Tuesday, July 24, 2012

வேள்வி+பங்கிறைச்சி..

வருடத்தில் ஐந்தாறு தடவையாவது வேள்வி,பங்கிறைச்சி,அடிச்ச ஆடு, என எங்கள் வீட்டில் கதை அடிபடும்.சிறு வயதில் இதைப்பற்றி அதிகம் விளக்கமில்லை .சனிக்கிழமைகளில்தான் இந்த அடிச்ச ஆடு,வேள்வி விளையாட்டு எல்லாம் நடைபெறுவது வழக்கம். கொழும்பிலிருந்து சொந்தக்காரர் வந்தால் அநேகமாக பங்கிறைச்சி வீட்டில் இருக்கும்.
இந்த பங்கிறைச்சி வியாபாரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான் ஈடுபடுவார்கள்.ஒரு ஆட்டை வாங்கி கொலை(அடிச்ச) செய்து பங்கு போட்டு விக்கும் பொழுது ஒரளவு பணம் சம்பாதிக்ககூடியதாக இருக்கும். பொருளாதாரத்தில் ஒரளவு வசதியானவர்கள் பங்கிறைச்சியை ருசிப்பார்கள்.
எங்கள் வீட்டுக்கு பங்கிறைச்சியை வழங்குபவர் ஒரு சலவை தொழிலாளியாவார்.அவர் பரம்பரையாக எங்களுடைய பரம்பரையினருக்கு பங்கிறைச்சி வியாபாரம் செய்வதாக அம்மம்மா சொன்ன ஞாபகம்.

அவர் ஆடு அடிக்கும் பொழுது " பிள்ளை வார சனிக்கிழமை ஆடு அடிக்கிறோம் ஒரு பங்கு தரட்டோ"
(ஆட்டின் எல்லா பாகத்தையும் சமனாக எல்லோருக்கும் பங்கிட்டு கொடுப்பது __ ஆட்டிறைச்சியில் ஜனநாயகம்)
"மூளையையும்,குடலையும் போடாமல் எங்களுடைய பங்கை கொண்டுவாங்கோ"
"எத்தனை வருசமா உங்களுக்கு கொடுக்கின்றேன் உதை நீங்கள் எனக்கு சொல்ல வேணுமே பிள்ளை நான் பார்த்து பக்குமாக கொண்டு வந்து தருகிறன் "

சனிக்கிழமை பத்து மணியளவில் பனை ஒலையில் பார்சல் பண்ணி இறைச்சியை வீட்டை கொண்டு வந்து தந்திடுவார்.பனை ஒலையை கீழே உருட்டி ஒரு முடிச்சு போட்டு அதனுள்ளே இறைச்சியை போட்டு மேலே இன்னோரு முடிச்சு போடப்பட்டிருக்கும். இதைதான் பறி என அழைப்பார்கள் என் நினைக்கிறேன்.(இந்த தகவல் பிழையாகவும் இருக்ககூடும் யாராவது சரியான பெயர் தெரிந்தால் அறியத்தரவும்)

மாமாவும் , அப்பாவும் கள்ளு அடிச்சுபோட்டு 2 மணியளவில் சாப்பிட வருவினம்,சாப்பிடும் பொழுது இறைச்சி பற்றிய கருத்து தொடங்கிவிடும்.

"போனமுறையிலும் பார்க்க இந்த முறை இறைச்சி நல்லாய் இருக்கு" என்பார் அப்பா.
"அத்தான் எனக்கு என்னவோ நீங்கள் ஆனைக்கோட்டையிலிருந்து கொண்டு வந்த இறைச்சி இதை விட நல்லாய் இருந்தது"
"அது வேள்வி இறைச்சி ஆனபடியால்தான் அந்த ருசி, அதை நீ அடிச்ச ஆட்டிறைச்சியுடன் ஒப்பிட முடியாது"
"நான் கொழும்பில் இறைச்சி வாங்கிறதில்லை.செம்மறியையும்,மாட்டையும் கலந்து போடுவாங்கள் ஊர் சமான் போல வராது.அது சரி அக்கா போனமுறை கொழும்புக்கு போகும் பொழுது போத்தலில் கறி போட்டு தந்தீங்கள்"

"என்ன இந்த முறையும் போத்தலை உடைச்சுப்போட்டியே"

"சீ சீ இந்த தடவை வடிவாக பார்சல் பண்ணிதந்தனீங்கள் தானே ஆனால் கறி பெரிதாக எழும்பவில்லை"

"அது டவுனில் காக்கா கடையில வாங்கினது சில நேரம் அவன்களும் சுத்துமாத்து பண்ணி போடுவாங்கள்.அநேகமாக நல்லது தான் தருவாங்கள், பக்கத்து வீட்டு குகன் தான் வாங்கப்போனவன் சின்ன பெடியன் என்ற படியால் ஏமாத்தி போட்டாங்கள் போல கிடக்குது."
சாப்பாடு முடியமட்டும் இறைச்சியை பற்றிய கருத்து பகிரப்பட்டு கொண்டேயிருக்கும்.
அந்த வயசில இறைச்சியில் இவ்வளவு பாகுபாடு இருக்கு என எனக்கு விளங்கவில்லை என்னை பொறுத்தவரை அம்மா எந்த இறைச்சியை சமைத்தாலும் ஒரே ருசியாகத்தான் இருக்கும்.அது அம்மாவின் கை பக்குவம்.அவர் சமைத்த கறிக்கும் வேறு யாராவது சமைத்த கறிக்கும் வித்தியாசம் காணகூடியதாக இருக்கும் ஆனால் வேள்வி ,பங்கு, அடிச்ச ஆடு,காக்கா கடை இறைச்சிகறிகளுக்கு இடையே வித்தியாசம் காணுவது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இறைச்சியில் இவ்வளவு வேறுபாடு இருக்கே இதுகளை பற்றி ஆராச்சி செய்ய வேண்டும் என்று என்னுடை புத்திசாலித்தனம் அறிவுரை சொல்லிச்சு.அப்பாவிடம் கேட்டு அறியலாம் ,அவர் இறைச்சி வாங்கும் பொழுது நானும் போகவேண்டும் என தீர்மானித்து ஒருநாள் அப்பா விடம் கேட்டேன்.
"அப்பா அடுத்த முறை இறைச்சி வாங்கும் பொழுது நானும் வாரன்"

" சீ சீ நீ எல்லாம் அங்கு வரக்கூடாது "

"ஏன் அப்பா"

"பார்த்து பயந்து போய்விடுவாய்"

"எப்படி அப்பா ஆட்டை கொல செய்வினம்"

"அதுகளை பற்றி எல்லாம் உனக்கு தேவையில்லை இப்ப நீ போய் படிக்கிற வேலையை பார், அம்மா சமைக்கிற கறியை சாப்பிடு" என எச்சரித்தார்.
ஒருநாள் அப்பாவுடன் சைக்கிளில் டவுனுக்கு போக வேண்டி வந்திட்டுது. எனக்கும் மீசை எல்லாம் அரும்பி வயசுக்கு வந்திட்டன் என்ற ஆணவம் வரத் தொடங்கிட்டுது.அவர் என்னை முதல் முதலாக யாழ்ப்பாணத்தின் மத்தியிலிருந்த பழைய சந்தைக்கு அழைத்து சென்றார். (இந்த சந்தை சிங்கள பொலிஸ்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டு பின்பு இந்த இறைச்சிக்கடைகள் பண்ணைக்கு போற வழியில் கட்டியிருந்தார்கள்) சைக்கிள் தரிப்பிடத்தில் சைக்கிளை நிற்பாட்டி போட்டு உள்ளே போனேன்.ஒரு பகுதியில் மரக்கறி இன்னோரு பகுதியில் இறைச்சி கடை தொகுதி. கூலி வேலை செய்வோர்,முதலாளி மாரெல்லாம் ஐயா வாங்கோ ஒரே கத்திகொண்டு வாடிக்கையாளர்களை தம் பக்கம் அழைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பா நேராக ஒன்பதாவது இறைச்சி கடை பக்கம் போனார் .அங்கே வாசலில் தொப்பி, வெள்ளை பெனியன், சாரம் உடுத்திய ஒரு வயதானவர்
"ஐயா வாங்கோ,எப்படி இருக்குறீங்க ,யார் மகனோ ,எத்தனை இறாத்தல் போட,"
இப்படியே கதைத்த படியே அடுத்த வடிக்கையாளரை பார்த்து ஐயா வாங்கோ.....
ஒரே இரத்தவாடை, கடையினுள்ளே ஆடுகள் தோல் உரிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது.
"சவ்வுகளை போடாமல் நல்ல தொடை துண்டில வெட்டி நாலு இறாத்தல் போடுங் கோ"


"ஐயாவுக்கு அந்த"கிடா" வின்ட தொடையில வெட்டி போடு"

கத்தியை தீட்டி போட்டு உள்ள இருந்த தொழிலாளி இறைச்சியை வெட்டி பழைய செய்திபேப்பரில் சுத்தி பின்பு அதை மாட்டுத்தாள் பேப்பரில( சீமேந்து பை) சுத்தி தந்தார்.
" இவன் என்ட மகன் தான் அடுத்த முறை இவனை அனுப்புவன் நல்ல இறைச்சியா பார்த்து கொடுத்து விடுங்கோ"

"தம்பி கடையை வாடிவா பார்த்து கொள் ஒன்பதாம் நம்பர் "
நானும் தலையை ஆட்டிப்போட்டு இறைச்சியை வாங்கி ஒலை பைக்குள் போட்டு சைக்கிள் கைபிடிக்குள் கொழுவி சைக்கிளை ஸ்டார்ட் செய்தேன்...
ஒரு நாளைக்கு வேள்வி நடக்கும் இடத்துக்கு போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்திட்டுது.
,"ஆனைகோட்டையில் வேள்வி நடக்குதாம், கனகு பங்கு போடுறானாம் நீயும் சொல்லி விட்டனியோ பிள்ளை" என பக்கத்து வீட்டு ஆச்சி அம்மாவிடம் கேட்க "போய் எடுக்க ஆள் இல்லை அதுதான் யோசிக்கிறேன் "
" குகன் போறான் அவனோட கண்ணனை ஆனுப்பிவிடன் இரண்டு பேருமாய் போய் எடுத்திட்டு வரட்டும்"
"அவன் சின்ன பெடியன் அதுகளை பார்த்து பயந்து போயிடுவான்."
"சும்மா அவனை பொத்தி பொத்தி வள சரி காசை தா குகனிடம் நான் சொல்லி எடுத்து தாரன் "
அம்மாவும் காசை கொடுத்துப்போட்டு வேறு அலுவல்கள் பார்க்க சென்றுவிட்டார்.
ஆனால் நான் அம்மாவுக்கு தெரியாமல் குகனுடன் வேள்வி நடக்கும் இடத்திற்க்கு போய்விட்டேன்.ஆனைக்கோட்டையில் சாவக்கட்டு என்ற ஊரில்தான் இந்த வேள்வி நடந்தது.
சிறு வைரவர் ஆலயத்திற்க்கு முன்னால் பெரிய சாக்கின் மேல் பனை ஒலையால் பின்னப்பட்ட பாய் இரண்டு போட்டு அதில் மலை போல் சோறு குவிக்கபட்டிருந்தது .அதன் மேல் இரண்டு மூன்று சிறிய ஆடுகள் தோல் உரித்து வாட்டி வைக்க்ப்பட்டிருந்தன.அதே போல் கோழிகள், அவித்த முட்டைகள் என்பனவும் படைக்கப்பட்டிருந்தன.
இவற்றுக்கு முன்னால் மிகவும் வாட்டசாட்டமான ஆசாமி கையில் கொடுவா கத்தியுடன் நெற்றியில் விபூதி சந்தனத்துடன் நின்றிருந்தார்.அவரின் கண்கள் நன்றாக சிவந்திருந்தது.கத்தியின் நுனியில் தேசிக்காய் குத்தியிருந்தது.
மக்கள் கூட்டமாக நின்றிருந்தபடியால் உள்ளே சென்று பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது . நான் ஒரு மாதிரி சுழிச்சுகொண்டு உள்நுழைந்து வேடிக்கை பார்த்தேன்.(அன்று நான் எனது கையடக்க தொலை பேசியை கொண்டு செல்ல மறந்து போனேன் ஆனபடியால்தான் உங்களுக்கு படம் காட்ட முடியாமல் போய்விட்டது....)

வேள்வி ஆசாமிக்கு ஐந்தாறு அடியாட்களும் உதவிக்கு நின்றிருந்தனர்.அவர்களும் உற்சாக பாணம் அடித்தது போல் உற்சாகமாகவே நின்றார்கள்.ஆட்டுச்சொந்தகாரர் ஆட்டை கட்டிஇழுத்து கொண்டு வரும் பொழுது உடனே அடியாட்கள் பெரிய சத்தத்துடன்ன கேதியா கொண்டுவா என கத்துவார்.ஆடு படையலுக்கு முன்னால் வந்தவுடன் ஒருவர் முன்னங்காலையும் தலையயும் பிடிக்க வேறு இருவர் பின்னங்காலை பிடிக்க ஆசாமி கழுத்தில் ஒங்கி ஒரு வெட்டு தலை வேறு உடம்பு வேறாக விழும் .இரத்தம் நிலத்தில் பாய்ந்தன.சில ஆடுகளின் உண்ட உணவு எல்லாம் வெளியே வந்து விழுந்தன.
சேவல்களும் கிடாக்களும் வேள்வியில் பலியிடப்படும் .(ஆண்கள்)

குகன் என்னை தேடிவந்து"டேய் வாடா போவம் கனகரின்ட ஆடு வெட்டியாச்சாம் போய் பங்கை எடுப்போம்"
வேள்வி தொடர்ந்து கொண்டிருந்தது.கன்கரின்ட வீடும் ஆனைகோட்டையில் தான் இருந்தது.கனகரின்ட வீட்டுக்கொட்டிலில் ஆட்டை கட்டி தூக்கி தோலுறிச்சு பங்கு போட்டுக்கொண்டிருந்தார்.
"குகனுக்கு என்னை விட நாலு வயசு அதிகம் இதனால் இறைச்சியை பற்றிய விடயத்தில் அனுபவம் உடையவர் என்று சொல்லலாம்.
எனவே என்னுடைய சில சந்தேகங்களை அவரிடம் கேட்டேன்..
"அண்ணே வேள்வி ஆடு ,அடிச்ச ஆடு, காக்கா கடை ஆடு இதுகளுக்கு என்ன வித்தியாசம்?"

" கிடா ஆடுகளை நல்லாய் புல்லு மேய விட்டு,சாப்பாடு தேவைக்கு அதிகமாகவே கொடுத்து வளர்த்து சில நேரம் சாரயம் கொஞ்சம் கொடுப்பார்கள்(உண்மை பொய் இதுவரை எனக்கு தெரியாது)சதை பிடிப்பான ஆடு நல்ல ருசியாக இருக்கும்.இப்படி வளர்த்த ஆட்டை சாமிக்கு முன்னால் பலி கொடுப்பார்கள்.
அடிச்ச ஆடு சாமிக்கு முன்னால் வெட்டுவதில்லை,வீட்டில் வளர்த்து வியாபாரத்துக்காக வெட்டி பங்கு போடுவது,காக்கா கடை சகல ஆட்டையும் வெட்டி விறபார்கள்,மறி ஆட்டையும் கலந்து விற்பார்கள்."
ஒரு ஆட்டிறைச்சி பிரசங்கமே செய்து முடித்தார் குகன் அண்ணா.

30 வருடங்களுக்கு பின்பு ஒருநாள் குகன் அண்ணா கேட்டார்"டேய் உனக்கு பங்கு இறைச்சை வேணுமே"
" என்ன பகிடி விடுகிறியளே சிட்னியில பங்கிறைச்சியோ?போர போக்கைபார்த்தால் வேள்வி இறைச்சி இருக்கு என்றும் சொல்லுவியள் போல"
"வார சனிக்கிழமை புளு மவுன்டனில்(Blue mountain) உள்ள வார்முக்கு (Farm)போறேன் அங்க உனக்கு விருப்பமான ஆட்டை காட்டினால், வெட்டதோலுரித்து தருவார்கள் வீட்டை கொண்டுவந்து பங்கு போட்டு பிரிட்ஜ்க்குள் (Fridge)போட்டன் என்றால் ஒரு மாத்தத்திற்க்கு காணும்"

"அண்ணே அப்ப அது பங்கிறைச்சி இல்லை பிரிட்ஜ் இறைச்சி"
ஆட்டிறைச்சியிலயே இவ்வளவு பாகுபாடு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
இன்று வரைக்கும் வேள்வி இறைச்சி, அடிச்சஆடு,காக்கா கடை(சிட்னியில் கலால் இறைச்சி)வித்தியாசம் தெரியவில்லை...

அம்மா சமைத்த கறியின் ருசி அம்மாவுடன் போய்விட்டது

இப்ப மனிசி சமைக்கிற கறிதான் ருசி.....ஆகா...ஆகா....

பி. குறிப்பு...எனக்கு என்னவோ எங்கன்ட வேள்வியில் இருந்துதான் கலால் வந்திருக்கு என்று எனது எட்டாம் அறிவு சொல்லுது.

    1 comment:

    1. >ஆடு வெட்டுவதில் ஒரு pHD ஏ செய்திட்டியள் ..

      இப்ப கொலஸ்திரோல் பயம் இல்லையே?

      ReplyDelete