Thursday, September 27, 2012

கிரிக்கட்டும் அர‌சியலும்

அவன் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன்.கிரிக்கட் விளையாட்டு என்றால் அவனுக்கு நிகர் அவனேதான். பாடசாலை முடிந்து வீடு வந்து உணவு உட்கொண்டபின்பு மீண்டும் அதே பாடசலைக்கு விளையாடுவதற்காக சென்றுவிடுவான்.பாடசாலை அவனது வீட்டிற்க்கு  அருகாமையில் இருந்தமையால் மிகவும் வசதியாக இருந்தது .விளையாட்டு ஆசிரியரும் அவனோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்.தேனீர் ,சிற்றூண்டிகள் போன்றவைகளை கொடுப்பான்.ஆசிரியரும் சில விளையாட்டு நுட்பங்களை கற்றுகொடுத்தார்.
படிப்பில் அவ்வளவு சுட்டி என்று சொல்ல முடியாது.ஆனால் ஆங்கிலத்தில் அவனுக்குத்தான் அதிக புள்ளிகள் கிடைக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்தில்தான் இவனுடன் உரையாடுவார்கள் இவனும் நன்றாகவே ஆங்கிலத்தில் அந்த வயசில் பேசுவான்.
பாடசாலை கிரிக்கட் அணியில் தெறிவு செய்யப்பட்டிருந்தான்.பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் அவன் தான் அந்த பாடசாலையின் நாயக ஆட்டக்காரன்.ஒரு மட்ச்சில் எதிரணியை வெற்றியடைய 2 ஒட்டங்கள்தான் பெற வேண்டிய நிலை இவன் அதை செய்தான் அன்றிலிருந்து அவன் தான் பாடசாலை "கீரோ"...அந்த காலத்தில் டெஸ்ட் மட்ச்சுக்கள் அதிகமாக நடை பெறும். ஐம்பது ,இருபது ஒவர் மட்ச்கள் நடைபெறுவதில்லை.டெஸ் விளையாட்டுக்கள் அநேகமாக வெற்றி தோல்வி இன்றிதான் முடிவடையும்.கடைசி நாள் பந்தை தடுத்து விளையாடியே அந்த சாதனை நிலை நாட்டிவிடுவார்கள்.
மாவட்ட அணிக்கும் தெரிவு செய்தார்கள்.நாட்டின் விளையாட்டு குழுவிற்க்கு தெரிவு செய்ய பல முறை அழைத்தார்கள் ஆனால் தெரிவு செய்யவில்லை அவனது மொழி ,பிராந்திய அரசியல்வாதிகளின் செல்வாக்கின்மை முக்கிய காரணம் என்பதை அவன் இன்றும் ஏற்றுகொள்ள தயராகவில்லை.
அரசியல்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான்.அரசியல் ஒரு தீண்டத்தகாத விடயம் என்ற கருத்து அவனது  குடும்பத்தில் இருந்தது. இனபாகுபாடு காரணமாக தனது விளையாட்டு திறமை நாடளவியரீதியில் பிரகாசிக்கவில்லை என்பதை அவனால் சிந்தித்து பார்க்ககூட முடியவில்லை. பாடசாலை ,விளையாட்டு,கோவில் இதுதான் அவனது செயல்பாடுகள்.புத்தகம் வாசிப்பது என்றால் கிரிக்கட் சம்பந்தமான புத்தகம்தான் வாசிப்பான்.இங்கிலாந்து,மேற்கிந்திய தீவுகள்,இந்தியா போன்ற நாடுகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் விபரணங்களை எங்களுக்கு வந்து சொல்லுவான். மேற்கிந்திய தீவுகளின் விளையாட்டு வீரர்களை புகழ்ந்து கொண்டிருப்பான்.அந்த அணியை சேர்ந்த வீரர்கள்தான் இவனது நாயகர்கள்.இவனது பள்ளி பருவகாலத்தில் அவர்களது அணி உச்சத்தில் இருந்தது.எது உச்சத்தில இருக்கின்றதோ அதை நாடுவது மனித இயல்பு அந்த வகையில் அவனும் அந்த அணியை நேசித்திருக்கலாம்.பத்திரிகையில் வரும் படங்களில் துடுப்பாட்ட வீரர்களின் அக்சன்களை பார்த்து தானும் அதே போல ஆடுவான்.
தொழில் தேடி கொழும்பு சென்றான்.அவனது மாமனாரின் வீட்டில் பல சிங்கள நண்பர்கள் இருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாடினான்.மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இவனும் அவர்களும் ஆங்கிலத்திலயே உரையாடினார்கள்.ஆங்கிலமும் கிரிக்கட்டும் மேட்டுகுடிகளின் ஒரு அடையாளம். இவனது விளையாட்டு திறமையால் சிங்கள நண்பர்களின் ஸ்போர்ட் கிளப்பில் சேர்ந்து பிரகாசிக்க கூடியதாக இருந்தது.கொழும்பு செல்லும் பொழுது சிங்கள மொழி பேசமாட்டான் .  காலப்போக்கில் அதையும் கற்றுகொண்டான்.நணபர்களுடன் சிங்கள மொழியில் பேசக்கூடிய தேர்ச்சியும் அடைந்தான்.
கிரிக்கட் விளையாட்டின் திறமையாலும்,ஆங்கில அறிவாலும், மாமனாரின் சிங்கள நண்பரின் செல்வாக்கினாலும் அவனை ஒரு தனியார் நிறுவனத்தில் பயிற்சி கணக்காளராக பணிபுரிய அழைத்திருந்தார்கள்.

வேலைக்கு சென்று கொண்டு அதே நேரம் கணக்காளர் தேர்வுகளையும் கற்று பாஸாகி கொண்டிருந்தான் இதனால் அவனுக்கு அதே கொம்பனியில் கணக்காளர் பதவி கிடைத்தது. தனிஅறை,கார் போன்றவை நிறுவனத்தால் வழங்கப்படிருந்தன. சிங்கள வாகனசாரதியையும் நிறுவனம் அவனுக்காக  வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவன் மாத்தையா என அன்பாக அழைப்பான்.கார் கதவை திறந்துவிடுவான் மற்றும் அலுவலகத்தில் சிற்றூழியம் செய்வான். தேனீர் போட்டுக்கொடுத்தல் மற்றும் மனைவியை கடைகளுக்கு அழைத்து செல்வான்.

காலையில் வேலைக்கு சென்றவுடன் ஆங்கிலப்பத்திரிகை எடுத்து முதலில் பார்ப்பது கிரிக்கட் சம்பத்தப்பட்ட விடயங்களைதான். சிற்றூழியன் பத்திரிகையுடன் நல்ல சூடான தேனீரும் கொண்டு வந்து கொடுப்பான்.
தொழில் புரியும் காலங்களிலும் அரசியல் செய்திகளை அவன் வாசிப்பதில்லை சர்வதேச செய்திகளையும் ,சர்வதேச நாணய மற்றும் வியாபரசெய்திகளை மட்டும் விரும்பி படிப்பான்.அது அவனது தொழிலுக்கும் அவசியமாக இருந்தது.கொழும்பில் குண்டு வெடித்தால் அதையும் ஒரு செய்தியாகவே பார்த்தான்,அதன் காரணத்தை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை."அன்ன கொட்டி போம்ப தம்மா"என சிற்றூழியன் எதாவது வெடிச்சத்தம் கேட்டு சொன்னால் அதே உணர்வுடன் இவனும் இருப்பான்.சும்மா தேவையில்லாமல் இவன்கள் குண்டு வைக்கிறாங்கள் என மனதில் எண்ணிக்கொள்வான்.
ஒரு சில இனக்கலவரங்களையும் சந்திக்கவேண்டியிருந்தது.படிப்பறிவற்றவர்கள் செய்கின்றனர் நல்ல சிங்களவர்கள் செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தான்.ஒரு இனக்கலவரம் நடைபெறும் பொழுது அலுவலகத்தில் இருந்தான். உடனே சிங்கள நண்பர்கள் அவனது வீட்டுக்கு அழைத்து சென்று அவனையும் அவனது மனைவியையும் தங்களது வீட்டில் வைத்து காப்பற்றினார்கள்.இதனால் சிங்களவர்கள் மீது அவனுக்கு ஒரு மதிப்பு எற்பட்டுவிட்டது.இது இனக்கலவரமில்லை ஒரு படிப்பறிவற்ற குழு இன்னோரு குழுவின் சொத்துக்களை கொள்ளை அடிக்கின்றனர் என்ற எண்ணத்துடன் இருந்தான். பல மாதங்களாக அவனையும் மனைவியையும் சிங்கள நண்பர்கள் மிகவும் கவனமாக கவனித்து வந்தனர்.அவர்கள் வேலைக்கு செல்லும் பொழுது ஒன்றாகவே அழைத்து செல்வார்கள்.

இனக்கலவரங்கள் அவனது மனைவியை பயங்கொள்ள வைத்தது. அவளது அண்ணன் அவுஸ்ரேலியாவில் இருந்தபடியால் அவளும் அவுஸ்ரேலியா சென்று உயிர் பிழைப்போம் என்றிருந்தாள்.கணவனிடம் சொல்லி அவுஸ்ரேலியா தூதரகத்துக்கு நேரடியாகவே சென்று விண்ணப்பத்தை கையளித்தாள்.கல்விதகமைகாரணமாக அவர்களுக்கு விசா உடனே  கிடைத்தது.அவனுக்கு அவுஸ்ரேலியா வரவிருப்பமில்லயென்றாலும், மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக அவுஸ்ரேலியா வந்து சேர்ந்தான். அவுஸ்ரேலியாவில் நிரந்தர  வேலை கிடைத்தது.வாகனம் ஒட்டுவதற்க்கும் ,மற்றும் சிற்றூழியம் செய்ய  வேலையாட்கள்  இல்லை என்பது ஒரு குறையாக இருந்தது. மாத்தையா என்று கூப்பிட ஆட்கள் இல்லை .எல்லோரும் பெயர் சொல்லி அழைத்தனர் .இதனால் சிங்களவர்கள் நல்லவர்கள் என்ற எண்ணம் மேலும்  வளரத்தொடங்கியது
. சிங்களநண்பர்களுடன் தொடர்பில் இருந்தான். விடுமுறைக்கு கொழும்புக்கு சென்றால் சிங்கள நண்பர்களை மறக்காமல் போய் சந்திப்பான் அவர்களும் இவனை வந்து சந்திப்பார்கள்."   கொட்டிகே வட தமாய் ஒக்கம" என சொல்லுவார்கள் இவனும் ஆமா போடுவான். அவுஸ்ரேலியா வந்த பின்பு கொழும்பில் குண்டு வெடித்தால் மட்டும் செய்தியாக தெரியும்..நாட்டின் எனைய பகுதியில் நடந்தவைகள் பற்றி எதுவும் தெரியாது காரணம் முன்னனி ஊடகங்கள் அந்த செய்தியை பிரசுரிப்பதில்லை . சிறிலங்காவின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் என்ற சிங்களவர்களின் கருத்தோடு ஒன்றாகி நின்றான்.
.முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பின்பு பல சிங்களநண்பர்கள்  அவனை தொடர்பு கொண்டார்கள்.புலிகளால் பல சிறுவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் .அங்கு இருக்கும் நீங்கள் உதவி செய்யவேண்டும்  என கோரிக்கை விட்டனர்.

எங்களது விளையாட்டு கழகத்தினர் 25 ஆண்டு நிறைவு விழா இந்த வருடம் கொண்டாடுகிறோம் "ஒயா தமாய் ஜீவ் கேஸ்ட்",என சிங்கள நண்பனின் அழைப்பை கேட்டவனுக்கு சிங்களவன் உண்மையிலயே நல்லவன் என்று மனதில் எண்ணிக்கொண்டா.....


பத்திரிகையில் இவனது படத்துடன்  செய்தி பிரசுரமாகியிருந்தது.புலத்திலிருந்து வந்த தமிழர்கள் புலிகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவி.......



ஆர் ஆர்

1 comment:

  1. >>இனபாகுபாடு காரணமாக தனது விளையாட்டு திறமை நாடளவியரீதியில் பிரகாசிக்கவில்லை என்பதை அவனால் சிந்தித்து பார்க்ககூட முடியவில்லை.

    இதுவும் ஒருவித 'தேங்காய்ப் பார்ட்டிதான்" . வெளியே தமிழ், உள்ளே சிங்களம்.

    ReplyDelete