அவனை நான் முதலில் சந்திக்கும் பொழுது எட்டு வயது இருக்கும்.பெடியன் நல்ல கொளு கொளு என்று இருப்பான்.பார்த்தவுடனே கன்னத்தில் கிள்ள வேண்டும் போல இருக்கும்.அவனது அப்பா குகன் எனது நெருங்கிய நண்பன்,வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். குடும்ப சகிதமாக சென்றிருந்தேன்.போகும் பொழுது சும்மா போகக்கூடாது எதாவது கொண்டு போகவேணும் என மனிசி நச்சரிக்க மலிவுவிலையில் வாங்கிய சொக்லட் பெட்டியை ரப்பிங்க் பெப்பரில் சுற்றி எடுத்து சென்று, குகனின் மகனிடம் கொடுத்தேன்.thank you uncle.. என்று கூறிய படியே நான் கொடுத்த பார்சலை பிரித்து பார்த்தான்.vow can I eat it now ammaa என்று கூறியபடியே என தாயிடம் அனுமதி கேட்டான்.not now darling latter...மறுப்பு தெரிவிக்க முகத்தை தொங்க போட்டபடியே உள்ளே சென்றுவிட்டான்.
மச்சான் கொட்டா ,கொல்டா என குகன் கேட்டான்.ஒன்றும் வேண்டாம் மச்சான் என்றேன்.
"என்ன தண்ணியை விட்டிட்டியோ?ஊரில நீ அடிக்காத தண்ணியா"
"இல்லை மச்சான் ஊரில போத்தல் கணக்கில கள்ளடிச்ச எங்களுக்கு,இங்க உவங்கள் அல்ககோல் வீதாசாரம் போட்டு பயப்படுத்துகிறாங்கள் அதுதான் "
"அரைப்போத்தல் கள்ளுக்கு உவங்கன்ட மூன்று போத்தல் பியர் அடிச்சா வாற வெறி வரும், பயப்படாமல் அடிடா"
இருவரும் உட்சாகபாணத்தை அருந்தி கொண்டிருக்கும் பொழுது சாய்நேஸ் ஒடிவந்தான் அவனுக்கு கொஞ்சம் கோக்கை ஊற்றிகொடுத்தேன் .சிரித்த படியே வாங்கி குடித்து விட்டு உள்ளே சென்று பெரிய ஏப்பம் விட்டான். "யாரப்பா இவனுக்கு கோக் கொடுத்தது" என உள்ளே இருந்து திருமதி குகன் குரல் கொடுத்தாள்.
"சுரேஸ்தான் கொஞ்சம் கொடுத்தவன்"
"சுரேஸ்! நாங்கள் இவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை , கோக் குடிச்சான் என்றால் ஒரே கைபர் அக்டிவ் "என்றாள். கொஞ்சம் கோபமாக சொன்னாள்.எனக்கு தலை சுற்றியது மாறிக்கிறி பியரை ஊத்தி கொடுத்து போட்டேனோ என, அவனுக்கு கொடுத்த கிளாசை மனந்து பார்த்தேன் கிளாஸில் கோக்தான் மனந்தது.
மனிசி அவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை அதுதான் கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டாள் என்ற குகன் you carry on மச்சான் என்றான்.எனக்கு ஏறிய வெறி படக்கென்று இறங்கிவிட்டது.பிறகு இரண்டு கிளாஸ் அடிச்ச பின்பு மீண்டும் ஒரு பதமான நிலைக்கு வந்தேன்.இந்த சம்பவத்திற்க்கு பிறகு ஒருத்தருக்கும் நான் கோக் கொடுப்பத்தில்லை.
வீட்டை திரும்பி போகும்பொழுது மனிசி திட்டிக்கொண்டே வந்தாள்.
"ஏன் சாய் நேஸ்க்கு கோக் கொடுத்தனீங்கள்"
"என்னப்பா பியரை கொடுத்தமாதிரி கத்துகின்றாய்"பியர் அடிச்ச துணிவில் நானும் கத்தினேன் மனிசி அடங்கி போயிட்டாள்.இரண்டுநாள் கதைக்காமல் இருந்தவள் சொன்னாள் இஞ்சபாருங்கோ அப்பா இந்த நாட்டில யாரும் வீட்டை வந்தால் கூட தேனீரா,கொப்பியா,கூல் டிரிங்கோ வேணும் ,தேனீருக்கோ,கோபிக்கோ எத்தனை சீனி போடவேணும் என கேட்டுத்தான் கொடுக்க வேணும் ஊரில் கொடுக்கிறமாதிரி நங்கள் விரும்பிய தேனீரை நல்லா சீனியை போட்டு கரைச்சு கொடுக்ககூடாது.
அட விருந்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்கும் தேனீரில் இவ்வளவு ஜனநாயகம் எங்கன்ட சனம் பார்க்குது என்றால் நிச்சயம் சதாரணவாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும் என மனதில் எண்ணிக்கொண்டேன்.
"இஞ்சாரும் எனக்கு இந்த கோக் விசயத்தில் இன்னும் சந்தேகம்"
"என்ன சந்தேகம்"
"கோக் குடிக்கச்சொல்லி விளம்பரம் போடுறாங்கள் ,மக்டொனாலில் கோக் கொடுக்கிறாங்கள் .கைபர் அக்டிவ் வந்திடும் என்றால் ஏன் கடைகளில் எல்லாம் விற்கிறாங்கள்....அது சரி கைபர் அக்டிவ் (hyperactive )என்றால் என்ன ?எதாவது வருத்தமா?"
"சீ சீ வருத்தம் கிருத்தம் இல்லை குழப்படி செய்து கொண்டிருப்பாங்கள் பெடியளை கொன்றால் பண்ண முடியாது"
"அட குழப்படி செய்வாங்கள் என்றபடியாளொ கோக் கொடுக்க கூடாது.குழப்படி செய்வது பெடி,பெட்டையளின்ட குணம்,சிலருக்கு உது பரம்பரையாக வரும்.சின்னவயசில நானும் குகனும் செய்யாத குழப்படியே,அப்பனின் குணம் அவனுக்கு வந்திருக்கும் ஏன் அவனின்ட அம்மா கொய்யா மரத்தில ஏறி விழுந்தெழும்பினது எல்லாம் குழப்படிதானே"
"உதுகளைப்பற்றி நீங்கள் ஆராச்சி செய்யாமல் இனிமேல் சின்னபிள்ளைகளுக்கு கோக் கொடுக்கும் பொழுது தாய் தெகப்பன்மாரிட்ட கேட்டுபோட்டு கொடுங்கோ"
"ம்ம்ம்ம்"
சாய்நேஸ் நாள்ளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ஆக வளர்ந்து கொண்டிருந்தான்.அதேபோல எங்களது உற்சாகபாண பலவித பரிணாம வளர்ச்சியடைந்து சென்றுகொண்டிருந்தது .அதாவது பியர்,சிவப்பு,கறுப்பு என முன்னேறிக்கொண்டிருந்தது.
சிட்னியில் பாருங்கோ உவங்க உந்த வெள்ளைகள் கண்டதையும் கண்ட இடத்தில செய்ய விடமாட்டாங்கள் சட்டத்தை போட்டு கட்டுபடுத்தி வைச்சிருக்கிறாங்கள்.சுதந்திரமாக திரிந்த எங்களுக்கு சரிவராது . சட்டங்களை உச்சிப்போட்டு எங்கன்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் நாங்கள் கில்லாடிகள் என வெள்ளைகளுக்கு தெரியாது.சில மண்டபங்கள்,சில வீதிகளில் அல்ககோல் பிரி சோன் என்று பெயர்பலகை போட்டிருப்பாங்கள். நாங்கள் என்ன செய்வோம் என்றால் கோக் கானுக்குள் உற்சாக பாணத்தை கலந்து வெள்ளைகளின் சட்டத்தை பேய்காட்டியிருக்கிறோம்.
சில சமயங்களில் சாய்நேஸும் கோக் கானுடன் நிற்பதை கண்டிருக்கிறேன் .அப்பன் வெள்ளைகளை பேய்காட்ட மகன் அப்பனை பேய்காட்டுகிறானோ தெரியவில்லை.எல்லாம் அந்த உற்சாக பாணத்திற்கே வெளிச்சம்....
குடிவகையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி போல் எங்களுடைய மது அருந்தும் இடமும் பரிணாம வளர்ச்சி யடைந்திருந்தது. ஆரம்பத்தில் வீட்டின் வெளியே பின் விறாந்தை,கார் டிக்கி போன்றவற்றிலிருந்து மது அருந்திய நாங்கள் இன்று வீட்டின் மைய பகுதியில் பார் ஒன்றை நிரந்தரமாக உருவாக்கி மது அருந்த கூடியவசதியுடன் இருக்கின்றோம் .அப்படியான வசதியுடையதுதான் குகனின் வீடு.சாய்நெஸும் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டான் அதனால் குகனுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனயாக இருக்கவில்லை என்பது அவனது வாழ்க்கை முறையில் தெரிந்தது.
கைத்தொலைபேசி அலரியது .பெயரை பார்த்தேன் குகன் ...வழமையாக தொலை பேசி வந்தால் யாருடைய கோல் என்று பார்த்துதான் எடுப்பேன்.குகனின் கோல் வந்தால் அநேகமாக பதில் அளிப்பேன்.
"`ஹலோ மச்சான் எப்ப வந்தனீ"
"அங்கிள் தி ஸ் சாய்நேஸ்....அப்பா சனிக்கிழமை தான் வருகின்றார் ...I am going to propose to a girl on saturday ...it is a suprise party..அன்ரியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ"
"who is that lucky girl............."
"எங்கன்ட பிள்ளையோ அல்லது"
"ஒம் அங்கிள் சிறிலங்கன்"
".....சமரசிங்கே"
"Thanks for calling. I will be there. Bye
"
என்று கூறி டெலிபோனை துண்டித்தேன்.
சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.
"இஞ்சாரும் உவன் சாய் நேஸ் சனிக்கிழமை ப்ரொபோஸ் பண்ணப்போறானாம்"
"யார் அந்த சிங்கள பெட்டையையோ"
"ஓம்மோம் உமக்கு முதலெ தெரியுமோ"
"ஒம் தாய்காரி ஒருதடவை சும்மா சொன்னவ அவையளுக்கு பெரிசா விருப்பமில்லை,பெடியன் ஒற்றை காலில் நிற்கிறானாம்"
"விசர் பெடியன் ஒரு எங்கன்ட பெட்டையை கட்டியிருக்கலாம்"
"இஞ்ச அப்பா நாங்கள் உதுகளைப்பற்றி கதைக்கூடாது எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கு..."
"அது சரி .....எதோ பெட்டையை புரப்போஸ் பண்ணியிருக்கிறான் என்று சந்தோசப்படுவோம்..." "
சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.
சனிக்கிழமை பின்னேரம் குகனின் வீட்டுக்கு சென்றிருந்தோம்..இன்னும் சிலர் வந்திருந்தனர்.எல்லாமாக 20 பேர் கூடியிருப்போம் .குகனும் அப்பொழுதுதான் வந்திருந்தான்.அவனிடம் சுகம் விசாரித்துவிட்டு எல்லோரும் கூடி கதைத்துகொண்டிருந்தோம்.குகன் எல்லோரையும் பாரின் முன் வரச்சொன்னான்.சாய் நேஸ் பார் அட்டன்டன்டனாக உள்ளே நின்றான்.
"அங்கிள் வைன்,பியர்,ஸ்கொட்ச்"பெடிக்கு எட்டு வயசில கொக் கொடுத்தபொழுது கைபர் அக்டிவ் என்றாங்கள் பெடி இப்ப ஸ்கொட்ச் அடிக்குது எல்லாம் காலம்தான்டா என மனதில் எண்ணிகொண்டேன்.
"ஸ்கோட்ச் வித் கோக்"என்றேன்.பக்கத்தில் நின்ற லண்டன் காய் ஒன்று ஸ்கோட்ச் ஒன் த றோக் என்றார்.
என்னடா இந்த மனுசன் ஒன் த றொக் என்று சொல்லுறார் என கடக்கண்ணால் பார்த்தேன்.சாய்நேஸ் ஐஸ்கட்டியை போட்டு ஸ்கோட்ச்சை ஊத்தினான்.அப்ப தான் விளங்கிச்சு ஒன் தறொக்ஸ் என்றால் நடுத்தர வர்க்க குடிவகயை ஐஸ்கட்டியினுள் ஊத்தி குடிப்பது என்று.
எனக்கு இப்ப ரெட் லெபிள் அடிச்சா தலை இடி வருகுது நான் புளு லேபிள்தான் இனி பாவிக்க போறான் அந்தமாதிரி ஏறும் ஆனால் அடிச்ச மாதிரியே இருக்காது.வரும் பொழுது டுயுட்டி விரியில் எடுத்தனான் இருங்கோ கொண்டுவாரன் என உயர் சாதி குடியை அறிமுகம் செய்தான் குகன்.
ஒவ்வொரு குடி வகைக்கும் தனியாக கிளாஸ்கள் இருந்தன.ஸ்கோட்ச்சுக்கு தனியான கிளாஸ்,பியர் குடிப்பதற்கு தனியானது,வைன் மற்றும் கொக்டெயில் குடிப்பதற்கென தனிரகம்.அதாவது சாதி பிரிக்கப்பட்டிருந்தது.கிளாசில் மட்டுமல்ல குடிவகையிலும் பிரிக்கப்படிருந்தது.ஒரே இன குடிவகையாக இருந்தாலும் வர்க்க வேறுபாடு இருந்தது.கொல்ட் லெபிள்,புளு லெபில்,கிரீன் லெபிள்,பிளக் லெபிள்,ரெட் லெபிள் என வர்க்க வேறுபாடு காணப்பட்டது. ஜொனி வோக்கர் இனம்,சிவாஸ் இனம் போன்ற இனங்களின் நடுத்தர வர்க்க குடிவகைகள் அதிகமாக காணப்பட்டது.
ஒரு குடிவகையை இந்த கிளாசில்தான் ஊத்தி அடிக்க வேண்டும் என்ற வர்க்க வேறுபாட்டு சிந்தனை எனக்கு எதோ குடிவகையில் மையவாத சிந்தனை போல் இருந்தது.உடனே பக்கதில் இருந்த வைன் கிளாசை எடுத்து கொஞ்சம் ஸ்கொட்ச்,கொஞ்சம் பியர்,சிரிதளவு வைன் ஊத்தி கொக்டெயிலா அடித்தேன்........குடிவகையில் வர்க்க வேறுபாடு தெரியவே இல்லை..... வெறி ஏறுவதற்கு தான் எல்லோரும் குடிக்கின்றனர் பிறகு ஏன் இந்த கிளாஸுக்குள் இந்த குடிவகைதான் ஊத்தி குடிக்க வேணும் என்று சட்டம் வைச்சிருக்கிறாங்கள்.இந்த குடிகார மையவாத சிந்தனையை ஒரு புரட்சி மூலம் ஒழிக்க வேண்டும் என எண்ணியபடியே மீண்டும் வைன் கிளாசில் ஸ்கொட்சை ஊத்தினேன்....விரும்பிய கிளாசில் விரும்பினதை அடிக்க வேணும் அதுதான் ஜனநாயகம் என்று புலம்பத் தொடங்கினேன்....
யாவும் கலப்படமற்ற சுத்த கற்பனை
No comments:
Post a Comment