Tuesday, July 24, 2012

யாழ்ப்பாண ...மண்வாசி

1966 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் நான் முதல் காலடி எடுத்து வைத்தேன்.எனது ஆரம்ப கல்வியை அந்த கிராமப்பாடசாலையில்தான் ஆரம்பித்தேன். தற்பொழுது அது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அன்று மகாவித்தியாலயமாக இருந்த பாடசாலை இப்பொழுது பல்கலைகழகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான் ஆரம்ப கல்வி பயிலும் பொழுது நாலு சிறிய கட்டிடம்தான் இருத்தது.எனது தந்தையார் அரச திணைக்களத்தில் தொழில் புரிந்தார்.அந்த கிராமத்தில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வேறு அரச சார்பு திணைக்களமும் இருந்தன.அநேகமான அரச உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தனர்.இது சில ஊர்வாசிகளுக்கு எரிச்சலை கொடுத்திருக்கும். முக்கியமாக படித்த சமுகத்தினரிடையே, எங்களுடைய வேலைஎல்லாம் வெளிமாவட்டத்தான் எடுக்கிறான் என்ற எண்ணம் இருந்தபடியால் அவர்கள் தங்களது வெறுப்பை ஒரு விதத்தில் காட்டினார்கள்.வியாபார சமூகமும் ஒரளவு இதால் பாதிக்க பட்டிருக்கும்.யாழ்ப்பாண வியாபாரிகளும் இங்கு கடைகள் போட்டு இருந்தார்கள்.அந்த காலகட்டத்தில் எதிர்ப்பை வன்முறையால் காட்டவில்லை.யாழ்ப்பாணி, பனங்கொட்டை என அழைப்பதன் மூலம் தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பெரிதாக இதை கண்டுகொள்ளவில்லை காரணம் அவர்கள் கூலி வேலை செய்தால்தான் அன்றைய உணவு கிடைக்கும் யாழ்ப்பாணத்தான் அந்த மாகாணத்தை தெரிவு செய்தமைக்கு முக்கிய காரணம் மொழி தான். தனது கடமைகளை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கும் என்பதால் தெரிவு செய்திருந்தார்கள்.

அரச உத்தியோகத்தில் இருந்தோரின் பிள்ளைகளும் நானும் நண்பர்கள் ஆனோம்.தராதரம் எங்களை நண்பர்கள் ஆக்கிவிட்டது."டேய் பனங்கொட்டை" நான் திரும்பி பார்க்கவில்லை" ஏய் யாழ்ப்பாணி" என்றவுடன் திரும்பி பார்த்தேன் அவன் சிரித்தான்.ஆரம்பத்தில் எனக்கு ஒன்று புரியவில்லை காலப்போக்கில் அந்த பெயரால் பலர் அழைக்க தொடங்கினார்கள்.
தொடர்ந்து என்னை இப்படி அழைப்பதால் பெற்றோரிடம் சொன்னேன்.
"நான் முதலே சொன்னேன் உந்த மட்டக்களப்பில் இருந்து பிள்ளையை படிப்பிக்க ஏலாது ,நான் ஊரில் இருக்கிறேன் நீங்கள் மட்டும் இங்க வந்து வேலையை பாருங்கோ என்று,என்ட சொல்லைக் கேட்டால் தானே..."அமமா புலம்பத்தொடங்கிவிட்டார்.

அப்பா கண்டு கொள்ளவில்லை"அவன் யாழ்ப்பாணி என்று சொன்னால் நீ மட்டக்களப்பான் எனறு சொல்லுறதுதானே

ஆரம்பள்ளியை முடிச்சுப்போட்டு உயர்கல்வி படிக்க தொடங்க அவனை ஊருக்கு அனுப்பி படிப்பிப்போம் இப்ப அவன் இங்க படிக்கட்டும்" என அம்மாவை சமாதானப்படுத்தினார்.
காலப்போக்கில் எல்லாம் பழகிபோய்விட்டது அவன் யாழ்ப்பாணி என்றால் நான் மட்டக்களப்பான் என்று சொல்லுவேன். சில நேரம் ஆசிரியரிடம் கோல் மூட்டிவிடுவேன்.ஆசிரியரும் சிரித்து சமாளித்துவிடுவார்.அவரும்திருமணமாகாத இளம்வயதினர். ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் சிலருக்கு அந்த காலத்திலயே யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாடு இருந்தது.சாதாரண தொழிலாளிகள் இதுகளைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.மட்டக்களப்பில் உள்ள கல்வி சமூகத்திற்க்கு யாழ்ப்பாணி தங்களது அரச தொழில் வாய்ப்புக்களை எடுத்து கொள்கிறார்கள் என்ற ஆதங்கம்.
இரு மாவட்டதிலும் உயர்தர படிப்புக்கு மேல் படித்த மேதாவிகள்தான் இந்த பிரதேச விடயத்தை பெரிதாக கணக்கில் எடுப்பார்கள்."காக்கா இல்லாத ஊருமில்லை யாழ்ப்பாணி போகாத ஊருமில்லை" என்பது அந்த மாவட்டத்தில் ஒரு பேச்சு வழக்கா இருந்தது.

மட்டக்களப்பு பேச்சு முறை உச்சரிப்பு கொஞ்சம் வரத்தொடங்க அம்மா கடுப்பாகி உவனை இங்கு வைத்திருந்தால் மட்டக்களப்பார் மாதிரி கதைக்க போறான் விரைவில் ஊர்பாடசாலைக்கு மாற்ற வேண்டும் என அடம்பிடித்து யாழ்ப்பாண பாடசாலையில் ஆறாம் வகுப்பில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து முடித்தார்.


மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆறாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தேன்.அங்கு ஆசிரியர்
"எங்க முதல் படித்தாய் "

" செங்கலடியில் சேர்" .
பலருக்கு புரியவில்லை அது எங்கே இருக்கு என பலர் வினாவத்தொடாங்கினார்கள் .உடனே ஆசிரியர் எல்லோரையும் சத்தம் போடாதயுங்கோடா ,அது மட்டக்களப்பில் இருக்கு .அன்றிலிருந்து நான் மட்டக்களப்பான் ஆனேன்.ஆசிரியரும் சில நேரங்களில் டேய் மட்டக்களப்பு நீ சொல்லு என கேட்பதுண்டு.

நான் உயர்தரம்படிக்கும் பொழுது பலர் மட்டக்களப்பிலிருந்து எமது பாடசாலைக்கு படிக்க வந்தார்கள் (79, 80களில்) இதில் பல முஸ்லிம்களும் அடக்கம்..இங்கு படித்துவிட்டு மட்டக்களப்புக்கு சென்று உயர்தர பரீட்சை எடுப்பார்கள்.இதன் மூலம் குறைவாக புள்ளிகள் எடுத்தாலும் பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.இப்படி பலர் மருத்துவபீடம்,பொறியியல்பீடம் மற்றும் பீடங்களுக்கும் தெரிவிசெய்யப்பட்டார்கள்.
வேலைவாய்ப்புக்காக கொழும்பு சென்றேன்.இராணுவ சோதனைச்சாவடியில் அடையாள அட்டையை பரிசோதகர் கேட்க கொடுத்தேன் .
அதில் ஊரின் பெயர் இருந்தும் அந்த சிப்பாய்
"கம கோய்த"

தயக்கத்துடன் "யவ்னா"

"யாப்பானயத, பாக் பொட்டாக் அறின்ட"

சுட்கேஸ்ஸை திறந்து காட்டினேன் கிளறி பார்த்துவிட்டு .

"யன்ட"

தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு போட்டு சுட்கேஸ்சை பூட்டிப்போட்டு இடத்தைவிட்டு உடனடியாக நகர்ந்தேன். இதன் பின்பு இராணுவ சாவடிகளில் ஐ.டி. கேட்டு கம கோயத எண்டா யாப்பனய என்று சொல்லுவேன் .சில இராணுவத்தினர் சிரிப்பார்கள் ,சிலர் முறைத்துப்பார்ப்பார்கள்.எனது சிங்கள உச்சரிப்பை பார்த்துதான் அவர்கள் சிரித்திருபார்கள் என நினைக்கிறேன்.

கொழும்பில் இரண்டு இடத்திற்கு வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன்.நேர்முக தேர்வுக்கு அழைத்திருந்தார்கள் . ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.தட்டுதடுமாறி பதில் சொன்னேன்.
“Are you from Jaffna”
“yes”
நிமிர்ந்து என்னை பார்த்தார்
..dangerous place
மேலும் சில கேள்விகள் பின்பு
.........................................
“we will inform you later”
கொழும்பில் வேலை செய்ய கொஞ்சம் பயமாக இருந்தது.இடம் எமக்கு சரிவராது எண்டு போட்டு இந்தியாவுக்கு போனேன்.அங்கு தமிழர்கள் அன்பாக பழகினார்கள். எனது தமிழின் உச்சரிப்பின் மூலம் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு "நீங்க சிலோன் தமிழா"
"ஒம்"
உடனே அவர்களும் என்னை மாதிரி யாழப்பாணத் தமிழில் பேசுவதாக பேசினார்கள் .சகிக்க முடியாமல் இருந்தது .அந்த காலகட்டத்தில் மனோகராமா படத்தில் யாழ்ப்பாண தமிழில் பேசி நடித்திருந்தவ அதன் பாதிப்பு அந்த மக்களிடம் காணக்கூடியதாக இருந்தது.
மூன்று வருடங்கள் இந்தியாவில் மட்டை அடித்துவிட்டு.மீண்டும் கொழும்புக்கு வந்தேன் வேலைக்கு விண்ணப்பங்கள் போட்டேன் .பெயரை பார்த்து சிலர் அழைக்கவில்லை .ஒரு கொம்பனி மட்டும் அழைத்திருந்தார்கள்.
அதே கேள்விகள்.இதில் நான் சென்னையில் படித்த சான்றிதலும் இருந்த படியால் “you studied and worked in dangerous places” .........”we will inform later”
மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என பத்திரிகையில் பார்த்தவுடன் விண்ணப்பித்தேன்.சான்றிதழ்களுடன் சமூகமளிக்கும்படி கடிதம் அனுப்பியிருந்தார்கள் அவர்க.ள் பெயர் ஊர் ஒன்றும் பார்க்கவில்லை காரணம் அங்கு மனிதவளம் தான் தொழில் செய்ய தேவைப்பட்டிருக்கவேண்டும்.
சவுதி செல்ல தெரிவு செய்யப்பட்டேன்.மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு விசாவும் கைக்கு எட்டியது .விமான நிலையத்தில் ஒரே கூட்டம் அநேகர் மத்திய கிழக்கு செல்வதற்காக நின்றிருந்தார்கள். குடிவரவு திணைக்களதின் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் உள் சென்றேன்.விமானத்தில் அநேகர் முஸ்லிகளாக இருந்தார்கள்.முஸ்லிம்கள் எல்லோரும் தொப்பி போட்டிருந்தார்கள் .எனையோரில் அநேகர் சிங்களவர் .தமிழர்கள் நாலு ஜந்து இருந்திருப்போம்.

சவுதியில் டகரான் விமானநிலையத்தில் இறங்கியவுடன் அனல் காற்று முகத்தில் வீசியது.கொம்பனியின் முகவர் எங்களை இரண்டு பஸ்களில் ஏற்றினார். மந்தைகளை போல் அடிபட்டு ஏறினோம் .பஸ் வண்டி பாலைவனத்தில் ஒடி ஒருமணித்தியாலத்தின் பின்பு ஒர் முகாமில் எங்களை இறக்கி விட்டது.அங்கு மேற்பார்வையாளர் ஒரு சிங்களவர் உதவியாளராக ஒரு முஸ்லிமும் இருந்தார்.(இதைப்பற்றி கிறுக்குவது என்றால் பல விடயம் கிறுக்கலாம் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்) எல்லோருக்கும் படுக்கை விரிப்புக்கள் ,கோப்பை மற்றும் சில பொருட்களை கொடுத்து எமது தங்கும் இடத்தையும் காட்டினார்கள். அங்கு பல நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

மேற்பார்வையாளர் சில கேள்விகளை கேட்டார் சிறிலங்காவில் எந்த இடம் .
நான் வழமையான பதில் யாழ்ப்பாணம் என்றேன்.
"கொட்டித"

சிரித்துவிட்டு....நீ ஜெ .வி.பி யோ எண்டு கேட்க வேணும் போல இருந்தது.ஆனால் கேட்கவில்லை. முதல் நாளே ஏன் வீண்வம்பு என தவிர்த்து கொண்டேன்.
அந்த தங்குமிடத்தில் 500 பேர் வரை தங்கமுடியும் .யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் அறிவுரை சொன்னார் யாரும் எந்த இடம் என்று கேட்டால் யாழ்ப்பாணம் என சொல்லவேண்டாம் கொழும்பு என சொல்லசொல்லி .ஆனால் நான் யார் கேட்டாலும் யாழ்ப்பாணம் என்றுதான் சொன்னனான்..
ஒரு நாள் பத்திரிகையை பார்த்தேன் அதில்
யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சிறிலங்கா இராணுவ தளபதி அதன் பெயரை "யாப்பாபட்டுவ"என மாற்றி ஜனாதிபதியிடம் ஒலைச்சுவடியை(????)கொடுத்து பெயரும் பட்டமும்(ஜெனரல்) பெற்றுக்கொண்டார்.இதை மத்திய கிழக்கில் உள்ள பத்திரிகைகள் படத்துடன் பிரசுரித்திருந்தன.பார்த்தவுடன் மனசு கஸ்டமாக இருத்தது .

இப்படி மத்திய கிழக்கு வாழ்க்கை முடித்து அவுஸ்ரேலியா வந்தன் .பல தடவை கொழும்புக்கு போய்வந்த பின்பு கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள எனது தாய் மாமனார் சுகவீனமுற்றிருந்தார். அவரை பார்ப்பதற்கு இந்தியா செல்வதற்கு விசா அனுமதிக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன்.இந்தியா தூதரகம் இரண்டு நாள் கழித்து வரும் படி சொல்லியிருந்தார்கள் .அவசரமாக செல்ல வேண்டும் உடனே தரமுடியுமா என கேட்டேன், இல்லை நீங்கள் பிறந்த இடம் யாழ்ப்பாணம் உங்களது விண்ணப்பத்தை சிறிலங்காவுக்கு அனுப்பி பின் இந்தியாவுக்கும் அனுப்பி கிலியரன்ஸ் எடுத்த பின்பு தான் தரமுடியும்,சில நேரம் மூன்று கிழமைக்கு மேல் எடுக்கும்... என்றார்கள்...40நாட்களின் பின்பு விசா வந்திருக்கு வந்து எடுக்கும் படி அழைத்தார்கள்...அதன்பின்பு நான் இந்தியாவுக்கு போகவில்லை.

அண்மையில் எனது. உறவுக்காரார் குடும்பத்துடன் சீனா போவதற்க்கு விண்ணப்பித்திருந்தார் .அவருக்கும் பிள்ளைக்கும் விசா உடனே கொடுத்திருந்தார்கள் ஆனால் அவரது மனைவிக்கு கொடுக்கவில்லை காரணம் அவர் பிறந்த இடம் யாழ்ப்பாணம்... இரண்டு நாட்களின் பின்புதான் கொடுத்தார்கள்.         

5 comments:

  1. தமிழனின் அடையாளப் பிரச்சினை!

    காணாத கோணங்கள்: இது வரை பார்க்கப்படாத பார்வைகள்!

    நீங்கள் கையாண்ட விதம் அற்புதம்.

    பாராட்டுக்கள் புத்தன்.

    ReplyDelete
  2. நன்றிகள் மணிமேகலை...எனது கிறுக்கலுக்கு பதிலிட்டமைக்கு

    ReplyDelete
  3. இன்னும் இலங்கைப் பாஸ்போர்டைத் தூக்கிக் கொண்டு திரியும் என்னிடமும் இன்னும் கதைகள் உள்ளன.

    ReplyDelete
  4. நன்றிகள் சக்திவேல் ....எழுதுங்கோ வாசிப்போம்

    ReplyDelete
  5. ம்ம்ம்... உண்மைதான்..........

    ReplyDelete