Friday, September 29, 2023

 எங்கன்ட வோர்ட்

வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன்

திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்"

"இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே"

"எனக்கோ உங்களுக்கோ...." என  ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள்.

"  எம் பெருமான் முருகனையும் அவன் அப்பன் சிவனையும்  அழைத்தால் கோவிலுக்கு  போகப்போறீங்களோ என கேட்க வேணும் அதைவிட்டிட்டு டொக்ரிட்ட  போகப்போறீங்களோ என கேட்பது எந்த கலாச்சாரம்"

 "கலாச்சாரத்தை பற்றி நீங்கள் கதைக்கிறீயல் என்ன கொடுமை சரவணா"

"யார் அந்த சரவணன்? உம்ம‌ட பழைய பொய்பிரண்ட்..." என கேட்டு சிரிச்சு சமாதனம் பண்ணினேன்.

" உந்த மொக்கை ஜொக்குகளை கேட்டு என்ற காது செவிடாபோச்சு, விடியவெல்லன எழும்பி மனுசருக்கு அலுப்பு கொடுத்து கொண்டு போய் பார்க்கிற அலுவல்களை பாருங்கோ"

"இஞ்சாரும் லீவு போட்டுவிட்டு வாரும் முருகன் கோவிலுக்கு போயிட்டு வருவம்"

"மழை வரப்போகுது இன்றைக்கு"

"உந்த மொக்கை ஜோக்கை 25 வருசமா கேட்டு  புளிச்சு போச்சு ஹி ஹி"

ஒருமாதிரி புடுங்குப்பட்டு முருகனை தரிசிக்க புறப்பட்டோம்.கார் திறப்பை மனிசியிட்ட கொடுத்து

"நீர் ஒடுமப்பா"

" ஏன் என்ன நடந்தது உங்களுக்கு இன்றைக்கு? வழமையாக கார் ஓட தரமாட்டியல், பார்டிகளுக்கு போய்விட்டு திரும்பும்பொழுது மட்டும் கொஞ்சம் தடுமாரி தடுமாரி திறப்பை தருவியல்"

  "பார்வை கொஞ்சம் மங்கலாக இருக்குது "

" கண்ணாடி மாத்த‌ வேணுமோ தெரியவில்லை கோவிலுக்கு போய்விட்டு அங்க போவம்"

" சும்மா போம் இன்றைக்கு கோவிலை தவிர வேற இடத்தை போறதில்லை"

'உங்களுக்கு என்ன நடந்தது "

" விசர்கதையை விட்டிட்டு காரை ஓடும்" கொஞ்சம் அதட்டலாக சொன்னேன்  ,திரும்பி என்னை பார்த்து முழுசியவள்

"உந்த ராங்கி கதைக்களுக்கு குறைச்சலில்லை,அங்க ஒன்றும் வேலை செய்தில்லை ,இப்ப கண் வேற பிரச்சனை ,கார் ஒடுறது மட்டும் ஒழுங்க செய்தியல் அதுவும் இல்லை இனி போல கிடக்கு "

வேகமாக நடந்து  கார் கதவை திறந்து ஏறியவள் என் மீது இருந்த கோபம் ஆத்திரம் யாவற்றையும் கார் கதவின் மீது காட்டினாள்.நான் எதுவும் புரியாதவன் போல முன் சீட்டில் ஏறி அமேர்ந்தேன்.

 கார் ஓடிய விதம் ,என் மீது கோபம் இன்னும்  தனியவில்லை என்பதை காட்டியது.இப்படியே விட்டா என் உயிருக்கு உத்தரவாதமில்லை ,முருகனை சிட்னியில சந்திக்க முடியாது அவனை மேலோகத்தில் தான் சந்திக்க முடியும் என உணர்ந்து     

"இஞ்ச உம்மட வட்சப்புக்கு வீடியோ அனுப்பினேன் பார்த்தனீரே"

"இல்லை"

"நல்ல வீடியோ பார்த்திருக்கலாம் ஏன் பார்க்கவில்லை"

"நேரமில்லை"

வீட்டு வேலை செய்ய நேரமில்லை இதுக்குள்ள இவரின்ட வட்சப் வீடியோக்களை பார்த்து கொண்டிருக்க வேணுமாக்கும் என்ற அவளின்ட மைன்ட் வொஸ் எனக்கு விளங்கினாலும் ,அவளின் ஒற்றை பதில்கள் அவளுக்கு இன்னும் ஆத்திரம் குறையவில்லை என்பதை புரியவைத்தாலும் 

நான் சமாதன முயற்சியை கைவிடவில்லை.

 "வயசு போன நேரத்தில ஏன் கோபிக்கிறீர் ,இன்றைக்கு செத்தால் நாளைக்கு பால்" என சினிமா வசனத்தை சொல்ல

"கோவிலுக்கு போற நேரத்தில் ஏன் உந்த செத்த வீட்டு வசனம் "

இந்த நீண்ட பதில் அவள் சமாதானம் ஆகிவிட்டாள் என்பதை உணர்த்தியது.

" அந்த வீடீயோவை பாரும் நான் ஏன் கோவிலுக்கு போக வெளிக்கிட்டனான் என்று புரியும்"

"யார் அனுப்பினது? அப்படி என்ன இருக்கு? ,யார் பேசியிருக்கினம்? சுகி சிவத்தின்டயா?"

"எங்கட சிவா  யூ டியுப்பில் ,'கோவிலுக்கு ஏன் போகவேணும் இந்துக்கள் ' விளக்கம் கொடுத்திருக்கிறான்..கொடுத்திருக்கிறார்.

"என்ன அவனுக்கு பெரிய மரியாதை  கொடுக்கிறீயல் ,'கொடுக்கிறார்' என்று அவனும் நீங்களும் சேர்ந்து ஆடின ஆட்டம் எனக்கும் அவனின்ட மனிசிக்கும் தான் தெரியும் "   

"அது கடந்தவை அதுகளை இப்ப கிளறாதையும் மாற்றம் ஒன்றே மாறதவை "என புரட்சிகர வசனம் பேசி அவளை மடக்க நினைத்தேன்

"இஞ்சப்பா உந்த புருடா கதைகளை தாண்டித்தான் நானும் வளர்ந்தனான் எனக்கு உங்கன்ட வயசை விட   நாலு வயசு தான் குறைவு"

க‌தைத்து கொண்டு இருக்கும் பொழுதே சிட்னி முருகனின் வாசஸ்தலம் எம்மை வரவேற்றது.எம்பெருமான் முருகனின் விசேச தினங்களில் வாகன தரிப்பிடம் எடுப்பது என்பது இலகுவான விடயம் அல்ல இரண்டு மூன்று தடவைகள் சுற்றி வந்தாலும் கிடைப்பது என்பது முயல் கொம்பு போன்றது.

நான் வாகனத்தை ஒடினால் இரண்டு சுற்று சுற்றுவேன் இடம் இல்லை என்றால் காரில் வருபவர்களை முருகனின் வாசல் ஸ்தலத்தில் இறக்கி விட்டு அருகில் உள்ள தெருக்களில் இடம் தேடி அலைந்து நிறுத்தி விட்டு முருகனுக்கு ஹாய் சொல்வது வழமை.

ஆனால் அன்று நம்ம துணை ஒடியதால் அடம் பிடித்து இரண்டுக்கு  மேல் பட்ட தடவைகள் சுற்றினாள் .

அன்று கார் பார்க்கில் நிற்கும் நம்ம தொண்டர்களில் சிலர் மிகவும் அன்பாக பழகினார்கள் சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது .பெண்கள் கார் ஒடினால் முருகனின் பக்தர்கள் மனம் உருகிவிடுவார்கள் போல என நினைத்து,.

 ஏயார் ட்ரைவிக் கொன்ரோலர்ஸ் மாதிரி கண்ணும் கருத்துமாக விரைப்பாக முகத்தை வைத்து  கார் பார்க்கில் வேலை செய்யும் நம்ம அண்ணாமாரே இப்படி விளம்பரத்துக்கு சிரிப்பது போல சிரிக்கின்றனர் என கேட்க வேணும் போல் இருந்தது இருந்தாலும் கோவில் வளாகத்தில் வைத்து ஏன் வம்பு என நினைத்து  முருகனிடம் விடை கிடைக்கும் அவனிடம் விட்டுவிட்டேன்.

 காரை மூன்றாவது தடவையாகவும் திருப்பினாள் தரிப்பிடம் தேடி .பொறுமையை இழந்த நான்

"உதுக்கு தான் நான் ஒரே சுற்றில் பக்கத்து தெருவுக்கு போய் பார்க் பண்ணுகிறனான்"

"பொறுமையாக இருங்கோ முருகன் எனக்கு ஒரு ஸ்பொட் தருவார் "

" அடியே அவருக்கு வேற வேலை இல்லையே உமக்கு கார் ஸ்பொட் தரவே 24/7 வேலுடன் இருக்கிறார்"

"உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் விடுங்கோ எனக்கு நம்பிக்கை உண்டு" மீண்டும் என்னை  விழியால் கோபமாக பார்த்தாள்..

அமைதியான நான் எனது கற்பனை குதிரையை சிறகு அடித்து பறக்க விட்டேன்.

இந்த தரிப்பிடத்தை மூன்று தடவைகள் சுற்றி விட்டோம் பெற்றோல் செலவு .பேசால் முருகனை நடுவில வைத்து ஒரு பெரிய கார் பார்க் கட்டியிருந்தா முருகனை சுற்றின பலன் கிடைத்திருக்கும். அப்படியே டரைவ் துரு தோசை கடையும் போட்டால் நல்ல வருமானம்  வரும்... இதை நான் சிபார்சு செய்ய ஒரு கோஸ்டி சம்மதம் தெரிவிச்சு கவுன்சிலில் அனுமதி எடுக்கும் .இதை விரும்பாத மற்ற கோஸ்டி பெட்டிசன் போடும் ,இன்னோரு கோஸ்டி இவன் யார் கவுன்சிலுக்கு அனுமதி கேட்டு போட உவன் என்னத்தை படிச்சவன் நான் சிறிலங்காவில் பேராதனையில் பட்டம் பெற்றவன் தாமரை கோபுரத்தை வடிவமைத்தவன்  என மார்பு தட்டி குழப்ப .,இதை எல்லாம் விடுப்பு பார்த்த என்னை மாதிரி சிலர் சமுக வலைத்தளங்களில் கிறுக்கி தள்ள  ஓ மை கோட்...

இருவர் எமது காரை நோக்கி வந்திச்சினம் , தரிப்பிடம் தரப்போயினமாக்கும் என நினைத்து கண்ணாடியை இறக்கினேன் . சிரித்தார்கள் நானும் சிரித்தேன் .

"உங்கட்டையும் இருக்குத்தானே"

வழமையாக என்னை கண்டால் வேற்று கிரகவாசியாக்கும் என சிரிக்கமால் சென்று விடுவார்கள் ஆனால் இன்று என் கார் தேடி வந்து உங்களுக்கும் இருக்குத்தானே என கேட்டது என்னை நிலைகுழைய வைத்தது. 

இத்தனை வருசமா ஒருத்தனும் கேட்காத கேள்வியை இவன்கள் கேட்கிறாங்கள் பக்கத்தில் மனிசி வேற, போதாக்குறைக்கு கோவில் இல்லாட்டி ...கேட்டிருப்பேன் பார்த்தால் தான் நம்புவியளோ?

என்னுடைய லோள்ளு குணம் அறிந்தவள் மனைவி முந்தி கொண்டாள்.

"இஞ்சப்பா இவை தேர்தலில் நிற்கினம் எங்கன்ட வோர்ட் கேட்டு நேற்று வீட்டை கொல் எடுத்தவையள்"

"ஒ அவையளோ? உங்களுக்கு தான் போடுவோம்"

" உங்கன்ட வீட்டில நாலு  வோட் இருக்குது பார்த்து போடுங்கோ"

"நிச்சயமாக"

நன்றி சொல்லி விடை பெற்றனர் .

"உவை இரண்டு பேரும் எந்த கோஸ்டி"என மனைவியிடம் கேட்டேன்

"இவையள் இருவரும் இரண்டு வேற வேற கோஸ்டிகளை சேர்ந்தவையல்"

"உவையல் முந்தியும் கனதரம் பதவியில இருந்தவையல் அல்லோ"

" இந்த தடவை கும்பாபிசேகம் வருது அதுதான் உசார ஒடி திரியினம்"

"ஓ ஓ முதல் மரியாதை விசேட கவனிப்பு அதுக்குத்தான் ஒடி திரியினம் ,இந்த தடவையும் கார்பார்க் கட்ட மாட்டினம் "

"காரை கொஞ்சம் தள்ளி நிறுத்தும் .அவையள் பதவிக்கு ஒடி திரிவினம்,இதில உங்கட்ட இருக்கோ என்ற கேள்வி ,நாங்க  கார் பார்க்  பண்ண  ஓடி திரிய வேணும். ஐந்தாறு தடவை சுற்றினாலும்   இடம் கிடைக்காது"

"இந்ததடவை கட்டுவினம்"

"தாலியை கட்டிச்சினம்....உந்த கார் பார்க் பிரப்போசலை கொண்டு வந்த சனத்தில் சிலர் மேல போட்டினம் சில நேர்சிஹோம்,சிலர் டிசேபில் ஸ்பொர்ட் கார் பார்க் பண்ணினம் ,சிலர் வீல்சேர்....

நாங்களும் அந்த லீஸ்ட்டில் வந்தாலும் இந்த கோஸ்டிகள் கார் பார்க் கட்டாதுகள் ...நீர் இறங்கும் நான் பக்கத்து தெருவில் பார்க் பண்ணிபோட்டு வாரன்"

"ஒம் அப்பா பார்க் பண்ணி போட்டு வாங்கோ " என காரிலிருந்து இறங்கினாள்

" என்ன உம்மடை முருகன் ஸ்போர்ட் தரவில்லையே இன்றைக்கு"

" பக்கத்து தெருவில் பார்க் பண்ண உங்களை தூண்டியது எம் பெருமான் முருகன் தானே"