Saturday, May 15, 2010

ஒபமாவும் கறுப்பன் தானே

கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள்."அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார். ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில செஞ்சிலுவை சங்கம் விட்டிட்டு போயிட்டுதாம் பெடியங்கள் என்ன செய்ய போறாங்களோ தெரியவில்லை,பெடியங்கள் உள்ள இழுத்திட்டு நல்ல செம்மையா கொடுக்க போறாங்கள் போல தான் இருக்கிறது என்றவர்,பிரசாதம் வழங்கும் இடம் வரவே தம்பி இரண்டு பிளேட் தாரும் மனிசிக்கு கால் ஏலாது அது தான் நான் எடுக்கிறன் என்றவர் பிரசாதம் போடுவரிடம் தம்பிக்கு கடலையும்,வடையும் இரண்டு இரண்டு போடுங்கோ அவளும் பொங்கலையும் போட வேண்டாம் எனக்கு "சுகர்" பிரசாதத்தை பெற்று கொண்டு சுரேசிடம் தொடர்ந்து தனது அலசலை ஆரம்பித்தார். என்னடப்பா கிரிகட்டில இந்தியாவிடம் அடி வாங்கிறாங்கள் போல ஆஸி,நான் இந்தியாவிண்ட பக்கம் தான் அவங்க எங்களிண்ட ஆட்கள்,தெற்காசியகாரன் தானே எங்கண்ட நிறம் தானே அவங்களும்.தம்பி சுரேஷ் அமெரிக்காவிலும் எங்களிண்ட ஆள் தான் ஜனாதிபதியா வந்திட்டான் எனி எங்களுக்கு நல்லம் என்று தான் நினைக்கிறேன்,என்றவறை பார்த்த சுரேஷ் "ஒபமா எங்களின்ட ஆளோ" என்று ஆச்சரியமா கேட்டான்.பின்ன அவனும் கறுப்பன் தானே அது போக சிறுபான்மை இனத்தவன் அமெரிக்க வெள்ளையன் சரியான "றேசிஸ்ட்" நான் போன கிழமை தான் வந்தனான் நியுயோர்க்,கலிபோர்னியா போய் அங்கிருந்து பிறகு கனடாவிற்கும் போயிற்று தான் வந்தனான் அதனால் அமெரிக்ககாரனை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.இன்றைக்கு நான் கோவிலிற்கு வந்த முக்கிய காரணம் கனடாவில என்ற சிநேகிதனின்ட மகன் கணணி துறையில கொன்சல்டனா இருக்கிறான் அவன் இன்டநெட் சட்டில எங்களிண்ட சிட்னியில இருக்கின்ற தமிழ் பெட்டையை கொழுவி போட்டான்.தகப்பன் படத்தை காட்டினவர் கொஞ்சம் கறுப்பா தான் இருந்தது அது தான் இங்க வந்தனான் அந்த பெட்டையை ஒருக்கா பார்க்க.பெட்டையை நேரில கண்டனான் படத்தில பார்த்ததை விட கறுப்பா இருக்குது எனக்கு அவளவாக பிடிக்கவில்லை அது தான் என்ற நண்பனுக்கு போனில சொல்ல வேண்டும் இந்த பெட்டையிண்ட நிறம் உண்ட மகனின்ட நிறத்திற்கு சரி வராது என்று.நான் சொல்லுறதை சொல்லி போடுவன் எனி மிச்சம் அவையின்ட இஷ்டம்.தம்பி சரி நீர் இரும் பிறகு சந்திபோம் அப்ப நான் வரட்டே என்று விடைபெற்றார் கந்தர்.வாங்கிய பிரசாதத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டடினான் சுரேஷ்.

No comments:

Post a Comment