Sunday, July 10, 2016

சோசல் மீடியா

விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மதபக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பாகாலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோபள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள்.
வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும்  செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும்அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா"
டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற அதிகார தோரணையில் சத்தம் வரும்.
காலைப்பொழுதை ரசிக்கும் வயதில்லை,கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிப்பேன் ஆனால்  மீண்டும் நித்திராதேவிஎன்னை அரவணைத்துக்கொள்வாள் .மரண அறிவித்தல் சொல்ல தொடங்க மீண்டும் திடுக்கிட்டு எழும்பி போர்வையை மெல்ல அகற்றிஅம்மா எங்கே நிற்கிறார் என்று பார்ப்பேன் .கிணத்தடி பக்கம் போயிருந்தார் என்றால் ஆறுதலாக கட்டிலிருந்து மீண்டும் சோம்பல்முறித்து இன்னும் கொஞ்சம் படுத்தால் எப்படியிருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டு அரைத்தூக்கத்தில் வானொலியைகேட்டபடியிருப்பேன் .
"பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளைகள் போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்என பாட்டுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் நிகழ்ச்சிதொடங்க கட்டிலை விட்டு எழும்பி கிணத்தடிக்கு போக அம்மா வீட்டுக்குள் வருவார்.
"என்ர ராசா இப்ப தான் எழும்பி வாரார் .கேதியா முகத்தை கழுவிபோட்டு வாபள்ளிக்கு போக நேரமாகிறது "
"ம்ம்ம்பற்பசையை பிரஸ்ஸில போட்டு வாயில் வைத்து அதில முதலில் வரும் இனிப்பு தன்மையை சுவைத்தபடி மெல்ல‌ மெல்லமாகபல்லை தேய்த்தபடி கிணத்து கட்டில் போய்யிருப்பேன் .வாய் பற்பசையின் நுரையால் நிரம்பியவுடன் கிணத்தடிக்கு பக்கத்தில் நின்றஎலும்பிச்சை மரத்தின் அடியில் துப்பிவிட்டு மீண்டும் துலக்கி மீண்டும் மரத்தை அசிங்கப்படுத்தி தூரிகையை வாயில் வைத்தபடிகிணத்துவாளியை உள்ளே போடுவேன் .கப்பியின் கீறிச்சிட்ட சத்தத்துடன் வாளி தண்ணியினுள்  போய்விழும்.அநேகமான‌ யாழ்ப்பாணத்து கிணத்து வாளிகள் க‌ல்லுப்பாறைகளில் அடிபட்டு உருமாறியிருக்கும் .தண்ணி வாளியினுள் நிறைந்தவுடன் கயிற்றை பிடித்து மேலே இழுக்கும் பொழுது கப்பி மேலும் சத்தம்போடும்.வாளியின் கைப்பிடியை பிடித்து தூக்கி சலவை தொட்டியின் கட்டில் வைப்பேன் சிலசமயங்களில் சமநிலை குழம்பி தண்ணி கீழே கொட்ட பார்க்கும் ஒரு மாதிரி சமநிலையில் வாளியை நிறுத்தி கை கால் கழுவி  ,ஒரு செம்பரத்தை பூவை புடுங்கி கொண்டு ரெடியோவில் ஒலிக்கும் சினிமா பாட்டை விசில் அடித்துகொண்டு வீட்டினுள் போவேன் .
"சாமி கும்பிட போகும் பொழுது தேவாரத்தை பாடிக்கொண்டு போகாமல் உது என்ன சினிமா "என அம்மாவும் அப்பாவும் கொரோசா குரல் கொடுப்பினம் உடனே விசில் அடிப்பதை நிறுத்தி சாமியறைக்கு சென்று பூவை வைத்து கடவுளே நல்லாய் படிப்பை தா என்று கேட்டு விபூதியை பூசிவிட்டு அதே சினிமா பாட்டை மீண்டும் விசிலடித்தபடி வெளியே வருவேன். இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக‌ . பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்த நாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும்.
"காலையில செத்தவரின்ட பிள்ளைகள் ஐந்தும் டாக்குத்தரும் இஞ்னினியரும் தான்"
"யார் பாட்டி செத்தது ,உங்களுக்கு தெரியுமோ செத்தவரை"
"இல்லையடாப்பு உந்த ரெடியொவில மரண அறிவித்தல்  சொன்னவையள் அதில கேட்டனான்."
இன்று பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்காக  பி எச் அப்துல் ‍ஹமீத்தின் குரலில் பிறந்தநாளுக்கு ஏற்ற பாடல் ஒன்று ஒலிபரப்பபடும்.
இன்றைக்கு சுதா அண்ரியின்ட மகளின்ட பேர்த்டே இப்ப ரெடியோவில சொல்லித்தான் தெரியும்என அக்கா சொல்லியபடி பாடசாலைக்கு கொண்டு போக வேண்டிய‌ புத்தகங்களை அடுக்கி கொண்டிருப்பார் ,,நானும் எனது புத்தகங்களை புத்தக பைக்குள்வைத்து விட்டு காலை சாப்பா
ட்டுக்காக‌ அம்மாவிடம்  சமையலறைக்கு சென்றுவிடுவேன். "அம்மா பொங்கும் பூங்குழல் தொடங்கிவிட்டது எழே கால் ஆயிற்று ஸ்கூலுக்கு நேரம்ப்போயிற்று கேதியா சாப்பாட்டை தாங்கோ"
"அந்த மேசையில் போட்டு வைச்சிருக்கிறன் போய் சாப்பிடு ,லெட்டா எழும்பிபோட்டு பிறகு சத்தம் போடுறாய் நாளைக்கு வெள்ளன எழும்பி பள்ளிக்கு போற வேலையை பார்"
"ஒமோம் நாளைக்கு,நாளைக்கு"
சாப்பிட்டவுடன் புத்த பையை தோலில் போட்டுக்கொண்டு வாசலில் இருக்கும் பாட்டா செருப்பை  கொழுவிக்கொண்டு படலையில் போய் நிற்பேன் .பொங்கும் பூங்குழலில் இரண்டு பாட்டு ஒலிபரப்பி முடியும் மட்டும் வாசலில் நிற்பேன் அதற்குள் பாடசாலை நண்பர்கள் இருவர் வந்து விடுவார்கள்.
வாசலில் நின்றபடியே அம்மா போயிற்றுவாரேன் என்று ஒரு கத்தல் ,அவரின் பதில் கிடைக்கும் முதல் நாங்கள் அடுத்த வீட்டு வாசலைதாண்டியிருப்போம்.அம்மா வெளியே வந்து எட்டிப்பார்த்து நான் பெடியங்களுடன் போகிறேன் என்று அறிந்த பின்புதான் நிம்மதியாகஉள்ளே செல்வார் .சந்தியை தாண்டுபொழுது தேனீர் கடை வானோலியில் விளம்பரங்களுடன் நேரமும் சொல்லுவார்கள்.
"டேய் ராமன் தேடிய சீதை வரப்போகிறது "
"நான் படம்பார்க்க வரமாட்டேன் அப்பா ஏசுவார்"
"ஸ்கூலுக்கு வாரமாதிரி வந்திட்டு  படத்திற்கு போவம்"
"என்டா ராசா ஆளைவிடு உப்படி நினைச்சது என்று தெரிந்தாலே தொலைஞ்சன்"
"டேய் உவன் சரியான பயந்தாங்கொள்ளி"
பாடசாலைக்கு முன்னால் உள்ள சாத்ரியாரின் வானொலி "டி.எம் செளந்தராஜன் ,சுசிலா பாடிய இந்த பாடலுடன் நிறைவடைகின்றதுபொங்கும் பூங்குழல் "
டேய் ஒடி வாங்கோட எட்டு மணியாகப்போகின்றது ஸ்கூல் தொடங்கப்போகின்றது " ஒருத்தன் ஞாபகப்படுத்த எல்லோரும்ஒடிப்போவோம் பாடசாலை மணியடிக்க சரியாக அசம்பிலியில் போய் நிற்போம் .
பிந்தி வந்தால் வெளியில் நிற்க வேண்டும் அசம்பிலி முடிய ஆசிரியர் பிரம்புடன் வந்து மைதானத்தை சுற்றி நடக்கச்சொல்வார்.
சினிமா பாட்டு ஒலிபரப்பாமல்சங்கிதம் அல்லது சொற்பொழிவுகள் ஒலிப்பரப்பிலிருந்தால் ,காலை பத்துமணிக்கு மேலாயிற்று என்றுஎங்கள் எல்லொருக்கும்  தெரியும்பதின்ரெண்டு மணியளவில் மதிய இடைவெளிக்காக பாடசாலை மணியடிக்கும் மீண்டும் வீட்டைஒடிப்போவோம் மதிய சாப்பாட்டை முடித்து 12:45 செய்தி தொடங்கமுதல் பாடசாலையில் நிற்போம் ..பாடசாலையின் அரைவாசிமாணவர்கள் மைதானத்தில் நிற்பார்கள் இருபது டீமுக்கு அதிகமார் விளையாடுவார்கள்.
ஹிந்தி பாட்டு ஒலிபரப்பிலிருந்தால் பிற்பகல் ஒன்றைரைக்கும் இரண்டுக்கும் இடையில் என் கணக்குபோட்டுகொள்வோம்.மூன்று மணிக்கு பாடசாலை மணியடிக்கும் வீட்டை போகும் வழியில் மீண்டும் வானொலி நிகழ்சியை ரசித்தபடி நடப்போம் .பாடசாலை கடையடியில் தொடங்கினால் வீட்டை போய் இரவு படிக்க தொடங்கும் வரை வர்த்தக ஒலிபரப்பு எங்கன்ட பொழுதுபோக்கு.மாலை நேரத்தில் வளவில் விளையாடும் பொழுதும் பக்கத்து வீட்டு வானொலியின் மூலம்  பாடல்கள் கேட்டபடியே விளையாடுவோம்.மாலை நாலரைக்கு விளையாட்டு செய்திகள் தொகுத்து வழங்குவார்  எஸ் .எழில்வேந்தன் .அதை அண்ணர் மற்றும் நண்பர்கள் ஒடிப்போய் கேட்பார்கள் .அநேகமாக  அதில் கேட்ட கிரிக்கட் பற்றிய செய்திகளை விளையாடிய படியே பேசுவார்கள்.
 ‍‍‍‍‍வணக்கம்கூறி விடைபெறுவது  கே.எஸ் ராஜா என்ற குரலுடன் வர்த்தக சேவையின் அன்றைய நிகழ்ச்சி முடிவுக்கு வந்து மாலை ஆறுமணி செய்திக்கான இசைய தொடங்குவார்கள் அநேகமான வீடுகளில் வானொலியை நிறுத்திவிடுவார்கள் .நாங்களும் மீண்டும் கை கால் கழுவி பாடப்புத்தகங்களை தூக்கி கையில் வைத்துக்கொள்வோம். அப்பா வரும்பொழுது நாங்கள் எல்லாரும் படித்து கொண்டிருக்க வேண்டும்...
வரவேற்பறையில் வானொலியை மிகவும் மெதுவாக போட்டு பாட்டியும் அம்மாவும் கேட்டு கொண்டிருப்பார்கள்.எட்டு மணிக்கு முஸ்லிம் நிகழ்ச்சி குறிப்பும் சலவாத் ஒதலும் என்று தொடங்கும்.தண்ணி குடிக்க போற சாட்டில் இரண்டு மூன்று தடவைகள் மேசையை விட்டு எழுந்து போய் நேரத்தை பார்த்து கொள்வேன். முஸ்லிம் நிகழ்ச்சி என்றவுடன் எனக்கு பசிக்க தொடங்கி விடும் .அம்மா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுவார் .மேசையில் இருந்து சாப்பிட்ட படியே ஒவ்வொருத்தரும் தங்களது அன்றைய நிகழ்ச்சியை பற்றி பேசுவார்கள்.
அப்பா அரசியலைப்பற்றி பேசுவார்,அம்மா பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சி வந்தவற்றை அலச ,அக்கா இசையும் கதையும் பற்றி சொல்ல ,அண்ணர் விளையாட்டு செய்திகளை சொல்ல நான் சினிமா பாட்டைப்பற்றி சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்குவேன்.உந்த சினிமாவில இருக்கிற கவனம் உனக்கு படிப்பில இல்லை.
தொழிற்சாலையில் வானொலி ஆங்கிலத்தில அலறும் ,என்ன பாட்டு என்றும் விளங்காது சிலர் ரசிப்பார்கள் நானும் ரசிக்கிற மாதிரிதலையை ஆட்டிகொண்டிருந்துவிட்டு சிறிது நேரத்தின் பின்பு இயர் பிளக் இரண்டு காதினுள்ளும் இறுக்கி போட்டு வேலையை செய்துகொண்டிருப்பேன்.மூன்று மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் பொழுது எர்லாம் அடிக்க கூடியதாக‌ மொபைலில்  வைப்ரேசன் மோட்டில் எலார்ம் செட் பண்ணிவைத்துள்ளேன்.அது என்னை உழுக்கி டேய் வீட்டை போற நேரம் வந்திட்டடா என்று உணர்த்தியவுடன்,பாதுகாப்புகவசங்களை எல்லாம் கழற்றி வைத்து போட்டு சி யு டுமாரோ,கவ்  நைஸ் இவினிங் என்று சக தொழிலாளிமாருக்கு சொல்லி போட்டுவெளியே வந்து காரை ஸ்டாட் பண்ணுவேன் வானொலி அவுஸ்ரேலியா,அமெரிக்கா ஐரோப்பியா செய்திகளுக்கு முக்கியத்துவம்கொடுத்து ஒலிபரப்புவார்கள்.நானும் கறுப்பு அவுஸ்ரெலியன் என்ற நினைப்பில சர்வதேச அரசியலை பற்றி மனதில் நினைத்தபடிவீட்டை நோக்கி காரை செலுத்துவேன்.
கையில் மொபைல் காதில் இரண்டு பக்கமும் சிறிய சிபிக்கர் மாட்டிய தலையை ஆட்டியபடி மொபைலை பார்த்து கொண்டு சிரித்த படி அறையிலிருப்பாள் மகள் என்னை கண்டவுடன் ‍ஹலோ அப்பா என்பாள் .நானும் பதிலுக்கு ‍ஹலோ சொல்லி போட்டு
"ஏன் மொபைலை பார்த்து கண்ணை பழுதாக்கிறீர் டி.வி யை போட்டு பாருமன்"
"தாத்தா பழைய படம் பார்க்கிறார்  தட் இஸ் போரிங்"
"மற்ற டி.வி அறையிலிருக்குதானே  அதில போய் பார்க்கலாம்  தானே"
"அம்மா டெலி டிராமா பார்கின்றார் I hate it! "
"லப்டொப் ,tablet,  iPad அதுகளில் பார்க்கலாம்"
"லப்டொப்போ அதைதானே நீங்கள் வைச்சு தட்டி கொண்டிருப்பியள்"
" அப்பா இது  Whatsapp"
"அது என்ன"

"It is a type of social media and you can only do it through your mobile phone "
"எங்க அக்கா "
"அவவின்ட அறைக்குள்ள இருக்கிறா"
"என்ன செய்யிறாள்"
"She is on Instagram"
"வட் இஸ் தட்"
"It is also a kind of social media"
அக்கா  அதில இருக்கிறா என்று எப்படி உமக்கு தெரியும்
"I just texted her "
"அந்த அறைக்கும் இந்த அறைக்குமிடையில் சோசல் மீடியாவில் கொமினிகேட் பண்ணுறீயள்"
நானும் பேஸ்புக்கில்  இருக்கிறன். உங்களை காணக்கிடைக்கிறதில்லை பேஸ் புக் அல்சோ சோசல் மீடியா நோ?
அப்பா உங்களுக்கு விளங்கப்படுத்துறதிற்க்குள் அடுத்த சோசல் மீடியா வந்திடும் நீங்கள் இப்ப போய் பேஸ் புக்கில் வார கொமன்ட்ஸ்க்குலைக் போடுங்கோ....

Sunday, June 12, 2016

தேடல்

மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்'
வருவதற்கு முதல் நாள் த‌ந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் ச‌லவை தொழிலாளி,சிகை அலங்காரர் எல்லோரும் சந்தோசப்படுவினம். பரம்பரை பரம்பரையாக சிகை அலங்காரம் செய்பவ‌ர் மாமா வந்தவுடன் வீட்டை வருவார் முடி வெட்ட வேண்டிய‌ தேவையிருக்காது ஆனால் மாமா அவ‌ருக்கு பணம் கொடுப்பார் சிகை அலங்கார் போய் சிறிது நேரத்தில் சலவை தொழிலாளி வருவார் அவருக்கும் காசு கொடுப்பார்.
 வீட்டில் சமையல் விசேடமாக இருக்கும் அத்துடன் எனக்கும் கொஞ்சம் காசும் கையில் புரளும் கடைக்கு போய்வந்தால் மிகுதி சில்லறையை என்னை வைத்திருக்க சொல்லுவார்  .திரும்பி போகும் பொழுதும் காசு கொடுப்பார்.அந்த காலத்தில் 10 ரூபா பெரிய காசு.
வருடத்தில் ஒரு தடவை திருவண்ணாமலைக்கு சென்று வருவார் .கொழும்பில் பணிபுரிந்தாலும் பலாலி விமானநிலையம் மூலம்தான் திருச்சி செல்வார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மாகரிஷியின் பக்தன்.ரமண மகாரிஷியுடன் நேரடியாக உரையாடியுள்ளார் ஆத்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர். இளம் வயதில் இந்தியா சென்று ஆத்மீக தேடலில் ஈடுபட்டவர்.முதல்முத‌லாக விமானத்தை கண்டதும் அவரது புண்ணியத்தில் தான். அடுத்த நாள் பாடசாலைக்கு சென்று சகமாணவ‌ர்களுக்கு விமானத்தில் ஏறிஉள்ளே  பார்த்தானான் என்று கதை அடிக்க அவ‌ர்களும் நம்பிவிட்டார்கள்.சின்ன வயசில ந‌ல்லாய் கதை விடுவேன் அதுதான் இப்ப கதை கிறுக்க வசதியாக இருக்கிறது . அப்பொழுது என்னுடன் படித்தவ‌ர்கள் எல்லொரும் விமானத்தை வானத்தில் பார்த்திருந்தார்கள் ,நான் மட்டும் விமானநிலையத்தில பார்த்திருந்தேன். அந்த விமானநிலையம் சிவில் விமான நிலையமாகத்தான் இருந்தது.விமானபடையினரை கண்ட ஞாபகாமில்லை.
யாழ்ப்பாணம் வந்தால் செல்வச்சன்ன‌நிதிக்கும் எங்களை அழைத்து செல்வார் .சோமரின்ட சோமசெட்டில் குறைந்தது பத்து பேராவது போவோம்.அநேகமான நேரங்களில் எனது பயணம் அம்மாவின் மடியில்தான். இப்ப இருப்பது போன்று அப்பொழுது வான் வசதிகள் இல்லை தட்டிவானை வாடகைக்கு  பிடித்து கொண்டு போகமுடியாது . தொண்டமனாறு வான் கதவுகளை கண்டவுடன் மனதில் ஒரு சந்தோசம்  கோவில் வரப்போகின்றது கடலை வாங்கி சாப்பிடலாம் . ஆனந்தா ஆச்சிரமத்தில் ருசியான சைவ உணவை மதியம் உண்ணலாம் என்ற மற்ற மகிழ்ச்சி ஆகும். சின்ன ஆட்கள் நாங்கள் முதலில் காரிலிருந்து இறங்கினால் தான் பெரியவர்களிறங்க முடியும் .நாங்கள் இறங்கி முதலில் குளத்தை நோக்கி ஓடுவோம் கால் கழுவுவதற்கு ,அம்மா பின்னே நின்று கத்துவார்கள் ஓடாயதயப்பு கவனம் கவ‌னமென்று அவர்கள் வந்து கால் கழுவுவதற்கு முன்பே நாங்கள் காலை கழுவிட்டு கோவிலை நோக்கி ஒடுவோம் காலில் மணல்  பதியும் கோவில் வாசலில் போய் இரண்டு கால்களையும் ஒரு தட்டு தட்டி போட்டு உள்ளே செல்வோம்.
கோவிலை சுற்றி கும்பிட்டு முடிய அம்மாவிடம் போய் கடலைக்கு காசு கேற்பேன். இருடா ,சாமி கும்பிட்டு முடிய நான் வந்து வாங்கிதாறன் என்பார். முகத்தை தொங்கப்போட்டபடி நிற்பதை பார்த்த மாமா கூப்பிடு ஒரு ரூபா தருவார் சிறுவர்கள் நாங்கள் கடலைகடைப் பக்கம் ஒடி .பட்டானிக்கடலையும் ,கச்சான் கடலையும் வாங்கி சாப்பிடுவோம்.
மதியம்  அன்னதான‌த்திற்கு காசு கட்டுவதற்கு மாமா ஆனந்தா ஆச்சிர‌மத்திற்கு செல்வார் அவ‌ருடன் நானும் செல்வேன் மற்றவர்கள் சிலசமயம் எங்களுடன் வருவார்கள்.ஆனந்தா ஆச்சிரமத்தை நிர்வகித்து வந்த மயில்வாகனம் சுவாமிகளும் ரமண மரிஷியின் பக்தன் .இருவரும் ஒருவரை ஒருவர் கைகூப்பி வணங்கி சுகம் விசாரித்து கொள்வார்கள் என்னை தங்கையின் மகன் என சுவாமிகளுக்கு அறிமுகபடுத்துவார்.இருவரும் ரமணர் மற்றும் யோக சுவாமிகள் பற்றியும் இன்னும் பல சாமிகளை பற்றியும் பேசுவார்கள், நான் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்துகொண்டிருப்பேன். நூறு அல்லது நூற்றைம்பது ரூபாவை மேசை லாச்சில் வைப்பார்  பத்து பேர் வந்திருக்கின்றோம் மதியம் வருவோம் என்று மாமா சொல்லுவார் .
புலிக்குட்டி,நரிக்குட்டி ,பூணைக்குட்டி ,ஆணைக்குட்டி,நாய்குட்டி என்று கதைத்தார்கள் என‌க்கு ஒன்றும் புரியவில்லை.கோவிலுக்கு திரும்பும் பொழுது மணல் சுடத்தொடங்கி விட்டது ஒட்டமும் நடையுமாக கோவிலை நோக்கி போகும் வழியில் இரு வெள்ளைக்காரர்கள் வேஸ்டியுடன் வந்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒருவர் மாமாவுக்கு அறிமுகமானவர் .மாமாவை தனது கூடிலுக்கு வரும்படி அழைத்தார்.நானும் அவ‌ர்களுக்கு பின்னால் சென்றேன்.
.
கடற்கரையோரம் தென்னைமரங்களுக்கு நடுவே ஒரு சிறிய சீமேந்தால் கட்டப்பட்ட அறை ,சற்று உயரத்தில் அமைந்திருந்தது.ஆறு எழு படிகள் ஏறித்தான் உள்ளே செல்லகூடியதாக இருந்தது.உள்ளே பாய் ஒன்றும் சீமந்தால் கட்டப்பட்ட கட்டில் போன்ற ஒரு அமைப்பும் இருந்தது வெள்ளை வேஸ்டிகள் ,சால்வைகள் சிலதும் இருந்தன.மாமாவும் அவர்களும் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார்கள்.என்னத்தை பேசினார்கள் என்று ஒன்றும் புரியவில்லை ,அப்பதான் புரிந்து கொண்டேன் என்னுடன் வந்த மற்றைய சிறுவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளாமைக்குறிய காரணத்தை.நான் அந்த வளவில் சுற்றிதிரிந்து அணிலை ஏறவிட்ட நாய் மாதிரி தென்னை மரங்களை சுற்றி விளையாடிகொண்டிருந்தேன்.
சன்னதியானின் மதிய பூஜைக்குறிய மணியோசை கேட்க மூவரும் தங்களது உரையாடலை முடித்துகொண்டார்கள் நானும் மாமாவும் கோவிலை நோக்கி சென்றோம் . உதுல தாடியுடன் இருப்பவரை  நாய்க்குட்டி சாமி அல்லது ஜெர்மன் சாமி என்று சொல்லுறவையல் ஜேர்மனியிலிருந்து வந்திருக்கிறார், மற்றவர் நரிக்குட்டிசாமி அவுஸ்ரெலியாவிலிருந்து வந்திருக்கின்றார் இப்ப திருவண்ணாமலையில் இருக்கின்றார் என மாமா சொல்லிகொண்டு வந்தார் .  நடக்க முடியாமல் மணல் சுடாக இருந்தது.மாமாவின் கதைகளை கேட்க கூடிய நிலையில் நான் இருக்கவில்லை மாமா கால் ச‌ரியாக சுடுகிறது நான் ஒடப்போறேன் என்று சொல்லி அவரின் பதிலுக்கு பார்த்து கொண்டிருக்காமல்  ஒரே ஒட்டத்தில கோவிலை போய் சேர்ந்தேன்.மாமா ஆறுதலாக நடந்துவந்தார்.
பூஜை முடிந்தவுடன் எல்லோருமாக ஆன‌ந்தா ஆச்சிரமம் நோக்கி நடக்கலானோம்  .மணல் சூடாக இருந்தது ஒட்டமும் நடையுமாக சென்று ஆச்சிரமத்தை அடைந்தோம் உள்ளே செல்ல முடியவில்லை, உண்மையிலயே அன்னதான‌ம் தேவைப்பட்டோர் பலர் அன்னதானத்திற்காக வெளியே காத்திருந்தார்கள் .மாமாவும் மற்ற பெரியவ‌ர்களும் வந்தவுடன் அவர்களுடைய உறவினர்கள் நாங்கள்  என அறிந்த நிர்வாகத்தினர் எங்களை உள்ளே அனுமதித்தனர் .மற்றவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை .

உள்ளே ஒரு மண்டபத்தில் மயில்வாகணம் சுவாமிகள் ,அங்கிருந்த சாமிபடங்களுக்கு கற்பூர ஆரத்தி செய்துவிட்டு எங்களை உள்ளே அமரும் படி சொன்னார் .வாழை இலை பாரிமாறப்பட்டது ஐந்தாறு மரக்கறியுடன் உணவு தரப்பட்டது. .வெள்ளைக்கார சாமிமாரும் எங்களுடன் உள்ளிருந்து உணவு உட்கொண்டனர். .சிறிது நேரத்தில் பலத்த கூக்குரலுடன் வெளியே நின்ற அன்னதானம் தேவைப்பட்டோர் ஒடி வந்தார்கள் .அவ‌ர்களுக்கு வேறு இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.எமக்கு கிடைத்த உணவும் ,உபசரிப்பும் அவர்களுக்கு கிடைத்திருக்குமா என்று எனக்கு இன்றும் சந்தேகமாயிருக்கு.
மீண்டும் கடலைக்கார ஆச்சியிடம் ஒரு ரூபாவுக்கு கடலை வாங்கி கொண்டு வீடு சென்றோம்.
அன்று எம் மண்ணில் ஆத்மீக தேடலுக்காக பிற நாட்டவர்கள் பலர் வந்துள்ளார்கள், அந்த மண்ணின் பூர்வீக  குடிகள் நாம் பொருள் தேடலுக்காக‌ அவர்களின் மண்ணில் வாழ்கின்றோம்.அவர்களின் தேடலில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள் .எமது தேடலை நாம் அவர்களின் மண்ணில் தொடர்கிறோம்.