Friday, December 31, 2010

தையனதக்கா நான் ஒரு ஈழத்தவன் குட்டிகிறுக்கள்

இனிய காலை வணக்கம் தொடர்ந்து கேட்க இருப்பது ஆத்மீக ஆராதனை என இந்திய தமிழ் பெண்குரல் வானோலியில் தவழ்ந்து வந்து என்னை எழுப்பியது. ஒவ்வொரு நாளும் என்னை எழுப்புவது இந்த ஆத்மீக ஆராதனைதான்.டி.எம்.எஸ்.இனிய குரலில் ஒரு இந்து பாடலும்,ஜோனி எபிரகாமின் குரலில் கிறிஸ்தவப்பாடலும்,இ. எம்.கானிபாவின் குரலில் இஸ்லாமிய பாடலையும் பாடி ,தங்களது மத கருத்துக்களை திணித்தார்கள்.நானும் கருத்துக்களை கச்சிதமாக உள்வாங்கிக் கொண்டு காலைக்கடன்களை முடித்து பூஜை அறைக்குள் சென்றேன்.பூஜை அறையில் சமஸ்கிருத ஒம்,பக்கத்தில் இந்திய சாமியார் சாய்பாபா கையை உயர்த்தி பிடித்து ஆசிர்வாதம் வழங்கும் போஸ் கொடுக்க ஏனைய பழைய சாமி பிள்ளையார்,முருகன்,சிவன் எல்லோரும் ஓவ்வொரு மூலையில் இருந்து என்னை பார்த்துகொண்டிருந்தனர்.எல்லோருக்கும் ஒரு வணக்கம் செய்து போட்டு ,விபூதியை எடுத்து பூசின மாதிரியும் பூசாத மாதிரியும் நெற்றியில் கையை வைத்துவிட்டு வேலைக்கு போக தயாரானேன்.இஞ்சாருங்கோ அப்பாகுஞ்சு சப்பாத்தியும்,சனாக்கறியும்(கடலைக்கறி) சாப்பாட்டு பெட்டிக்குள் போட்டு பிறிட்ஜ்க்குள் வைத்திருக்கிறன் எடுத்துக்கொண்டு போங்கோ என மனிசி கட்டிலில் அரைதூக்கத்தில் இருந்தபடியே சொல்ல சரி அடியாத்தை என்று பதிலளித்து,உணவிலும் இந்தியாக்காரன் எங்களை ஆட்டிப்படைக்கிறான் என மனதில் புறுபுறுத்தபடியே காரை ஸ்டார்ட் செய்தேன்.பிரபல இந்தியா பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் முருகா முத்துக்குமரா என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது.அவரின் குரலிலயே ஏனைய பாடல்களை கேட்டபடியே வேலைத்தளம் போய் சேர்ந்தேன்.காலை வணக்கம் சொல்லி போட்டு என்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கினேன்.ஒரு வெள்ளை பக்கதில வந்து கலோ எப்படி இருக்கிறாய் ,நான் நலம் உன்னுடைய சுகம் எப்படி என்றேன் ( இருவரும் சுகமா இருக்கிற படியால்தான் இங்க இருக்கிறோம் என மனதிற்க்குள் நினைத்துக்கொண்டேன்.) என்னடாப்பா நல்ல சந்தோசமாய் இருக்கிறாய் என்ன விசயம் ,இன்று வெள்ளிக்கிழமை அதுதான் மகிழ்ச்சியா இருக்கிறேன்,மதியம் பியர் அடிப்போம் வாரீயா என அழைப்பு விடுத்தான்.பின்னேரம் கோவிலுக்கு போக வேணும் வரமுடியாது பதிலளித்தேன்.கிரேட் வேஸ்டேர்ன் ரோட்டில் இருக்கிற இந்தியன் டேம்பிலுக்கோ என் வினாவினான்.எனக்கு கோபம் வந்திட்டுது, இந்தியன் டெம்பில் இல்லை கிந்து டெம்பில் என்றேன் .இரண்டும் ஒன்றுதானே,நீயும் இந்தியன் தானே,இதுக்கு பிறகும் என்னால் பொறுமையாக இருக்கமுடியவில்லை,நீ இங்கிலிஸ்காரனோ அவுஸ்ரேலியனோ என்று கேட்க ,எனக்கு இங்கிஸ்காரனை பிடிக்காது நான் ஒஸி என்றான் அது மாதிரித்தான் நானும் இந்தியன் இல்லை ஈழத்தமிழன் உணர்ச்சிவசப்பட்டு கூறினேன்.கூல் ...கூல் என கட்டிப்பிடித்தான்.நாங்கள் ஈழத்தமிழர்கள் காசு போட்டு கோவிலை கட்டி முருகனுக்கு விசாக்கு அப்பிலை பண்ணி இந்தியாவில இருந்து இங்க கூப்பிட்டு வைச்சிருக்கிறோம் இவன் வெள்ளை விபரம் தெரியாமல் இந்தியன் டெம்பில் என்கிரான் லூசன் பரதேசி ..கிறுக்கன் என மனதில் திட்டி தீர்த்தேன்.வேலை முடிந்து வீடடை வந்தா,மனிசியும் பிள்ளைகளும் சன் டி.வி யில் மூழ்கியிருந்தார்கள்.அமிதாப்பச்சன் விளம்பரத்திற்க்கு வந்து போனார் அவரை தொடர்ந்து சச்சின் தமிழில் பேச மகள் கேட்டாள் அப்பா அவர் டமிழா நல்லாய் டமிழ் கதைக்கிறார்,ஒம் என தலையை ஆட்டி போட்டு அடுத்து வந்த ஜஸ்வரியா ராய்யை பார்த்து ரசித்தேன். தொடர்ந்தது ஒருநாடகம் எல்லோரும் சேர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.நயாகியின் சேலை நல்லாய் இருக்கு அடுத்த முறை இந்தியாவுக்கு போய் வாங்க வேண்டும் என மனிசியும் ,அந்த ஆண்டியின் பன்கிள்ஸ் நல்லாய் இருக்கு நான் அதை இந்தியாவில வாங்க வேணும் என் மகள்மாரும் சொப்பிங் லிஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார்கள்சரி,சரி எல்லாம் வாங்கலாம் இப்ப கோவிலுக்கு போக வெளிக்கிடுங்கோ சத்தம் போட்டேன்,உடனே டி.வியை நிறுத்தி போட்டு எல்லோரும் வெளிகிட ஆயத்தமானார்கள்.பிள்ளைகள் அந்த இந்தியன் டொப்பையும் ஜீன்ஸ்ஸையும் போடுங்கோ,நான் போனமுறை இந்தியாவில வாங்கின் பன்சாபி போடப்போகிறேன்,அப்பா நீங்களும் "'குமரன் சில்க்ஸ்"வாங்கிய் குர்தாரை போடுங்கோ என்றபடியே குளியலறைக்குள் சென்றாள்7 மணி பூஜைக்கு நாங்கள் கோவிலில் நின்றோம்.ஜயர் மணி அடித்து சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி பூஜை செய்தார்.நான் தமிழில் அழகான வீடு வேண்டும் ,பிள்ளைகள் படித்து டாக்டர் ஆக வேண்டும் ,புது மோடல் பி.எம்.டபிள்யு வேணும் என்று எனது வழமையான அப்பிளிக்கேசன்களை போட்டுக் கொண்டிருந்தேன்.ஜயரின் மணிஒசை,மந்திரசத்தத்தில் நான் தமிழில் போட்ட வேண்டுகோள் முருகனுக்கு கேட்டிருக்குமோ தெரியவில்லை .ஜயர் திராவிட மொழி நமஸ்கார பஞ்சபுராண அருளுக என்று சொல்ல உடனே பிள்ளைகள் இந்திய நாயன்மார் பாடிய தேவாரம் ,திருவாசகம்,திருப்புகழ்,திருபல்லாண்டு,திருவிசைப்பா புராணம் என பாடி முடித்தனர்.நான் சின்னபிள்ளையா இருக்கும் பொழுது தேவாரம் மட்டும் நான் பாடுவேன் மிகுதியை ஜயர் பாடி முடிப்பார்.ஆனால் புலத்திலபிள்ளைகளுக்கு ஒழுங்காக சொல்லி கொடுத்திருக்கிறோம்.எங்களுடைய தமிழ் சைவகலாச்சாரத்தை காப்பாற்றுவதற்கு எங்களால் ஆன ஒரு சிறு முயற்சிதானே,இல்லாவிடில் பிள்ளைகள் வெள்ளக்காரனின் கலாச்சரத்தை பின்பற்றி அழிச்சு போய்விடுங்கள் என்ற ஒரு முன் எச்சரிக்கைதான்.பிள்ளைகள் கோவிலில் தமிழ்சைவ கலாச்சாரத்துடன் இருந்தாலும் வெளியில் ஆங்கில கிறிஸ்தவ கலாச்சாரத்தில் முழ்கி திலைக்கினம் என எங்களு க்கு விளகிங்னாலும் விளங்காதமாதிரியிருப்பம்.பசிக்குது என்று பிள்ளைகள் சொல்ல கோவிலுக்கு பின்புறமிருக்கும் கடைக்கு சென்றேன்.அங்கு தோசை,மசாலாதோசை,இட்லி,பூரி,சாம்பார்,சட்னி என வித விதமான சாப்பாடுகள் இருந்தன.எங்களுடைய பாரம்பரிய சாப்பாடாகிய புட்டு,இடியப்பம்,சம்பல் , சொதி ஆகியன இருக்கோ என எட்டிப் பார்த்தேன் ஒன்றையும் கானவில்லை.உடனே மனிசி குரல் கொடுத்தாள் உதில நின்று விடுப்பு பார்க்காமல் தோசையும் ,இட்லியும் வாங்கி கொண்டு வாங்கோ இதில இருந்து சாப்பிடுவோம், காருக்குள் உந்த தோசைகள கொண்டுபோக ஏலாது காருக்குள் பிறகு தோசை மனக்கும்.சனிக்கிழமை பிள்ளைகளை தமிழ்பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு போனேன்.அசம்பிளி முடியும் மட்டும் நின்றேன்.தமிழ்தாய் வாழ்த்து பாடினார்கள் முடிவடையும் பொழுது" வாழ்க தமிழ்நாடே "எனதமிழ்நாட்டை வாழ்த்தி ஈழத்து சிறுவர்கள்பாடி முடித்தனர்.பின்பு திருக்குறள் செப்பினார்கள் ,தொடர்ந்து காந்தியை பற்றியும் அவரின் அகிம்சை கொள்கை,எமக்கு விடுதலை வாங்கித்தந்தார் காந்தி என்று புகழ்ந்தனர் ஈழத்து சிறுவர்கள்.பாரதியாரின் விடுதலை கீதம் ஒன்றைபாடி பாரதிக்கும் மரியாதை செலுத்தினர்.என்னடா ஒரே இந்தியாப் புராணம் பாடிக்கொண்டிருக்கிறோம் நாங்களும் எங்கன்ட பிள்ளைகளும் என நினத்துகொண்டு வெளியேறும் பொழுது தியாகி திலீபனுக்கு நினைவாஞ்சலி என்ற சுவரோட்டியை பார்த்து போட்டு அங்கு செல்வோம் அங்காவது எம்மவர் நிகழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்,அவருக்கும் அஞ்சலி செலுத்தி எம்மவர் புகழ் பாடுவோம் என்ற எண்ணத்தில் சென்றேன்.முதலில் மலர் வணக்கம் நடந்தது பங்கு கொண்டேன்.பிறகு பட்டிமன்றம் இன்றைய காலகட்டத்தில் அகிம்சை போராட்டமா ஆயுத போராட்டமா சிறந்தது என விவாதம், அங்கேயும் இரு இந்தியர்கள் அகிம்சை சிறந்தது என அகிம்சை பற்றி புளுக நம்மவர் இருவர் ஆயுதம் சார்பாக விவாதித்தனர்.ஆயுதபோராட்டத்தில் வளர்ந்த சமுகம் இன்று அகிம்சை பரப்புவதற்கும் இந்தியாவின் கருத்தாதிக்கத்தை எமக்கு திணிப்பதற்கு நாமே மேடை போட்டு கொடுத்துள்ளோம் என்று புறு புறுத்தபடியே மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.எங்க போய் சுத்திபோட்டு வாறீயள்,நாளைக்கு அரங்கேற்றத்துக்கு போகவேணும் உடுப்புகளை ரெடி பண்ணி வையுங்கோ என்றாள் .எனக்கு உதுகளை பார்க்கவிருப்பமில்லை நீர் போயிட்டு வாரும் என்றேன்.உங்களை யார் வந்து பார்க்க சொன்னது ,எனக்கு சீலையை உடுத்து கொண்டு அவ்வளவு தூரம் கார் ஒட ஏலாது சீலை கசங்கி போயிடும் அதுதான் உங்களை வரச்சொன்னேன்.பார்க்க விருப்பமில்லை என்றால் என்னையும் பிள்ளைகளையும் கொண்டுபோய்விட்டிட்டு நீங்கள் காருக்குள் நித்திரை கொள்ளுங்கோவன் எனகட்டளையிட்டாள்.அடுத்தநாள் அரங்கேற்றத்திற்கு சென்றேன் ,மேடையில் ஒரு குட்டி இந்தியாவே காணக்கூடியதாக இருந்தது.இந்திய கலைஞர்கள்,இந்திய உடைகள்,இந்திய மொழிகள்( கன்னடம் ,தெலுங்கு)இந்திய நடனங்கள்........இந்திய பெண்கள்பார்வையாளர்கள் மட்டும் எம்மவர்கள் .........தையன தக்கா தையன தக்கா ....என இசை ஒலிக்க தொடங்க .........நான் ஒரு ஈழத்தவன் எந்த கொம்பனும் எனக்கு இந்திய கருத்தியலை திணிக்க முடியாது .........தையனதக்கா தையனதக்கா..என பார்த்து இருந்து ரசித்தேன்..

No comments:

Post a Comment