Thursday, November 22, 2012

"காய்....பேய்காய்"


சுரேஸ் கமல்காசனை போல் அழகு என்று சொல்லமுடியாது ஆனாலும் ரஜனியைவிட அழகானாவன்.ஒரு பக்கவாட்டில் பார்த்தால் ரஜனியின் சாயல் தெரியும் இதனால் நாங்களும் இதை சொல்லி அவனை உசுப்பேத்தி விடுவம்.அவனுக்கும் மனதில் ரஜனி என்ற நினைப்பு இருந்தது.யாழ்பல்கலைக்கழகத்தில் கணித துறையில் முதலாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்தான்.ஆங்கில பாடத்திற்க்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஆங்கில டியுசன் வாத்தியிடம் சென்று கொண்டிருந்தான் .உயர்தரம் எடுத்தவுடன் ஆங்கிலம் பேச,எழுத டியுசனுக்கு போறதுதான் அந்த காலத்து வழமை.நானும் அவனுடன் போய் வந்து கொண்டிருந்தேன் .அவன் பல்கலைகழகத்திற்க்கு அருகாண்மையில் அறையில் வாடகைக்கு தங்கியிருந்தான்.படிப்பதற்க்கு அதிக நேரத்தை செலவிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தான். படிப்பதுடன் வேறு சில விடயங்களுக்கும் அது  பின்பு உதவியது என்பது நான் அறிந்த உண்மை...

நான் ஆங்கில டியுசனுக்கு போகமுதல் அவனது அறைக்கு செல்வேன்.பின்பு இருவரும் ஒன்றாக டியுசன் வகுப்புக்கு செல்வோம்.ஆங்கில வகுப்புக்கு போகும் பொழுது கொஞ்சம் அதிகமாகவே இருவரும் அலங்காரத்துடன் செல்வோம்.சுரேஸ் ரஜனியின் ஸ்டைலில் தலைமயிரை குழப்பிவிட்டு பெல்போட்டம் காற்சட்டை ,மேற்சட்டையின் ஒரு பட்டனை கழற்றி விட்டிருப்பான்.கையில் 80 பக்க கொப்பியை சுருட்டி வைத்திருப்பான்.

ஆசிரியருக்கு எங்களின் படிப்பின் அக்கறையைவிட அவரின் பணத்தில் அக்கறை அதிகமாக இருந்தது .அதனால் எங்களது சேட்டைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.பெண்கள் இருக்கும் வாங்குக்கு அருகில் அதிகமாக நாங்கள் போய் இருப்போம்.சில பெண்கள் திரும்பிப் பார்ப்பார்கள் ,சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரியிருப்பார்கள்,சிலர் பார்க்கவே மாட்டார்கள்.புதிதாக அன்று ஒருத்தி வந்திருந்தால் பார்த்தவுடனே ஒரு இது (காதல் என நல்ல எழுத்தாளர்கள்,வர்ணிக்க கூட்டும் ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு இதுதான்)அவளும் எங்களுக்கு பக்கத்தில் இருந்த வாங்கில் வந்திருந்தாள்.

"மச்சான்  காய் என்னை பார்க்குதடா"

"எந்த காய்"

"புதுசா வந்த காய்"

"என்னை பார்க்குதோ? உன்னை பார்க்குதோ?"
"என்னைட்ட நீ இப்ப அடி வாங்கப்போறாய் காய் என்னைத்தான் பார்க்குதுடா காயை மடக்கலாம் போல கிடக்குது"

நான் பார்த்தேன் காய் உடனே கீழே குனிந்து கொண்டாள்.பார்த்துகொண்டே இருந்தேன் ,எங்களை பார்ப்பதும் உடனே குனிவதாகவும் இருந்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.காய் அவனை பார்த்து கொண்டேயிருந்தாள்.இந்த காய் அந்த காயை மடக்கப்போகுது என்று போட்டு நான் எனது படிப்பை கவனிக்க தொடங்கினேன்.படிப்பு எறுகிறமாதிரி தெரியவில்லை.கல்வி தோல்வியை தழுவ சபலம் வெற்றி பெற்றது.


இந்த காயை விழுத்தாமல் விடுவதில்லை என்றவன் அதற்கான முயற்ச்சியிலும் ஈடுபட தொடங்கினான். பார்ப்பதும் சைக்கிளில் பின்னால் செல்வதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது.
"என்னடா காயை மடக்கலாம் என்றாய் ,காய் மடங்கிறமாதிரி தெரியவில்லை "

" அடுத்த வகுப்பில் பார் "

அடுத்த வகுப்பில் மிகவும் தயக்கத்துடன் அவளது கொப்பியை கேட்டான்,இன்று வீட்டு வேலை இருக்கு அடுத்த முறை தருவதாக அவள் சொன்னாள். அந்த நாட்களில் ஒரு பெடியன் ஒரு பெட்டையுடன் வகுப்பில கதைத்தால் அது பெரிய விடயம் ,இவன் அந்த பெட்டையுடன்(காயுடன்) கதைத்தது தான் தாமதம்  சிலர் விசில் அடித்தார்கள் வேறு சிலர் கைதட்டினார்கள்.மச்சான் நீ காயை மடக்கிப்போட்டாயடா என எல்லோரும் சொல்ல அவனுக்கு வெட்கம் வரதொடங்கி விட்டது.
அடுத்த கிழமை வகுப்புக்கு வந்த பொழது ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவில்லை இருவரும் படிப்பில் கவனமாக இருந்தார்கள் . நான் மட்டும் அவர்களை கவனிப்பதில் கவனமாக இருந்தேன்.நான் பார்த்த காயை இந்த காய் மடக்கிபோட்டுதே என்ற அதங்கம்தான்.வகுப்பு முடிந்தவுடன் வாட போவோம் என்று அவனை அழைத்தேன்.வழமையாக வகுப்பு முடிந்தவுடன்  அவனது றூமூக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத்தான் வீட்டை போவேன்.

"மச்சான் நீ போடாப்பா நான் லெட்டா வாரன் ,அவள் சொன்னவள் பெடியங்களுக்கு முன்னாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எல்லோரும் போன பிறகு கொப்பியை வாங்கிகொண்டு வாரன்"

"இப்ப நீ காய் வெட்டுறாய்"

"கோபிக்காதயடா"

"சரி சரி வாழ்த்துக்கள்"
என கூறியபடி நேராக வீடு சென்றேன்.


இரண்டு நாட்கள் கழித்து வீட்டை வந்தான் .அப்ப நாங்கள் ரோட்டில் நின்றுதான் கதைப்போம் ,சகோதரிமார் இருப்பதால் வீட்டினுள்ளே  அனுமதி கிடையாது.
மச்சான் காய்யை  விழுத்திப்போட்டன். எல்லோரும் போனபிறகு எனிட்ட கொப்பியை தந்து என்னோட கதைச்சது.வீட்டை கொப்பியை கொண்டு போய் பாருங்கோ என்று சொல்லிச்சுது வீட்டை போய் பார்த்தால் என்னை பிடித்திருக்கா? என்று எழுதியிருக்கு மச்சான்.நான் அடுத்த வகுப்புக்கு இதுக்கு பதில் எழுத வேணும் என்றவன் என்னை கூட்டிகொண்டு டீ வாங்கித்தந்தான்.

பின்பு நான் அவனது றூமுக்கு அடிக்கடி போய் வருவேன்.
அவனது காதல் நன்றாகவே சென்று கொன்டிருந்தது. ஒரு நாள் சொன்னான்
"மச்சான் காய் கணக்கில வீக்காம் ,  டியுசன் சொல்லி தரச் சொல்லி கேட்குதடா"

"சொல்லிக் கொடன்"
"இங்கிலிஸ் டியுசன் முடிந்தவுடன் அப்படியே  இங்க கூட்டிக்கொண்டு வந்து டியுசன் எடுக்கப்போரன்"`
 ..........................
 {தொடர்ச்சி.......இத்துடன் இத் தொடர் முடிவடைகிறது}

ஆங்கில டியுசன் முடிய அநேகமாக நான் அவனது றூமூக்கு போவது வழக்கம் .அந்த காயை கொழுவியதின் பின்பு என்னை அவன் ஒதுக்குவது(காய் வெட்டுவது)நன்றாக புரிந்தது. இருந்தும் தொடர்ந்தும் அவனது அறைக்கு சென்று வந்தேன்.
"மச்சான் இன்றைக்கு காய் றூமூக்கு வாரது என்று சொன்னது, நீ டியுசன் முடிய வரவேண்டாம் டாப்பா"

"காய் என்று சொல்லாமல் பெயரை சொல்லலாம் தானே"
"கலியாணம் கட்டினால் கலா என்று அழைப்போம் இப்ப காய் தான்"
"சரி சரி எதோ நடத்து"

வகுப்பு முடிந்தவுடன் எனது வீட்டை போகமல் சற்று தொலைவில் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.உண்மையிலயே கலா இவனது அறைக்கு செல்கிறாள என்று.10 நிமிடங்களின் பின்பு கலா அவன் இருந்த வீட்டின் கேட் அருகே வந்து நின்று இரு புறமும் பார்த்து விட்டு உடனடியாக உள்ளே சென்று விட்டாள்.
இதற்குமேல் கலாவை அவன் மடக்கி போட்டான் என்பதற்கு எந்த சாட்சியும்
தேவையில்லை என்று எண்ணியபடியே வீடு சென்றேன்.

அடுத்த முறை வகுப்புக்கு போக முதல் அவனது றூமூக்கு போக நினைத்து போட்டு தவிர்த்து கொண்டேன்.வர வேண்டாம் என்று சொன்னவனின் இடத்து ஏன் போவான் என்ற கெளரவம் தடுத்தாலும் கணக்கு வகுப்பில் நடந்தை அறிய மனம் துடித்தது.
வகுப்புக்கு முதலே அவனது றூமூக்கு சென்றேன் .உற்சாகமாக வரவேற்றான்.

"எப்படியடாப்பா அன்றைய கணக்கு பாடம் போச்சு.."

"காய் துணிச்சது ஆங்கில டியுசன் முடிய சினேகிதி வீட்டை போறன் என்று பொய் சொல்லி போட்டு வந்திருக்கு ஒரு பெட்டை தனிய றூமுக்குள்ள இருந்தா படிப்பு எங்க வரப்போகுது.காதல்தான் வரும்"

அவள் வருவது தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் சொன்னான் மச்சான் காலை தட்டினேன் பேசாமல் இருந்தாள் .
"நீ சும்மா விடமாட்டியே"


"விசயத்தை முடிச்சிட்டேன்"

"டேய் டேய் பத்திக் கித்தி போகப் போகுது"

"அந்த விசயத்தில நான் உசார் மச்சான்"
"எதோ நடத்துராசா நடத்து உன் காட்டில மழை"

அவன் சொன்ன விடயத்தில் உண்மை இருக்ககூடும் காரணம் இந்த விடயத்தில் அவன் துணிந்து செயல் படக்கூடியவன்.ஏற்கனவே ஒரு பெண்னிடம் அடிவாங்கிய அனுபவமும் உண்டு.

"கலியாணம் கட்டுற யோசனை இருக்கோ அல்லது காய் வெட்டுற பிளானொ?"
"அதை அந்த நேரத்தில் பார்ப்போம்"
"என்னடா இப்படி சொல்லுறாய்"

கலா இந்தியாவுக்கு படிக்க போறாள் மச்சான் என்று ஒரு நாள் சொன்னான்.
இனி எல்லாம் கடிதப்போக்குவரத்துதான்.

இந்தியா போனவுடனே அவள் கடிதம் போட்டிருந்தாள்.இவன் பதில் போடவில்லை .அவள் பல கடிதங்கள் போட்டிருந்தாள் இவன் மறுமொழி போடவேயில்லை.

சில கடிதங்களை அவன் உடைத்தே பார்க்கவில்லை மேசையில் கவனிப்பாரற்று கிடந்தது.
"என்ன மச்சான் பதில் போடவில்லையோ"
"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க"......


முற்றும்..