சிட்னியில் இப்ப குளிர்காலம் தொடங்கிவிட்டது ,சனி,ஞாயிறுகளில் வீட்டுக்குள்ள அடைபட்டு இருக்கவேண்டிகிடக்கு.அன்று கதிரவன் உசாராக சூட்டை பரப்பிக்கொண்டிருந்தான்.அவன் சூடாக இருப்பதை உணர்ந்த நான் எம்பெருமான் சிட்னி முருகனை சென்று தரிசிக்க வெளிக்கிட்டேன்.வழமையாக கோடைகாலங்களில் மாலைநேரங்களில் தான் சிட்னி முருகனை போய் சுகம் விசாரிக்கிறனான் மாலை நேரங்களில் அதிகமாக பிரசாதங்கள் கிடைக்கும் அதன் மூலம் பசிஅடங்காவிட்டால் முருகனின்ட ரெஸ்ரொரன்டில் எதாவது வாங்கி சாப்பிட்டு பசியை போக்கலாம். குளிர்காலத்தில அவனை போய் சந்திப்பது குறைவு எதாவது நொண்டி சாட்டை சொல்லி வீட்டுக்குள்ளே இருந்திடுவேன் ..
அன்று காலநிலை ஒரளவு நன்றாக இருந்தது இன்றைக்கும் சாட்டு சொன்னால் எம்பெருமான் கோவித்துக்கொள்வான் என்ற பயத்தில அவனது கோட்டைக்கு சென்றேன்.
கார் கதவை திறந்து இறங்க முதல் ஒருத்தர் அருகே ஒடிவந்தார்.
"கிடைச்சதோ"
ஒரு கணம் நான் திகைத்துவிட்டேன்,காசு கிடைச்சதோ அடி கிடைச்சதோ ,எது கிடைச்சது என கேட்கிறார் என முழிப்பதை அறிந்தவர்
"போஸ்ட் பொக்ஸுக்குள்ள ஒரு கடிதம் போட்டேன் கிடைச்சதோ"
"ஒம்மோம் .....ஓ அந்த மொட்டை கடிதமோ"
"யூ கான்ட் செ தட் ,இட் இஸ் எ பெட்டிசன்"
"நான் அதை மொட்டை கடிதமாத்தான் பார்க்கிறேன்"
"அப்ப உந்த கொமிட்டிக்காரங்கள் செய்யிறதெல்லாம் சரி என்று போட்டு சும்மா இருக்கப்போறீயளே"
"எனக்கும் கொமிட்டிக்காரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ட
டிலிங் எல்லாம் எம்பெருமான் முருகனுடன் மட்டும் தான்"
"சும்மா இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்கள் வாக்குகளை எங்களுக்கு தந்தால் உந்த கொமிட்டிக்காரங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்கலாம்"
" நான் மெம்பர் இல்லை"
"ஏன்டாப்பா பொய் சொல்லுகிறாய் உன்ட பெயர் மெம்பர்லிஸ்டில் இருக்கு நான் பார்த்து போட்டுத்தான் உன்னை மறிச்சனான்."
"நானில்லை மனிசி தான் மெம்பர் "
"அப்படியே அப்ப உன்னோட கதைச்சு பிரயோசன்மில்லை,அவளிட்ட கேட்கிறேன்"
"அண்ணே குடும்பத்தில புடுங்குபாடுகளை உண்டாக்காமல் சும்மா விடுங்கோ"
"இதில என்ன புடுங்குபாடு இருக்கு"
"நீங்களும் உந்த கொமிட்டிகாரரும் செய்யிற அட்டாகாசம் ஊர் அறிந்த விடயம் இதுக்குள்ள என்ட மனிசியையும் அனுப்ப நான் தயாரில்லை"
சரி புதுசா என்ன திட்டம் கொண்டு வாறீயள் "
" எல்லாம் பழசுதான் கார் பார்க்,தேர்முட்டி கட்டுற விடயங்கள் தான்"
"என்ன ஒரு நூறு பேர் இருப்பியள் நீங்களே உங்களுக்குள் கதைத்து ஒரு நல்ல முடிவு எடுக்கலாம் தானே,உந்த கார் பார்க் விடயம் ஐந்தாறு வருசம் இழுபடுதானே"
" இந்த முறை எப்படியும் ஒரு முடிவு எடுக்க வேணும் அது தான்proxyக்கு ஒடிதிரிகின்றேன் ,முப்பது சேர்த்து போட்டன் இன்னும் கொஞ்சம் சேர்த்தால் மற்ற கோஸ்டியை மடக்கி போடலாம்"
"சரி பின்னேரம் வீட்ட வாங்கோ வாங்கி தாரன்"
முருகனை வழிபட உள்ளே சென்றேன் வேலுடன் சாந்த சொருபமாக வீட்டிருந்தான் .முருகா உன்னை காக்க உன் பக்தர்கள் போட்டி போட்டு அடிபடுகிறார்கள் நீ என்னடா என்றால் "நான் உண்டு என் வேலையுண்டு" என்று இருக்கின்றாய் என புலம்பிகொண்டிருந்தேன்.
"டேய் லூசா நீயும் போய் அப்படி இருந்து பார் நிம்மதியாக இருக்கும்"
சொல்லுவது போல தனது வேலில் இருந்த அழகிய ரோஜா பூவை எனது காதில் வைத்தான்.
இதுக்கு பிறகும் முருகனுடன் வாக்குவாதப்பட மனம் இடம் கொடுக்கவில்லை சுற்றி கும்பிட்டுவிட்டு வெளியேறி
வெளி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினேன்.
பின் தோளில் ஒருவர் தட்டி
"இப்ப தான் நினைச்சனான் உம்மை சந்திக்க வேணும் என்று ,கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது என இதைதான் சொல்லுறது, முருகன் விடமாட்டான் அவனின்ட விடயங்கள் தோல்வியடைய "
இவரை எனக்கு பெரிதாக பழக்கமில்லை இரண்டு மூன்று தடவை மற்றுமோர் நண்பரின் விருந்துபாசரத்தில் உட்சாக பாணம் அருந்தியதன் மூலம் பழக்கமானவர்.ஆங்கிலம் ,தமிழ் சிங்களம் எல்லாத்திலும் பாண்டித்தியம் பெற்றவர் அதுமட்டுமல்ல ஒர் பொறியியாளர்.
மற்றும் அரசியல் ,கிறிக்கட்,விளையாட்டு போன்ற செய்திகளும் நன்றாகவே அறிந்து வைத்திருப்பவர்.
" ஹலோ ! என்ன விடயமா என்னை சந்திக்க இருந்தீங்கள்?"
"உம்மட புரொக்சியை எனக்கு தரவேணும் உவங்களுக்கு ஒரு பாடம் படிபிக்க வேணும்"
" யாருக்கு "
"உந்த கோவில் கொமிட்டிக்காரங்களுக்கு"
நானும் ஒன்று தெரியாத மாதிரி
"கோவில் நல்லாதானே நடக்குது, கொமிட்டிக்காரார் நல்லாத்தானே நடத்தினம்."
"நீர் எங்க இருக்கிறீர் ஐசெ,உந்த கார் பார்க்கும்,தேர்முட்டியும் கட்டுறதிலதான் பிரச்சனை"
" முருகனிட்ட இடம் இருக்கு ,பணம் இருக்கு சந்தோசமா கட்டிமுடிக்கலாம் தானே"
"மற்ற கோஸ்டி 200 கார்விடக்கூடிய மாதிரிதான் பிளான் வைச்சிருக்கினம்,எங்கன்டஆட்களின்ட பிளான்படி 225 கார் விடலாம்"
"என்ன 25 கார் விடுகிறதில தான் பிரச்சனையே"
"அதுமட்டுமல்ல உந்த புரஜக்ட் எங்கன்ட ஆட்கள் தலைவராகவும் செயலாளராகவும் இருக்கும் பொழுது தான் தொடங்கி வைச்சவயள்,அதை நாங்கள் தானே முடிச்சு வைக்க வேணும் "
"ஒரு பொது நோக்கோடு செய்கிற காரியத்தை யார் தொடக்கினால் என்ன முடிச்சால் என்ன"
" "நீர் என்ன ஐசே சிம்பிளா சொல்லிபோட்டிர்,நோங்கு குடிக்கிறது ஒருத்தன் விரல் சூப்பிறது இன்னோருத்தனே,அவையள் தேர்முட்டியை கிழக்கில் கட்டவேணும் என்டிச்சினம் நாங்கள் எதிர்த்து வடக்கில் கட்ட வேணும் என்று சொல்லி போட்டம் "
"அப்படியே சங்கதி"
" நான் முப்பது புரோக்சி சேர்த்திட்டன் உம்மடைய தாரும்"
"உமக்கு தந்திருப்பன் கோவிலுக்கு வரும் பொழுது கணேசர் கேட்டவர் ஒம் என்று சொல்லி போட்டன் ,அவர் உம்மட கோஸ்டி தானே"
"ஐயோ அந்த கிழவனிட்டயே கொடுத்தனீர் அந்தாள் மற்ற கோஸ்டி,
அடுத்த முறை உம்மட புரோக்சியை எனக்கு தாரும் இப்பவே சொல்லி வைச்சிட்டன்"
அடுத்த முறை உமக்குத்தான் என்று சொல்லி போட்டுவிடைபெற்றேன்,அவர் நினைச்சுகொண்டு திரிவார் அடுத்த முறை என்ட புரோக்சி அவருக்கு என்று ,ஆனால் ஆளுக்கு தெரியாது நான் மெம்பர் இல்லை என்ற செய்தி.
காரில் ஏறி சிடியை அழுத்தினேன்
"நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் இல்லம்"
சீர்காழியின் குரல் காதில் வந்து ஒலித்தது.
வீட்டு டிரைவேயில் கணேசரின்ட கார் நின்றது ,
" நீங்கள் பின்னேரம் வருவீங்கள் என்று நினைச்சேன் "
"உன்னட்ட புரோக்சி இல்லை என்றவுடனே நான் உசாராகிட்டேன்,கோவில் வேறு யாரும் கேட்டு எடுத்து விடுவாங்கள் என்று நேராக உன்ட வீட்டை வந்திட்டன்"
"எடுத்திட்டிங்களே"
" உன்ட மனிசி என்னை போல உசாரடா டெலிபோனில் கதைச்சே நாலு புரோக்சி எடுத்து தந்திட்டாள் ,பிள்ளை தாங்க்ஸ் அடுத்த முறையும் எனக்கு எடுத்து தா,நான் போயிட்டு வாரன் எமது வெற்றியை நாளைய தேர்தல் சொல்லும் "என பாட்டு பாடியபடியே சென்றார்
"சரி அண்ணே பிறகு சந்திப்போம் "
"ஏன்னப்பா தேவையில்லாத வேலை பார்த்தனீர் பேசாமல் உம்மட புரோக்சியை மட்டும் கொடுத்திருக்கலாமே"
" அவையள் கார் பார்க் கட்டுறது நல்ல விடயம் தானே"
" "இப்ப நாலைந்து வருசமா கட்டினம் நீங்களும் பார்த்து கொண்டு இருங்கோ ....தங்களுடைய BMW,Benz, போன்றவைக்கு தரிப்பிடம் கட்டுறதில் மட்டும் இழுபறிபடவில்லை முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணிற இடம் கட்டுறதிலும் இழுபறியாம்"
"உங்களுக்கு"
"அடுத்த முறை புரோக்சி முருகனின்ட வெயிக்கில் பார்க் பண்ணும் விடயத்தில் தான் இருந்து பாரும்"
அன்னதான கந்தன்,அலங்கார கந்தன் இந்த வரிசையில் சிட்னிவாழ் பக்தர்கள், முருகா உன்னை புரொக்சி முருகன் என வெகுவிரைவில் அழைக்க தொடங்கி விடுவார்கள்.
அருமையான பதிவு
ReplyDeleteமுருகன் துணை நிற்பான்
படிக்க மறக்காதீர்கள்
ReplyDeleteநீங்களும் திருக்குறள் எழுதலாம்!
http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html