தம்பி நல்லாய் படிச்சு , உவன் கனகனின்ட மகனை போல நீயும் வெளிநாட்டுக்கு போய்மேற்படிப்பு படிச்சு டாக்டராக வந்திட வேணும் என்று கரனின் அப்பா சொல்லிகொண்டே இருப்பார்.கரன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கனகரின் மூத்தமகன் குகன் மருத்துவதுறையில் இறுதியாண்டு படித்திகொண்டிருந்தான்.கனகர் அரச உத்தியோகத்தர் .இரு மகன்கள் இரு மகள்கள்.மூத்தவன் குகன் அடுத்த இருவரும் பெண்கள் கடைசி கணேஸ்.
கரணும் கணேஸும் ஒரே வகுப்பு ஒரே பாடசாலை இருவருக்குமிடையே ஒரு போட்டி மனபான்மை இருந்தது.
குகன் இறுதியாண்டு படிக்கும் பொழுதே ,கனகர் நல்ல சீதனத்துடன் கலியாணத்தை ஒழுங்கு படித்துவிட்டார்.பெண் சுகி மருத்துவத்துறையில் இரண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தாள்.சுகி படித்து முடிந்தவுடன் கலியாணத்தை வைப்பதாக இரு தரப்பினரும் உறுதி படுத்திகொண்டனர்.
குகன் மருத்துவராக கொழும்பு பொது வைத்தியசாலையில் பணி புரிய தொடங்கினான். கனகருக்கு அன்றைய காலகட்டத்தில் ஆளும்கட்சியில் நல்ல செல்வாக்கு இருந்தது.அவரின் பாடசாலை நண்பன் ஒருவர் மந்திரியாக இருந்தார்.கனகரின் அரசசெல்வாக்கும் சுகியிடம் வாங்கிய சீதனபணமும் குகன் லண்டனில் மேற்படிப்பு படிக்க வழிசமைத்து கொடுத்தது.குகன் லண்டனில் தனது படிப்பை முடிக்க அதேசமயம் இலங்கையில் சுகி தனது படிப்பை முடித்தாள்.
தொலைபேசி வசதிகள் இல்லாதபடியால்,வான்கடிதங்கள் மூலம் தங்களது முத்தங்களை பகிர்ந்து கொண்டனர்.படிப்புமுடிந்தமையால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.ஆனால் கனகர் அதற்கு ஒரு தற்காலிக தடையை போட்டார்.
இலங்கைக்கு திரும்பி வந்தால் அரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் ஆனபடியால் திரும்பி வராமல் லண்டனிலயே தொடர்ந்து இருக்கும்படியும்,சுகியை லண்டனில் மேற்படிப்பு படிப்பதற்கு அனுப்புவதாவும் அங்கு வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளும்படியும் கனகர் தனது திட்டத்தை கடிதம் மூலம் அறிவித்தார்.குகனும் தந்தை சொல்படியே செய்தான்.
சுகியும் அரச செலவில் லண்டனுக்கு மேற்படிப்புக்கு சென்றாள் .மேற்படிப்பு படித்துமுடித்தவுடன் மீண்டும் தாயகம் வந்து பணிபுரிவேன் என இருவரும் சத்தியபிரமானம் எடுத்துதான் இங்கிலாந்து சென்றார்கள். லண்டன் மேட்டுக்குடி வாசிகளாக இருவரும் மாறினார்கள் .
லண்டன் வாழ்க்கையை கடிதமூலம் அறிந்த கனகர் தனது இரு மகள்மாருக்கும் லண்டன் பொறியிளாலர் மாப்பிள்ளைகளயே தேர்தெடுத்தார்.அந்த காலகட்டத்தில் "லண்டன் இஞ்னியர்மார்" சந்தையில் அதிகமாக விற்பனையில் இருந்தார்கள். சகோதரங்கள் கணேஸையும் லண்டனுக்கு மாணவவிசாவில் எடுத்தனர். டிப்லோமா,டிகிரி படிப்புகளை படித்து லண்டன் இஞ்னியரானான்.இலங்கையில் உயர்தர பரீட்சையில் நாங்கு பாடங்களிலும் சாதாரண சித்தியடைந்தவனை பிரித்தானிய கல்வி வடிமைப்பு பொறியிளாலராக்கியது.
கணேஸ் பல தடவைகள் பிரித்தானியாவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கபடவே, ஒரு குறுக்குவழியை பின்பற்ற முயற்சி செய்தான்..ஒருசிலர் வெள்ளையின பெண்களை மணமுடித்து பிரஜாவுரிமை பெற்ற பின்பு விவாகரத்து செய்துவிடுவார்கள்.அந்த முறையை கணேஸ் பின்பற்றி பிரித்தானிய பிரஜாவுரிமையானான்.
பிரித்தானியாவில் அவனது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை.
கரன் கொழும்பில் கணக்காளராக பணிபுரியும் பொழுது சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியா வந்து அகதி அந்தஸ்து கோர,அவுஸ்ரேலியா நிரந்தர வதிவிடவுரிமை கொடுத்து இருவருடங்களின் பின் பிராஜவுரிமையும் கொடுத்தது.
கரன் கணேசுடன் தொடர்பு கொண்டு அவுஸ் பலருக்கு இருவருடத்தில் பிரஜாவுரிமை கொடுப்பதாக சொல்லவே ,சுற்றுலா விசாவில் அவுரேலியாவுக்கு வந்தான்.,.அவுஸ்ரேலியா காலநிலை மிகவும் நன்றாகவே பிடித்துகொண்டது அத்துடன் ,அவனது படிப்புக்கேற்ற வேலையும் கிடைத்தது.வந்தாரை வாழவைக்கும் அவுஸ் அவனையும் அரவணைத்துகொள்ள, வெள்ளையின பெண்ணை விவாகரத்து செய்து ,அவுஸ்ரேலியா மாப்பிள்ளையானன்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்பு பலருக்கு அகதி அந்தஸ்து அவுஸ்ரேலியா வழங்கத் தொடங்கியது.சிலர் தொழில்சார் திறமைகளுடன் குடிபெயர்ந்தார்கள்.
சுபன்,கருணா அகதியா தஞ்சம் கோருகின்றனர் ,அவுஸ்ரெலியா அவர்களையும் அரவணைக்கின்றது.இருவரும் கணேசுக்கும் ,கரணுக்கும் நண்பர்களாகின்றனர் ,நால்வரும் தொடர்மாடி கட்டிடம் ஒன்றில் வீடு வாடைகிக்கு எடுத்து குடி பெயர்கினறனர்.வெள்ளிக்கிழமை மாலைவேளையில் நால்வரும் ஒன்றாக உற்சாக பாணம் அருந்துவார்கள்.வேறு சிலநண்பர்க ளும் வெளியிலிருந்து வந்துஇவர்களுடன் கலந்து உற்சாகமடைவார்கள்.
இவர்களின் தொல்லை தாங்கமுடியாமல் சிலர் பொலிஸுக்கு தகவல் கொடுக்க ,பொலிஸ் சில நடவடிக்கை எடுத்தது.இருந்தும் இவர்களின்தொல்லை தொடர்ந்துகொண்டேயிருந்தது,சமையல் வாசனை,சந்தனக்குச்சி மணம் போன்றவை சில குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது .சில குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தார்கள். வெற்றிடமான வீடுகளுக்கு நண்பர்களை குடிபெயருமாறு சிபார்சு செய்தார்கள்.தொடர்மாடிக்கட்டிடத்தின் பாதி வீடுகள் ஒரே இனங்களின் வீடுகளானது.
கரன் தாயகம் சென்று திருமணம் செய்து மனைவியை அழைத்துக்கொண்டு அவுஸ்ரேலியா திரும்பினான் .அதேதொடர்மாடிக்கட்டிடத்தில் இருவரும் தனிக்குடிதனம் சென்றார்கள்.கணேசும் தூரத்து உறவுக்கார பெண்ணை மணமுடித்து அதே தொடர்மாடிக்கடித்தில் குடிபெயர்ந்தான். இருவரின் மனைவிமாரும் வெள்ளிக்கிழமை ஒன்றுகூடலுக்கு தடை போட மாதத்தில் ஒருமுறை ஒன்று கூடினார்கள்.ஒரே சத்தமாகவும்,பெடியங்கள் அநேகர் வந்து போவதாலும் இந்த தொடர்மாடிக்கட்டிடத்திலிருந்து வேறு தனிவீட்டுக்கு போவோம் என மனைவிமார் சொல்ல ,தனிவீடு வாங்கி குடிபெயந்தார்கள்.
கரனும்,கணேஸும் இப்பொழுது தொடர்மாடி கட்டிடப்பக்கம் வருவதில்லை..சுபனும் ,கருணாவும் வியாபாரத்திலிடுபட்டு செல்வந்தர்களானார்கள் .அவர்களும் அந்த தொடர்மாடிப்பக்கம் போவதில்லை. சுபன் குடியுரிமை பெற்றவுடன் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்னுடன் தொடர்பில் இருந்தான் .அவள் ஒழுக்கமற்றவள் என கூறி ஊர் பெண்ணை மணமுடித்துகொண்டான்.
கருணா திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தான் .இது அவளது கணவனுக்கு தெரியவர விவாகரத்தில் அவர்களது திருமணவாழ்க்கை முடிவடைந்தது.கருணா சிறிது காலம் மெல்பேர்னில் வாழ்ந்துவிட்டு மீண்டும் தனது ஊர் பெண்ணை மனமுடித்து சிட்னியில் வாழத்தொடங்கினான்.
1990 ஆம் ஆண்டுவரை சுற்றுலா விசாவில் பலர் அவூஸ்ரேலியாவுக்கு வந்து பின்பு அகதி அந்தஸ்து கோரி ,பின்பு தங்களது குடும்பத்தை வரவழைக்கின்றனர்.சிலர் அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் குடி புகுகின்றனர்.
பிரபாவும்,மனைவியும் மத்தியகிழக்கு நாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் அவுஸ்ரேலியா வந்து இன்றுவரை அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் வாழ்கின்றார்கள். தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார்கள்.
இப்பொழுதெல்லாம் அந்த நாலு நண்பர்களும் வருடத்தில் ஒருதடவை ஒன்று கூடுவார்கள்.பிள்ளைகள் ஆரம்பபாடசாலையில் படித்திக்கொண்டிருந்தார்கள்.காலப்போக்கில் வருடத்தில் ஒருதடவை ஒன்றுகூடுவதும் இல்லாமல் போய்விட்டது.
1994/95 ஆம் ஆண்டளவில் அவுஸ்ரேலியாஅரசு, சிறிலங்கா கடவுச்சீட்டுக்காரர்களுக்கு சுற்றுலா விசா கொடுப்பதை தடுப்பதற்காக மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது.
இதனால் உசாரடைந்த கடத்தல்மன்னர்கள் போலி ஆவுஸ்ரேலியா கடவுச்சீட்டு,போலி அவுஸ்ரேலியா விசா போன்றவற்றை தயாரித்து ஆள் கடத்தல் வேலை செய்தனர்.இப்படி வந்தவர்களை விமானநிலையத்திலயே தடுத்து விசாரனை செய்து முகாமுக்கு அனுப்பிவைத்தார்கள்.முகாமிலிருந்தவர்களை தொடர்மாடிக்கட்டிடத்திலிருந்தவர்கள் சென்றுபார்வையிட்டு சில உதவிகளை வழங்கியிருந்தார்கள்.சகலருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது.சிலர் தொடர்மாடிக்கட்டிடத்தில் தங்களது அவுஸ்ரேலியா வாழ்க்கையை தொடங்கினார்கள். கணேஸும் கரனும் தங்களது பிள்ளைகளின் பாடசாலை வைபவம் ஒன்றில எதிர்பாராத விதமாக சந்திக்க வேண்டிவந்தது.
"ஹலோ மச்சான் உன்ட மகளுக்கு இந்த செலக்டிவ் ஸ்கூலிலயே அட்மிசன் கிடைச்சது"
"ஓமடா என்ட மகளுக்கு இஞ்சதான் கிடைச்சது ,ஒரு மார்க்ஸால் இங்க வரவேண்டி வந்திட்டது "
இருவரும் பழைய நாட்களை சிறிது நேரம் இரைமீட்டனர்.
"நீ அந்த பிளட் பக்கம் போனனீயோ"
" இல்லை,நீ "
"கடைசியா அவன் பிரபா வந்த பொழுது போனனான் "
"இப்பவும் யாராவது பழைய சனம் இருக்கோ"
"பிரபா மட்டும் அங்க இருக்கிறான் வேறு ஒருத்தருமில்லை,டூரிஸ்ட் விசாவில எங்கன்ட சனம் கனக்க வந்து அவுஸ்ரேலியாவை நாறப்பபண்ணிப்போட்டுதுகள்"
1996ஆண்டு காலகட்டத்தின் பின்பு விமானமூலம் களவாக உள் நுழைந்தவர்களில். பரமேஸ்வரனும் ஒருவன். முகவரிடம் பணம்கட்டி தாய்லாந்தில் பரமேஸ்சர்மா என பாஸ்ப்போர்ட் எடுத்து கம்போடியா சென்று அவுஸ்ரேலியா விமானத்தில் ஏறி சிட்னி விமானநிலையத்தில் வந்திறங்குகின்றான்.நோ இங்கிலிஸ் என புலம்ப ,அதிகாரிகள் விசாரனைகளை செய்து விலவூட் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.பரேமேஸ் தனது கேஸ் அதிகாரியிடம் புலிபிடிக்குது என சொல்லி ஆறு மாதத்தில் அவுஸ்ரேலியா குடியுரிமை பெறுகின்றான்,அதைதொடர்ந்து மனைவி குழந்தைககளை வரவழைக்கின்றான்.
2000ஆண்டின் பின்பு உயர்கல்வி கற்பதற்கு பலருக்கு விசா வழங்கப்படுகிறது,அப்படிவந்தவன் சண்முகநாதன்.கள்ளவேலி பாய்ந்த பொழுது கால்முறிந்த எக்ஸ்ரேயினை காட்டி புலி அடித்து கால் முறிந்தது எனக்கு நாட்டுக்கு திரும்பி போகமுடியாது மீண்டும் போனால் புலி என்னை கொன்றுவிடுவார்கள் என கேஸ் அதிகாரிகளிடம் சொல்லி நிரந்தர குடியுரிமை பெற்றுகொண்டான்.
ஏற்கனவே அவூஸ்ரேலியா விசா பெற்ற பெண்ணை திருமணம் முடித்து சுரேஸ் அவுஸ்ரேலியா குடியுரிமை பெறுகின்றான்.
இன்று தொடர்மாடிக்கட்டிடம் இருந்த பிரதேசத்தில் பெரும்பான்மையினராக கரன்,சண்முகம், பிரபா,சுரேஸ் ஆகியோரின் இனத்தவர்கள் வாழ்கின்றார்கள்.வியாபாரஸ்தாபனங்களை இந்த இனத்தவர்கள் எடுத்து நடத்துகிறார்கள். புதிதாக வருபவர்கள் அநேகர் அந்த இடத்தில் சிறுதுகாலம் வாழ்ந்துதான் வேறு இடங்களுக்கு செல்வார்கள்.
பிரபா இளைப்பாறிவிட்டான்.,அவனுக்கு தற்பொழுது அந்த தொடர்மாடிக்கட்டிடத்தில் நாலுவீடுகள் உண்டு. சிட்னியில் அவனை எல்லோரும் "பிரபாஅண்ணே"என்றுதான் அழைப்பார்கள்.தொடர்மாடிக்கட்டிடத்தில் நீண்ட காலமாக வாழ்வதனால் இந்த பெயர் அவனுக்கு அடையாளமாக போய்விட்டது.அகதிகளாக வருபவர்களுக்கு ,முடிந்தளவு உதவிகளை செய்து கொடுப்பான்.. . அவனது மகன் மருத்துவனாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பணிபுரிகின்றான்.
கணேஸின் 55வது பிறந்தநாளை செப்பிறைஸாக செய்ய வேண்டுமென்ற காரணத்தால், கரனின் வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.கணேஸின் மனைவிதான் இந்த பிறந்தநாளை மிகவும் செப்பிறைசாக ஒழுங்கு செய்திருந்தாள்.
கணேசின் மேட்டுக்குடி நண்பர்கள், உறவினர்கள் ,தொடர்மாடிக்கட்டிட ஒரு சில நண்பர்கள் மற்றும் ,கணேஸின் நண்பிகளின் குடும்பங்கள் என அழைப்பு விடப்பட்டிருந்தது.சகலரையும் மாலை ஆறுமணிக்கு வரும்படி அன்புகட்டளை விடப்பட்டிருந்தது
லண்டனிலிருந்து கணேஸின் சகோதரங்கள் எல்லோரும் வந்து கரனின் வீட்டில் தங்கியிருந்தார்கள்.மண்டபத்தில் வைத்து இவர்களை கண்டது கணேஸுக்கு உண்மையிலயே செப்பிறைஸாக தான் இருந்தது.சகோதரங்களை கண்ட கணேஸ் கட்டித்தழுவி முத்தமிட்டு ஆனந்தகண்ணீர் விட்டான்.
கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து பாடியபின்பு எல்லோரும் ஒண்றுகூடினார்கள்.பெண்கள் சினிமா,மற்றும் சின்னதிரை பற்றி கலந்துரையாட ஆண்கள் அரசியல் மற்றும் ஊர் உலவாரம் பேசிகொண்டிருந்தனர்.
எங்கன்ட ஆட்கள் எந்த பகுதியில் இங்க அதிகம் இருக்கினம் என குகன் கேட்டான்.
"அண்ணே அந்த பக்கம் நான் போய் 20வருடத்திற்க்கு மேல் ஆகுது "
"ஏன்டா நீ போறதில்லை"
"எங்கன்ட சனம் எங்க தான் ஒழுங்கா இருக்கு? கண்ட சனமும் அவுஸ்ரேலியாவுக்கு வந்து நாட்டை நாறப்பண்ணிபோட்டுது"
"ஓமடா லண்டனிலும் அப்படித்துதான் நான் எங்கன்ட சனத்தோட பழகுகிறதில்லை, 10% சனம் தான் ஸ்கில்ட் மைகிறேசனில எங்களை மாதிரி வந்திருக்கும் மிச்சமெல்லாம் ,களவாக அகதிகளாக வந்ததுகள்"
" ஓம் அண்ணே நீங்கள் சொல்லுறது சரிதான்....எனக்கும் பிரிடிஷ் பாஸ்போர்ட் இருந்தபடியால் உவங்கள் உடனே அவுஸ்ரேலிய சிட்டிசன்சிப் தந்திட்டாங்கள்"
இவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த சுபனும் ,கருணாவும் தாங்கள் அகதியாக வரவில்லை என்று எனையோரை நம்ப வைப்பதற்காக ,தாங்கள் வரும் பொழுது பிஸ்னஸ் விசா இலகுவாக கொடுத்ததாகவும் தற்பொழுது கொடுப்பதில்லை என்றும் கூறினார்கள்.
ரியலெஸ்டேட் பரா என்றால் சிட்னி யில் அவனின் இனத்தை சேர்ந்தவர்கள் யாவரும் அறிவார்கள்."பொய் என்றால் வியாபாரம் வியாபாரம் என்றால் பொய்" என்பது அவனது கொள்கை .இதனால் அவன் இன்று ஒரு புகழ்பெற்ற பிசினஸ்மான்.தனது வியாபாரமெல்லாம் எங்கன்ட சனத்தொடுதான் என மனசாட்சிக்கு விரோதமில்லாது சொன்னான்.
'நொக்கியா சண்' என்று தான் சண்முகநாதன் அழைக்கப்டுகின்றான் அந்த கொம்பனியின் பிராந்திய முகாமையாளராக பணிபுரின்றான்,.
"பிராபாஅண்ணே நீங்கள் எப்படித்தான் அந்த ஏரியாவில் இன்னும் இருக்கிறீங்களோ தெரியவில்லை நாங்கள் இருக்கும் பொழுது அந்த இடம் எவ்வளவு பிஸ்புல்லா இருந்தது."என கரன் கேட்டான்
"எனக்கு என்றால் இப்பவும் அப்படித்தான் இருக்கு போல தெரிகின்றது"
"உந்த கப்பல் சனம் வந்த பிறகு சரியான மோசம்.....ஒரு வெள்ளை பெட்டை போக கூட்டமாக நின்று பார்த்துகொண்டு நிக்குதுகள்"என கணேஸ் சொன்னான்.
"அடே நீ இதை சொல்லுறாய் கலியாணம்கட்டின மனிசிகளை பார்த்தே விசில் அடிக்கிறாங்கள் " என்றான் கருணா.
"உந்த கப்பல்சனம் எல்லாச்சாதி பெட்டைகளையும் எல்லோ பார்க்கிறாங்கள்"என்றான் சுபன்...... ..
"என்னட்ட வேலை கேட்டும், வீடு வாடாகைக்கும் கேட்டு சிலதுகள் வாரதுகள் ,சிலபேருக்கு வேலை எடுத்து கொடுத்திருக்கிறேன் " என்றான் ரியல்ஸ்டெ பரா.
"கடந்த கிழமை ஒரு பொம்பிளையை கட்டிப்பிடிச்சது என்று கப்பலில் வந்த பெடியனை டி.வி யில் காட்டினாங்கள்" என்றான் நொக்கியா சண்..
பக்கத்தில் நின்ற பதின்மவயது இளைஞனை அழைத்த பிரபா.இவன் கஜன், இவனது குடும்பம் கப்பல் மூலம் 2008 ஆண்டு இங்கு வந்தவர்கள் ,அப்பொழுது இவன் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் இரண்டுதடவை அதேவகுப்பில் படித்தான் .இன்று மருத்துவபீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயில்கின்றான்..... அவனது தங்கை சட்டக்கல்வி பயில்கின்றாள்.என அவனை அந்த கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தான் பிரபா........ அங்கு இருந்த அங்கிள்மார்,அண்ரிமாரின் கண்கள் யாவும் அவனே நோக்கின.....
இந்த கூட்டத்தின் மத்தியில் எழுத்தாளன் சுரேசும் இருந்தான்
அருமையான பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_29.html//இன்று உங்கள் தளம் அறிமுகம் செய்து இருக்கின்றேன் முடிந்தால் வாருங்கள்!
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete