Thursday, February 13, 2020

என்ன புஷ்வயராம்

தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது .
ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள்
வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங்  ஆன்சர் என்று வந்தது...
 இவனுக்கு ஆன்சர் ப‌ண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது  அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால்  எனது காலக‌ஸ்டம்  மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் ப‌ண்ணிவிட்டது.
"‍ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்"
"எங்களுக்கு பிரச்ச்னை இல்லை நாங்கள் சிட்டியில் தானே இருக்கிறம்,புஷ்வ‌யர் காடுகளுக்குள் தானே நட‌க்கின்றது அதை விட்டுத்தள்ளு நீ எப்படி இருக்கிறாய்"
"இங்க கனடா டிவியில் ஒரே அவுஸ்ரேலியா புஷ்வயரை த்தான் காட்டி கொண்டு நிற்கிறாங்கள்,சில சனம் அகதியா வெளிக்கிடுதுகள் போல இருக்கு"
"சில வெள்ளைகள் காடுகளுக்குள் வீடுகளை கட்டி வாழ்ந்து கொண்டிருக்குங்கள் அதுகள் தான் பாதிக்கப்பட்டிருக்குங்கள்"
"மச்சான் அங்க இருக்க பிரச்சனை என்றால் எங்கன்ட கனடாவுக்கு வாடாப்பா ,உண்மையிலயே கனடா அந்த மாதிரியான நாடு புஷ்வயர்,சுறாவளி,வெள்ள பெருக்கு என்று ஒரு கோதாரியும் இல்லை"
"கனடா உங்கன்ட நாடோ?"
"பின்ன "
"என்கன்ட அவுஸ்ரேலியாவும் திறம் கண்டியே நான் சிட்னியில சிட்டியில் இருக்கிறன் புஷ்வயர் எட்டியும் பார்க்காது"
"சரி மச்சான் பத்திரமா இரு வெளிக்கிடவேணும் என்றால் உடனே கனடாவுக்கு வா,என்ட வீட்டில நிற்கலாம்...Bye."
ஊடகங்கள் நல்லாத்தான்  பெடியை பயப்ப‌டுத்திபோட்டுது என நினைத்து கொண்டு மீண்டும் முகப் புத்தகத்தில் முகத்தை நுழைத்தேன்...மீண்டும் மெசன்ஞரில் இங்கிலாந்து நண்பனிடமிருந்து அழைப்பு
" ஹலோ மச்சான் என்னடாப்பா நீ face book   லயும் whatsapp லயும்  நிற்கிறாய் அவுஸ்ரேலியா பத்தி எறியுதாம் என்று இங்க நியூஸில சொல்லிக்கொண்டிருக்கிறாங்கள் ..நீ விளையாடிக்கொண்டிருக்கிறாய்"
அவ‌னுக்கும் அதே பதிலை சொல்லி நான் சிட்னியில் சிட்டியில் இருக்கிறன் என்று ஒரு கெத்தை காட்டினேன்.
" நான் சிட்டியில் இருப்பதால பிரச்சனை இல்லை, கொஞ்சம் காடுகள் அழிந்து போய்விட்டது "
"ஒம்டாப்பா மில்லியன் கணக்கில் மிருகங்கள் செத்து போயிட்டுதாம் ...மிருகங்கள் தான் பாவம் "
"உலகில் மனிதர்கள் கொத்து கொத்தாய சாகிறார்கள் நீ என்னடா என்றால் மிருகங்களுக்கு பாவம் பார்க்கிறாய்"
"என்ட நாய் போன‌கிழ‌மை செத்து போய்விட்டது வீட்டில் நாங்கள் ஒருத்தரும் இர‌ண்டு நாளாக சாப்பிடவில்லை அவ்வளவுக்கு நாங்கள் மிருகங்களுடன் பாசமா இருக்கிறோம்"
"நல்லவிடயம் மச்சான், அது சரி உங்க இப்ப எத்தனை மணி ?"
"ம‌தியம் 12 ஆகிறது"
"சாப்பிட்டாச்சே"
"இல்லைடாப்பா இன்றைக்கு எங்க‌ன்ட கிரிக்கட் கிளப் பெடியள் பார்க்கில BBQ போடுறாங்கள் இரண்டு பியரை அடிச்சு போட்டு வர இன்றைய பொழுது சரியாகிவிடும்"
"animal lover என்று சொல்லுறாய் நீ இப்ப மச்சம் சாப்பிடுறதில்லையே"
"சும்மா போடா Barbequeக்கு போறதே அதுக்குத்தானே,சரி மச்சான் நேரம் போகுது நான் பிறகு எடுக்கிறேன்"
முகப்புத்தகத்தை மூடி வைத்து போட்டு whastapp யை திறந்தேன் 65 விடுப்பு உனக்காக காத்திருக்கு என்று அது சொன்னது.
ஐந்தாறு குறுப்பில் இருந்தால் இப்படித்தான் விடுப்புக்கள் வ‌ரும் என மனம் சொன்னது. ..வேலை குறுப்,பாடசாலையில் படிச்ச பெடியளின்ட குறூப்,சொந்தகாரங்கள் குறூப்,பக்கத்துவீட்டுக்காரிகள் குறூப்,அங்கத்தவராக இருக்கும் சங்கங்களின் குறூப்....இப்படி பல....சில சமயம் ஒரே விடுப்பை எல்லா குறூப்பும் பகிர்ந்து கொண்டிருப்பினம் அதுதான் கொஞ்சம் கஸ்டமா இருக்கும் மற்றும்படி விடுப்பு அறிவது என்றால் ஐயாவுக்கு அலாதி பிரியம்...
எல்லா விடுப்புக்களையும் தட்டி பார்த்து கொண்டிருக்கும் பொழுது அடுத்த whatsapp call வந்தது ...என்ன என்று தான் கண்டுபிடிக்கிறாங்களோ தெரியவில்லை நான் வெட்டியா இருக்கிறேன் என்று புறுபுறுத்தபடி பெயரை பார்த்தேன் குகன் from USA இருந்தது answer அழுத்தி புஷ்வயரைப்பற்றித்தான் இவனும் கேட்க போறான் என்று நினைத்து
" ஹலோ மச்சான் நான் இருக்கிரது சிட்டியில்  இங்க புஷ்வயர் இல்லை"
"அடே என்னடா நான் சும்மா சுகம் விசாரிப்போம் என்று எடுத்தா நீ புஷ்வயர் மெஸ்வயர் எங்கிறாய்"
"கனடாகாரர்,லண்டன்காரர் எல்லாம் எடுத்து புஷ்வயரைப்பற்றித்தான் கேட்டவங்கள்...அது தான் மச்சான்"
"இங்கயும் புஷ்வயர் வாரதுதான் நாங்கள் எங்கன்ட பாடு ,தாயகத்தில சனம் பாடுபடும் பொழுதே கண்டுக்கவில்லாயாம் இதில புஸ்வயரை பற்றித்தான் கண்டுக்க போறம்'"
"சரியா சொன்னாய்"
" கிறிஸ்மஸ் கொலிடெக்கு வெளியால எங்கேயும் போறீயோ"
"ஒம்டாப்பா நாளைக்கு வெளிக்கிடுகிறேன் ,சிட்டியிலிருந்து ஆறு மணித்தியால ஓட்டம் விக்டோரியா போடருக்கு கிட்ட "
"சரிடாப்பா நான் வைக்கிறேன் நீ திரும்பி வந்த பிறகு எடு"
(Eden is a coastal town in the South Coast region of New South Wales, Australia. The town is 478 kilometres south of the state capital Sydney and is the most southerly town in New South Wales),ஏற்கனவே ஒழுங்கு செய்த கிறிஸ்மஸ் விடுதலைக்கான பயணத்தை அடுத்தநாள் தொடங்கினோம் .Eden என்ற சவுத்கோஸ்ட் நகரத்தில் விடுதலைய கழிப்பதாக‌ முடிவெடுத்து அங்கு தங்குவதற்கு வீடு  ஒழுங்கு செய்திருந்தனர் கந்தர் குடுமபம் . சிட்னியிலிருந்து தெற்கு கரையோரமாக உள்ள சில நகரங்களில் காட்டுதீ காரணமாக பாதைகள் மூடியிருந்தபடியால்  அவுஸ்ரேலியா தலைநகரம் கன்பரா ஊடாக எமது பயணம் அமைந்திருந்தது. நாலு காரில் எடன் நோக்கி எமது பயணம் உறவினருடன் ஆரம்பமானது .கன்பராவில்  உள்ள மக்டோனாலில் மதிய உணவை உண்பதற்காக வாகனத்தை நிறுத்தினோம்.காரை விட்டு வெளியே வந்த பின்புதான் , வழ‌மைக்கு மாறானா வெப்பநிலை  நிலவுகின்றது என்பதை உணர முடிந்தது.எல்லோரும் மக்டோனாலினுள் போட்டி போட்டுக்கொண்டு ஒடினோம் சாப்பிடுவதற்கு  அல்ல வெப்பம் தாங்க முடியாமல்,உள்ளே சென்று குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து மனைவி கொண்டு வந்த பேகரை சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது
"  என்ன வெட்கை சிட்னியை விட இங்க கொளுத்து வாங்குது" என்ற படி வந்தார் கையில ஒரு சிறிய சான்விட்ச்சும் தண்ணீர் பொத்தலுடனும் உடன்.வழமையாக டபிள் பேகரும் கொக்கும் அடிக்கும் காய் இன்றைக்கு சான்விட்ச்சும் கொக்குடனும் நிற்பதை கண்ட என‌க்கு கன்பராவெப்பநிலையை விட இது பெரிய விட‌யமாக இருந்தது.
"ஒம் சரியான வெட்கையா இருக்கு 40 இருக்குமோ"
"சும்மா விசர் கதை கதைகிறீர் சிட்னியில் 40 பிறகு கொள்பேர்னில் 42 இங்க 46 காட்டுது
என்ட‌ காரில் "  என புள்ளிவிபரம் சொன்னார்.
"என்ட காரிலயும் காட்டியிருக்கும் நான் கவ‌னிக்கவில்லை"
"உம்மட காரில் இருக்கோ தெரியவில்லை நான் போன கிழமை புதுசு எடுத்தனான்"
"என்ன டோயோட்டாவோ"
ஒரு சிரிப்பு சிரிச்சு போட்டு
" நான் வந்த நாள் தொடக்கம் பெண்ஸ் தான் ஒடுகிறேன் ,இப்ப அவிட்டதும் லெட்டஸ்ட் சிறிஸ்"
" நான் கவ‌னிக்கவில்லை  "
" கவனிக்கவில்லையோ உம்மை எத்தனை தரம் ஒவர்டேக் பண்ணிகொண்டு வ‌ந்தனான் கவ‌னிக்கவில்லை என்று சொல்லுறீர் "
என்ன உதுல நின்று அவரோட அலட்டி கொண்டிருக்கிறீயள் நேரம் போகுது என கந்தரின்ட மனிசி கத்த‌
"இவள் ஒருத்தி ஐந்து நிமிடம் ஒருத்தருடன் கதைக்க விடமாட்டாள்" என புறு புறுத்து கொண்டு எழும்பினவர்
"உந்த வெய்யிலுக்குள்ள ந‌டந்து போனால் கறுத்து போய்விடுவேன் "என்று சொல்லிய படி ஓடிப்போய் காருக்குள் ஏறினார் .
அவரை தொடர்ந்து நாங்களும்  வெளியேறி எமது பய‌ணத்தை தொடர்ந்தோம்.போகும் வழியில் காடுகள் தமது பச்சை தன்மையை இழந்து மழைக்காக ஏங்கி கொண்டிருந்ததை பார்க்க கூடியதாக இருந்தது..

நீச்சல் குளத்துடன் கடற்கரைக்கு அருகாமையில் எமது வாடகை வீடு அமைந்திருந்தது.உள்ளே சென்று பொருட்களை இறக்கி வைத்து  வீட்டை சுற்றி பார்த்துவிட்டு,இரவு உணவு வீட்டில தயாரிப்போமா மக்கிக்கு போவோமா என்று நான் கேட்க‌
"நான் மரக்கறி ஸ்டிம் பண்ணி சாப்பிட போறன் ,நீங்கள் போற‌து என்றால் போங்கோ" என்றார் கந்தர் .
உண்மையிலயே அவரின்ட நடத்தையில் பாரிய வித்தியாசத்தை இந்த தடவை பார்க்க கூடியதாக இருந்தது.இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தான் தெரியாமல் இருந்தது  மலிந்தால் சந்தைக்கு வ‌ரும் தானே   என நினைத்து விட்டு அவரிடம் நான் இது பற்றி கேட்கவில்லை...
எங்களுடன் வந்த இன்னுமோரு உறவு சொல்லிச்சு
"அவர் மரக்கறி அவிச்சு சாப்பிடட்டும் நீர் வாரும் ஐசே போய் எங்கன்ட அலுவலை பார்த்து போட்டு வருவம் என்று"

""
நாங்கள் எங்கன்ட அலுவலை பார்த்து போட்டு ஸ்டேடியா அதே வீட்டுக்கு வந்து சேர்ந்தோம் ,கந்தரை தேடினேன்
"அவர் கார் ஒடி கலைத்துவிட்டார் "என கந்தரின் மனைவி சொன்னார்.
"எங்க போனீங்கள் இவ்வளவு நேரமா சொல்லவுமில்லை நான் தேடிக்கொண்டிருக்கிறேன் " என்றால் என்ட‌ மனிசி.
"நான் சொல்லி போட்டுத்தான் போனானான் உமக்கு கேட்கவில்லை போல, மொபைலுக்கு அடிச்சிருக்கலாமே"
"மொபைலை கொண்டு போனால் தானே ,அது இங்க இருக்கு"
உண்மையிலயே மறந்து போனது போல பொக்கற்றை தட்டி பார்த்த பிறகு சொன்னேன்
"விட்டிட்டு போய்ட்ட‌னே?"
"அது சரி புது இடங்களில் இருட்டுக்குள்ள எங்க சுற்றிகொண்டிருக்கிறீயள் வ‌ந்து சாப்பிட்டு போட்டு படுங்கோ"
"நான் என்ன‌ குழந்தை பிள்ளையே "
" கந்தண்ணையை பாருங்கோ வந்தார் சாப்பிட்டு போட்டு படுத்திட்டார் ,தண்ணி வெண்ணி ஒன்றுமில்லை அவரின்ட ம‌னிசி கொடுத்து வைச்சவர்"
" அப்ப அவரை கட்டியிருக்கலாமே "
"கோலிடெ வந்த இடத்தில சும்மா கொளுவாமல் போய் படுங்கோ"
என்ன என்று கண்டுபிடிக்கிறாளாவையளோ தெரியவில்லை என மனதில் நினைத்தவாறு நித்திரா தேவியை தழுவினேன்.
விடுதலை நாட்களிலும் காலை ஐந்து மணிக்கு எழும்பிவிடுவேன் ,கோப்பியை  குடித்து கொண்டு இயற்கையை ரசித்தபடியிருந்தேன்.
"என்னப்பா உங்களுக்கு நித்திரை வராட்டி நித்திரை கொள்ளுற ஆட்களையாவது படுக்க விடுங்கோ"
"இஞ்சாரும் சண்ரைஸ் இன்னும் பத்து நிமிசத்தில் வருமாம் பார்க்கவில்லையா?"
"ஏன் சிட்னியில் சண் ரைஸ் பண்ணிறதில்லையே"
"இது கொஞ்சம் வடிவா இருக்குமாம்"
பதில் வரவில்லை  கொரட்டை தான் வந்தது.

னியாக இருந்து சூரிய உதயத்தை சித்து கொண்டிருந்தேன் ...அதை பார்த்தவுடன் ஒரு குட்டி கவிதை எழுதி
கடல் கடந்து வந்து
கடற்கரையில் அமர்ந்து
கதிரவன் வரவை
காலை காட்சியுடன்
காண்பதற்காக‌
கண் விழித்து 
காத்திருக்கையில் அவனோ
கார்மேகத்தினுள் மறைந்திருந்து 
கடுப்பேத்துகிறார்...

கந்தரின்ட வட்சப்புக்கு அனுப்பினேன்...
அவர் படித்து போட்டு பதில் அனுப்பினார் சனம் புஷ்வயரில் கஸ்டப்படுகிதுகள்...நீர் குடிச்சு கும்மாளம் அடிச்சு கொண்டு கவிதை எழுதிகிறீர் என்று பதில் போட்டார்..
ஐசே நான் வன்னியில் பிரச்சனை நடக்கும் பொழுது கொழும்பில் போய்நின்று போட்டு அவுஸ்ரேலியாவுக்கு வந்து சிறிலாங்கா அந்த மாதிரியிருக்கு என்று சொன்னா ஆள்....என பதில் போட்டேன்....

இன்னும் பதில் வரவில்லை மத்தியாணம் சாப்பிட்ட பிறகு வரும் 

7 comments:

  1. நாட்டில் எவ்வளவோ இழப்பை பார்த்தாச்சு இப்ப கொஞ்சம் அல்ல அதிகமாகவே நம்மவர்கள் நடிக்கின்றார்கள் மழை/வெயில்/என்று.

    ReplyDelete
  2. கார் விற்கப்போறீங்கள் போல ![[[[[

    ReplyDelete
  3. வாட்சாப்/மெசன்சன்சர் எல்லாம் தொல்லைதான் போலும் ஓய்வை நல்லபடியாக பயன்படுத்த முடியாது இருக்கு.

    ReplyDelete
  4. சூரிய உதயத்தை ஊரில் பார்த்து சலித்தாச்சு.

    ReplyDelete
  5. நன்றி நண்பரே வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

    ReplyDelete
  6. (சூரிய உதயத்தை ஊரில் பார்த்து சலித்தாச்சு.
    )
    காசு செலவளித்து சூரியனை பார்த்தால் தான் நிறைவு பாருங்கோ

    ReplyDelete
  7. சிறப்பான பதிவு
    சிந்திக்க வைக்கிறது,

    ReplyDelete