Friday, March 18, 2011

மீகமுவ தெமுழு & ஒசி டமிழ் குட்டிக் கிறுக்கல்

அது ஒரு மீன் பிடிக்கிராமம் எனைய எழுத்தாளர்கள் போல அழகிய மீன்பிடிகிராமம் என்று புகழமாட்டேன்,மீன் மணமும்,காகங்கள் மீன்களின் குடல்களை கொத்தி திண்றுகொண்டிருக்கும்,படகுகள் ,இயந்திர படகுகள் நிறைந்த அந்த கிராமம் .அதில் நானும் வாழ வேண்டிய சூழ்நிலை ,காரணம் அந்த மீன்பிடி வாசிகள் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு தங்களது கல்லால் கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள்,எனது உறவுகாரர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்.அவர் கொழும்பில் பணிபுரிந்தாலும் அங்கு வீட்டு வாடகை அதிகம் என்ற படியால் நீர்கொழும்பை தெரிவு செய்தார் ,மற்றும் அங்கு தமிழ் பேசக்கூடியவர்கள் வாழ்ந்தமை .அந்த கிராமத்தில் பெற்றோர்கள் தமிழில் பேசுவார்கள் ஆனால் பிள்ளைகள் சிங்களத்தில் பேசுவார்கள் ,சிங்கள பாடசாலையில் கல்வி கற்பார்கள்.யாழ்ப்பாணத்தில் பிரச்சனை வெளிநாட்டுக்கு போய் எதாவது தொழில் செய் என்று உறவுகாரர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.சிங்களம் பேசத்தெரியாது ,ஆங்கிலமும் மட்டுமட்டு.ஒருமாதிரியாக கொழும்பு வந்து சேர்ந்தேன்.உறவுகாரருக்கு தமிழ் ,சிங்களம், ஆங்கிலம் நன்றாகவே தெரியும் .அவர் அந்த கிராமத்தில் அந்தோணி என்பவரை, எனது வயதை விட இரண்டு வயது அதிகம் இருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.அவனுக்கு தமிழ் தெரியும் 5ஆம் வகுப்பு தமிழில் படித்தவன் பிறகு தந்தையுடன் தொழிலுக்கு புறப்பட்டுவிட்டானாம்.ஆனால் அவனது இரண்டு இளைய சகோதரங்களும் சிங்கள மீடியத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தனர்.அந்தோணிக்கு சிங்களமும் தமிழும் நன்றாக பேசத்தெரியும்,பெற்றோருடன் தமிழிலும் சகோதரங்களுடன் சிங்களத்திலும் பேசுவான்.நாட்கள் செல்ல நானும் அந்தோணியும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.என்னை கடைகளுக்கு, கடற்கரை என்று கூட்டிச்செல்வான்.நானும் அவனுடன் செல்வது என்றால் பயமில்லாமல் செல்வேன்.என்னை விட உயர்ந்தவன் அகலமானமார்புடைய தேகம் பார்ப்பதற்க்கு ஒரு சண்டியன் போல தோற்றமளிக்கும்.தமிழ் படம் தான் அதிகம் பார்ப்பான் நானும் அவனும் சேர்ந்து பல தமிழ் படங்கள் பார்த்தோம்.சில படங்களை வாடகைக்கு எடுத்து வந்து வீட்டில் போட்டு பார்ப்போம்.அப்பொழுது அயலில் உள்ள வயோதிபர்கள் எல்லோரும் வந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள்.ஆனால் அவனது சகோதரர்களோ,எனைய இளையவர்களோ வரமாட்டார்கள்.சிங்கள படம் பார்ப்பதற்க்கு மட்டும் வருவார்கள்.அந்தோணிக்கு காதலியுமிருந்தால் அவள் சிங்களத்தில் படித்த படியால் அவனுடன் சிங்களத்தில்தான் உரையாடுவாள்.அவளின் பெற்றோர்கள் தமிழில்தான் பேசுவார்கள் ஆனபடியால் அவளுக்கு தமிழ் நன்றாக விளங்கும் பேசுவதற்கு கூச்சப்படுவாள்.அந்தோணியின் பெற்றோர்கள் அவனது காதலிக்கே அவனை கலியாணம் செய்து வைத்தனர்.கலியாணத்திற்க்கு நானும் சென்றிருந்தேன்.கலியாண வைபவம் கிறைஸ்தவமுறைப்படி நடந்தது.கிரிஸ்தவ பாதிரியார் சிங்களத்தில் சமய சடங்குகளை செய்தார்.வயது போனவர்கள் தமிழிலும் ,இளையவர்கள் சிங்களத்திலும் உரையாடி தங்களது கடமைகளை செய்து கொண்டிருந்தனர் .தமிழில் பேசிய பெரியவரிடம் போய் நீங்கள் தமிழில் உரையாடுகிறீர்கள் ஆனால் திருப்பலி பூஜை சிங்களத்தில் நடக்கிறதே என்று கேட்க,இப்ப எங்களுடைய பிள்ளைகள் எல்லாம் சிங்கள பாடசாலைக்குத்தான் போகிறார்கள்,அவர்கள் எங்களுடைய மதத்தை பின்பற்ற வேண்டும் என்றால் சிங்களத்தில் தான் பூஜை செய்ய வேண்டும் தம்பி அத்துடன் அவன்கள் சிங்களத்தில் படிச்சால்தான் இந்த நாட்டில முன்னுக்கு வரலாம் சமயத்தையும்நல்லாய் புரியமுடியும்..இல்லாவிடில் எங்களை மாதிரி கடல் தொழில் தான் செய்ய ஏலும்.கடல் தொழில் செய்யும் பொழுதும் கூட சிங்களம் தெரிந்தால்தான் பிழைப்பு நடத்த முடியும் .என்னுடய கலியாணமும் இந்த சர்ச்சில்தான் நடந்தது.அப்ப யாழ்ப்பாணத்தில் இருந்த சுவாமிதான் இங்க பூஜை செய்தவர் அவர் தமிழில்தான் செய்தவர் என்று தனது அந்த நாள் ஞாபகத்தை நினவுபடுத்தினார்.கலியாணம் முடிவடைந்து ஒரு கிழமையின் பின்பு அவனும் நானும் மீண்டும் வெளியே செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டது அவனிடம் கேட்டேன் நீங்கள் தமிழா? ,சிங்களமா? .என்று. நாங்கள் தெமிழ என்று சிங்களவர்கள் சொல்லுறாங்கள்,தமிழர்கள் சொல்லினம் நாங்கள் சிங்களம் என்று . எனக்கு உது பெரிய பிரசனை மாதி தெரியல்ல கடலில மீன் அம்பிட்டால் சரி என்று சொல்லி சிரித்தான்.தனது சிங்கள நண்பனின் தென்னந்தோட்டத்தில் தென்னன்கள் குடிக்கலாம் வா என்று அழைத்து சென்றான்.அது இவர்களின் பக்கத்து கிராமம்.அவனுடைய மோட்டார் சைக்கிளில் சென்றோம்.கிறிஸ்தவ தேவாலயங்களும்,யேசுவின் சிலைகளும் நிறைந்த ஒரு பகுதியில் இருந்து பெளத்த விகாரைகளும்,புத்தரின் சிலைகளும் நிறைந்த அந்த கிராமத்திற்க்கு சென்றேன்.கிராமத்தின் எல்லையில் நண்பனின் தோட்டம்.பெரிய தென்னந்தோட்டம் அதன் நடுவில் அவனது நண்பனின் வீடு. என்னை நண்பனுக்கு அறிமுகம் செய்து வைத்தான் .அவன் சிரித்து விட்டு என்னுடன் சிங்களத்தில் எதோ கேட்டான் நான் முழித்தேன்.மீனவநண்பன் எனக்கு சிங்களம் தெரியாது என்று அவனிடம் சொன்னதும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டனர்.எனக்கு கருவாட்டு பொறியலும் தென்னங்கள்ளும் தந்தார்கள் கொஞ்சம் அதிகமாகவே குடித்தேன்.அதன்காரணமாக சில சிங்கள சொற்கள் வரத்தொடங்கின."அப்பே ஒக்கம எக்காய்" என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டேன்.வரும் வழியில் மீனவநண்பன் சொன்னான் நானும் நீயும் தமிழனாம் என்று சிங்களநண்பன் சொல்லுவதாக,உனக்கு தமிழ்வடிவாக தெரியாது பிறகு நீ எப்படி தமிழனாக முடியும்?நீங்கள் தமிழராக இருந்து சிங்களவராக மாறியவர்கள்,உங்களுக்கு ரோசம் ,மானம் ஒன்றுமில்லை,வீரனாக தமிழை பேசி தமிழில் படிச்சு முன்னுக்கு வர வேணும் அதைவிட்டு போட்டு சிங்களவனாக மாறிப்போட்டு தமிழன் என்று சொல்ல ஏலாது என வெறி இருந்த துணிவில் சொல்லிப்போட்டேன்.மீவ நண்பன் அதை பெரிசாக கண்டுகொள்ளவில்லை.வீடு வந்த பின்புதான் நான் பேசினது தப்பு என புரிந்தது.இருந்தாலும் மீனவநண்பன் அதை பெரிதாக எடுக்கவில்லை என அவன் நடந்து கொணட விதத்தில் புரிந்து கொண்டேன். அவன் தனது இருப்புக்காக கடலுக்கு செல்ல தேவையான பொருகளை தயார் செய்யதொடங்கினான்.நானும் எனது இருப்புக்காக வெளிநாடு செல்ல தேவையான ஆயத்தங்களை செய்யத் தொடங்கினேன்.சில மாதங்களின் பின்பு வெளிநாடு செல்ல வாய்ப்பும்கிடைத்தது.அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டேன்.அதன் பின்பு மீனவநண்பனுடன் எந்த தொடர்பும் வைக்கவில்லை.23 வருடங்கலின் பின்பு பணம் இருப்பதால் சிறிலங்காவுக்கு சுற்றுலா போகலாம் என்று வெளிக்கிட்டேன்.யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு,நுவரெலியா,சென்றேன் .திரும்பி வரும் வழியில்" மீகமூவக்கு"(நீர்கொழும்பு)சென்றேன்.ஒருகாலத்தில் தூர நின்று பார்த்து ஏங்கிய 4 நட்சத்திர கோட்டலில் புக் பண்ணினேன்.முன்பு இந்த கோட்டலின் முன்பாக கடற்கரை ஒரமாக வெள்ளைகள் சூரிய குளியல் குளிப்பதை பார்த்து ரசித்த காட்சிகள் கண்முன் வந்து போயின.அடுத்த நாள் காலைநான் இருந்த அந்த கிராமத்திற்க்கு குடும்பம் சகிதமாக சென்றோம்.குடிசைகளாக இருந்த வீடுகள் எல்லாம் கல் வீடாக மாறியிருந்தன.நான் வாடகைக்கு இருந்த வீட்டை ஒரு மாதிரியாக கண்டுபிடித்து அழைப்பு மணியை அடித்தேன்.நவநாகரிக உடையில் ஒரு இளம்பெண் கதவை திறந்தாள். சிங்களத்தில் என்ன வேண்டும் என்று கேட்டாள்.நான் சிங்களதில் பதில் சொல்ல கஸ்டப்படுவதை புரிந்து கொண்டவள் ஆங்கிலத்தில் கேட்க தொடங்கினாள்.நானும் ஆங்கிலத்தில் அந்தோணியின் வீடு இதுதானே என்றேன்.அவள் ஒம் என்று பதில் அளிக்கும் பொழுதே அந்தோணியும், மனைவியும் உள் இருந்து வந்தார்கள்.என்னை தெரியுமோ என்று கேட்க இருவரும் முழிதுக்கொண்டிருந்தார்கள்.23 வருடங்களுக்கு முதல் இங்கு வாடகைக்கு இருந்த யாழ்ப்பணத்து தம்பி என்று சொன்னேன் உடனே உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.தனது பிள்ளைகளுக்கு சிங்களத்தில் எங்களை அறிமுகம் செய்து வைத்தான்.என்னுடனும் மனைவியுடனும் தமிழில் உரையாடினான்.சிங்கள பாரம்பரியத்துடன்,கிறிஸ்தவ மதக்கருத்துக்களால் பின்னப்பட்ட ஒரு மனிதனாக அவன் இருந்தான்.மகள் கோட்டலில் குமஸ்தாவாக பணிபுரிவதாகவும்.,மகன் பொலிஸ் சப் இன்பெக்டர் பயிற்சி முடித்து வந்துள்ளதாகவும் சொன்னான்.அன்று மதியசாப்பாடு தங்களுடன் சாப்பிட வேண்டும் என்று அடம்பிடித்து சகல கடல் உயிரினங்களையும் வைத்து ஒரு பெரிய விருந்தே தயார் செய்தார்கள்.மகனை அனுப்பி தென்னங்கள் வர வழைத்தான்.இருவரும் இறால் பொறியலுடன் தென்னங்கள் அடித்து மகிழ்ந்தோம்.எனது பிள்ளைகளும் அவனது பிள்ளைகளும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.பிள்ளைகளுக்கு தமிழ் தெரியுமோ என்றான்,விளங்கும் பேசமாட்டார்கள் என்றேன்.அவுஸ்ரேலியாவில தமிழில் படித்து என்ன பிரயோசனம்,எல்லா மனிதனும் நல்லாய் வாழ்ந்தால் சரிதான் .என அவன் கூறியது எனது கண்ணத்தில் அறைந்தமாதிரி இருந்தது.வாங்கோ சாப்பிடுவோம் என்று அடையாளத்தை இழந்த மீகமுவ தெமிழு , அடையாளத்தை இழந்து கொண்டிருக்கும் ஒசித்டமிழை அழைத்தான்(நீர்கொழும்பு தமிழன் நிலைதான் இன்னும் 30 வருடகாலத்தின் பின்பு புலம்பெயர் தமிழருக்கும்)

No comments:

Post a Comment