Sunday, April 12, 2020

டொயிலட் டிசு


எப்ப இளைப்பாரலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலை விட்டேழுந்தேன்.எனது வயதையும் இளைப்பாறுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் வயதெல்லையையும் எண்ணிபார்த்தேன் இன்னும் 10 வருடங்கள் வேலை செய்தால் தான் ஓய்வுதியம் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் .சிறிலங்காவிலிருந்தால் நான் இப்ப‌ பென்சனியர் ஆனால் இங்க பொல்லுபிடிச்சு கொண்டு வேலைக்கு போகவேண்டி இருக்கு என சலித்தபடியே காலைக்கடன்களை முடிக்க தொடங்கினேன்.
"டேய் நீ சிறிலங்காவிலிருந்தால் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்குமா?அரச உத்தியோகம் இல்லாவிடின் பென்சனே இல்லை"..
மனச்சாட்சியின் அதட்டலினால் காலைகடன்களை விரைவாக முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட தயாரானேன்.
"இஞ்சயப்பா வரும் பொழுது வூலியில் டொய்லெட் டிசுவும்,தமிழ் கடைகளில் போய் அரிசி ,பருப்புகளை வாங்கி வாங்கோ"
"போனகிழமைதானே எல்லாம் வாங்கினாங்கள் ,நீர் தானே எல்லாத்தயும் வாங்கி கொண்டு வாரனீர் என்ன புதுசா என்னை  வாங்கச் சொல்லுறீர்"
"என்னப்பா நீங்கள் நியுஸ் பார்க்கவில்லையே "
"பார்த்தனான் இவன் ட்ரம்ப் என்னவோ அலட்டிக்கொண்டிருந்தான்,சைனாவில கொரானா நோயினால் ஆயிரம் பேர் செத்து போய்விட்டனர் என்றாங்கள் அதற்கும் எங்கன்ட சொப்பிங்க்கும் என்ன தொடர்பு, அதுவும் முக்கியமா டொய்லட் டிசுவுக்கும்"
"நேற்று இரவு சுதா சொன்னாள் கடையில் சனம் டொயிலட் டிசுவுக்கு அடிபட்டுதுகளாம்"
" எனக்கு உந்த  டியுசு பிரச்சனையா இருக்காது ...அரிசி பருப்புக்களை வாங்கி கொண்டு வாரன்"
 சொல்லியபடி வேலைக்கு புறப்பட்டேன்.வழ‌மையாக காலையில் வேலைக்கு போகும் பொழுது பக்தி பாடல்களை கேட்டுக்கொண்டு செல்வது வழ‌க்கம்..அன்று அவுஸ்ரேலிய தேசிய வானோலியை  ஒன் செய்தேன்.
"கொரானா எனைய நாடுகளுக்கும் பரவ தொடங்கிவிட்டது..அவுஸ்ரேலியாவில் ஒருவர் மரணம்,50 பேர் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்..."
இந்த செய்தி கேட்ட பின்பு கொரனாவினல் அன்றாட வாழ்க்கை பாதிப்படைய போகின்றது என உணர்ந்தேன்.
வேலைக்கு போனவுடன் எல்லோரையும் மீட்டிங்க்கு வரசொன்னார்கள் .நாங்களும் சம்பளத்தை கூட்டி தரப்போகிறார்கள் என எண்ணியபடி சென்றோம்.எல்லோரையும் பக்கவார்ட்டில் கை நீட்டி நிற்கும் படி சொன்னார்கள்.ம‌னிதவள அதிகாரி கையில் சில கோப்புக்களுடன் வந்தார்.
கொரானா நோய் பரவுவதை தடுக்க சில வழிமுறைகளை சொன்னார்.கை குழுக்குதல்,முத்தமிடல்,நெருக்கமாக இருந்தல் போன்றவற்றை தடுக்கும் படி .‌
எனது பாசத்தை சக தொழிலாளிக்கு குறிப்பாக பெண் தொழிலாளருக்கு  தெரிவிக்க முடியாமல் செய்து விட்டதே இந்த கொரனா என்ற உள்ள குமுறலுடன் வெளியேறினேன்.
மதிய இடைவெளிக்கு அருகான்மையிலிருக்கும் கொஸ்ட்கோ,வூல்வேர்த் போன்றவற்றில் டொயிலட் டிசு வாங்கலாம் என சென்றேன் .வாகனங்கள் வரிசையாக த‌ரித்து நின்றன .கடைகளை விட்டு வெளியேறுபவ‌ர்கள்  இரண்டு மூன்று பெரிய டொயிலட் டிசுக்களை எடுத்து சென்று கொண்டிருந்தனர் .அவர்களில் அநேகர் ஆசியவம்சவாளியினராக இருந்தனர்.டொயிலட் டிசு வாங்கும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் வேலைஸ்தலத்திற்கே சென்றேன்.
மீண்டும் மேலதிகாரி வந்தார் அவரின்ட மேலதிகாரி மீட்டிங் வைக்க போறாராம் எல்லோரயும் அழைத்து கொண்டு மீட்டிங் ரூமூக்கு வா என்றார்...மீட்டிங் ரூமில் தள்ளி தள்ளி அமர்ந்தோம் CEO.... வந்தார்
"ஏற்கனவே புஸ்வயர் காரணமாக எமது பிசினஸ் பாதிப்படைந்துள்ளது ,இப்பொழுது கொரனா என்ற புது பிரச்சனை வந்துள்ளது  நீங்களே பார்த்திருப்பீர்கள் ..உற்பத்தி செய்யும் பொருட்களை வைப்பதற்கே இடம் இல்லாது இருக்கின்றது.விற்பனை அதிகமில்லாத காரணத்தால் நாம் உற்பத்தியை தற்காலிகமாக குறைக்கவுள்ளோம் அதன் விளைவாக தற்காலிக தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தபோகின்றோம். நிரந்த பணியாளர்களை பற்றி நாளை அறியத்ருகிறோம்" என்றார்..
நடக்கிறது நடக்கட்டும் என்று மனத்தை திடப்படுத்திக்கொண்டு வீடு  செல்ல தயாரானேன்.மனைவி கூறிய பொருட்களின் ஞாபக‌ம் வரவே வீடு செல்லும் வழியில் வரும் முதலாவது கடைக்கு போனேன் மாலை நேரம் என்றபடியால் சனம் குறைவாக இருக்கின்றதாக்கும் என எண்ணியபடி உள்ளே சென்றேன்,வழமைக்கு மாறாக பொருள்கள் இல்லாத செல்வ்கள் தான் இருந்தன.ஏமாற்றத்துடன் அடுத்த கடைக்கு காரை விட்டேன்.அங்கும் அதே நிலை அன்று மட்டும் நான் நாலு ஐந்து கடைக்கு போனேன் எதிலும் டொயிலட் டிசு கிடைக்கவில்லை.
மனிதன் உணவை அழைந்து திரிந்து சேர்த்து வைப்பதில் நியாயம் உண்டு அவசியம் தேவையான ஒர் விடயமும் ஆகும்,. டொயிலட் டிசுக்கு அழைந்து திரியும் என்னை நினைத்து சிரிப்பதா அழுவதா குழம்பி போயிருந்தேன்.
வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் அரிசி பருப்பு சீனி போன்றவற்றை சற்று அதிகமாக வாங்கி கொண்டு வந்தேன்.
கைதொலைபேசி அடித்தது
"‍ஹலோ சொல்லும்"
"எல்லாம் வாங்கிட்டிங்களோ?"
"  தமிழ் கடை சமான்கள் மட்டும் வாங்கினான் அங்கையும் சமான்கள் முடியுது"
"எல்லா கடையிலயும் பார்த்தீங்களே,நாளைக்கு கெர்வூயு போடப்போறாங்கள் போல இருக்கு "
"கனகுமாமா சொன்னவர்"
"என்ன உம்மட மாமாவே   பிரைமினிஸ்டர்"
"உந்த ளொள்ளுக்கு மட்டும் குறைச்சல் இல்லை,மாமா நாலு 32 இருக்கிற பக் வாங்கிட்டாராம்"
"அது தான் எனக்கு கிடைக்கவில்லை"
"சும்மா அவரை சாட்டாதையுங்கோ நீங்கள் முதலே போய்யிருந்தால் கிடைச்சிருக்கும்"
"அவர் நாலு வைச்சிருக்கிறார் தானே மருமகளுக்கு ஒன்றை  தரச்சொல்லும்"
"அவர் வாங்கினதை உங்களுக்கு ஏன் தரவேணும் சரி சரி இன்னும் அரைமணித்தியாலத்தில் என்னை வந்து பிக்கப் பண்ணுங்கோ"
"ம்ம் பொம்பிளை பிக்கப் பண்னுறதில்லையே என்ட காலம் போகுது ,சரி போனை கட் பண்ணும் வீட்டு போன் அடிக்கின்றது."
ஒடிப் போய் நம்பரை பார்த்தேன் மாமா என்று இருந்தது.நான் அதை எடுக்கவில்லை.சிறிது நேரத்தில் நின்றுவிட்டது.
மீண்டும் கைதொலைபேசி அடித்தது,
‍"ஹலோ இப்பதானே கதைச்சி போட்டு வைத்தனீர்"
"இஞ்சயப்பா கிச்சினுக்குள்ள போய் நொட்டை தீணிகளை சாப்பிட முதல் குளியுங்கோ மற்றது உடுப்பையும் வொசிங் மெசினுக்குள் போடுங்கோ"
"என்ன  இதையும் மாமாவே சொன்னவர்"
"உங்களுக்கு அவரோட ஒரு இராத்தல் ஏனோ தெரியவில்லை ,அது சரி யார் வீட்டு போனுக்கு அடிச்சவையள்?"
"வேற யார் உம்மட மாமா தான்"
" ஏன்னவாம்'
" நான் எடுக்கவில்லை சும்மா அலட்டிகொண்டு இருப்பார்"
"பாவமப்பா எடுத்திருக்கலாமே வயசு போனதுகள் ஏதாவது கதைக்க ஆசைபடுங்கள் "
"உமக்கு தெரியும்தானே எனக்கு  ஆட்களுடன் கதைக்கிறது என்றால் அலர்ஜி என்று"
"ஓ ஓ தெரியும் தெரியும் அவரோட தண்ணி அடிக்கிற பொழுது யார் அதிகம் அலட்டுறது என்று  ...  வீட்டு போன் அடிக்கிறது மாமாவாகத்தான் இருக்கும் போய் எடுங்கோ "
"‍ஹலோ அண்ணே எப்படி"
"தம்பி என்னடாப்பா கொரானா உலகத்தையே தலைகீழாக மாற்றிவிட்டுது போல கிடக்கு டொயிலட் டிசு ஒரு இடத்திலயும் இல்லையடாப்பா"
"என்ன அண்ணே டொயிலட் டிசு  கடையில் இல்லை என்றா போல உலகம் தலைகீழா போயிற்று என்று அர்த்தமெ"
"நீ செய்தி ஒன்றும் கேட்கிறதில்லையே இன்றைக்கு ம்ட்டும் உலக பொருளாதரத்தில் நூறு பில்லியன் வருமானம் விழுந்து போய்ட்டாம்  இப்படியே மூன்று மாசம் போனால் உலகேமே படுத்திடும்"
"உந்த டிசுவில் இவ்வளவு விசயம் இருக்கே?..பிறந்த நாளிலிருந்து ஒரு முப்பது முப்பதைந்து வருசமா தண்ணீரில் தானே எல்லாம் ...இங்க வந்த பின்பு தானே டிசு விளையாட்டு"
"உனக்கு தண்ணீர் சரியா இருக்கும் எனக்கு டிசு முக்கியம் நான் வந்து 40 வருசமாகிறது....தண்ணீர் என்று சொல்லத்தான் ஞாபகம் வருகின்றது எங்கன்ட மற்ற தண்ணி வாங்கி வைச்சிருக்கிறீயோ"
"அண்ணே சும்மா போங்கோ ,ம‌னிசி ஏற்கனவே கொதியில் நிற்கின்றார் சொன்ன சமான்களை வாங்கி வைக்கவில்லை என்று இதுக்குள்ள நான் கிளாஸை தூக்கினால் ,சன்னதம் ஆடுவாள்"
"என்னடா சும்மா பயந்து சாகிறாய் ,உனக்கு இரண்டு பக் டொயிலட் டிசு ,இரண்டிலும்32 இருக்கு கொண்டு வாரன்
நீ இரண்டு கிளாசை ரெடி பண்ணு"
"அப்ப உங்களுக்கு டிசு தேவையில்லையோ"
"  நாளைக்கு காலையில் போய் இன்னும் நாலு வாங்கி கொண்டு வ‌ந்திடுவன் நீ நான் சொன்னதை ரெடி பண்ணு"
"நான் போய் உங்கன்ட மருமகளை கூட்டிகொண்டு வாரன் ,நீங்கள் டிசுவை மறக்காமல் கொண்டு வாங்கோ"

அரை போத்தலில் டிசு கிடைச்சிட்டுது என்ற மகிழ்ச்சியுட‌ன் மனைவியை அழைத்து வர‌ சென்றேன் ,இரண்டு மூன்று தடவை கைத்தொலைபேசி சிணுங்கியது பெயரை பார்த்தேன் ஆத்துக்காரியின் பெயர்.
வேலை முடிந்து வாசலில் வந்து நின்றாள் அவளை ஏற்றிக் கொண்டு வீடு சென்றேன்.
"எத்தனை தரம் போண் பண்ணினேன் ஏன் எடுக்கவில்லை"
"எடுத்தனீரோ கேட்கவில்லை "
" காரை  கடைக்கு விடுங்கோ சமான்கள் வாங்க வேணும்"
"  .அங்க ஒரு சாமனும் இல்லையப்பா .அரிசி பருப்பு எல்லாம் வாங்கிட்டன்..கனகண்ணர் வாரன் என்று சொன்னவர் கெதியா வீட்டை போவம்"
"இப்ப அவர் ஏன் வாரார்? வீட்டை சாமன்கள் இல்லை சொப்பிங் போகவேணும் நீங்கள் அவரைச் வர‌ச் சொல்லி போட்டு வந்திருக்கிறீயள்...அந்த மனுசன் வந்தால் போகாது கதைச்சுகொண்டு இருக்கும் உங்களுக்கு எப்ப என்னசெய்யிறது என்று தெரியாது "
கோபத்தில காரின்ட சட்டேர்ஸை இறக்கி ஃரேஸ் காற்றை அனுபவித்தாள்.
"ஏன் சட்டேஸை இறக்கினீர் பூட்டும்,டஸ்ட் வருது"
சட்டேர்ஸை பூட்டியபடியே
"இப்ப அவர் வந்து வேற அலட்டிக் கொண்டு இருப்பார்,சொல்லிப்போட்டன் அவரை கண்டவுடம் இளிச்சுகொண்டு கிளாசை தூக்கிறதில்லை"
"நீர் தானே சொன்னீர், பாவம் வயசு போன நேரத்தில் கதைக்க ஆள் வேணும் அவருக்கு என்று"
"கடைசியில என்னில பிழை போடுங்கோ "
"என்ட மாமா இல்லை உம்மட மாமா....பாவம் தானே"
"ஏன் கொதிக்கீறீர் ... டிசு இல்லாட்டி ,தண்ணீயை பாவிக்க வேண்டியாண்"
" சும்மா ஊர் காய்களை மாதிரி ஊசூரு கதைகளை கதைக்க வேண்டாம் ...தண்ணீரை பாவிக்க சொல்லுறீயள் எதோ வீட்டு டொயிலட்டில் bidet fix பண்ணியிருக்கிற மாதிரி"
 " கொரானா பிரச்சனை முடியட்டும் அதை ஒன்று போடத்தான் வேணும்"

வீட்டு வாசலில் மூன்று பெரிய பன்டில் டொயிலட் டிசு உடன் கனகர் நின்றார்.

" டொயிலட் டிசுவை கண்டதில் மனிசி என்னை மறந்து, மாமா வாங்கோ இருங்கோ சாப்பிட்டு விட்டுதான் போகவேணும் என பாசமழை பொழிய நான் எனது பங்குக்கு
"மாமா வாங்கோ"...என அழைத்தபடி இரண்டு கிளைசை  செல்வில் இருந்து எடுத்தேன்...
கனகுமாமாவுடன் கொரானா ஆராச்சியும் உலகபொருளாதார‌ அலட்டலும் அடுத்த முறை தொடரும்🤣

10 comments:

  1. இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நன்றிகள் ..உங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...

    ReplyDelete
  3. இந்தக் குசும்புக் கதைகளுக்கும் மட்டும் குறைச்சல் இல்லை...
    எங்கட வீட்டுக் கதையை ஆரோ ஒழிச்சு நிண்டு கேட்ட மாதிரி இருக்கு! :)) அவ்வளவு தத்ரூபம்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. கடைசியில் ரிசுப்பேப்பருக்கு அடிபட்ட கங்காரு தேச காட்சிகள் கூட ஹிட்ஸ் ஆச்சு![[ கொர்னா ஒரு ஆட்டம் காட்டுது!

    ReplyDelete
    Replies
    1. உண்மை... முன்பு 32 அல்லது 48 என் பெரிய பொதிகளாக பக் பண்ணி வைத்திருப்பார்கள் தற்பொழுது பத்து பத்தாக பக் பண்ணி ஒரு ஆள் இரண்டு பக் தான் வாங்க முடியும்....இதனால் சகலருக்கும் கிடைக்க கூடியதாக இருக்கின்றது...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. பாவம் வயதானவர்களை அரவணைத்து கவனிக்க மறக்கின்றது அவசர உலகம்!

    ReplyDelete
  6. "டொயிலட் டிசு" ஐ
    பேசு பொருளாக்கி
    பதிவைச் சிறப்பித்துள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. தற்பொழுது ஓரளவு கிடைக்ககூடியதாக இருக்கின்றது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete