Thursday, August 22, 2013

சிட்னி புலம்பல்

சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தராதரம் பார்க்கபடும்...தென்னிந்திய கலைஞர்களையும் சில திருவிழா உபயகாரர் அழைத்து தங்களது தராதரத்தை எனையோர் தொடமுடியாத படி உயர்த்தி மக்களிடையே பிரபலமாகிவிடுவார்கள்.
பழைய மாணவ சங்கங்கள் ,பல்கலைகழக சங்கங்கங்கள் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்வதற்காவே உருவாக்கப்பட்டது.

மாணவசங்கங்கள் புலத்தில் இந்திய திரைப்பட இசையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.இந்த மாணவசங்கங்களின் கடந்த காலவரலாறுகளை எடுத்து பார்க்கும் பொழுது வெள்ளிடைமழை.திரைஇசை மட்டுமல்ல போலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் ஆற்றியுள்ளது இனிமேலும் ஆற்றும்.பழைய மாணவர்களாகிய நாம் இந்த இடுப்பாட்டத்தை அன்றுதிரையில்தான் பார்த்தோம்.அந்தகாலத்தில் இதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆசைஇருந்தது.
அதை இன்று நரை விழுந்து ,மொட்டை தட்டிய பிறகு பார்க்க கூடியசந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இதுவும் என்போன்றோர்களுக்கு மகிழ்ச்சியே.
பழையமாணவ சங்க நிகழ்ச்சிகளுக்கு $50முதல்$100வரை நுழைவுச்சீட்டு அறவிடுகிறார்கள்.ஒருவர் $100 ரூபா செலவு செய்கிறார் என வைத்துகொள்வோம் அதில் $5 மட்டுமே தாயகத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு சென்றடையும்.
மிகுதி $95 கால்வாசி அவுஸ்ரேலியா அரசுக்கும் ,மிகுதி முக்கால்வாசி பணமும் இந்திய கலைஞர்களுக்கும் இந்திய அரசுக்கும் செல்கின்றது.
நுழைவுச்சீட்டில் தாயகமக்களின் துயர் துடைக்க என விளம்பரம் போடுகிறார்கள் ஆனால் அந்த பணத்தில் கால்வாசி கூட தாயக மக்களை சென்றடையவில்லை எனபது ,எனது கருத்துகணிப்பு மட்டுமே....எது எப்படியாயினும் மிக மிக சிறுதொகை தாயக மக்களை சென்றடைகிறது என்று
மகிழ்சியடைய வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம்.

இன்று எமக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தேவைப்படுகிறது அதற்காக ஒழுங்கு செய்கின்றோம்.இன்னும் பத்து வருடங்களின் பின் பழைய மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிட்னியில் நடை பெறுமா என்பது கேள்விக்குறியே.புலத்தில் தமிழ்சினிமாஇசையை வளர்ப்பதிலும்,பொலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் உண்மையிலயே பாடுபடுகின்றார்கள்.இவர்களின் இந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் அளப்பறியது. திரைப்படங்களில் ஒரு பாடல் பாடியவர்கள்,சின்னத்திரையில் பாடல்கள் பாடிய சிறுவர்கள்,மற்றும் பிரபலங்கள் ,பிரபலமடையாத நபர்கள் என யார் யாரை எல்லாம் அழைக்க முடியுமோ அழைக்கின்றோம்.இந்தியாவில் பிரபலமாகாத இசைகலைஞர்களை சிட்னியில் பிரபலமாக்கின்றோம்... இசைக்கலைஞர்களைமட்டுமல்ல இன்று தொலைகாட்சி அறிவிப்பாளர்களும் எமக்கு ஒரு கதாநாயகன் போல தோன்றுகின்றார் அவரையும் விட்டு வைக்கவில்லை .ஒரு பழைய மாணவச்ங்கம் ஜெயா தொலைகாட்சி பிரபலத்தை அழைத்தால் மற்றவர் சண்தொலைக்காட்சி கலைஞரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்.
இந்த செயல்களை பார்க்கும் பொழுது எனக்கு ஊர் உபயகாரர்களின் போட்டி மனப்பான்மையில் திருவிழா செய்த்ததும் இன்று நாம் இங்கு பழையமாணவர்கள் என்ற போர்வையில் ஏட்டிக்கு போட்டியாக செயல் படுவதும் ஒன்று போல தெரிகின்றது....

அன்று கடவுளை மையப்படுத்தி உபயகாரர் பிரபலமடைந்தனர்...இன்று தாயக மக்களை மையப்படுத்தி பழையமாணவர்கள் நாம் பிரபலமடைய முயற்சி செய்கின்றோம்..... :D          

Tuesday, July 2, 2013

crush....கிரஷ்

பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும் சீன இந்திய,இந்திய வெள்ளை,வெள்ளை சீன என கலப்பின ஜோடிகள் ஆகும்.
ஜோடிகளற்ற மாணவர்கள் குழுக்களாக நின்று கதைத்துகொண்டிருப்பார்கள் இவர்களை கண்டு பொறாமை படவோ ,எரிச்சல் படவோ இல்லை.அதிபர் ,ஆசிரியர்கள் வந்து போவார்கள் சில சமயம் ஆசிரியர்கள் அந்த மரத்தடியிலிருந்து உணவும் உண்பார்கள் ,ஆனால் காதல் ஜோடிகள் தன்னிலை மறந்து அந்த இடத்திலயே இருப்பார்கள்.காதல் ஜோடிகள் ஆசிரியர்களை கண்டு ஒதுங்குவதுமில்லை ஆசிரியர்களும் அவர்களை வெருட்டுவதுமில்லை.இவற்றை பார்த்த சுரேஸுக்கு ஒருவித பய உணர்வும்,பெற்றொர் என்ற அதிகாரமும் தலைதூக்குவதுண்டு.இந்த வெள்ளைகளின் கன்றாவி கலாச்சாரமும் ,பண்பாடும் எங்கன்ட கலாச்சாரத்தை அழிக்கின்றது வாத்திமாரும் கண்டிக்கிறதில்லை என வெள்ளைகள் மீது பலியை போட்டு நிம்மதி அடைவான்.தன்னுடைய கலாச்சாரம் பண்பாட்டை பிள்ளைகளுக்கு புகட்ட தாயகத்திற்கு புலம் பெயர்ந்து செல்லவேண்டும் என எண்ணியதுமில்லை இனிமேலும் எண்ணப்போவதுமில்லை.
.....>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சுரேசுக்கு இந்த காதல் ஜோடிகளை காணும்பொழுதெல்லாம் இளமை காலத்தில் தவறவிட்ட சம்பவங்களை எண்ணி ஏக்கம் வருவதுண்டு.சில சமயங்களில் இரைமீட்பதுண்டு.அவனின் பாடசாலை ஆண்கள் பாடசாலை.சகோதர பாடசாலையின் சகவகுப்பு மாணவியுடன் ஒருவித இது (ஒருதலைகாதல் என்றும் சொல்லலாம்)ஏற்பட்டுவிட்டது.அவளை பார்ப்பதற்காகவும் ,காதலை சொல்ல வேணும் என்ற காரணத்திற்காகவும் அவள் செல்லும் டியுசன் வகுப்புக்களுக்கும் சென்றான்.இருந்தும் காதலை இறுதி வரை சொல்லவில்லை. சுரேஸ் தன்னைச்சுற்றி வருவது தெரிந்திருந்தாலும் சுதா கண்டு கொள்ளவில்லை நீ ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என கேட்கவுமில்லை.இரு வருட கடின சைக்கிள் சுற்றல் மூலம் சுரேசால் தனது ஒருதலை காதலை இருதலை காதலாக மாற்றமுடியவில்லை.
சுதா வீட்டு ஒழுங்கைவாழ்வாசிகள், தேவையற்ற பயணங்களை சுரேஸ் மேற்கொள்வதை அறிந்து கொண்டார்கள்.பெடிப்பயள் இங்குள்ள பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறான் என ஒழுங்கை வாழ் அண்ணன்மாரும் உசார் அடைந்துவிட்டனர்.ஒரு நாள் சுரேஸை பின் தொடர்ந்து இரு அண்ணமார் வந்தனர் அவன் சுதா வீட்டு ஒங்கைக்குள் சென்றவுடன் ஒரு அண்ணன் ஒழுங்கை முகப்பில் நின்றுவிட்டார்.மற்றவர் அவனை முந்தி சென்று சைக்கிளை குறுக்கே நிற்பாட்டினார்.
"தம்பி உம்மை இந்த ஒழுஙகைக்குள் அடிக்கடி காணுகின்றேன் உம்மோட சினேகிதப்பெடியள் யாரும் இந்த ஒழுங்கைக்குள் இருக்கினமோ?"

"இல்லை அண்ணே சும்மா வந்தனான்"சொல்லியபடியே சைக்கிளை திருப்பினான்.

"பிடிடா அவனை " என இந்த அண்ணை கத்த முகப்பில் நின்ற அண்ணை சைக்கிள் கன்டிலை பிடித்துநிறுத்தி சைக்கிளின் முன் டயரை தனது கால்கள் இரண்டுக்குமிடையில் வைத்துக்கொண்டார்.அவனால் ஓடமுடியவில்லை. இரு அண்ணமாரும் ஒன்றாக இணைந்து விசாரணை தொடங்கினர்.
"சும்மாவோ இந்த ஒழுங்கைக்குள் வாறனீ ,உண்மையை சொல்லு அந்த மதில் கட்டின வீட்டிலிருக்கிற சுதாவை சுழற்றத்தானே வாராய்"

"இல்லை அண்ணே"

"பின்னே என்னத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் இந்த ஒழுங்கை வந்து போறாய் ,ஓவ்வொரு தரம் போகும் பொழுது மதில் பக்கம் ஒரு பார்வையை விட்டிட்டு போறாய்...எல்லாம் நங்கள் கவனிச்சுப்போட்டுத்தான் உன்னை இப்ப மடக்கினாங்கள்"

"இல்லை அண்ணே, சுதா என்னோட டியுசன் கிளாசுக்கு வாரவ"

"டியுசன் கிளாசுக்கு வந்தால் நீங்கள் சுழற்றிவியளோ மவனே
இனி இந்த பக்கம் உன்னை கண்டால் வீட்டை உருப்படியா போய் சேரமாட்டாய் ஓடு" என விரட்டீவிட்டனர்.
அதன் பின்பு அந்த ஒழுங்கை பக்கம் செல்வதை குறைத்துக்கொண்டான்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பாடசாலயில் இருந்து மகளை கூட்டிவருவதற்கு சென்றவன் காரை வழமையாக தரிக்குமிடத்தில் நிற்பாட்டிவிட்டு அந்த மரத்தடியை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.என்கன்ட பெடியன் போல கிடக்குது என உற்றுப்பார்த்தான்.எங்கன்ட பெடியன் மட்டுமல்ல அவனுக்கு அறிமுகமான ஒருத்தரின் மகன் வேறு.பையனுக்கு அருகில் இருந்தபெண் வேற்று இனத்தை சேர்ந்தவள்.மீண்டும் உறுதி செய்வதற்காக உற்று பார்த்தான்.
"கலோ அப்பா" என்றபடியே மகள் வந்து காரினுள் ஏறிக்கொண்டாள்.

"கலோ"கலோ என மகளுக்கு கூறியபடியே மரத்தடியை பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன அப்பா அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறீங்கள்" என கேட்டபடியே தந்தை பார்த்த திசையை நோக்கி பார்த்தாள்.

"அப்பா அது சுதன் எங்கன்ட கிளாசில் படிக்கிறவர், அவரின்ட girlfriend Korean "

"அவரின்ட அப்பாவின் பெயர் பொன்னம்பலம் தானே"

" உங்களுக்கு தெரியுமோ, Do you know him? நெடுகலும் அங்கேயே பார்த்துகொண்டிருக்க வேண்டாம், it's not nice "

"உப்படி பெடியளும் பெட்டையளும் ஒன்றாக இருக்கிறதற்க்கு டீச்சர்மார்,மாஸ்டர்மார் ஒன்றும் சொல்லமாட்டினமோ"
"They cannot say anything. it's against the law,"
"அப்ப நான் அவரின்ட அப்பாவிட்ட சொல்ல வேணும்"
"No, அப்பா, that is his private business. You cannot interfere in other's business."
"படிக்கிற வயசில உது என்ன இப்படி சேட்டைகள்விடுகிறது,இதை நான் கட்டாயம் அவரின்ட அப்பாவிட்ட சொல்லவேணும் ,எங்கன்ட பெட்டையை பிடிச்சிருந்தாலும் காரியமில்லை போயும் போய் ஒரு சப்பையை பிடிச்சிருக்கிறான்"என்று சொன்னபடியே காரை ஸ்டார்ட் பண்ணினான்.
"இப்ப நீங்கள் உதுக்கு போய் ஏன் டென்சன் ஆகிறீங்கள், this is normal in high school, it's just a crush. நீங்கள் ஸ்கூலில் படிக்கும் பொழுதும் உங்களுக்கும் crush எதாவது இருந்திருகுத்தானே அப்பா அப்ப.........பா"
"ஏய் !யாரோட என்ன கதைக்கிறீர் ,நான் உன்ட அப்பன்டி"
"So what?"
"நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எங்கன்ட அப்பா அம்மாவோட இப்படியெல்லாம் கதைக்க மாட்டோம்,கதைச்சால் அப்பாவின்டா ஐந்து விரலும் கன்னத்தில் பதியும்"
"That is your fault"
"நான் படிக்கிற காலத்தில் லெமன் கிரஷ்,லைம் கிரஷ் என்ற கூல் ரின்க்ஸ்தான் கடையில் வித்தவை அதுகளைக்ப்பற்றி தெரியும் உந்த கன்றாவி கிரஷ்களைப்பற்றி தெரியாது"

"mmmmmm. Like I am going to believe you"          

Sunday, May 12, 2013

நீயும் ஊரவன்

"அண்ணே எங்க போகவேணும்"
பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு
"தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ"
"அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்"
"என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்".
. யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்ணத்தில் அப்படி ஒரு பொய்யை சொல்லி பேரம் பேசினேன்.
"அண்ணே இப்ப எல்லோரும் நானூறு தான் எடுக்கிறவையள்,வந்து ஏறுங்கோ"
நாலு டொலர்தானே வரும் எங்கன்ட காசில என நினைத்தபடியே போய் ஏறினேன்.ஊருக்கு போராய் கண்ட சனத்தோடயும் வாயை கொடுக்காதே என கொழும்பில இருக்கிற உறவுகள் அறிவுரை சொன்னதிற்கு ஏற்ப நானும் பெரிதாக ஒட்டோ சாரதியுடன் பேச்சுக்கொடுக்கவில்லை. "அண்ணே இப்ப குளிராக இருக்கு மத்தியானம் பயங்கர வெய்யில் அடிக்கும்" என்று சொல்லி எனது மெளனத்தை கலைத்தார்.
"அப்படியா"
"மானிப்பாயில் எவடத்த "
"சுதுமலை சந்தியடிக்கு போங்கோ கிட்ட போன பிறகு வீட்டை காட்டுகிறேன்"
"அண்ணே வெளிநாடோ,கொழும்போ"
"நான் கொழும்பு " ஒட்டோவில் ஏறியவுடன் யாழ்நகரை வியப்பாக பார்த்த பார்வையில் சாரதிக்கு விளங்கியிருக்கும் மச்சான் வெளிநாடு என்று.வெளிநாடு என சொல்லாமைக்கு முக்கிய காரணம் சுயபாதுகாப்புத்தான். "இதில திருப்புங்கோ வலக்கை பக்கம் வாற நாலாவது வீட்டடியில் நிற்பாட்டுங்கோ"பேசியபடியே நானூறு ரூபாவை கொடுத்துவிட்டு ஒட்டோ போனபின்பு இடக்கை பக்கம் இரண்டாவதாக இருக்கிற எனது பெரியம்மா வீட்டை சென்றேன்.இதுவும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான். இவர் பெரிய தேசியவீரன் இவருக்கு சுயபாதுகாப்பு என்ன கோதாரிக்கு என நீங்கள் எண்ணக்கூடும்,ஆனால் ஒரு பிரபல எழுத்தாளரை கண்டவுடன் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு மாலை மரியாதை செய்துவிடுவார்களோ என்ற பயம் தான்.
கிணற்றில் குளிக்கலாம் என்று போனால் அங்கு கப்பியும் இல்லை துலாவும் இல்லை..."தம்பி இங்க வந்து பாத்ரூம்மில் குளி" .
குளித்து விட்டு பெரியம்மா தந்த சுடான தேனீரை பருகிவிட்டு .மருதடியானை தரிசிக்கலாம் என வெளிக்கிட்டேன். பெரியம்மாவுக்கு தெரிந்த ஒட்டோசாரதியை ஒழுங்கு படித்தித் தந்தார்.அவர் தெல்லிப்பளையில் இருந்து புலம்பெயர்ந்து 20 வருடமாக மானிப்பாயில் வாழ்பவர்.என்னுடைய வயதுதான் இருக்கும் இருந்தும் என்னை தம்பி என்று அழைத்தார் .அவரைவிட இளமையாக அவருக்கு தெரிந்திருக்கிறேன் எல்லா புகழும் அவுஸ்ரேலியாவுக்கே.. "தம்பி மருதடிக்கோ விட,நீங்கள் அந்த அம்மாவுக்கு என்ன முறை?"
" ஒம் மருதடிக்கு விடுங்கோ அவவின்ட தங்கைச்சியின் மகன்"
அவரின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே , பள்ளிபருவத்தில் உலா வந்த வீதியையும் அறிந்தவர்கள் வீடுகளையும் பார்த்த படியே சென்றேன்.வீதியில் அறிந்தவர் எவரும் கண்னில் படவில்லை.
வயலும் வயல் சார்ந்த இடத்தில் நம்மட மருதடியான் வீற்றிருந்தான்.முன்பு பழைய கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிவீசிகொண்டிருந்தவனை புதுதாக கோயில் கட்டுவதாக வெளிக்கிட்டு எழு வருடமாக கொட்டிலில் வைத்திருக்கிறார்கள்.
அவனையும் வீழ்ந்துவணங்கி ,யாராவது தெரிந்தவர்கள் வருவார்கள் ஊர் விடுப்பு அறியலாம் என சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். வயயோதிபர் ஒருவர் அருகில் வந்து
"தம்பி ஊருக்கு புதுசோ என்றார்."
"இல்லை நான் இந்த ஊர்தான்"
"நான் முப்பதுவருசமா இந்த கோயிலுக்கு வந்து போறன் உம்மை கண்டமாதிரி தெரியவில்லை,நீர் ஆர்ட மோன்,உம்மன்ட வீடு எங்கயிருக்கு "
"அண்ணே நீங்கள் முப்பது வருசமா வந்து போறீயள் நான் பிறந்ததில் இருந்து வந்து போறன்.உந்த மருதடியானிட்ட கேளுங்கோ சொல்லுவான்"என்று சொல்லிவிட்டு ஒட்டோவில் வந்து ஏறி சுதுமலை அம்மன் கோவிலுக்கு போக சொல்லிவிட்டு மீண்டும் வீதியை நோட்டம் விட்டேன் அறிந்தவர் எவரும் கண்ணில் படவில்லை. ஒட்டோவுக்குரிய பணத்தை கொடுத்து விட்டு ஆலயத்தினுள் சென்றேன் சுதுமலை அம்மன் கோவிலிலும் புனர்நிர்மாண வேலைகள் நடை பெறுவதால் மூலஸ்தானத்தில் இருந்த அம்மனும் அவரது குடுமபத்தினரும் வெளியே குடிபெயர்ந்து இருந்தனர்.ஒரு விதத்தில் எனக்கும் நன்மையைக இருந்தது.தூரத்தில் இருந்து மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனின் உருவம் இலகுவில் தெரியாது ஆனால் புதிதாக குடிபெயர்ந்த இடத்தில் அம்மனின் உருவம் நன்றாகவே தெரித்தது.வணங்கிவிட்டு தெரிந்தவர்கள் யாராவது கண்னில் படுகிறார்களா என நோட்டம் விட்டேன்.நான் அறிந்தவர் எவரும் இல்லை.என்னை அறிந்தவர்கள் யாரும் இல்லை.கோவிலின் வெளியே வந்து அமர்ந்திருந்தேன்.பூஜை முடிந்து வீடு செல்ல வந்த ஐயர்
"தம்பி ஊருக்கு புதுசோ, இந்த பக்கம் நான் உங்களை காணவில்லை" என கேட்டார்.
"இல்லை ஐயா நான் இந்த ஊர்தான்"
"அப்ப உங்கன்ட வீடு எங்க இருக்கு"
25 வருடங்களுக்கு முதல் எங்களுக்கு சொந்தமாய் இருந்த நான் ஒடி விளையாடிய,பாடசாலையில் உயர்கல்வி படிக்கும் பொழுது சைக்கிளில் மதிலில் சாய்த்துவிட்டு பெடியங்களுடன் அரட்டை அடித்த வீட்டை சொன்னேன்.உடனே அவர் தற்பொழுதைய சொந்தகாரனின் பெயரை சொல்லி அவரின் தம்பியோ என கேட்டார் .
"இல்லை ஐயா இப்ப அவர்தான் வாங்கி இருக்கிறார் நாங்கள் வீட்டை வித்து 20 வருசத்திற்கு மேலாய் ஆகிவிட்டது"
"அது தானே பார்த்தேன் 20 வருசத்திற்க்கு மேலாக இந்த கோவிலில் பூஜை செய்கிறேன் எனக்கு தெரியாத ஆட்களா இந்த ஊரில்”
ஐயரின் பூர்வீகத்தை அறிவோம் எண்டுபோட்டு முந்தி இந்த கோவிலில் பூஜை செய்த குருக்களின் சொந்தமோ நீங்கள் என்று கேட்டேன்.
"அவரை உங்களுக்கு தெரியுமோ,அவர் என்ட மாமா "
"உங்களுக்கு அவரை எப்படி தெரியும்"
"எங்கன்ட திருவிழாவில் அவரிட்டதான் காளாஞ்சி வாங்கிறனான்"
"எந்த திருவிழா உங்கன்ட"
"ஒன்பதாம் திருவிழா "
"அட நீங்கள் ஒன்பதாம் திருவிழா உபயகாரரின்ட ஆட்களே,முதலே சொல்லியிருக்கலாம் "சரி நான் வீட்டை போயிற்று வாறன் பிறகு சந்திப்போம்.
நடந்து வீடு செல்லும் பொழுதும் யாராவது என்னை அடையாளம் கண்டு கதைப்பார்களா என்ற ஏக்கத்துடனே வீடு சென்றடைந்தேன்.
அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோவில் மணியோசை கேட்டு விழித்தேன்.தொடர்ந்து 'விநாயகனே விணை தீர்ப்பவனே' என்ற பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்கதொடங்கியது.குளித்து மீண்டும் கோவிலுக்கு சென்றேன்.

சுதுமலை அம்மன் கோவிலின் வளவில் சிவனுக்கும்,முருகனுக்கும் வைரவருக்கும் தனி கோவில்கள் உண்டு.சிவன் கோவில் திருவிழாவிற்கே நான் ஊருக்கு சென்றேன்.அந்த திருவிழா எனது மாமா உயிருடன் இருக்கும் பொழுது செய்து வந்தார் .அவர் கொழும்பில் இருந்தபடியால் திருவிழாவுக்குரிய பணத்தை அனுப்புவார் நான் தான் தெற்பை போடுவதுவழமை.பிற்காலங்களில் நான் புலத்தில் இருந்து பணம் அனுப்புவேன் பெரியம்மா செய்து கொண்டிருந்தார்.
25 வருடங்களின் பின்பு மீண்டும் என் பணத்தில் தெற்பை போட்டு வழிபடும் சந்தர்ப்பம் முதல்தரம் கிடைத்தது.அன்று ஒருத்தரும் என்னிடம் நீங்கள் யார்? ஊருக்கு புதுசோ என்ற கேள்வியை கேட்கவில்லை?மூலஸ்தானத்தை பார்த்தேன் சிவலிங்கம் என்னை பார்த்து "டேய் நீயும் ஊரவன் தான்டா"என்ற மாதிரி இருந்தது.
என் ஊர்கோவில் என்னை அடையாளப்படுத்த உதவிற்று..எல்லா புகழும் கோவிலுக்கே....இதற்குதான் அந்த காலத்தில் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று சொன்னார்களோ என எண்ண தோன்றுகிறது.


ஒரு இனத்தை அழிக்க பல வகையிலும் முயற்சி செய்தும் அவர்களின் ஆத்மீக பலம் அந்த மக்களை மீட்டுள்ளது என்பதை நேரில் கண்டேன்.எந்த இசங்களும் ,ஆயுதங்களும்,தனிமனித சித்தாத்தங்களும் செய்ய முடியாததை கோவில் செய்துள்ளது.

ஒம்நமசிவாய....
புத்தனுக்கு கிறுக்கு பிடிச்சிட்டு நினைக்க வேண்டாம்....

Saturday, April 20, 2013

"....கண்டேன் என் க....."

சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர் ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான் கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில் போய்சேரும்.
எங்களுக்கு என்ன வரும் ??????


"தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”,
"எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ "
"இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்"
நான் எம்.ஜி.ஆர் ,சிவாஜி , எல்லாம் அந்த காலத்தில
பார்த்தனான் இந்த புதுசா நடிக்கறவங்கள் ஒருத்தரையும் பார்க்க கிடைக்கவில்லை,இந்த சந்தர்ப்பத்தையும் விட்டால் இனி என்ட வாழ்க்கையில் எப்பகிடைக்குமோ? இல்லாட்டி கிடைக்காமலயே மண்டையை போட்டுவிடுவனோ தெரியாது"
ஆச்சி இப்படி சொன்னபடியால் எனது மனது கொஞ்சம் இலகி போய்விட்டது.
"ஆச்சி கோவிலுக்கு போய் சாமியை கும்பிடப்போறீங்கள் என்றால் சொல்லுங்கோ கூட்டிகொண்டு போரன்.உந்த சினிமா கதாநாயகனை தூக்கி பிடிக்க நான் வரமுடியாது,மன்னிச்சுக் கொள்ளுங்கோ ஆச்சி."
" நீ கூட்டிக் கொண்டு போகட்டி உன்ட மனிசியை கூட்டிகொண்டு போகசொல்லு"
"அவள் வந்தா கூட்டிகொண்டு போங்கோ"
கலியாணத்திற்க்கு பின்பு மனிசிக்கு நான் தான் கதாநாயன் என்று நினைத்திருந்தேன்.ஆனாபடியால் சினிமா கதாநாயகனிடம் அவ்வளவு மோகம் இருக்காது .ஆச்சியை அழைத்து செல்லமாட்டாள் என்றிருந்தேன்.ஆனால் அவளும் ஆச்சியும் சேர்ந்துதான் திட்டம் போட்டிருக்கிறார்கள் பின்பு தான் தெரியவந்தது.
"வயசு போன நேரத்தில் ஆச்சி கேட்கிறா,கூட்டிக் கொண்டு போயிட்டு வரட்டேயப்பா"
"சரி,அவர் எந்த ஹொட்டலில் நிற்கிறார் என்று தெரியுமோ?எங்க போய் பார்க்கப் போறீங்கள்."
"அவர் உங்க பராமட்டாவில் ஒரு ரெஸ்டோரன்டில் சூட்டிங்க்கு வந்திருக்கிறார் ஆச்சியுடன் போய் பார்த்துவிட்டு வாரன் "
என்று காலையில் வெளிக்கிட்டவையள் வரும் பொழுது பிற்பகல் 4 மணி ஆகியிருக்கும்.
"அடி பிள்ளை, இவன் தம்பியை ஒரு பக்கமாக பார்த்தால் விஜய் மாதிரி இருக்கு என்னடி" ஆச்சி லெட்டா வந்ததுக்கு கொஞ்சமாக ஐஸ் வைத்தார்.

"விஜயயை படத்தில் பார்த்ததிலும் பார்க்க நேரில் பார்க்கும் பொழுது கூட வடிவாக இருக்கிறார்."என ஆச்சி மனிசிக்கு கொமனட் அடிச்சுது.
வயசு போனதுகள் ஊரில் படம் பார்த்து பழகினதாலும்,வெளிநாட்டுக்கு வந்து டிவி யில் படம்பார்த்த பழக்கதோசத்தாலும் இந்த கதாநாயக வழிபாடு,மோகம் இருக்கும் என எண்ணிகொண்டிருக்கும் பொழுது என்னுடைய கை தொலைபேசி ஒரு ராகத்துடன் சினுங்கியது.
"கலோ "
"யார் சுரேஸோ"
"ஒம் சுரேஸ் தான்"
"நாளைக்கு விஜய்யின் சூட்டிங் எங்க நடக்குது என்று தெரியுமோ"
"நான் அவரின்ட பி.ஏ இல்லை"
"சும்மா பகிடி விடாமல் சொல்லுங்கோ,உங்கன்ட மனிசிதான் , ஆச்சி விஜயை பார்க்க கூட்டிக்கொண்டு போனவவாம்"
"எனக்கு தெரியாது ,எதற்கும் லைன்னில் இரும் மனிசியிட்டை கேட்டு சொல்லுறன்"

"இஞ்சாரும் இவன் விஜய் சிட்னியில எங்க நிற்கிறான் என்று கனகர் கேட்கிறார் உமக்கு தெரியுமோ "
" இன்றைக்கு டார்லிங் காபரில ,நாளைக்கு காலையில திருப்பியும் பரமட்டா பார்க்கில்,நாளைக்கு பின்னேரம் காபர் பிரிட்ஜ்,நாளன்டைக்கு ....."இப்படி மனிசி அடிக்கு கொண்டே போனாள்.
" கனகு இந்தா மனசியிட்டயே கேள்ளப்ப" எண்டு தொலை பேசியை கொடுத்துவிட்டேன். இவளுக்கு எப்படி விஜய்யின் செடுல் எல்லாம் தெரியும் என்று மில்லியன் டொலர் கேள்வி மனதில் எழும்பியது.சரி பொம்பிளைகள் தான் விஜய்யை பார்க்க அலையுதுகள் என்றால் இவன் கனகனும் அலையிறான் பரதேசி என மனதிற்குள் திட்டிப்போட்டு விட்டிட்டேன்.
மனிசியின் கைதொலைபேசி குறுஞ்செய்தி வந்திருக்கு என சினுங்கிச்சு நான் கண்டுகொள்ளவில்லை.கைதொலைபேசி வழங்குனர் காசு கட்ட சொல்லி செய்தி அனுப்புறான் எண்டு போட்டு பேசாமல் இருந்திட்டேன்.
வீட்டு தொலைபேசி அலறியது .
"கலோ"
" அங்கிள் அண்டி இல்லையோ?"
"வீட்டு வேலையா இருக்கிறா "
"அண்டியிட்ட சொல்லுங்கோ நான் விஜய்யின் சூட்டிங்கில் நிற்கிறன் என்றும்,அவவின்ட மொபைலுக்கு நான் விஜயின் தோலில் கை போட்டுக் கொண்டு எடுத்த படம் அனுப்பியிருக்கிறன் எண்டும் சொல்லுங்கோ"
மனிசியிட்ட சொன்னதுதான் செய்து கொண்டிருந்த வேலை எல்லாம் அப்படியே விட்டிட்டு மொபைலில் வந்த விஜயின் படத்தை பார்த்து ரசித்தாள்.ஆச்சிக்கும் தகவல் பரவியது.வீட்டுக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன்.ஆச்சியுடன் அவரின் பேத்தி சுருதியும் நின்றாள்.சுருதியும் கணவனும் கணக்காளராக பணிபுரிகின்றனர். கணவன் விஜயை விடவும் அழகானவன் அவனே ஒரு கதநாயகன் போலத்தான் இருப்பான்.
"அண்டி விஜய்யின் சூட்டிங்பக்கத்திலதான் நடக்குது வெளிக்கிடுங்கோ போய் பார்ப்போம்,சுமி இப்பதான் எஸ். எம்.எஸ் அனுப்பினவள் "
சுமிதா பல்கலைகழகத்தில் சட்டத்துறையில் இறுதியாண்டில் பயில்கின்றாள் அவளை எல்லோரும் செல்லமாக சுமி என அழைப்பார்கள்.

விஜயயின் தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற அவசரத்தில் எல்லொரும் வெளிக்கிட்டு ஒடினார்கள்.காலை 10 மணியளவில் புறப்பட்டவர்கள் மாலை 5 மணியளவில் வீடு திரும்பினார்கள்.
"அட தம்பி ஒரு தேத்தண்ணி போடடா குடிப்பம் சரியா கலைக்குது"
" ஆச்சி உந்த வயசில உங்களுக்கு உது தேவையா?"
"வேற என்னத்தை கண்டேன்"
"ஏன் அப்புவை கண்டனியள் தானே ...அதுசரி அப்பு விஜய் மாதிரி இருப்பாரோ?"
"சும்மா போடா ....அவர் ஜெமினி மாதிரி இருப்பார் ஆனால் கருப்பு"என்று சொல்லி வெட்கப்பட்டார்.மனிசி கொண்டு வந்த குளிர்பாணம்,சுடு பாணம் பருகியபடியே விஜய் புராணம் தொடங்கியது.

சுமி அங்கு எடுத்த படங்களை எல்லொருக்கும் காட்டினாள் ,அத்துடன் ஒட்டோகிராப்பில் சைன் வாங்கியதாகவும் அப்பொழுது விஜய்யின் கை தனது கையை தொட்டதாகவும் ஆனபடியால் இன்று தான் கை கழுவப்போரதில்லை என சொல்லி மகிழ்ந்தால்.
மனுசனுக்கு தெரியாமல் ஹொட்டலுக்கு பூச்செண்டு அனுப்பியதாகவும் .அதை அனுப்புவதற்கு தான் பட்ட கஸ்டங்களை சொல்லி பூரிப்படைந்தாள் சுருதி.
சிவாஜி கனேசன் பைலட் பிரேமநாத் படசூட்டிங்க்கு வந்த பொழுது சிவாஜியுடன் எடுத்த படத்தை 83 இனக்கலவரத்தில் சிங்களவன் எரித்துவிட்டான் என்று சொல்லி ஆச்சி துக்கப்பட்டாள்.
கலியாண கட்டின புதுசில இந்தியாவுக்கு போனபொழுது இந்த மனுசனை சூட்டிங் பார்க்க கேட்க கூட்டிகொண்டு போகமாட்டேன் எண்டிட்டார் .ஒரு நாள் எதிர்பாராத விதமாக மோகனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த மனுசன் பிலிம் போடாமல் கமராவை தட்டியிருக்கு ,என்று என்ட மனுசி தன்னுடைய கவலையை தெரிவித்தாள்.
இதெல்லாம் கேட்ட எனக்கும் எதாவது சொல்ல வேணும் போல இருந்தது.எனக்கு மயிர் வெட்டுகிறவர்தான் சிட்னியில விஜய்க்கும் மயிர் வெட்டுகிறார்...கி..கி.....

(க)..... தாநாயகன்
ணவன்
டவுள்

அளவெட்டியில் இருந்து அடையார்வரை

"அம்மா, நான் மிருதங்கம் பழகட்டே"

"நீ என்ன மேளக்காரனின்  பிள்ளையே ,போய் படிக்கிற அலுவலை பார்"

"அது மேளம் இல்லை அம்மா ,மிருதங்கம்...நேற்று சரஸ்வதி பூஜைக்கு பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் வந்து ,வ‌டிவா தலை எல்லாம் ஆட்டி அடிச்சவர், "

"எனக்கு மேளத்திற்கும் மிருதங்கத்திற்கும் வித்தியாசம் தெரியும் ,நீ சொல்லித்தரத்தேவையில்லை"

அம்மா மிருதங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னபின்பு சுரேஸ் மிருதங்க கச்சேரி,மேளக்கச்சேரி  போன்றவற்றின் ரசிகனாக மட்டும் இருந்தான்.

ஊர் கோவிலில் சுரேஸ் குடும்பத்திற்கும் ஒரு திருவிழா ஒதுகப்பட்டிருந்தது. சுரேஸின் உறவினர்கள் எல்லோரும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள். கோவில் மேளத்துடன்   இன்னும் இரண்டு கூட்ட
மேளம் அவ‌ர்களின் திருவிழா அன்று நடை பெறும் .எனையோரின் திருவிழாவில்  ஆறு ,எழு கூட்ட தவில்  கச்சேரி நடை பெறும்.ஒரு திருவிழாவையும் சுரேஸ் தவறவிடமாட்டான். திருவிழா வேலைகளை முன்னுக்கு நின்று சுரேஸ் கவனித்துகொள்வான்.

தவில் வித்துவான்களையும்,நாதஸ்வர வித்துவான்களையும் அச்சவாரம் கொடுத்து திருவிழா தினத்தன்று வரவழைப்பதற்காக  அளவெட்டிக்கும், இணுவிலுக்கும் சென்று வித்துவான்மாரிட்ட‌ காசையும் கொடுத்து திகதியைசொல்லுவான்.

"தம்பி இந்த முறை உபயகாரரிட்ட சொல்லி  காசை கூட்டி தாங்கோ"

"ஒம் வித்துவான் ,அப்பாவிட்ட சொல்லுறன்,ஆனால் நீங்கள் இந்த முறை புதுசா வந்த‌ மூன்றுமுடிச்சு படப்பாடலை முதல் தரம் எங்கன்ட திருவிழாவில்தான் வாசிக்க வேணும்"

"ஒம்,ஒமோம்...."

திருவிழா தினத்தன்று மதிய சாப்பாட்டுக்கு  அடிச்ச ஆடு ,சாராயம் எல்லாம் வீட்டில் வைத்து வித்துவான்களுக்கு கொடுக்கப்படும்.சாராயம் அளவாகத்தான் கொடுக்கப்படும்  போதை கூடினால் இரவுக்கச்சேரிக்கு வரமாட்டார்கள் என்று பயத்தால் அந்த முன் எச்சரிக்கை.

வித்துவான்கள்  தங்கத்தால் செய்த புலிப்பல் மாலை,ஐந்து விர‌லுக்கும் மோதிரம் அணிந்திருப்பார்கள் . சில வித்துவான்கள் தங்களது நாதஸ்வரத்திற்கு தங்கத்தால்  சில அலங்கார வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள்.இவற்றை எல்லாம் பார்த்து சுரேஸ் எண்ணியதுண்டு இவர்கள் பெரிய பணக்காரர்கள்
என்று.

இப்படித்தான் ஒருமுறை திருவிழா ஒழுங்குகளுக்காக கூட்டம் நடை பெறும் பொழுது

"இந்த முறை சின்ன மேளத்தை கூப்பிடுவமோ"என ஒரு பெரிசு கருத்து சொல்ல‌

"சீ சீ ..சின்னமேளத்தை கூப்பிட்டியளோ நான் இந்த திருவிழா கொமிட்டியிலயே இருக்க மாட்டன்"என
இன்னொரு பெரிசு மாற்றுக்கருத்து சொல்ல

"நீ இல்லாட்டி கொடி ஏறாதே"

"என்னடா சொன்னாய்"

உடனே சமாதன விரும்பிகள் எல்லாம் இரண்டு பெரிசுகளையும் சாந்தப்படுத்தி சின்ன மேளம் இந்த
தடவை வேண்டாம் அடுத்த முறை கூப்பிடுவோம்...என ஏகமனதாக முடிவு செய்தனர்.

பொம்பிளைகள் தவில் அடிச்சு நாதஸ்வரம் வாசிச்சா நல்லா  இருக்காது.என சில அம்மாமார்
ஆதங்கப்பட்டினம்.

(1970 களில் சின்னமேளம் அழிய தொடங்கிவிட்டது.)

சிட்னியில் நடைபெறும் கலை,கலாச்சார,பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு சுரேஸ் சமுக அளிக்க
தவறுவதில்லை.இலவச நிகழ்ச்சியான அரங்கேற்றத்திலிருந்து பணம் செலுத்தும் தென்னிந்திய நட்சத்திர இரவு வரை செல்வது அவனது பொழுது போக்கு என்றோ,அல்லது அடுத்த சந்ததியினருக்கு
கலை பண்பாட்டை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு உயர்ந்த உள்ளம் என்றோ நீங்கள் நினைக்ககூடாது.....

சுவிங்கத்தை மென்றுகொண்டு குருத்தாரும், பாண்ட்ஸும் அணிந்து கலை ஆர்வமிக்க ந‌டுத்தர
வர்க்க கமானவான் போல அரங்கின் முன் அமர்ந்திருந்தான்.இடைக்கிடை தனது மீசையையும் தடவிக்கொள்வான்... நிகழ்ச்சி தொடங்கிய பின்புதான் தெரிந்த‌து அது மிருதங்க அரங்கேற்றம் எண்டு. வழ‌மையாக அரங்கேற்றம் என்றால் பரதநாட்டியம் தான் நடை பெறுவது வழக்கம். சனிக்கிழமைகளில் வீட்டில் இருந்தால் குடியும் குடித்தனமும் ஆக‌ இருப்பான் என்ற காரணத்தால் மனைவி இவனை இப்படியான நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுவிடுவாள்.ரசனை இருக்குதோ இல்லையோ நிகழ்ச்சியில் இருப்பான்.

திரைச்சேலை விலகியதும் செல்வன் கமேஸின் மிருதங்க அரங்கேற்றம் என அழகாக ஆங்கிலத்தில்
எழுதியிருந்தார்கள்.கமேஸும் தனது திறமைகளை ந‌ன்றாக வெளிப்படுத்தினான்.ஒவ்வோரு ஆவர்த்தன‌மும் முடிய சபையோர் பலத்த கரகோசம் செய்தனர்.

பிரதமவிருந்தினராக  வந்திருக்கும் "அடையாறு திரு சுப்பு சர்மா" அவர்களை மேடைக்கு வருமாறு தாழ்மையுடன் அழைக்கிறோம் என அறிவிப்பாளர் அறிவித்தவுடன் சுப்பு மேடைக்கு சென்றார்
சபையில் இருந்து பலத்த கரகோசம் எழும்பியது. சுப்பு சர்மா தனது சிஷ்யன் கமேஸ் பற்றி புகழ்ந்தார்
..இந்தியாவில் இருந்து கமேஸின் பெற்றோரின் பணத்தில் சிட்னிக்கு வந்து போட்டு கமேஸை
புகழாமல் உம்மடை பக்கத்து வீட்டுக்காரனையே புகழுவான் என நீங்கள் நினைப்பது புரிகின்றது.சுப்பு சர்மாவுக்கு பொன்னாடை போர்க்கப்பட்டது..கமேஸ் சர்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

அடையாறு கலைஞனுக்கு கிடைத்த முதல் மரியாதை அளவெட்டி கலைஞனுக்கு கிடைக்கவில்லை. மிருதங்கமும் தோல்கருவி,மேளமும் தோல் கருவி வாசிப்பது மனிதன் இருந்தும் பாகுபாடு
. அவனது சோசலிச மூளை சோசலிசம் பேசியது.

இப்படிதான் இன்னோரு நாள் எதோ வியுசன் முயுசிக் என்று போனான்.மேல‌த்தேய இசையும் கீழைத்தேய இசையும் ஒன்றாக கலக்கிற இடம் என்று சனம் சொன்னதை கேட்டுப்போட்டு இவனும் சென்றான்.

மேடையில் பலவிதமான இசைக்கருவிகள் இருந்தன‌ ஒரு சில இசைக்கருவிகள் மட்டும் இவனால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. பெண் ஒருவர் நாதஸ்வரம் போன்ற கருவியை வைத்திருந்தார் நாதஸ்வரத்தை விட சிறியது. இன்னொரு பெண் நாதஸ்வரம் போன்ற வளைந்த ஒரு கருவியை வைத்திருந்தார்.இரு கருவிகளும் நல்ல பளபளப்பாய் மின்னியது.வெளிநாட்டுக்காரன்  நாதஸ்வரத்தை மாத்திப்போட்டாங்கள் என்று எண்ணினான்.

"இங்க பாரன் எங்கன்ட நாதஸ்வரத்தை இந்த வெள்ளைகள் என்ன செய்து வைத்திருக்குதுகள்,அதை வைச்சிருக்கிறது எங்கன்டஆட்களின் பிள்ளைகளே"என பக்கதில் இருந்த மனைவியிடம் கேட்டான்.

"நாசமாய் போச்சு அது நாதஸ்வரமில்லை,வலப்பக்கம் இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது கிலாரினட்,நடுவில இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது சக்சாபோன்,அந்த இரண்டு பிள்ளைகளும்
எவ்வளவு அழகாக  வாசிக்கினம்.....உதுக்குத்தான் சொல்லுறனான் இப்படியான‌ இசை நிகழ்ச்சிக்கு
வந்து பொதுஅறிவை வளர்க்க வேணும் என்று
...."

Thursday, February 14, 2013

கப்டன்

சுரேஸ் அவனது சினேகிதருடன் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவான்.சுரேஸும் அவனது சினேகிதர்களும் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.அவனது பக்கத்து வீடு,முன்வீடு ,பின் வீடுகளில் இருந்த அவனது வயதை ஒத்த பெடியள்தான் அவனது கூட்டாளிமார்.ஐந்தாம் வகுப்பு மட்டும் அயலில் உள்ள பெட்டை பெடி எல்லாம் ஒன்றாக தான் அந்த புளிய மரத்தடியில் விளையாடினதுகள்.பிறகு பெட்டைகள் வாரதில்லை பெடியள் மட்டும் அந்த மரத்தடியில் கிரிக்கட் விளையாடுவாங்கள்.

புலத்தில இப்ப எங்கன்ட பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கின்ற பிராண்டட் கிரிக்கட் மட்டையோ அல்லது பந்து போன்றவை அந்த காலத்தில் சுரேஸுக்கோ அல்லது அவனது சினேகிதருக்கோ கிடைக்கவில்லை.விளையாட வேணும் என்ற ஆசை ஆனால் அதற்குறிய பொருட்கள் மட்டும் அவர்களிடம் இருக்கவில்லை,இருந்தாலும் அவர்கள் முயற்சியை கைவிடவில்லை.தென்னை மட்டையின் அடிபாகத்தை வெட்டி கைப்பிடிக்கு சைக்கிள் டியூப்பினை போட்டு யாழ்ப்பாண பிராண்டட் கிரிக்கட் மட்டையை செய்து போட்டார்கள். றப்பர் பந்தின் சொந்தகாரன் பக்கத்து வீட்டு ரவி.விளையாட்டு முழுவதும் தானே பந்து போட வேண்டும் என அடம் பிடிப்பான். பந்து போட கொடுக்காவிடில் பந்தை தூக்கி கொண்டு வீடு சென்று விடுவான் .இதனால் ஆத்திரமடைந்த சுரேஸ் சொந்தமாக ஒரு பந்தை வாங்க வேண்டும் என முடிவெடுத்தான் .ஆனால் பந்து வாங்க அவனிடம் பணம் இல்லை.
அங்கு விளையாட வரும் எல்லோரிடமும் காசு சேர்த்து ஒரு பந்தை வாங்குவோம் என தீர்மாணித்து அமுல் படுத்தினான் .அடுத்த நாள் எல்லோரும் 25 சதம் கொண்டு வந்தார்கள் .உடனே மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் தனியாக கடைக்கு சென்றான். கடைக்கரானிடம் "அண்ணே பார்த்து போட்டு தாங்கோ " என கெஞ்சி அரைவாசி விலைக்கு பந்தை வாங்கி போட்டான். தனக்குறிய பங்கையும் போடாமல் விட்டுவிட்டான். இது எனைய குழு அங்கத்தவர்களுக்கு தெரியாது. நண்பர்களிடம் கடைக்காரர் முதலில் சொன்ன விலைக்குத்தான் பந்து வாங்கினதாக சொன்னான் .மிகுதி பணத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்.
அவனது குழுவில் எட்டு பேர் வரை இருந்தனர்..அநேகர் இவனது வயதை ஒத்தவர்கள் .சின்ன பெடியன்களும் இணைந்து கொண்டனர்.ரவி தனிப்படுத்தபட்டமையால் அயல் கிராமத்திற்கு விளையாட செல்வான்.பற்றையும் பந்தையும் பத்திரப்படுதும் பொறுப்பை சுரெஸ் எடுத்து கொண்டான். இதனால் அந்த குழுவுக்கே அவன் பொறுப்பாளன் போல செயல் பட தொடங்கினான்.குழு அங்கத்தினர் இவனை கிண்டல் அடிப்பதும் உண்டு.
"உவருக்கு தான் கப்டன் என்ற நினைப்பு"என்று சொல்ல
"என்னிடம் தானே பற்றும் பந்தும் இருக்கு அப்ப நான் தானே கப்டன் ,போஸ் எல்லாம் " என்று சிரித்தபடியே கூறுவான்.
"உந்த தென்னை மட்டை பற்றை வைச்சுகொண்டு இங்கிலாந்து டீமுக்கு கப்டன் மாதிரி கதைக்கிறாய்" என சிலர் கிணடல் அடித்தனர்.
ஒரு நாள் சுரேஸ் சிக்சர் அடிக்க முயற்சி செய்ய பந்து பக்கத்துவீட்டு பிலாமரத்தில போய் மாட்டிக்கொண்டுவிட்டது.கையில் இருந்த பற்றும் தவறிவிழுந்து உடைந்து விட்டது.தொடர்ந்து விளையாட முடியாமல் போய்விட்டது.எல்லோருக்கும் விளையாட வேணும் என்ற உத்வேகம் இருந்ததால் உடனடியாக அந்த உத்வேகத்தை தனிக்க பேணி(டின் ...ரின்) விளையாட்டை விளையாட தொடங்கினார்கள்.வீட்டில் அம்மா பலசரக்கு சாமான் போட கழுவி வைத்த லக்ஸ்பிறே ரின்களை யும் பழைய பந்தையும் எடுத்து கொண்டு வந்தான். இதனால் அவன் அம்மாவிடம் திட்டு வாங்கினது ஒரு பெரிய கதை.
"அட ரின் விளையாட்டிலும் இவன் 'கப்...... ரின்'"டாப்பா எனகிண்டலடித்தனர் .அவன் கண்டுகொள்ளவில்லை,கப்டன் என்று சொல்லுறான்கள் அப்படியே அதை நடைமுறைபடுத்த வேணும் என மனதில் எண்ணிகொண்டான்...

டெனிஸ் பந்தும்,ஒரு நல்ல பற்றும் வாங்க வேணும் என எல்லோரும் முடிவெடுத்தனர்.
தச்சு தொழில் செய்யும் ஒருவரிடம் போய் கேட்டார்கள் .பணம் தந்தால் செய்து தருவதாக அவர் சொல்ல, தீவிரமாக காசு சேர்த்து பற்றை செய்து போட்டார்கள்.
அவனது தீவிர முயற்சியும்,அயராத உழைப்பும் சக குழுவினர் அவனை கப்டன் ,கப்ரின் என அழைக்க தொடங்கிவிட்டார்கள்.

சிலர் கப்டனுக்கும் அடைமொழி வைத்து அழைக்க தொடங்கினார்கள்.சில வயசு போனதுகள் "டேய் கப்டன்"என்றும் வயசு குறைந்ததுகள் "கப்டன் அண்ணா" என்றும் அழைத்தார்கள்.
குழு உறுப்பினர்களுக்கு சமனான பந்து வீச்சும் துடுப்பாட்டமும் அனுமதித்தான் இதனால் எல்லோருக்கும் அவன் மீது அன்பு உண்டானது.

ரவி அயல் கிராமத்தில் உள்ள டிமில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு எதிராக விளையாடுவான்.சுரேஸுடன் விரோதமாக பழகியபடியால் அந்த கிராம மக்கள் எல்லோரையும் விரோதமாக பார்த்தான்.
புளியமரத்தடியில் விளையாடுவதை விட்டுவிட்டு இப்பொழுது தெருவிலும் ,பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் விளையாட தொடங்கி விட்டார்கள்.
ஸ்பின்,வாஸ்ட் போல்,அம்பயர்,லெக் அம்பயர்,ஒவர்,எறிபந்து இந்த சொல்லுகளை எல்லாம் பாவிக்கதொடங்கினார்கள்,காலில் எங்கு பட்டாலும் எல்.பி.டபில்யூ. க்கு கத்துவார்கள் ஆனால் அம்பயர் கொடுக்க மாட்டார்.அவரும் அந்த டீமில் தான் விளையாடுவார்.அவர் அடுத்து பற் பண்ண வேணும் என்றால் மட்டும் கையை தூக்குவார்.அவர் ஏற்கனவே பற் பண்ணி அவுட்டானவர் என்றால் கையை தூக்கவே மாட்டார்.
அனேகமாக விக்கட் விழுத்த வேணும்.இல்லாவிடில் கட்ச் பிடிச்சு ஆட்களை அவுட்டாக்க வேணும்...விக்கட்டில பட்ட பிறகு சில வேளை நோ போல் சொல்லுவினம்...பயங்கர அலாப்பி கிங்மார் இருந்தவங்கள்.

விளையாடுபவர்கள் பல வித கட்டளைகளை போடுவார்கள்.
"காலுக்கு நேரா போடு"

"பந்தை தூக்கி போடு என்ட பக்கமா நான் கட்ச் பிடிக்கிறன்"

"லெக்கில சைட்டா போடு கீப்பருக்கு டிப் போகும்"
சில நேரங்களில் கட்ச் விடுபட்டால் இன்னோருதன் வந்து சொல்லுவான் நான் நிக்கிறன் நீ போ எண்டு .அவரின்ட கையுக்கும் பந்து வரும் கட்ச்சை விட்டிடுவார்

மற்ற டீம்காரன் சொல்லுவான் "அடிடா சிக்ஸ்"

"தூக்கி அடிக்காத கட்ச் பிடிச்சு போடுவாங்கள்"

ஆனால் பந்து போடுறவன் தன் இஸ்டத்திற்கு பந்தை போடுவான்.பற் பண்ணுபவன் தன்ட இஸ்டத்திற்கு பற் பண்ணுவான்.

இப்படி எங்கன்ட அரசியல் கருத்துக்கள் மாதிரி விளையாட்டு கருத்துக்களும் தூள் பறக்கும்....

ஒருநாள் இராணுவ சோதனைச்சாவடிக்கு கிட்டடியில் நிற்கும் பொழுது கப்டன் அண்ணே என்று அவனது குழுவை சேர்ந்தவன் கூப்பிட்டான். இவனுக்கு உயிர் போய்விட்டு திரும்பி வந்த மாதிரி இருந்தது ,இவனது நல்ல காலம் அங்கிருந்த இராணுவத்தினருக்கு கேட்கவில்லை.

கிராமத்தில் கிரிக்கட்டில் சூரனாக இருந்தாலும் பாடசாலை டீமில் அவனை நிர்வாகம் தெரிவு செய்யவில்லை.
விமானஒட்டி ,கப்பல் ஒட்டி எல்லோரையும் கப்டன் எண்டு சொல்லுறது மட்டுமல்லாமல் இராணுவத்தில் பணிபுரிபவனையும் கப்டன் என அழைக்கிறார்கள் என்று இவனுக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.போதாக் குறைக்கு பாடசாலை இல்லங்களிலும் கப்டன் இருக்கு என்னடா இது என மனதில் எண்ணிக்கொண்டான்.

பாடசாலைபடிப்பு முடிந்தவுடன் ,தனது பெயருக்கு முன்னாள் கப்டன் வரக்கூடிய தொழில் பார்க்கவேண்டும் எண்ணியவன் எந்த தொழில் செய்யலாம் என யோசிக்க தொடங்கினான்.

விமான விபத்து நடந்தால் உடம்பே கிடைக்காது அந்த எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டான்.கப்பல் மாலுமியாக வந்தாலும் கலியாணம் கட்டி மனிசியை கூட்டி கொண்டு போக ஏலாது என சிலர் சொல்ல கேட்டதால் அந்த யோசனையும் கைவிட்டான்...
இராணுவத்தில சிங்களவன் சேர்க்கமாட்டான், அப்படி செல்வாக்கை பயன்படுத்தி சேர்ந்தாலும் புலிகள் வைக்கிற கன்னி வெடியில் ஆள் சுக்குநூறு என்று எண்ணியவன் கப்டன் ஆசை மறந்துவிட்டான் (துறந்துவிட்டான்)

"ரவி டேய் மச்சான் எப்படி இருக்கிறாய்,ஊர் பக்கம் போகவில்லையோ"

",சிட்னியில் இருக்கிற டமிழ்ஸின் பிள்ளைகளுக்கு கிறிகட் கோட்ச் பண்ணுகிறன் அத்துடன் ஒவர் 40(40 வயத்துக்கு மேற்பட்டோர்)டிமுக்கு கப்படனா இருக்கிறன் ....உனக்கு தெரியும்தானே நான் எங்கன்ட சனத்தோட பழகிறதில்லை எண்டு,அதுசரி நீ என்ன செய்கிறாய்"

"நான் என்கன்ட சனத்தோட நின்று பந்து உருட்டிறன்.........கி கி..."

முக்கிய குறிப்பு: இது சுத்த கற்பனை கதை கலப்படமில்லை..அத்துடன் கிறிகட்டுக்கும் என‌க்கும் வெகு தூரம்....

Monday, December 31, 2012

நாங்கள் யாழ்ப்பாண‌த்தார் (we are from Jaffna)

பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்க வேண்டும் பிறகு நேரம் கிடைக்காது இப்ப வாங்கோ என்று அதிகாரம்கலந்த பாசத்தோடு அழைத்தான்.போங்கோ பிள்ளை அப்பா கூப்பிடும் பொழுது போய் படியுங்கோ அப்பதான் சாய்பிரியாவை விட அதிக புள்ளி எடுக்கலாம் . போனமுறை சாய்பிரியா கேடயம் எடுத்தவ இந்த முறை நீங்கள் எடுக்க வேணும் என அம்மா வேறு அவளை நச்சரித்தாள் .சாய்பிரியாவின் அம்மாவும் இவளின் அம்மாவும் ஒன்றாக யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள்
பெரியவளுக்கு அந்த வயசில் போட்டிகள் கேடயங்கள் எதைப்பற்றியும் தெரியாது.

அப்பாவும் அம்மாவும் தன்னை படிக்க வற்புறுத்துகிறார்கள் என்று எண்ணியபடியே கேள்விகொத்தொடு வந்தாள் .,வரும் பொழுதே “தங்கச்சி மட்டும் விளையாடுகிறா நான் மட்டும் படிக்க வேண்டும் கோல் கெர் டு(call her too) ” என்ற படியே வந்து அமர்ந்தாள்.சரி சின்னா நீங்களும் வாங்கோ அடுத்த வருடம் நீங்கள் இந்த போட்டிக்கு போக வேணும் தானே இப்பவே படிச்சால் நல்லம் என்று சொல்லி இருவருக்கும் சுரேஸ் படிப்பித்தான்


சுரேஸ்: 1.கோவிலுக்கு போகும் பொழுது எப்படி போக வேணும்?
சிறுசு:காரில் போகவேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்..

சுரேஸ்:2.உணவு உண்ணமுதல் என்ன செய்ய வேண்டும்?
சிறுசு:கை கழுவ வேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! இறைவனை வணங்கிய பின்பு உண்ண வேண்டும்


அப்பா தங்கச்சி சொன்னது எல்லாம் சரிதானே பிறகு ஏன் நீங்கள் வேறு பதில் கொன்னீங்கள்..
தங்கச்சி சொன்னது சரிதான் ஆனால் சமய போட்டியில இந்த கேள்வி கேட்டால் நீங்கள் புத்தகத்தில் இருக்கும் பதிலை சொல்ல வேணும் சரிதானே.
பிள்ளைகள் இருவரும் ஒம் அப்பா என்று போட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.
போட்டி முடிவடைந்து முடிவுகள் அறிவித்தார்கள் .பெரியவளுக்கு கேடயம் கிடைத்தது .பெற்றோர்கள் சந்தோசப்பட்டார்கள் .சாய்பிரியாவுக்கு என்ன கிடைச்சதாம் என்று பெரியவளிடம் தாய் கேட்டார்.”எனக்கு தெரியாது அம்மா”.தாய்காரியின் முகத்தை பார்த்தியளே உம் என்று வைச்சிருந்தா ,அவளின்ட மகளுக்கு கேடயம் கிடைக்கவில்லை எண்ட ஆத்திரம்தான்.

"சீ சீ அப்படியிருக்காது"
"உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் எதிராக சொல்லாவிட்டால் நித்திரை வராதே"

"சரி சரி உதை விடும்"

பெரியவள் மூன்றாம் வகுப்பு படிக்க தொடங்கியவுடனே சுரேஸும் மனைவியும் அவளது படிப்பில் அதிக அக்கறையுடன் ஈடுபடத்டொடங்கிவிட்டார்கள்.படிப்பு மட்டுமல்ல நீச்சல்,பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வலை பந்தாட்டம்,போன்ற துறைகளிலும் அவளை ஈடுபடுத்தினார்கள்.அவளும் நன்றாக பாடங்களில் சித்தியடைந்தாள் . அக்கா எல்லாப்பாடங்களில் "எ" எடுத்திருக்கிறார் நீங்களும் அடுத்த வருசம் எல்லா பாடத்திலயும் "எ" எடுக்க வேணும் என்றனர் பெற்றோர்.சிறுசும் ஒம் என்று தலை அசைத்தாள்.இருவரும் நன்றாக படித்துகொண்டிருந்தனர்.அதே நேரம் எனைய துறைகளிலும் இருவரும் தங்களால் இயன்றளவில் பிரகாசித்துக்கொண்டிருந்தனர். தங்கச்சியின் குரலை பார்த்தியா நல்லாய் இருக்கு நீயும் அவளை போல பாட வேணும் என தாயார் சொன்னார்.இன்னொரு நாள் அக்கா நல்லா பரதம் ஆடுகிறாள் அவளை பார்த்து நீ வடிவாய் ஆடவேணும் என்றாள்.
"வை யு பிப்பில் ஆர் கொம்பயர் இச் அதர்(why do you people compare us to each other ) "என்றனர் சிறுவர்கள் இருவரும்.

"அம்மாவுக்கு வாய் காட்டாமல் அவ சொன்னதை செய்யவும்"என்றான் அதிகாரத்துடன் சுரேஸ் .

சிறுவர்களின் அந்த கேள்விக்கு பின்பு சகோதரர்களிடையே ஒப்பிடுவதை தவிர்த்து கொண்டனர்.ஆனாலும் அயலவர்களுடன் ஒப்பிடுவதை விடவில்லை.

உயர் வகுப்பு பாடசாலை தேர்வில் சாய்பிரியா அதிக புள்ளி கிடைத்து வேறு பாடசாலைக்கு சென்று விட்டாள் .இதனால் சுரேஸும் அவனது மனைவி யும்பெரும் கவலையடைந்திருந்தனர்.ஆனால் பிள்ளைகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.காரணம் இவர்கள் செல்லும் பாடசாலைக்கும் சாய்பிரியா செல்லும் பாடசாலைக்கும் பெரிதாக தராதர வித்தியாசம் இல்லை.தராதர வரிசையில் சாய்பிரியாவின் பாடசாலை முதலாவது ,இவர்களது இரண்டாவது.

பிள்ளைகள் இப்ப உயர் வகுப்பு படிப்பதால் எதிர்கருத்து வைப்பதற்கு துணிந்து விட்டார்கள் பெற்றோரும் அதை மெளனமாகவும் சில நேரங்களில் சிரித்தும் சமாளித்து விடுவார்கள்.தாயாரை விட சுரேஸ்தான் பலே கில்லாடி சிரித்து சமாளிப்பதில்.
" பெரிசு ,சாய்பிரியா எத்தனை மாக்ஸ் எடுத்தவ இந்த முறை டெஸ்டில்"
"எனக்கு தெரியாது ,மற்ற ஆட்களின்ட மாக்ஸ்சை (marks)கேட்கிறது நொட் நைஸ்(not nice),மற்றது அவ வேற ஸ்கூல்"

"நீ டெலிபோன் பண்ணி கேட்டிருக்கலாம் நான் படிக்கிற காலத்தில என்ட மாக்ஸ்சை பார்க்க முதல் மற்றவனின்ட மாக்ஸ்சைதான் பார்ப்பேன்"என சொல்லி சிரித்தான் சுரேஸ்.
"யூ பிப்பில் ஆர் சொ ரூட்(you people are so rude) "
"தங்கச்சி இன்றைக்கு பலே ஆட்டத்தில கிறிஸ்டினா நல்லா செய்திருந்தா அவவுக்குதான் முதல் பரிசு கிடைச்சது"
"ஒம் அக்கா நானும் பார்த்தேன் சுப்பேர்ப்(superb)"

" பிள்ளைகள், அவள் நல்லாய் செய்தாள் என்று சொல்லுறீயள் ஏன் உங்களால் செய்யமுடியாமலும்,முதல் பரிசு எடுக்க முடியாமல் போய்விட்டது. அவள் படிக்கிற இடத்தில்தானே நீங்களும் படிக்கிறீயள்"
"கேர் பெரண்ட்ஸ் ஆர் ரஸ்யன்(her parents are Russians) "
"சொ வட் .மனம் இருந்தால் இடம் உண்டு"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"இருவரும் ஒன்றாக செய்தனர்.



"நீச்சலில் முன்வீட்டு சன்டினாவுக்கு பாடசாலையில் முதல் இடம் கிடைச்சிருக்கு ஏன் உனக்கு கிடைக்கவில்லை பிள்ளை"

"சி இஸ் ஒசி கெர்ல்"
"சொ வட், நீயும் இங்கதானே பிறந்தனீ...ஏன் உனக்கு எடுக்க ஏலாமல் போய்விட்டது..."


"!!!!!!!ம்ம்ம்ம் ஐ வில் ரை நெக்ஸ்ட் டைம்(I will try next time)"
"இந்த முறை முயுசிக் கொம்பிடிசன் வருகிறது இரண்டு பேரும் டான்ஸ்க்கும்,முயுசிக்கும் போடவேணும் ,இந்தியன் பெட்டைகள் அனுஸ்காவும் கம்சிகாவும் தான் இந்த முறையும் முதலாவதாக வரப் பார்ப்பாள்லவையள் ஆனால் நீங்கள் தான் இந்த முறை முதலாவதாக வரவேணும்"

" ஒ கொட்(oh god)....ஏன் அம்மா நீங்கள் எல்லாத்தையும் கொம்பிடிசனாக பார்க்கிறீங்கள் ,ட்ரை பண்ணுவோம் இவ் வி கெட் ......."

யார் அம்மாவுக்கு வாய்காட்டிகொண்டு எதிர்த்து கதைக்கிறது என்று கேட்டபடியே சுரேஸ் அங்கு வந்தான்.
"அப்பா ,அம்மா எல்லாத்தையும் கொம்பிடிசனாகத்தான்(competition) பார்க்கிறா ஏன் இப்படி செய்கிறா என்று தெரியவில்லை"

அம்மா மட்டுமல்ல நானும் அப்படித்தான் பிகோஸ் வி ஆர் வ்ரோம் யவ்னா (because we are from Jaffna).எதிலும் ஒரு போட்டியிருக்க வேணும் அப்பதான் முன்னுக்கு வரலாம்.

"நீங்கள் சின்ன வயசில எடுத்த மெடல்கள் ஒன்றையும் இங்க காணவில்லையே அப்பா"
சுரேஸுக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் போனாலும் சாமாளித்துவிட்டான் ,ஆர்மிக்காரனின் தலையில் பழியை போட்டு தப்பித்துகொண்டான்.மெடல்களை அவன் தொட்டே பார்க்கவில்லை என்பது அவனுக்கே தெரிந்த உண்மை.
"அது எல்லாத்தையும் ஆர்மிகாரன் உடைச்சுப்போட்டான்,அவன்கள் மெடல்களை மட்டுமா உடைச்சாங்கள் எங்களுடைய கல்வியையும் பாழாக்கி போட்டாங்கள் ,ஆனாலும் எங்கன்ட சனத்தின்ட விடாமுயற்சியும் போட்டி மனப்பாங்கும் தான் அழித்தாலும் மீண்டும் முளை விடுகிறார்கள்....அவங்களை"
அப்பா டென்சன்(tension) ஆகிவிட்டார் லெட்ஸ் கொ( lets go),என கூறியவாறு பிள்ளைகள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.