Sunday, August 23, 2015

மேலோகம்

நாங்கள் பார்த்து ரசித்த சினிமா பிரபலங்கள் பலர் எம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டனர்.அண்மையிலும் ஒரு இசை அமைப்பாளர்விடைபெற்றார்...
வழ‌மையாக இறந்தவர்களை மேலே போய்விட்டார்கள் என்று சொல்லுவோம்.அப்படி மேல போன திரை பிரபலங்கள் எப்படிஉரையாடியிருப்பார்கள் என்ற ஒரு சிறு கற்பனை மட்டுமே......

அண்மையில் மேலோகம் போனவர் எம்.எஸ்.வி அவரை வரவேற்பதற்கு பல திரையுலக
பிர‌முகர்கள்  பிரமாண்டமான‌ முறையில் மேடை போட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.பார்வையாளர்கள் பூமி பந்தில்தென்மண்டத்தில் வாழ்ந்து இப்ப மேலோகத்தில் வாழ்பவர்கள்.
பிரமாண்டமான‌ ஒரு மேடையை, புலம்பெய‌ர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் சென்றவர்கள்ஒழுங்கமைத்திருந்தனர்.

பூமிபந்தின் பிரபல சினிமா நட்சத்திரங்கள் பங்கு பற்றும் மாபெரும் நிகழ்ச்சி.... இதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் சிலோன்வானோலி புகழ் கே.எஸ். ராஜா.....

கே.எஸ் ....கையில மைக்குடன்....ராஜாவின் மாலை வணக்கங்கள்
இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவ‌ர்கள் புலம்பெய‌ர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம்வந்தோர் சங்கத்தினர் ..(பு.மே.மே.ச ),அதன் தலைவரை வரவேற்புரை நிகழ்த்தவும்,மனைவியை மங்களவிளகேற்ற, பு.மே.மே.ச சார்பில்அன்புடன் அழைக்கின்றேன்...என கே.எஸ் ராஜா சொன்னவுடன் முன் வரிசையிலிருந்த சங்க தலைவர் மனைவியும் மேடைக்கு சென்றனர்.மனைவி மேடையில் ஏறி கையை மடித்து உயர்த்தி ஐந்து விரல்களிலும் தீபத்தை ஏற்றினார் .சபையில் இருந்தோர் தங்களது கையைபக்கத்தில் இருப்பவரின் கையுடன் அடித்து ஏற்படுத்திய கரோலி மண்டபத்தை அதிரசெய்தது.
அடுத்ததாக செம்மளச்செல்வர் புரட்சிதிலகம்  உரையாற்றுவார் ,என அறிவிக்க

ரத்தத்தின் ரத்தங்களே (மண்டபம் சிவப்பு ஒலியால் பிர‌காசிக்கின்றது) https://www.youtube.com/watch?v=ZlhaOQSgD_M
"என்னை தெரியுமா நான் சிரித்து"என பாடிய‌  படியே புரட்சி திலகம் மேடையில் தோன்ற‌
சபையிலிருந்தோர் அழத்தொடங்கிவிட்டார்கள் ,பு.மே.மே.ச‌ தமிழ்நாட்டு மேலோகவாசி" "தலைவா"  என்னா வாத்தியாரு இப்படி கேட்டிங்கள் "என்று தீக்குளிக்க போக உடனே எனைய சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்கள்.
பொய்யிலெ பிறந்து பொய்யிலே வளர்ந்து என தேவிகா பாடிகொண்டு மேடையில் வர எம்.ஜி.ஆரும் கூடவே சேர்ந்து ஆடி சபையோரைமகிழ்ச்சி கட‌லில்ஆழ்த்தி  கொண்டிருக்கும்
பொழுது சபையோர் தங்களுக்குள் முனுமுனுக்க தொடங்கிவிட்டார்கள்'
அருகு அருகே அமர்ந்து பேசிகொண்டிருந்த இருவர்
"உவருக்கு ஆடத் தெரியாது"
"அவற்ற நிறத்திற்கும் ,ஆழகுக்கும் ஒருத்தருமில்லை"
"நடிப்பும் பெரிய திறம் என்றில்லை"
"யோவ் நடிப்பில்லாமலா இவ்வளவு மக்கள் அவ‌ருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்"
"ஏய் என்னையா யோவ் என்றாய்"
"உன்னைதான்டா"
உடனே சபையோர் அவர்களை சமாதானப்படுத்த ஒருத்தர் எழும்பி "வெளியால வா பார்த்துகொள்கிறேன்" என்றபடி வேறு இடத்தில் போய்அமர்கிறார்
" என்னை யார் என்று எண்ணி எண்ணி நீங்கள்  பார்க்கின்றிர்கள் "கண்ணை மூடியபடி ஸ்டைல் நடை நட‌ந்து வர சபையோரின்" நடிகர் திலகம்வாழ்க" என்ற ஒலி கூரையை பிளந்தது... https://www.youtube.com/watch?v=AtrOLDpmaT8

"நலந்தான நலந்தான உடலும் உள்ளமும் நலந்தான" பத்மினியும் சிவாஜியும் ஆடி சபையோரை மகிழ் வித்து கொண்டிருக்கும் பொழுது .https://www.youtube.com/watch?v=YoJBZYCZThg சபையோர் மீண்டும் முனுமுனுக்க தொடங்கிவிட்டனர்....
"உவர் ஒவர் அக்டிங்"
"டெய் யாரை பார்த்து ஒவர் அக்டிங்க் எங்கிறாய்"
"யாரையடா டேய் என்றாய்"
"உன்னைதான்டா"
 மீண்டும் சபையோர் தலையிட்டு சமாதானபடுத்தி எம்ஜிஆர் வாலுகளை ஒரு பகுதியிலும் சிவாஜி வாலுகளை இன்னோரு ப‌குதியிலும்அமரும்படி கேட்டுக்கொண்டனர்.
குழுக்களாக பிரிந்திருந்து  தங்களது நாயகர்கள் வரும் பொழுது கைதட்டி விசிலடிச்சு உற்சாகப்படுத்துவதும் எதிர்குழுவின் நாயகர்கள் வந்தால்கூச்சலிட்டு குழப்புவதுமாக இருந்தார்கள்....நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருதற்காக
"இதோ அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறார்கள் காதல் மன்னன் ஜெமினியும் நடிகைர் திலகம் சாவித்திரியும்"
https://www.youtube.com/watch?v=5cmfqO-e020இப்பொழுது இருபகுதியினரும்   சேர்ந்து விசிலடித்தார்கள்.
"
.
சாவித்திரியை பார்த்த சிவாஜிக்கு பழைய ஞாபகம் வர உடனே "இரவினில் ஆட்டம்"https://www.youtube.com/watch?v=wGmxDapஃப்ல்6ம்பாடியபடியே மேடையில் வந்தார்.
மேடையிலிருந்தோரிக்கிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.இசை அமைப்பாளருக்கு வரவேற்ப்பு என அறிவித்துவிட்டு நடிகை,நடிகர்களுக்குஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்,முதலே சொல்லியிருந்தால் நாங்கள் இந்த நிகழச்சியை பகிஸ்கரித்திருப்போம் எனஇசைஅமைப்பாளர்கள் ஆதங்கப்பட்டுகொண்டிருப்பதை கண்ட கே.எஸ் ராஜா .....இன்றைய விழா நாயகன் இதோ உங்கள் முன்
சபையோர் "விஸ்வநாதன் வேலை வேண்டும்" கோரோசாக சத்தம் போட ,
விஸ்வநாதன் "அமைதி ,அமைதி....வேலை கொடுப்பது வேலை வாங்குவதெல்லாம்  புலோகத்தில் நாம் இப்பொழுது வாழ்வதுமேலோகத்தில்,இங்கு எங்கும் இசை எதிலும் இசை.. இன்றைய இந்த நன்நாளில்பிரபஞ்ச இசை வல்லராசாக நாம் வரவேண்டும் என கனவுகாண்போம் "www.youtube.com/watch?v=swzBXaGeJ-0
இந்த பாடலை விஸ்வநாதன் பாட மேடையைலிருந்த ரவிச்சந்திரன், பாலையா, நாகேஸ் என்று ஒரு பட்டாலமே நாட்டியம் ஆடி சபையோரைமகிழ்வித்தனர்.
இப்பொழுது அரை மணித்தியால இடைவேளை  என‌அறிவித்த‌வுடன் பு.மே.மே.ச கொமிட்டி அங்கத்தினர்கள் மேடையை நோக்கி படைஎடுத்தனர்.மேடையின் வாசலில்நின்ற காவ‌லாளி ஒருத்தரையும் உள்ளே அனுமதிக்கவில்லை .
நாங்கள் தான் இந்த விழாவை ஒழுங்கு செய்தனாங்கள் எங்களையே உள்ள விட மாட்டியோ உனக்கு எவ்வளவு துணிவு என்று ஒருத்தர்காவலாளிக்கு அடிக்க போக உடனே தலைவர் ஒடி வந்து இருவரையும் சமாதனப்படுத்திய பின்பு காவலாளியிடம்
"நாங்கள் பிரபலங்களுடன் செல்பி எடுக்க வேணும் பிளிஸ்"கெஞ்சி கேட்டார்.
காவலாளியும் ஒருத்தர் ஒருத்தராக போய் எடுங்கோ என்று சொல்ல முதலில் தலைவர் போனார். உடனே எம்ஜி ஆரிடம் போய் கையைகொடுத்து
"சார் உங்ககூட ஒரு போட்டோ எடுக்கனும்"
"சரி எடுத்துக்கோ எங்க கமரா"
"இங்க இருக்கு "என பொக்கட்டிலிருந்து ஐ போனை எடுத்தார்
"என்னது பொக்கட்டிலிருந்து எடுக்கிற"
"இது ஐ போன்"
"யோவ் போன்னில எப்படி ஸ்டில் எடுப்பாய் ,பேய் கதை கதைக்கிறாய்  "
"இதுதான் இப்ப லெட்டஸ்  அடுத்த கிழமை புதுசா வேற வந்திடும் சார்பூலோகம் ரொம்ப வாஸ்டா முன்னேறுது சார்"
"சரி சரி வா வந்து பக்கத்தில நில்லு கமராவை பாலுமாகேந்திராட்ட கொடு அவன் நல்லாய் எடுப்பான்"
"சார் நானே எடுப்பேன்,இது செல்பி"
என்ற கிந்தி பாடல் மேடையில் ஒலிப்பதை கேட்ட ச‌பையோர் '
"எவன்டா கிந்தி பாட்டை போட்டது,தமிழ் பாட்டை போடு" என கோரோசாக‌ கத்தினார்கள்.
சபையோரின் பேய் கூச்சலால் அதிர்ச்சியடைந்த ஒலிபதிவாளர் தவ‌றுதலாக www.youtube.com/watch?v=MM7_TQidv3w&index=29&list=PLatdcG8s43WECBhp3KRxu5wUwfV2gCQ92 இந்த பாடலை போட பார்வையாளர்களுக்கு கோபம் இர‌டிப்பானது.
பார்வையாளர்கள்  எல்லை மீறி போவதை உணர்ந்த அறிவிப்பாளர் இதோ எமது நிகழ்ச்சி ஆரம்பமாகிறது உங்களை மகிழ்விக்க பின்னனிபாடகர் டி.எம்.எஸ்
"பகலினில் தூக்கம் இரவினில் ஆட்டம்" என்ற பாடலை பாட சபையோர் மிகவும் உணர்வு பூர்வமாக அமைதியாக கேட்டன ர்.https://www.youtube.com/watch?v=0yInd43cm3M
தலைவரின்ட பாட்டு ஒன்று பாடுங்கோ என சபையோர் கேட்க டி.எம்.எஸ் ஆத்திரமடைந்து . புலோகத்திலும் நிகழ்ச்சிகளை சவுண்டு வைச்சு குழப்புற குணம் உங்களுக்கு இங்கு வந்தும் மாறவில்லை... நீங்கள் கேட்டு நான் பாட முடியாது ,என கூறியபடியே மேடையிலிருந்த முருங்கைமரத்தில் ஏறினார்.


மண்டபத்திற்குள் இடைவேளைக்கு வெளியே சென்ற கூட்டம் ஒன்று ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்தது.. ஆரவாரத்துடன் உள்ளே வந்தகூட்டம்
"என்னாப்பா எல்லாம் ப‌ழைய பாடலாக போடுறீங்கள் நல்ல குத்துப்பாட்ட பாடுங்க "என கத்தினார்கள்

டி.எம்.எஸ் மாத்தையா "என்னடி ராக்கம்மா பாடு பாடு" என்று ஒரு சிங்கள மேலோக வாசி கேட்க அவ‌ரும் அந்த பாடலை அழகாகபாடினார்https://www.youtube.com/watch?v=qXm3lopuhXs
. புலோகம் மேடைகளில் எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி பிர‌பலமைடைந்த பு.மே.மே. செயலா ளர் நன்றியுரை   "அந்த நாலு பேருக்கு நன்றி  "https://www.youtube.com/watch?v=tg-V4PcCJK4 என பாடியும் நடித்தும் சபையோரையும் மேடையிலிருந்தோரையும் மகிழ்ச்சி கட‌லில்ஆழ்த்திகொண்டிரிக்கையில்,.மேலோக பொலிசார்  திடிரென உள்ளே வந்தனர் .இங்கு மதுபானம் பாவித்தீர்களா? எல்லோரும் இல்லைஎன்றனர் .பொலிசார் அதட்டி கேட்டவுடன் நான் குடிக்கவில்லை அவ‌ர் குடித்தாரோ தெரியவில்லை என ப‌க்கத்தில் இருப்பவரை நோக்கிகையை சுட்டி காட்டினார்.

"ஏய் உன்ட‌ வாயிலிருந்துதான் சாரய நாற்றம் அடிக்கின்றது,எங்கே ஒன்று இரண்டு பத்து வரை சொல்லு" என ஒரு எழும்புத்துண்டை நீட்டினார் பொலிஸ்காரர்.
"13 ஆம் நம்பர் வருகின்றது நீ குடித்திருக்கின்றாய்"
"யார் இந்த நிகழ்ச்சியை நடத்துவது"
"பு.மே.மே.ச அமைப்பினர்"
"எங்கே தலைவர்"
தொண்டர்கள் தலைவரை தேடினார்கள் ,தலைவரை கண்டுபிடிக்க முடியவில்லை ,பொலிஸ் வந்து தலைவரை தேடுதாம் என்ற  கதைமண்டபம் பூராவும் காட்டுத் தீ போல பரவியது.

நிலமை மோசமடைவதை அறிந்த தொண்டர்கள் ஒருத்தரை திடிர் என தெரிவு செய்தனர்.,தலைவர் இன்னோரு நிகழ்ச்சிக்கு பேசுவத‌ற்குசென்று விட்டார் இவர் தான் உப தலைவர் என பொலிசாரிடம் அறிமுகம் செய்து வைத்தனர் .
தொண்டர்கள் தங்களுக்குள் , பூலோகத்தில் துட்டு கொடுத்து பொலிஸை மடக்கிவிடலாம் ஆனால் இங்கு அப்படி செய்ய‌முடியாது என‌ பேசிகொண்டிருந்தார்கள்

"மதுபான‌ம் பாவிப்பதற்கும்,விற்பதற்கும் அனுமதி பெற்றீர்களா"
"இல்லை"
"அப்ப ஏன் பாவிக்கின்றீர்கள்"
"நாங்கள் பாவிக்கவில்லை யார் சொன்னது நாங்கள் பாவிச்சது எண்டு"
பொலிஸ்காரர் மீற்றரில் 13 எண் வந்த்தை காட்டுகிறார்
"ஐயோ மீற்றர் பொய் சொல்லுது"
ஆத்திரமடைந்த பொலிஸ் துப்பாக்கியை நீட்ட உப தலைவர் காலில் விழுந்து "நாங்கள் பூலோகத்தில் கஸ்டப்படும் ம‌க்களுக்கு நிதி சேர்க்க மது பானம் விற்கின்றோம் பிளிஸ் எஸ்கியுஸ் அஸ்"
"இல்லை நீங்கள் தண்டபணம் 0000000000000000 கட்ட வேணும்"
 "தண்டப்பணம் கட்டுவது என்றால் நாங்கள் இன்னோரு நிகழ்ச்சியில் இது போன்று விற்பனை செய்துதான் கட்டமுடியும் .....உனக்கு முடிந்தால் சட்ட நடவடிக்கை எடு"
பொலிஸாருக்கு பெரிய மானப்பிரச்சனையாக போய்விட்டது.சாரயம் குடிச்சிருக்கிறாங்கள்  ஆனால் மண்டபத்தில் ஒரு இடத்திலும் மதுபானத்துடனோ அல்லது வெற்றுபோத்தல்களோ காணவில்லை.பொலிஸார் மண்டபத்தை சல்லடை போட்டு தேடியும் ஆதாரம் ஒன்றும் கிடைக்கவில்லை.சோர்வடைந்த பொலிஸார் தங்களது பணியை முடித்து கொண்டு வெளியே வந்தனர்.
"சார் சார்..."குரல் வந்த திசையை நோக்கினர்.
" "ஐந்து மடி எருமை அதில ஒன்று தண்ணி அதை நாம் சொன்னால் துரோகி"
பொலிசாருக்கு ஒன்றுமே புரியவில்லை.
"யார‌ப்பா நீ ஒன்றுமே புரியவில்லை"
"உவங்கள் எப்படி தண்ணி பாவிச்சங்கள் என்றுதானே அறியவேணும்"
" ஒம்"
"உவங்கள் உந்த நிகழ்ச்சிக்கு என்னத்தில வந்தவங்கள்"
"எருமையில வந்தவங்கள்"
"அவங்கள் வந்த எருமைகளில் சிலதுகளுக்கு ஐந்து மடி காம்பு இருக்கும்,அதில ஒன்று தண்ணி "
பொலிசார் "ஒமைகோட்"

பொலிசார் அவனிடம் ஒரு கேள்வி கேட்டனர் .நீ ஏன் அவங்களை எங்களிடம் காட்டிகொடுத்தாய் அவங்களும் உன்னுடய ஆட்கள் தானே...
"என‌க்கு தலைவர் பதவி தருவதாக சொல்லி கடைசியில் வேறு நபருக்கு கொடுத்துவிட்டார்கள்"



Sunday, June 7, 2015

அதே சிரிப்பு அதே

ஊரில அந்தகாலத்தில பெண்கள் வயதுக்கு வந்த பின்போ அல்லது பருவமடையப்போகிறாள் என்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் தனியாக வெளியே செல்வதற்கு அநேகமான வீடுகளில் தடை போடுவார்கள்.அப்பா, அண்ணா ,தம்பி போன்றோரின் துணையுடன் தான் செல்வார்கள்.பக்கத்துவீட்டு அக்காமாருக்கு சில தம்பிமாரை துணைக்கு அனுப்புவினம், ஆனால் தங்கச்சிமாருக்கு பக்கத்துவீட்டு அண்ணமாரை அனுப்பமாட்டினம் அந்த விசயத்திலமட்டும் சனம் தெளிவாக இருக்கும்.சுரேசும் உப்படி இரண்டு மூன்று அக்காமாருக்கு போடிகார்ட் வேலை பார்த்திருக்கிறான்.பக்கத்துவீட்டில நாலு பொம்பிளை பிள்ளைகள் மூத்தவர் உயர்தரம் படிக்கும் பொழுது சுரேஸ் ஏழாம் வகுப்பு படிக்கிறான் .இரண்டாவது அக்கா பத்தாம் வகுப்பு .அடுத்த இரண்டு பெண்களும் ஐந்தாம் ,மூன்றாம்.வகுப்பு படித்துகொண்டிருந்தார்கள். பக்கத்துவீட்டு குடும்பத்தலைவர் வெளி மாகாணத்தில் பணிபுரிந்தபடியால் ,அக்காமார் தூர இடங்களுக்கு செல்வதென்றால் சுரேசை துணைக்கு அழைத்து செல்வார்கள்.
சுரேஸ் அந்த வீட்டுக்கார அம்மாவை பக்கத்து வீட்டு அண்ரி என்றுதான் அழைப்பான்.காரணம் அவனுக்கு கன அண்ரிமாரை தெரியும் பக்கத்துவீட்டு அண்ரி,முன்வீட்டு அண்ரி பின் வீட்டு அண்ரி இப்படி பல அண்ரிமார் உண்டு. மற்ற அண்ரிமாருக்கு ஆண்பிள்ளைகள் இருந்தபடியால் பக்கத்து வீட்டு அண்ரியுடன் கொஞ்சம் பாசம் அதிகமாகவே இருந்தது.
பனை ஒலை வேலிதான் இரண்டு வீட்டுக்கும் தடுப்புச்சுவர்.இரண்டு வருசத்திற்கு ஒருக்கா தான் அது அடைபடும் .வேலியடைச்ச ஒரு மாசத்தின் பின் இரண்டு மூன்று பனை மட்டையை விலத்தி ஒரு சிறிய பொட்டை இரண்டு வீட்டாரும் உருவாக்கிவிடுவார்கள்.அந்த பொட்டுக்குள்ளால் தான் இருவீட்டாரும் பண்டமாற்று செய்வார்கள்.சீனி,மிளகாய் தூள்,அரிசி போன்றவை பரிமாறப்படும்.காலப்போக்கில ஊர் நாய்கள் எல்லாம் அந்த பொட்டுக்குள்ளால் புகுந்து போய் பொட்டை பெரிதாக்கிவிடும்.அதுமட்டுமல்ல நாய்கள் போய் வந்தபடியால் பனைமட்டையில் இருக்கும் முள்ளுகளும் தேய்ந்துபோய்விடும் இதனால் சுரேஸ்க்கு உடலில் கிறுக்கல் விளாமல் பக்கத்துவீட்டை போய்வரக்குடியதாக இருந்தது.
இரண்டு வீட்டு அம்மாக்களும் ஊர்விடுப்பு கதைக்கும் டெஸ்க்டொப் அந்த பொட்டுதான்,முகம் தெரியாமல் கதை த்துக்கொண்டிருப்பினம் ,ஆறுமாதம் போனபிறகு கறையான் ஒலையை சாப்பிட தொடங்க அதில ஒரு சிறிய விரிசல் பிறகு கறையானை தட்டிவிடுகிற சாட்டில அந்த இடத்தில் முகம் பார்த்து கதைக்க கூடிய ஒரு வின்டோ திறக்கப்பட்டுவிடும்.
குமுதினி அக்காவை நண்பிகளின் வீட்டுக்கு அழைத்து செல்வதற்க்குகூறிய அழைப்பு சுரேஸ்க்கு இந்த வின்டோவால் தான் வரும் .வின்டோவால் அழைப்பு வர பொட்டுக்குள்ளால் புகுந்து சுரேஸ் பக்கத்து வீட்டு அக்காவுக்கு மெய்பாதுகாவலன் வேலை செய்ய செல்வது வழமையாக இருந்தது.குமுதினி சாதாரண யாழ் அழகி.அதாவது வட இந்தியழகி அல்ல . இப்படித்தான் ஒரு நாள் இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு இளைஞன் இரண்டு தரம் அவர்களை கடந்து சென்றான்,மூன்றாம்தரம் செல்லும் பொழுது ஒரு கடிதத்தை கீழே போட்டுவிட்டு வெகு சீக்கிரமாக சைக்கிளை ஒட்டிச்சென்றான்.சுரேஸ் அதை குனிந்து எடுக்க செல்ல ,சுரேஸ் எடுக்காதையடா அதை, கேதியா என்னோட நடந்து வா ,ஊத்தைவாலி என்று திட்டியபடியே அவளும் ஓட்டமும் நடையுமாக சினேகிதி வீட்டை போய் சேர்ந்தார்கள்.இதை ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் என குமுதினி கேட்டபடியால் சுரேஸும் ஒருத்தரிடமும் சொல்லவில்லை.
குமுதினிக்கு பேரதேனியா பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீடத்திற்கு அனுமதி கிடைத்தது..குமுதினி முதல் முதலாக பேரதனியா செல்லப்போகின்றாள் தாயாருக்கு தனியாக அனுப்ப பயமாக இருந்தது. ஊரில தெரிந்தவர்கள் யாரவது அங்கு படிக்கிறார்களா என விசாரித்ததில் பக்கத்து ஊர் குகன் இன்ஞினியரிங் படிப்பதாக அறிந்து கொண்டார்கள் , பெடியனுடன் அனுப்ப அவர்களுக்கு விருப்பம் வரவில்லை .நண்பி ஒருத்தி மூலம் வேறு பாடசாலை மாணவியின் அறிமுகம் கிடைத்து இருவரும் ஒன்றாக ஒரே நாளில் பயணம்செய்ய ஏற்பாடு செய்தார்கள்.
அந்த ஊரில் கந்தையரின் கார் தான் புகையிரத நிலையம் ஆஸ்பத்திரி போன்ற தேவைகளுக்கு ஊர்மக்கள் பாவிப்பார்கள். வீட்டில் உள்ளோர் கண்ணீர் சிந்தியபடியே அவளை கந்தையரின் காரில் அனுப்பி வைத்தனர் .கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போற வழியில் அவளது புதிய பல்கலைகழக நண்பியையும் ஏற்றி சென்றார்கள் .கந்தையரின் சோமசெட் காரில் குறைந்தது எட்டு பேரை ஏற்றலாம் . முன்சீற்றில் சுரேஸ் அவனுக்கு பக்கத்தில் இடையில் ஏறிய அக்காவின் அப்பா இருப்பதற்காக 
"தம்பி டேய் ஒரு காலை தூக்கி இஞ்சால் போடு ஐயாவுக்கு இருக்க வசதியாக இருக்கும் "டிரைவர் சொன்னதிற்கு ஏற்ப ஒருகாலை சாரதியின் பக்கம் போட்டான்.இப்பொழுது அவனது இரண்டு காலுக்கும் நடுவில் கந்தையரின்ட காரின் கியர்,ஒவ்வொரு முறையும் அவர் கியர் போடும் பொழுதும் நெஞ்சுக்குள் ஒருவித பயம் வந்து போகும்.
பயணச்சீட்டை பெற்றுகொண்டார்கள் ,வாசலில் நின்ற டிக்கட் பரிசோதகர் மேடை சீட்டு வாங்காதவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என சொல்லவே மூன்று மேடைச்சீட்டை வாங்கி உள்ளே ஐந்து பேர் சென்றார்கள்.

புகையிரதம் வருவதற்கு சில வினாடிகளுக்குமுன் சைக்கிளில் ஒரு கூட்டம் பாட்டுக்கள் பாடியபடி புகையிரதநிலையைத்தை வந்தடைந்தார்கள்.இரு பயணச்சீட்டை மட்டும் பரிசோதகரிடம் காட்டிய படியே அந்த கூட்டம் உள்ளே சென்றது.

"சுரேஸ் அந்த ஊத்தவாலி சனியனும் இந்த ரெயினில வருகுது போல கிடக்குதடா"

"ஒமக்கா அவர் தான் "

"எனக்கு பயமாயிருக்கு"
உந்த பெடியள் செட்டுக்குள்ள கந்தையா வாத்தியின்ட இஞ்ஞினியர் பெடியன் குகன் நிற்கிறான் போலகிடக்கு சொல்லியபடி குமுதினியின் புது நண்பியின் அப்பா அந்த கூட்டத்தை நோக்கி சென்றார்.அதே நேரம் அட அங்க பாருடா சரக்குகள் கூட்டம் நிற்குது கிட்ட போய் நின்றால் அதுகள் ஏறும் கொம்பாட்மன்டில் நாங்களும் ஏறலாம் என்றபடி அந்த பெடியள் கூட்டம் இவர்களை நோக்கி வந்தது.

"தம்பி குகன் ,"
"ஹலோ அங்கிள் ,என்ன கொழும்புக்கோ"
"இல்லை, இல்லை என்ட மகளும் அவவின்ட சினேகிதபிள்ளையும் பெரதேனியா கம்பஸ்க்கு போயினம்,யாராவது தெரிந்த ஆட்கள் வருவினமோ என்று பார்த்துகொண்டிருந்தனான் கடவுளாக பார்த்து உம்மை காட்டி போட்டார், "
வாரும் வாரும் உம்மை அவையளுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறன் ,ஒருக்கா வடிவாய் பார்த்து கொள்ளும்"

தனது மகளையும்,குமுதினியையும் அறிமுகம் செய்து வைத்தார்.குமுதினி சுரேசை பார்த்த பார்வை இந்த ஊத்தைவாலி இஞ்ஞினியராம் என்ற மாதிரி இருந்தது "அன்ன கோச்சி எனவா" என்றபடியே பித்தளை மணியை ரயில்வே சிப்பந்தி அடிக்க ,சகலரும் தங்களதுபொதிகளை தூக்கி கொண்டு முன்னுக்கு வந்து நின்றார்கள் .சிலர் முருங்கைக்காயை பழைய புதினப்பத்திரிகையால் சுற்றி சணல் கயிற்றால் கட்டியிருந்தனர் வேறு சிலர் பிலாப்பழத்தை மாட்டுத்தாள்(சீமேந்து பை)பேப்பரால் சுற்றி கொண்டுவந்திருந்தனர். யாழ் தேவி புகையை தள்ளிக்கொண்டு தனது வெக நடையில் ஆடி அசைந்து வளைந்து குலுங்கி வந்துகொண்டிருந்தாள்.புகையிரத நிலைய அதிபர் ஒரு வளையத்தோடும்,சிவத்த கொடியுடனும் வந்து நிற்க இன்னொரு சிப்பந்தி இன்ஞின் டிரைவரிடம் வளையத்தை வாங்க தயாராக இருந்தார்.அதிபர் சிவத்த கொடியை காட்டி வளையத்தை கொடுக்க யாழ்தேவி தனது வேக நடையை மெல்ல மெல்ல குறைத்து நின்றாள்.
சனம் அடிபட்டு முண்டியடித்து பொதிகளுடன் ஏறினர்,சிலர் பொதிகளை யன்னலூடாக கொடுத்தனர் .
"குகன் டேய் இங்கவாடா" என்ற சத்தம் ஒரு பெட்டியிலிருந்து வந்தது.
"என்னுடைய பிரன்ட்ஸ் அந்த கொம்பார்ட்மன்டில் இருக்கினம் அதுல இடமிருக்கு வாங்கோ" என அழைத்தான்.
குமுதினி தனது குடும்பத்தினரையும்,நண்பி தனது அப்பாவையும் பார்த்தார்கள் அனுமதி பெறுவதற்கு அவர்கள் தலையை ஆட்டி அவருடன் போ என்று அனுமதி கொடுத்தனர்.
மூவரும் அந்த கொம்பார்ட்மன்டில் ஏறிக்கொண்டனர்.அதில் பல ஆண்கள் பெண்கள் என இருந்தனர் எல்லோரும் பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் என பார்த்தவுடனே தெரிந்தது.சில புது மாணவர்களும் ,பல பழைய மாணவர்களும் இருந்தனர்.விசில் சத்தத்துடன் சிவத்த பச்சை கொடி காட்டப்பட கூ கூ என்ற ஒசை எழுப்பிய படி மெதுவாக யாழ்தேவி அசைந்தாள்.கையை அசைத்து விடைபெற்றனர் ,கண்ணீர் சிந்தியபடி சிலர் , மறக்காமல் போய் சேர்ந்தவுடன் கடிதத்தை போடு என்று ஒரு சிலர் சொல்லி விடை பெற்றனர் .காரில் மயான அமைதி நிலைவியது.கந்தையரும் ,மற்ற பெரியவரும் முன்னுக்கு இருந்து அரசியல் பேச தொடங்கிவிட்டார்கள் இருவரும் தமிழர்விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் சிங்கள அரசியல்வாதிகளை குறைகூறிகொண்டே வந்தனர்
சாந்தினியும் சார்ளினியும் அழுது கொண்டே காரிலிருந்தனர் .பாமினி அவர்களை சமாதனப்படுத்திகொண்டிருந்தாள்.
சுரேஸ் யன்னலூடாக நட்சத்திரங்களை பார்த்த படியே எதிர்காலத்தை பற்றி கனவு காண தொடங்கிவிட்டான். தனக்கு வெளி மாகாணத்தில் அனுமதி கிடைத்தால் புகையிரதத்தில்இவர்களை போன்று சந்தோசமாக செல்ல முடியும் சாந்தினிக்கும் அங்கு கிடைத்தால் அவளையும் அழைத்து செல்லலாம் இருவரும் ஒன்றாக வேல செய்யலாம் என அவனது கனவுகள் நீன்று கொண்டே போனது .கந்தையரின் கார் பெரியவரின் வீட்டு கேற்றடியில் நிறுத்தியவுடன் ,அவனது கனவும் கலைந்தது.
முன் சீட் காலியானதை தொடர்ந்து அவன் அந்த சீட்டிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட அங்கு போய் அமர்ந்து கொண்டான். அவனது கனவு தொடர கந்தையரின் பேச்சு தடையாக இருந்தது.அவருக்கு சினிமாவும் அரசியலும் அத்துப்படி. 
"டேய் எம்.ஜி ஆரின்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்திட்டியா"
"இல்லை அண்ணே"
"நான் பார்த்திட்டேன் ஓவ்வோரு நாட்டிலயும் ஓவ்வோரு பாட்டுடா.வாத்தியார் இந்த படத்தில பட்டையை கிளப்பிறார்"
"ம்ம் ம்ம் ம்ம்" என அவன் தலையை அசைக்க ,ஒரு பாட்டை விசில் அடிச்சு பாடிக்கொண்டே காரை ஒட்டினார்.
வீடு வந்தவுடன் பொக்கற்றிலிருந்த காசை எடுத்து கந்தையரிடம் கொடுத்தான்.காசை எண்ணிப்பார்த்த கந்தையர் தலையை சொறிந்தபடி
"தம்பி காசு காணது இன்னும் ஒரு 10 ரூபாவை வாங்கி தாரும்"
"ஏன் அண்ணே நீங்க முதலில் சொன்னது இவ்வளவுதானே"
"நான் நினைச்சன் போனவுடனே திரும்பி வாரது என்று ஆனால் நின்று வந்தபடியால் கொஞ்சம் கூட வாங்கி தாரும்"
உள்ளே சென்ற பாமினி பத்து ரூபா தாளை சுரேஸிடம் கொடுத்தாள் அவன் அதை வாங்கி கந்தையரிடம் கொடுக்க அவர் பல்லை இழித்தபடி வாங்கி கொண்டார். நெடுகளும் வேலி அடைக்க வேண்டியிருக்கு இந்தமுறை தகரத்தால் அடைத்துவிடுவோம் என சுரேஸின் வீட்டுகாரரும் பக்கத்து வீட்டுக்காராரும் முடிவெடுத்தனர்.இனிமேல் நீ அதிகம் பக்கத்துவீட்டை போகதே என அம்மா சொல்லிவிட்டார்,ஒம் என்று தலையை ஆட்டிவிட்டு ஏன் என்ற கேள்வியை கேட்காமல் விட்டுவிட்டான் மனதில் ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது அவனுக்கு .முதல்நாள் அவன் சாந்தினியை பார்த்து புன்னகைத்ததின் எதிரொலியோ எண்ணிகொண்டான்.
இப்பொழுது பக்கத்து வீட்டு அண்ரி உதவிகளுக்கு இவனை கூப்பிடுவதில்லை.பாமினியும் யாழ்பல்கலைகழக்த்தில் அனுமதி கிடைத்து அங்கு நிரந்தரமாக இருந்து படிப்பதற்கு சென்றுவிட்டாள் .
.சாந்தினியும் சாலினியும் சைக்கிளின் தனியாக செல்வார்கள் .துணைக்கு அவர்களுக்கு தம்பிமார் தேவைப்படவில்லை.சாந்தினி அந்த நால்வரிலும் அழகானவள் அத்துடன் நிறமும் .சின்ன வயதிலிருந்தே சுரேஸுக்கு அவள் மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது .
"மச்சான் இப்படியே ஒருதலை காதலில் இருந்தால் யாரும் கொத்திகொண்டு போய்விடுவாங்கள் சோதனை முடிஞ்சுதுதானே போய் கதையடா" என்றார்கள் நண்பர்கள். துணிவே துணை என்று போட்டு சுரேஸ் கிட்ட போனான் அதற்குமுதல் அவள் சைக்கிளை திருப்பிகொண்டு சென்றுவிட்டாள் .சிறிது காலம் சுரேஸ்நிற்க்கும்பொழுது அவள் வெளியே வருவதில்லை .அப்படி எதிர்பாரதவிதமாக கண்டு கொள்ளவேண்டி வந்தாலும் மூன்றாம் நபர் போன்று சென்றுவிடுவாள்.சுரேஸும் தொடரவிரும்பவில்லை.சுரேஸ் கன்னிமீசையை இன்று வரை முழுவதுமாக எடுக்கவில்லை,தேவை ஏற்படும்பொழுது கிளிப்பண்ணிகொள்வான். ...சிறுது காலம் தாடி வைத்திருந்தான் வெளிநாடு செல்வதற்காக தாடியை மட்டும் எடுத்திருந்தான்.
முப்பதைந்து வருடங்களின் பின்பு கண்ணாடியை பார்த்தபடி மீசையை தடவிகொண்டே சிரித்துகொண்டிருந்த சுரேசைப் பார்த்த மனைவி
" அவள் சொன்னதை கேட்டு இப்ப இளமை ஊஞ்சலாடுதோ?"
"இல்லையடி ஆத்த பெண்களை பற்றி இன்னும் எனக்கு புரியவில்லை"
"இனி புரிஞ்சு என்னத்தை பண்ணப்போறீயள் போய் போர்த்து கொண்டு பாடுங்கோ"
அன்று மாலை நண்பனின் உறவுவினர் லண்டனிலிருந்து வந்திருந்தமையால் இவனை விருந்துக்கு அழைத்திருந்தார்கள்.குடும்பமாக சென்றிருந்தான்.பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தனர் .ஆண் பெண் வேறு பாடின்றி முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
"இவன் சுரேஸ் என்ற பிரண்ட்,இது அவனது மனைவி "இருபகுதியினரும் கை குலுக்கி கொண்டனர்.
"சுரேஸ் புரோம் மானிப்பாய்"
"யெஸ் "
"கட்டியணைத்து முத்தமிட்டாள்"
"அதே சிரிப்பு அதே மீசை பார்த்தவுடன் நான் நினைச்சன் நீங்கள் சுரேஸ்சாகதான் இருப்பீங்கள் என்று"
"நான் சாந்தினி ,உங்கன்ட வீட்டுக்கு பக்கத்திலிருந்த குமுதினி,பாமினிஅக்காவையின்ட தங்கச்சி ,நாங்கள் நாலு பேரும் லன்டனில்தான் இருக்கின்றோம்"



யாவும் சுத்த கற்பனை :D 

Saturday, February 7, 2015

சமூக சேவை


அழைப்புமணி யின் சத்தம் கேட்டு போய் கதவை திறந்தேன் கனகர் வாசலில் நின்றார்.வெளிநாட்டு சம்பிராதயம் பார்க்காமல் பழகிற மனுசன் என்றால் எங்கன்ட கனகர்தான்.தொலைபேசியில் அழைத்து உங்கன்ட வீட்டை வரப்போகிறேன் என்று முன் அனுமதி கேட்டு கனகர் வீட்டை போற பழக்கம் எனக்கும் இல்லை அதேபோல கனகர் என்ட வீட்டை வாறதற்க்கும் முன்னனுமதி கேட்காமல் வருவார்.கனகர் ஒரு சமுகசேவகர் என்று சொல்லலாம் .இளைப்பாறிவிட்டார் அதனால் முழுநேர சமுக சேவையில் ஈடுபடுகிறார்.நானும் பகுதி நேரமாக அவருடன் சமுக சேவையில ஈடு படுவதுண்டு.சமுக சேவை என்றால் நீங்கள் பெரிதாக ஒன்றும் நினைக்க கூடாது.என்ட ஆககூடிய சமுக சேவை எங்கன்ட சனத்திற்க்கு ,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் விற்கிறதுதான்.
அதுவும் ஒரு சமூக சேவை என நானே தீர்மானிச்சு தொடர்ந்து செய்துகொண்டுவாறன்.ஏன் சமூக சேவை என்றால் கனகரைப் போன்ற இளைப்பாறிய ஆட்கள்,என்னைபோன்ற இளைப்பாற இருக்கின்ற ஆட்களுக்கு தங்களது பொழுதை எப்படி கழிக்கிறது என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாக இருக்கும், இருக்கின்றது என்றுபோட்டுத்தான் நானும் கனகரும் இந்த சமுக சேவையில் இறங்கினோம் .வெளிநாடுகளில் பப்,டப்,கிளப்,மற்றும் விளையாட்டு மைதானங்கள்,தீம் பார்க்,சினிமா என பல களியாட்ட வசதிகள் இருந்தாலும் எங்கன்ட சனத்தோட பொழுதை கழித்தால்தான் ஒரு பூரணதிருப்தி கிடைக்கும் எங்களுக்கு, என்ற ஒரு நல்ல நோக்குடன் இந்த சமுக சேவையில நாங்கள் இறங்கினோம்.
ஏற்கனவே பலர் இந்த சமூகசேவையை செய்யினம் அவையளுக்கு ஒரு ஆதரவு கொடுக்க நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.
இப்படிதான் ஒருநாள் நானும் கனகரும் 'பப்' போயிருந்து பியர் அடிக்க ஒரு வெள்ளை "ஹாய் மயிட்" என்றான் கனகரும் பதிலுக்கு ஹாய் என்றுபோட்டு பியரை உறிஞ்ச பக்கத்தில நின்ற வெள்ளை தன்னுடைய நண்பனுடன் இரண்டு ஆங்கில தூஷண வார்த்தை பாவிக்க கனகர் கடுப்பாயிற்றார்.உதுக்குத்தான் நான் உவங்களின்ட இடத்துக்கு வாறதில்லை என கதிரையை தள்ளிபோட்டு வெளிவந்திட்டார். நானும் அவருக்கு பின்னால வந்திட்டன். அதற்கு பிறகு அவர் "பப் பக்கம் தலை வைச்சு படுக்கிறதில்லை"
இன்னோரு நாள் டப்புக்கு போய் குதிரையில காசை கட்டினோம் நாங்கள் கட்டின குதிரை கடைசியாக வந்தது.தொடர்ந்து இரண்டு நாள் போய் பணத்தை இழந்த பின்பு தொடர்ந்து போவதை நிறுத்திக்கொண்டோம்.
கொல்வ் கிளப்,போலிங்க் கிளப்,கிரிக்கட் கிளப் என சகல கிளப்பிலும் அங்கத்துவராக சேர்ந்து கொண்டோம். இப்படித்தான் ஒரு கிரிக்கட் கிளப்பில சினேக பூர்வமான ஒரு மட்ச் விளையாட வெளிக்கிட்டோம் ,கனகர் மற்றவன்கள் விளையாடும் பொழுது மைதானத்திற்க்கு வெளியே நின்று கொண்டு கொமான்ட் கொடுத்துக்கொண்டிருப்பார் .லெக்கில் போடு,ஒவில் போடு என பந்துவீச்சாளருக்கும்.ரைட்டில் அடி லெவ்டில் அடி என துடுப்பாட்ட காரருக்கும் கட்டளை போடுவார்,ஆனால் அது அவர்களுக்கு புரியாது ஆனால் மைதனத்திற்க்கு வெளியே கனகருக்கு பக்கத்தில் நிற்பவர்களுக்கு மட்டும் விளங்கும்,அத்துடன் கனகர் சகல மட்ச்களையும் பார்த்து கிரிக்கட்டில் கலாநிதிபட்டத்திற்க்கு தகுதி உடையவர் என்று சொன்னால் மிகையாகாது. தொலக்காட்சியில் ஒரு ஆட்டத்தை பார்க்கும் பொழுது பிரபல அவுஸ்ரேலியா ஆட்டக்காரன் விளையாட மட்டையை தூக்கினான் பந்து நேரடியாக விக்கட்டில் பட்டு அவுட்டாக கனகர் உணர்ச்சி வசப்பட்டு ,ஆங்கிலத்தில் திட்ட தொட்டங்கிவிட்டார் அவன் ஓவ்வில் போடுறான் உவன் விசரன் மட்டையை தூக்கி விலாசமல் சும்மா அவுட்டாகிவிட்டான் இடியட் ..இப்படி பல விமர்சனங்களை கனகர் வைப்பதை பார்த்து நானும் வேறு சில வயசு போன வெள்ளையும் கனகர் விசயகாரன் என நினைத்து அவரை எமது டீம்மில் சகலகலா வல்லவன் என நியமித்தோம் .அதாவது துடுப்பாட்டம்,பந்துவீச்சு இரண்டும் தெரிந்த வீரன் என முத்திரை குத்தினோம்.
அடுத்து விளையாடிய நாலு மட்சிலும் கனகர் ஒரு ஒட்டமோ,விக்கட்டோ எடுக்கவில்ல.இந்த அவமானத்தால் அவர் தொடர்ந்து தான் டீம்மில் இருக்கவிரும்பவில்லை என விலகி கொண்டார்.அவருக்கு பக்க பலமாக நானும் விலகி கொண்டேன்.
சின்ன வயசிலயிருந்து விளையாடிய வெள்ளைகளுடன் எங்களுக்கு இடு கொடுக்க முடியாத நிலையில் தொடர்ந்து இந்த கிளப்புக்களுக்கு போவதை தவிர்த்து கொண்டோம்.இப்படியான கசப்பான அனுபவங்களினால் எங்கன்ட சனத்திட்ட எங்கன்ட திறமையை காட்டி பொழுதை களித்து கொள்ள த்தான் நாங்கள் இந்த சமுக சேவையில் கடந்த பத்து வருடமாக ஈடுபடுகிறோம். ஆரம்ப காலங்களில் எங்கன்ட சமுக சேவைகள் மக்களிடையே எடுபடவில்லை ,ஆனால் கடந்த ஐந்து வருடமாக சனத்திடம் நல்ல வரவேற்பு கிடைக்குது. சமுக சேவை விடயமாகத்தான் இப்ப கனகர் என்ட வீட்டை வந்தவர் .
"வாறசனிக்கிழமை ...முழக்கம்,அதற்கு அடுத்த சனி .....இன்னிசை,ஞாயிற்றுக்கிழமை....பன் விழா.,நடக்க இருக்குது இந்தா டிக்கட்" என மூன்று டிக்கட்டை கிழித்து தந்தார்.
"இப்ப எங்கன்ட் சனம் ஞாயிற்றுக்கிழமையிலும் புரோகிறம்களை வைக்குது ,அடுத்த நாள் வேலைக்கு போகவேணும் அண்ணே"
"அது பத்து மணிக்கு முடிஞ்சிடும் நீ டிக்கட்டை பிடி"
"உங்களுக்கு என்ன ரிட்டயர் பண்ணிட்டியள் சொல்லிவியள்"
"நீ மட்டும் என்ன இப்படியே மார்க்கண்டேயர் மாதிரி இருக்கப்போறீயே "
"சரி அண்ணே,உங்களோட கதைச்சு காலத்தை தள்ளஏலாது இப்ப எவ்வளவு காசு நான் தரவேணும்"
"நான் உன்னட போனமாதம் எடுத்த டிக்கட்டுக்கு காசு தரவில்லை அதை இதில கழிச்சு விடு"
இப்படித்தான் எங்கன்ட டிக்கட் வியாபாரம் பண்டமாற்றிலயே போய்விடும்.
இலவச நிகழ்ச்சிகளையும் நாங்கள் விட்டு வைப்பதில்லை.கனகருக்கு இரவு நேரங்களில் கார் ஒடுவதற்கு கண் தெரியுதில்லை என்று சகல நிகழ்சிகளுக்கும் என்னோடுதான் வாறவர்.பக்கதிலிருந்து சிட்னி விடுப்புக்கள்,தன்னுடைய வீட்டு விடுப்புக்களை சொல்லி கொண்டு வருவார்.சில நேரத்தில மனுசன் அரைவாசி கதையை சொல்லி போட்டு கொரட்டை விட்டு நித்திரை கொள்வார்.அண்ணே என்ன நித்திரையோ என்று கேட்டா சீ ,சீ சும்மா கண் அயர்ந்து போய்யிட்டேன் என்பார்.
கனகரை கோயிலில்தான் முதல்முதல் சந்திச்சனான்.கோவில் வாசலில் நின்ற கனகர் "தம்பி எந்தப்பக்கம் போறீர்"
"பென்டில் கில் போரன்"
"என்னை ஒருக்கா அங்க இறக்கி விடுவீரோ ,கடையில இடியப்பம் வாங்க வேணும்"
"சரி வாங்கோ"
"தாங்க்ஸ் டா தம்பி"
காரில வந்து ஏறினவுடன்.முருகா உனக்குதான் நன்றி சொல்ல வேணும் இந்த வெய்யிலில் எப்படி போறது என்று நினைச்சு கொண்டு நிற்கும்பொழுது நீ தான் இந்த தம்பியை எனக்கு காட்டினனீ....என்ட பெருமான் முருகன் என்னை கைவிடமாட்டான்....இப்படி முருகனுக்கு நன்றிகடனை சொல்லிபோட்டு தனது பேச்சை தொடங்கினார்.
"தம்பி யாழ்ப்பாணம் தானே"
"ஓம் எப்படி கண்டுபிடிச்சியள்"
"உம்மட கதையில தெரியுதுதானே,யாழ்ப்பாணத்தில எவ்வடம்"
"மானிப்பாய்"
"மானிப்பாயோ! மருதடிக்கு பக்கத்திலயோ "
"இல்லை பள்ளிக்கூடத்திற்கு முன்னாலா, நீங்கள் மானிப்பாயோ"
"சீ சீ நான் கோண்டாவில் ,என்ட ஒன்றைவிட்ட அக்கா அங்கதான் கலியாணம் கட்டினவ,ஒவசியர் சிவப்பிரகாசத்தின் மகனைத்தான் கட்டினவ ஆட்களை தெரியுமோ?"
"ஓமோம் தெரியும் அவையள் என்ட சொந்தகாரர் "
"பிறகென்ன நீர் என்ட சொந்தகாரார் நல்லதாய் போச்சு"
இப்படிதான் எங்களது அறிமுகம் 10 வருசத்திற்கு முதல் தொடங்கினது இப்பவும் தொடருது.நாட்டில எப்ப பிரச்சனை முடியுதோ அப்ப திரும்பி நாட்டுக்கு போய்விடுவேன் உவங்கன்ட நாட்டில ஒரு நாளும் இருக்க மாட்டேன் ,அங்க போய் எங்கன்ட சனத்திற்கு சமூகசேவை செய்ய வேணும் என்று சொன்ன கனகர் இன்னும் நாட்டுக்கு போகவில்லை.சிட்னி தமிழருக்கு சமூகசேவை செய்யிறார்.
கோவில் கொமிட்டியிலும் அங்கத்துவராக இருக்கின்றார்.கனகர் மகனுடன் இருந்தாலும் எதாவது உதவிகள் வேணுமென்றால் என்னிடம்தான் கேட்பார்.
சைவமும் தமிழும் எங்களுடைய இரு கண்கள் என்றும் அதை புலம் பெயர்ந்த பிரதேசத்திலும் எமது சந்ததிக்கு புகட்ட வேணும் அதற்காகத்தான் அவர் கோவில் கொமிட்டியிம் அங்கத்துவராகவும்,தமிழ்பாடசாலையில் ஆசிரியர் தொழில் ஈடுபடுவதாக சொல்லிக் கொள்வார்.
தம்பி நீ உன்ட பிள்ளைகளை தமிழ் பாடசாலைக்கு அனுப்பும் .நாங்களே தமிழை படிக்காவிடில் வெள்ளையோ வந்து தமிழ்படிக்க போகுது என்று ஒரு நாள் ஆதங்கப்பட்டார்.
" என்னுடைய இரண்டு மகள்மாரும் உயர்தரத்தில் தமிழ் எடுத்து சித்தியடைந்திட்டினம் ,உங்கன்ட பேரப்பிள்ளைகள் எப்படி தமிழ் கதைப்பினமே?"
".சும்மாபோடம்பி அவள் தாய்காரி என்ட மருமகள் வீட்டிலயே தமிழில் பேசமாட்டாள் பிறகு எப்படி பிள்ளைகள் தமிழில் கதைக்கபோகுது?தமிழில் பேசினால் ஆங்கில உச்சரிப்பு வடிவாக வராமாட்டுதாம் என்று போட்டு தான் குடும்பமே ஆங்கிலத்தில பேசுதுகள்,அதுசரி உன்ட பிள்ளைகள் இங்கயே பிறந்தவை "
"ஒமோம் இங்கதான் பிறந்தவை,அவர்கள் தமிழ்பாடாசலைக்கு மட்டுமல்ல ,அதுகள் சைவபாடசாலைக்கும் சின்னனிலிருந்து போனதுகள்,தேவாரமும் நல்லாய் பாடுவினம் ,"
"என்ட பேரப்பிள்ளைகளை மருமகள்காரி சாய் பஜனுக்கு கூட்டிக்கொண்டு போறவ ,அதுகள் தெலுங்கு பஜனையும் ,ஹிந்தி பஜனையும் நல்லாய் பாடுங்கள்,அவையளுடன் சேர்ந்து மகனும் ,மருமகளும் பஜனை பாடுவினம்"
"அப்ப குடும்பத்திற்கே ஹிந்தி தெரியும் என்று சொல்லுங்கோ,"
"சும்மா போடாம்பி அதுகள் இங்கிலிஸில வசனத்தை எழுதிவைச்சிட்டு அங்க போய் இருந்து பாடுதுகள்"
"என்ன அண்ணே நீங்கள் தமிழும் சைவமும் நம் இருகண்கள் என்று சமுகசேவை செய்யிறீங்கள் ஆனால் உங்கன்ட வாரிசுகள் தெலுங்கும் சாய்ராமும் நம்மிரு கண்கள் என்று திரியினம்,,,அண்ணே இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுத்த ஆறு பிள்ளைகள் மருத்துவ பீடத்திற்கு தெரிவிசெய்யப்பட்டிருக்கினம்....என்ற செய்தியை.உங்கன்ட மருமகளிட்டையும் மகனிட்டையும் சொல்லுங்கோ...," 

Wednesday, November 26, 2014

வித்தியா வீட்டுச் செல்லம்

மீண்டும் வசந்தகாலம் மரம் ,செடி, கொடி பூத்து குலுங்க தொடங்கிவிட்டன.வீட்டுத்தோட்டம் வைக்கும் சிட்னிவாழ் பெரும் குடிமக்கள் தங்களது முயற்சியில் தீயா வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.அவர்கள் தீயா வேலை செய்வதைப் பார்த்து சுரேஸும் கொஞ்சம் மிளகாய் கன்றுகளை வாங்கி வந்து நடத்தொடங்கினான். சுரேஸின் நடமாட்டத்தை அறிந்த பின் வீட்டு நாய் குரைத்தது.உடனே நாயின் உரிமையாளர் ஆங்கிலத்தில் நாயைவிட அதிக சத்தத்தில் குரைக்க நாய் குரைப்பதை நிறுத்தியது. மீண்டும் குரைக்க தொடங்க ஆத்திரமடைந்த சுரேஸ் "ஏய் நாயே நானா, நீயா இந்த ஏரியாவுக்கு முதல் வந்தது"உரத்த குரலில் கத்தியவன் ஊரா இருந்திருந்தால் பொட்டுக்குள்ளால் பூர்ந்து வந்து உன்ட காலை அடிச்சு நொருக்கியிருப்பேன் என் மனதில் திட்டியபடியே மிளகாய் கன்றுகளை நடத்தொடங்கினான்.
நாய் மீண்டும் குரைக்காமையால் ,தனது திட்டலுக்கு பயந்து விட்டது, தமிழ் அறிந்த நாயாக்கும் என எண்ணி சிரித்துக்கொண்டான்.

"பிராவுனி" ஊரில அவன் வளர்த்த நாயின் பெயர் .பெயர் மட்டும் ஆங்கில பெயர் ஆனால் தெருநாய்.முற்சந்தியில் யாரோ மூன்று குட்டிகளை கொண்டுவந்து விட்டிட்டு போய்விட்டார்கள் .இவன் ஆசைப்பட்டு ஒன்றை தூக்கி வந்துவிட்டான்.நாய்குட்டியின் முனகலை கேட்ட தாயார் 
"தம்பி யாரப்பு உதத் தந்தது" 
"சந்தியில நிண்டது நான் பிடிச்சிட்டு வந்தனான் அம்மா"
"அது பெட்டை நாய்குட்டியாக இருக்கும் அப்பு ,பிறகு குட்டி போட்டுதென்றால் கரைச்சல் நீ அந்த இடத்திலயே விட்டப்பு"
"அம்மா ....பிளிஸ் அம்மா நான் வளர்க்க போறன்"
நாய்குட்டியை தூக்கி பார்த்த தந்தை, இது கடுவன் ஆசைபடுகிறான் வைச்சிருக்கட்டுமன் என அவனுக்கு ஆதரவு குரல் கொடுக்க தாயார் தலையை ஆட்டி அனுமதிகொடுத்தார். அம்மா அந்த நாயை வளர்ப்பத்தற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.நாயை வீடுக்குள் விடக்கூடாது,நாயை தொட்டு விளையாடிய பின்பு கை கழுவிய பின்புதான் வீட்டுக்குள் வர வேண்டும்
குசினிக்குள் சென்று நாய்க்கு சாப்பாடு,தண்ணிர் வைப்பதற்காக கோப்பைகளை தேடிக்கொண்டிருந்தான் .
"என்னப்பு குசினிக்குள் சத்தம் கேட்குது உன்ட நாய்குட்டி உள்ள வந்திட்டுது போல கிடக்கு,பிடிச்சு வெளியால விடு"
"அது நான் அம்மா, சாப்பாடு வைக்க கோப்பை ஒன்று தேடுறேன் "
"சனம் சாப்பிட கோப்பை இல்லை உனக்கு நாய்க்கு சாப்பாடு வைக்க கோப்பை வேண்டிக்கிடக்கு,சிரட்டையில் சாப்பாடு போடப்பு"
இதற்கு எதிர்கதை கதைச்சால் நிச்சயம் நாய்குட்டியை இழக்க நேரிடும் என்ற காரணத்தால் சிரட்டையிலயே பால்,தண்ணிர் ,உணவுயாவும் கொடுத்தான்..
அம்மாவின் மச்சாள் முறை உறவுக்கார பெண் அத்துடன் அவரின் நெருங்கிய நண்பியும் ஆவார்.
வித்தியா என்ற ஒரு பெண்பிள்ளை உண்டு, சுரேசை விட இரண்டு வயது குறைவு.தாயும் மகளும் ஒன்றுவிட்ட கிழமையாவது சுரேஸின் வீட்டுக்கு வருவார்கள்.வருபவர்களுக்கு எல்லாம் நாய்குட்டியை காட்டுவதுதான் சுரேசின் பொழுதுபோக்கு ,வித்தியாவையும் அழைத்து சென்று நாய்குட்டியை காட்டியவன் பெட்டியினுள் இருந்து வெளியே எடுத்துவிட்டான் ,இதை எதிர்பாரத வித்தியா "அம்மா" என அலறியபடியே வீட்டினுள் ஒடினாள்.
சுரேஸுக்கும் மீசை அரும்பி வயசுக்கு வர,வித்தியாவும் பருவமடைய அவர்களுடன் சேர்ந்தே நாய்குட்டியும் நாயாகிவிட்டது.வித்தியா சுரேஸின் வீட்டை வருவதை குறைத்துக்கொண்டாள்.பிரவுனி ஒருநாள் வீதியை கடக்கும் பொழுது பஸ்வண்டியில் அடிபட்டு இறக்க கவலையுடன் இருந்த சுரேஸை,"மனிதனே சாகிறான் நீ உந்த நாய்க்கு போய் கவலை படுகிறாய்,இழுத்து கொண்டுபோய் தேசிக்காய் மரத்தடியில் தாட்டுவிடு மரம் நல்லாய் காய்க்கும்" என்றார் தந்தை .அடுத்த ஆண்டு மரம் நல்லாய் காய்க்க தொடங்கியது.

அம்மா சில காய்களை பொறுக்கி அவனிடம் மச்சாள் வீட்டை கொடுக்கும்படி கூறினாள்.அவனுக்குள் ஒருவித கிளுகிளுப்பு அவனை அறியாமலயே உண்டாகிவிட்டது.அவனிடம் இருந்த அழகான ஒரு சேர்ட்டை மாட்டிகொண்டு வித்தியா வீட்டிற்க்கு சென்றான்.வாசலில் இருந்து குமுதம் வாசித்து கொண்டிருந்தவள் 
"அம்மா சுரேஸ் வந்திருக்கிறார் "என்றவள் மீண்டும் தனது கதை புத்தகத்தில் மூழ்கிவிட்டாள் வெளியே வந்த தாயார் அட தம்பி சுரேஸ் உள்ள வாவேன்.
வாசல்லிருந்தவளை பார்த்துகொண்டிருக்கும் பொழுது அவளது தாயார்
"வித்தியா தம்பியை சுரேஸ் என்று கூப்பிடக்கூடாது அவர் உனக்கு அண்ணா முறை" என்றாள்
"அன்ரி அம்மா இதை உங்களிட்ட கொடுக்க சொன்னவ "
"என்னது தம்பி"
"வீட்டு மரத்து தேசிக்காய் ,நான் போயிற்று வாரன்" வந்த வேகத்தில் வீடு திரும்பினான்.....பாய் சுரேஸ் அண்ணா என்ற குரல் நக்கலா, நளினமா, காதலா என்று தெரியாமல் வித்தியா கலியாணம் கட்டி வெளிநாடு செல்லும் வரை ஏக்கத்துடன் இருந்தான்.
வித்தியாவுக்கு இரு ஆண்பிள்ளைகள் வெளிமாநில பல்கலைகழகத்தில் பயில்கின்றனர்.கணவனும் ,தாயாரும்,செல்லமும்தான் அந்த பெரிய வீட்டில் குடியிருக்கின்றனர்.
அடிக்கடி வித்தியாவின் தாயாரை பார்ப்பதற்க்கு வீட்டை சென்றுவருவான் .அவள் இப்பவும் சுரேஸ் அண்ணா என்றுதான் அழைப்பாள்.தாயார் வயது போனாலும் மிகவும் துடிப்பாக தனது வேலைகளை கவனித்துகொள்வார்.

வித்தியாவின் மாமா இவர்களுடன் ஊரில இருந்தவர் பின்பு அவுஸ்ரேலியா வந்தவுடன் அவரையும் இங்கு அழைத்திருந்தார்கள். அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சுரேஸை அழைப்பார்கள் . சுரேஸ்,மாமா,வித்தியாவின் கணவர் மூவரும் ஒன்றாக இருந்து உற்சாக பாணம் அருந்துவது வழமை இருவருடங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார்.
" சுரேஸ் அண்ணா இன்றைக்கு யாரின்ட பிறந்த நாள் சொல்லு ங்கோ பார்ப்பம்"
"மாமாவின்ட"
"செல்லத்தின்ட பிறந்த நாளும் அவரின்ட பிறந்த நாளும் ஒரே நாள்"
"மாமாவை மாதிரித்தான் இவனும், சாப்பாடு நேரத்திற்கு கொடுக்காவிட்டால் கோபம் வந்திடும்,செல்லம் வாடா சாப்பிடுவம்" என தூக்கி அரவணத்தபடியே விலையுயர்ந்த சில்வர் கோப்பையில் ,அலுமாரியிலிருந்த பெட்டியை திறந்து அதனுள் போட்டவள் ,செல்லம் சாப்பிடடா என வயிற்றை யும் முதுகையும் தடவிக்கொடுத்தாள்.
அம்மாவுக்கு ஒரு கிஸ் தாடா ,அப்பா எங்கயடா? அவரை காணவில்லை அதுதான் தேடு,என அவனின் செயல்களுக்கு அவளே விளக்கம் கொடுத்துகொண்டிருந்தாள் .கார் வந்து நின்ற சத்தம் கேட்டு பாய்ந்து ஒடியவனை வாடா வாடா அப்பா உள்ள வருவார்.அப்பாவை கண்ட செல்லம் அவர் மேல் பாய்ந்து தாவிக்கொண்டது.அவரும் அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்க அதுவும் ஒரு முத்தம் கொடுத்தது. அப்பா வாங்கி வந்த விளையாட்டு பொருளை வெளியே எடுத்து கிலுக்கி காட்டவே பாய்ந்து வாங்கியவன் வீட்டை சுற்றி சந்தோசத்தில் ஒடிவந்தான் .
"ஹலோ சுரேஸ் "
"ஹாய் விமல்"
செல்லத்தை மடியில் வைத்து தடவியபடியே 
"வித்தியா இவனின்ட ரெயினிக் நாளைக்கு இருக்கு ,பிறகு டொக்டரிட்ட அப்பொயின்ட்மன்ட் இருக்கு,மறந்திடாமல் அவனின்ட சாப்பாட்டையும் வாங்கி கொண்டு வர வேணும்"
"எல்லாத்துக்கும் முதல் செல்லத்தை குளிப்பாட்ட அவங்கள் வருவாங்கள் ,செல்லத்துக்கு குளிக்கிறது என்றால் நல்ல விருப்பம்,என்னடா செல்லம் "வினாவியபடியே செல்லத்திற்க்கு முத்தமிட்டாள் வித்தியா.
ஐந்தாறு குடும்பம் பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தனர் .கப்பி பேர்த்டெ பாடி கேக் வெட்டினார்கள்.கேக் செல்லத்திற்க்கு தித்தி முத்தமும் இட்டனர் விமல் தம்பதியனர்,அத்துடன் பாட்டியும் தந்து பங்குக்கு முத்தமும் கேக்கும் கொடுத்தாள். செல்லத்தின் நண்பர்கள் ஒருத்தரும் அங்கு வரவில்லை.நண்பர்களின் பெற்றோர்களும்,காவலர்களும் தான் வந்திருந்தனர்.
இன்று மாமாவின் பிறந்த நாள் அதே நாள் இவனின்ட பிறந்தா நாளும்,......மாமா எங்களுடன் நல்ல பாசமாய்யிருந்தவர் பாவம் செத்து போயிட்டார்".
"இப்ப என்ன வித்தியா சொல்லுறீர் மாமா ,நாயாக மறுபிறப்பு எடுத்திருக்கிறார் என்றொ"
"ஒம் அண்ணே எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.இவனின் செயல்கள் எல்லாம் அப்படிதான் இருக்கிறது"
" உமக்கு ஞாபகம் இருக்கே 30வருசத்திற்கு முதல் என்ட வீட்டு நாய்குட்டி உம்மட காலை நக்க வர அலறிஅடிச்சு கொண்டு அம்மாவிடம் ஒடிப்போனது, இப்ப என்னடா எனற நாய்குட்டிக்கு முத்தமிடுகின்றீர்"
"அப்ப நான் சின்ன பிள்ளை மற்றது அது தெருநாய்"
"அடுத்த பிறவி அவுஸ்ரேலியாவில் நாயாக உம்மட வீட்டில பிறக்க வேணும் ."சுரேஸ் சொன்னதை கேட்ட நாய் ஒரு பார்வை பார்த்து குரைத்தது.அந்த குரைப்பும் பார்வையும் டேய் உனக்கு என்ன விசரா என்ற மாதிரி இருந்தது.
நீங்களும் உங்கன்ட நாய்களை கூட்டிகொண்டு வந்திருந்தால் அதுகளும் ஒடிப்பிடிச்சு ,ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்குங்கள்.தங்களுடைய இச்சைகளையும் தீர்த்திருக்குங்கள் என்றான் சுரேஸ்.
"அதுகளுக்கு டிசெஸ் பண்ணியாச்சு"அண்ணே
"அட கடவுளே இவ்வளவத்தையும் கொடுத்து அதுகளின்ட பொறுத்த இடத்தில கைவச்சிட்டிங்களே"
இப்படி சுரேஸ் சொன்னதை கேட்ட செல்லம் துள்ளி குதித்து ஒடி வந்து சுரேஸின் காலில் விழுந்து "ஊ ஊ ஊ ,வவ்,வவ்"
ஆயிரம் இருந்தும்,வசதிகள் இருந்தும் no அது 
செல்லத்தை குனிந்து முதுகில் தட்ட அது மீண்டும் "ஊ.....ஊ......வவ்.........வவ் ........ஊ....ஊ"
ஊரில் தெருநாய்க்கு இருக்கிற அந்த சுதந்திரம் இங்க இல்லை நீ அவுஸில் நாயாக பிறக்க போறாயா ,ஊரில தெருநாயாக பிறக்கபோறீயா என்று கேட்பது போலிருந்தது.தொடர்ந்து அங்கிருந்தால் நாய் பாஷை யில் பாண்டித்தியம் கிடைத்துவிடும் என பயந்து வீட்டுக்கு புறப்பட தயாரானான்.
அவன் போக வெளிக்கிட மீண்டும் செல்லம் "வவ் ,வவ் ஊஊ"
"யாராவது வந்திட்டு போக வெளிக்கிட்டா எங்கன்ட செல்லத்திற்க்கு விருப்பமில்லை, அங்கிள் போயிட்டு பிறகு வருவார் அங்கிளுக்கு பாய் சொல்லு"

அட கோதாரி ,அவுஸ்க்கு வந்து நாய்க்கு அங்கிள் ஆனதுதான் மிச்சம். நல்ல வேலை மனிசி பிள்ளைகள் வரவில்லை வந்திருந்தால் ......"வவ் ஊ" :D
என நினைத்தபடி காரை ஸ்டார்ட் பண்ணினான்.....