Monday, December 31, 2012

நாங்கள் யாழ்ப்பாண‌த்தார் (we are from Jaffna)

பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்க வேண்டும் பிறகு நேரம் கிடைக்காது இப்ப வாங்கோ என்று அதிகாரம்கலந்த பாசத்தோடு அழைத்தான்.போங்கோ பிள்ளை அப்பா கூப்பிடும் பொழுது போய் படியுங்கோ அப்பதான் சாய்பிரியாவை விட அதிக புள்ளி எடுக்கலாம் . போனமுறை சாய்பிரியா கேடயம் எடுத்தவ இந்த முறை நீங்கள் எடுக்க வேணும் என அம்மா வேறு அவளை நச்சரித்தாள் .சாய்பிரியாவின் அம்மாவும் இவளின் அம்மாவும் ஒன்றாக யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள்
பெரியவளுக்கு அந்த வயசில் போட்டிகள் கேடயங்கள் எதைப்பற்றியும் தெரியாது.

அப்பாவும் அம்மாவும் தன்னை படிக்க வற்புறுத்துகிறார்கள் என்று எண்ணியபடியே கேள்விகொத்தொடு வந்தாள் .,வரும் பொழுதே “தங்கச்சி மட்டும் விளையாடுகிறா நான் மட்டும் படிக்க வேண்டும் கோல் கெர் டு(call her too) ” என்ற படியே வந்து அமர்ந்தாள்.சரி சின்னா நீங்களும் வாங்கோ அடுத்த வருடம் நீங்கள் இந்த போட்டிக்கு போக வேணும் தானே இப்பவே படிச்சால் நல்லம் என்று சொல்லி இருவருக்கும் சுரேஸ் படிப்பித்தான்


சுரேஸ்: 1.கோவிலுக்கு போகும் பொழுது எப்படி போக வேணும்?
சிறுசு:காரில் போகவேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! குளித்து சுத்தமான ஆடை அணிந்து செல்ல வேண்டும்..

சுரேஸ்:2.உணவு உண்ணமுதல் என்ன செய்ய வேண்டும்?
சிறுசு:கை கழுவ வேணும்.
சுரேஸ்:!!!!!!!!!!!!! இறைவனை வணங்கிய பின்பு உண்ண வேண்டும்


அப்பா தங்கச்சி சொன்னது எல்லாம் சரிதானே பிறகு ஏன் நீங்கள் வேறு பதில் கொன்னீங்கள்..
தங்கச்சி சொன்னது சரிதான் ஆனால் சமய போட்டியில இந்த கேள்வி கேட்டால் நீங்கள் புத்தகத்தில் இருக்கும் பதிலை சொல்ல வேணும் சரிதானே.
பிள்ளைகள் இருவரும் ஒம் அப்பா என்று போட்டு தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள்.
போட்டி முடிவடைந்து முடிவுகள் அறிவித்தார்கள் .பெரியவளுக்கு கேடயம் கிடைத்தது .பெற்றோர்கள் சந்தோசப்பட்டார்கள் .சாய்பிரியாவுக்கு என்ன கிடைச்சதாம் என்று பெரியவளிடம் தாய் கேட்டார்.”எனக்கு தெரியாது அம்மா”.தாய்காரியின் முகத்தை பார்த்தியளே உம் என்று வைச்சிருந்தா ,அவளின்ட மகளுக்கு கேடயம் கிடைக்கவில்லை எண்ட ஆத்திரம்தான்.

"சீ சீ அப்படியிருக்காது"
"உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் எதிராக சொல்லாவிட்டால் நித்திரை வராதே"

"சரி சரி உதை விடும்"

பெரியவள் மூன்றாம் வகுப்பு படிக்க தொடங்கியவுடனே சுரேஸும் மனைவியும் அவளது படிப்பில் அதிக அக்கறையுடன் ஈடுபடத்டொடங்கிவிட்டார்கள்.படிப்பு மட்டுமல்ல நீச்சல்,பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம்,வலை பந்தாட்டம்,போன்ற துறைகளிலும் அவளை ஈடுபடுத்தினார்கள்.அவளும் நன்றாக பாடங்களில் சித்தியடைந்தாள் . அக்கா எல்லாப்பாடங்களில் "எ" எடுத்திருக்கிறார் நீங்களும் அடுத்த வருசம் எல்லா பாடத்திலயும் "எ" எடுக்க வேணும் என்றனர் பெற்றோர்.சிறுசும் ஒம் என்று தலை அசைத்தாள்.இருவரும் நன்றாக படித்துகொண்டிருந்தனர்.அதே நேரம் எனைய துறைகளிலும் இருவரும் தங்களால் இயன்றளவில் பிரகாசித்துக்கொண்டிருந்தனர். தங்கச்சியின் குரலை பார்த்தியா நல்லாய் இருக்கு நீயும் அவளை போல பாட வேணும் என தாயார் சொன்னார்.இன்னொரு நாள் அக்கா நல்லா பரதம் ஆடுகிறாள் அவளை பார்த்து நீ வடிவாய் ஆடவேணும் என்றாள்.
"வை யு பிப்பில் ஆர் கொம்பயர் இச் அதர்(why do you people compare us to each other ) "என்றனர் சிறுவர்கள் இருவரும்.

"அம்மாவுக்கு வாய் காட்டாமல் அவ சொன்னதை செய்யவும்"என்றான் அதிகாரத்துடன் சுரேஸ் .

சிறுவர்களின் அந்த கேள்விக்கு பின்பு சகோதரர்களிடையே ஒப்பிடுவதை தவிர்த்து கொண்டனர்.ஆனாலும் அயலவர்களுடன் ஒப்பிடுவதை விடவில்லை.

உயர் வகுப்பு பாடசாலை தேர்வில் சாய்பிரியா அதிக புள்ளி கிடைத்து வேறு பாடசாலைக்கு சென்று விட்டாள் .இதனால் சுரேஸும் அவனது மனைவி யும்பெரும் கவலையடைந்திருந்தனர்.ஆனால் பிள்ளைகள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.காரணம் இவர்கள் செல்லும் பாடசாலைக்கும் சாய்பிரியா செல்லும் பாடசாலைக்கும் பெரிதாக தராதர வித்தியாசம் இல்லை.தராதர வரிசையில் சாய்பிரியாவின் பாடசாலை முதலாவது ,இவர்களது இரண்டாவது.

பிள்ளைகள் இப்ப உயர் வகுப்பு படிப்பதால் எதிர்கருத்து வைப்பதற்கு துணிந்து விட்டார்கள் பெற்றோரும் அதை மெளனமாகவும் சில நேரங்களில் சிரித்தும் சமாளித்து விடுவார்கள்.தாயாரை விட சுரேஸ்தான் பலே கில்லாடி சிரித்து சமாளிப்பதில்.
" பெரிசு ,சாய்பிரியா எத்தனை மாக்ஸ் எடுத்தவ இந்த முறை டெஸ்டில்"
"எனக்கு தெரியாது ,மற்ற ஆட்களின்ட மாக்ஸ்சை (marks)கேட்கிறது நொட் நைஸ்(not nice),மற்றது அவ வேற ஸ்கூல்"

"நீ டெலிபோன் பண்ணி கேட்டிருக்கலாம் நான் படிக்கிற காலத்தில என்ட மாக்ஸ்சை பார்க்க முதல் மற்றவனின்ட மாக்ஸ்சைதான் பார்ப்பேன்"என சொல்லி சிரித்தான் சுரேஸ்.
"யூ பிப்பில் ஆர் சொ ரூட்(you people are so rude) "
"தங்கச்சி இன்றைக்கு பலே ஆட்டத்தில கிறிஸ்டினா நல்லா செய்திருந்தா அவவுக்குதான் முதல் பரிசு கிடைச்சது"
"ஒம் அக்கா நானும் பார்த்தேன் சுப்பேர்ப்(superb)"

" பிள்ளைகள், அவள் நல்லாய் செய்தாள் என்று சொல்லுறீயள் ஏன் உங்களால் செய்யமுடியாமலும்,முதல் பரிசு எடுக்க முடியாமல் போய்விட்டது. அவள் படிக்கிற இடத்தில்தானே நீங்களும் படிக்கிறீயள்"
"கேர் பெரண்ட்ஸ் ஆர் ரஸ்யன்(her parents are Russians) "
"சொ வட் .மனம் இருந்தால் இடம் உண்டு"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"இருவரும் ஒன்றாக செய்தனர்.



"நீச்சலில் முன்வீட்டு சன்டினாவுக்கு பாடசாலையில் முதல் இடம் கிடைச்சிருக்கு ஏன் உனக்கு கிடைக்கவில்லை பிள்ளை"

"சி இஸ் ஒசி கெர்ல்"
"சொ வட், நீயும் இங்கதானே பிறந்தனீ...ஏன் உனக்கு எடுக்க ஏலாமல் போய்விட்டது..."


"!!!!!!!ம்ம்ம்ம் ஐ வில் ரை நெக்ஸ்ட் டைம்(I will try next time)"
"இந்த முறை முயுசிக் கொம்பிடிசன் வருகிறது இரண்டு பேரும் டான்ஸ்க்கும்,முயுசிக்கும் போடவேணும் ,இந்தியன் பெட்டைகள் அனுஸ்காவும் கம்சிகாவும் தான் இந்த முறையும் முதலாவதாக வரப் பார்ப்பாள்லவையள் ஆனால் நீங்கள் தான் இந்த முறை முதலாவதாக வரவேணும்"

" ஒ கொட்(oh god)....ஏன் அம்மா நீங்கள் எல்லாத்தையும் கொம்பிடிசனாக பார்க்கிறீங்கள் ,ட்ரை பண்ணுவோம் இவ் வி கெட் ......."

யார் அம்மாவுக்கு வாய்காட்டிகொண்டு எதிர்த்து கதைக்கிறது என்று கேட்டபடியே சுரேஸ் அங்கு வந்தான்.
"அப்பா ,அம்மா எல்லாத்தையும் கொம்பிடிசனாகத்தான்(competition) பார்க்கிறா ஏன் இப்படி செய்கிறா என்று தெரியவில்லை"

அம்மா மட்டுமல்ல நானும் அப்படித்தான் பிகோஸ் வி ஆர் வ்ரோம் யவ்னா (because we are from Jaffna).எதிலும் ஒரு போட்டியிருக்க வேணும் அப்பதான் முன்னுக்கு வரலாம்.

"நீங்கள் சின்ன வயசில எடுத்த மெடல்கள் ஒன்றையும் இங்க காணவில்லையே அப்பா"
சுரேஸுக்கு உடனே பதில் சொல்ல முடியாமல் போனாலும் சாமாளித்துவிட்டான் ,ஆர்மிக்காரனின் தலையில் பழியை போட்டு தப்பித்துகொண்டான்.மெடல்களை அவன் தொட்டே பார்க்கவில்லை என்பது அவனுக்கே தெரிந்த உண்மை.
"அது எல்லாத்தையும் ஆர்மிகாரன் உடைச்சுப்போட்டான்,அவன்கள் மெடல்களை மட்டுமா உடைச்சாங்கள் எங்களுடைய கல்வியையும் பாழாக்கி போட்டாங்கள் ,ஆனாலும் எங்கன்ட சனத்தின்ட விடாமுயற்சியும் போட்டி மனப்பாங்கும் தான் அழித்தாலும் மீண்டும் முளை விடுகிறார்கள்....அவங்களை"
அப்பா டென்சன்(tension) ஆகிவிட்டார் லெட்ஸ் கொ( lets go),என கூறியவாறு பிள்ளைகள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.

Thursday, November 22, 2012

"காய்....பேய்காய்"


சுரேஸ் கமல்காசனை போல் அழகு என்று சொல்லமுடியாது ஆனாலும் ரஜனியைவிட அழகானாவன்.ஒரு பக்கவாட்டில் பார்த்தால் ரஜனியின் சாயல் தெரியும் இதனால் நாங்களும் இதை சொல்லி அவனை உசுப்பேத்தி விடுவம்.அவனுக்கும் மனதில் ரஜனி என்ற நினைப்பு இருந்தது.யாழ்பல்கலைக்கழகத்தில் கணித துறையில் முதலாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்தான்.ஆங்கில பாடத்திற்க்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஆங்கில டியுசன் வாத்தியிடம் சென்று கொண்டிருந்தான் .உயர்தரம் எடுத்தவுடன் ஆங்கிலம் பேச,எழுத டியுசனுக்கு போறதுதான் அந்த காலத்து வழமை.நானும் அவனுடன் போய் வந்து கொண்டிருந்தேன் .அவன் பல்கலைகழகத்திற்க்கு அருகாண்மையில் அறையில் வாடகைக்கு தங்கியிருந்தான்.படிப்பதற்க்கு அதிக நேரத்தை செலவிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தான். படிப்பதுடன் வேறு சில விடயங்களுக்கும் அது  பின்பு உதவியது என்பது நான் அறிந்த உண்மை...

நான் ஆங்கில டியுசனுக்கு போகமுதல் அவனது அறைக்கு செல்வேன்.பின்பு இருவரும் ஒன்றாக டியுசன் வகுப்புக்கு செல்வோம்.ஆங்கில வகுப்புக்கு போகும் பொழுது கொஞ்சம் அதிகமாகவே இருவரும் அலங்காரத்துடன் செல்வோம்.சுரேஸ் ரஜனியின் ஸ்டைலில் தலைமயிரை குழப்பிவிட்டு பெல்போட்டம் காற்சட்டை ,மேற்சட்டையின் ஒரு பட்டனை கழற்றி விட்டிருப்பான்.கையில் 80 பக்க கொப்பியை சுருட்டி வைத்திருப்பான்.

ஆசிரியருக்கு எங்களின் படிப்பின் அக்கறையைவிட அவரின் பணத்தில் அக்கறை அதிகமாக இருந்தது .அதனால் எங்களது சேட்டைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.பெண்கள் இருக்கும் வாங்குக்கு அருகில் அதிகமாக நாங்கள் போய் இருப்போம்.சில பெண்கள் திரும்பிப் பார்ப்பார்கள் ,சிலர் பார்த்தும் பார்க்காத மாதிரியிருப்பார்கள்,சிலர் பார்க்கவே மாட்டார்கள்.புதிதாக அன்று ஒருத்தி வந்திருந்தால் பார்த்தவுடனே ஒரு இது (காதல் என நல்ல எழுத்தாளர்கள்,வர்ணிக்க கூட்டும் ஆனால் என்னை பொறுத்தவரை அது ஒரு இதுதான்)அவளும் எங்களுக்கு பக்கத்தில் இருந்த வாங்கில் வந்திருந்தாள்.

"மச்சான்  காய் என்னை பார்க்குதடா"

"எந்த காய்"

"புதுசா வந்த காய்"

"என்னை பார்க்குதோ? உன்னை பார்க்குதோ?"
"என்னைட்ட நீ இப்ப அடி வாங்கப்போறாய் காய் என்னைத்தான் பார்க்குதுடா காயை மடக்கலாம் போல கிடக்குது"

நான் பார்த்தேன் காய் உடனே கீழே குனிந்து கொண்டாள்.பார்த்துகொண்டே இருந்தேன் ,எங்களை பார்ப்பதும் உடனே குனிவதாகவும் இருந்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.காய் அவனை பார்த்து கொண்டேயிருந்தாள்.இந்த காய் அந்த காயை மடக்கப்போகுது என்று போட்டு நான் எனது படிப்பை கவனிக்க தொடங்கினேன்.படிப்பு எறுகிறமாதிரி தெரியவில்லை.கல்வி தோல்வியை தழுவ சபலம் வெற்றி பெற்றது.


இந்த காயை விழுத்தாமல் விடுவதில்லை என்றவன் அதற்கான முயற்ச்சியிலும் ஈடுபட தொடங்கினான். பார்ப்பதும் சைக்கிளில் பின்னால் செல்வதுமாக காலம் கடந்துகொண்டிருந்தது.
"என்னடா காயை மடக்கலாம் என்றாய் ,காய் மடங்கிறமாதிரி தெரியவில்லை "

" அடுத்த வகுப்பில் பார் "

அடுத்த வகுப்பில் மிகவும் தயக்கத்துடன் அவளது கொப்பியை கேட்டான்,இன்று வீட்டு வேலை இருக்கு அடுத்த முறை தருவதாக அவள் சொன்னாள். அந்த நாட்களில் ஒரு பெடியன் ஒரு பெட்டையுடன் வகுப்பில கதைத்தால் அது பெரிய விடயம் ,இவன் அந்த பெட்டையுடன்(காயுடன்) கதைத்தது தான் தாமதம்  சிலர் விசில் அடித்தார்கள் வேறு சிலர் கைதட்டினார்கள்.மச்சான் நீ காயை மடக்கிப்போட்டாயடா என எல்லோரும் சொல்ல அவனுக்கு வெட்கம் வரதொடங்கி விட்டது.
அடுத்த கிழமை வகுப்புக்கு வந்த பொழது ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவில்லை இருவரும் படிப்பில் கவனமாக இருந்தார்கள் . நான் மட்டும் அவர்களை கவனிப்பதில் கவனமாக இருந்தேன்.நான் பார்த்த காயை இந்த காய் மடக்கிபோட்டுதே என்ற அதங்கம்தான்.வகுப்பு முடிந்தவுடன் வாட போவோம் என்று அவனை அழைத்தேன்.வழமையாக வகுப்பு முடிந்தவுடன்  அவனது றூமூக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுத்தான் வீட்டை போவேன்.

"மச்சான் நீ போடாப்பா நான் லெட்டா வாரன் ,அவள் சொன்னவள் பெடியங்களுக்கு முன்னாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எல்லோரும் போன பிறகு கொப்பியை வாங்கிகொண்டு வாரன்"

"இப்ப நீ காய் வெட்டுறாய்"

"கோபிக்காதயடா"

"சரி சரி வாழ்த்துக்கள்"
என கூறியபடி நேராக வீடு சென்றேன்.


இரண்டு நாட்கள் கழித்து வீட்டை வந்தான் .அப்ப நாங்கள் ரோட்டில் நின்றுதான் கதைப்போம் ,சகோதரிமார் இருப்பதால் வீட்டினுள்ளே  அனுமதி கிடையாது.
மச்சான் காய்யை  விழுத்திப்போட்டன். எல்லோரும் போனபிறகு எனிட்ட கொப்பியை தந்து என்னோட கதைச்சது.வீட்டை கொப்பியை கொண்டு போய் பாருங்கோ என்று சொல்லிச்சுது வீட்டை போய் பார்த்தால் என்னை பிடித்திருக்கா? என்று எழுதியிருக்கு மச்சான்.நான் அடுத்த வகுப்புக்கு இதுக்கு பதில் எழுத வேணும் என்றவன் என்னை கூட்டிகொண்டு டீ வாங்கித்தந்தான்.

பின்பு நான் அவனது றூமுக்கு அடிக்கடி போய் வருவேன்.
அவனது காதல் நன்றாகவே சென்று கொன்டிருந்தது. ஒரு நாள் சொன்னான்
"மச்சான் காய் கணக்கில வீக்காம் ,  டியுசன் சொல்லி தரச் சொல்லி கேட்குதடா"

"சொல்லிக் கொடன்"
"இங்கிலிஸ் டியுசன் முடிந்தவுடன் அப்படியே  இங்க கூட்டிக்கொண்டு வந்து டியுசன் எடுக்கப்போரன்"`
 ..........................
 {தொடர்ச்சி.......இத்துடன் இத் தொடர் முடிவடைகிறது}

ஆங்கில டியுசன் முடிய அநேகமாக நான் அவனது றூமூக்கு போவது வழக்கம் .அந்த காயை கொழுவியதின் பின்பு என்னை அவன் ஒதுக்குவது(காய் வெட்டுவது)நன்றாக புரிந்தது. இருந்தும் தொடர்ந்தும் அவனது அறைக்கு சென்று வந்தேன்.
"மச்சான் இன்றைக்கு காய் றூமூக்கு வாரது என்று சொன்னது, நீ டியுசன் முடிய வரவேண்டாம் டாப்பா"

"காய் என்று சொல்லாமல் பெயரை சொல்லலாம் தானே"
"கலியாணம் கட்டினால் கலா என்று அழைப்போம் இப்ப காய் தான்"
"சரி சரி எதோ நடத்து"

வகுப்பு முடிந்தவுடன் எனது வீட்டை போகமல் சற்று தொலைவில் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.உண்மையிலயே கலா இவனது அறைக்கு செல்கிறாள என்று.10 நிமிடங்களின் பின்பு கலா அவன் இருந்த வீட்டின் கேட் அருகே வந்து நின்று இரு புறமும் பார்த்து விட்டு உடனடியாக உள்ளே சென்று விட்டாள்.
இதற்குமேல் கலாவை அவன் மடக்கி போட்டான் என்பதற்கு எந்த சாட்சியும்
தேவையில்லை என்று எண்ணியபடியே வீடு சென்றேன்.

அடுத்த முறை வகுப்புக்கு போக முதல் அவனது றூமூக்கு போக நினைத்து போட்டு தவிர்த்து கொண்டேன்.வர வேண்டாம் என்று சொன்னவனின் இடத்து ஏன் போவான் என்ற கெளரவம் தடுத்தாலும் கணக்கு வகுப்பில் நடந்தை அறிய மனம் துடித்தது.
வகுப்புக்கு முதலே அவனது றூமூக்கு சென்றேன் .உற்சாகமாக வரவேற்றான்.

"எப்படியடாப்பா அன்றைய கணக்கு பாடம் போச்சு.."

"காய் துணிச்சது ஆங்கில டியுசன் முடிய சினேகிதி வீட்டை போறன் என்று பொய் சொல்லி போட்டு வந்திருக்கு ஒரு பெட்டை தனிய றூமுக்குள்ள இருந்தா படிப்பு எங்க வரப்போகுது.காதல்தான் வரும்"

அவள் வருவது தொடர்ந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் சொன்னான் மச்சான் காலை தட்டினேன் பேசாமல் இருந்தாள் .
"நீ சும்மா விடமாட்டியே"


"விசயத்தை முடிச்சிட்டேன்"

"டேய் டேய் பத்திக் கித்தி போகப் போகுது"

"அந்த விசயத்தில நான் உசார் மச்சான்"
"எதோ நடத்துராசா நடத்து உன் காட்டில மழை"

அவன் சொன்ன விடயத்தில் உண்மை இருக்ககூடும் காரணம் இந்த விடயத்தில் அவன் துணிந்து செயல் படக்கூடியவன்.ஏற்கனவே ஒரு பெண்னிடம் அடிவாங்கிய அனுபவமும் உண்டு.

"கலியாணம் கட்டுற யோசனை இருக்கோ அல்லது காய் வெட்டுற பிளானொ?"
"அதை அந்த நேரத்தில் பார்ப்போம்"
"என்னடா இப்படி சொல்லுறாய்"

கலா இந்தியாவுக்கு படிக்க போறாள் மச்சான் என்று ஒரு நாள் சொன்னான்.
இனி எல்லாம் கடிதப்போக்குவரத்துதான்.

இந்தியா போனவுடனே அவள் கடிதம் போட்டிருந்தாள்.இவன் பதில் போடவில்லை .அவள் பல கடிதங்கள் போட்டிருந்தாள் இவன் மறுமொழி போடவேயில்லை.

சில கடிதங்களை அவன் உடைத்தே பார்க்கவில்லை மேசையில் கவனிப்பாரற்று கிடந்தது.
"என்ன மச்சான் பதில் போடவில்லையோ"
"காய் என்னோடு இப்படி பழகினவள் இந்தியா போய் சும்மா விடுவாளே? அங்கேயும் யாரையும் பிடிச்சிருப்பாள்...நான் என்ன பேயனே அவளுக்கு கடிதம் போட்டு தொடர்பு வளர்க்க"......


முற்றும்..




Thursday, September 27, 2012

கிரிக்கட்டும் அர‌சியலும்

அவன் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன்.கிரிக்கட் விளையாட்டு என்றால் அவனுக்கு நிகர் அவனேதான். பாடசாலை முடிந்து வீடு வந்து உணவு உட்கொண்டபின்பு மீண்டும் அதே பாடசலைக்கு விளையாடுவதற்காக சென்றுவிடுவான்.பாடசாலை அவனது வீட்டிற்க்கு  அருகாமையில் இருந்தமையால் மிகவும் வசதியாக இருந்தது .விளையாட்டு ஆசிரியரும் அவனோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்.தேனீர் ,சிற்றூண்டிகள் போன்றவைகளை கொடுப்பான்.ஆசிரியரும் சில விளையாட்டு நுட்பங்களை கற்றுகொடுத்தார்.
படிப்பில் அவ்வளவு சுட்டி என்று சொல்ல முடியாது.ஆனால் ஆங்கிலத்தில் அவனுக்குத்தான் அதிக புள்ளிகள் கிடைக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்தில்தான் இவனுடன் உரையாடுவார்கள் இவனும் நன்றாகவே ஆங்கிலத்தில் அந்த வயசில் பேசுவான்.
பாடசாலை கிரிக்கட் அணியில் தெறிவு செய்யப்பட்டிருந்தான்.பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் அவன் தான் அந்த பாடசாலையின் நாயக ஆட்டக்காரன்.ஒரு மட்ச்சில் எதிரணியை வெற்றியடைய 2 ஒட்டங்கள்தான் பெற வேண்டிய நிலை இவன் அதை செய்தான் அன்றிலிருந்து அவன் தான் பாடசாலை "கீரோ"...அந்த காலத்தில் டெஸ்ட் மட்ச்சுக்கள் அதிகமாக நடை பெறும். ஐம்பது ,இருபது ஒவர் மட்ச்கள் நடைபெறுவதில்லை.டெஸ் விளையாட்டுக்கள் அநேகமாக வெற்றி தோல்வி இன்றிதான் முடிவடையும்.கடைசி நாள் பந்தை தடுத்து விளையாடியே அந்த சாதனை நிலை நாட்டிவிடுவார்கள்.
மாவட்ட அணிக்கும் தெரிவு செய்தார்கள்.நாட்டின் விளையாட்டு குழுவிற்க்கு தெரிவு செய்ய பல முறை அழைத்தார்கள் ஆனால் தெரிவு செய்யவில்லை அவனது மொழி ,பிராந்திய அரசியல்வாதிகளின் செல்வாக்கின்மை முக்கிய காரணம் என்பதை அவன் இன்றும் ஏற்றுகொள்ள தயராகவில்லை.
அரசியல்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான்.அரசியல் ஒரு தீண்டத்தகாத விடயம் என்ற கருத்து அவனது  குடும்பத்தில் இருந்தது. இனபாகுபாடு காரணமாக தனது விளையாட்டு திறமை நாடளவியரீதியில் பிரகாசிக்கவில்லை என்பதை அவனால் சிந்தித்து பார்க்ககூட முடியவில்லை. பாடசாலை ,விளையாட்டு,கோவில் இதுதான் அவனது செயல்பாடுகள்.புத்தகம் வாசிப்பது என்றால் கிரிக்கட் சம்பந்தமான புத்தகம்தான் வாசிப்பான்.இங்கிலாந்து,மேற்கிந்திய தீவுகள்,இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் விபரணங்களை எங்களுக்கு வந்து சொல்லுவான். மேற்கிந்திய தீவுகளின் விளையாட்டு வீரர்களை புகழ்ந்து கொண்டிருப்பான்.அந்த அணியை சேர்ந்த வீரர்கள்தான் இவனது நாயகர்கள்.இவனது பள்ளி பருவகாலத்தில் அவர்களது அணி உச்சத்தில் இருந்தது.எது உச்சத்தில இருக்கின்றதோ அதை நாடுவது மனித இயல்பு அந்த வகையில் அவனும் அந்த அணியை நேசித்திருக்கலாம்.பத்திரிகையில் வரும் படங்களில் துடுப்பாட்ட வீரர்களின் அக்சன்களை பார்த்து தானும் அதே போல ஆடுவான்.
தொழில் தேடி கொழும்பு சென்றான்.அவனது மாமனாரின் வீட்டில் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாடினான்.மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இவனும் அவர்களும் ஆங்கிலத்திலயே உரையாடினார்கள்.ஆங்கிலமும் கிரிக்கட்டும் மேட்டுகுடிகளின் ஒரு அடையாளம். இவனது விளையாட்டு திறமையால் சிங்கள நண்பர்களின் ஸ்போர்ட் கிளப்பில் சேர்ந்து பிரகாசிக்க கூடியதாக இருந்தது.கொழும்பு செல்லும் பொழுது சிங்கள மொழி பேசமாட்டான் .  காலப்போக்கில் அதையும் கற்றுகொண்டான்.நணபர்களுடன் சிங்கள மொழியில் பேசக்கூடிய தேர்ச்சியும் அடைந்தான்.
கிரிக்கட் விளையாட்டின் திறமையாலும்,ஆங்கில அறிவாலும், மாமனாரின் சிங்கள நண்பரின் செல்வாக்கினாலும் அவனை ஒரு தனியார் நிறுவனத்தில் பயிற்சி கணக்காளராக பணிபுரிய அழைத்திருந்தார்கள்.

வேலைக்கு சென்று கொண்டு அதே நேரம் கணக்காளர் தேர்வுகளையும் கற்று பாஸாகி கொண்டிருந்தான் இதனால் அவனுக்கு அதே கொம்பனியில் கணக்காளர் பதவி கிடைத்தது. தனிஅறை,கார் போன்றவை நிறுவனத்தால் வழங்கப்படிருந்தன. சிங்கள வாகனசாரதியையும் நிறுவனம் அவனுக்காக  வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவன் மாத்தையா என அன்பாக அழைப்பான்.கார் கதவை திறந்துவிடுவான் மற்றும் அலுவலகத்தில் சிற்றூழியம் செய்வான். தேனீர் போட்டுக்கொடுத்தல் மற்றும் மனைவியை கடைகளுக்கு அழைத்து செல்வான்.

காலையில் வேலைக்கு சென்றவுடன் ஆங்கிலப்பத்திரிகை எடுத்து முதலில் பார்ப்பது கிரிக்கட் சம்பத்தப்பட்ட விடயங்களைதான். சிற்றூழியன் பத்திரிகையுடன் நல்ல சூடான தேனீரும் கொண்டு வந்து கொடுப்பான்.
தொழில் புரியும் காலங்களிலும் அரசியல் செய்திகளை அவன் வாசிப்பதில்லை சர்வதேச செய்திகளையும் ,சர்வதேச நாணய மற்றும் வியாபரசெய்திகளை மட்டும் விரும்பி படிப்பான்.அது அவனது தொழிலுக்கும் அவசியமாக இருந்தது.கொழும்பில் குண்டு வெடித்தால் அதையும் ஒரு செய்தியாகவே பார்த்தான்,அதன் காரணத்தை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை."அன்ன கொட்டி போம்ப தம்மா"என சிற்றூழியன் எதாவது வெடிச்சத்தம் கேட்டு சொன்னால் அதே உணர்வுடன் இவனும் இருப்பான்.சும்மா தேவையில்லாமல் இவன்கள் குண்டு வைக்கிறாங்கள் என மனதில் எண்ணிக்கொள்வான்.
ஒரு சில இனக்கலவரங்களையும் சந்திக்கவேண்டியிருந்தது.படிப்பறிவற்றவர்கள் செய்கின்றனர் நல்ல சிங்களவர்கள் செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தான்.ஒரு இனக்கலவரம் நடைபெறும் பொழுது அலுவலகத்தில் இருந்தான். உடனே சிங்கள நண்பர்கள் அவனது வீட்டுக்கு அழைத்து சென்று அவனையும் அவனது மனைவியையும் தங்களது வீட்டில் வைத்து காப்பற்றினார்கள்.இதனால் சிங்களவர்கள் மீது அவனுக்கு ஒரு மதிப்பு எற்பட்டுவிட்டது.இது இனக்கலவரமில்லை ஒரு படிப்பறிவற்ற குழு இன்னோரு குழுவின் சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றனர் என்ற எண்ணத்துடன் இருந்தான். பல மாதங்களாக அவனையும் மனைவியையும் சிங்கள நண்பர்கள் மிகவும் கவனமாக கவனித்து வந்தனர்.அவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது ஒன்றாகவே அழைத்து செல்வார்கள்.

இனக்கலவரங்கள் அவனது மனைவியை பயங்கொள்ள வைத்தது. அவளது அண்ணன் அவுஸ்ரேலியாவில் இருந்தபடியால் அவளும் அவுஸ்ரேலியா சென்று உயிர் பிழைப்போம் என்றிருந்தாள்.கணவனிடம் சொல்லி அவுஸ்ரேலியா தூதரகத்துக்கு நேரடியாகவே சென்று விண்ணப்பத்தை கையளித்தாள்.கல்விதகமைகாரணமாக அவர்களுக்கு விசா உடனே  கிடைத்தது.அவனுக்கு அவுஸ்ரேலியா வரவிருப்பமில்லயென்றாலும், மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக அவுஸ்ரேலியா வந்து சேர்ந்தான். அவுஸ்ரேலியாவில் நிரந்தர  வேலை கிடைத்தது.வாகனம் ஒட்டுவதற்க்கும் ,மற்றும் சிற்றூழியம் செய்ய  வேலையாட்கள்  இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. மாத்தையா என்று கூப்பிட ஆட்கள் இல்லை .எல்லோரும் பெயர் சொல்லி அழைத்தனர் .இதனால் சிங்களவர்கள் நல்லவர்கள் என்ற எண்ணம் மேலும்  வளரத்தொடங்கியது
. சிங்களநண்பர்களுடன் தொடர்பில் இருந்தான். விடுமுறைக்கு கொழும்புக்கு சென்றால் சிங்கள நண்பர்களை மறக்காமல் போய் சந்திப்பான் அவர்களும் இவனை வந்து சந்திப்பார்கள்."   கொட்டிகே வட தமாய் ஒக்கம" என சொல்லுவார்கள் இவனும் ஆமா போடுவான். அவுஸ்ரேலியா வந்த பின்பு கொழும்பில் குண்டு வெடித்தால் மட்டும் செய்தியாக தெரியும்..நாட்டின் எனைய பகுதியில் நடந்தவைகள் பற்றி எதுவும் தெரியாது காரணம் முன்னனி ஊடகங்கள் அந்த செய்தியை பிரசுரிப்பதில்லை . சிறிலங்காவின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் என்ற சிங்களவர்களின் கருத்தோடு ஒன்றாகி நின்றான்.
.முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்பு பல சிங்களநண்பர்கள்  அவனை தொடர்பு கொண்டார்கள்.புலிகளால் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் .அங்கு இருக்கும் நீங்கள் உதவி செய்யவேண்டும்  என கோரிக்கை விட்டனர்.

எங்களது விளையாட்டு கழகத்தினர் 25 ஆண்டு நிறைவு விழா இந்த வருடம் கொண்டாடுகிறோம் "ஒயா தமாய் ஜீவ் கேஸ்ட்",என சிங்கள நண்பனின் அழைப்பை கேட்டவனுக்கு சிங்களவன் உண்மையிலயே நல்லவன் என்று மனதில் எண்ணிக்கொண்டா.....


பத்திரிகையில் இவனது படத்துடன்  செய்தி பிரசுரமாகியிருந்தது.புலத்திலிருந்து வந்த தமிழர்கள் புலிகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவி.......



ஆர் ஆர்

Tuesday, July 24, 2012

வேள்வி+பங்கிறைச்சி..

வருடத்தில் ஐந்தாறு தடவையாவது வேள்வி,பங்கிறைச்சி,அடிச்ச ஆடு, என எங்கள் வீட்டில் கதை அடிபடும்.சிறு வயதில் இதைப்பற்றி அதிகம் விளக்கமில்லை .சனிக்கிழமைகளில்தான் இந்த அடிச்ச ஆடு,வேள்வி விளையாட்டு எல்லாம் நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து சொந்தக்காரர் வந்தால் அநேகமாக பங்கிறைச்சி வீட்டில் இருக்கும்.
இந்த பங்கிறைச்சி வியாபாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான் ஈடுபடுவார்கள்.ஒரு ஆட்டை வாங்கி கொலை(அடிச்ச) செய்து பங்கு போட்டு விக்கும் பொழுது ஒரளவு பணம் சம்பாதிக்ககூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரளவு வசதியானவர்கள் பங்கிறைச்சியை ருசிப்பார்கள்.
எங்கள் வீட்டுக்கு பங்கிறைச்சியை வழங்குபவர் ஒரு சலவை தொழிலாளியாவார்.அவர் பரம்பரையாக எங்களுடைய பரம்பரையினருக்கு பங்கிறைச்சி வியாபாரம் செய்வதாக அம்மம்மா சொன்ன ஞாபகம்.

அவர் ஆடு அடிக்கும் பொழுது " பிள்ளை வார சனிக்கிழமை ஆடு அடிக்கிறோம் ஒரு பங்கு தரட்டோ"
(ஆட்டின் எல்லா பாகத்தையும் சமனாக எல்லோருக்கும் பங்கிட்டு கொடுப்பது __ ஆட்டிறைச்சியில் ஜனநாயகம்)
"மூளையையும்,குடலையும் போடாமல் எங்களுடைய பங்கை கொண்டுவாங்கோ"
"எத்தனை வருசமா உங்களுக்கு கொடுக்கின்றேன் உதை நீங்கள் எனக்கு சொல்ல வேணுமே பிள்ளை நான் பார்த்து பக்குமாக கொண்டு வந்து தருகிறன் "

சனிக்கிழமை பத்து மணியளவில் பனை ஒலையில் பார்சல் பண்ணி இறைச்சியை வீட்டை கொண்டு வந்து தந்திடுவார்.பனை ஒலையை கீழே உருட்டி ஒரு முடிச்சு போட்டு அதனுள்ளே இறைச்சியை போட்டு மேலே இன்னோரு முடிச்சு போடப்பட்டிருக்கும். இதைதான் பறி என அழைப்பார்கள் என் நினைக்கிறேன்.(இந்த தகவல் பிழையாகவும் இருக்ககூடும் யாராவது சரியான பெயர் தெரிந்தால் அறியத்தரவும்)

மாமாவும் , அப்பாவும் கள்ளு அடிச்சுபோட்டு 2 மணியளவில் சாப்பிட வருவினம்,சாப்பிடும் பொழுது இறைச்சி பற்றிய கருத்து தொடங்கிவிடும்.

"போனமுறையிலும் பார்க்க இந்த முறை இறைச்சி நல்லாய் இருக்கு" என்பார் அப்பா.
"அத்தான் எனக்கு என்னவோ நீங்கள் ஆனைக்கோட்டையிலிருந்து கொண்டு வந்த இறைச்சி இதை விட நல்லாய் இருந்தது"
"அது வேள்வி இறைச்சி ஆனபடியால்தான் அந்த ருசி, அதை நீ அடிச்ச ஆட்டிறைச்சியுடன் ஒப்பிட முடியாது"
"நான் கொழும்பில் இறைச்சி வாங்கிறதில்லை.செம்மறியையும்,மாட்டையும் கலந்து போடுவாங்கள் ஊர் சமான் போல வராது.அது சரி அக்கா போனமுறை கொழும்புக்கு போகும் பொழுது போத்தலில் கறி போட்டு தந்தீங்கள்"

"என்ன இந்த முறையும் போத்தலை உடைச்சுப்போட்டியே"

"சீ சீ இந்த தடவை வடிவாக பார்சல் பண்ணிதந்தனீங்கள் தானே ஆனால் கறி பெரிதாக எழும்பவில்லை"

"அது டவுனில் காக்கா கடையில வாங்கினது சில நேரம் அவன்களும் சுத்துமாத்து பண்ணி போடுவாங்கள்.அநேகமாக நல்லது தான் தருவாங்கள், பக்கத்து வீட்டு குகன் தான் வாங்கப்போனவன் சின்ன பெடியன் என்ற படியால் ஏமாத்தி போட்டாங்கள் போல கிடக்குது."
சாப்பாடு முடியமட்டும் இறைச்சியை பற்றிய கருத்து பகிரப்பட்டு கொண்டேயிருக்கும்.
அந்த வயசில இறைச்சியில் இவ்வளவு பாகுபாடு இருக்கு என எனக்கு விளங்கவில்லை என்னை பொறுத்தவரை அம்மா எந்த இறைச்சியை சமைத்தாலும் ஒரே ருசியாகத்தான் இருக்கும்.அது அம்மாவின் கை பக்குவம்.அவர் சமைத்த கறிக்கும் வேறு யாராவது சமைத்த கறிக்கும் வித்தியாசம் காணகூடியதாக இருக்கும் ஆனால் வேள்வி ,பங்கு, அடிச்ச ஆடு,காக்கா கடை இறைச்சிகறிகளுக்கு இடையே வித்தியாசம் காணுவது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இறைச்சியில் இவ்வளவு வேறுபாடு இருக்கே இதுகளை பற்றி ஆராச்சி செய்ய வேண்டும் என்று என்னுடை புத்திசாலித்தனம் அறிவுரை சொல்லிச்சு.அப்பாவிடம் கேட்டு அறியலாம் ,அவர் இறைச்சி வாங்கும் பொழுது நானும் போகவேண்டும் என தீர்மானித்து ஒருநாள் அப்பா விடம் கேட்டேன்.
"அப்பா அடுத்த முறை இறைச்சி வாங்கும் பொழுது நானும் வாரன்"

" சீ சீ நீ எல்லாம் அங்கு வரக்கூடாது "

"ஏன் அப்பா"

"பார்த்து பயந்து போய்விடுவாய்"

"எப்படி அப்பா ஆட்டை கொல செய்வினம்"

"அதுகளை பற்றி எல்லாம் உனக்கு தேவையில்லை இப்ப நீ போய் படிக்கிற வேலையை பார், அம்மா சமைக்கிற கறியை சாப்பிடு" என எச்சரித்தார்.
ஒருநாள் அப்பாவுடன் சைக்கிளில் டவுனுக்கு போக வேண்டி வந்திட்டுது. எனக்கும் மீசை எல்லாம் அரும்பி வயசுக்கு வந்திட்டன் என்ற ஆணவம் வரத் தொடங்கிட்டுது.அவர் என்னை முதல் முதலாக யாழ்ப்பாணத்தின் மத்தியிலிருந்த பழைய சந்தைக்கு அழைத்து சென்றார். (இந்த சந்தை சிங்கள பொலிஸ்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டு பின்பு இந்த இறைச்சிக்கடைகள் பண்ணைக்கு போற வழியில் கட்டியிருந்தார்கள்) சைக்கிள் தரிப்பிடத்தில் சைக்கிளை நிற்பாட்டி போட்டு உள்ளே போனேன்.ஒரு பகுதியில் மரக்கறி இன்னோரு பகுதியில் இறைச்சி கடை தொகுதி. கூலி வேலை செய்வோர்,முதலாளி மாரெல்லாம் ஐயா வாங்கோ ஒரே கத்திகொண்டு வாடிக்கையாளர்களை தம் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பா நேராக ஒன்பதாவது இறைச்சி கடை பக்கம் போனார் .அங்கே வாசலில் தொப்பி, வெள்ளை பெனியன், சாரம் உடுத்திய ஒரு வயதானவர்
"ஐயா வாங்கோ,எப்படி இருக்குறீங்க ,யார் மகனோ ,எத்தனை இறாத்தல் போட,"
இப்படியே கதைத்த படியே அடுத்த வடிக்கையாளரை பார்த்து ஐயா வாங்கோ.....
ஒரே இரத்தவாடை, கடையினுள்ளே ஆடுகள் தோல் உரிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.
"சவ்வுகளை போடாமல் நல்ல தொடை துண்டில வெட்டி நாலு இறாத்தல் போடுங் கோ"


"ஐயாவுக்கு அந்த"கிடா" வின்ட தொடையில வெட்டி போடு"

கத்தியை தீட்டி போட்டு உள்ள இருந்த தொழிலாளி இறைச்சியை வெட்டி பழைய செய்திபேப்பரில் சுத்தி பின்பு அதை மாட்டுத்தாள் பேப்பரில( சீமேந்து பை) சுத்தி தந்தார்.
" இவன் என்ட மகன் தான் அடுத்த முறை இவனை அனுப்புவன் நல்ல இறைச்சியா பார்த்து கொடுத்து விடுங்கோ"

"தம்பி கடையை வாடிவா பார்த்து கொள் ஒன்பதாம் நம்பர் "
நானும் தலையை ஆட்டிப்போட்டு இறைச்சியை வாங்கி ஒலை பைக்குள் போட்டு சைக்கிள் கைபிடிக்குள் கொழுவி சைக்கிளை ஸ்டார்ட் செய்தேன்...
ஒரு நாளைக்கு வேள்வி நடக்கும் இடத்துக்கு போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திட்டுது.
,"ஆனைகோட்டையில் வேள்வி நடக்குதாம், கனகு பங்கு போடுறானாம் நீயும் சொல்லி விட்டனியோ பிள்ளை" என பக்கத்து வீட்டு ஆச்சி அம்மாவிடம் கேட்க "போய் எடுக்க ஆள் இல்லை அதுதான் யோசிக்கிறேன் "
" குகன் போறான் அவனோட கண்ணனை ஆனுப்பிவிடன் இரண்டு பேருமாய் போய் எடுத்திட்டு வரட்டும்"
"அவன் சின்ன பெடியன் அதுகளை பார்த்து பயந்து போயிடுவான்."
"சும்மா அவனை பொத்தி பொத்தி வள சரி காசை தா குகனிடம் நான் சொல்லி எடுத்து தாரன் "
அம்மாவும் காசை கொடுத்துப்போட்டு வேறு அலுவல்கள் பார்க்க சென்றுவிட்டார்.
ஆனால் நான் அம்மாவுக்கு தெரியாமல் குகனுடன் வேள்வி நடக்கும் இடத்திற்க்கு போய்விட்டேன்.ஆனைக்கோட்டையில் சாவக்கட்டு என்ற ஊரில்தான் இந்த வேள்வி நடந்தது.
சிறு வைரவர் ஆலயத்திற்க்கு முன்னால் பெரிய சாக்கின் மேல் பனை ஒலையால் பின்னப்பட்ட பாய் இரண்டு போட்டு அதில் மலை போல் சோறு குவிக்கபட்டிருந்தது .அதன் மேல் இரண்டு மூன்று சிறிய ஆடுகள் தோல் உரித்து வாட்டி வைக்க்ப்பட்டிருந்தன.அதே போல் கோழிகள், அவித்த முட்டைகள் என்பனவும் படைக்கப்பட்டிருந்தன.
இவற்றுக்கு முன்னால் மிகவும் வாட்டசாட்டமான ஆசாமி கையில் கொடுவா கத்தியுடன் நெற்றியில் விபூதி சந்தனத்துடன் நின்றிருந்தார்.அவரின் கண்கள் நன்றாக சிவந்திருந்தது.கத்தியின் நுனியில் தேசிக்காய் குத்தியிருந்தது.
மக்கள் கூட்டமாக நின்றிருந்தபடியால் உள்ளே சென்று பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது . நான் ஒரு மாதிரி சுழிச்சுகொண்டு உள்நுழைந்து வேடிக்கை பார்த்தேன்.(அன்று நான் எனது கையடக்க தொலை பேசியை கொண்டு செல்ல மறந்து போனேன் ஆனபடியால்தான் உங்களுக்கு படம் காட்ட முடியாமல் போய்விட்டது....)

வேள்வி ஆசாமிக்கு ஐந்தாறு அடியாட்களும் உதவிக்கு நின்றிருந்தனர்.அவர்களும் உற்சாக பாணம் அடித்தது போல் உற்சாகமாகவே நின்றார்கள்.ஆட்டுச்சொந்தகாரர் ஆட்டை கட்டிஇழுத்து கொண்டு வரும் பொழுது உடனே அடியாட்கள் பெரிய சத்தத்துடன்ன கேதியா கொண்டுவா என கத்துவார்.ஆடு படையலுக்கு முன்னால் வந்தவுடன் ஒருவர் முன்னங்காலையும் தலையயும் பிடிக்க வேறு இருவர் பின்னங்காலை பிடிக்க ஆசாமி கழுத்தில் ஒங்கி ஒரு வெட்டு தலை வேறு உடம்பு வேறாக விழும் .இரத்தம் நிலத்தில் பாய்ந்தன.சில ஆடுகளின் உண்ட உணவு எல்லாம் வெளியே வந்து விழுந்தன.
சேவல்களும் கிடாக்களும் வேள்வியில் பலியிடப்படும் .(ஆண்கள்)

குகன் என்னை தேடிவந்து"டேய் வாடா போவம் கனகரின்ட ஆடு வெட்டியாச்சாம் போய் பங்கை எடுப்போம்"
வேள்வி தொடர்ந்து கொண்டிருந்தது.கன்கரின்ட வீடும் ஆனைகோட்டையில் தான் இருந்தது.கனகரின்ட வீட்டுக்கொட்டிலில் ஆட்டை கட்டி தூக்கி தோலுறிச்சு பங்கு போட்டுக்கொண்டிருந்தார்.
"குகனுக்கு என்னை விட நாலு வயசு அதிகம் இதனால் இறைச்சியை பற்றிய விடயத்தில் அனுபவம் உடையவர் என்று சொல்லலாம்.
எனவே என்னுடைய சில சந்தேகங்களை அவரிடம் கேட்டேன்..
"அண்ணே வேள்வி ஆடு ,அடிச்ச ஆடு, காக்கா கடை ஆடு இதுகளுக்கு என்ன வித்தியாசம்?"

" கிடா ஆடுகளை நல்லாய் புல்லு மேய விட்டு,சாப்பாடு தேவைக்கு அதிகமாகவே கொடுத்து வளர்த்து சில நேரம் சாரயம் கொஞ்சம் கொடுப்பார்கள்(உண்மை பொய் இதுவரை எனக்கு தெரியாது)சதை பிடிப்பான ஆடு நல்ல ருசியாக இருக்கும்.இப்படி வளர்த்த ஆட்டை சாமிக்கு முன்னால் பலி கொடுப்பார்கள்.
அடிச்ச ஆடு சாமிக்கு முன்னால் வெட்டுவதில்லை,வீட்டில் வளர்த்து வியாபாரத்துக்காக வெட்டி பங்கு போடுவது,காக்கா கடை சகல ஆட்டையும் வெட்டி விறபார்கள்,மறி ஆட்டையும் கலந்து விற்பார்கள்."
ஒரு ஆட்டிறைச்சி பிரசங்கமே செய்து முடித்தார் குகன் அண்ணா.

30 வருடங்களுக்கு பின்பு ஒருநாள் குகன் அண்ணா கேட்டார்"டேய் உனக்கு பங்கு இறைச்சை வேணுமே"
" என்ன பகிடி விடுகிறியளே சிட்னியில பங்கிறைச்சியோ?போர போக்கைபார்த்தால் வேள்வி இறைச்சி இருக்கு என்றும் சொல்லுவியள் போல"
"வார சனிக்கிழமை புளு மவுன்டனில்(Blue mountain) உள்ள வார்முக்கு (Farm)போறேன் அங்க உனக்கு விருப்பமான ஆட்டை காட்டினால், வெட்டதோலுரித்து தருவார்கள் வீட்டை கொண்டுவந்து பங்கு போட்டு பிரிட்ஜ்க்குள் (Fridge)போட்டன் என்றால் ஒரு மாத்தத்திற்க்கு காணும்"

"அண்ணே அப்ப அது பங்கிறைச்சி இல்லை பிரிட்ஜ் இறைச்சி"
ஆட்டிறைச்சியிலயே இவ்வளவு பாகுபாடு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இன்று வரைக்கும் வேள்வி இறைச்சி, அடிச்சஆடு,காக்கா கடை(சிட்னியில் கலால் இறைச்சி)வித்தியாசம் தெரியவில்லை...

அம்மா சமைத்த கறியின் ருசி அம்மாவுடன் போய்விட்டது

இப்ப மனிசி சமைக்கிற கறிதான் ருசி.....ஆகா...ஆகா....

பி. குறிப்பு...எனக்கு என்னவோ எங்கன்ட வேள்வியில் இருந்துதான் கலால் வந்திருக்கு என்று எனது எட்டாம் அறிவு சொல்லுது.

    யாழ்ப்பாண ...மண்வாசி

    1966 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் நான் முதல் காலடி எடுத்து வைத்தேன்.எனது ஆரம்ப கல்வியை அந்த கிராமப்பாடசாலையில்தான் ஆரம்பித்தேன். தற்பொழுது அது மகாவித்தியாலயமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அன்று மகாவித்தியாலயமாக இருந்த பாடசாலை இப்பொழுது பல்கலைகழகமாக உயர்த்தப்பட்டுள்ளது. நான் ஆரம்ப கல்வி பயிலும் பொழுது நாலு சிறிய கட்டிடம்தான் இருத்தது.எனது தந்தையார் அரச திணைக்களத்தில் தொழில் புரிந்தார்.அந்த கிராமத்தில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வேறு அரச சார்பு திணைக்களமும் இருந்தன.அநேகமான அரச உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தனர்.இது சில ஊர்வாசிகளுக்கு எரிச்சலை கொடுத்திருக்கும். முக்கியமாக படித்த சமுகத்தினரிடையே, எங்களுடைய வேலைஎல்லாம் வெளிமாவட்டத்தான் எடுக்கிறான் என்ற எண்ணம் இருந்தபடியால் அவர்கள் தங்களது வெறுப்பை ஒரு விதத்தில் காட்டினார்கள்.வியாபார சமூகமும் ஒரளவு இதால் பாதிக்க பட்டிருக்கும்.யாழ்ப்பாண வியாபாரிகளும் இங்கு கடைகள் போட்டு இருந்தார்கள்.அந்த காலகட்டத்தில் எதிர்ப்பை வன்முறையால் காட்டவில்லை.யாழ்ப்பாணி, பனங்கொட்டை என அழைப்பதன் மூலம் தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.,பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பெரிதாக இதை கண்டுகொள்ளவில்லை காரணம் அவர்கள் கூலி வேலை செய்தால்தான் அன்றைய உணவு கிடைக்கும் யாழ்ப்பாணத்தான் அந்த மாகாணத்தை தெரிவு செய்தமைக்கு முக்கிய காரணம் மொழி தான். தனது கடமைகளை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கும் என்பதால் தெரிவு செய்திருந்தார்கள்.

    அரச உத்தியோகத்தில் இருந்தோரின் பிள்ளைகளும் நானும் நண்பர்கள் ஆனோம்.தராதரம் எங்களை நண்பர்கள் ஆக்கிவிட்டது."டேய் பனங்கொட்டை" நான் திரும்பி பார்க்கவில்லை" ஏய் யாழ்ப்பாணி" என்றவுடன் திரும்பி பார்த்தேன் அவன் சிரித்தான்.ஆரம்பத்தில் எனக்கு ஒன்று புரியவில்லை காலப்போக்கில் அந்த பெயரால் பலர் அழைக்க தொடங்கினார்கள்.
    தொடர்ந்து என்னை இப்படி அழைப்பதால் பெற்றோரிடம் சொன்னேன்.
    "நான் முதலே சொன்னேன் உந்த மட்டக்களப்பில் இருந்து பிள்ளையை படிப்பிக்க ஏலாது ,நான் ஊரில் இருக்கிறேன் நீங்கள் மட்டும் இங்க வந்து வேலையை பாருங்கோ என்று,என்ட சொல்லைக் கேட்டால் தானே..."அமமா புலம்பத்தொடங்கிவிட்டார்.

    அப்பா கண்டு கொள்ளவில்லை"அவன் யாழ்ப்பாணி என்று சொன்னால் நீ மட்டக்களப்பான் எனறு சொல்லுறதுதானே

    ஆரம்பள்ளியை முடிச்சுப்போட்டு உயர்கல்வி படிக்க தொடங்க அவனை ஊருக்கு அனுப்பி படிப்பிப்போம் இப்ப அவன் இங்க படிக்கட்டும்" என அம்மாவை சமாதானப்படுத்தினார்.
    காலப்போக்கில் எல்லாம் பழகிபோய்விட்டது அவன் யாழ்ப்பாணி என்றால் நான் மட்டக்களப்பான் என்று சொல்லுவேன். சில நேரம் ஆசிரியரிடம் கோல் மூட்டிவிடுவேன்.ஆசிரியரும் சிரித்து சமாளித்துவிடுவார்.அவரும்திருமணமாகாத இளம்வயதினர். ஆசிரியர்கள் அரச உத்தியோகத்தர்கள் சிலருக்கு அந்த காலத்திலயே யாழ்ப்பாணத்தான் மட்டக்களப்பான் என்ற பாகுபாடு இருந்தது.சாதாரண தொழிலாளிகள் இதுகளைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை.மட்டக்களப்பில் உள்ள கல்வி சமூகத்திற்க்கு யாழ்ப்பாணி தங்களது அரச தொழில் வாய்ப்புக்களை எடுத்து கொள்கிறார்கள் என்ற ஆதங்கம்.
    இரு மாவட்டதிலும் உயர்தர படிப்புக்கு மேல் படித்த மேதாவிகள்தான் இந்த பிரதேச விடயத்தை பெரிதாக கணக்கில் எடுப்பார்கள்."காக்கா இல்லாத ஊருமில்லை யாழ்ப்பாணி போகாத ஊருமில்லை" என்பது அந்த மாவட்டத்தில் ஒரு பேச்சு வழக்கா இருந்தது.

    மட்டக்களப்பு பேச்சு முறை உச்சரிப்பு கொஞ்சம் வரத்தொடங்க அம்மா கடுப்பாகி உவனை இங்கு வைத்திருந்தால் மட்டக்களப்பார் மாதிரி கதைக்க போறான் விரைவில் ஊர்பாடசாலைக்கு மாற்ற வேண்டும் என அடம்பிடித்து யாழ்ப்பாண பாடசாலையில் ஆறாம் வகுப்பில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்து முடித்தார்.


    மானிப்பாய் இந்துக்கல்லூரியில் ஆறாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்தேன்.அங்கு ஆசிரியர்
    "எங்க முதல் படித்தாய் "

    " செங்கலடியில் சேர்" .
    பலருக்கு புரியவில்லை அது எங்கே இருக்கு என பலர் வினாவத்தொடாங்கினார்கள் .உடனே ஆசிரியர் எல்லோரையும் சத்தம் போடாதயுங்கோடா ,அது மட்டக்களப்பில் இருக்கு .அன்றிலிருந்து நான் மட்டக்களப்பான் ஆனேன்.ஆசிரியரும் சில நேரங்களில் டேய் மட்டக்களப்பு நீ சொல்லு என கேட்பதுண்டு.

    நான் உயர்தரம்படிக்கும் பொழுது பலர் மட்டக்களப்பிலிருந்து எமது பாடசாலைக்கு படிக்க வந்தார்கள் (79, 80களில்) இதில் பல முஸ்லிம்களும் அடக்கம்..இங்கு படித்துவிட்டு மட்டக்களப்புக்கு சென்று உயர்தர பரீட்சை எடுப்பார்கள்.இதன் மூலம் குறைவாக புள்ளிகள் எடுத்தாலும் பல்கலைகழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.இப்படி பலர் மருத்துவபீடம்,பொறியியல்பீடம் மற்றும் பீடங்களுக்கும் தெரிவிசெய்யப்பட்டார்கள்.
    வேலைவாய்ப்புக்காக கொழும்பு சென்றேன்.இராணுவ சோதனைச்சாவடியில் அடையாள அட்டையை பரிசோதகர் கேட்க கொடுத்தேன் .
    அதில் ஊரின் பெயர் இருந்தும் அந்த சிப்பாய்
    "கம கோய்த"

    தயக்கத்துடன் "யவ்னா"

    "யாப்பானயத, பாக் பொட்டாக் அறின்ட"

    சுட்கேஸ்ஸை திறந்து காட்டினேன் கிளறி பார்த்துவிட்டு .

    "யன்ட"

    தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் எண்டு போட்டு சுட்கேஸ்சை பூட்டிப்போட்டு இடத்தைவிட்டு உடனடியாக நகர்ந்தேன். இதன் பின்பு இராணுவ சாவடிகளில் ஐ.டி. கேட்டு கம கோயத எண்டா யாப்பனய என்று சொல்லுவேன் .சில இராணுவத்தினர் சிரிப்பார்கள் ,சிலர் முறைத்துப்பார்ப்பார்கள்.எனது சிங்கள உச்சரிப்பை பார்த்துதான் அவர்கள் சிரித்திருபார்கள் என நினைக்கிறேன்.

    கொழும்பில் இரண்டு இடத்திற்கு வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன்.நேர்முக தேர்வுக்கு அழைத்திருந்தார்கள் . ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.தட்டுதடுமாறி பதில் சொன்னேன்.
    “Are you from Jaffna”
    “yes”
    நிமிர்ந்து என்னை பார்த்தார்
    ..dangerous place
    மேலும் சில கேள்விகள் பின்பு
    .........................................
    “we will inform you later”
    கொழும்பில் வேலை செய்ய கொஞ்சம் பயமாக இருந்தது.இடம் எமக்கு சரிவராது எண்டு போட்டு இந்தியாவுக்கு போனேன்.அங்கு தமிழர்கள் அன்பாக பழகினார்கள். எனது தமிழின் உச்சரிப்பின் மூலம் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு "நீங்க சிலோன் தமிழா"
    "ஒம்"
    உடனே அவர்களும் என்னை மாதிரி யாழப்பாணத் தமிழில் பேசுவதாக பேசினார்கள் .சகிக்க முடியாமல் இருந்தது .அந்த காலகட்டத்தில் மனோகராமா படத்தில் யாழ்ப்பாண தமிழில் பேசி நடித்திருந்தவ அதன் பாதிப்பு அந்த மக்களிடம் காணக்கூடியதாக இருந்தது.
    மூன்று வருடங்கள் இந்தியாவில் மட்டை அடித்துவிட்டு.மீண்டும் கொழும்புக்கு வந்தேன் வேலைக்கு விண்ணப்பங்கள் போட்டேன் .பெயரை பார்த்து சிலர் அழைக்கவில்லை .ஒரு கொம்பனி மட்டும் அழைத்திருந்தார்கள்.
    அதே கேள்விகள்.இதில் நான் சென்னையில் படித்த சான்றிதலும் இருந்த படியால் “you studied and worked in dangerous places” .........”we will inform later”
    மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என பத்திரிகையில் பார்த்தவுடன் விண்ணப்பித்தேன்.சான்றிதழ்களுடன் சமூகமளிக்கும்படி கடிதம் அனுப்பியிருந்தார்கள் அவர்க.ள் பெயர் ஊர் ஒன்றும் பார்க்கவில்லை காரணம் அங்கு மனிதவளம் தான் தொழில் செய்ய தேவைப்பட்டிருக்கவேண்டும்.
    சவுதி செல்ல தெரிவு செய்யப்பட்டேன்.மருத்துவ பரிசோதனை முடிந்த பின்பு விசாவும் கைக்கு எட்டியது .விமான நிலையத்தில் ஒரே கூட்டம் அநேகர் மத்திய கிழக்கு செல்வதற்காக நின்றிருந்தார்கள். குடிவரவு திணைக்களதின் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் உள் சென்றேன்.விமானத்தில் அநேகர் முஸ்லிகளாக இருந்தார்கள்.முஸ்லிம்கள் எல்லோரும் தொப்பி போட்டிருந்தார்கள் .எனையோரில் அநேகர் சிங்களவர் .தமிழர்கள் நாலு ஜந்து இருந்திருப்போம்.

    சவுதியில் டகரான் விமானநிலையத்தில் இறங்கியவுடன் அனல் காற்று முகத்தில் வீசியது.கொம்பனியின் முகவர் எங்களை இரண்டு பஸ்களில் ஏற்றினார். மந்தைகளை போல் அடிபட்டு ஏறினோம் .பஸ் வண்டி பாலைவனத்தில் ஒடி ஒருமணித்தியாலத்தின் பின்பு ஒர் முகாமில் எங்களை இறக்கி விட்டது.அங்கு மேற்பார்வையாளர் ஒரு சிங்களவர் உதவியாளராக ஒரு முஸ்லிமும் இருந்தார்.(இதைப்பற்றி கிறுக்குவது என்றால் பல விடயம் கிறுக்கலாம் நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்) எல்லோருக்கும் படுக்கை விரிப்புக்கள் ,கோப்பை மற்றும் சில பொருட்களை கொடுத்து எமது தங்கும் இடத்தையும் காட்டினார்கள். அங்கு பல நாட்டை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

    மேற்பார்வையாளர் சில கேள்விகளை கேட்டார் சிறிலங்காவில் எந்த இடம் .
    நான் வழமையான பதில் யாழ்ப்பாணம் என்றேன்.
    "கொட்டித"

    சிரித்துவிட்டு....நீ ஜெ .வி.பி யோ எண்டு கேட்க வேணும் போல இருந்தது.ஆனால் கேட்கவில்லை. முதல் நாளே ஏன் வீண்வம்பு என தவிர்த்து கொண்டேன்.
    அந்த தங்குமிடத்தில் 500 பேர் வரை தங்கமுடியும் .யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் அறிவுரை சொன்னார் யாரும் எந்த இடம் என்று கேட்டால் யாழ்ப்பாணம் என சொல்லவேண்டாம் கொழும்பு என சொல்லசொல்லி .ஆனால் நான் யார் கேட்டாலும் யாழ்ப்பாணம் என்றுதான் சொன்னனான்..
    ஒரு நாள் பத்திரிகையை பார்த்தேன் அதில்
    யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சிறிலங்கா இராணுவ தளபதி அதன் பெயரை "யாப்பாபட்டுவ"என மாற்றி ஜனாதிபதியிடம் ஒலைச்சுவடியை(????)கொடுத்து பெயரும் பட்டமும்(ஜெனரல்) பெற்றுக்கொண்டார்.இதை மத்திய கிழக்கில் உள்ள பத்திரிகைகள் படத்துடன் பிரசுரித்திருந்தன.பார்த்தவுடன் மனசு கஸ்டமாக இருத்தது .

    இப்படி மத்திய கிழக்கு வாழ்க்கை முடித்து அவுஸ்ரேலியா வந்தன் .பல தடவை கொழும்புக்கு போய்வந்த பின்பு கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள எனது தாய் மாமனார் சுகவீனமுற்றிருந்தார். அவரை பார்ப்பதற்கு இந்தியா செல்வதற்கு விசா அனுமதிக்கு விண்ணப்பம் போட்டிருந்தேன்.இந்தியா தூதரகம் இரண்டு நாள் கழித்து வரும் படி சொல்லியிருந்தார்கள் .அவசரமாக செல்ல வேண்டும் உடனே தரமுடியுமா என கேட்டேன், இல்லை நீங்கள் பிறந்த இடம் யாழ்ப்பாணம் உங்களது விண்ணப்பத்தை சிறிலங்காவுக்கு அனுப்பி பின் இந்தியாவுக்கும் அனுப்பி கிலியரன்ஸ் எடுத்த பின்பு தான் தரமுடியும்,சில நேரம் மூன்று கிழமைக்கு மேல் எடுக்கும்... என்றார்கள்...40நாட்களின் பின்பு விசா வந்திருக்கு வந்து எடுக்கும் படி அழைத்தார்கள்...அதன்பின்பு நான் இந்தியாவுக்கு போகவில்லை.

    அண்மையில் எனது. உறவுக்காரார் குடும்பத்துடன் சீனா போவதற்க்கு விண்ணப்பித்திருந்தார் .அவருக்கும் பிள்ளைக்கும் விசா உடனே கொடுத்திருந்தார்கள் ஆனால் அவரது மனைவிக்கு கொடுக்கவில்லை காரணம் அவர் பிறந்த இடம் யாழ்ப்பாணம்... இரண்டு நாட்களின் பின்புதான் கொடுத்தார்கள்.         

    Sunday, May 6, 2012

    முப்படை தந்தான்

    மும்மனி தந்தான் புத்தன்
    முப்பால் தந்தான் வள்ளுவன்
    மும்பழம் தந்தாள் ஒளவை

    முத்தொழிலுக்கு(காத்தல்,அழித்
    ��ல்,படைத்தல்)
    முத்தொழிலுக்கு மும்மூர்த்திகள் என்றனர்
    முப்பெரும் தேவிகளுக்கும் 
    முத்துறைகள் கொடுத்தனர்

    மூவேந்தர்கள் ஆண்டனர்
    ஆனாலும் தமிழ் தேசியம்
    உலகமும் அறியவில்லை
    தமிழனும் அறியவில்லை

    முப்படை தந்தான் தலைவன்,
    தமிழ் தேசியம் தமிழனும் அறிந்தான்
    உலகமும் அறிகிறது....
     

    பயங்கரவாதி

    நந்திக்கொடி தூக்கினேன்
    சைவக்காவலர் என்றனர்
    சிவப்புக்கொடி தூக்கினேன்
    புரட்சிவாதி என்றனர்
    கட்சிக்கொடி தூக்கினேன்
    அரசியல்வாதி என்றனர்
    கண்டுகொள்ளவில்லை
    ஜன நாயக உரிமை என்றனர்
    தேசியக் கொடி தூக்கினேன்
    பயந்தனர் ஆட்சியாளர்கள்
    என்னை பயங்கரவாதி என்றனர்
    பயந்தனர் அயலவர்
    என்னை பிரிவினைவாதி என்றனர்

    சும்மா கிறுக்கல்

    சிங்கள பெரினவாதம்
    சிங்க கொடியுடன்
    சீறும் வரை

    தமிழினத்தின் உரிமைக்கான‌
    தகாம் 
    தவிர்க்க முடியாதது

    சிறுபன்மையினர் உலகில்
    சிங்களம் நாம் என்று
    சிறிலங்காவில் 
    சிறுபான்மையினரை அழித்தால்_உன்

    இருப்புக்கு நீ
    இடும் புதை குழி

    முள்ளிவாய்க்கால்
    தில்லானவல்ல‌
    திருப்புகழுமல்ல‌
    சுபமும்மல்ல‌
    நன்றி வணக்கமுமல்ல‌

    ஊ சிவமயம்
    ஆகும்

    ஆயுதமா
    அகிம்சையா என்பதை
    தீர்மானிப்பது சிங்கள பெரினவாதம்...

    ஒன்று-ஒன்பது

    அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி  மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில்  கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு  மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும்   அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார்.

    சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டது.அவரின்  விருப்பப்படி செய்து கொண்டிருந்தேன். மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி  மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில்  கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு  மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்.
    சைக்கிள் ஒடும் பருவம் வந்தவுடன் தனியாக கோவிலுக்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது .நான் நினைத்தபடி வலம் வரக்கூடியதாக இருந்தது .உள்வீதி ஒருதரம் வெளி வீதி ஒரு தரம் சுற்றுவேன் அம்மா கேட்டால் மூன்று தரம் இரண்டு வீதியையும் சுற்றினதாக பொய் சொல்வேன்..

    மீசை அரும்பத் தொடங்க ஆசைகளும் வரத்தொடங்கின.சைக்கிளில் வீதி வலம் செல்லத்தொடங்கினேன். கோவிலுக்கு செல்வதாக சொல்லி போட்டு வேறு பல இடங்களுக்கு சென்று வந்தேன். 

    பக்கத்துவீட்டு அன்ரியின் மகன் க.பொ.த உயர்தரத்தில் 2ஏ 2பி சித்தியடைந்து மருத்துவத்துறைக்கு தெரிவானார். அவர் ஒரு சைவப்பழம்.ஒவ்வோரு வெள்ளிக்கிழக்களில்   கோவில் தரிசனம் முடிந்தவுடன் உள்வீதியையும் வெளி வீதியையும் மூன்று தரம் சுற்றி  வருவார்.பரிட்சை காலங்களில் அதிக தடவை கோவிலுக்கு சென்றார்.
    அவரின் அம்மாவும் ஒரு சைவப்பழம்தான் இருந்தும் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு அதிகம் செல்வார். ஒன்பது செவ்வாய்கிழமை தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் நடக்கும் என யாரோ அவருக்கு சொல்லியிருக்கினம்,மகனுக்கு பரீட்சை முடிந்தவுடன் அவர் ஒன்பது தடவை சென்றுவந்தார் .அவாவின் விருப்பப்படியே மகனுக்கு மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது.அந்த பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முதலே தெரியும் அவாவின் மகனுக்கு நிச்சம் மருத்துவதுறையில் அனுமதி கிடைக்கும் என்று எனேனில் அவர் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன்.

    இரண்டு வருடங்களின் பின்பு நான் முதல்தடவை பரீட்சை எடுக்கும் பொழுது"தம்பி கோவிலுக்கு போய் தேங்காய் உடைத்துவிட்டு மூன்று தரம் உள்வீதி வெளிவீதி சுற்றி ,நல்லாய் கும்பிட்டு போட்டு வா" என அம்மா சொல்ல அதையும் செய்தேன்.ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து வருவேன் எனக்கு தெரிந்த கேள்விகளை வினாத்தாளில் தந்திடு என ஆண்டவனிட ம் மன்றாடிவிட்டு வந்தேன்.

    பரீட்சையில் எனக்கு தெரிந்த கேள்விகள் வரவில்லை .வீட்டை வந்தவுடன் அம்மா "தம்பி சோதனை எப்படி ?நல்லாய் செய்தனியோ?மெடிசின் கிடைக்குமோ?"
    "ஒம் நான் நல்லாய் செய்தனான் ரிசல்ட் வந்தவுடன் பார்போம்"என பதிலளித்துவிட்டு பெடியங்களுடன் ஊர் சுற்ற தொடங்கினேன்.



    ரிசல்ட் வரும் வரை ஒரே கும்மாளம்தான்.கோயில் திருவிழாக்கள் என்றால் நாங்கள் எல்லோரும் அங்குதான் முழு நேரமும் நிற்போம். டியுசனில் படித்த பெண்கள் வருவார்கள்,அவர்களுடன் கதைக்க வேணும் போல இருக்கும் ஆனால் பயம் ,பார்த்து சிரிப்போம் என பார்த்து சிரித்தாலும் அவையள் ஒரு முறைப்பு முறைப்பினம் கற்புக்கரசிகள் பரம்பரைகள் என்ற நினைப்பில்,இருந்தாலும் சுதா ஒரு நாள் என்னை பார்த்து சிரித்தாள் .அவள் என்ன அர்த்தத்தில் சிரித்தாளோ தெரியவில்லை இன்றுவரை ,நான் நினைத்தேன் "அதுதான்"(காதல்) என்று. மச்சான் அந்த காய்  சுதா என்னை பார்த்து சிரிச்சவடா என்றேன் உடனே பெடியன்கள் "காய் உன்னை லவ் பண்ணுகிறா  விளையாட்டை காட்டு " என உசுப்பேத்தினார்கள்(உற்சாகப்படுத்தினார்கள்...கி...கி) அதன் பின்பு பெடியங்களும் சுதா என்று சொல்லி என்னை பகிடி பண்ணுவார்கள் எனக்கும் உள்மனதில் ஒரு கிளுகிளுப்பாய்யிருக்கும். 
    "தம்பி தேவி அக்காவுக்கு கலியாணம் சரி வந்திட்டாம்,அவவுக்கு செவ்வாய் குற்றம் இருந்தது தொடர்ந்து ஒன்பது  கிழமை எங்கன்ட அந்தோனியார் கோவிலுக்கு போய் வந்தவ சரியா ஒன்பதாவது கிழமை மாப்பிள்ளை வீட்டார் கலியாணத்திற்கு சம்மதம் தெரிவிச்சு இருக்கினம்"மானிப்பாய் அந்தோனியார்  மிகவும் சக்தி வாய்ந்தவர் என அம்மா சர்டிபிகேட் கொடுத்தார்.அந்தோனியாருக்கும் செவ்வாய்கிழமைக்கும் என்ன தொடர்பு என்று இன்று வரை எனக்கு விளங்கவில்லை இனியும் விளங்கப்போவதில்லை.


    "அவன் நல்லாதான் படிச்சவன் ஆனால் பாஸ் பண்ண முடியாமல் போய்விட்டது அவனுக்கு அட்டமத்தில் சனியன் அதுதான் அவனை பாஸ் பண்ணவிடவில்லை,அடுத்த வருஷம் வேறு ஸ்தானத்திற்கு போறான்  அப்ப அவன் பாஸ் பண்ணிபோடுவான்" என அம்மா  அப்பருக்கு சொன்னது எனக்கு மனதில் ஒரு துணிவை தந்தது.

    தெல்லிப்பளை அம்மன் கோவிலுக்கும் தொடர்ந்து ஒன்பது செவ்வாய்கிழமை சென்று வந்தால் நினைத்த காரியம் நடக்கும் என இன்னுமொரு கருத்து பரவதொடங்கியிருந்தது.அதையும் செய்யத்தொடங்கினேன்.படிப்பதில் கவனத்தை செலுத்துவதை விடுத்து 3 தரம் சுற்றுதல்,ஒன்பது தரம் போய்வருதல் என்ற கருத்தாதிக்கத்து க்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினேன்...
    கிறிஸ்தவ ,சைவ  மக்களின் கருத்தாதிக்க மையங்களின் கருத்துக்களுகு ஏற்ப நடக்கத் தொடன்கினேன்.அந்த காலகட்டத்தில் இந்திய கல்லூரிகளுக்கு பணத்தை கட்டினால் அனுமதி கிடைக்கும் என்ற நிலமை ,அநேகர் சென்று படிக்கத் தொடங்கினார்கள்,நானும் சென்றேன்.இந்தியாவுக்கு போகவேணும் என்றுதான்  துர்க்கை அம்மனுக்கு போய்வந்தனான் என்றேன் உடனே நண்பர்களும் நம்பினார்கள் சிலர் போகத் தொடங்கினார்கள்.

    புலம் பெயர்ந்தவுடன் இப்படியான சுற்றல்கள்,ஒன்பது தடவை போய்வருதல் என்பன இருக்காது என எண்ணினேன் ஆனால் இங்கும் அது இருந்தது.எல்லோரும்  செய்யும் பொழுது நான் ஏன் விடுவான் என்று போட்டு நானும் செய்யத்தொடங்கினேன்.

    "பிரஜாவுரிமை கிடைக்க வேணும் என்றால் ஓவ்வொரு நாளும்108 தரம் ராமஜெயம் எழுதும் உடனே கிடைத்துவிடும்" என்றார் ஒருவர்.தமிழன் என்றால் கேஸ் போட்ட எல்லோருக்கும் பிரஜாவுரிமை கிடைக்கும்
    என்பது எழுதாத சட்டமாக இருந்தது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
    இன்னோருத்தர் சொன்னார் மல்கோவா சர்ச்சுக்கு போனால் வேளை கிடைக்கும் என அதையும் செய்தேன் .

    புலத்தில் ஒரளவுநடுத்தர வர்க்கத்தின் ஆசையை பூர்த்தி யாக்ககூடிய அரச கட்டமைப்புக்கள் இருந்தாலும் எல்லாவற்றிலும்  அதியுச்ச  வசதிகள்(Top of the range)பெற வேண்டும் என்ற ஆசையில் எல்லாவற்றையும் தொடர்ந்து செய்கிறேன்...

    பிரபல இலக்கிய முதிர்ச்சி பெற்ற எழுத்தாளராக வரவேண்டும் என்ற ஆசையை நிவர்த்தி செய்ய எங்க என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்கிறேன்.....

    (யாவும் சுத்தகற்பனை ...ஒருத்தரையும் கிண்டல் பண்ணவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்) 

    புனிதம்

    வழமையாக எம்மவர் கொண்டாட்டங்கள் இந்த மண்டபத்தில்தான் நடை பெறும்.கலியாணவீடு,பிறந்தநாள் ,மனித சாமிமார்களின் பூஜை,மற்றும் கோவில்கள் கட்டமுதல் சாமியை இங்கு வைத்துதான் பூஜை செய்வார்கள் பின்பு கோவிலுக்கு எடுத்து செல்வார்கள் இப்படி பலவித எம்மவர்களின் சடங்குகள் இந்த மண்டபத்தில் நடை பெறும் நானும் பலதுக்கு சென்று இருக்கிறேன் .இனிமேலும் செல்வேன்.

    நன்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கு நடை பெற்றது .பலர் வந்திருந்தார்கள் அநேகமானவருக்கு அறிமுகம் தேவைப்படவில்லை எல்லோரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள்.
    பெண்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் சேர தொடங்கினார்கள் ,ஆண்களும் தண்ணி நன்பர்கள் ஒன்றாக சேரத் தொடங்கினார்கள். இளம் வயதினர் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டனர்.

    நான் இருந்த இடத்திற்கு நன்பன் வந்து பார் திறந்திருக்கு வாங்கோ என்று அழைக்க எப்படா கூப்பிடுவான் என்று பார்த்து கொண்டிருந்த எங்களுக்கு அவன் கூப்பிட்டவுடனே எல்லோரும் எழுந்து மதுபானம் இருந்த மேசைக்கு சென்றோம்.

    எல்லோரும் தங்களுக்கு தேவையான அளவில் ஊத்தி "கையில கிலாசு கிலாசு ஸ்கொட்ச்சு" என்ற தோரணையில் நின்று அடித்து கொண்டிருந்தார்கள்.

    ஒரு காலத்தில் சுரேஸ் போராட்டத்திற்க்கு தன்னை அர்பணித்திருந்தவன் அவன் மீது ஒரு வித மரியாதை இருந்தது.நாங்கள் இப்படி தண்ணி அடிச்சு சந்தோசமாக வாழும் பொழுது மக்களுக்காக போராடியவன் என்ற எண்ணதில் அவனை மனம் புனிதனாக ஏற்று கொண்டுவிட்டிருந்தது.அதே எண்ணத்தில் அவனருகே சென்று,"எப்படிடப்பா இருக்கிறாய் கன காலமாக காணவில்லை"," "ஊருக்கு போய்விட்டு நேற்றுத்தான் வந்தனான் ஊர் அந்த மாதிரியிருக்கு ஒரு பிரச்சனையும் ஆர்மிக்காரன் நிற்கிறான் தான் ஆனாலும் சனத்துக்கு பிரச்சனை இல்லை நீ போரது என்றால் இப்ப போகலாம்".

    10 தமிழனுக்கு ஒரு இராணுவம் என்றரீதியில் அங்கு அரச படைகள் இருக்கின்றன,அங்கு பிரச்சனை இல்லை இப்ப போகலாம் என சொல்லுகிறான் இவன் எல்லாம் என்னத்துக்கு ஆயுதம் தூக்கினான் எனக்கு புரியவேயில்லை .ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆயுதபலத்தோடு ஆளும் பொழுது அது ஒரு சாதாரண சூழ்நிலை என எப்படி இந்த புனித போராளியால் கூறமுடிகிறது.ஆயுதத்திற்க்கு பயந்து மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தால் உண்மையிலயே அது ஏற்றுகொள்ளக்குடியதாக இருந்திருக்கும்.புலத்திலிருந்து நாம் உயிர் ஆபத்தில்லாமல் ஊருக்கு சென்று திரும்பி வந்தால் தாயக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என அர்த்தமில்லை என்பது எப்படி இவனுக்கு புரியப் போகிறது.
    எனக்கு அடித்த வெறியும் சிறிது நேரத்தில் இறங்கிவிட்டது தொடர்ந்து அவனுடன் பேசுவதை தவிர்த்து கொண்டேன் .இன்னுமொரு கிலாஸ் எடுத்து அடிச்சேன் ,பழைய பாடல்கள் ஒலிக்க தொடங்கின,எழுந்து நடக்கவேணும் ,கையை காலை ஆட்ட வேண்டும் என்ற ஒரு உணர்வு வரதொடங்கியது.வேறு சிலர் அந்த உணர்வுக்கு செயல் வடிவம் கொடுத்தார்கள் .நானும் இணைந்து கொண்டேன்.சிலர் உடற்பயிற்சிசெய்த மாதிரி இருந்தது ஆனால் நான் மட்டும் வடிவாக ஆடுற மாதிரி எனக்கு தெரிந்தது.


    அடுத்த நாள் அதே மண்டபம் எம்மவர்களின் பஜனை வழிபாடு நடைபெற்றது அதற்கு எனது சிறிய தாயாரை அழைத்து சென்றேன்.அவர் இந்த சாமியாரின் தீவிர ரசிகை,பக்தை,, எப்படியாவது எடுத்துக்கொள்ளலாம்.ஆண்கள்அதிகமானோர் வெள்ளை சேர்ட்,வெள்ளை காற்சட்டை அணிந்திருந்தார்கள் .நான் கறுத்த காற்சட்டை ,சாம்பல் நிற டிசேர்ட்டும் அணிந்து சென்றிருந்தேன்.
    வாசலில் எல்லொரும் பாத அணியை கழற்றி வைத்திருந்தார்கள்.நானும் கழற்றி வைத்துவிட்டு சின்னம்மாவின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர்த்தி விட்டு அவரின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.உடனே வெள்ளை சேர்ட் அணிந்திருந்த முதியவர் என்னை பார்த்து மற்ற பகுதியில் இருக்கும்படி சைகை காட்டினர்.பிறகுதான் புரிந்தது நான் இருந்த பகுதி பெண்கள் பகுதியாம் மற்றது ஆண்கள் பகுதியாம்.ஆண்கள் பகுதியிலிருந்து அந்த முதியவரை நோட்டம் விட்டேன்.அவர் பெண்கள் பகுதியை கவனித்து கொண்டிருந்தார் ஆனால் வாய் பஜனை பாடிக்கொண்டிருந்தது.
    மண்டபத்திலிருந்த கதிரைக்கு முதல்மரியாதை கொடுக்கப்பட்டிருந்தது.பட்டால் போர்த்து பூவால் அலங்கரித்து தீபம் வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று இதே மண்டபத்தில் பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பாதணிகளுடன் உள்ளே வந்து தண்ணி அடித்து சினிமா பாட்டு பாடி குத்தடித்தோம்.ஆனால் இன்று அதே இடம் புனிதமாக அறிவித்து பலதடைகளை வித்தித்தார்கள்.இக்குழுவினரின் புனித பிரதேசத்தில் புனிதமில்லாத நானும் ஒரு அங்கத்துவனாக பஜனைபாடி ,பிரசாதம் உண்டு வெளியேறினேன்.அந்த பக்தர்களில் எத்தனை பேர் புனிதர்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்குதான் வெளிச்சம்.
    இன்னோரு நாள் அதே மண்டபத்தில் கலியாண வைபவம் நடை பெற்றது மனைவியுடன் சமுகம்ளித்திருந்தேன்.வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது,வாசலின் இரு பக்கமும் சிறுமிகள் சந்தனம்,குங்குமம்,கற்கண்டு தட்டுகளுடன் வரவேற்றார்கள்.
    சந்தனமும், குங்குமமும் நெற்றியை அழங்கரிக்க,கற்கண்டு வாய்க்கு ருசி அளிக்க ராஜ நடைநடந்து உள்ளே சென்றேன் .மேடையில் மணவறை பூக்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இந்து சடங்குகள் நடைபெறுவதற்கு ஏற்ற முறையில் புனித பிரதேசமாக இருந்தது.
    மணவறையிலிருந்த மாப்பிள்ளையை எங்கேயோ கண்டமாதிரி இருந்தது ,உடனே யார் என அடையாளம் காணமுடியாமல் மனிசியிடம் கேட்டேன் .மனிசியும் தெரியாது எனதலையாட்டினாள்.
    நீண்ட ஆராச்சியின் பின் அவர் வேலை செய்யும் இடம் தெரிய வந்தது, எனது சந்தேகத்துக்கு விடை கிடைத்தது.பலதடவை இவரை வேறு ஒரு பெண்னுடன் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்ததை கண்டது ஞாபகத்தில் வந்தது.அந்த முத்ததின் கவர்ச்சியால் அவர்கள் இருவரும் எனது மனதில் இடம்பிடித்திருந்தார்கள்.
    நல்ல காதலர்கள் என எண்ணியதுண்டு. ஆனால் இன்று வேறு பெண்னுடன் கலியாண மேடையில்,அன்றைய அவர்களின் அந்த முத்தம் நிச்சம் அவர்களை அந்தரங்கம் வரை எடுத்து சென்றிருக்கும் இன்று வேறு பெண்னுடன் புனிதனாக மாப்பிள்ளை கோலத்தில் .....

    அர்ச்சகர் சமஸ்கிருத்தத்தில் மந்திரங்கள் சொல்லிகொண்டிருக்க இன்னுமொரு அர்ச்சகர் உதவி புரிந்துகொண்டிருந்தார்.அந்த அர்ச்சகரை பார்த்த கந்தர்
    "உவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கு"
    "அட எனக்கு இன்றைக்குத்தான் தெரியும்"
    சிறிது நேரத்தின் பின்பு மணமக்கள் அர்ச்சகர் இருவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள். போனகிழமையும் இந்தாளின்ட காலில் சிலர் விழுந்து கும்பிட்டதை கண்டனான் .அநேகருக்கு அர்ச்சகர் என்றால் புனிதர்கள் என்ற நினைப்பு அவர்களும் மனிதர்கள் தப்பு தண்டவாளங்கள் செய்வார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
    கலியாண சாப்பாட்டை ஒரு பிடிபிடித்துவிட்டு மணமக்களை வாழ்த்தி அன்பளிப்பு செய்து வீட்டை வெளிகிட்டேன்.

    வானொலியில் பெண் அறிப்பாளர் நிகழ்ச்சி நடத்தினார்.சில பக்தி பாடல்கள் ஒலிபரப்பி குடும்ப வாழ்வு பற்றிய கட்டுரைகள் ,கணவன் மனைவிக்கு இடையில் அன்பு எப்படி உருவாகும் போன்ற நல்லவிடயங்களை தான் படித்த புத்தகத்திலிருந்து வாசித்து கொண்டிருந்தார்.இந்த பிள்ளை நல்ல கருத்துகள் சொல்லுது என்ற படியே வானோலியின் வோலியுமை கூட்டினேன்.ஒழுங்காக புருசனுடன் குடும்ப நடத்தாமல் வேறு ஒருத்தனுடன் ஒடிப்போட்டு இப்ப எங்களுக்கு அறிவுரை சொல்லுறாள் நீங்களும் அவளின்ட கருத்து நல்லம் என்று கேட்கிறீயள் ,நிற்பாட்டுங்கோ றேடியோவை கத்தினாள் என்ட மனிசி.
    ஏன் ஒடினவள் என கேட்க வேணும் போல இருந்தது ஆனால் கேட்வில்லை வீண்வம்பு என்னத்துக்கு என தவிர்த்துவிட்டேன்.

    "யாழ்களத்தில புனிதம் என்று ஒரு கிறுக்கள் புத்தன் என்ற ஒருத்தர் கிறுக்கியிருக்கார் .கிறுக்களை பார்த்தால் அந்த மனுசன் நல்லவர் போல இருக்கு நீங்களும் வாசியுங்கோ"

    "அது நான் தான் நேற்று கிறுக்கினான்"

    "அட சீ..................நாசமறுப்பு"


    யாவும் கற்பனையே.....மீண்டும் சொல்லுகிறேன் இது கதையல்ல சும்மா எண்ணங்களின் கிறுக்கலே 

    முருகா தி ஸ் டு மச்

    சிட்னி முருகன் கோயில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேர்,தீர்த்தம், பூங்காவனம் என இனிதே நடந்தேறி முடிவடைந்தது .ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடை பெறும் இத்திருவிழா இம்முறையும் மிகவும்நன்றாகவே நடை பெற்றது.
    .நானும் இடைகிடையே சென்று முருகனின் அருள் என்பக்கமும் கிடைக்க ஆவனசெய்தேன்.பேன்ஸ் கார் வாங்குவதற்கு என்பெருமான் முருகனின் கடைகண் பார்வை என் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வருட திருவிழாவில் கூடிய கவனம் செலுத்தினேன்.

    திருவிழா தொடங்க முதல், தாயையும் மகளையும் தற்செயலாக சந்திக்க வேண்டி ஏற்பட்டது.மகள் என்னொடு சினேக பூர்வமாக பழகுவாள்.எங்கே கண்டாலும் அங்கிள் எப்படியிருக்கிறீங்கள் என்று சுகம் விசாரித்துவிட்டுத்தான் செல்வாள் இங்கு பிறந்து வாழ்ந்து வருபவள்.தாயார் ஒரு சின்ன சிரிப்புமட்டும்தான். கதைக்க மாட்டார்,என்னைவிட ஒருஇரு வயது குறைவாக இருக்கும் எனநினைக்கிறேன்.

    "ஹய் அங்கிள் எப்படி இருக்கிறீங்கள்"

    "நல்லாய்யிருக்கிறேன் என்ன இந்த பக்கம்"

    "கோயில் கொடியேறுது தானே அதற்கு பலகாரம் சுட வேணும் என்று அம்மா கூட்டிக்கொண்டு வந்தவ ,பூங்காவனம் சிட்னி யூத்ஸ்தானே செய்யிறவையள் ,பூங்காவனத்திற்கு கட்டாயம் வாங்கோ"

    "ஒம் ஒமொம் கட்டாயம் வாரன்" என்று போட்டு நான் என்ட வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டேன்.
    பூங்காவனத்திருவிழா சிட்னி இளைஞர்களால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றது.சிட்னி முருகனுக்கு கொடியேறினால் சில இளசுகளுக்கும் ,கிழசுகளுக்கும் கொடியேறினமாதிரி உற்சாகத்துடன் நிற்பார்கள்.இந்த இளசுகளும் கிழசுகளுடன் சேர்ந்து பலகாரம் சுட்டு பொலித்தீன் பைகளிலிட்டு அதை அழகுப் பைகளில் போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்கள்.சாதரண திருமண வைபவங்களில் கொடுப்பதற்கு எப்படி அழகு படுத்துவார்களோ அது போல அழகு படுத்தப்பட்டிருக்கும்...திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அதை கொடுப்பார்கள்.
    சிட்னியில் உள்ள தமிழ் வியாபார ஸ்தாபனங்களுக்கும் முருகனின் கொடியேற்றத்துடன் கொஞ்சம் வருமானமதிகமாகும்.அத்துடன் சிட்னி வாழ் முருகன் அடியார்கள் ஆண்கள் ,பெண்கள் எல்லோரும் பக்தி பரவசத்தில் இருப்பார்கள்.அநேக வீடுகளில் மரக்கறிதான் அந்த 10,12 நாட்களும்,அதிகமாக freshகாய்கறி தான் சமைப்பார்கள் ,frozen மரக்கறிகள் வாங்க மாட்டார்கள்.
    அரச ஸ்தாபனங்களில் பணி புரிபவர்கள் 10 நாட்கள் லீவு போடுவார்கள் ,லீவுகள் எடுக்க முடியாதவர்கள் கொடியேற்றம்,தேர்,தீர்த்தம் போன்ற விசேட தினத்தின் பொழுது லீவு எடுப்பார்கள், லீவு எடுப்பது வேலைத்தளங்களில் கடினமாக இருந்தால் இந்த நாட்களில் முருக அடிகாளர் சிக்(sick) லீவில் நின்றாவது முருகனின் அருளை பெறுவார்கள்.பூங்காவனத்திருவிழா இரவில் நடப்பதால் லீவு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை...
    கொடியேற்றுவதற்கு வழமையாக குருக்களை தாயகத்திலிருந்து அழைப்பார்கள்.இந்தமுறை எங்களுடைய லோக்கல் ஜயர் கொடியெற்றம் செய்தார்..ஏன் இந்த முறை இப்படி என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது வந்தார் எங்கன்ட சகலகலா வல்ல கந்தர்.

    "என்ன அண்ண இந்த முறை ஊரிலிருந்து குருக்கள் வரவில்லையோ"
    அக்கம பக்கம் திரும்பி பார்த்து போட்டு சொன்னார் "உங்க பெரிய புடுங்கு பாடு நடக்குது ,அவுஸ் அரசு இனிமேல் குருக்கள் மாருக்கு விசா கொடுக்கமாட்டங்கள் என்று சொல்லி போட்டாங்கள்,கோவில் திருவிழாவுக்கு என வந்தவையள் ஒருத்தரும் திரும்பி போரதில்லையாம்,அதுதான் லோக்கல் குருக்கள் கொடியேற்றினவர்.இந்த முறையும் ஒருத்தர் வந்தார் அவரை கேட்டவையளாம் சிட்னியில் இருக்கும் குருக்கள்மாருக்கு பயிற்சி அளிக்க ,ஆனால் வந்த குருக்கள் எலாது என்று போட்டு திரும்பி போயிட்டாராம்"
    பெருமூச்சவிட்டுப்போட்டு"உன்னிடம் ஒன்றையும் சொல்லகூடாது நீ போய் இணையங்களில் கிறுக்கி போடுவா" என்றபடியே மெல்ல நான் இருந்த இடத்தைவிட்டு அகன்றார்.
    ஓவ்வோரு திருவிழாவும் ஒரு குறிப்பிட்ட சப்பெர்ப்புக்கு (suburb)வழங்கப்பட்டிருக்கும் .அந்த சப்பெரப்பை விட நாங்கள் சிறப்பாக செய்ய வேணும் என்ற எண்ணம் ,போட்டி எல்லா சப்பெர்ப்காரருக்கும் இருந்தது. அதை சிலர் செயலில் செய்தும் காட்டியிருந்தார்கள்
    .ஒருநாள் திருவிழாவில் பல பெண்கள் கிட்டதட்ட ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள்.பிறகுதான் அறிந்தேன் அன்றைய உபயகாரர் சொல்லி வைத்து நீல நிறத்தில் சேலை அனிந்து வந்தவர்களாம் தங்களுடைய திருவிழா ஸ்பேசலிட்டியை காட்டுவதற்கு.

    மதியம் சாப்பிடுவதற்கு சென்றிருந்தேன் வேஜிட்டேரியன் சிக்கன்,பன்னீர்,கயூ போன்ற விலையுயர்ந்த பொருட்களில் சமையல் செய்து அசத்தியிருந்தார்கள் ஊரிலும் இந்த மனப்பாங்கு இருந்தது. அந்த குழுவினர் எத்தனை கூட்ட மேளம் பிடிக்கிறாங்கள் அதைவிட நாங்கள் அதிகம் பிடிக்கவேண்டும்,அவர்கள் எத்தனை சப்பறம் கட்டுறாங்கள் அதைவிட அதிகம் கட்ட வேண்டும்.இப்படி பல போட்டி மனப்பான்மை திருவிழா உபயகாரிடையே இருந்தது. புலத்தில் இந்த போட்டி மனப்பான்மையை கண்டவுடன் ,சந்தனம் மின்சினால் தடவுங்கோடா...... என்ற பழ மொழிதான் எனக்கு ஞாபகத்தில் வந்தது.
    தேர்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது சில பக்தர்கள்.தேங்காய் உடைத்தார்,வேறு சிலர் காவடி எடுத்தார்கள் ,இன்னும் சில பக்தர்கள் அடிகளித்தார்கள்,பிரதட்டடையும் செய்தார்கள் .நீயா நானா என்று போட்டி போட்டு ஆண்கள் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் தேர் வடத்தை பிடித்து அரோகரா சொல்லி இழுத்துகொண்டிருந்தார்கள்.ஊரில் முருகனுக்கு தேர் திருவிழாவில் என்ன எல்லாம் செய்து முருக அடியார்கள் முருகனை மகிழ்வித்தார்களோ அதைவிட அதிகமாகவே சிட்னியில் முருக அடியார்கள் செய்து முருகனை மகிழ்வித்தார்கள்.

    திடிர் என அறிவித்தார்கள் உங்கள் உடமைகளை கவனமாக வைத்திருங்கள் திருடர்கள் ஜாக்கிரதை........

    விலையுயர்ந்த காரில், விலையுயர்பட்டுச்சேலை அணிந்து, லொக்கரில் இருந்த நகைகளை போட்டு கொண்டு உன்னை தரிசிக்க வந்தால் நீ திருடர்களுக்கு அருள் கொடுகிண்றாயே.
    சிட்னி முருகனுக்கு "திருடர்கள் ஜாக்கிரதை" என்ற அறிவிப்பு காதில் அதிக வருடங்களாக கேட்காத படியால் இந்த முறை திருட்டு பக்கதர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்டுத்தி போட்டார்...முருகா உன் விளையாட்டுக்கு ஒரு எல்லையே இல்லையா?என்னதான் இருந்தாலும் தி ஸ் டு மச்....this is too much lord murugaaaaaa........
    வீதியில் கடலை விற்பவர்களும் ..திருடர்களும்தான் இல்லாத குறையாக இருந்தது.திருடர்கள் வந்துவிட்டார்கள் கடலைக்காரிதான் இல்லை அடுத்த வருடம் அதுவும் நடக்கலாம் .....

    திருடர்கள் யார்? மக்கள் பலவித கருத்துக்களை வைக்கின்றனர்....