Saturday, May 22, 2021

ஆறுதலாக பிறகு

 

அவுஸ்ரேலியாவுக்கு வந்த பின்புதான் சொந்தமாக தொலைபேசி வைத்திருக்க கூடிய நிலை வந்தது.அந்த கால கட்டத்தில் பட்டன் அழுத்தி  இலக்கங்களை தெறிவு செய்யும் தொழில் நுட்பம் கொண்ட தொலை பேசிதான் பிரபலம் .வீட்டின் வரவேற்பறையில் ஒரு தொலைபேசியை தொலைபேசி நிறுவன ஊழியர்கள் இணைத்து விட்டு சென்றார்கள்.அத்துடன் இரண்டு மகாபாரத புத்தகத்தையும் இலவசமாக தந்துவிட்டு சென்றார்கள்.ஆர்வக் கோளாறு காரணமாக புத்தகத்தை உடனடியாக திறந்து பார்த்தேன் ,ஒரு புத்தகம் தொலைபேசி பாவனையாளர்களின்  பெயர்களும் இலக்கங்களும் ,மற்றது வியாபார ஸ்தாபனங்களின் இலக்கங்களும் பெயர்களுமாக இருந்தது.தொலைபேசி வைக்கும் மேசையாக அந்த புத்தகத்தை பாவிக்கலாம் என்ற யோசனை இந்த புத்திஜீவிக்கு வரவே அதை அமுல் படுத்திவிட்டு மனைவியின் பாராட்டுக்காக காத்திருந்தேன் .

"எப்படி என்ட ஐடியா" தொலை பேசி இருந்த இடத்தை கண்ணால் காட்டினேன்

"....நேற்று சப்பட்டையின்ட கடையில் வாங்கின டெலிபோன் மேசையை பூட்டி போட்டு இதில வையுங்கோவன்"

 "இதில வைச்சாலும் வடிவாக தானே இருக்கு?,அதை ரிட்டேன் பண்ணி போட்டு காசை எடுப்போம்"

"ஐயோ இன்னும் ஊங்களுக்கு சீப் புத்தி விட்டு போகுதில்லை,10 டொலர் தானே"

" நாட்டு காசுக்கு 500 ரூபா?எவ்வளவு செய்யலாம் "

"நம்ம நாட்டு கணக்கு பார்த்து கொண்டிருந்தியளோ இந்த நாட்டில வாழ முடியாது....விசர் கதையைவிட்டிட்டு அலுவலை பாருங்கோ"

இப்படி மனிசி 25 வருசத்துக்கு முதல் திட்டினது இப்பவும் நினைவிலிருக்கு அதற்கு பிறகு இன்றுவரை நான் நாட்டுகணக்கு பார்க்கிறதில்லை ....

வெளியில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சில சமயம் தொலைபேசி அலரும் செய்த வேலையை அரைகுறையில் விட்டிட்டு ஓடி வந்து எடுக்கும் பொழுது மறுமுனையில் தொடர்பை எடுத்தவர்கள் துண்டித்து கொண்டது தெரியவரும் . சில சமயங்களில் நேரம் கெட்ட நேரங்களில் அதாவது நடு நிசியில் வெளிநாடுகளிலிருந்து அழைப்புக்கள் வரும் கட்டிலால் எழும்பி போய் எடுக்க சோம்பலாக இருக்கும் அதனால் இருவரும் தூக்கம் போல நடித்து அந்த தொலைபேசி தொல்லையை தட்டிகழித்த சம்பவங்களும் உண்டு. இரண்டாம் தடவை ,மூன்றாம் தடவையும் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் போய் எடுப்பேன்

நானும் கொட்டாவி விட்ட படியே பேசுவேன் "‍ஹலோ ஹ ‍ஹ லொ லொ"

மறு முனையில் பேசுபவர்கள் "பதட்டத்துடனே என்ன நித்திரையே இப்ப எத்தனை மணி உங்க" என்பார்கள்

"இரவு 1 மணி,உங்க எத்தனை ம ம ணி"

"எங்களுக்கு பகல் ஒரு மணி சரியா 12 மணித்தியாலம் வித்தியாசம் , சரி சரி நீங்கள் படுங்கோ சனிக்கிழமை எடுக்கிறன்"

போனை வைத்துவிட்டு போய் படுக்கும் பொழுது

"யாரப்பா போன் எடுத்தது இந்த நேரத்தில"

"வேற யார் உம்மட மாமி தான் ,அவவுக்கு பொழுது போகுதில்லை போல எங்கன்ட நித்திரையை குழப்பி கொண்டு"

புறு புறுத்த படியே உறங்கிவி டுவேன்.

அடுத்த நாள் எழும்பியவுடன் மனிசியிட்ட சொன்னேன் கட்டிலுக்கு பக்கத்தில இருக்கிற சைட் டெபிலில் ஒரு போனை  வைப்போம் அப்ப அழைப்பு  வந்த‌வுடனே எடுக்க முடியும் என்றேன்.

மனிசியும் சம்மதம் தெரிவிக்க பழைய போன் ஒன்றையும், கெபிலும் ,அடப்பட்டர் எல்லாம் வாங்கி நம்மட தொழில் நுட்ப திறனை பாவித்து பாவனைக்கு உகந்ததாக மாற்றி விட்டேன் .

தொலை பேசி வேலை செய்கின்றதா பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு வெள்ளைக்கு போன் அடிச்சு என்ட வீட்டுக்கு அழைப்பு எடு என்றேன் அவனும் எடுத்தான்  இரண்டு தொலைபேசியும் வீர் என்று அலர தொடங்கிவிட்டது.

வெள்ளைக்கு நன்றி தெரிவித்து போனை வைத்தபின்பு வொலுயுமை குறைக்கும் வழியை கண்டுபிடித்து குறைத்து விட்டேன்

. தொல்லை கொடுப்பவை வசதியாக அருகில் இருந்தமையால் நாங்களும் நேரம் காலம் தெரியாமல் அவர்களுக்கு எடுக்க அவர்களும் எங்களுக்கு எடுக்க தொலைபேசி இல‌க்கம் சொந்தம் பந்தம் மட்டுமன்றி ,நண்பர்கள்   ,ஊரில் தெரிந்தவர்கள் புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் என போய் சேர்ந்துவிட்டது .

இரண்டும் மாதம் அமர்களமாக மச்சான்,மாமன்,ஒன்றவிட்ட மாமா  மச்சான் என ஒரே பாசப்பிணைப்பில் இருந்தோம்.ஒரு கட்டத்தில் எல்லாம் கதைத்து முடிந்து கதைப்பதற்கு வேறு விடயங்களின்றி  என்ன சாப்பாடு சாப்பிட்டிங்கள் இன்று என கேட்கும் அளவுக்கு போயிருந்தது .

இரண்டுமாதத்தின் பின்பு தபால் பெட்டியில் மிகவும் மொத்தமான ஓர் கடிதவுறை இருந்தது. உடைத்து பார்த்தேன் 858 டொலர் சொச்சத்துக்கு தொலைபேசி கொம்பேனி பில் அனுப்பியிருந்தான் .திகைத்து விட்டேன் குறிப்பிட்ட காலத்தினுள் பணத்தை செலுத்தாவிடின் தண்டப்பணம் கட்ட வேண்டும் என வேறு குறிப்பிட்டிருந்தது. 

 பில்லை வைத்து ஆராச்சி செய்ய தொடங்கினேன் ..யார் யாருக்கு எடுத்திருக்கிறோம் என்னுடைய சொந்தங்கள் எத்தனை ,மனைவியின் சொந்தங்கள் எத்தனை யார் அதிக நேரம் கதைத்தது இப்படி ஆராச்சி செய்து மெல்லமாக மனிசியின் மேல் குற்றசாட்டை போட்டேன்

"உம்மட ஆட்களுடன் நீர் கதைச்ச நேரம் அதிகம்"

"என்ன ? நீங்கள் தானே சிநேகிதப்பெடியங்களுடன் அலட்டி கொண்டிருக்கிறனீங்கள் "

"பார் இந்த நம்பர் உன்ட மாமியின்ட, அரை மணித்தியாலம் கதைத்திருக்கிறீர் 150 டொலர் வந்திருக்கு"

"800 லொலருக்கு ஊரில எவ்வளவு செய்திருக்கலாம்"

"சும்மா புறுடா விடாதையுங்கோ எச்சில் கையால காகம் விரட்ட மாட்டியள் அதுக்குள்ள வந்திட்டியள் ஊருக்கு பண்ணுவன் படுப்பன் என்று"

"சரி சரி இதுக்கு போய் சண்டயை பிடிக்காமல் காசு கட்டுகின்ற விடயத்தை பார்ப்போம்... இனிமேல் தேவையில்லாமல் எடுக்காமல் இருப்போம்"   

தொலைபேசி கொம்பனியிடம் பேசி தவனை முறையில் பணம் கட்டுவதாக சொல்ல அவர்களும் சம்மதிச்சு  மாதம் எவ்வளவு கட்டமுடியும் என கேட்டார்கள்,மாதம் 100 டொலர் என்று கூறவே அவர்கள் சம்மதித்தார்கள்.

தொலைபேசி இணைப்பை துண்டித்து கொள்ளலாமா என இருவரும் பேசி கொண்டிருக்கும் பொழுது எனது அம்மா கொழும்பில் இருக்கின்ற படியால் அவருடன் உரையாட தேவை என்ற காரணத்தால் அந்த முடிவை மாற்றி  கிழமையில் ஒரு நாள் மட்டும் வெளிநாட்டுக்கு எடுப்பதாக இருவரும் தொலைபேசிக்கு மேல் அடித்து உறுதி  மொழி எடுத்துகொண்டோம்.

வெளிநாட்டு அழைப்புக்கள் தொடர்ந்து வந்தன ஆனால் நாங்கள் தொடர்ந்து எடுக்கவில்லை .

" நாங்கள் தான் உங்களை தேடி அழைக்க வேணும் நீங்கள் எடுக்கமாட்டியள் என்ன"

என குற்றசாட்டுக்கள் வர தொடங்கின .வேலைப் பளு காரணமாக எடுக்க முடியவில்லை,குழந்தைகளை பார்க்க வேணும் அது இது என சாட்டுக்களை சொல்ல அவர்களும் தொடர்ந்து அழைப்பதை நிறுத்தி விட்டார்கள்

நண்பனிடம் நடந்த விசயத்தை சொல்ல 

"உனக்கு விசரா என்ன மண்டை கழன்று போச்சே, நான் 50 சத குற்றியோட இரண்டு மணித்தியால்ம் கனடா ,இங்கிலாந்து எல்லாம் கதைக்கிறனான்  நாளைக்கு என்னோட வா கூட்டிக்கொண்டு போறன்"

" ஏங்கேயடா இருக்கு அந்த கொமினிக்கேசன் சென்றர் "

"உன்ட வீட்டுக்கு பக்கத்தில தான்"

"என்ட வீட்டுக்கு பக்கத்திலயா?இவ்வளவு நாளும் என்ட கண்னில படவில்லையே"

"நாளை இரவு பத்து மணிக்கு ரெடியா இரு நான் வந்து கூட்டிக்கொண்டு போறன்"

"இரவு 10 மணிக்கே ?,அடுத்த நாள் வேலையடா"

"வேலையா ? 50 சத கொல் முக்கியாமா?'

" சரி , நாளைக்கு வா"

அடுத்த நாள் சொன்னபடியே நேரத்திற்கு வந்தான்.

"ரெடியா போக "

"இரு வாரன் கார் திறப்பை எடுத்துகொண்டு"

"உதுல இருக்கிற சென்ரருக்கு உனக்கு கார்,காரோட பிறந்து வளர்ந்தவர் தானே....வா"

"சரி சரி வாரன்"

வெளியே வந்தவுடன் வீட்டுக்கு அருகிலிருந்த டெலிபோன் பூத்துக்குள்ள போனான்

"டேய் இது சென்ரரே பூத் அல்லோ"

"சும்மா சத்தம் போடாத சனம் வரமுதல் உள்ள வா"

உள்ளே சென்றவுடன் அதன் உரிமையாளன் போன்று பொக்கற்றிலிருந்த 50 குற்றியை எடுத்தான் ரஜனிஸ்டைலில் ரிசிவரை எடுத்து காதில் வைத்தான்

நான் கண்னால் சைகை காட்டியவுடன் நம்பரை அடி என்றான்.டெலிபோனில் திருகுதாளங்கள் செய்து கொண்டிருந்தான்

கிளிக் என்ற சத்தம் வந்தவுடன்  அவசரம் அவசரமாக கண்ணைகாட்டினான் நானும் நம்பர்களை  சூழட்டினேன்.

மறு முனையில் நண்பன்

"ஹலோ யார்"

"நான்டா அவுஸ்ரேலியாவிலிருந்து..."

"டேய் என்னடா இந்த நடுச்சாமத்தில எடுக்கிறாய் வைச்சுப்போட்டு நாளைக்கு விடிய எடுடா"என்றான்

"சரி மச்சான் வைக்கிறேன்"ரிசிவரை வைக்க பக்கத்தில நின்ற நம்ம நண்பன் ரிசர்வர் புடுங்கி எடுத்தான்

"டேய் எவ்வளவு கஸ்டப்பட்டு எடுத்தனான் நீ என்னடா என்றால் கட் பண்ணுகிறா"

"அவன் நித்திரையடா,வைக்கசொல்லுறான்"

"இந்த நம்பரை சுழட்டு நான் லண்டனுக்கு கதைச்சு பார்க்கிறேன்"

நானும் அவன் சொல்படி செய்தேன் .அவன்

ஹலோ என்று சிரித்தபடியே ரிசர்வை காதினுள் வைத்தான்.

நான் வெளியே எட்டிப்பார்த்தேன் கையில் ஐம்பது சத குற்றியுடன் ஐந்தாறு வந்தேறுகுடிகள் வரிசையாக நின்றார்கள்.

"மச்சான் வெளியில் ஆட்கள் நிற்கினம் போவோமா"

"நீ போடா வீட்டை நான் இன்னும் ஒரு அரை ம்ணித்தியாலம் கதைச்சு போட்டு வாரன்"

என்று ரிசைவரின் பேசும்பகுதியை கையால் பொத்தியபடியே சொன்னான்..

"என்னப்பா நேற்று டெலிபோனில் கணநேரம் கதைச்சனீங்கள் போல இருக்கு எவ்வளவு காசு வந்தது"

"நான் ஒருசதமும் செலவளிக்கவில்லை ,அவன் நித்திரையில் இருந்தான் ஒன்றும் கதைக்கவில்லை...ஆனால் என்னோட வந்தவன் 50 சத குற்றியை போட்டு அரைமணித்தியாலத்துக்கு மேல் லண்டனுக்கு கதைச்சவன்"

"அப்ப என்னையும் நாளைக்கு கூட்டிக்கொண்டு போங்கோ நாளைக்கு மாமியோடா கனடாக்கு கதைக்க"

"உந்த கள்ள வேலை செய்து கதைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ,உமக்கு தேவை என்றால் அவனை கூட்டிக்கொண்டு போய் மாமியோட எடுத்து கதையும்"

"அவனோடா நான் எப்படி போறது விசர் கதை கதைக்கிறீயள்"

"பின்ன பேசாமல் இரும்"

இரண்டு வருடங்கள் கழித்து கையடக்க தொலைபேசி அறிமுகமானது மெல்ல மெல்ல எல்லொரும் வாங்க தொடங்கிச்சினம் அதை பார்க்க எனக்கும்ஆசை வந்துவிட்டது.

வீட்டுக்கு ஒர் கையடக்க தொலைபேசி வாங்க கூடியதாக இருந்தது. இன்று போல் வீட்டில் வாழும் ஒருத்தருக்கு ஒன்று என்ற காலம் அல்ல அது..

நில தொலைபேசி,கையடக்க தொலைபேசி இரண்டையும் பராமரிப்பதற்கு செலவு அதிமாக இருந்தது.

கொஞ்ச காலம் மற்றைய நாடுகளில் வாழும் உறவுகள் ,நண்பர்களின் தொடர்பு குறைந்து விட்டது.தூரத்து உறவுகள் நண்பர்களின் பாசமா அல்லது பணமா என்ற கேள்வி எழுந்தது.பதிலை மனம் சொன்னது பணம் தான்டா இதில் எண்ண சந்தேகம் விசரா ?....

சில தொலைபேசி நிறுவனங்கள் விளம்பர படுத்தினார்கள் மலிவு விலையில் சில நாடுகளுக்கு தொடர்பு கொள்ளமுடியுமென்று ஆனால் நாங்கள் இணைந்து கொள்ளவில்லை..ஒரு தடவை  பட்ட அனுபவம் எம்மை பயப்படுத்தியது.

அரிசி வாங்க சிறிலங்கா ஸ்பைஸ் கடைக்கு போனேன் .அங்கு விளம்பரப்படுத்தியிருந்தார்கள் பத்து டொலருக்கு 2 மணித்தியாலம் பேசலாம் கனடா,அமெரிக்கா,ஐரோப்பா நாடுகளுக்கு ...

"அண்ணே என்ன இது புது டிலா இருக்கு நீங்களே இணைப்பு கொடுக்கிறினீங்கள்,"

"இல்லைடா தம்பி இப்ப புதுசா இவங்கள் கார்ட் கண்டுபிடிச்சிருக்கிறாங்கள் ...இதை  சுரண்டிபோட்டு நம்பரை

அடிச்சு போட்டு விரும்பின நாட்டு நம்பரை அடி ,இந்தா கொண்டு போய் அடிச்சு பார்"

அரிசியையும் கார்ட்டையும் வாங்கி கொண்டு வீட்டை போனேன்.

"இஞ்சாரும் இப்ப எந்த நாட்டுக்கு டெலிபோன் எடுக்கலாம் "

"ஏன்னப்பா தேவையில்லாம் அடிச்சு காசை வீணாக்கிறீயள் ஒரு நிமிசத்துக்கு 35 சதம் எடுக்கிறாங்கள் கதைக்க தொடங்கினால் நீங்கள் கதைச்சு கொண்டேயிருப்பியள்"

 

"சிவத்தாரின்ட கடையில் ஒரு கார்ட் புதுசா வந்திருக்கு இரண்டு மணித்தியாலம் கனடா,ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு கதைக்கலாமாம், இந்த நேரத்தில் எந்த நாட்டுக்கு கதைக்க முடியுமென்று பாரும்"

"கனடாவுக்கு சரியா இருக்கும் மாமியோட கதைப்போம் கொண்டாங்கோ கார்ட்டை"

கார்டை கொடுத்தேன் டெலிபோனுக்கு அருகிலிருந்து  10 சத குற்றியால் சுரண்டி

அதிலிருந்த அறிவுத்தலுக்கு ஏற்ப பதிவுசெய்து ,மாமியாருக்கு எடுத்தாள்

"‍ஹலோ மாமியா "

"ஒம் நீங்கள் "

" மாமி நான் சுதா அவுஸ்ரேலியாவிலிருந்து என்னை மறந்து போனீங்களே"

" என்னடி இன்று அதிசயமா எடுத்திருக்கிறாய் ,மழை வரப்போகுது"

"இல்லை மாமி தெரியும்தானே வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ,வேலைக்கு போகவேணும், வீட்டு வேலை ,சமையல் பிள்ளைகளை படிபிக்க வேண்டும் அதுதான் நேரம் கிடைக்கிறதில்லை ...இன்றைக்கு கொஞ்சநேரம் கிடைச்சது அது உங்களுக்கு எடுத்தனான்"

" ஏன்டி உன்ட மனுசன் உதவி செய்யிறதில்லையே வீட்டு வேலைகளுக்கு"

" ம்ம்ம்ம் .சரியான யாழ்ப்பாணத்தான் அவர் அசைய மாட்டார்"

"என்ட மனுசனும் யாழ்ப்பாணத்தான் தான் ஆனால் நான் அவரை சொல்லி அரைவாசி வேலை செய்து போடுவேன் "

பொல்லை கொடுத்து அடிவாங்கி கொண்டிருக்கிரேன் என நினைத்தபடி குளியலறைக்கு சென்றேன்.

சுடுதண்ணி பைப்பை திறந்துவிட்டு அதில் சுடுதண்ணி வரும் வரை வெளியே பேசுவதை ஒட்டு கேட்க முயற்சி செய்தேன் ஒன்றும் கேட்கவில்லை .

குளித்து முடித்து வெளியே வந்தேன்

"ஒம் மாமி ,சரி மாமி நான் ஆறுதலாக பிறகு எடுக்கிறன் வைக்கடே பாய்ய்ய்"

"இவ்வளவு நேரமும் அவசரப்பட்டே கதச்சனீர்"

"கி கி கி "

 

 

 

 

 

4 comments:

  1. ரெலிபோன் மாண்மியம் நல்லா இருக்கு. ஊரில இருக்கேக்க எடுக்கிற ஆக்களும் அந்தப் பக்கம் காசு கட்ட வேணும் கதைக்கிற ஆக்களும் காசுகட்ட வேணும் இந்தப் பக்கம் எண்டு நிலைமை இருந்தது. இங்க வந்த உடன நொக்கியா தொலைபேசி ஒப்ரஸ் இணைப்போட ஒரு முழங்கை அளவு சைசில 2 வருஷ ஒப்பந்தத்தில வாங்கினது நல்ல நினைவா இருக்கு. நல்ல நேர்மையான சிறந்த சேவையை வழங்கினார்கள். ஆனால் ஏனோ இந்த வியாபார சந்தையில் நின்றுபிடிக்க முடியாமல் போய் விட்டது....

    ReplyDelete
  2. ஊரில land line இருக்கிறது ஒரு பெரிய ஆடம்பரமான ஒன்று. இங்கு வந்து ரெலிஸ்ரா இணைப்பு கிடைத்த போது ஏதோ நான் கோடீஸ்வரி ஆகி விட்டதைப் போல ஒரு மிதப்பில் மிதந்தேன். கார் ஓடி லசென்ஸ் கிடைத்த போதும் அப்படி ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன்.
    எல்லாவற்ரையும் மீண்டும் நினைவுறுத்திச் சென்றது உங்கள் ரெலிபோன் மாண்மியம்.
    நன்றி புத்தன்.:)

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி...இன்று கார், டெலிபோன் எல்லாம் பெரிய விடயமாக தெரியவில்லை ..

    ReplyDelete
  4. மலரும் நினைவு போலும் பழைய தொலைபேசிக்கதை .)))

    ReplyDelete