீடீயோவை பாரும் நான் ஏன் கோவிலுக்கு போக வெளிக்கிட்டனான் என்று புரியும்"

"யார் அனுப்பினது? அப்படி என்ன இருக்கு? ,யார் பேசியிருக்கினம்? சுகி சிவத்தின்டயா?"

"எங்கட சிவா  யூ டியுப்பில் ,'கோவிலுக்கு ஏன் போகவேணும் இந்துக்கள் ' விளக்கம் கொடுத்திருக்கிறான்..கொடுத்திருக்கிறார்.

"என்ன அவனுக்கு பெரிய மரியாதை  கொடுக்கிறீயல் ,'கொடுக்கிறார்' என்று அவனும் நீங்களும் சேர்ந்து ஆடின ஆட்டம் எனக்கும் அவனின்ட மனிசிக்கும் தான் தெரியும் "   

"அது கடந்தவை அதுகளை இப்ப கிளறாதையும் மாற்றம் ஒன்றே மாறதவை "என புரட்சிகர வசனம் பேசி அவளை மடக்க நினைத்தேன்

"இஞ்சப்பா உந்த புருடா கதைகளை தாண்டித்தான் நானும் வளர்ந்தனான் எனக்கு உங்கன்ட வயசை விட   நாலு வயசு தான் குறைவு"

க‌தைத்து கொண்டு இருக்கும் பொழுதே சிட்னி முருகனின் வாசஸ்தலம் எம்மை வரவேற்றது.எம்பெருமான் முருகனின் விசேச தினங்களில் வாகன தரிப்பிடம் எடுப்பது என்பது இலகுவான விடயம் அல்ல இரண்டு மூன்று தடவைகள் சுற்றி வந்தாலும் கிடைப்பது என்பது முயல் கொம்பு போன்றது.

நான் வாகனத்தை ஒடினால் இரண்டு சுற்று சுற்றுவேன் இடம் இல்லை என்றால் காரில் வருபவர்களை முருகனின் வாசல் ஸ்தலத்தில் இறக்கி விட்டு அருகில் உள்ள தெருக்களில் இடம் தேடி அலைந்து நிறுத்தி விட்டு முருகனுக்கு ஹாய் சொல்வது வழமை.

ஆனால் அன்று நம்ம துணை ஒடியதால் அடம் பிடித்து இரண்டுக்கு  மேல் பட்ட தடவைகள் சுற்றினாள் .

அன்று கார் பார்க்கில் நிற்கும் நம்ம தொண்டர்களில் சிலர் மிகவும் அன்பாக பழகினார்கள் சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது .பெண்கள் கார் ஒடினால் முருகனின் பக்தர்கள் மனம் உருகிவிடுவார்கள் போல என நினைத்து,.

 ஏயார் ட்ரைவிக் கொன்ரோலர்ஸ் மாதிரி கண்ணும் கருத்துமாக விரைப்பாக முகத்தை வைத்து  கார் பார்க்கில் வேலை செய்யும் நம்ம அண்ணாமாரே இப்படி விளம்பரத்துக்கு சிரிப்பது போல சிரிக்கின்றனர் என கேட்க வேணும் போல் இருந்தது இருந்தாலும் கோவில் வளாகத்தில் வைத்து ஏன் வம்பு என நினைத்து  முருகனிடம் விடை கிடைக்கும் அவனிடம் விட்டுவிட்டேன்.

 காரை மூன்றாவது தடவையாகவும் திருப்பினாள் தரிப்பிடம் தேடி .பொறுமையை இழந்த நான்

"உதுக்கு தான் நான் ஒரே சுற்றில் பக்கத்து தெருவுக்கு போய் பார்க் பண்ணுகிறனான்"

"பொறுமையாக இருங்கோ முருகன் எனக்கு ஒரு ஸ்பொட் தருவார் "

" அடியே அவருக்கு வேற வேலை இல்லையே உமக்கு கார் ஸ்பொட் தரவே 24/7 வேலுடன் இருக்கிறார்"

"உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விடுங்கோ எனக்கு நம்பிக்கை உண்டு" மீண்டும் என்னை  விழியால் கோபமாக பார்த்தாள்..

அமைதியான நான் எனது கற்பனை குதிரையை சிறகு அடித்து பறக்க விட்டேன்.

இந்த தரிப்பிடத்தை மூன்று தடவைகள் சுற்றி விட்டோம் பெற்றோல் செலவு .பேசால் முருகனை நடுவில வைத்து ஒரு பெரிய கார் பார்க் கட்டியிருந்தா முருகனை சுற்றின பலன் கிடைத்திருக்கும். அப்படியே டரைவ் துரு தோசை கடையும் போட்டால் நல்ல வருமானம்  வரும்... இதை நான் சிபார்சு செய்ய ஒரு கோஸ்டி சம்மதம் தெரிவிச்சு கவுன்சிலில் அனுமதி எடுக்கும் .இதை விரும்பாத மற்ற கோஸ்டி பெட்டிசன் போடும் ,இன்னோரு கோஸ்டி இவன் யார் கவுன்சிலுக்கு அனுமதி கேட்டு போட உவன் என்னத்தை படிச்சவன் நான் சிறிலங்காவில் பேராதனையில் பட்டம் பெற்றவன் தாமரை கோபுரத்தை வடிவமைத்தவன்  என மார்பு தட்டி குழப்ப .,இதை எல்லாம் விடுப்பு பார்த்த என்னை மாதிரி சிலர் சமுக வலைத்தளங்களில் கிறுக்கி தள்ள  ஓ மை கோட்...

இருவர் எமது காரை நோக்கி வந்திச்சினம் , தரிப்பிடம் தரப்போயினமாக்கும் என நினைத்து கண்ணாடியை இறக்கினேன் . சிரித்தார்கள் நானும் சிரித்தேன் .

"உங்கட்டையும் இருக்குத்தானே"

வழமையாக என்னை கண்டால் வேற்று கிரகவாசியாக்கும் என சிரிக்கமால் சென்று விடுவார்கள் ஆனால் இன்று என் கார் தேடி வந்து உங்களுக்கும் இருக்குத்தானே என கேட்டது என்னை நிலைகுழைய வைத்தது. 

இத்தனை வருசமா ஒருத்தனும் கேட்காத கேள்வியை இவன்கள் கேட்கிறாங்கள் பக்கத்தில் மனிசி வேற, போதாக்குறைக்கு கோவில் இல்லாட்டி ...கேட்டிருப்பேன் பார்த்தால் தான் நம்புவியளோ?

என்னுடைய லோள்ளு குணம் அறிந்தவள் மனைவி முந்தி கொண்டாள்.

"இஞ்சப்பா இவை தேர்தலில் நிற்கினம் எங்கன்ட வோர்ட் கேட்டு நேற்று வீட்டை கொல் எடுத்தவையள்"

"ஒ அவையளோ? உங்களுக்கு தான் போடுவோம்"

" உங்கன்ட வீட்டில நாலு  வோட் இருக்குது பார்த்து போடுங்கோ"

"நிச்சயமாக"

நன்றி சொல்லி விடை பெற்றனர் .

"உவை இரண்டு பேரும் எந்த கோஸ்டி"என மனைவியிடம் கேட்டேன்

"இவையள் இருவரும் இரண்டு வேற வேற கோஸ்டிகளை சேர்ந்தவையல்"

"உவையல் முந்தியும் கனதரம் பதவியில இருந்தவையல் அல்லோ"

" இந்த தடவை கும்பாபிசேகம் வருது அதுதான் உசார ஒடி திரியினம்"

"ஓ ஓ முதல் மரியாதை விசேட கவனிப்பு அதுக்குத்தான் ஒடி திரியினம் ,இந்த தடவையும் கார்பார்க் கட்ட மாட்டினம் "

"காரை கொஞ்சம் தள்ளி நிறுத்தும் .அவையள் பதவிக்கு ஒடி திரிவினம்,இதில உங்கட்ட இருக்கோ என்ற கேள்வி ,நாங்க  கார் பார்க்  பண்ண  ஓடி திரிய வேணும். ஐந்தாறு தடவை சுற்றினாலும்   இடம் கிடைக்காது"

"இந்ததடவை கட்டுவினம்"

"தாலியை கட்டிச்சினம்....உந்த கார் பார்க் பிரப்போசலை கொண்டு வந்த சனத்தில் சிலர் மேல போட்டினம் சில நேர்சிஹோம்,சிலர் டிசேபில் ஸ்பொர்ட் கார் பார்க் பண்ணினம் ,சிலர் வீல்சேர்....

நாங்களும் அந்த லீஸ்ட்டில் வந்தாலும் இந்த கோஸ்டிகள் கார் பார்க் கட்டாதுகள் ...நீர் இறங்கும் நான் பக்கத்து தெருவில் பார்க் பண்ணிபோட்டு வாரன்"

"ஒம் அப்பா பார்க் பண்ணி போட்டு வாங்கோ " என காரிலிருந்து இறங்கினாள்

" என்ன உம்மடை முருகன் ஸ்போர்ட் தரவில்லையே இன்றைக்கு"

" பக்கத்து தெருவில் பார்க் பண்ண உங்களை தூண்டியது எம் பெருமான் முருகன் தானே"