Tuesday, September 10, 2024

சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1

 நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில்

சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார்.

அருகில் சென்று

" எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ"

என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர்

"அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே"

"கி.. கி.. .ஒம் அண்ணே"

"நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே "

"சீ சீ  டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை"

 "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் "

"ஒம் "

"அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்"

"அப்ப நீங்கள் சோறு  சாப்பிடுவதில்லையே "

"ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்"

 

"என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல"

"வயசு போகவில்லை உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்"

"அட கடவுளே பிறகு "

"பிறகு  மகளும்பேரப்பிள்ளைகளும் முதலுதவி  செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை"

"வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்"

"இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை"

"சன் இன் லோவும் 'டைபூசுறவறே"

"ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் "

"புது பிராண்டுக்கு 'ஹினி பிக்நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ"

"புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்"

"அண்ணே உது 'சண் இன் லோவின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி"

அவரும் சிரித்தபடி எழுந்தார் ,

"இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி"

"உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு"

"  சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி"

"எந்த டாக்குத்தர்"

"யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்"

"வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் "

இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது

"டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே "

அவையளுக்கும்  நடேசருக்கும் அட்டாஜ்  கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்"

"ஏன்டா?,"

"நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்"

குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ?

எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்"

"போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும்  வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்"

அப்படியே நடந்து வந்தவர்  மூலஸ்தான பின் சுவரை பார்த்து

"இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்,"

"விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு"

"இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பிசனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்ச‌னான் இப்ப தெளிந்திட்டன்"

"வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ"

"நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்"

"இறைசக்தியோ"

"அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...."

"என்ன அண்ணே சொல்லுறீயல்"

"நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த  முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்"

"அது நடக்குது தானே"

"அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு"

இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு"

"உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் "

"அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு"

"இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது 

என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர்.

"என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?"

"உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள்

அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்"

"யார் நியுசிலாந்துக்காரன்களே"

"உந்த நக்கல் தானே கூடாது"

"ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்"

"ஒம் நல்ல‌ வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் ....  நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம்ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும்  நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்"

"இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்"

"ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்"

"சரி சரி வாங்கோ"

"உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத‌"

"யார் அந்த இலைட் குறூப் அண்ண"

"அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள்

இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...

Edited  by putthan
தலையங்கம் மாற்றுவதற்காக எடிட் செய்யப்பட்டது

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சிட்னிச் சிங்கனும் கருத்துக் கந்தரும் நம் நாட்டு நடப்புகளை நன்றாக அலசி ஆராய்கிறார்கள். இந்தத் தலைப்பிலேயே மேலும் மேலும் நம் நாட்டு நடப்புகளை இவர்கள் இருவரும் சொல்லி வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ...நிச்சயமாக இருவரும் தொடர்வார்கள் தங்கள் அலட்டலை

    ReplyDelete