Thursday, April 20, 2017

நமச்சிவாய

ஞாயிற்றுக்கிழமை காலையில் நீச்சல் தடாகத்திற்கு செல்வது சுரேஸின் வழக்கம்..தடாகத்திலிருந்து வெளியே வந்து நீச்சல் உடை அழகிகளை ரசித்தபடி உடை மாற்றும் அறைக்கு செல்ல தயாரானான்.
"சுரேஸ்"குரல் வந்த திசை திரும்பி பார்த்தான்
கந்தர் டெனிஸ் விளையாடுற உடுப்போடு கறுத்த கண்ணாடியுணிந்து  அமர்ந்திருந்தார்.
"என்னடா ,எப்ப தொடக்கம் நீச்சலுக்கு வார எல்லா வகை நீச்சலும் இப்ப  பழகிட்டியோ"
"நீச்சலுக்கு வரயில்லை"
"பின்ன என்னத்துக்கு ஐசே தடாகத்துக்கு  வாரீர் சுவிமிங் சூட் போட்ட பெட்டைகளை பார்க்கவே"
"சும்மா போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் லொள்ளுதான்அதுசரி நீங்கள் கறுத்த கண்ணாடி போட்டுங்கொண்டு ரசிக்கிறியள்போலகிடக்கு"

"என்னதான் வயசு போனாலும் உந்த விசயத்தில் மனசு கொஞ்சம் ததும்பத்தான் செய்யுது,மகனும் மருமகளும் வெளியாலபோயிட்டினம்,அதுதான் நான் உவங்களை கூட்டிக்கொண்டு வந்தனான்"

கந்தரின்ட பேரன் ஒருத்தனுக்கு மூன்று வயதுதான் இருக்கும் கையில்  போனை வைச்சு விளையாடிக்கொண்டிருந்தான் மற்றவன்ஆறு வயசிருக்கும்  தடாகத்தில் நீச்சல் பழகிக்கொண்டிருந்தான்.
"‍ஹாய் உங்கன்ட பெயர் என்ன"
திரும்பி ஒரு முழுசு முழுசிப்போட்டு மீண்டும் ஐபோனில் இளையான் கலைத்துகொண்டிருந்தான்.
"நீ என்னடாப்பா ஊர் பெடியளிட்ட கேட்கிறமாதிரி அவனிட்ட தமிழில் கேட்கிறாய் அவங்களுக்கு தமிழ் தெரியாது"
"ஏன் அண்ணே நீங்கள் தமிழ்தானே அவங்களோட தமிழில் கதைக்கலாம் தானே"
"தமிழ் உனக்கு சோறு போடப்போகுதே சும்மா தமிழ் தமிழ் என்று கொண்டு நிற்கிறாய்"
சொல்லி போட்டு தன்னுடைய பேரன்களை பற்றி புகழத்தொடங்கினார்.
"உவன் இருக்கிறானே அண்ணனை வென்டவன் .ஐபொனுக்குள்ள புகுந்து விளையாடுவான்.எனக்கு தெரியாதெல்லாம் அவனுக்குஅத்துப்படி."
"எத்தனை வயசு "
"இப்பதான் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாடினவன்.,காலையிலிருந்து பின்னேரம் வரை உதை வைச்சு நோன்டிகொண்டிருப்பான்  செய்யிற வேலைகள் எல்லாம்  ஆறு வயசு காரங்களின்ட வேலைமற்ற எங்கன்ட தமிழ்பிள்ளைகளை விட இவன் கெட்டிக்காரன்."
இப்படித்தான் ஒருநாள் தாய் தகப்பனுடன் வந்தவன் ,அவையள் சூவிமிங்பூலில்  இறங்கிட்டினம் இவன் கதிரையிலிருந்து விளையாடிகொண்டிருந்தவன் திடிரென தாய் தகப்பனை பார்த்திருக்கிறான் அவையளை காணவில்லை என்று போட்டு 000 அடிச்சுபோட்டான்,அவையள் திரும்பி வரும்பொழுது பெடியன் லொலிபொப் கையுடன் பொலிஸாருடன் சிரிச்சு கதைச்சு கொடுநிற்கிறான்.
கந்தரின்ட புளுகுமூட்டைகளை நங்கு அறிந்த சுரேஸ்
"இருங்கோ அண்ணே உடுப்பை மாற்றிப்போட்டு வாரன்"உடுப்பு மாற்றும் இடத்திற்கு சென்று டவலை இடுப்பில கட்டி கொண்டுமாற்றத்தொடங்கினவன் முன்னால இரண்டு வெள்ளைக்காரன்  அம்மணமாக நின்று தங்களது ஆடைகளை மாற்றிகொண்டிருந்ததைபார்த்துவிட்டான் .கன்றாவிகள் என திட்டிப்போட்டு , சீ சீ அதேன்ன கும்பகோணத்தில அம்மணமாக நின்றால் சாமி  கங்காரு நாட்டில்நின்றால் கன்றாவியே... அவன் திறந்தவன்....இவன் துறந்தவன்
 " நமச்சிவாய"

மன அழுத்தம் வந்தால்நமச்சிவாய,நமச்சிவாய"சொல்லி மனதை சமதானப்படுத்தி கொள்வது சுரேஸின் பழக்கம்.
நமச்சிவாய சொன்னவனுக்கு தனது பாடசாலை ஆசிரியர் கூறிய கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது
சுரேஸ் நீ சொல்லு தோடுடைய செவியன் தேவராம் பாடியது யார்?
"சம்பந்தர் சேர்"
"எத்தனை வயசில பாடினவர்"
"மூன்று வயசில"
"கெட்டிக்காரன்"
"ஏன் அந்த தேவாரத்தை பாடினவர்"
"பெற்றோர்கள் அவரை கரையில் வைத்துவிட்டு நீந்த சென்றுவிட்டார்கள்,அவர்களை காணவில்லை என்று பயந்த சம்பந்தர் சுவாமிகள்அம்மையே அப்பா என்று அபயக்குரல் எழுப்பினார் உடனே உமாபதியாரும் சிவபெருமானும் தோண்றி அவருக்கு பால் கொடுத்துஅவரின் அழுகையை நிறுத்தினார்கள்"
உடுப்புக்களை மாற்றி ஈர உடைகளை பையுனுள் வைத்து தோல்பையை எடுத்துகொண்டு கந்தரிடம் சென்றான்.
"அண்ணே நான் வாரன்"
"சுரேஸ்  அவசரமாய் போறியோ"
"இல்லை அண்ணே ஏன் "
"இவனோட கொஞ்ச நேரம் இருக்கிறியோ பெரியவனின் உடுப்பை மாற்றிப்போட்டு ஒடிவாரன்"
"தம்பி இந்த அங்கிளோட இருங்கோ அண்ணாவுக்கு செஞ் பண்ணியிட்டு உடேனே வாரன்என்று ஆங்கிலத்தில் சொல்ல
பார்த்து மீண்டும் ஒரு முழியள் முழிச்சு போட்டு ஐபோனில் முகத்தை புதைத்தவன்என்ன நினைத்தானோ தெரியவில்லை அவனைபார்த்து ஒரு புன்முறுவலை உதிர்ந்தவன் பக்கத்தில்  இருக்கும்படி தலையால் சைகை காட்டினான்.
தன்னை படம் எடுத்தான் பிறகு சுரேசைக் கேட்காமலயே  அவனையும் படம் எடுத்தான்.சிறிது நேரம் போக விழுந்து விழுந்து சிரிக்கதொடங்கிவிட்டான் .சுரேஸ் பயந்து போனான் ,
"வட் கப்பின் வை யு ஆர் லாவிங்"
 ஏன் இவன் சிரிக்கிறான் என்று பதட்டப்படாமல் கேட்ட படியே வந்த கந்தர்"தாங்ஸ் சுரேஸ்என்றார்.
தமையனிடம் கைதொலைபேசியை காட்டினான் அவனும் கெக்கட்டம் விட்டு சிரிக்க தொடங்கி விட்டான்.
கந்தர் ஆங்கிலத்தில் அவங்களை திட்டிப்போட்டு கைதொலைபேசி வாங்கி பார்த்து சிரித்துவிட்டு  சுரேசிடம் காட்டினார்.
திடுக்கிட்டு விட்டான் அவனது முகம் நரியின் முகமாக மாற்றப்பட்டிருந்தது.
வி கான் மொர்ப் யு  பேஸ் இன்டு டொன்கி,மங்கி,அன்ட் டொக்"ஹா...ஹா ...என்று சொல்லி விடை பெற்றனர் பசங்களும் கந்தரும்.
"நமச்சிவாய.நமச்சிவாய"
மீண்டும் அவன் மனம் பாடசாலைக்கு சென்றது.
"நரியை பரி ஆக்கியது யார்"
"சிவபெருமான்"
"நமச்சிவாய....நமச்சிவாய"
வைப்பிரேசன் மோட்டிலிருந்த கைத்தொலைபேசி அதிர்ந்தது.
இதுவும் ஒரு அதிசயம் தான் ,பிறமனிதர்களின் தொடுதலின்றி எமது உடம்பை அதிரவைக்க‌ முடியுதே...எல்லாம் தொழிநுட்பத்தின்உச்சம் தான்.... நினைத்தபடி
‍"‍ஹலோ "
"இன்றைக்கு மாணிக்க வாசகரின்ட குரு பூஜை "
"அதுக்கு நான் என்ன செய்ய "
"நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் வார வழியில சுதாவின்ட வீட்டை போய் அவளின்ட அம்மாவின்ட சீலை ஒன்று தருவா வாங்கிகொண்டு வாங்கோ"

"என்னடி ஆத்த உனக்கு அம்மாவின்ட சீலை கட்டுற வயசு வந்திட்டெ"
"ஐயோ... எங்கன்ட பெரியவளை புட்டுக்கு மண் சுமந்த‌ கதையில் வருகின்ற
 செம்மணச்செல்வியா  வெளிக்கிடித்து பின்னேரம் குரு பூஜைக்கு கூட்டிப்போக வேண்டும் அதுகுத்தான் ."
"சரி வாங்கிகொண்டு வாரன் வைக்கட்டா"
"ஓம் வையுங்கோ"

எல்லோருக்கும் எப்படி பிரம்படி பட்டிருக்கும் ,எப்படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் மெசெஜ் பாஸ் பண்ணப்படிருக்கும்.....அந்தகாலத்தில டெக்னோலொஜி இதை விட நல்லா இருந்திருக்குமோ.
இப்ப  ஐடி கார்ட் ,மொபைல் எல்லாத்தையும் கழுத்தில  தொங்கவிடுறமாதிரி அந்த காலத்தில உருத்திராட்சையைதொங்கவிட்டுகொண்டு சனம் திரிஞ்சதுகள் .இந்த உருத்திராட்சைகளுக்கும் இமயமலையிலிருந்த எம்பெருமானுக்கும் வயர்லெஸ்  தொடர்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்குமோ.கையில் இரும்பால் செய்த ஆயுதங்கள் ,தலையில் பரபோலிக் அன்டனா....எல்லாம்தொடர்பாடலுக்கு ஏற்றவகையிலிருந்திருக்கு...
"நமச்சிவாய  நமச்சிவாய"
என்ன கோதாரி பிடிச்ச எண்ணங்கள் என்றபடி    சுதாவீட்டுக்கு போய் சேலையை எடுத்துகொண்டு வீடு சென்று அங்கிருந்த சிவாஸைபார்த்தான்.என்ன தீர்த்தமாடப்போறியே வடுவா பயளே என்று கேட்பது போலிருந்தது ...


6 comments:


  1. பள்ளிப் பாடங்களில்
    படித்த நினைவுகள்
    நன்றே இளையோடி இருக்கிறது
    அருமை

    ReplyDelete
  2. அடடா அடடா நீங்க பொண்மனச்செல்வி வரலாறு எல்லாம் நல்லாக தெரிந்து இருக்கின்றீங்க!

    ReplyDelete
  3. புதிய தொழில்நுட்பக்கருவிகளை உள்ளீடு செய்து உங்கள் போல யாரும் எழுத முடியாது பாஸ்! தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  4. தனிமரம் இப்போது தனிமரம்.கொம் என்ற முகவரியில் மீண்டும் வந்து விட்டேன் இனி தொடர்ந்து பேசுவோம்!

    ReplyDelete
  5. நன்றிகள் யாழ்வாணன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.

    ReplyDelete
  6. நன்றிகள் தனிமரம் ...நீண்ட நாட்களின் பின்பு சந்திப்பதில் மிக்க மகிழ்சி ....

    ReplyDelete