Sunday, June 7, 2015

அதே சிரிப்பு அதே

ஊரில அந்தகாலத்தில பெண்கள் வயதுக்கு வந்த பின்போ அல்லது பருவமடையப்போகிறாள் என்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் தனியாக வெளியே செல்வதற்கு அநேகமான வீடுகளில் தடை போடுவார்கள்.அப்பா, அண்ணா ,தம்பி போன்றோரின் துணையுடன் தான் செல்வார்கள்.பக்கத்துவீட்டு அக்காமாருக்கு சில தம்பிமாரை துணைக்கு அனுப்புவினம், ஆனால் தங்கச்சிமாருக்கு பக்கத்துவீட்டு அண்ணமாரை அனுப்பமாட்டினம் அந்த விசயத்திலமட்டும் சனம் தெளிவாக இருக்கும்.சுரேசும் உப்படி இரண்டு மூன்று அக்காமாருக்கு போடிகார்ட் வேலை பார்த்திருக்கிறான்.பக்கத்துவீட்டில நாலு பொம்பிளை பிள்ளைகள் மூத்தவர் உயர்தரம் படிக்கும் பொழுது சுரேஸ் ஏழாம் வகுப்பு படிக்கிறான் .இரண்டாவது அக்கா பத்தாம் வகுப்பு .அடுத்த இரண்டு பெண்களும் ஐந்தாம் ,மூன்றாம்.வகுப்பு படித்துகொண்டிருந்தார்கள். பக்கத்துவீட்டு குடும்பத்தலைவர் வெளி மாகாணத்தில் பணிபுரிந்தபடியால் ,அக்காமார் தூர இடங்களுக்கு செல்வதென்றால் சுரேசை துணைக்கு அழைத்து செல்வார்கள்.
சுரேஸ் அந்த வீட்டுக்கார அம்மாவை பக்கத்து வீட்டு அண்ரி என்றுதான் அழைப்பான்.காரணம் அவனுக்கு கன அண்ரிமாரை தெரியும் பக்கத்துவீட்டு அண்ரி,முன்வீட்டு அண்ரி பின் வீட்டு அண்ரி இப்படி பல அண்ரிமார் உண்டு. மற்ற அண்ரிமாருக்கு ஆண்பிள்ளைகள் இருந்தபடியால் பக்கத்து வீட்டு அண்ரியுடன் கொஞ்சம் பாசம் அதிகமாகவே இருந்தது.
பனை ஒலை வேலிதான் இரண்டு வீட்டுக்கும் தடுப்புச்சுவர்.இரண்டு வருசத்திற்கு ஒருக்கா தான் அது அடைபடும் .வேலியடைச்ச ஒரு மாசத்தின் பின் இரண்டு மூன்று பனை மட்டையை விலத்தி ஒரு சிறிய பொட்டை இரண்டு வீட்டாரும் உருவாக்கிவிடுவார்கள்.அந்த பொட்டுக்குள்ளால் தான் இருவீட்டாரும் பண்டமாற்று செய்வார்கள்.சீனி,மிளகாய் தூள்,அரிசி போன்றவை பரிமாறப்படும்.காலப்போக்கில ஊர் நாய்கள் எல்லாம் அந்த பொட்டுக்குள்ளால் புகுந்து போய் பொட்டை பெரிதாக்கிவிடும்.அதுமட்டுமல்ல நாய்கள் போய் வந்தபடியால் பனைமட்டையில் இருக்கும் முள்ளுகளும் தேய்ந்துபோய்விடும் இதனால் சுரேஸ்க்கு உடலில் கிறுக்கல் விளாமல் பக்கத்துவீட்டை போய்வரக்குடியதாக இருந்தது.
இரண்டு வீட்டு அம்மாக்களும் ஊர்விடுப்பு கதைக்கும் டெஸ்க்டொப் அந்த பொட்டுதான்,முகம் தெரியாமல் கதை த்துக்கொண்டிருப்பினம் ,ஆறுமாதம் போனபிறகு கறையான் ஒலையை சாப்பிட தொடங்க அதில ஒரு சிறிய விரிசல் பிறகு கறையானை தட்டிவிடுகிற சாட்டில அந்த இடத்தில் முகம் பார்த்து கதைக்க கூடிய ஒரு வின்டோ திறக்கப்பட்டுவிடும்.
குமுதினி அக்காவை நண்பிகளின் வீட்டுக்கு அழைத்து செல்வதற்க்குகூறிய அழைப்பு சுரேஸ்க்கு இந்த வின்டோவால் தான் வரும் .வின்டோவால் அழைப்பு வர பொட்டுக்குள்ளால் புகுந்து சுரேஸ் பக்கத்து வீட்டு அக்காவுக்கு மெய்பாதுகாவலன் வேலை செய்ய செல்வது வழமையாக இருந்தது.குமுதினி சாதாரண யாழ் அழகி.அதாவது வட இந்தியழகி அல்ல . இப்படித்தான் ஒரு நாள் இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு இளைஞன் இரண்டு தரம் அவர்களை கடந்து சென்றான்,மூன்றாம்தரம் செல்லும் பொழுது ஒரு கடிதத்தை கீழே போட்டுவிட்டு வெகு சீக்கிரமாக சைக்கிளை ஒட்டிச்சென்றான்.சுரேஸ் அதை குனிந்து எடுக்க செல்ல ,சுரேஸ் எடுக்காதையடா அதை, கேதியா என்னோட நடந்து வா ,ஊத்தைவாலி என்று திட்டியபடியே அவளும் ஓட்டமும் நடையுமாக சினேகிதி வீட்டை போய் சேர்ந்தார்கள்.இதை ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் என குமுதினி கேட்டபடியால் சுரேஸும் ஒருத்தரிடமும் சொல்லவில்லை.
குமுதினிக்கு பேரதேனியா பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி கிடைத்தது..குமுதினி முதல் முதலாக பேரதனியா செல்லப்போகின்றாள் தாயாருக்கு தனியாக அனுப்ப பயமாக இருந்தது. ஊரில தெரிந்தவர்கள் யாரவது அங்கு படிக்கிறார்களா என விசாரித்ததில் பக்கத்து ஊர் குகன் இன்ஞினியரிங் படிப்பதாக அறிந்து கொண்டார்கள் , பெடியனுடன் அனுப்ப அவர்களுக்கு விருப்பம் வரவில்லை .நண்பி ஒருத்தி மூலம் வேறு பாடசாலை மாணவியின் அறிமுகம் கிடைத்து இருவரும் ஒன்றாக ஒரே நாளில் பயணம்செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
அந்த ஊரில் கந்தையரின் கார் தான் புகையிரத நிலையம் ஆஸ்பத்திரி போன்ற தேவைகளுக்கு ஊர்மக்கள் பாவிப்பார்கள். வீட்டில் உள்ளோர் கண்ணீர் சிந்தியபடியே அவளை கந்தையரின் காரில் அனுப்பி வைத்தனர் .கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போற வழியில் அவளது புதிய பல்கலைகழக நண்பியையும் ஏற்றி சென்றார்கள் .கந்தையரின் சோமசெட் காரில் குறைந்தது எட்டு பேரை ஏற்றலாம் . முன்சீற்றில் சுரேஸ் அவனுக்கு பக்கத்தில் இடையில் ஏறிய அக்காவின் அப்பா இருப்பதற்காக 
"தம்பி டேய் ஒரு காலை தூக்கி இஞ்சால் போடு ஐயாவுக்கு இருக்க வசதியாக இருக்கும் "டிரைவர் சொன்னதிற்கு ஏற்ப ஒருகாலை சாரதியின் பக்கம் போட்டான்.இப்பொழுது அவனது இரண்டு காலுக்கும் நடுவில் கந்தையரின்ட காரின் கியர்,ஒவ்வொரு முறையும் அவர் கியர் போடும் பொழுதும் நெஞ்சுக்குள் ஒருவித பயம் வந்து போகும்.
பயணச்சீட்டை பெற்றுகொண்டார்கள் ,வாசலில் நின்ற டிக்கட் பரிசோதகர் மேடை சீட்டு வாங்காதவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என சொல்லவே மூன்று மேடைச்சீட்டை வாங்கி உள்ளே ஐந்து பேர் சென்றார்கள்.

புகையிரதம் வருவதற்கு சில வினாடிகளுக்குமுன் சைக்கிளில் ஒரு கூட்டம் பாட்டுக்கள் பாடியபடி புகையிரதநிலையைத்தை வந்தடைந்தார்கள்.இரு பயணச்சீட்டை மட்டும் பரிசோதகரிடம் காட்டிய படியே அந்த கூட்டம் உள்ளே சென்றது.

"சுரேஸ் அந்த ஊத்தவாலி சனியனும் இந்த ரெயினில வருகுது போல கிடக்குதடா"

"ஒமக்கா அவர் தான் "

"எனக்கு பயமாயிருக்கு"
உந்த பெடியள் செட்டுக்குள்ள கந்தையா வாத்தியின்ட இஞ்ஞினியர் பெடியன் குகன் நிற்கிறான் போலகிடக்கு சொல்லியபடி குமுதினியின் புது நண்பியின் அப்பா அந்த கூட்டத்தை நோக்கி சென்றார்.அதே நேரம் அட அங்க பாருடா சரக்குகள் கூட்டம் நிற்குது கிட்ட போய் நின்றால் அதுகள் ஏறும் கொம்பாட்மன்டில் நாங்களும் ஏறலாம் என்றபடி அந்த பெடியள் கூட்டம் இவர்களை நோக்கி வந்தது.

"தம்பி குகன் ,"
"ஹலோ அங்கிள் ,என்ன கொழும்புக்கோ"
"இல்லை, இல்லை என்ட மகளும் அவவின்ட சினேகிதபிள்ளையும் பெரதேனியா கம்பஸ்க்கு போயினம்,யாராவது தெரிந்த ஆட்கள் வருவினமோ என்று பார்த்துகொண்டிருந்தனான் கடவுளாக பார்த்து உம்மை காட்டி போட்டார், "
வாரும் வாரும் உம்மை அவையளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறன் ,ஒருக்கா வடிவாய் பார்த்து கொள்ளும்"

தனது மகளையும்,குமுதினியையும் அறிமுகம் செய்து வைத்தார்.குமுதினி சுரேசை பார்த்த பார்வை இந்த ஊத்தைவாலி இஞ்ஞினியராம் என்ற மாதிரி இருந்தது "அன்ன கோச்சி எனவா" என்றபடியே பித்தளை மணியை ரயில்வே சிப்பந்தி அடிக்க ,சகலரும் தங்களதுபொதிகளை தூக்கி கொண்டு முன்னுக்கு வந்து நின்றார்கள் .சிலர் முருங்கைக்காயை பழைய புதினப்பத்திரிகையால் சுற்றி சணல் கயிற்றால் கட்டியிருந்தனர் வேறு சிலர் பிலாப்பழத்தை மாட்டுத்தாள்(சீமேந்து பை)பேப்பரால் சுற்றி கொண்டுவந்திருந்தனர். யாழ் தேவி புகையை தள்ளிக்கொண்டு தனது வெக நடையில் ஆடி அசைந்து வளைந்து குலுங்கி வந்துகொண்டிருந்தாள்.புகையிரத நிலைய அதிபர் ஒரு வளையத்தோடும்,சிவத்த கொடியுடனும் வந்து நிற்க இன்னொரு சிப்பந்தி இன்ஞின் டிரைவரிடம் வளையத்தை வாங்க தயாராக இருந்தார்.அதிபர் சிவத்த கொடியை காட்டி வளையத்தை கொடுக்க யாழ்தேவி தனது வேக நடையை மெல்ல மெல்ல குறைத்து நின்றாள்.
சனம் அடிபட்டு முண்டியடித்து பொதிகளுடன் ஏறினர்,சிலர் பொதிகளை யன்னலூடாக கொடுத்தனர் .
"குகன் டேய் இங்கவாடா" என்ற சத்தம் ஒரு பெட்டியிலிருந்து வந்தது.
"என்னுடைய பிரன்ட்ஸ் அந்த கொம்பார்ட்மன்டில் இருக்கினம் அதுல இடமிருக்கு வாங்கோ" என அழைத்தான்.
குமுதினி தனது குடும்பத்தினரையும்,நண்பி தனது அப்பாவையும் பார்த்தார்கள் அனுமதி பெறுவதற்கு அவர்கள் தலையை ஆட்டி அவருடன் போ என்று அனுமதி கொடுத்தனர்.
மூவரும் அந்த கொம்பார்ட்மன்டில் ஏறிக்கொண்டனர்.அதில் பல ஆண்கள் பெண்கள் என இருந்தனர் எல்லோரும் பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் என பார்த்தவுடனே தெரிந்தது.சில புது மாணவர்களும் ,பல பழைய மாணவர்களும் இருந்தனர்.விசில் சத்தத்துடன் சிவத்த பச்சை கொடி காட்டப்பட கூ கூ என்ற ஒசை எழுப்பிய படி மெதுவாக யாழ்தேவி அசைந்தாள்.கையை அசைத்து விடைபெற்றனர் ,கண்ணீர் சிந்தியபடி சிலர் , மறக்காமல் போய் சேர்ந்தவுடன் கடிதத்தை போடு என்று ஒரு சிலர் சொல்லி விடை பெற்றனர் .காரில் மயான அமைதி நிலைவியது.கந்தையரும் ,மற்ற பெரியவரும் முன்னுக்கு இருந்து அரசியல் பேச தொடங்கிவிட்டார்கள் இருவரும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் சிங்கள அரசியல்வாதிகளை குறைகூறிகொண்டே வந்தனர்
சாந்தினியும் சார்ளினியும் அழுது கொண்டே காரிலிருந்தனர் .பாமினி அவர்களை சமாதனப்படுத்திகொண்டிருந்தாள்.
சுரேஸ் யன்னலூடாக நட்சத்திரங்களை பார்த்த படியே எதிர்காலத்தை பற்றி கனவு காண தொடங்கிவிட்டான். தனக்கு வெளி மாகாணத்தில் அனுமதி கிடைத்தால் புகையிரதத்தில்இவர்களை போன்று சந்தோசமாக செல்ல முடியும் சாந்தினிக்கும் அங்கு கிடைத்தால் அவளையும் அழைத்து செல்லலாம் இருவரும் ஒன்றாக வேல செய்யலாம் என அவனது கனவுகள் நீன்று கொண்டே போனது .கந்தையரின் கார் பெரியவரின் வீட்டு கேற்றடியில் நிறுத்தியவுடன் ,அவனது கனவும் கலைந்தது.
முன் சீட் காலியானதை தொடர்ந்து அவன் அந்த சீட்டிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட அங்கு போய் அமர்ந்து கொண்டான். அவனது கனவு தொடர கந்தையரின் பேச்சு தடையாக இருந்தது.அவருக்கு சினிமாவும் அரசியலும் அத்துப்படி. 
"டேய் எம்.ஜி ஆரின்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்திட்டியா"
"இல்லை அண்ணே"
"நான் பார்த்திட்டேன் ஓவ்வோரு நாட்டிலயும் ஓவ்வோரு பாட்டுடா.வாத்தியார் இந்த படத்தில பட்டையை கிளப்பிறார்"
"ம்ம் ம்ம் ம்ம்" என அவன் தலையை அசைக்க ,ஒரு பாட்டை விசில் அடிச்சு பாடிக்கொண்டே காரை ஒட்டினார்.
வீடு வந்தவுடன் பொக்கற்றிலிருந்த காசை எடுத்து கந்தையரிடம் கொடுத்தான்.காசை எண்ணிப்பார்த்த கந்தையர் தலையை சொறிந்தபடி
"தம்பி காசு காணது இன்னும் ஒரு 10 ரூபாவை வாங்கி தாரும்"
"ஏன் அண்ணே நீங்க முதலில் சொன்னது இவ்வளவுதானே"
"நான் நினைச்சன் போனவுடனே திரும்பி வாரது என்று ஆனால் நின்று வந்தபடியால் கொஞ்சம் கூட வாங்கி தாரும்"
உள்ளே சென்ற பாமினி பத்து ரூபா தாளை சுரேஸிடம் கொடுத்தாள் அவன் அதை வாங்கி கந்தையரிடம் கொடுக்க அவர் பல்லை இழித்தபடி வாங்கி கொண்டார். நெடுகளும் வேலி அடைக்க வேண்டியிருக்கு இந்தமுறை தகரத்தால் அடைத்துவிடுவோம் என சுரேஸின் வீட்டுகாரரும் பக்கத்து வீட்டுக்காராரும் முடிவெடுத்தனர்.இனிமேல் நீ அதிகம் பக்கத்துவீட்டை போகதே என அம்மா சொல்லிவிட்டார்,ஒம் என்று தலையை ஆட்டிவிட்டு ஏன் என்ற கேள்வியை கேட்காமல் விட்டுவிட்டான் மனதில் ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது அவனுக்கு .முதல்நாள் அவன் சாந்தினியை பார்த்து புன்னகைத்ததின் எதிரொலியோ எண்ணிகொண்டான்.
இப்பொழுது பக்கத்து வீட்டு அண்ரி உதவிகளுக்கு இவனை கூப்பிடுவதில்லை.பாமினியும் யாழ்பல்கலைகழக்த்தில் அனுமதி கிடைத்து அங்கு நிரந்தரமாக இருந்து படிப்பதற்கு சென்றுவிட்டாள் .
.சாந்தினியும் சாலினியும் சைக்கிளின் தனியாக செல்வார்கள் .துணைக்கு அவர்களுக்கு தம்பிமார் தேவைப்படவில்லை.சாந்தினி அந்த நால்வரிலும் அழகானவள் அத்துடன் நிறமும் .சின்ன வயதிலிருந்தே சுரேஸுக்கு அவள் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது .
"மச்சான் இப்படியே ஒருதலை காதலில் இருந்தால் யாரும் கொத்திகொண்டு போய்விடுவாங்கள் சோதனை முடிஞ்சுதுதானே போய் கதையடா" என்றார்கள் நண்பர்கள். துணிவே துணை என்று போட்டு சுரேஸ் கிட்ட போனான் அதற்குமுதல் அவள் சைக்கிளை திருப்பிகொண்டு சென்றுவிட்டாள் .சிறிது காலம் சுரேஸ்நிற்க்கும்பொழுது அவள் வெளியே வருவதில்லை .அப்படி எதிர்பாரதவிதமாக கண்டு கொள்ளவேண்டி வந்தாலும் மூன்றாம் நபர் போன்று சென்றுவிடுவாள்.சுரேஸும் தொடரவிரும்பவில்லை.சுரேஸ் கன்னிமீசையை இன்று வரை முழுவதுமாக எடுக்கவில்லை,தேவை ஏற்படும்பொழுது கிளிப்பண்ணிகொள்வான். ...சிறுது காலம் தாடி வைத்திருந்தான் வெளிநாடு செல்வதற்காக தாடியை மட்டும் எடுத்திருந்தான்.
முப்பதைந்து வருடங்களின் பின்பு கண்ணாடியை பார்த்தபடி மீசையை தடவிகொண்டே சிரித்துகொண்டிருந்த சுரேசைப் பார்த்த மனைவி
" அவள் சொன்னதை கேட்டு இப்ப இளமை ஊஞ்சலாடுதோ?"
"இல்லையடி ஆத்த பெண்களை பற்றி இன்னும் எனக்கு புரியவில்லை"
"இனி புரிஞ்சு என்னத்தை பண்ணப்போறீயள் போய் போர்த்து கொண்டு பாடுங்கோ"
அன்று மாலை நண்பனின் உறவுவினர் லண்டனிலிருந்து வந்திருந்தமையால் இவனை விருந்துக்கு அழைத்திருந்தார்கள்.குடும்பமாக சென்றிருந்தான்.பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தனர் .ஆண் பெண் வேறு பாடின்றி முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
"இவன் சுரேஸ் என்ற பிரண்ட்,இது அவனது மனைவி "இருபகுதியினரும் கை குலுக்கி கொண்டனர்.
"சுரேஸ் புரோம் மானிப்பாய்"
"யெஸ் "
"கட்டியணைத்து முத்தமிட்டாள்"
"அதே சிரிப்பு அதே மீசை பார்த்தவுடன் நான் நினைச்சன் நீங்கள் சுரேஸ்சாகதான் இருப்பீங்கள் என்று"
"நான் சாந்தினி ,உங்கன்ட வீட்டுக்கு பக்கத்திலிருந்த குமுதினி,பாமினிஅக்காவையின்ட தங்கச்சி ,நாங்கள் நாலு பேரும் லன்டனில்தான் இருக்கின்றோம்"



யாவும் சுத்த கற்பனை :D 

Saturday, February 7, 2015

சமூக சேவை


அழைப்புமணி யின் சத்தம் கேட்டு போய் கதவை திறந்தேன் கனகர் வாசலில் நின்றார்.வெளிநாட்டு சம்பிராதயம் பார்க்காமல் பழகிற மனுசன் என்றால் எங்கன்ட கனகர்தான்.தொலைபேசியில் அழைத்து உங்கன்ட வீட்டை வரப்போகிறேன் என்று முன் அனுமதி கேட்டு கனகர் வீட்டை போற பழக்கம் எனக்கும் இல்லை அதேபோல கனகர் என்ட வீட்டை வாறதற்க்கும் முன்னனுமதி கேட்காமல் வருவார்.கனகர் ஒரு சமுகசேவகர் என்று சொல்லலாம் .இளைப்பாறிவிட்டார் அதனால் முழுநேர சமுக சேவையில் ஈடுபடுகிறார்.நானும் பகுதி நேரமாக அவருடன் சமுக சேவையில ஈடு படுவதுண்டு.சமுக சேவை என்றால் நீங்கள் பெரிதாக ஒன்றும் நினைக்க கூடாது.என்ட ஆககூடிய சமுக சேவை எங்கன்ட சனத்திற்க்கு ,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் விற்கிறதுதான்.
அதுவும் ஒரு சமூக சேவை என நானே தீர்மானிச்சு தொடர்ந்து செய்துகொண்டுவாறன்.ஏன் சமூக சேவை என்றால் கனகரைப் போன்ற இளைப்பாறிய ஆட்கள்,என்னைபோன்ற இளைப்பாற இருக்கின்ற ஆட்களுக்கு தங்களது பொழுதை எப்படி கழிக்கிறது என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாக இருக்கும், இருக்கின்றது என்றுபோட்டுத்தான் நானும் கனகரும் இந்த சமுக சேவையில் இறங்கினோம் .வெளிநாடுகளில் பப்,டப்,கிளப்,மற்றும் விளையாட்டு மைதானங்கள்,தீம் பார்க்,சினிமா என பல களியாட்ட வசதிகள் இருந்தாலும் எங்கன்ட சனத்தோட பொழுதை கழித்தால்தான் ஒரு பூரணதிருப்தி கிடைக்கும் எங்களுக்கு, என்ற ஒரு நல்ல நோக்குடன் இந்த சமுக சேவையில நாங்கள் இறங்கினோம்.
ஏற்கனவே பலர் இந்த சமூகசேவையை செய்யினம் அவையளுக்கு ஒரு ஆதரவு கொடுக்க நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.
இப்படிதான் ஒருநாள் நானும் கனகரும் 'பப்' போயிருந்து பியர் அடிக்க ஒரு வெள்ளை "ஹாய் மயிட்" என்றான் கனகரும் பதிலுக்கு ஹாய் என்றுபோட்டு பியரை உறிஞ்ச பக்கத்தில நின்ற வெள்ளை தன்னுடைய நண்பனுடன் இரண்டு ஆங்கில தூஷண வார்த்தை பாவிக்க கனகர் கடுப்பாயிற்றார்.உதுக்குத்தான் நான் உவங்களின்ட இடத்துக்கு வாறதில்லை என கதிரையை தள்ளிபோட்டு வெளிவந்திட்டார். நானும் அவருக்கு பின்னால வந்திட்டன். அதற்கு பிறகு அவர் "பப் பக்கம் தலை வைச்சு படுக்கிறதில்லை"
இன்னோரு நாள் டப்புக்கு போய் குதிரையில காசை கட்டினோம் நாங்கள் கட்டின குதிரை கடைசியாக வந்தது.தொடர்ந்து இரண்டு நாள் போய் பணத்தை இழந்த பின்பு தொடர்ந்து போவதை நிறுத்திக்கொண்டோம்.
கொல்வ் கிளப்,போலிங்க் கிளப்,கிரிக்கட் கிளப் என சகல கிளப்பிலும் அங்கத்துவராக சேர்ந்து கொண்டோம். இப்படித்தான் ஒரு கிரிக்கட் கிளப்பில சினேக பூர்வமான ஒரு மட்ச் விளையாட வெளிக்கிட்டோம் ,கனகர் மற்றவன்கள் விளையாடும் பொழுது மைதானத்திற்க்கு வெளியே நின்று கொண்டு கொமான்ட் கொடுத்துக்கொண்டிருப்பார் .லெக்கில் போடு,ஒவில் போடு என பந்துவீச்சாளருக்கும்.ரைட்டில் அடி லெவ்டில் அடி என துடுப்பாட்ட காரருக்கும் கட்டளை போடுவார்,ஆனால் அது அவர்களுக்கு புரியாது ஆனால் மைதனத்திற்க்கு வெளியே கனகருக்கு பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் விளங்கும்,அத்துடன் கனகர் சகல மட்ச்களையும் பார்த்து கிரிக்கட்டில் கலாநிதிபட்டத்திற்க்கு தகுதி உடையவர் என்று சொன்னால் மிகையாகாது. தொலக்காட்சியில் ஒரு ஆட்டத்தை பார்க்கும் பொழுது பிரபல அவுஸ்ரேலியா ஆட்டக்காரன் விளையாட மட்டையை தூக்கினான் பந்து நேரடியாக விக்கட்டில் பட்டு அவுட்டாக கனகர் உணர்ச்சி வசப்பட்டு ,ஆங்கிலத்தில் திட்ட தொட்டங்கிவிட்டார் அவன் ஓவ்வில் போடுறான் உவன் விசரன் மட்டையை தூக்கி விலாசமல் சும்மா அவுட்டாகிவிட்டான் இடியட் ..இப்படி பல விமர்சனங்களை கனகர் வைப்பதை பார்த்து நானும் வேறு சில வயசு போன வெள்ளையும் கனகர் விசயகாரன் என நினைத்து அவரை எமது டீம்மில் சகலகலா வல்லவன் என நியமித்தோம் .அதாவது துடுப்பாட்டம்,பந்துவீச்சு இரண்டும் தெரிந்த வீரன் என முத்திரை குத்தினோம்.
அடுத்து விளையாடிய நாலு மட்சிலும் கனகர் ஒரு ஒட்டமோ,விக்கட்டோ எடுக்கவில்ல.இந்த அவமானத்தால் அவர் தொடர்ந்து தான் டீம்மில் இருக்கவிரும்பவில்லை என விலகி கொண்டார்.அவருக்கு பக்க பலமாக நானும் விலகி கொண்டேன்.
சின்ன வயசிலயிருந்து விளையாடிய வெள்ளைகளுடன் எங்களுக்கு இடு கொடுக்க முடியாத நிலையில் தொடர்ந்து இந்த கிளப்புக்களுக்கு போவதை தவிர்த்து கொண்டோம்.இப்படியான கசப்பான அனுபவங்களினால் எங்கன்ட சனத்திட்ட எங்கன்ட திறமையை காட்டி பொழுதை களித்து கொள்ள த்தான் நாங்கள் இந்த சமுக சேவையில் கடந்த பத்து வருடமாக ஈடுபடுகிறோம். ஆரம்ப காலங்களில் எங்கன்ட சமுக சேவைகள் மக்களிடையே எடுபடவில்லை ,ஆனால் கடந்த ஐந்து வருடமாக சனத்திடம் நல்ல வரவேற்பு கிடைக்குது. சமுக சேவை விடயமாகத்தான் இப்ப கனகர் என்ட வீட்டை வந்தவர் .
"வாறசனிக்கிழமை ...முழக்கம்,அதற்கு அடுத்த சனி .....இன்னிசை,ஞாயிற்றுக்கிழமை....பன் விழா.,நடக்க இருக்குது இந்தா டிக்கட்" என மூன்று டிக்கட்டை கிழித்து தந்தார்.
"இப்ப எங்கன்ட் சனம் ஞாயிற்றுக்கிழமையிலும் புரோகிறம்களை வைக்குது ,அடுத்த நாள் வேலைக்கு போகவேணும் அண்ணே"
"அது பத்து மணிக்கு முடிஞ்சிடும் நீ டிக்கட்டை பிடி"
"உங்களுக்கு என்ன ரிட்டயர் பண்ணிட்டியள் சொல்லிவியள்"
"நீ மட்டும் என்ன இப்படியே மார்க்கண்டேயர் மாதிரி இருக்கப்போறீயே "
"சரி அண்ணே,உங்களோட கதைச்சு காலத்தை தள்ளஏலாது இப்ப எவ்வளவு காசு நான் தரவேணும்"
"நான் உன்னட போனமாதம் எடுத்த டிக்கட்டுக்கு காசு தரவில்லை அதை இதில கழிச்சு விடு"
இப்படித்தான் எங்கன்ட டிக்கட் வியாபாரம் பண்டமாற்றிலயே போய்விடும்.
இலவச நிகழ்ச்சிகளையும் நாங்கள் விட்டு வைப்பதில்லை.கனகருக்கு இரவு நேரங்களில் கார் ஒடுவதற்கு கண் தெரியுதில்லை என்று சகல நிகழ்சிகளுக்கும் என்னோடுதான் வாறவர்.பக்கதிலிருந்து சிட்னி விடுப்புக்கள்,தன்னுடைய வீட்டு விடுப்புக்களை சொல்லி கொண்டு வருவார்.சில நேரத்தில மனுசன் அரைவாசி கதையை சொல்லி போட்டு கொரட்டை விட்டு நித்திரை கொள்வார்.அண்ணே என்ன நித்திரையோ என்று கேட்டா சீ ,சீ சும்மா கண் அயர்ந்து போய்யிட்டேன் என்பார்.
கனகரை கோயிலில்தான் முதல்முதல் சந்திச்சனான்.கோவில் வாசலில் நின்ற கனகர் "தம்பி எந்தப்பக்கம் போறீர்"
"பென்டில் கில் போரன்"
"என்னை ஒருக்கா அங்க இறக்கி விடுவீரோ ,கடையில இடியப்பம் வாங்க வேணும்"
"சரி வாங்கோ"
"தாங்க்ஸ் டா தம்பி"
காரில வந்து ஏறினவுடன்.முருகா உனக்குதான் நன்றி சொல்ல வேணும் இந்த வெய்யிலில் எப்படி போறது என்று நினைச்சு கொண்டு நிற்கும்பொழுது நீ தான் இந்த தம்பியை எனக்கு காட்டினனீ....என்ட பெருமான் முருகன் என்னை கைவிடமாட்டான்....இப்படி முருகனுக்கு நன்றிகடனை சொல்லிபோட்டு தனது பேச்சை தொடங்கினார்.
"தம்பி யாழ்ப்பாணம் தானே"
"ஓம் எப்படி கண்டுபிடிச்சியள்"
"உம்மட கதையில தெரியுதுதானே,யாழ்ப்பாணத்தில எவ்வடம்"
"மானிப்பாய்"
"மானிப்பாயோ! மருதடிக்கு பக்கத்திலயோ "
"இல்லை பள்ளிக்கூடத்திற்கு முன்னாலா, நீங்கள் மானிப்பாயோ"
"சீ சீ நான் கோண்டாவில் ,என்ட ஒன்றைவிட்ட அக்கா அங்கதான் கலியாணம் கட்டினவ,ஒவசியர் சிவப்பிரகாசத்தின் மகனைத்தான் கட்டினவ ஆட்களை தெரியுமோ?"
"ஓமோம் தெரியும் அவையள் என்ட சொந்தகாரர் "
"பிறகென்ன நீர் என்ட சொந்தகாரார் நல்லதாய் போச்சு"
இப்படிதான் எங்களது அறிமுகம் 10 வருசத்திற்கு முதல் தொடங்கினது இப்பவும் தொடருது.நாட்டில எப்ப பிரச்சனை முடியுதோ அப்ப திரும்பி நாட்டுக்கு போய்விடுவேன் உவங்கன்ட நாட்டில ஒரு நாளும் இருக்க மாட்டேன் ,அங்க போய் எங்கன்ட சனத்திற்கு சமூகசேவை செய்ய வேணும் என்று சொன்ன கனகர் இன்னும் நாட்டுக்கு போகவில்லை.சிட்னி தமிழருக்கு சமூகசேவை செய்யிறார்.
கோவில் கொமிட்டியிலும் அங்கத்துவராக இருக்கின்றார்.கனகர் மகனுடன் இருந்தாலும் எதாவது உதவிகள் வேணுமென்றால் என்னிடம்தான் கேட்பார்.
சைவமும் தமிழும் எங்களுடைய இரு கண்கள் என்றும் அதை புலம் பெயர்ந்த பிரதேசத்திலும் எமது சந்ததிக்கு புகட்ட வேணும் அதற்காகத்தான் அவர் கோவில் கொமிட்டியிம் அங்கத்துவராகவும்,தமிழ்பாடசாலையில் ஆசிரியர் தொழில் ஈடுபடுவதாக சொல்லிக் கொள்வார்.
தம்பி நீ உன்ட பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்பும் .நாங்களே தமிழை படிக்காவிடில் வெள்ளையோ வந்து தமிழ்படிக்க போகுது என்று ஒரு நாள் ஆதங்கப்பட்டார்.
" என்னுடைய இரண்டு மகள்மாரும் உயர்தரத்தில் தமிழ் எடுத்து சித்தியடைந்திட்டினம் ,உங்கன்ட பேரப்பிள்ளைகள் எப்படி தமிழ் கதைப்பினமே?"
".சும்மாபோடம்பி அவள் தாய்காரி என்ட மருமகள் வீட்டிலயே தமிழில் பேசமாட்டாள் பிறகு எப்படி பிள்ளைகள் தமிழில் கதைக்கபோகுது?தமிழில் பேசினால் ஆங்கில உச்சரிப்பு வடிவாக வராமாட்டுதாம் என்று போட்டு தான் குடும்பமே ஆங்கிலத்தில பேசுதுகள்,அதுசரி உன்ட பிள்ளைகள் இங்கயே பிறந்தவை "
"ஒமோம் இங்கதான் பிறந்தவை,அவர்கள் தமிழ்பாடாசலைக்கு மட்டுமல்ல ,அதுகள் சைவபாடசாலைக்கும் சின்னனிலிருந்து போனதுகள்,தேவாரமும் நல்லாய் பாடுவினம் ,"
"என்ட பேரப்பிள்ளைகளை மருமகள்காரி சாய் பஜனுக்கு கூட்டிக்கொண்டு போறவ ,அதுகள் தெலுங்கு பஜனையும் ,ஹிந்தி பஜனையும் நல்லாய் பாடுங்கள்,அவையளுடன் சேர்ந்து மகனும் ,மருமகளும் பஜனை பாடுவினம்"
"அப்ப குடும்பத்திற்கே ஹிந்தி தெரியும் என்று சொல்லுங்கோ,"
"சும்மா போடாம்பி அதுகள் இங்கிலிஸில வசனத்தை எழுதிவைச்சிட்டு அங்க போய் இருந்து பாடுதுகள்"
"என்ன அண்ணே நீங்கள் தமிழும் சைவமும் நம் இருகண்கள் என்று சமுகசேவை செய்யிறீங்கள் ஆனால் உங்கன்ட வாரிசுகள் தெலுங்கும் சாய்ராமும் நம்மிரு கண்கள் என்று திரியினம்,,,அண்ணே இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுத்த ஆறு பிள்ளைகள் மருத்துவ பீடத்திற்கு தெரிவிசெய்யப்பட்டிருக்கினம்....என்ற செய்தியை.உங்கன்ட மருமகளிட்டையும் மகனிட்டையும் சொல்லுங்கோ...," 

Wednesday, November 26, 2014

வித்தியா வீட்டுச் செல்லம்

மீண்டும் வசந்தகாலம் மரம் ,செடி, கொடி பூத்து குலுங்க தொடங்கிவிட்டன.வீட்டுத்தோட்டம் வைக்கும் சிட்னிவாழ் பெரும் குடிமக்கள் தங்களது முயற்சியில் தீயா வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.அவர்கள் தீயா வேலை செய்வதைப் பார்த்து சுரேஸும் கொஞ்சம் மிளகாய் கன்றுகளை வாங்கி வந்து நடத்தொடங்கினான். சுரேஸின் நடமாட்டத்தை அறிந்த பின் வீட்டு நாய் குரைத்தது.உடனே நாயின் உரிமையாளர் ஆங்கிலத்தில் நாயைவிட அதிக சத்தத்தில் குரைக்க நாய் குரைப்பதை நிறுத்தியது. மீண்டும் குரைக்க தொடங்க ஆத்திரமடைந்த சுரேஸ் "ஏய் நாயே நானா, நீயா இந்த ஏரியாவுக்கு முதல் வந்தது"உரத்த குரலில் கத்தியவன் ஊரா இருந்திருந்தால் பொட்டுக்குள்ளால் பூர்ந்து வந்து உன்ட காலை அடிச்சு நொருக்கியிருப்பேன் என் மனதில் திட்டியபடியே மிளகாய் கன்றுகளை நடத்தொடங்கினான்.
நாய் மீண்டும் குரைக்காமையால் ,தனது திட்டலுக்கு பயந்து விட்டது, தமிழ் அறிந்த நாயாக்கும் என எண்ணி சிரித்துக்கொண்டான்.

"பிராவுனி" ஊரில அவன் வளர்த்த நாயின் பெயர் .பெயர் மட்டும் ஆங்கில பெயர் ஆனால் தெருநாய்.முற்சந்தியில் யாரோ மூன்று குட்டிகளை கொண்டுவந்து விட்டிட்டு போய்விட்டார்கள் .இவன் ஆசைப்பட்டு ஒன்றை தூக்கி வந்துவிட்டான்.நாய்குட்டியின் முனகலை கேட்ட தாயார் 
"தம்பி யாரப்பு உதத் தந்தது" 
"சந்தியில நிண்டது நான் பிடிச்சிட்டு வந்தனான் அம்மா"
"அது பெட்டை நாய்குட்டியாக இருக்கும் அப்பு ,பிறகு குட்டி போட்டுதென்றால் கரைச்சல் நீ அந்த இடத்திலயே விட்டப்பு"
"அம்மா ....பிளிஸ் அம்மா நான் வளர்க்க போறன்"
நாய்குட்டியை தூக்கி பார்த்த தந்தை, இது கடுவன் ஆசைபடுகிறான் வைச்சிருக்கட்டுமன் என அவனுக்கு ஆதரவு குரல் கொடுக்க தாயார் தலையை ஆட்டி அனுமதிகொடுத்தார். அம்மா அந்த நாயை வளர்ப்பத்தற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.நாயை வீடுக்குள் விடக்கூடாது,நாயை தொட்டு விளையாடிய பின்பு கை கழுவிய பின்புதான் வீட்டுக்குள் வர வேண்டும்
குசினிக்குள் சென்று நாய்க்கு சாப்பாடு,தண்ணிர் வைப்பதற்காக கோப்பைகளை தேடிக்கொண்டிருந்தான் .
"என்னப்பு குசினிக்குள் சத்தம் கேட்குது உன்ட நாய்குட்டி உள்ள வந்திட்டுது போல கிடக்கு,பிடிச்சு வெளியால விடு"
"அது நான் அம்மா, சாப்பாடு வைக்க கோப்பை ஒன்று தேடுறேன் "
"சனம் சாப்பிட கோப்பை இல்லை உனக்கு நாய்க்கு சாப்பாடு வைக்க கோப்பை வேண்டிக்கிடக்கு,சிரட்டையில் சாப்பாடு போடப்பு"
இதற்கு எதிர்கதை கதைச்சால் நிச்சயம் நாய்குட்டியை இழக்க நேரிடும் என்ற காரணத்தால் சிரட்டையிலயே பால்,தண்ணிர் ,உணவுயாவும் கொடுத்தான்..
அம்மாவின் மச்சாள் முறை உறவுக்கார பெண் அத்துடன் அவரின் நெருங்கிய நண்பியும் ஆவார்.
வித்தியா என்ற ஒரு பெண்பிள்ளை உண்டு, சுரேசை விட இரண்டு வயது குறைவு.தாயும் மகளும் ஒன்றுவிட்ட கிழமையாவது சுரேஸின் வீட்டுக்கு வருவார்கள்.வருபவர்களுக்கு எல்லாம் நாய்குட்டியை காட்டுவதுதான் சுரேசின் பொழுதுபோக்கு ,வித்தியாவையும் அழைத்து சென்று நாய்குட்டியை காட்டியவன் பெட்டியினுள் இருந்து வெளியே எடுத்துவிட்டான் ,இதை எதிர்பாரத வித்தியா "அம்மா" என அலறியபடியே வீட்டினுள் ஒடினாள்.
சுரேஸுக்கும் மீசை அரும்பி வயசுக்கு வர,வித்தியாவும் பருவமடைய அவர்களுடன் சேர்ந்தே நாய்குட்டியும் நாயாகிவிட்டது.வித்தியா சுரேஸின் வீட்டை வருவதை குறைத்துக்கொண்டாள்.பிரவுனி ஒருநாள் வீதியை கடக்கும் பொழுது பஸ்வண்டியில் அடிபட்டு இறக்க கவலையுடன் இருந்த சுரேஸை,"மனிதனே சாகிறான் நீ உந்த நாய்க்கு போய் கவலை படுகிறாய்,இழுத்து கொண்டுபோய் தேசிக்காய் மரத்தடியில் தாட்டுவிடு மரம் நல்லாய் காய்க்கும்" என்றார் தந்தை .அடுத்த ஆண்டு மரம் நல்லாய் காய்க்க தொடங்கியது.

அம்மா சில காய்களை பொறுக்கி அவனிடம் மச்சாள் வீட்டை கொடுக்கும்படி கூறினாள்.அவனுக்குள் ஒருவித கிளுகிளுப்பு அவனை அறியாமலயே உண்டாகிவிட்டது.அவனிடம் இருந்த அழகான ஒரு சேர்ட்டை மாட்டிகொண்டு வித்தியா வீட்டிற்க்கு சென்றான்.வாசலில் இருந்து குமுதம் வாசித்து கொண்டிருந்தவள் 
"அம்மா சுரேஸ் வந்திருக்கிறார் "என்றவள் மீண்டும் தனது கதை புத்தகத்தில் மூழ்கிவிட்டாள் வெளியே வந்த தாயார் அட தம்பி சுரேஸ் உள்ள வாவேன்.
வாசல்லிருந்தவளை பார்த்துகொண்டிருக்கும் பொழுது அவளது தாயார்
"வித்தியா தம்பியை சுரேஸ் என்று கூப்பிடக்கூடாது அவர் உனக்கு அண்ணா முறை" என்றாள்
"அன்ரி அம்மா இதை உங்களிட்ட கொடுக்க சொன்னவ "
"என்னது தம்பி"
"வீட்டு மரத்து தேசிக்காய் ,நான் போயிற்று வாரன்" வந்த வேகத்தில் வீடு திரும்பினான்.....பாய் சுரேஸ் அண்ணா என்ற குரல் நக்கலா, நளினமா, காதலா என்று தெரியாமல் வித்தியா கலியாணம் கட்டி வெளிநாடு செல்லும் வரை ஏக்கத்துடன் இருந்தான்.
வித்தியாவுக்கு இரு ஆண்பிள்ளைகள் வெளிமாநில பல்கலைகழகத்தில் பயில்கின்றனர்.கணவனும் ,தாயாரும்,செல்லமும்தான் அந்த பெரிய வீட்டில் குடியிருக்கின்றனர்.
அடிக்கடி வித்தியாவின் தாயாரை பார்ப்பதற்க்கு வீட்டை சென்றுவருவான் .அவள் இப்பவும் சுரேஸ் அண்ணா என்றுதான் அழைப்பாள்.தாயார் வயது போனாலும் மிகவும் துடிப்பாக தனது வேலைகளை கவனித்துகொள்வார்.

வித்தியாவின் மாமா இவர்களுடன் ஊரில இருந்தவர் பின்பு அவுஸ்ரேலியா வந்தவுடன் அவரையும் இங்கு அழைத்திருந்தார்கள். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சுரேஸை அழைப்பார்கள் . சுரேஸ்,மாமா,வித்தியாவின் கணவர் மூவரும் ஒன்றாக இருந்து உற்சாக பாணம் அருந்துவது வழமை இருவருடங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார்.
" சுரேஸ் அண்ணா இன்றைக்கு யாரின்ட பிறந்த நாள் சொல்லு ங்கோ பார்ப்பம்"
"மாமாவின்ட"
"செல்லத்தின்ட பிறந்த நாளும் அவரின்ட பிறந்த நாளும் ஒரே நாள்"
"மாமாவை மாதிரித்தான் இவனும், சாப்பாடு நேரத்திற்கு கொடுக்காவிட்டால் கோபம் வந்திடும்,செல்லம் வாடா சாப்பிடுவம்" என தூக்கி அரவணத்தபடியே விலையுயர்ந்த சில்வர் கோப்பையில் ,அலுமாரியிலிருந்த பெட்டியை திறந்து அதனுள் போட்டவள் ,செல்லம் சாப்பிடடா என வயிற்றை யும் முதுகையும் தடவிக்கொடுத்தாள்.
அம்மாவுக்கு ஒரு கிஸ் தாடா ,அப்பா எங்கயடா? அவரை காணவில்லை அதுதான் தேடு,என அவனின் செயல்களுக்கு அவளே விளக்கம் கொடுத்துகொண்டிருந்தாள் .கார் வந்து நின்ற சத்தம் கேட்டு பாய்ந்து ஒடியவனை வாடா வாடா அப்பா உள்ள வருவார்.அப்பாவை கண்ட செல்லம் அவர் மேல் பாய்ந்து தாவிக்கொண்டது.அவரும் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க அதுவும் ஒரு முத்தம் கொடுத்தது. அப்பா வாங்கி வந்த விளையாட்டு பொருளை வெளியே எடுத்து கிலுக்கி காட்டவே பாய்ந்து வாங்கியவன் வீட்டை சுற்றி சந்தோசத்தில் ஒடிவந்தான் .
"ஹலோ சுரேஸ் "
"ஹாய் விமல்"
செல்லத்தை மடியில் வைத்து தடவியபடியே 
"வித்தியா இவனின்ட ரெயினிக் நாளைக்கு இருக்கு ,பிறகு டொக்டரிட்ட அப்பொயின்ட்மன்ட் இருக்கு,மறந்திடாமல் அவனின்ட சாப்பாட்டையும் வாங்கி கொண்டு வர வேணும்"
"எல்லாத்துக்கும் முதல் செல்லத்தை குளிப்பாட்ட அவங்கள் வருவாங்கள் ,செல்லத்துக்கு குளிக்கிறது என்றால் நல்ல விருப்பம்,என்னடா செல்லம் "வினாவியபடியே செல்லத்திற்க்கு முத்தமிட்டாள் வித்தியா.
ஐந்தாறு குடும்பம் பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தனர் .கப்பி பேர்த்டெ பாடி கேக் வெட்டினார்கள்.கேக் செல்லத்திற்க்கு தித்தி முத்தமும் இட்டனர் விமல் தம்பதியனர்,அத்துடன் பாட்டியும் தந்து பங்குக்கு முத்தமும் கேக்கும் கொடுத்தாள். செல்லத்தின் நண்பர்கள் ஒருத்தரும் அங்கு வரவில்லை.நண்பர்களின் பெற்றோர்களும்,காவலர்களும் தான் வந்திருந்தனர்.
இன்று மாமாவின் பிறந்த நாள் அதே நாள் இவனின்ட பிறந்தா நாளும்,......மாமா எங்களுடன் நல்ல பாசமாய்யிருந்தவர் பாவம் செத்து போயிட்டார்".
"இப்ப என்ன வித்தியா சொல்லுறீர் மாமா ,நாயாக மறுபிறப்பு எடுத்திருக்கிறார் என்றொ"
"ஒம் அண்ணே எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.இவனின் செயல்கள் எல்லாம் அப்படிதான் இருக்கிறது"
" உமக்கு ஞாபகம் இருக்கே 30வருசத்திற்கு முதல் என்ட வீட்டு நாய்குட்டி உம்மட காலை நக்க வர அலறிஅடிச்சு கொண்டு அம்மாவிடம் ஒடிப்போனது, இப்ப என்னடா எனற நாய்குட்டிக்கு முத்தமிடுகின்றீர்"
"அப்ப நான் சின்ன பிள்ளை மற்றது அது தெருநாய்"
"அடுத்த பிறவி அவுஸ்ரேலியாவில் நாயாக உம்மட வீட்டில பிறக்க வேணும் ."சுரேஸ் சொன்னதை கேட்ட நாய் ஒரு பார்வை பார்த்து குரைத்தது.அந்த குரைப்பும் பார்வையும் டேய் உனக்கு என்ன விசரா என்ற மாதிரி இருந்தது.
நீங்களும் உங்கன்ட நாய்களை கூட்டிகொண்டு வந்திருந்தால் அதுகளும் ஒடிப்பிடிச்சு ,ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்குங்கள்.தங்களுடைய இச்சைகளையும் தீர்த்திருக்குங்கள் என்றான் சுரேஸ்.
"அதுகளுக்கு டிசெஸ் பண்ணியாச்சு"அண்ணே
"அட கடவுளே இவ்வளவத்தையும் கொடுத்து அதுகளின்ட பொறுத்த இடத்தில கைவச்சிட்டிங்களே"
இப்படி சுரேஸ் சொன்னதை கேட்ட செல்லம் துள்ளி குதித்து ஒடி வந்து சுரேஸின் காலில் விழுந்து "ஊ ஊ ஊ ,வவ்,வவ்"
ஆயிரம் இருந்தும்,வசதிகள் இருந்தும் no அது 
செல்லத்தை குனிந்து முதுகில் தட்ட அது மீண்டும் "ஊ.....ஊ......வவ்.........வவ் ........ஊ....ஊ"
ஊரில் தெருநாய்க்கு இருக்கிற அந்த சுதந்திரம் இங்க இல்லை நீ அவுஸில் நாயாக பிறக்க போறாயா ,ஊரில தெருநாயாக பிறக்கபோறீயா என்று கேட்பது போலிருந்தது.தொடர்ந்து அங்கிருந்தால் நாய் பாஷை யில் பாண்டித்தியம் கிடைத்துவிடும் என பயந்து வீட்டுக்கு புறப்பட தயாரானான்.
அவன் போக வெளிக்கிட மீண்டும் செல்லம் "வவ் ,வவ் ஊஊ"
"யாராவது வந்திட்டு போக வெளிக்கிட்டா எங்கன்ட செல்லத்திற்க்கு விருப்பமில்லை, அங்கிள் போயிட்டு பிறகு வருவார் அங்கிளுக்கு பாய் சொல்லு"

அட கோதாரி ,அவுஸ்க்கு வந்து நாய்க்கு அங்கிள் ஆனதுதான் மிச்சம். நல்ல வேலை மனிசி பிள்ளைகள் வரவில்லை வந்திருந்தால் ......"வவ் ஊ" :D
என நினைத்தபடி காரை ஸ்டார்ட் பண்ணினான்..... 

Thursday, October 2, 2014

மாங்காய்மண்டை + வேதாளம்

பனிக்காலத்தில் வீட்டு வளவுக்குள் அதிகமாக போவதில்லை,அன்று நல்ல வெய்யில் அடிச்சுது ஒரு கோப்பியை போட்டுகொண்டு வெளியால வந்து தோட்டத்து கதிரையில் குந்தினேன்.வீட்டினுள் இருந்த வெப்பநிலையை விட வெளியில் மிகவும் இதமாக இருந்தது.

எம்.ஜி. ஆர் காலத்து வாழை தண்டு போலஉடம்பு ஆளே,மடவாழை பாடல்களை முனுமுனுத்தபடி சீனியில்லா கோப்பியை ரசித்து குடிக்கதொடங்கினேன்.

'வேதாளம்,வேதாளம்' என சத்தம் கேட்டுது.அக்கம் பக்கம் திரும்பி பார்த்தேன் ஒருத்தரையும் காணவில்லை.
'மரமண்டை,மரமண்டை' கிழக்கு பக்கத்தில இருந்து வந்திச்சு திரும்பி அந்த பக்கத்தையும் பார்த்தேன் ஒன்றையும் காணவில்லை.
முதல்நாள் அடிச்ச தண்ணியின் வேளை போல கிடக்கு பெரும் குடிமக்கள் இதைதான் கங்கோவர் என்று சொல்லுறவங்களாக்கும் என நினைத்தபடி கோப்பியை குடித்தேன்.... 'வேதாளம்,மரமண்டை' என்ன மரம்மாதிரி நிக்கிறாய் என கோரோசா சத்தம் கேட்டுது. கோப்பி கப்பை கதிரையில வைச்சுப்போட்டு பக்கத்து சீனாகாரன்வீட்டு ,முன் வீட்டு, பின் வெள்ளைக்காரன் வீட்டு வளவுகளை எட்டிபார்த்தேன், ஒருத்தருமில்லை.
மனிசி மனசுக்குள் திட்டினாலும் நிச்சயம் இப்படி வெளிப்படையாக திட்டாமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவளையும் ஒருக்கா போய் பார்ப்போம் என உள்ளே சென்றேன் அவள் சமையல் செய்துகொண்டிருந்தாள்.
மீண்டும் சீனியில்லா கோப்பியை குடிக்க தொடங்கினேன் "அடே வேதாளம் ,நீ ஊரில இருந்துதானே வந்தனீ.....உனக்கு என்ட உசரம் ,சுற்றளவு ஒன்றும்தெரியாதோ.....உனக்கு குளிர் என்றால் கம்பளி ஆடையை போடுவாய் ,வெய்யிலென்றால் அம்மனமாய் திரிவாய் அதுதான் ஸ்டைலென்று வேறு புலம்புவாய்.....ஆனால் நாங்கள் அப்படியில்லை "
"மாங்காய்மண்டை ,சீனியில்லா கோப்பி குடிக்கிற உன்னைதான்டா,கடத்தல் மன்னன்....உவங்கள் அவுஸ்ரேலியா காரங்கள் நீங்கள் களவாய் வந்து குடியேறுவியள் என்று பல சட்டங்களை இயற்றி தடுக்கிறாங்கள் ,அதேபோல எங்களை உள்ளவிடுவதற்கும் பல சட்டங்களை உருவாக்கி கட்டுப்படுத்துகின்றார்கள் ஆனால் நீ .உள்ளாடைக்குள் சுற்றி அவங்களை உச்சிப்போட்டு எங்களை கடத்தி கொண்டுவந்து படுத்துற தொல்லை தாங்க முடியல்ல.... .என்னை கடத்தி உன்ட கூட்டாளிமாருக்கு பிலிம் காட்டுறதைவிட கஞ்சாவை கடத்தியிருந்தால் நீ இன்று கோடிஸ்வரன்....

'கஞ்சாவையா.....என்ட சிவனே'
டேய்,டேய் ஏன்டா சும்மா இருக்கிற அந்த மனுசனை இதுக்குள்ள இழுக்கிறாய்.என்னை பொறுத்தவரை சட்டவிரோதமாய் எதை செய்தாலும் குற்றம்தான் "
உன்ட ஊரில என்ட பரம்பரை எப்படி வாழ்ந்தது என்று உனக்கு தெரியும்தானே.எங்கன்ட இஸ்டத்திற்கு வளர்ந்து ,பருத்து பூத்து குலுங்கி காய்த்து கனியாகி பழமாகி எல்லோர் வாயிலும் இனித்து பேசு பொருளாக இருந்த எங்களை ஏன்டா கடத்தி கொண்டுவந்து தொல்லை தருகின்றாய். ஐந்து வருடத்திற்கு முதல் பூச்சாடி ஒன்றில என்னை புதைத்துவிட்டாய் கோடை காலம் என்றபடியால் நானும் விபரம் தெரியாமல் முளைத்துவிட்டேன்.பூச்சாடியில் பூமரங்கள்தானே வைப்பார்கள் நீ ஒருத்தன் தான் பூச்சாடியில் மாமரம் வைத்த புலம்பெயர்ந்த புண்ணாக்கு.
ஆறு மாதக் கோடையில் பூச்சாடியை வெளியே எடுத்து வைத்து மீண்டும் குளிர்காலம் என்றவுடன் உள்ளே எடுத்து வைத்து முதல் இரண்டு வருடமும் தொல்லை கொடுத்தாய் இதைப்பார்த்து பக்கத்து வீட்டு மேரி காரணம் கேட்டதற்கு ,இந்த நாட்டு காலநிலைக்கு ஏற்றவகையில் இயயைபாக்கமடைவதற்காக அப்படி செய்வதாக சொல்லி அடுத்த வருடம் வீட்டு வளவு மூலையில் நட்டுவிட்டாய்.நான் வளரக்ககூடிய வளவாடா உன்ட வீட்டு வளவு.
என்னை கடத்திகொண்டு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடமாச்சு ஒரு மீற்றருக்கு மேல வளரவில்லை.பனி,குளிர்,வெய்யில் இதெல்லாம் தாங்கி வாழ்ந்து கொண்டுருக்கிறேன் .இந்த கொடுமைகளை தாங்கி கொள்ளலாம் ஆனால் நீ நண்பர்களுடன் என்னை பற்றி பேசும் பேச்சுக்களை கேட்டு தாங்கமுடியாமல் இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன்டா... கடந்த ஆண்டு இரண்டு காய்கள் என்னால் உனக்கு தர முடிந்தது ,அதில் ஒன்று அழுகிவிட்டது மற்றது கனியானது.அதை நீ படம் எடுத்து முகப்புத்ததில் போட்டவுடன் உன் நண்பர்கள் உன்னிடம் என்னை பற்றி விசாரிக்க நீ அவர்களுக்கு விட்ட புளுகை நினைத்து நான் வெந்து வெதும்பி போனேன்டா.
உன்ட ஊர் கறுத்தகொழும்பான் நான் என்றும் அதே சுவையுடன் இருக்கிறேன் என்று சொன்னீயே அதுதான்டா என்னால் தாங்கமுடியவில்லை.அடே இந்த பனிக்கும்,வெய்யிலிலும் எப்படி உனக்கு நான் உன்ட ஊர் கறுத்த கொழும்பானின் சுவையை தரமுடியும். நீயே உன்ட கலாச்சாரத்தை பண்பாட்டை,மொழியை இழந்து நிற்கிறாய்,காரணம் கேட்டால் சொல்கின்றாய் நாட்டுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் எண்டு....ஆனால் நாங்கள் மட்டும் அதே சுவையுடன் இருக்க வேண்டும் என நினைக்கின்றாய் ,தப்பட தம்பி தப்பு.......

டேய் வேதாளம் ,சின்ன வயசில வேதாளம் முருங்கை மரத்திலெறிவிட்டது என அம்புலிமாமா கதைகள் உனக்கு சொல்லிதந்தவர்கள்தானே. உன்ட ஊர் வரன்ட பிரதேசம் அங்கு முருங்கையாகிய நான் நல்லாய்வளர்வேன் என்பது உனக்கு தெரிந்த உண்மை பிறகு ஏன் என்னை இந்த ஈரப்பதாமான நாட்டில் பரப்ப முயற்சிக்கிறாய்....
டேய் கறி! ஊரில நீ என்னை திரும்பியும் பார்க்கிறதில்லை,சாப்பாட்டுக்கோப்பையில் ஒரு கரையில தூக்கி வைத்துவிட்டு குப்பையில் எறிந்துவிடுவாய் ஆனால் இங்கு என்னை ஒரு மூலிகை மாதிரிபாவிக்கின்றாய்.நீரழிவுக்கு வியாதிக்கு கறுவேற்பிள்ளை நல்லம் என்று விளம்பரப்படுத்துகின்றாய்,ஆராச்சி செய்தா இந்த முடிவுக்கு வந்தாய் ?யாரொ சொன்னதை கேட்டு நீ ஒரு மருத்துவன் மாதிரி கதை விடுகின்றாய்.யாராவது பெண்கள் வந்தால் கொத்துக்கொத்தாக என்னை உடைத்து அவர்களிடம் கொடுப்பதுமட்டுமல்லாமல் எனது கன்றுகளையும் பிரித்துதெடுத்து அந்த பெண்களிடம் கொடுத்து நீ இன்பம் காண்கின்றாய். நீ சைட் அடிக்க நான் தான் கிடைத்தேனா?
.ஊரில வீடு சின்னது வளவு பெரியது.ஆனால் இங்கு வளவு பூராவும் வீட்டை கட்டி வைச்சுப்போட்டு ஒரு சின்ன காணித்துண்டில,மா,பிலா முருங்கை,பப்பாசி ,கறி வேற்பிள்ளை எல்லாம் வைக்கவேண்டும் என நீ ஆசைப்படுகிறாய் ,ஆனால் எங்களுக்கு ஏற்ற கால நிலையா என்று சிந்தித்து பார்த்தாயா?உன்னால் உன்னுடைய கலை,கலாச்சரம்,பண்பாடு ,வழிபாட்டு முறைகள் எல்லாம் மாற்ற முடியும் ஆனால் எங்களால் மாறவும் முடியாது மாறவும் மாட்டோம் .உங்கள் பரம்பரை பணத்திற்காகவும்,புகழுக்காகவும் உலகில் எதையும் செய்யும் ஆனால் நாங்கள் அப்படியில்லை.....எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கோடா....உங்கன்ட இஸ்டத்திற்கு எங்களை மாத்தாதைங்கோட.......பிளிஸ் please leave us alone...சா...எவ்வளவு அழகாக தமிழில்பேசின என்னை இங்கிலிசில பேச வைச்சீட்டிங்களடா.....
கறுப்பு வெள்ளை காகம் ஒன்று எனது தலையில் ஒரு கொத்து கொத்திவிட்டு பக்கத்திலிருந்த கோப்பியை தட்டிவிட்டு பறந்து போனது.திடுக்கிட்டு முழித்தேன் ஒரு 10 நிமிடம் பகல்கனவு கண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன்... 

Wednesday, September 3, 2014

கப்பல் சனம்

தம்பி ந‌ல்லாய் படிச்சு , உவன் கன‌கனின்ட மகனை போல நீயும் வெளிநாட்டுக்கு போய்மேற்படிப்பு ப‌டிச்சு டாக்டராக வந்திட வேணும் என்று கரனின் அப்பா சொல்லிகொண்டே இருப்பார்.கரன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கன‌கரின் மூத்தமகன் குகன் மருத்துவதுறையில் இறுதியாண்டு படித்திகொண்டிருந்தான்.கன‌கர் அரச உத்தியோகத்த‌ர் .இரு மகன்கள் இரு மக‌ள்கள்.மூத்தவ‌ன் குகன் அடுத்த இருவரும் பெண்கள் கடைசி கணேஸ்.
கர‌ணும் கணேஸும் ஒரே வகுப்பு ஒரே பாடசாலை இருவருக்குமிடையே ஒரு போட்டி மனபான்மை இருந்தது.
குகன் இறுதியாண்டு படிக்கும் பொழுதே ,கனகர் நல்ல சீதனத்துடன் கலியாணத்தை ஒழுங்கு படித்துவிட்டார்.பெண் சுகி மருத்துவத்துறையில் இர‌ண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தாள்.சுகி படித்து முடிந்தவுடன் கலியாணத்தை வைப்பதாக இரு தரப்பின‌ரும் உறுதி படுத்திகொண்டனர்.
குகன் ம‌ருத்துவராக கொழும்பு பொது வைத்தியசாலையில் பணி புரிய தொட‌ங்கினான். கனகருக்கு அன்றைய காலகட்டத்தில் ஆளும்கட்சியில் நல்ல செல்வாக்கு இருந்தது.அவரின் பாடசாலை நண்பன் ஒருவர் மந்திரியாக இருந்தார்.கனகரின் அரசசெல்வாக்கும் சுகியிடம் வாங்கிய சீதனபணமும் குகன் லண்டனில் மேற்படிப்பு படிக்க வழிசமைத்து கொடுத்தது.குகன் லண்டனில் தனது படிப்பை முடிக்க அதேசமயம் இலங்கையில் சுகி தனது படிப்பை முடித்தாள்.

தொலைபேசி வசதிகள் இல்லாதபடியால்,வான்கடிதங்கள் மூலம் தங்களது முத்தங்களை பகிர்ந்து கொண்டனர்.படிப்புமுடிந்தமையால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.ஆனால் கனகர் அதற்கு ஒரு தற்காலிக தடையை போட்டார்.

இலங்கைக்கு திரும்பி வந்தால் அரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் ஆனபடியால் திரும்பி வராமல் லண்டனிலயே தொடர்ந்து இருக்கும்படியும்,சுகியை லண்டனில் மேற்படிப்பு படிப்பதற்கு அனுப்புவதாவும் அங்கு வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளும்படியும் கனகர் தனது திட்டத்தை கடிதம் மூலம் அறிவித்தார்.குகனும் தந்தை சொல்படியே செய்தான்.
சுகியும் அரச செலவில் லண்டனுக்கு மேற்படிப்புக்கு சென்றாள் .மேற்படிப்பு படித்துமுடித்தவுடன் மீண்டும் தாயகம் வந்து பணிபுரிவேன் என இருவரும் சத்தியபிரமானம் எடுத்துதான் இங்கிலாந்து சென்றார்கள். லண்டன் மேட்டுக்குடி வாசிகளாக இருவரும் மாறினார்கள் .

லண்டன் வாழ்க்கையை கடிதமூலம் அறிந்த கனகர் தனது இரு மகள்மாருக்கும் லண்டன் பொறியிளாலர் மாப்பிள்ளைகளயே தேர்தெடுத்தார்.அந்த காலகட்டத்தில் "லண்டன் இஞ்னியர்மார்" சந்தையில் அதிகமாக விற்பனையில் இருந்தார்கள். சகோதரங்கள் கணேஸையும் லண்டனுக்கு மாணவவிசாவில் எடுத்தனர். டிப்லோமா,டிகிரி படிப்புகளை படித்து லண்டன் இஞ்னியரானான்.இலங்கையில் உயர்தர பரீட்சையில் நாங்கு பாடங்களிலும் சாதாரண சித்தியடைந்தவனை பிரித்தானிய கல்வி வடிமைப்பு பொறியிளாலராக்கியது.
கணேஸ் பல தடவைகள் பிரித்தானியாவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கபடவே, ஒரு குறுக்குவழியை பின்பற்ற முயற்சி செய்தான்..ஒருசிலர் வெள்ளையின பெண்களை மணமுடித்து பிரஜாவுரிமை பெற்ற பின்பு விவாகரத்து செய்துவிடுவார்கள்.அந்த முறையை கணேஸ் பின்பற்றி பிரித்தானிய பிரஜாவுரிமையானான்.
பிரித்தானியாவில் அவனது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை.
கரன் கொழும்பில் கணக்காளராக பணிபுரியும் பொழுது சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியா வந்து அகதி அந்தஸ்து கோர,அவுஸ்ரேலியா நிரந்தர வதிவிடவுரிமை கொடுத்து இருவருடங்களின் பின் பிராஜவுரிமையும் கொடுத்தது.
கரன் கணேசுடன் தொடர்பு கொண்டு அவுஸ் பலருக்கு இருவருடத்தில் பிரஜாவுரிமை கொடுப்பதாக சொல்லவே ,சுற்றுலா விசாவில் அவுரேலியாவுக்கு வந்தான்.,.அவுஸ்ரேலியா காலநிலை மிகவும் நன்றாகவே பிடித்துகொண்டது அத்துடன் ,அவனது படிப்புக்கேற்ற வேலையும் கிடைத்தது.வந்தாரை வாழவைக்கும் அவுஸ் அவனையும் அரவணைத்துகொள்ள, வெள்ளையின பெண்ணை விவாகரத்து செய்து ,அவுஸ்ரேலியா மாப்பிள்ளையானன்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்பு பலருக்கு அகதி அந்தஸ்து அவுஸ்ரேலியா வழங்கத் தொடங்கியது.சிலர் தொழில்சார் திறமைகளுடன் குடிபெயர்ந்தார்கள்.

சுபன்,கருணா அகதியா தஞ்சம் கோருகின்றனர் ,அவுஸ்ரெலியா அவர்களையும் அரவணைக்கின்றது.இருவரும் கணேசுக்கும் ,கரணுக்கும் நண்பர்களாகின்றனர் ,நால்வரும் தொடர்மாடி கட்டிடம் ஒன்றில் வீடு வாடைகிக்கு எடுத்து குடி பெயர்கினறனர்.வெள்ளிக்கிழமை மாலைவேளையில் நால்வரும் ஒன்றாக உற்சாக பாணம் அருந்துவார்கள்.வேறு சிலநண்பர்க ளும் வெளியிலிருந்து வந்துஇவர்களுடன் கலந்து உற்சாகமடைவார்கள். 
இவர்களின் தொல்லை தாங்கமுடியாமல் சிலர் பொலிஸுக்கு தகவல் கொடுக்க ,பொலிஸ் சில நடவடிக்கை எடுத்தது.இருந்தும் இவர்களின்தொல்லை தொடர்ந்துகொண்டேயிருந்தது,சமையல் வாசனை,சந்தனக்குச்சி மணம் போன்றவை சில குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது .சில குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள். வெற்றிடமான வீடுகளுக்கு நண்பர்களை குடிபெயருமாறு சிபார்சு செய்தார்கள்.தொடர்மாடிக்கட்டிடத்தின் பாதி வீடுகள் ஒரே இனங்களின் வீடுகளானது.
கரன் தாயகம் சென்று திருமணம் செய்து மனைவியை அழைத்துக்கொண்டு அவுஸ்ரேலியா திரும்பினான் .அதேதொடர்மாடிக்கட்டிடத்தில் இருவரும் தனிக்குடிதனம் சென்றார்கள்.கணேசும் தூரத்து உறவுக்கார பெண்ணை மணமுடித்து அதே தொடர்மாடிக்கடித்தில் குடிபெயர்ந்தான். இருவரின் மனைவிமாரும் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடலுக்கு தடை போட மாதத்தில் ஒருமுறை ஒன்று கூடினார்கள்.ஒரே சத்தமாகவும்,பெடியங்கள் அநேகர் வந்து போவதாலும் இந்த தொடர்மாடிக்கட்டிடத்திலிருந்து வேறு தனிவீட்டுக்கு போவோம் என மனைவிமார் சொல்ல ,தனிவீடு வாங்கி குடிபெயந்தார்கள்.
கரனும்,கணேஸும் இப்பொழுது தொடர்மாடி கட்டிடப்பக்கம் வருவதில்லை..சுபனும் ,கருணாவும் வியாபாரத்திலிடுபட்டு செல்வந்தர்களானார்கள் .அவர்களும் அந்த தொடர்மாடிப்பக்கம் போவதில்லை. சுபன் குடியுரிமை பெற்றவுடன் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்னுடன் தொடர்பில் இருந்தான் .அவள் ஒழுக்கமற்றவள் என கூறி ஊர் பெண்ணை மணமுடித்துகொண்டான்.
கருணா திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தான் .இது அவளது கணவனுக்கு தெரியவர விவாகரத்தில் அவர்களது திருமணவாழ்க்கை முடிவடைந்தது.கருணா சிறிது காலம் மெல்பேர்னில் வாழ்ந்துவிட்டு மீண்டும் தனது ஊர் பெண்ணை மனமுடித்து சிட்னியில் வாழத்தொடங்கினான்.
1990 ஆம் ஆண்டுவரை சுற்றுலா விசாவில் பலர் அவூஸ்ரேலியாவுக்கு வந்து பின்பு அகதி அந்தஸ்து கோரி ,பின்பு தங்களது குடும்பத்தை வரவழைக்கின்றனர்.சிலர் அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் குடி புகுகின்றனர்.
பிரபாவும்,மனைவியும் மத்தியகிழக்கு நாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியா வந்து இன்றுவரை அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் வாழ்கின்றார்கள். தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார்கள்.

இப்பொழுதெல்லாம் அந்த நாலு நண்பர்களும் வருடத்தில் ஒருதடவை ஒன்று கூடுவார்கள்.பிள்ளைகள் ஆரம்பபாடசாலையில் படித்திக்கொண்டிருந்தார்கள்.காலப்போக்கில் வருடத்தில் ஒருதடவை ஒன்றுகூடுவதும் இல்லாமல் போய்விட்டது.

1994/95 ஆம் ஆண்டளவில் அவுஸ்ரேலியாஅரசு, சிறிலங்கா கடவுச்சீட்டுக்காரர்களுக்கு சுற்றுலா விசா கொடுப்பதை தடுப்பதற்காக மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.
இதனால் உசாரடைந்த கடத்தல்மன்னர்கள் போலி ஆவுஸ்ரேலியா கடவுச்சீட்டு,போலி அவுஸ்ரேலியா விசா போன்றவற்றை தயாரித்து ஆள் கடத்தல் வேலை செய்தனர்.இப்படி வந்தவர்களை விமானநிலையத்திலயே தடுத்து விசாரனை செய்து முகாமுக்கு அனுப்பிவைத்தார்கள்.முகாமிலிருந்தவர்களை தொடர்மாடிக்கட்டிடத்திலிருந்தவர்கள் சென்றுபார்வையிட்டு சில உதவிகளை வழங்கியிருந்தார்கள்.சகலருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.சிலர் தொடர்மாடிக்கட்டிடத்தில் தங்களது அவுஸ்ரேலியா வாழ்க்கையை தொடங்கினார்கள். கணேஸும் கரனும் தங்களது பிள்ளைகளின் பாடசாலை வைபவம் ஒன்றில எதிர்பாராத விதமாக சந்திக்க வேண்டிவந்தது.
"ஹலோ மச்சான் உன்ட மகளுக்கு இந்த செலக்டிவ் ஸ்கூலிலயே அட்மிசன் கிடைச்சது"
"ஓமடா என்ட மகளுக்கு இஞ்சதான் கிடைச்சது ,ஒரு மார்க்ஸால் இங்க வரவேண்டி வந்திட்டது "
இருவரும் பழைய நாட்களை சிறிது நேரம் இரைமீட்டனர்.
"நீ அந்த பிளட் பக்கம் போனனீயோ"
" இல்லை,நீ "
"கடைசியா அவன் பிரபா வந்த பொழுது போனனான் "
"இப்பவும் யாராவது பழைய சனம் இருக்கோ"
"பிரபா மட்டும் அங்க இருக்கிறான் வேறு ஒருத்தருமில்லை,டூரிஸ்ட் விசாவில எங்கன்ட சனம் கனக்க வந்து அவுஸ்ரேலியாவை நாறப்பபண்ணிப்போட்டுதுகள்"
1996ஆண்டு காலகட்டத்தின் பின்பு விமானமூலம் களவாக உள் நுழைந்தவர்களில். பரமேஸ்வரனும் ஒருவன். முகவரிடம் பணம்கட்டி தாய்லாந்தில் பரமேஸ்சர்மா என பாஸ்ப்போர்ட் எடுத்து கம்போடியா சென்று அவுஸ்ரேலியா விமானத்தில் ஏறி சிட்னி விமானநிலையத்தில் வந்திறங்குகின்றான்.நோ இங்கிலிஸ் என புலம்ப ,அதிகாரிகள் விசாரனைகளை செய்து விலவூட் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.பரேமேஸ் தனது கேஸ் அதிகாரியிடம் புலிபிடிக்குது என சொல்லி ஆறு மாதத்தில் அவுஸ்ரேலியா குடியுரிமை பெறுகின்றான்,அதைதொடர்ந்து மனைவி குழந்தைககளை வரவழைக்கின்றான்.
2000ஆண்டின் பின்பு உயர்கல்வி கற்பதற்கு பலருக்கு விசா வழங்கப்படுகிறது,அப்படிவந்தவன் சண்முகநாதன்.கள்ளவேலி பாய்ந்த பொழுது கால்முறிந்த எக்ஸ்ரேயினை காட்டி புலி அடித்து கால் முறிந்தது எனக்கு நாட்டுக்கு திரும்பி போகமுடியாது மீண்டும் போனால் புலி என்னை கொன்றுவிடுவார்கள் என கேஸ் அதிகாரிகளிடம் சொல்லி நிரந்தர குடியுரிமை பெற்றுகொண்டான்.
ஏற்கனவே அவூஸ்ரேலியா விசா பெற்ற பெண்ணை திருமணம் முடித்து சுரேஸ் அவுஸ்ரேலியா குடியுரிமை பெறுகின்றான்.
இன்று தொடர்மாடிக்கட்டிடம் இருந்த பிரதேசத்தில் பெரும்பான்மையினராக கரன்,சண்முகம், பிரபா,சுரேஸ் ஆகியோரின் இனத்தவர்கள் வாழ்கின்றார்கள்.வியாபாரஸ்தாபனங்களை இந்த இனத்தவர்கள் எடுத்து நடத்துகிறார்கள். புதிதாக வருபவர்கள் அநேகர் அந்த இடத்தில் சிறுதுகாலம் வாழ்ந்துதான் வேறு இடங்களுக்கு செல்வார்கள்.
பிரபா இளைப்பாறிவிட்டான்.,அவனுக்கு தற்பொழுது அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் நாலுவீடுகள் உண்டு. சிட்னியில் அவனை எல்லோரும் "பிரபாஅண்ணே"என்றுதான் அழைப்பார்கள்.தொடர்மாடிக்கட்டிடத்தில் நீண்ட காலமாக வாழ்வதனால் இந்த பெயர் அவனுக்கு அடையாளமாக போய்விட்டது.அகதிகளாக வருபவர்களுக்கு ,முடிந்தளவு உதவிகளை செய்து கொடுப்பான்.. . அவனது மகன் மருத்துவனாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பணிபுரிகின்றான்.
கணேஸின் 55வது பிறந்தநாளை செப்பிறைஸாக செய்ய வேண்டுமென்ற காரணத்தால், கரனின் வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.கணேஸின் மனைவிதான் இந்த பிறந்தநாளை மிகவும் செப்பிறைசாக ஒழுங்கு செய்திருந்தாள்.

கணேசின் மேட்டுக்குடி நண்பர்கள், உறவினர்கள் ,தொடர்மாடிக்கட்டிட ஒரு சில நண்பர்கள் மற்றும் ,கணேஸின் நண்பிகளின் குடும்பங்கள் என அழைப்பு விடப்பட்டிருந்தது.சகலரையும் மாலை ஆறுமணிக்கு வரும்படி அன்புகட்டளை விடப்பட்டிருந்தது 
லண்டனிலிருந்து கணேஸின் சகோதரங்கள் எல்லோரும் வந்து கரனின் வீட்டில் தங்கியிருந்தார்கள்.மண்டபத்தில் வைத்து இவர்களை கண்டது கணேஸுக்கு உண்மையிலயே செப்பிறைஸாக தான் இருந்தது.சகோதரங்களை கண்ட கணேஸ் கட்டித்தழுவி முத்தமிட்டு ஆனந்தகண்ணீர் விட்டான்.
கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து பாடியபின்பு எல்லோரும் ஒண்றுகூடினார்கள்.பெண்கள் சினிமா,மற்றும் சின்னதிரை பற்றி கலந்துரையாட ஆண்கள் அரசியல் மற்றும் ஊர் உலவாரம் பேசிகொண்டிருந்தனர். 
எங்கன்ட ஆட்கள் எந்த பகுதியில் இங்க அதிகம் இருக்கினம் என குகன் கேட்டான்.
"அண்ணே அந்த பக்கம் நான் போய் 20வருடத்திற்க்கு மேல் ஆகுது "

"ஏன்டா நீ போறதில்லை"
"எங்கன்ட சனம் எங்க தான் ஒழுங்கா இருக்கு? கண்ட சனமும் அவுஸ்ரேலியாவுக்கு வந்து நாட்டை நாறப்பண்ணிபோட்டுது"

"ஓமடா லண்டனிலும் அப்படித்துதான் நான் எங்கன்ட சனத்தோட பழகுகிறதில்லை, 10% சனம் தான் ஸ்கில்ட் மைகிறேசனில எங்களை மாதிரி வந்திருக்கும் மிச்சமெல்லாம் ,களவாக அகதிகளாக வந்ததுகள்"
" ஓம் அண்ணே நீங்கள் சொல்லுறது சரிதான்....எனக்கும் பிரிடிஷ் பாஸ்போர்ட் இருந்தபடியால் உவங்கள் உடனே அவுஸ்ரேலிய சிட்டிசன்சிப் தந்திட்டாங்கள்"
இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சுபனும் ,கருணாவும் தாங்கள் அகதியாக வரவில்லை என்று எனையோரை நம்ப வைப்பதற்காக ,தாங்கள் வரும் பொழுது பிஸ்னஸ் விசா இலகுவாக கொடுத்ததாகவும் தற்பொழுது கொடுப்பதில்லை என்றும் கூறினார்கள்.
ரியலெஸ்டேட் பரா என்றால் சிட்னி யில் அவனின் இனத்தை சேர்ந்தவர்கள் யாவரும் அறிவார்கள்."பொய் என்றால் வியாபாரம் வியாபாரம் என்றால் பொய்" என்பது அவனது கொள்கை .இதனால் அவன் இன்று ஒரு புகழ்பெற்ற பிசினஸ்மான்.தனது வியாபாரமெல்லாம் எங்கன்ட சனத்தொடுதான் என மனசாட்சிக்கு விரோதமில்லாது சொன்னான்.
'நொக்கியா சண்' என்று தான் சண்முகநாதன் அழைக்கப்டுகின்றான் அந்த கொம்பனியின் பிராந்திய முகாமையாளராக பணிபுரின்றான்,.

"பிராபாஅண்ணே நீங்கள் எப்படித்தான் அந்த ஏரியாவில் இன்னும் இருக்கிறீங்களோ தெரியவில்லை நாங்கள் இருக்கும் பொழுது அந்த இடம் எவ்வளவு பிஸ்புல்லா இருந்தது."என கரன் கேட்டான்

"எனக்கு என்றால் இப்பவும் அப்படித்தான் இருக்கு போல தெரிகின்றது"

"உந்த கப்பல் சனம் வந்த பிறகு சரியான மோசம்.....ஒரு வெள்ளை பெட்டை போக கூட்டமாக நின்று பார்த்துகொண்டு நிக்குதுகள்"என கணேஸ் சொன்னான்.
"அடே நீ இதை சொல்லுறாய் கலியாணம்கட்டின மனிசிகளை பார்த்தே விசில் அடிக்கிறாங்கள் " என்றான் கருணா.
"உந்த கப்பல்சனம் எல்லாச்சாதி பெட்டைகளையும் எல்லோ பார்க்கிறாங்கள்"என்றான் சுபன்...... ..
"என்னட்ட வேலை கேட்டும், வீடு வாடாகைக்கும் கேட்டு சிலதுகள் வாரதுகள் ,சிலபேருக்கு வேலை எடுத்து கொடுத்திருக்கிறேன் " என்றான் ரியல்ஸ்டெ பரா.
"கடந்த கிழமை ஒரு பொம்பிளையை கட்டிப்பிடிச்சது என்று கப்பலில் வந்த பெடியனை டி.வி யில் காட்டினாங்கள்" என்றான் நொக்கியா சண்..
பக்கத்தில் நின்ற பதின்மவயது இளைஞனை அழைத்த பிரபா.இவன் கஜன், இவனது குடும்பம் கப்பல் மூலம் 2008 ஆண்டு இங்கு வந்தவர்கள் ,அப்பொழுது இவன் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் இரண்டுதடவை அதேவகுப்பில் படித்தான் .இன்று மருத்துவபீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயில்கின்றான்..... அவனது தங்கை சட்டக்கல்வி பயில்கின்றாள்.என அவனை அந்த கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தான் பிரபா........ அங்கு இருந்த அங்கிள்மார்,அண்ரிமாரின் கண்கள் யாவும் அவனே நோக்கின..... 
இந்த கூட்டத்தின் மத்தியில் எழுத்தாளன் சுரேசும் இருந்தான் :D :D 

Tuesday, July 1, 2014

எல்லாம் 'இ' மயம்....

தொலைபேசி தொல்லை கொடுக்க எடுத்து "கலோ  இங்க  சுரேஸ்  அங்க  யார் ?"
"இங்க  லாதா  உங்க  திருமதி சுதா சுரேஸ் இருக்கிறாவோ"என்றாள்  நக்கலா.
சுரேஸும்  பதில்  நக்கலாக
"திருமதி சுதா இருக்கவில்லை  படுத்திருக்கின்றா"
"சும்மா பகிடியை  விட்டிட்டு டெலிபோனை அவளிட்ட கொடுங்கோ "எதோ அவசரமாக  பேசபோகினமாக்கும் என்று நினைத்து  டெல்போனை சுதாவிடம் கொடுத்தான்.சுதாவும் ,லதாவும் பாடசாலை காலத்திலிருந்தே நண்பிகள்.புலம்பெயர்ந்த  பின்பும்  அவர்களின் நட்பு ஒகோ என கொடி கட்டி பறக்கின்றது.
புலம்பெயர்ந்த  காலத்தில் இவர்களின் உரையாடல் ஆறுமாதத்திற்கு ஒருக்கா அல்லது ஒரு வருடத்திற்கு ஒருக்கா என்றுதான் இருந்தது. காரணம் தொலைபேசி கட்டணம்  அந்த  காலகட்டத்தில்  அதிகமாக இருந்தமையாகும். இன்று இவர்களின் தொடர்பு குறைந்தது கிழமைக்கு இரண்டு என சொல்லலாம்.முகப்புத்தகம்,மின்னஞ்ஞல்,தொலைபேசி,ஸ்கைப்,வேஸ்டைம் போன்றவற்றின் மூலம் இவர்கள் நட்பை வளர்த்துகொண்டிருக்கின்றனர்.
இவர்கள் அப்படி என்னதான் உரையாடி,எழுதி நட்பை வளர்க்கிறார்கள் என நீங்கள் நினைப்பது போலத்தான் சுரேஸும் நினைத்தான்,ஆனால் இப்ப புரிந்துவிட்டது. இப்ப லதா ஊரில நிற்கின்றாள் அங்கிருந்துதான் இந்த தொலைபேசி அழைப்பு.
"அடியே இன்னும் நித்திரையா,உங்க எத்தனை மணி இப்ப?"
"இந்த மனுசன் சும்மா சொல்லுது நான் எழும்பி சமைச்சுபோட்டு கண்ணயர்ந்தனான், அதுசரி ஊர் எப்படியிருக்கு "
"எல்லாம் நல்லாயிருக்கு, வேஸ்புக்கில் எங்கன்ட படங்கள் போட்டிருக்கிறேன் போய் பாரடி ,உன்ட குரலை கேட்டு கனகாலமாச்சு அதுதான் எடுத்தனான்....பாய்...சீயு "

ஒரு கிழமைக்கு முதல் தான் குடும்பமாக கனடாவிலிருந்து ஊருக்கு போனவர்கள் .போகமுதல் இருவரும் ஸ்கைப்பில் அரைமணித்தியாலத்திற்கு மேல் உரையாடியிருப்பார்கள்.ஊருக்கு கொண்டு செல்ல வாங்கிய பொருட்கள் கூட நண்பிக்கு ஸ்கைப் ஊடாக காட்டப்பட்டது. லதாவுடன் ஸ்கைப்பில் கதைத்தபின்பு ஒரு பெருமூச்சு விட்ட சுதா ,இவள் லதா அடுத்துஅடுத்து ஊருக்கு போறாள் ,நாங்கள் தான் இன்னும் ஊருக்கு போகாமல் இருக்கிறோம் என்றாள்.அவளை சமாதானப்படுத்துவதற்காக உமக்குத்தானே ஊரில ஒருத்தருமில்லை பிறகு ஏன் ஊருக்கு போவான் என்றான்.
திரும்பி முறைத்து பார்த்துவிட்டு ஒருத்தரும் இல்லையோ என்ட ஒன்றுவிட்ட சித்தி அங்கதான் இருக்கிறா.....அதுமட்டுமல்ல எங்கன்ட ஊர் கோவில் அப்படியே இருக்கு ,அந்த அம்மாளாச்சியின் கருணையால் தான் நாங்கள் இங்க வந்தனாங்கள் இல்லாவிட்டால் ஊரில் இருந்து புலி ஆர்மி சண்டையில் செத்திருப்போம்.புலிக்கும் ஆர்மிக்கும் வேறவேலையில்லாமல் சண்டைபிடிச்சவங்கள் என மனதில் எண்ணியபடியே சரியப்பா இன்னும் இரண்டு வருசாத்தால போவம் என்றான். உப்படிதான் இப்ப நாலு வருசமா சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்.என சொல்லியபடியே பேஸ்புக்கில நண்பியின் பக்கதிற்கு சென்றுவிட்டாள்.
அவர்கள் பயணம் செய்த அன்று சுதாவின் ஐ.போன் பலதடவை சிணுங்கியது.முதல் சிணுங்களுக்கு ஐ போனை எடுத்து இலையான் கலைப்பது போல ஒரு தட்டு தட்டினாள் இரண்டு படங்கள் வந்திருந்தன.ஒன்று லதா காரில் ஏறும் பொழுது எடுத்த படம்.மற்றது அவர்கள் குடும்பமாக விமானநிலயத்திற்கு காரில் செல்லும் படம்.மீண்டும் அரைமணித்தியாலத்தின் பின்பு அதே சிணுங்கள்,அதே இலையான் கலைப்பு இந்த தடவை விமானநிலையத்தின் கருமப்பீடத்தில் நின்று கடவுச்சீட்டை கொடுக்கும் பொழுது எடுத்த படமும்,விமானத்தின் இருக்கையில் எல்லோரும் இருந்தபடி விதம்விதமான நிலைகளில் அனுப்பியிருந்தார்கள். இரண்டுமூன்று மணித்தியாலமாக அலைபேசி சிணுங்கவில்லை.
" லதா வேற படம் ஒன்றும் அனுப்பவில்லயோ"
"ரொம்ப முக்கியம் ...."என்றாள்
"இல்லை அனுப்பியிருந்தா விமானப்பணிப்பெண்களை சும்மா பார்ப்போம் என்றுதான்"
"உந்த வயசிலயும் அலையாதைங்கோ"
விமானத்தில் பாவிச்சா காசு கட்ட வேணும் அதுதான் அவள் எடுக்கவில்லை ப்போல கிடக்குது.என சுதா சொல்லிவிட்டு நித்திரைக்கு சென்றுவிட்டாள்.
லதாவின் முகபுத்தகத்தில் பல போட்டோக்கள் அப்லோட் பண்ணப்பட்டிருந்தது.
சுரேஸ் படங்களை பார்த்து கொண்டிருக்கும் பொழுது சுதாவும் வந்து பார்க்கத்தொடங்கினாள்.விமானத்தின் கழிவறை படத்தை தவிர எனைய படங்கள் யாவும் போடப்பட்டிருந்தது.அத்துடன் கட்டுநாயக்க விமானநிலையம் அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலின் படம் போன்றவையும் காட்சியளித்தது.
"உதுக்கு என்ன கொமனட் போடலாம்"
"ஒரு கொமனட்டும் போடதேவையில்லை,நீங்கள் உங்கன்ட வேலையை பாருங்கோ "
"அதுகள் கஸ்டப்பட்டு படமெடுத்து போட்டிருக்குதுகள் அட்லீஸ் ஒரு லைக் ஆவது போடுவோம்"
"சரி சரி போட்டு தொலையுங்கோ"
"உம்மட சினேகிதானே எதோ என்ட பிரன்ட் மாதிரி அலுத்துகொள்கிறீர்"உங்களோட நின்று சும்மா சண்டை பிடிச்சுகொண்டிருக்க ஏலாது .நீங்கள் பார்த்தி ட்டு விடுங்கோ , அவள் இப்ப கோவிலில் நிற்கிறாள் திருவிழா படங்கள் எடுத்து அனுப்புறன் என்றவள் .நான் குளிச்சு போட்டு வந்து ஆறுதலாக பார்க்கவேணும் என்று கூறியபடி குளிக்க சென்றாள். இரண்டுநாள் கொழும்பில் நின்றுவிட்டு ஊருக்கு சென்ற லதா அங்கிருந்து இப்பொழுது ஊர் திருவிழா நேர்முக வர்ணனை அதாவது ஸ்நப் சட் செய்கின்றாள்.தொழில்நுட்பம் அதிகமாக முன்னேறியபடியால் இருவரின் நட்பும் முன்னேறிக்கொண்டு செல்லுகின்றது.குளித்து பக்தி பரவசமாக நெற்றியில் விபூதி,குங்குமத்துடன் கணனியின் முன் அமர்ந்து நண்பி லதாவின் முகநூலுக்கு பின்னூட்டம் இட்டுகொண்டிருந்தாள்.அருகில் வைத்திருந்த ஐ.போன் சினுங்கியது.மெல்லிய தட்டு தட்டினாள் திரையில் அம்மன் காட்சியளித்தாள் என்ட அம்மாளாச்சி என உரத்த குரலில் கூறியபடியே இரு கைகூப்பி வணங்கினபடியே,இஞ்சாருங்கோப்பா எங்கன்ட அம்மாளாச்சியை ஒடிவந்து கும்பிடுங்கோ என சுரேசை அழைத்தாள்.பல கோணங்களில் அம்மனின் திருவுருவத்தை படமெடுத்து அனுப்பிகொண்டிருந்தாள் லதா. இவள் பதிலுக்கு நன்றி தெரிவித்தபடியே இருந்தாள் ,இறுதியாக செய்தி அனுப்பியிருந்தாள் நாளை தேர் திருவிழா காலை 10 மணிக்கு நடை பெறும் அந்த நிகழ்வின் படங்களையும் அனுப்புவதாக எழுதியிருந்தாள்.
அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐ.போன் சிணுங்கியது.தேர்திருவிழா படங்களை பலவித கோணத்தில் அனுப்பிகொண்டிருந்தாள்.இவள் அம்மனின் தேர்திருவிழா பார்க்க போனவளா அல்லது நண்பிக்கு படம் அனுப்ப போனவளா என்ற சந்தேகம் சுரேஸுக்கு ஏற்பட்டது.அவனது சந்தேகத்திலும் நியாயம் இருந்தது.அம்மனின் நகையையும், சேலையை பற்றியும் இருவரும் அலசிஆராய்ந்து கொண்டிருந்தனர். அம்மனையும்,கோவிலையும் பற்றி விடுப்புக்கள் முடிந்த பின்பு. வந்திருந்த மக்கள் கூட்டத்தை படமெடுத்து அனுப்பி அவர்களை பற்றிய விவரணங்கள் தொடங்கின.
"இந்த படத்தில ஒரு மொட்டை தலை நிற்குது யாரென்று தெரியுதே"
"இல்லையடி , யாரது?"
"முந்தி எங்களுக்கு பின்னால திரிஞ்ச மதன்"
"அடியே அவனே நல்லாய் கிழன்டுபோனான்"
'உவையள் எதோ இளமையா இருக்கினம் அவன் கிழன்டுபோனானாம்' ,புலம்பெயர்ந்த பிரதேசத்தில் விற்பனையாகும் அலங்காரங்களை வாங்கி பூசிக்கொண்டு தாங்கள் இளமையாக இருக்கிறம் என்ற நினைப்பு ..... உவையளின்ட இளமையின் ரகசியம் எங்களுக்குத்தானே தெரியும் என எண்ணிகொண்டு தனது கணனியில் மூழ்கிபோனான் சுரேஸ்இறுதியாக இன்னும் இரு தினங்களின்பின்பு இந்தியா மற்றும் சிங்கப்பூர் சென்ற பின்பு கனடா செல்வதாகவும் என்ற செய்தியை போட்டிருந்தாள்.
நல்லூர்,கீரிமலை மற்றும் கதிர்காமம்,தென்னிலங்கையில் சென்று வந்த பிரசித்தி பெற்ற இடங்கள் யாவும் முகபுத்தகத்தில் தறவேற்றப்பட்டிருந்தது .
இந்தியாவிலிருந்தும் தான் சென்ற கோவில்களின் படங்ளை அனுப்பியிருந்தாள்.அடுத்து அடுத்து அனுப்பிய படங்களை பார்க்கும் பொழுது சுரேஸின் நெஞ்சு கொஞ்சம் படபடக்க தொடங்கிவிட்டது.இருந்தும் இயல்புநிலைக்கு வந்திட்டான்,இப்பொழுது இந்தியாவுக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படாது ஆகவே அதை வாங்க வேண்டிய சூழலில்லை என பெருமூச்சு விட்டவனுக்கு
"இஞ்சாருங்கோப்பா இந்த சீலையும்,சுரிதாரும் நல்லாயிருக்கு வாங்கப்போரன்"
"சரி போகும் பொழுது வாங்குவம்"
"போகும் பொழுதோ?,இன்டநெற்றில ஓடர் பண்ணினால் நாலு நாளில் வீட்டை சமான் வந்திடும் " .
வாங்குவதை தடுப்பதற்காக " நம்பி காசை கட்டலமோ தெரியாது,அது போக கலர்களை மாறி அனுப்பிபோடுவாங்கள்"
"இங்க இருந்து வேறு ஆட்களும் இன்டநெற்றில் சமான்கள் எடுத்திருக்கினம்,உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சந்தேகம்"
"சரி ஒடர்பண்ணி வாங்கும் " என பச்சை கொடி காட்டினான்.
சிங்கப்பூர் சென்ற லதா சிரங்கூன் நகர நகைக்கடைகளில் உள்ள நகைகளை படமெடுத்து அனுப்பியிருந்தாள்.இதையும் இன்றநெற் மூலம் எடுக்கப்போறாளோ என சுரேஸ் பயப்பட்டான்.ஆனால் நகைகளை தபால் மூலம் எடுப்பது நல்லதல்ல நகைகளை நாம் சிங்கபூர் செல்லும்பொழுது வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என லதா சொன்னது அவனுக்கு நிம்மதியை தந்தது.
.+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
30 வருடங்களுக்கு முதல் சுரேஸின் மூத்தசகோதரன் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைவாய்ப்பு கிடைத்து சென்ற பொழுது அவனது தாயார் ஏங்கிய ஏக்கம் நினைவில் வந்தது. சகோதரன் சென்று எட்டு நாட்களின்பின்பு 'சுகமாக வந்து சேர்ந்தேன்' என எழுதிய கடிதம் கிடைக்க பெற்ற பிறகுதான் தாயார் நிம்மதியாக உணவு உண்டாள்.
சுரேஸ் சிறுவனாக இருக்கும்பொழுது கடைக்கு சமான் வாங்க சென்றால் மனப்பாடம் செய்து கொண்டு செல்வான்,கடைக்கு சென்றவுடன் மறந்து விடுவான் ,அல்லது பிழையான பொருளை வாங்கிகொண்டு வந்திடுவான் .அதை மாற்றி எடுப்பதற்கோ அல்லது மறந்த பொருளை வாங்குவதற்கு மீண்டும் செல்வான்.ஆனால் இன்று .....எல்லாம் இ மயம்....