Monday, May 17, 2010

ஆண்டியான கந்தர்..

பூசைக்கு நேரம் போனதை உணர்ந்த கந்தர் ஓட்டமும் நடையுமாக வந்து காலை கழுவி தலையிலும் தண்ணிரை தெளித்து விட்டு அரோகரா என்று தலையில் கையை வைத்து கும்பிட்டபடியே பூசை மணி அடிக்க முதலே முருகனிடம் தனது பிரசனத்தை தெரியபடுத்தி பூசை முடியமட்டும் யாரையும் திரும்பி பார்க்காமல் முருகனுடன் இரண்டர கலந்து விட்டார்.ஜயர் வீபூதி சந்தனம் கொடுக்கும் போது தான் தனக்கு பக்கத்தில் நிற்பவர்களை ஒரு நோட்டம் விட்டார்.தனிமையில் பேச்சு துணைக்கு யாரும் கிடைக்கவில்லை என்று பார்த்து கொண்டு நின்ற சுரேசிற்கு கந்தரை கண்டவுடன் அருகே சென்று என்ன அண்ணை எப்படி சுகம் ஏன் பூசைக்கு கொஞ்சம் "லேட்டா" வந்தனீங்க என்று கேட்டான்.மகள் வேலையால் வந்து கூட்டி கொண்டு வர நேரம் போயிட்டுதோ?சீ..சீ நான் அவளின்ட காரில ஏற ஏலாது என்று சொல்லிபோட்டன்.புது கார் "டோயடா லேட்டஸ் மொடல்" ஆனால் ஜப்பான்காரனின் காரில் எனி மேல் ஏறமாட்டன் என்று போட்டேன்.மருமகன் சொன்னார் தன்னுடைய "வோ வீல் டிரைவில்" கொண்டு போய் விடுறன் என்று அதுவும் ஜப்பான் காரனின்ட தானே அதனால் அதிலையும் ஏற ஏலாது என்று விட்டேன்.பேரன் சொன்னான் தன்னுடைய "போஸ்ஸில்"கூட்டி கொண்டு விடுறன் என்று ஆளை விடுறா சாமி என்று போட்டன்.இப்படி தான் போன கிழமை அவனின்ட காரில ஏறினான் தாத்தா தமிழ் பாட்டு போடட்டோ என்று அது உங்களுடைய ரகுமானின் பாட்டு என்று சொன்னான் நானும் ஓம் போடடா தம்பி என்றேன்.அவனும் "வுல் வொலியூமில" போட்டு விட்டான் என்ற ஒரு செவிப்பறை அன்றைக்கு கேட்காமல் விட்டது தான் அதுக்கு பிறகு இன்னும் அது சரி வரவில்லை.அன்று அவன் ஓடின ஓட்டத்தில் என்ற உயிர் போயிருக்க வேண்டும் ஆனால் அந்த முருகன் தான் காப்பாற்றி வைத்திருக்கிறான் அன்றிலிருந்து அவனின் காரில் ஏறுவதில்லை என்றூ முடிவெடுத்து விட்டேன்.அண்ணை களைத்து போயிட்டியள் போல இருக்கு வாங்கோ பின்னுக்கு போய் "டீ" குடிப்போம் என்று கேட்டான் சுரேஷ்.தம்பி உனக்கு விஷயம் தெரியாதோ உயவள் "டில்மா" தேயிலை வைத்திருக்கீனம் நான் குடிக்கமாட்டன் "டீ" குடிக்காமல் சும்மா இருந்தாலும் இருப்பேன் ஆனால் உவங்களின்ட சிறிலங்கா தேயிலையை மட்டும் குடிக்கமாட்டேன் என்றார் கந்தர்.சரியான குளிராக இருக்கு ஏன் "ஜாக்கேட்" போடாமல் வந்தனியள் இந்தாங்கோ என்னுடைய "ஜாக்கேட்" இதை போடுங்கோ நான் மற்ற "ஜாக்கேட்" காருகுள் இருக்கு எடுத்து கொண்டு வாறன் என்று சுரேஷ் தனது "ஜக்கேட்டை" கழற்ற போனான்.தம்பி இந்த "ஜாக்கேட்" எல்லாம் சீனாகாரன் தான் செய்கிறான் அது தான் நான் போடாமல் வந்தனான்.நீர் போட்டிருக்கிற இந்த "ஜாக்கேட்" சீனாகாரனினது நான் சீனாகரானின்ட சாமாங்கள் ஒன்றும் இப்ப பாவிப்பதில்லை என்று நடுங்கி கொண்டே பதில் கூறினார்.சுரேஷ் கந்தரை மேலும் கீழுமாக பார்த்தான் இதை அறிந்த அவர் என்ன பார்க்கிறீர் இந்தியாகாரனின் வேஷ்டியும்,சேஷ்டும் உடுத்திருக்கிறன் என்றோ?அது எங்களிண்ட தமிழ்நாட்டில தான் தயாரித்திருக்கிறார்கள் அது தான் உடுத்திருக்கிறன்.அப்ப கோவணம் எந்த நாடு என்று கேட்க வேண்டும் போல் இருந்தது சுரேஷியிற்கு முதியவர் என்ற காரணத்தினால் ஒன்றும் கேட்காமல் விட்டு விட்டான்.ஆனால் சுரேஷின் மனதில் முருகனின் ஆண்டி கோலத்தில் கந்தர் தென்பட்டார்.கந்தர் உந்த புறகணிப்பு கொள்கையை கடைபிடிப்பார் எனில் ஆண்டி ஆவதும் நிச்சயம்.

No comments:

Post a Comment