Sunday, May 12, 2013

நீயும் ஊரவன்

"அண்ணே எங்க போகவேணும்"
பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு
"தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ"
"அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்"
"என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்".
. யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்ணத்தில் அப்படி ஒரு பொய்யை சொல்லி பேரம் பேசினேன்.
"அண்ணே இப்ப எல்லோரும் நானூறு தான் எடுக்கிறவையள்,வந்து ஏறுங்கோ"
நாலு டொலர்தானே வரும் எங்கன்ட காசில என நினைத்தபடியே போய் ஏறினேன்.ஊருக்கு போராய் கண்ட சனத்தோடயும் வாயை கொடுக்காதே என கொழும்பில இருக்கிற உறவுகள் அறிவுரை சொன்னதிற்கு ஏற்ப நானும் பெரிதாக ஒட்டோ சாரதியுடன் பேச்சுக்கொடுக்கவில்லை. "அண்ணே இப்ப குளிராக இருக்கு மத்தியானம் பயங்கர வெய்யில் அடிக்கும்" என்று சொல்லி எனது மெளனத்தை கலைத்தார்.
"அப்படியா"
"மானிப்பாயில் எவடத்த "
"சுதுமலை சந்தியடிக்கு போங்கோ கிட்ட போன பிறகு வீட்டை காட்டுகிறேன்"
"அண்ணே வெளிநாடோ,கொழும்போ"
"நான் கொழும்பு " ஒட்டோவில் ஏறியவுடன் யாழ்நகரை வியப்பாக பார்த்த பார்வையில் சாரதிக்கு விளங்கியிருக்கும் மச்சான் வெளிநாடு என்று.வெளிநாடு என சொல்லாமைக்கு முக்கிய காரணம் சுயபாதுகாப்புத்தான். "இதில திருப்புங்கோ வலக்கை பக்கம் வாற நாலாவது வீட்டடியில் நிற்பாட்டுங்கோ"பேசியபடியே நானூறு ரூபாவை கொடுத்துவிட்டு ஒட்டோ போனபின்பு இடக்கை பக்கம் இரண்டாவதாக இருக்கிற எனது பெரியம்மா வீட்டை சென்றேன்.இதுவும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான். இவர் பெரிய தேசியவீரன் இவருக்கு சுயபாதுகாப்பு என்ன கோதாரிக்கு என நீங்கள் எண்ணக்கூடும்,ஆனால் ஒரு பிரபல எழுத்தாளரை கண்டவுடன் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு மாலை மரியாதை செய்துவிடுவார்களோ என்ற பயம் தான்.
கிணற்றில் குளிக்கலாம் என்று போனால் அங்கு கப்பியும் இல்லை துலாவும் இல்லை..."தம்பி இங்க வந்து பாத்ரூம்மில் குளி" .
குளித்து விட்டு பெரியம்மா தந்த சுடான தேனீரை பருகிவிட்டு .மருதடியானை தரிசிக்கலாம் என வெளிக்கிட்டேன். பெரியம்மாவுக்கு தெரிந்த ஒட்டோசாரதியை ஒழுங்கு படித்தித் தந்தார்.அவர் தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து 20 வருடமாக மானிப்பாயில் வாழ்பவர்.என்னுடைய வயதுதான் இருக்கும் இருந்தும் என்னை தம்பி என்று அழைத்தார் .அவரைவிட இளமையாக அவருக்கு தெரிந்திருக்கிறேன் எல்லா புகழும் அவுஸ்ரேலியாவுக்கே.. "தம்பி மருதடிக்கோ விட,நீங்கள் அந்த அம்மாவுக்கு என்ன முறை?"
" ஒம் மருதடிக்கு விடுங்கோ அவவின்ட தங்கைச்சியின் மகன்"
அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே , பள்ளிபருவத்தில் உலா வந்த வீதியையும் அறிந்தவர்கள் வீடுகளையும் பார்த்த படியே சென்றேன்.வீதியில் அறிந்தவர் எவரும் கண்னில் படவில்லை.
வயலும் வயல் சார்ந்த இடத்தில் நம்மட மருதடியான் வீற்றிருந்தான்.முன்பு பழைய கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிவீசிகொண்டிருந்தவனை புதுதாக கோயில் கட்டுவதாக வெளிக்கிட்டு எழு வருடமாக கொட்டிலில் வைத்திருக்கிறார்கள்.
அவனையும் வீழ்ந்துவணங்கி ,யாராவது தெரிந்தவர்கள் வருவார்கள் ஊர் விடுப்பு அறியலாம் என சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். வயயோதிபர் ஒருவர் அருகில் வந்து
"தம்பி ஊருக்கு புதுசோ என்றார்."
"இல்லை நான் இந்த ஊர்தான்"
"நான் முப்பதுவருசமா இந்த கோயிலுக்கு வந்து போறன் உம்மை கண்டமாதிரி தெரியவில்லை,நீர் ஆர்ட மோன்,உம்மன்ட வீடு எங்கயிருக்கு "
"அண்ணே நீங்கள் முப்பது வருசமா வந்து போறீயள் நான் பிறந்ததில் இருந்து வந்து போறன்.உந்த மருதடியானிட்ட கேளுங்கோ சொல்லுவான்"என்று சொல்லிவிட்டு ஒட்டோவில் வந்து ஏறி சுதுமலை அம்மன் கோவிலுக்கு போக சொல்லிவிட்டு மீண்டும் வீதியை நோட்டம் விட்டேன் அறிந்தவர் எவரும் கண்ணில் படவில்லை. ஒட்டோவுக்குரிய பணத்தை கொடுத்து விட்டு ஆலயத்தினுள் சென்றேன் சுதுமலை அம்மன் கோவிலிலும் புனர்நிர்மாண வேலைகள் நடை பெறுவதால் மூலஸ்தானத்தில் இருந்த அம்மனும் அவரது குடுமபத்தினரும் வெளியே குடிபெயர்ந்து இருந்தனர்.ஒரு விதத்தில் எனக்கும் நன்மையைக இருந்தது.தூரத்தில் இருந்து மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனின் உருவம் இலகுவில் தெரியாது ஆனால் புதிதாக குடிபெயர்ந்த இடத்தில் அம்மனின் உருவம் நன்றாகவே தெரித்தது.வணங்கிவிட்டு தெரிந்தவர்கள் யாராவது கண்னில் படுகிறார்களா என நோட்டம் விட்டேன்.நான் அறிந்தவர் எவரும் இல்லை.என்னை அறிந்தவர்கள் யாரும் இல்லை.கோவிலின் வெளியே வந்து அமர்ந்திருந்தேன்.பூஜை முடிந்து வீடு செல்ல வந்த ஐயர்
"தம்பி ஊருக்கு புதுசோ, இந்த பக்கம் நான் உங்களை காணவில்லை" என கேட்டார்.
"இல்லை ஐயா நான் இந்த ஊர்தான்"
"அப்ப உங்கன்ட வீடு எங்க இருக்கு"
25 வருடங்களுக்கு முதல் எங்களுக்கு சொந்தமாய் இருந்த நான் ஒடி விளையாடிய,பாடசாலையில் உயர்கல்வி படிக்கும் பொழுது சைக்கிளில் மதிலில் சாய்த்துவிட்டு பெடியங்களுடன் அரட்டை அடித்த வீட்டை சொன்னேன்.உடனே அவர் தற்பொழுதைய சொந்தகாரனின் பெயரை சொல்லி அவரின் தம்பியோ என கேட்டார் .
"இல்லை ஐயா இப்ப அவர்தான் வாங்கி இருக்கிறார் நாங்கள் வீட்டை வித்து 20 வருசத்திற்கு மேலாய் ஆகிவிட்டது"
"அது தானே பார்த்தேன் 20 வருசத்திற்க்கு மேலாக இந்த கோவிலில் பூஜை செய்கிறேன் எனக்கு தெரியாத ஆட்களா இந்த ஊரில்”
ஐயரின் பூர்வீகத்தை அறிவோம் எண்டுபோட்டு முந்தி இந்த கோவிலில் பூஜை செய்த குருக்களின் சொந்தமோ நீங்கள் என்று கேட்டேன்.
"அவரை உங்களுக்கு தெரியுமோ,அவர் என்ட மாமா "
"உங்களுக்கு அவரை எப்படி தெரியும்"
"எங்கன்ட திருவிழாவில் அவரிட்டதான் காளாஞ்சி வாங்கிறனான்"
"எந்த திருவிழா உங்கன்ட"
"ஒன்பதாம் திருவிழா "
"அட நீங்கள் ஒன்பதாம் திருவிழா உபயகாரரின்ட ஆட்களே,முதலே சொல்லியிருக்கலாம் "சரி நான் வீட்டை போயிற்று வாறன் பிறகு சந்திப்போம்.
நடந்து வீடு செல்லும் பொழுதும் யாராவது என்னை அடையாளம் கண்டு கதைப்பார்களா என்ற ஏக்கத்துடனே வீடு சென்றடைந்தேன்.
அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவில் மணியோசை கேட்டு விழித்தேன்.தொடர்ந்து 'விநாயகனே விணை தீர்ப்பவனே' என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்கதொடங்கியது.குளித்து மீண்டும் கோவிலுக்கு சென்றேன்.

சுதுமலை அம்மன் கோவிலின் வளவில் சிவனுக்கும்,முருகனுக்கும் வைரவருக்கும் தனி கோவில்கள் உண்டு.சிவன் கோவில் திருவிழாவிற்கே நான் ஊருக்கு சென்றேன்.அந்த திருவிழா எனது மாமா உயிருடன் இருக்கும் பொழுது செய்து வந்தார் .அவர் கொழும்பில் இருந்தபடியால் திருவிழாவுக்குரிய பணத்தை அனுப்புவார் நான் தான் தெற்பை போடுவதுவழமை.பிற்காலங்களில் நான் புலத்தில் இருந்து பணம் அனுப்புவேன் பெரியம்மா செய்து கொண்டிருந்தார்.
25 வருடங்களின் பின்பு மீண்டும் என் பணத்தில் தெற்பை போட்டு வழிபடும் சந்தர்ப்பம் முதல்தரம் கிடைத்தது.அன்று ஒருத்தரும் என்னிடம் நீங்கள் யார்? ஊருக்கு புதுசோ என்ற கேள்வியை கேட்கவில்லை?மூலஸ்தானத்தை பார்த்தேன் சிவலிங்கம் என்னை பார்த்து "டேய் நீயும் ஊரவன் தான்டா"என்ற மாதிரி இருந்தது.
என் ஊர்கோவில் என்னை அடையாளப்படுத்த உதவிற்று..எல்லா புகழும் கோவிலுக்கே....இதற்குதான் அந்த காலத்தில் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்களோ என எண்ண தோன்றுகிறது.


ஒரு இனத்தை அழிக்க பல வகையிலும் முயற்சி செய்தும் அவர்களின் ஆத்மீக பலம் அந்த மக்களை மீட்டுள்ளது என்பதை நேரில் கண்டேன்.எந்த இசங்களும் ,ஆயுதங்களும்,தனிமனித சித்தாத்தங்களும் செய்ய முடியாததை கோவில் செய்துள்ளது.

ஒம்நமசிவாய....
புத்தனுக்கு கிறுக்கு பிடிச்சிட்டு நினைக்க வேண்டாம்....