Wednesday, September 11, 2019

புரொக்சி முருகன்


சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ள‌ அடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான்  சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருக‌னின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்க‌லாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..

அன்று காலநிலை ஒரள‌வு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில  அவனது கோட்டைக்கு சென்றேன்.
கார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர்  அருகே ஒடிவந்தார்.
"கிடைச்சதோ"
ஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்
"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ"
"ஒம்மோம்  .....ஓ அந்த மொட்டை கடிதமோ"
"யூ கான்ட் செ தட் ,இட் இஸ் எ பெட்டிசன்"
"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்"
"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே"
"என‌க்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட‌
டிலிங் எல்லாம் எம்பெருமான்  முருகனுடன் மட்டும் தான்"
"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு  ஒரு பாடம் படிப்பிக்கலாம்"
" நான் மெம்பர் இல்லை"
 "ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்."
"நானில்லை மனிசி தான் மெம்பர் "
"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்"
"அண்ணே  குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ"
"இதில என்ன புடுங்குபாடு இருக்கு"
"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை"
சரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் "
" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்"
"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே  உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வ‌ருசம் இழுபடுதானே"
" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மட‌க்கி போடலாம்"
"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்"
முருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்த‌ சொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் "நான் உண்டு என் வேலையுண்டு" என்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.

"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்"
சொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.
இதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி
வெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.
பின் தோளில் ஒருவர் தட்டி
"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என இதைதான் சொல்லுறது,  முருகன் விடமாட்டான் அவ‌னின்ட விடயங்கள் தோல்விய‌டைய "
இவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் ந‌ண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.
மற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் ந‌ன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.
" ஹலோ ! என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்?"
"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவ‌ங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்"
" யாருக்கு "
"உந்த கோவில் கொமிட்டிக்காரங்களுக்கு"
நானும் ஒன்று தெரியாத மாதிரி
 "கோவில் நல்லாதானே நட‌க்குது, கொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்."
"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான்  பிரச்சனை"
" முருகனிட்ட இடம் இருக்கு ,பணம்  இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே"
"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்க‌ன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்"
"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே"
"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் "
"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரிய‌த்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன"
" "நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் "
"அப்படியே சங்கதி"
" நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்"
"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே"
"ஐயோ அந்த கிழவ‌னிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,
அடுத்த முறை உம்மட புரோக்சியை  எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்"
அடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவ‌ருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.
காரில் ஏறி சிடியை அழுத்தினேன்
"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்"

சீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.
வீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,
" நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் "
"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்"
"எடுத்திட்டிங்களே"
" உன்ட மனிசி  என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் "என பாட்டு பாடியபடியே சென்றார்
"சரி அண்ணே பிறகு சந்திப்போம் "
"ஏன்ன‌ப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே"
" அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே"
" "இப்ப நாலைந்து வருசமா கட்டினம்  நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய  BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும்  இழுபறிபட‌வில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் க‌ட்டுறதிலும் இழுபறியாம்"
"உங்க‌ளுக்கு"
"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விட‌யத்தில் தான் இருந்து பாரும்"

அன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த வ‌ரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள், முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.

Sunday, July 7, 2019

ஓ .. உதுக்குத்தானோ

இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம்.

முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும்  இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை
கேட்டிருந்தால் நிச்சமாக‌ சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய முடியும் என்ற பதில் தான் வந்திருக்கும்.
அதைவிட பின்னுகிருந்த மனிசிட்ட "உங்களுக்கு எங்க போனாலும் குறுக்குபுத்தியும் லொள்ளும்,என்று திட்டு வாங்க வேணும்"
பயணம் போன இடத்தில ஏன் வம்பு என்று போட்டு சாரதி சொல்லுவதற்கெல்லாம் ஆச்சரியமாக கேட்பது போல‌ நடித்துகொண்டு பயணித்தேன்.

வெளிநாட்டவர்க‌ள் பதிவு செய்து தங்குவதற்கு என ஒர் க‌ட்டிடம் உண்டு அங்கு போய் பதிவு செய்தேன் ,படம் பிடித்தார்கள் மற்றும் விரல் அடையாளங்களையும் பெற்று கொண்ட பின்பு  பயணப்பொதிகளை எக்ஸ் ரெ பண்ணும் பெல்டில் போடும் படி கேட்டார்கள் அதை செய்து போட்டு,  குளித்து வேஸ்டியை கட்டிக்கொண்டு  தரிசனம் பூஜை போன்றவை நட‌க்கும் மண்டபத்திற்க்கு போனேன்..
எனக்கு புது இடம் என்றபடியால் மண்டபத்திற்கு முன்னால் நின்று  மனைவியுடன் உரையாடிகொண்டிருக்கும் பொழுது, வெள்ளை காற்சட்டையும் செர்ட்டும் அணிந்த ஒருவர் "சாய்ராம்"என்று சொன்னபடி அருகே வந்து ‍ஹிந்தியில் என்னவோ சொன்னார் நாங்கள் முழித்துகொண்டு நிற்கவே ஆண்களும் பெண்களும் இதில் நின்று  கதைக்க வேண்டாம் பெண்கள் இந்த பக்கம் போகவும் ஆண்கள் மற்ற பக்கம் போகவும் என்றார்.
கூம்பிட்டு முடிந்தவுடன் மொபைலில் கொல்பண்ணுங்கோ என்று மனைவி பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, நான் ஆண்களுக்குரிய லைனில் போய் நின்றேன் .மொபைல் போன் உள்ளே கொண்டு செல்ல தடை என அறிவிப்பு பலகையில்  இருந்த அறிவிப்பை அப்ப தான் பார்த்தேன்.
மொபைல் மற்றும் கை பைகள் உள்ளே கொண்டு செல்ல முடியாது ,காரியாலயத்தில் கொண்டு போய் பாரப்படுத்துங்கள் என்று ஒரு சாய்ராம் காவலாளி சொல்ல மீண்டும் பொருட்கள் பாரப்படுத்தும் லைனில் போய் நின்றேன் ,எனது முறை வரவே கையிலிருந்த மொபைல் மற்றும் கைப்பையை கொடுத்து டொக்கனெடுத்து மீண்டும் வந்து ம‌ண்டபத்திற்க்கு போகும் வழியில் நின்றேன் ,எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள் .எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார்.
 உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன்.     நான் போன மாதம் டிசம்பர் என்றபடியால் கிறிஸ்மஸ் பெருநாளுக்காக மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது...மண்டபத்தினுள் புத்தர்,சிவன்,ஜேசு உருவங்களும் இஸ்லாத்தை அடையாளப்படுத்த பிறையும் வைக்கப்பட்டிருந்தது....இவர்கள் எல்லா மத சின்னங்களையும் வைத்து வணங்குகிறார்கள் இவரை மற்ற மதத்தவர்கள்  வைத்து கும்பிடுவார்களா என்ற குறுக்கால போன புத்தி எனக்கு வந்திட்டு...

வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்து டோக்கனை கொடுத்து மொபைலையும் கைபையையும் வாங்கி கொண்டு விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன்...
மனைவியும் பிள்ளைகளும் வந்தார்கள்..

இஞ்சாரும் நாளைக்கு நான் வரமாட்டன் நீர் வேணும் என்றால் வாரும்,எனக்கு உந்த செக் பண்ணி சாமி கும்பிடுற விளையாட்டுகள் சரி வராது...சிட்னி முருகனிட்ட போனால் எவ்வளவு டிசன்டா கும்பிட்டு போட்டு வரலாம்...

இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்....
what a shame




வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும்  செக்குயுரிட்டி செக்   அதிகம் எண்டு

ஓஓ உதுக்குத்தானோ....

Friday, April 19, 2019

கலா

"பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது.
"இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ"
"காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது"
"போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்"
"என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல"
"இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்"
"இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்"
"போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் "
"எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள்,
கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள்,  இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே "
"நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று"
" இந்தியாவில சொப்பிங்  செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் "
"இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே"
"டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல"
"அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் "
"சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்"
தொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன்
"நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்"
கலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு  அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை  மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான்.
"இப்ப ஏன் கோவப்படுறீயள் "
"நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது "
"உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்"
"அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்"
"உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை "
"இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்"
"ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது"
"சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்"
ம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு  புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள்  மீது காட்டினால்.

குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள்.
"எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ"
"என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்"
"அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் "
"20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான்  கொண்டு போகலாம்"என்றாள்
உடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்பொதிகளையும்  7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு
சமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான்.
"ஏன் அந்தரப்படுறீயள் அப்பா" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம்
"அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்"
"இப்பவே  எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது
"அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே"
"ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்"
" சூவிட் அப்பாவல்லோ"

இழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்)  கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம்.
"இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா  வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா  ஒன்று இரண்டு வாங்கினீரோ"
"ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன்? என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு"
"சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க"
"உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா"
"சும்மா கேட்டனான் அடிஆத்த"
விமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான்.

கலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... .

பல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும்
எடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை  காட்டினார்கள்.

வெளியே அவனது சகோதரி  தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள்.
"மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்"
நீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்"
"மாமி ,மாமா சொன்னது கேட்டதே"
"ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்"
"டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ"
"இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ"
"முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை"
"மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா"
என்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில்.
சகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்..
"மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே"
"ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்'
"அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்"
" அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ"
"இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே"

" ம்ம்ம்ம் ..."
அடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி.
மாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை
எல்லோருக்கும் ‍‍ஹாய் ‍ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி?என்றனர் உறவினர்.
வீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர்.
முல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள்

 சுரேசுக்கு  கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகும் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது.
"உங்களுக்கு  முல்லை தீவில்  யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ"
"இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்"
"இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன"
"ஒம் ஓம்  ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்"

அந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு
வீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார்.
"டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே"
"ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்"
அவ‌னுக்கு ஒரு நிமிடம்  கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது

தொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்...😀
இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன்😁


தொடர்ச்சி 
பாகம் 2

"கலா என்ற பெயரில் யாராவது படிப்பிக்கின‌மே"
அவள் யோசித்துவிட்டு அந்த பெயரில் ஒருத்தரும் இல்லை அண்ணே என்றாள்.
"அவ‌ருக்கு எத்தனை வய‌சு இருக்கும் அண்ணே "
"அவருக்கு அவ்வளவு வயசு இருக்காது என்னோட படிச்சவா"
"உங்களுக்கு வயசு ஆகவில்லை என்று சொல்ல வாறீயள் அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"
"கி கி எனக்கு  ஐம்பத்தெழு அவவுக்கும் அந்த வயசு தான் இருக்கும்"
"அப்ப அவ ரிட்டையர் ப‌ண்ணிபோட்டு நேர்ஸிங்கோமில் தான் இருப்பார்  வெளிநாட்டுக்காரர் போல மினிக்கிக்கொண்டு திரியமாட்டினம்"
சிரித்தபடியே கூறினாள்.எல்லோரும் அவளது கிண்டலையும் கேலியையும் ர‌சித்தனர்
. அங்கு படிப்பிக்கும் யாழ்ப்பாணத்தார் எல்லாம் ஐம்பது வயசுக்குள் தான் இருப்பினம் அவர்களிடம் கேட்டு பார்க்கலாம் ,கலாவின் முழுப்பெயர் என்ன என்று தெரியுமோ என‌ கேட்டாள்
"கலாதேவி ..அப்பாவின் பெயர் விஸ்வலிங்கம்,அம்மாவின்  பெயர் பூபதி இருவரும் டீச்சர்மாரக இருந்தவை பிறகு விஸ்வலிங்கம் அதிபராக இருந்தவர் ....புருசனின்ட பெயர் தெரியவில்லை"
"நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு  யாழ்ப்பாணத்தாரிட்ட கேட்டு பார்ப்போம்"
மாலை பாடசாலையால்  திரும்பிவந்தவள் சொன்னாள் அங்கு கலாவை தெரிந்தவர்கள்



ஒருத்தரும் இல்லை என்று.

வற்றாப்பளை அம்மன் கோவில் ,ஊற்றங்கரை பிள்ளையார் கோவில் என்று எங்கு போனாலும் அவன் கலாவை தேடாமல் இல்லை..
நாலு நாட்கள் முல்லை மண்னை தரிசனம் செய்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி கலாவின் நினைவுகளுடன் பயணமானான்.சகல வாகனங்களும் பூனகரி பாலத்தினூடாகவே செல்கின்றன‌,  .ஆனையிறவு பாதையை தவிர்க்கின்றனர் பல காரணங்களை சொல்லுகின்றனர்.
பூனகரியோ,கிளாலியோ ஆனையிறவோ எதுவும் மனதில் நிற்கவில்லை கலாவின் நினைவை தவிர....
பருவங்களின் கோளாறுகளை நினைத்தபடி மனைவியை திரும்பி பார்த்தான் அவளும் இயற்கையை ரசித்தபடியிருந்தாள் .
"என்னப்பா எதாவது பழைய ஞாபகங்களை இரைமீட்கின்றீரோ"
"உங்களை மாதிரி கற்பனையில நான் இருக்க முடியோ எங்களுக்கு எவ்வளவு வேலை கிடக்கு ஊருக்கு போய் அடுத்து என்ன செய்ய வேணும் என்று யோசிக்கிறேன்"
"உதுக்கு போய் தலையை உடைக்கிறீர் நான் ஏற்கனவே பிளான் போட்டிட்டேன்"
"டவுனுக்கு 12 மணிக்கு போய்விடுவோம் அவையளின்ட வீட்டை சமான்களை வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கன்ட ஊர் கோவிலுக்கு போவம்,அப்படியே இரண்டு மூன்று என்ட் பெடியள் இருக்கிறாங்கள் பார்த்து போட்டு வருவம்"
"கோவிலுக்கு போனால் வீட்டை திரும்பி வரவேணும் யாரின்ட வீட்டையும்போககூடாது'
"வெளிக்கிட்ட இடங்களில்  உதுகள் ஒன்றையும் பார்க்க ஏலாது'
தொடர்ந்து பேச்சைகொடுக்காமல் இருந்து விட்டாள் வீடு போய்ச் சேரும்வரை.
சுரேஸ் நினைத்தபடி 12 ம‌ணிக்கு முதலே உறவினர் வீட்டை வந்து சேர்ந்தனர் .ஒரு மணிக்கு கோவில் பூட்டி போடுவார்கள் பிறகு ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள் என உறவினர் சொன்னதும் சுரேஸ் தனது திட்டம் பிழைத்து விட்டதே என கவலைப் பட்டான்.

அடுத்த நாள் கோவிலுக்கு போனார்கள் அங்கும் கலா வருவாளா என
ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான். கோவில் தரிசனம் முடித்து விட்டு கலா வாழ்ந்த பழைய வீட்டுக்கு  நேராக சென்றான் .அவனை யாழ்நக‌ரின் காவல் தெய்வங்கள்  ஆரவாரம் பண்ணி வரவேற்றன.
"அவளை போய் பார்க்கிற சுதியில உந்த நாய்களின்ட கடிவாங்கி போடாதையுங்கோ"
"நாயின்ட கடியை விட உம்மட கத்தல் தான் பயமா இருக்கு"
என்று சொல்லிய படி ,திறந்திருந்த படலையை  மூடிய பின்பு வீட்டுக்காரார் என குரல் கொடுத்தான் .
ஒம் வாரன் யாரது என்று கேட்டபடியே வீட்டுக்கார அம்மா வந்தார்.
"அதிபர் விஸ்வலிங்கத்தின்ட வீடு இது தானே"
" இல்லை தம்பி அவையளிட்ட இந்த வீட்டை நாங்கள் வாங்கி போட்டோம்"
" அவையள் இப்ப எங்க இருக்கினம் என்று தெரியுமோ அம்மா"
" ஐந்தாறு வீடு தள்ளித்தான் இருக்கினம்"
" சரியா விலாசத்தை சொல்லுங்கோ வீட்டு நம்பர் என்ன என்று சொல்ல முடியுமோ"
"இங்க அங்க‌த்தைய மாதிரி நம்பர்கள் இல்லை , ஐந்தாவது வீடு ,கலா பவனம் என்று போர்ட் போட்டிருக்கு..."
ஊர்சனம் எப்படித்தான் வெளிநாட்டுக்காரரை    கண்டு பிடிக்குதுகளோ தெரியவில்லை என நினைத்த படி மனைவியிடம்  ஒடிப்போய்  சொன்னான்
"இஞ்சாரும் இவள் கலா ஐந்தாவது வீடு தள்ளித்தான் இருக்கிறாளாம்,ஒருக்கா டக்கெண்டு பார்த்திட்டு போவம் வாரும்"
அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் ,தம்பி வானை எடும், ஐந்தாவது வீட்டடியில்  நிற்பாட்டும்"
"நீர் வானுக்குள் இருக்கப்போறீரோ ,அல்லது உள்ள வாறீரோ"

"நானும் வாரன் ,என்ன வெறும் கையோடய போரது"
"ஒரு சீலையை கொண்டு வந்திருக்கலாம்"
" என்னது சீலையையோ....நான் பார்த்து பார்த்து வாங்கி வைக்க நீங்கள் உங்கன்ட பழசுக்கு .....வாயில வருது"
அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் வாய் தடுமாறி மனதில் இருந்த எண்ணத்தை உளறினதை..
. "கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்"
கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது....
கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "
"எந்த சுரேஸ்'" என யோசிக்க தொடங்கினாள்
"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ்."
"கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்"
கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது....
கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் .

"‍‍ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் "
"எந்த சுரேஸ்'" அவள் யோசிக்க தொடங்கினதை தெரிந்து கொண்ட சுரேஸ்
"நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ், உங்கன்ட மகள் கலாவோட படிச்சனான்"
"நான் பூபதி டீச்சர் இல்லை நான் தான் கலா உள்ளே வாங்கோ இருங்கோ"
"இவா என்ட வைவ்"
இருவரும் ‍ஹலோ சொல்லி கொண்டனர்
"என்ட அம்மா போன வருடம் தவறிப்போயிட்டா"
"சோறி டு கெயர்"

 உங்களை கண்ட ஞாபகமா இருக்கு ஆனால் முகம் நினைப்பில வருதில்லை உங்களுடன் படிச்ச வேறு போய்ஸின்ட பெயர் சொல்லுங்கோ...
"குகன் ,விமல்,ராஜ்,...சுதாவை தெரியும் தானே"
"ஓமோம் அவள் லண்டனிலிருப்பதா கேள்விப்பட்டேன்"
"போனவ‌ருடம் சுதா அவுஸ்ரேலியா வந்தவர் நானும் குகனும் மீட் பண்ணினனாங்கள்
"விமல் லோட அதிகம் நீங்கள் தானே சைக்கிளில் வாரனீங்கள் விமல் இப்ப என்ன செய்கின்றார்"

" ஓமோம் நான் தான்'
"இப்ப ஞாபகம் வருகின்றது"
"விமல் எங்க இருக்கின்றார்"
"நாங்கள் 72 கிளப் என்று வட்சப் வைச்சிருக்கிறோம் அதில் நீங்கள் ஜொன்ட் பண்ணுங்கோவன்"
"விமலும் அந்த வட்சப் குறூப்பில் இருக்கின்றாரோ"
" ஒமோம் கனடாவில் இருக்கின்றான்"
"அதென்ன 72 கிளப்"
"72 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பு படிக்கதொடங்கினோம் அது தான்"
"விமலுடன் கதைத்தால் நான் விசாரித்ததாக சொல்லுங்கோ"

"வட்சப்பில் ஜொன்ட் பண்ணினால் எல்லோருடனும் நீங்களும் கதைக்கலாம்
"‍ஹஸ்பனிட்டதான் நல்ல போன் இருக்கு அவர் வந்த பிறகு கேட்டு சொல்லுறேன்...
தேனீரும் சிற்றூண்டியும் அருந்திவிட்டு  விடைபெற்றனர்.
அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள்
"ஏன் இப்படி சிரிக்கின்றீர்"
"சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்"
 கலாவின் பக்கத்துவீட்டு ரேடியோவிலிருந்து