அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும் அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார்.
சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டது.அவரின் விருப்பப்படி செய்து கொண்டிருந்தேன். மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்.
சைக்கிள் ஒடும் பருவம் வந்தவுடன் தனியாக கோவிலுக்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது .நான் நினைத்தபடி வலம் வரக்கூடியதாக இருந்தது .உள்வீதி ஒருதரம் வெளி வீதி ஒரு தரம் சுற்றுவேன் அம்மா கேட்டால் மூன்று தரம் இரண்டு வீதியையும் சுற்றினதாக பொய் சொல்வேன்..
மீசை அரும்பத் தொடங்க ஆசைகளும் வரத்தொடங்கின.சைக்கிளில் வீதி வலம் செல்லத்தொடங்கினேன். கோவிலுக்கு செல்வதாக சொல்லி போட்டு வேறு பல இடங்களுக்கு சென்று வந்தேன்.
பக்கத்துவீட்டு அன்ரியின் மகன் க.பொ.த உயர்தரத்தில் 2ஏ 2பி சித்தியடைந்து மருத்துவத்துறைக்கு தெரிவானார். அவர் ஒரு சைவப்பழம்.ஒவ்வோரு வெள்ளிக்கிழக்களில் கோவில் தரிசனம் முடிந்தவுடன் உள்வீதியையும் வெளி வீதியையும் மூன்று தரம் சுற்றி வருவார்.பரிட்சை காலங்களில் அதிக தடவை கோவிலுக்கு சென்றார்.
அவரின் அம்மாவும் ஒரு சைவப்பழம்தான் இருந்தும் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு அதிகம் செல்வார். ஒன்பது செவ்வாய்கிழமை தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் நடக்கும் என யாரோ அவருக்கு சொல்லியிருக்கினம்,மகனுக்கு பரீட்சை முடிந்தவுடன் அவர் ஒன்பது தடவை சென்றுவந்தார் .அவாவின் விருப்பப்படியே மகனுக்கு மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது.அந்த பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முதலே தெரியும் அவாவின் மகனுக்கு நிச்சம் மருத்துவதுறையில் அனுமதி கிடைக்கும் என்று எனேனில் அவர் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன்.
இரண்டு வருடங்களின் பின்பு நான் முதல்தடவை பரீட்சை எடுக்கும் பொழுது"தம்பி கோவிலுக்கு போய் தேங்காய் உடைத்துவிட்டு மூன்று தரம் உள்வீதி வெளிவீதி சுற்றி ,நல்லாய் கும்பிட்டு போட்டு வா" என அம்மா சொல்ல அதையும் செய்தேன்.ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து வருவேன் எனக்கு தெரிந்த கேள்விகளை வினாத்தாளில் தந்திடு என ஆண்டவனிட ம் மன்றாடிவிட்டு வந்தேன்.
பரீட்சையில் எனக்கு தெரிந்த கேள்விகள் வரவில்லை .வீட்டை வந்தவுடன் அம்மா "தம்பி சோதனை எப்படி ?நல்லாய் செய்தனியோ?மெடிசின் கிடைக்குமோ?"
"ஒம் நான் நல்லாய் செய்தனான் ரிசல்ட் வந்தவுடன் பார்போம்"என பதிலளித்துவிட்டு பெடியங்களுடன் ஊர் சுற்ற தொடங்கினேன்.
ரிசல்ட் வரும் வரை ஒரே கும்மாளம்தான்.கோயில் திருவிழாக்கள் என்றால் நாங்கள் எல்லோரும் அங்குதான் முழு நேரமும் நிற்போம். டியுசனில் படித்த பெண்கள் வருவார்கள்,அவர்களுடன் கதைக்க வேணும் போல இருக்கும் ஆனால் பயம் ,பார்த்து சிரிப்போம் என பார்த்து சிரித்தாலும் அவையள் ஒரு முறைப்பு முறைப்பினம் கற்புக்கரசிகள் பரம்பரைகள் என்ற நினைப்பில்,இருந்தாலும் சுதா ஒரு நாள் என்னை பார்த்து சிரித்தாள் .அவள் என்ன அர்த்தத்தில் சிரித்தாளோ தெரியவில்லை இன்றுவரை ,நான் நினைத்தேன் "அதுதான்"(காதல்) என்று. மச்சான் அந்த காய் சுதா என்னை பார்த்து சிரிச்சவடா என்றேன் உடனே பெடியன்கள் "காய் உன்னை லவ் பண்ணுகிறா விளையாட்டை காட்டு " என உசுப்பேத்தினார்கள்(உற்சாகப்படுத்தினார்கள்...கி...கி) அதன் பின்பு பெடியங்களும் சுதா என்று சொல்லி என்னை பகிடி பண்ணுவார்கள் எனக்கும் உள்மனதில் ஒரு கிளுகிளுப்பாய்யிருக்கும்.
"தம்பி தேவி அக்காவுக்கு கலியாணம் சரி வந்திட்டாம்,அவவுக்கு செவ்வாய் குற்றம் இருந்தது தொடர்ந்து ஒன்பது கிழமை எங்கன்ட அந்தோனியார் கோவிலுக்கு போய் வந்தவ சரியா ஒன்பதாவது கிழமை மாப்பிள்ளை வீட்டார் கலியாணத்திற்கு சம்மதம் தெரிவிச்சு இருக்கினம்"மானிப்பாய் அந்தோனியார் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அம்மா சர்டிபிகேட் கொடுத்தார்.அந்தோனியாருக்கும் செவ்வாய்கிழமைக்கும் என்ன தொடர்பு என்று இன்று வரை எனக்கு விளங்கவில்லை இனியும் விளங்கப்போவதில்லை.
"அவன் நல்லாதான் படிச்சவன் ஆனால் பாஸ் பண்ண முடியாமல் போய்விட்டது அவனுக்கு அட்டமத்தில் சனியன் அதுதான் அவனை பாஸ் பண்ணவிடவில்லை,அடுத்த வருஷம் வேறு ஸ்தானத்திற்கு போறான் அப்ப அவன் பாஸ் பண்ணிபோடுவான்" என அம்மா அப்பருக்கு சொன்னது எனக்கு மனதில் ஒரு துணிவை தந்தது.
தெல்லிப்பளை அம்மன் கோவிலுக்கும் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்கிழமை சென்று வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என இன்னுமொரு கருத்து பரவதொடங்கியிருந்தது.அதையும் செய்யத்தொடங்கினேன்.படிப்பதில் கவனத்தை செலுத்துவதை விடுத்து 3 தரம் சுற்றுதல்,ஒன்பது தரம் போய்வருதல் என்ற கருத்தாதிக்கத்து க்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன்...
கிறிஸ்தவ ,சைவ மக்களின் கருத்தாதிக்க மையங்களின் கருத்துக்களுகு ஏற்ப நடக்கத் தொடன்கினேன்.அந்த காலகட்டத்தில் இந்திய கல்லூரிகளுக்கு பணத்தை கட்டினால் அனுமதி கிடைக்கும் என்ற நிலமை ,அநேகர் சென்று படிக்கத் தொடங்கினார்கள்,நானும் சென்றேன்.இந்தியாவுக்கு போகவேணும் என்றுதான் துர்க்கை அம்மனுக்கு போய்வந்தனான் என்றேன் உடனே நண்பர்களும் நம்பினார்கள் சிலர் போகத் தொடங்கினார்கள்.
புலம் பெயர்ந்தவுடன் இப்படியான சுற்றல்கள்,ஒன்பது தடவை போய்வருதல் என்பன இருக்காது என எண்ணினேன் ஆனால் இங்கும் அது இருந்தது.எல்லோரும் செய்யும் பொழுது நான் ஏன் விடுவான் என்று போட்டு நானும் செய்யத்தொடங்கினேன்.
"பிரஜாவுரிமை கிடைக்க வேணும் என்றால் ஓவ்வொரு நாளும்108 தரம் ராமஜெயம் எழுதும் உடனே கிடைத்துவிடும்" என்றார் ஒருவர்.தமிழன் என்றால் கேஸ் போட்ட எல்லோருக்கும் பிரஜாவுரிமை கிடைக்கும்
என்பது எழுதாத சட்டமாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
இன்னோருத்தர் சொன்னார் மல்கோவா சர்ச்சுக்கு போனால் வேளை கிடைக்கும் என அதையும் செய்தேன் .
புலத்தில் ஒரளவுநடுத்தர வர்க்கத்தின் ஆசையை பூர்த்தி யாக்ககூடிய அரச கட்டமைப்புக்கள் இருந்தாலும் எல்லாவற்றிலும் அதியுச்ச வசதிகள்(Top of the range)பெற வேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்கிறேன்...
பிரபல இலக்கிய முதிர்ச்சி பெற்ற எழுத்தாளராக வரவேண்டும் என்ற ஆசையை நிவர்த்தி செய்ய எங்க என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்கிறேன்.....
(யாவும் சுத்தகற்பனை ...ஒருத்தரையும் கிண்டல் பண்ணவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்)
மிக அழகாக சொல்லிச் சென்றிருக்கிறீர்கள் புத்தன்.
ReplyDeleteஉண்மையாக.
எப்படி ஒரு மனதில் நம்பிக்கைகள் ஊன்றப்படுகின்றன; அது எப்படி அம்மனதில் வேரூன்றிப் போய் விடுகிறது என்ற கருவை வெகு நுட்பமாகப் படம் பிடித்துத் தந்திருக்கிறீர்கள்.
அதை சொன்னதில் ஒரு நேர்மையும் இருப்பது இன்னும் சிறப்பாக இருக்கிறது.
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது புத்தன்.