Thursday, August 22, 2013

சிட்னி புலம்பல்

சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தராதரம் பார்க்கபடும்...தென்னிந்திய கலைஞர்களையும் சில திருவிழா உபயகாரர் அழைத்து தங்களது தராதரத்தை எனையோர் தொடமுடியாத படி உயர்த்தி மக்களிடையே பிரபலமாகிவிடுவார்கள்.
பழைய மாணவ சங்கங்கள் ,பல்கலைகழக சங்கங்கங்கள் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்வதற்காவே உருவாக்கப்பட்டது.

மாணவசங்கங்கள் புலத்தில் இந்திய திரைப்பட இசையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.இந்த மாணவசங்கங்களின் கடந்த காலவரலாறுகளை எடுத்து பார்க்கும் பொழுது வெள்ளிடைமழை.திரைஇசை மட்டுமல்ல போலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் ஆற்றியுள்ளது இனிமேலும் ஆற்றும்.பழைய மாணவர்களாகிய நாம் இந்த இடுப்பாட்டத்தை அன்றுதிரையில்தான் பார்த்தோம்.அந்தகாலத்தில் இதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆசைஇருந்தது.
அதை இன்று நரை விழுந்து ,மொட்டை தட்டிய பிறகு பார்க்க கூடியசந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இதுவும் என்போன்றோர்களுக்கு மகிழ்ச்சியே.
பழையமாணவ சங்க நிகழ்ச்சிகளுக்கு $50முதல்$100வரை நுழைவுச்சீட்டு அறவிடுகிறார்கள்.ஒருவர் $100 ரூபா செலவு செய்கிறார் என வைத்துகொள்வோம் அதில் $5 மட்டுமே தாயகத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு சென்றடையும்.
மிகுதி $95 கால்வாசி அவுஸ்ரேலியா அரசுக்கும் ,மிகுதி முக்கால்வாசி பணமும் இந்திய கலைஞர்களுக்கும் இந்திய அரசுக்கும் செல்கின்றது.
நுழைவுச்சீட்டில் தாயகமக்களின் துயர் துடைக்க என விளம்பரம் போடுகிறார்கள் ஆனால் அந்த பணத்தில் கால்வாசி கூட தாயக மக்களை சென்றடையவில்லை எனபது ,எனது கருத்துகணிப்பு மட்டுமே....எது எப்படியாயினும் மிக மிக சிறுதொகை தாயக மக்களை சென்றடைகிறது என்று
மகிழ்சியடைய வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம்.

இன்று எமக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தேவைப்படுகிறது அதற்காக ஒழுங்கு செய்கின்றோம்.இன்னும் பத்து வருடங்களின் பின் பழைய மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிட்னியில் நடை பெறுமா என்பது கேள்விக்குறியே.புலத்தில் தமிழ்சினிமாஇசையை வளர்ப்பதிலும்,பொலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் உண்மையிலயே பாடுபடுகின்றார்கள்.இவர்களின் இந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் அளப்பறியது. திரைப்படங்களில் ஒரு பாடல் பாடியவர்கள்,சின்னத்திரையில் பாடல்கள் பாடிய சிறுவர்கள்,மற்றும் பிரபலங்கள் ,பிரபலமடையாத நபர்கள் என யார் யாரை எல்லாம் அழைக்க முடியுமோ அழைக்கின்றோம்.இந்தியாவில் பிரபலமாகாத இசைகலைஞர்களை சிட்னியில் பிரபலமாக்கின்றோம்... இசைக்கலைஞர்களைமட்டுமல்ல இன்று தொலைகாட்சி அறிவிப்பாளர்களும் எமக்கு ஒரு கதாநாயகன் போல தோன்றுகின்றார் அவரையும் விட்டு வைக்கவில்லை .ஒரு பழைய மாணவச்ங்கம் ஜெயா தொலைகாட்சி பிரபலத்தை அழைத்தால் மற்றவர் சண்தொலைக்காட்சி கலைஞரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்.
இந்த செயல்களை பார்க்கும் பொழுது எனக்கு ஊர் உபயகாரர்களின் போட்டி மனப்பான்மையில் திருவிழா செய்த்ததும் இன்று நாம் இங்கு பழையமாணவர்கள் என்ற போர்வையில் ஏட்டிக்கு போட்டியாக செயல் படுவதும் ஒன்று போல தெரிகின்றது....

அன்று கடவுளை மையப்படுத்தி உபயகாரர் பிரபலமடைந்தனர்...இன்று தாயக மக்களை மையப்படுத்தி பழையமாணவர்கள் நாம் பிரபலமடைய முயற்சி செய்கின்றோம்..... :D