Sunday, April 12, 2020

டொயிலட் டிசு


எப்ப இளைப்பாரலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலை விட்டேழுந்தேன்.எனது வயதையும் இளைப்பாறுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் வயதெல்லையையும் எண்ணிபார்த்தேன் இன்னும் 10 வருடங்கள் வேலை செய்தால் தான் ஓய்வுதியம் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் .சிறிலங்காவிலிருந்தால் நான் இப்ப‌ பென்சனியர் ஆனால் இங்க பொல்லுபிடிச்சு கொண்டு வேலைக்கு போகவேண்டி இருக்கு என சலித்தபடியே காலைக்கடன்களை முடிக்க தொடங்கினேன்.
"டேய் நீ சிறிலங்காவிலிருந்தால் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்குமா?அரச உத்தியோகம் இல்லாவிடின் பென்சனே இல்லை"..
மனச்சாட்சியின் அதட்டலினால் காலைகடன்களை விரைவாக முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட தயாரானேன்.
"இஞ்சயப்பா வரும் பொழுது வூலியில் டொய்லெட் டிசுவும்,தமிழ் கடைகளில் போய் அரிசி ,பருப்புகளை வாங்கி வாங்கோ"
"போனகிழமைதானே எல்லாம் வாங்கினாங்கள் ,நீர் தானே எல்லாத்தயும் வாங்கி கொண்டு வாரனீர் என்ன புதுசா என்னை  வாங்கச் சொல்லுறீர்"
"என்னப்பா நீங்கள் நியுஸ் பார்க்கவில்லையே "
"பார்த்தனான் இவன் ட்ரம்ப் என்னவோ அலட்டிக்கொண்டிருந்தான்,சைனாவில கொரானா நோயினால் ஆயிரம் பேர் செத்து போய்விட்டனர் என்றாங்கள் அதற்கும் எங்கன்ட சொப்பிங்க்கும் என்ன தொடர்பு, அதுவும் முக்கியமா டொய்லட் டிசுவுக்கும்"
"நேற்று இரவு சுதா சொன்னாள் கடையில் சனம் டொயிலட் டிசுவுக்கு அடிபட்டுதுகளாம்"
" எனக்கு உந்த  டியுசு பிரச்சனையா இருக்காது ...அரிசி பருப்புக்களை வாங்கி கொண்டு வாரன்"
 சொல்லியபடி வேலைக்கு புறப்பட்டேன்.வழ‌மையாக காலையில் வேலைக்கு போகும் பொழுது பக்தி பாடல்களை கேட்டுக்கொண்டு செல்வது வழ‌க்கம்..அன்று அவுஸ்ரேலிய தேசிய வானோலியை  ஒன் செய்தேன்.
"கொரானா எனைய நாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது..அவுஸ்ரேலியாவில் ஒருவர் மரணம்,50 பேர் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்..."
இந்த செய்தி கேட்ட பின்பு கொரனாவினல் அன்றாட வாழ்க்கை பாதிப்படைய போகின்றது என உணர்ந்தேன்.
வேலைக்கு போனவுடன் எல்லோரையும் மீட்டிங்க்கு வரசொன்னார்கள் .நாங்களும் சம்பளத்தை கூட்டி தரப்போகிறார்கள் என எண்ணியபடி சென்றோம்.எல்லோரையும் பக்கவார்ட்டில் கை நீட்டி நிற்கும் படி சொன்னார்கள்.ம‌னிதவள அதிகாரி கையில் சில கோப்புக்களுடன் வந்தார்.
கொரானா நோய் பரவுவதை தடுக்க சில வழிமுறைகளை சொன்னார்.கை குழுக்குதல்,முத்தமிடல்,நெருக்கமாக இருந்தல் போன்றவற்றை தடுக்கும் படி .‌
எனது பாசத்தை சக தொழிலாளிக்கு குறிப்பாக பெண் தொழிலாளருக்கு  தெரிவிக்க முடியாமல் செய்து விட்டதே இந்த கொரனா என்ற உள்ள குமுறலுடன் வெளியேறினேன்.
மதிய இடைவெளிக்கு அருகான்மையிலிருக்கும் கொஸ்ட்கோ,வூல்வேர்த் போன்றவற்றில் டொயிலட் டிசு வாங்கலாம் என சென்றேன் .வாகனங்கள் வரிசையாக த‌ரித்து நின்றன .கடைகளை விட்டு வெளியேறுபவ‌ர்கள்  இரண்டு மூன்று பெரிய டொயிலட் டிசுக்களை எடுத்து சென்று கொண்டிருந்தனர் .அவர்களில் அநேகர் ஆசியவம்சவாளியினராக இருந்தனர்.டொயிலட் டிசு வாங்கும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் வேலைஸ்தலத்திற்கே சென்றேன்.
மீண்டும் மேலதிகாரி வந்தார் அவரின்ட மேலதிகாரி மீட்டிங் வைக்க போறாராம் எல்லோரயும் அழைத்து கொண்டு மீட்டிங் ரூமூக்கு வா என்றார்...மீட்டிங் ரூமில் தள்ளி தள்ளி அமர்ந்தோம் CEO.... வந்தார்
"ஏற்கனவே புஸ்வயர் காரணமாக எமது பிசினஸ் பாதிப்படைந்துள்ளது ,இப்பொழுது கொரனா என்ற புது பிரச்சனை வந்துள்ளது  நீங்களே பார்த்திருப்பீர்கள் ..உற்பத்தி செய்யும் பொருட்களை வைப்பதற்கே இடம் இல்லாது இருக்கின்றது.விற்பனை அதிகமில்லாத காரணத்தால் நாம் உற்பத்தியை தற்காலிகமாக குறைக்கவுள்ளோம் அதன் விளைவாக தற்காலிக தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தபோகின்றோம். நிரந்த பணியாளர்களை பற்றி நாளை அறியத்ருகிறோம்" என்றார்..
நடக்கிறது நடக்கட்டும் என்று மனத்தை திடப்படுத்திக்கொண்டு வீடு  செல்ல தயாரானேன்.மனைவி கூறிய பொருட்களின் ஞாபக‌ம் வரவே வீடு செல்லும் வழியில் வரும் முதலாவது கடைக்கு போனேன் மாலை நேரம் என்றபடியால் சனம் குறைவாக இருக்கின்றதாக்கும் என எண்ணியபடி உள்ளே சென்றேன்,வழமைக்கு மாறாக பொருள்கள் இல்லாத செல்வ்கள் தான் இருந்தன.ஏமாற்றத்துடன் அடுத்த கடைக்கு காரை விட்டேன்.அங்கும் அதே நிலை அன்று மட்டும் நான் நாலு ஐந்து கடைக்கு போனேன் எதிலும் டொயிலட் டிசு கிடைக்கவில்லை.
மனிதன் உணவை அழைந்து திரிந்து சேர்த்து வைப்பதில் நியாயம் உண்டு அவசியம் தேவையான ஒர் விடயமும் ஆகும்,. டொயிலட் டிசுக்கு அழைந்து திரியும் என்னை நினைத்து சிரிப்பதா அழுவதா குழம்பி போயிருந்தேன்.
வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் அரிசி பருப்பு சீனி போன்றவற்றை சற்று அதிகமாக வாங்கி கொண்டு வந்தேன்.
கைதொலைபேசி அடித்தது
"‍ஹலோ சொல்லும்"
"எல்லாம் வாங்கிட்டிங்களோ?"
"  தமிழ் கடை சமான்கள் மட்டும் வாங்கினான் அங்கையும் சமான்கள் முடியுது"
"எல்லா கடையிலயும் பார்த்தீங்களே,நாளைக்கு கெர்வூயு போடப்போறாங்கள் போல இருக்கு "
"கனகுமாமா சொன்னவர்"
"என்ன உம்மட மாமாவே   பிரைமினிஸ்டர்"
"உந்த ளொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை,மாமா நாலு 32 இருக்கிற பக் வாங்கிட்டாராம்"
"அது தான் எனக்கு கிடைக்கவில்லை"
"சும்மா அவரை சாட்டாதையுங்கோ நீங்கள் முதலே போய்யிருந்தால் கிடைச்சிருக்கும்"
"அவர் நாலு வைச்சிருக்கிறார் தானே மருமகளுக்கு ஒன்றை  தரச்சொல்லும்"
"அவர் வாங்கினதை உங்களுக்கு ஏன் தரவேணும் சரி சரி இன்னும் அரைமணித்தியாலத்தில் என்னை வந்து பிக்கப் பண்ணுங்கோ"
"ம்ம் பொம்பிளை பிக்கப் பண்னுறதில்லையே என்ட காலம் போகுது ,சரி போனை கட் பண்ணும் வீட்டு போன் அடிக்கின்றது."
ஒடிப் போய் நம்பரை பார்த்தேன் மாமா என்று இருந்தது.நான் அதை எடுக்கவில்லை.சிறிது நேரத்தில் நின்றுவிட்டது.
மீண்டும் கைதொலைபேசி அடித்தது,
‍"ஹலோ இப்பதானே கதைச்சி போட்டு வைத்தனீர்"
"இஞ்சயப்பா கிச்சினுக்குள்ள போய் நொட்டை தீணிகளை சாப்பிட முதல் குளியுங்கோ மற்றது உடுப்பையும் வொசிங் மெசினுக்குள் போடுங்கோ"
"என்ன  இதையும் மாமாவே சொன்னவர்"
"உங்களுக்கு அவரோட ஒரு இராத்தல் ஏனோ தெரியவில்லை ,அது சரி யார் வீட்டு போனுக்கு அடிச்சவையள்?"
"வேற யார் உம்மட மாமா தான்"
" ஏன்னவாம்'
" நான் எடுக்கவில்லை சும்மா அலட்டிகொண்டு இருப்பார்"
"பாவமப்பா எடுத்திருக்கலாமே வயசு போனதுகள் ஏதாவது கதைக்க ஆசைபடுங்கள் "
"உமக்கு தெரியும்தானே எனக்கு  ஆட்களுடன் கதைக்கிறது என்றால் அலர்ஜி என்று"
"ஓ ஓ தெரியும் தெரியும் அவரோட தண்ணி அடிக்கிற பொழுது யார் அதிகம் அலட்டுறது என்று  ...  வீட்டு போன் அடிக்கிறது மாமாவாகத்தான் இருக்கும் போய் எடுங்கோ "
"‍ஹலோ அண்ணே எப்படி"
"தம்பி என்னடாப்பா கொரானா உலகத்தையே தலைகீழாக மாற்றிவிட்டுது போல கிடக்கு டொயிலட் டிசு ஒரு இடத்திலயும் இல்லையடாப்பா"
"என்ன அண்ணே டொயிலட் டிசு  கடையில் இல்லை என்றா போல உலகம் தலைகீழா போயிற்று என்று அர்த்தமெ"
"நீ செய்தி ஒன்றும் கேட்கிறதில்லையே இன்றைக்கு ம்ட்டும் உலக பொருளாதரத்தில் நூறு பில்லியன் வருமானம் விழுந்து போய்ட்டாம்  இப்படியே மூன்று மாசம் போனால் உலகேமே படுத்திடும்"
"உந்த டிசுவில் இவ்வளவு விசயம் இருக்கே?..பிறந்த நாளிலிருந்து ஒரு முப்பது முப்பதைந்து வருசமா தண்ணீரில் தானே எல்லாம் ...இங்க வந்த பின்பு தானே டிசு விளையாட்டு"
"உனக்கு தண்ணீர் சரியா இருக்கும் எனக்கு டிசு முக்கியம் நான் வந்து 40 வருசமாகிறது....தண்ணீர் என்று சொல்லத்தான் ஞாபகம் வருகின்றது எங்கன்ட மற்ற தண்ணி வாங்கி வைச்சிருக்கிறீயோ"
"அண்ணே சும்மா போங்கோ ,ம‌னிசி ஏற்கனவே கொதியில் நிற்கின்றார் சொன்ன சமான்களை வாங்கி வைக்கவில்லை என்று இதுக்குள்ள நான் கிளாஸை தூக்கினால் ,சன்னதம் ஆடுவாள்"
"என்னடா சும்மா பயந்து சாகிறாய் ,உனக்கு இரண்டு பக் டொயிலட் டிசு ,இரண்டிலும்32 இருக்கு கொண்டு வாரன்
நீ இரண்டு கிளாசை ரெடி பண்ணு"
"அப்ப உங்களுக்கு டிசு தேவையில்லையோ"
"  நாளைக்கு காலையில் போய் இன்னும் நாலு வாங்கி கொண்டு வ‌ந்திடுவன் நீ நான் சொன்னதை ரெடி பண்ணு"
"நான் போய் உங்கன்ட மருமகளை கூட்டிகொண்டு வாரன் ,நீங்கள் டிசுவை மறக்காமல் கொண்டு வாங்கோ"

அரை போத்தலில் டிசு கிடைச்சிட்டுது என்ற மகிழ்ச்சியுட‌ன் மனைவியை அழைத்து வர‌ சென்றேன் ,இரண்டு மூன்று தடவை கைத்தொலைபேசி சிணுங்கியது பெயரை பார்த்தேன் ஆத்துக்காரியின் பெயர்.
வேலை முடிந்து வாசலில் வந்து நின்றாள் அவளை ஏற்றிக் கொண்டு வீடு சென்றேன்.
"எத்தனை தரம் போண் பண்ணினேன் ஏன் எடுக்கவில்லை"
"எடுத்தனீரோ கேட்கவில்லை "
" காரை  கடைக்கு விடுங்கோ சமான்கள் வாங்க வேணும்"
"  .அங்க ஒரு சாமனும் இல்லையப்பா .அரிசி பருப்பு எல்லாம் வாங்கிட்டன்..கனகண்ணர் வாரன் என்று சொன்னவர் கெதியா வீட்டை போவம்"
"இப்ப அவர் ஏன் வாரார்? வீட்டை சாமன்கள் இல்லை சொப்பிங் போகவேணும் நீங்கள் அவரைச் வர‌ச் சொல்லி போட்டு வந்திருக்கிறீயள்...அந்த மனுசன் வந்தால் போகாது கதைச்சுகொண்டு இருக்கும் உங்களுக்கு எப்ப என்னசெய்யிறது என்று தெரியாது "
கோபத்தில காரின்ட சட்டேர்ஸை இறக்கி ஃரேஸ் காற்றை அனுபவித்தாள்.
"ஏன் சட்டேஸை இறக்கினீர் பூட்டும்,டஸ்ட் வருது"
சட்டேர்ஸை பூட்டியபடியே
"இப்ப அவர் வந்து வேற அலட்டிக் கொண்டு இருப்பார்,சொல்லிப்போட்டன் அவரை கண்டவுடம் இளிச்சுகொண்டு கிளாசை தூக்கிறதில்லை"
"நீர் தானே சொன்னீர், பாவம் வயசு போன நேரத்தில் கதைக்க ஆள் வேணும் அவருக்கு என்று"
"கடைசியில என்னில பிழை போடுங்கோ "
"என்ட மாமா இல்லை உம்மட மாமா....பாவம் தானே"
"ஏன் கொதிக்கீறீர் ... டிசு இல்லாட்டி ,தண்ணீயை பாவிக்க வேண்டியாண்"
" சும்மா ஊர் காய்களை மாதிரி ஊசூரு கதைகளை கதைக்க வேண்டாம் ...தண்ணீரை பாவிக்க சொல்லுறீயள் எதோ வீட்டு டொயிலட்டில் bidet fix பண்ணியிருக்கிற மாதிரி"
 " கொரானா பிரச்சனை முடியட்டும் அதை ஒன்று போடத்தான் வேணும்"

வீட்டு வாசலில் மூன்று பெரிய பன்டில் டொயிலட் டிசு உடன் கனகர் நின்றார்.

" டொயிலட் டிசுவை கண்டதில் மனிசி என்னை மறந்து, மாமா வாங்கோ இருங்கோ சாப்பிட்டு விட்டுதான் போகவேணும் என பாசமழை பொழிய நான் எனது பங்குக்கு
"மாமா வாங்கோ"...என அழைத்தபடி இரண்டு கிளைசை  செல்வில் இருந்து எடுத்தேன்...
கனகுமாமாவுடன் கொரானா ஆராச்சியும் உலகபொருளாதார‌ அலட்டலும் அடுத்த முறை தொடரும்🤣

Thursday, February 13, 2020

என்ன புஷ்வயராம்

தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது .
ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள்
வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங்  ஆன்சர் என்று வந்தது...
 இவனுக்கு ஆன்சர் ப‌ண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது  அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால்  எனது காலக‌ஸ்டம்  மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் ப‌ண்ணிவிட்டது.
"‍ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்"
"எங்களுக்கு பிரச்ச்னை இல்லை நாங்கள் சிட்டியில் தானே இருக்கிறம்,புஷ்வ‌யர் காடுகளுக்குள் தானே நட‌க்கின்றது அதை விட்டுத்தள்ளு நீ எப்படி இருக்கிறாய்"
"இங்க கனடா டிவியில் ஒரே அவுஸ்ரேலியா புஷ்வயரை த்தான் காட்டி கொண்டு நிற்கிறாங்கள்,சில சனம் அகதியா வெளிக்கிடுதுகள் போல இருக்கு"
"சில வெள்ளைகள் காடுகளுக்குள் வீடுகளை கட்டி வாழ்ந்து கொண்டிருக்குங்கள் அதுகள் தான் பாதிக்கப்பட்டிருக்குங்கள்"
"மச்சான் அங்க இருக்க பிரச்சனை என்றால் எங்கன்ட கனடாவுக்கு வாடாப்பா ,உண்மையிலயே கனடா அந்த மாதிரியான நாடு புஷ்வயர்,சுறாவளி,வெள்ள பெருக்கு என்று ஒரு கோதாரியும் இல்லை"
"கனடா உங்கன்ட நாடோ?"
"பின்ன "
"என்கன்ட அவுஸ்ரேலியாவும் திறம் கண்டியே நான் சிட்னியில சிட்டியில் இருக்கிறன் புஷ்வயர் எட்டியும் பார்க்காது"
"சரி மச்சான் பத்திரமா இரு வெளிக்கிடவேணும் என்றால் உடனே கனடாவுக்கு வா,என்ட வீட்டில நிற்கலாம்...Bye."
ஊடகங்கள் நல்லாத்தான்  பெடியை பயப்ப‌டுத்திபோட்டுது என நினைத்து கொண்டு மீண்டும் முகப் புத்தகத்தில் முகத்தை நுழைத்தேன்...மீண்டும் மெசன்ஞரில் இங்கிலாந்து நண்பனிடமிருந்து அழைப்பு
" ஹலோ மச்சான் என்னடாப்பா நீ face book   லயும் whatsapp லயும்  நிற்கிறாய் அவுஸ்ரேலியா பத்தி எறியுதாம் என்று இங்க நியூஸில சொல்லிக்கொண்டிருக்கிறாங்கள் ..நீ விளையாடிக்கொண்டிருக்கிறாய்"
அவ‌னுக்கும் அதே பதிலை சொல்லி நான் சிட்னியில் சிட்டியில் இருக்கிறன் என்று ஒரு கெத்தை காட்டினேன்.
" நான் சிட்டியில் இருப்பதால பிரச்சனை இல்லை, கொஞ்சம் காடுகள் அழிந்து போய்விட்டது "
"ஒம்டாப்பா மில்லியன் கணக்கில் மிருகங்கள் செத்து போயிட்டுதாம் ...மிருகங்கள் தான் பாவம் "
"உலகில் மனிதர்கள் கொத்து கொத்தாய சாகிறார்கள் நீ என்னடா என்றால் மிருகங்களுக்கு பாவம் பார்க்கிறாய்"
"என்ட நாய் போன‌கிழ‌மை செத்து போய்விட்டது வீட்டில் நாங்கள் ஒருத்தரும் இர‌ண்டு நாளாக சாப்பிடவில்லை அவ்வளவுக்கு நாங்கள் மிருகங்களுடன் பாசமா இருக்கிறோம்"
"நல்லவிடயம் மச்சான், அது சரி உங்க இப்ப எத்தனை மணி ?"
"ம‌தியம் 12 ஆகிறது"
"சாப்பிட்டாச்சே"
"இல்லைடாப்பா இன்றைக்கு எங்க‌ன்ட கிரிக்கட் கிளப் பெடியள் பார்க்கில BBQ போடுறாங்கள் இரண்டு பியரை அடிச்சு போட்டு வர இன்றைய பொழுது சரியாகிவிடும்"
"animal lover என்று சொல்லுறாய் நீ இப்ப மச்சம் சாப்பிடுறதில்லையே"
"சும்மா போடா Barbequeக்கு போறதே அதுக்குத்தானே,சரி மச்சான் நேரம் போகுது நான் பிறகு எடுக்கிறேன்"
முகப்புத்தகத்தை மூடி வைத்து போட்டு whastapp யை திறந்தேன் 65 விடுப்பு உனக்காக காத்திருக்கு என்று அது சொன்னது.
ஐந்தாறு குறுப்பில் இருந்தால் இப்படித்தான் விடுப்புக்கள் வ‌ரும் என மனம் சொன்னது. ..வேலை குறுப்,பாடசாலையில் படிச்ச பெடியளின்ட குறூப்,சொந்தகாரங்கள் குறூப்,பக்கத்துவீட்டுக்காரிகள் குறூப்,அங்கத்தவராக இருக்கும் சங்கங்களின் குறூப்....இப்படி பல....சில சமயம் ஒரே விடுப்பை எல்லா குறூப்பும் பகிர்ந்து கொண்டிருப்பினம் அதுதான் கொஞ்சம் கஸ்டமா இருக்கும் மற்றும்படி விடுப்பு அறிவது என்றால் ஐயாவுக்கு அலாதி பிரியம்...
எல்லா விடுப்புக்களையும் தட்டி பார்த்து கொண்டிருக்கும் பொழுது அடுத்த whatsapp call வந்தது ...என்ன என்று தான் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியவில்லை நான் வெட்டியா இருக்கிறேன் என்று புறுபுறுத்தபடி பெயரை பார்த்தேன் குகன் from USA இருந்தது answer அழுத்தி புஷ்வயரைப்பற்றித்தான் இவனும் கேட்க போறான் என்று நினைத்து
" ஹலோ மச்சான் நான் இருக்கிரது சிட்டியில்  இங்க புஷ்வயர் இல்லை"
"அடே என்னடா நான் சும்மா சுகம் விசாரிப்போம் என்று எடுத்தா நீ புஷ்வயர் மெஸ்வயர் எங்கிறாய்"
"கனடாகாரர்,லண்டன்காரர் எல்லாம் எடுத்து புஷ்வயரைப்பற்றித்தான் கேட்டவங்கள்...அது தான் மச்சான்"
"இங்கயும் புஷ்வயர் வாரதுதான் நாங்கள் எங்கன்ட பாடு ,தாயகத்தில சனம் பாடுபடும் பொழுதே கண்டுக்கவில்லாயாம் இதில புஸ்வயரை பற்றித்தான் கண்டுக்க போறம்'"
"சரியா சொன்னாய்"
" கிறிஸ்மஸ் கொலிடெக்கு வெளியால எங்கேயும் போறீயோ"
"ஒம்டாப்பா நாளைக்கு வெளிக்கிடுகிறேன் ,சிட்டியிலிருந்து ஆறு மணித்தியால ஓட்டம் விக்டோரியா போடருக்கு கிட்ட "
"சரிடாப்பா நான் வைக்கிறேன் நீ திரும்பி வந்த பிறகு எடு"
(Eden is a coastal town in the South Coast region of New South Wales, Australia. The town is 478 kilometres south of the state capital Sydney and is the most southerly town in New South Wales),ஏற்கனவே ஒழுங்கு செய்த கிறிஸ்மஸ் விடுதலைக்கான பயணத்தை அடுத்தநாள் தொடங்கினோம் .Eden என்ற சவுத்கோஸ்ட் நகரத்தில் விடுதலைய கழிப்பதாக‌ முடிவெடுத்து அங்கு தங்குவதற்கு வீடு  ஒழுங்கு செய்திருந்தனர் கந்தர் குடுமபம் . சிட்னியிலிருந்து தெற்கு கரையோரமாக உள்ள சில நகரங்களில் காட்டுதீ காரணமாக பாதைகள் மூடியிருந்தபடியால்  அவுஸ்ரேலியா தலைநகரம் கன்பரா ஊடாக எமது பயணம் அமைந்திருந்தது. நாலு காரில் எடன் நோக்கி எமது பயணம் உறவினருடன் ஆரம்பமானது .கன்பராவில்  உள்ள மக்டோனாலில் மதிய உணவை உண்பதற்காக வாகனத்தை நிறுத்தினோம்.காரை விட்டு வெளியே வந்த பின்புதான் , வழ‌மைக்கு மாறானா வெப்பநிலை  நிலவுகின்றது என்பதை உணர முடிந்தது.எல்லோரும் மக்டோனாலினுள் போட்டி போட்டுக்கொண்டு ஒடினோம் சாப்பிடுவதற்கு  அல்ல வெப்பம் தாங்க முடியாமல்,உள்ளே சென்று குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து மனைவி கொண்டு வந்த பேகரை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது
"  என்ன வெட்கை சிட்னியை விட இங்க கொளுத்து வாங்குது" என்ற படி வந்தார் கையில ஒரு சிறிய சான்விட்ச்சும் தண்ணீர் பொத்தலுடனும் உடன்.வழமையாக டபிள் பேகரும் கொக்கும் அடிக்கும் காய் இன்றைக்கு சான்விட்ச்சும் கொக்குடனும் நிற்பதை கண்ட என‌க்கு கன்பராவெப்பநிலையை விட இது பெரிய விட‌யமாக இருந்தது.
"ஒம் சரியான வெட்கையா இருக்கு 40 இருக்குமோ"
"சும்மா விசர் கதை கதைகிறீர் சிட்னியில் 40 பிறகு கொள்பேர்னில் 42 இங்க 46 காட்டுது
என்ட‌ காரில் "  என புள்ளிவிபரம் சொன்னார்.
"என்ட காரிலயும் காட்டியிருக்கும் நான் கவ‌னிக்கவில்லை"
"உம்மட காரில் இருக்கோ தெரியவில்லை நான் போன கிழமை புதுசு எடுத்தனான்"
"என்ன டோயோட்டாவோ"
ஒரு சிரிப்பு சிரிச்சு போட்டு
" நான் வந்த நாள் தொடக்கம் பெண்ஸ் தான் ஒடுகிறேன் ,இப்ப அவிட்டதும் லெட்டஸ்ட் சிறிஸ்"
" நான் கவ‌னிக்கவில்லை  "
" கவனிக்கவில்லையோ உம்மை எத்தனை தரம் ஒவர்டேக் பண்ணிகொண்டு வ‌ந்தனான் கவ‌னிக்கவில்லை என்று சொல்லுறீர் "
என்ன உதுல நின்று அவரோட அலட்டி கொண்டிருக்கிறீயள் நேரம் போகுது என கந்தரின்ட மனிசி கத்த‌
"இவள் ஒருத்தி ஐந்து நிமிடம் ஒருத்தருடன் கதைக்க விடமாட்டாள்" என புறு புறுத்து கொண்டு எழும்பினவர்
"உந்த வெய்யிலுக்குள்ள ந‌டந்து போனால் கறுத்து போய்விடுவேன் "என்று சொல்லிய படி ஓடிப்போய் காருக்குள் ஏறினார் .
அவரை தொடர்ந்து நாங்களும்  வெளியேறி எமது பய‌ணத்தை தொடர்ந்தோம்.போகும் வழியில் காடுகள் தமது பச்சை தன்மையை இழந்து மழைக்காக ஏங்கி கொண்டிருந்ததை பார்க்க கூடியதாக இருந்தது..

நீச்சல் குளத்துடன் கடற்கரைக்கு அருகாமையில் எமது வாடகை வீடு அமைந்திருந்தது.உள்ளே சென்று பொருட்களை இறக்கி வைத்து  வீட்டை சுற்றி பார்த்துவிட்டு,இரவு உணவு வீட்டில தயாரிப்போமா மக்கிக்கு போவோமா என்று நான் கேட்க‌
"நான் மரக்கறி ஸ்டிம் பண்ணி சாப்பிட போறன் ,நீங்கள் போற‌து என்றால் போங்கோ" என்றார் கந்தர் .
உண்மையிலயே அவரின்ட நடத்தையில் பாரிய வித்தியாசத்தை இந்த தடவை பார்க்க கூடியதாக இருந்தது.இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தான் தெரியாமல் இருந்தது  மலிந்தால் சந்தைக்கு வ‌ரும் தானே   என நினைத்து விட்டு அவரிடம் நான் இது பற்றி கேட்கவில்லை...
எங்களுடன் வந்த இன்னுமோரு உறவு சொல்லிச்சு
"அவர் மரக்கறி அவிச்சு சாப்பிடட்டும் நீர் வாரும் ஐசே போய் எங்கன்ட அலுவலை பார்த்து போட்டு வருவம் என்று"

""
நாங்கள் எங்கன்ட அலுவலை பார்த்து போட்டு ஸ்டேடியா அதே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் ,கந்தரை தேடினேன்
"அவர் கார் ஒடி கலைத்துவிட்டார் "என கந்தரின் மனைவி சொன்னார்.
"எங்க போனீங்கள் இவ்வளவு நேரமா சொல்லவுமில்லை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் " என்றால் என்ட‌ மனிசி.
"நான் சொல்லி போட்டுத்தான் போனானான் உமக்கு கேட்கவில்லை போல, மொபைலுக்கு அடிச்சிருக்கலாமே"
"மொபைலை கொண்டு போனால் தானே ,அது இங்க இருக்கு"
உண்மையிலயே மறந்து போனது போல பொக்கற்றை தட்டி பார்த்த பிறகு சொன்னேன்
"விட்டிட்டு போய்ட்ட‌னே?"
"அது சரி புது இடங்களில் இருட்டுக்குள்ள எங்க சுற்றிகொண்டிருக்கிறீயள் வ‌ந்து சாப்பிட்டு போட்டு படுங்கோ"
"நான் என்ன‌ குழந்தை பிள்ளையே "
" கந்தண்ணையை பாருங்கோ வந்தார் சாப்பிட்டு போட்டு படுத்திட்டார் ,தண்ணி வெண்ணி ஒன்றுமில்லை அவரின்ட ம‌னிசி கொடுத்து வைச்சவர்"
" அப்ப அவரை கட்டியிருக்கலாமே "
"கோலிடெ வந்த இடத்தில சும்மா கொளுவாமல் போய் படுங்கோ"
என்ன என்று கண்டுபிடிக்கிறாளாவையளோ தெரியவில்லை என மனதில் நினைத்தவாறு நித்திரா தேவியை தழுவினேன்.
விடுதலை நாட்களிலும் காலை ஐந்து மணிக்கு எழும்பிவிடுவேன் ,கோப்பியை  குடித்து கொண்டு இயற்கையை ரசித்தபடியிருந்தேன்.
"என்னப்பா உங்களுக்கு நித்திரை வராட்டி நித்திரை கொள்ளுற ஆட்களையாவது படுக்க விடுங்கோ"
"இஞ்சாரும் சண்ரைஸ் இன்னும் பத்து நிமிசத்தில் வருமாம் பார்க்கவில்லையா?"
"ஏன் சிட்னியில் சண் ரைஸ் பண்ணிறதில்லையே"
"இது கொஞ்சம் வடிவா இருக்குமாம்"
பதில் வரவில்லை  கொரட்டை தான் வந்தது.

னியாக இருந்து சூரிய உதயத்தை சித்து கொண்டிருந்தேன் ...அதை பார்த்தவுடன் ஒரு குட்டி கவிதை எழுதி
கடல் கடந்து வந்து
கடற்கரையில் அமர்ந்து
கதிரவன் வரவை
காலை காட்சியுடன்
காண்பதற்காக‌
கண் விழித்து 
காத்திருக்கையில் அவனோ
கார்மேகத்தினுள் மறைந்திருந்து 
கடுப்பேத்துகிறார்...

கந்தரின்ட வட்சப்புக்கு அனுப்பினேன்...
அவர் படித்து போட்டு பதில் அனுப்பினார் சனம் புஷ்வயரில் கஸ்டப்படுகிதுகள்...நீர் குடிச்சு கும்மாளம் அடிச்சு கொண்டு கவிதை எழுதிகிறீர் என்று பதில் போட்டார்..
ஐசே நான் வன்னியில் பிரச்சனை நடக்கும் பொழுது கொழும்பில் போய்நின்று போட்டு அவுஸ்ரேலியாவுக்கு வந்து சிறிலாங்கா அந்த மாதிரியிருக்கு என்று சொன்னா ஆள்....என பதில் போட்டேன்....

இன்னும் பதில் வரவில்லை மத்தியாணம் சாப்பிட்ட பிறகு வரும் 

Wednesday, September 11, 2019

புரொக்சி முருகன்


சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ள‌ அடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான்  சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருகனின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்கலாம்குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..

அன்று காலநிலை ஒரளவு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில  அவனது கோட்டைக்கு சென்றேன்.
கார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர்  அருகே ஒடிவந்தார்.
"கிடைச்சதோ"
ஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்
"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ"
"ஒம்மோம்  ..... அந்த மொட்டை கடிதமோ"
"யூ கான்ட் செ தட் ,இட் இஸ்  பெட்டிசன்"
"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்"
"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே"
"எனக்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட
டிலிங் எல்லாம் எம்பெருமான்  முருகனுடன் மட்டும் தான்"
"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு  ஒரு பாடம் படிப்பிக்கலாம்"
" நான் மெம்பர் இல்லை"
 "ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்."
"நானில்லை மனிசி தான் மெம்பர் "
"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்"
"அண்ணே  குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ"
"இதில என்ன புடுங்குபாடு இருக்கு"
"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை"
சரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் "
" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்"
"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே  உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வ‌ருசம் இழுபடுதானே"
" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மட‌க்கி போடலாம்"
"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்"
முருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்த‌ சொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் "நான் உண்டு என் வேலையுண்டுஎன்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.

"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்"
சொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.
இதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி
வெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.
பின் தோளில் ஒருவர் தட்டி
"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என இதைதான் சொல்லுறது,  முருகன் விடமாட்டான் அவ‌னின்ட விடயங்கள் தோல்விய‌டைய "
இவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் ந‌ண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.
மற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் ந‌ன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.
ஹலோ ! என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்?"
"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்"
யாருக்கு "
"உந்த கோவில் கொமிட்டிக்காரங்களுக்கு"
நானும் ஒன்று தெரியாத மாதிரி
 "கோவில் நல்லாதானே நடக்குதுகொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்."
"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான்  பிரச்சனை"
முருகனிட்ட இடம் இருக்கு ,பணம்  இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே"
"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்கன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்"
"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே"
"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் "
"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரியத்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன"
" "நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் "
"அப்படியே சங்கதி"
நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்"
"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே"
"ஐயோ அந்த கிழவனிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,
அடுத்த முறை உம்மட புரோக்சியை  எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்"
அடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.
காரில் ஏறி சிடியை அழுத்தினேன்
"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்"

சீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.
வீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,
நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் "
"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்"
"எடுத்திட்டிங்களே"
உன்ட மனிசி  என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் "என பாட்டு பாடியபடியே சென்றார்
"சரி அண்ணே பிறகு சந்திப்போம் "
"ஏன்னப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே"
அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே"
" "இப்ப நாலைந்து வருசமா கட்டினம்  நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய  BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும்  இழுபறிபடவில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் ட்டுறதிலும் இழுபறியாம்"
"உங்களுக்கு"
"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விடயத்தில் தான் இருந்து பாரும்"

அன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த ரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள்முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.