Saturday, April 20, 2013

அளவெட்டியில் இருந்து அடையார்வரை

"அம்மா, நான் மிருதங்கம் பழகட்டே"

"நீ என்ன மேளக்காரனின்  பிள்ளையே ,போய் படிக்கிற அலுவலை பார்"

"அது மேளம் இல்லை அம்மா ,மிருதங்கம்...நேற்று சரஸ்வதி பூஜைக்கு பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் வந்து ,வ‌டிவா தலை எல்லாம் ஆட்டி அடிச்சவர், "

"எனக்கு மேளத்திற்கும் மிருதங்கத்திற்கும் வித்தியாசம் தெரியும் ,நீ சொல்லித்தரத்தேவையில்லை"

அம்மா மிருதங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னபின்பு சுரேஸ் மிருதங்க கச்சேரி,மேளக்கச்சேரி  போன்றவற்றின் ரசிகனாக மட்டும் இருந்தான்.

ஊர் கோவிலில் சுரேஸ் குடும்பத்திற்கும் ஒரு திருவிழா ஒதுகப்பட்டிருந்தது. சுரேஸின் உறவினர்கள் எல்லோரும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள். கோவில் மேளத்துடன்   இன்னும் இரண்டு கூட்ட
மேளம் அவ‌ர்களின் திருவிழா அன்று நடை பெறும் .எனையோரின் திருவிழாவில்  ஆறு ,எழு கூட்ட தவில்  கச்சேரி நடை பெறும்.ஒரு திருவிழாவையும் சுரேஸ் தவறவிடமாட்டான். திருவிழா வேலைகளை முன்னுக்கு நின்று சுரேஸ் கவனித்துகொள்வான்.

தவில் வித்துவான்களையும்,நாதஸ்வர வித்துவான்களையும் அச்சவாரம் கொடுத்து திருவிழா தினத்தன்று வரவழைப்பதற்காக  அளவெட்டிக்கும், இணுவிலுக்கும் சென்று வித்துவான்மாரிட்ட‌ காசையும் கொடுத்து திகதியைசொல்லுவான்.

"தம்பி இந்த முறை உபயகாரரிட்ட சொல்லி  காசை கூட்டி தாங்கோ"

"ஒம் வித்துவான் ,அப்பாவிட்ட சொல்லுறன்,ஆனால் நீங்கள் இந்த முறை புதுசா வந்த‌ மூன்றுமுடிச்சு படப்பாடலை முதல் தரம் எங்கன்ட திருவிழாவில்தான் வாசிக்க வேணும்"

"ஒம்,ஒமோம்...."

திருவிழா தினத்தன்று மதிய சாப்பாட்டுக்கு  அடிச்ச ஆடு ,சாராயம் எல்லாம் வீட்டில் வைத்து வித்துவான்களுக்கு கொடுக்கப்படும்.சாராயம் அளவாகத்தான் கொடுக்கப்படும்  போதை கூடினால் இரவுக்கச்சேரிக்கு வரமாட்டார்கள் என்று பயத்தால் அந்த முன் எச்சரிக்கை.

வித்துவான்கள்  தங்கத்தால் செய்த புலிப்பல் மாலை,ஐந்து விர‌லுக்கும் மோதிரம் அணிந்திருப்பார்கள் . சில வித்துவான்கள் தங்களது நாதஸ்வரத்திற்கு தங்கத்தால்  சில அலங்கார வேலைப்பாடுகள் செய்திருப்பார்கள்.இவற்றை எல்லாம் பார்த்து சுரேஸ் எண்ணியதுண்டு இவர்கள் பெரிய பணக்காரர்கள்
என்று.

இப்படித்தான் ஒருமுறை திருவிழா ஒழுங்குகளுக்காக கூட்டம் நடை பெறும் பொழுது

"இந்த முறை சின்ன மேளத்தை கூப்பிடுவமோ"என ஒரு பெரிசு கருத்து சொல்ல‌

"சீ சீ ..சின்னமேளத்தை கூப்பிட்டியளோ நான் இந்த திருவிழா கொமிட்டியிலயே இருக்க மாட்டன்"என
இன்னொரு பெரிசு மாற்றுக்கருத்து சொல்ல

"நீ இல்லாட்டி கொடி ஏறாதே"

"என்னடா சொன்னாய்"

உடனே சமாதன விரும்பிகள் எல்லாம் இரண்டு பெரிசுகளையும் சாந்தப்படுத்தி சின்ன மேளம் இந்த
தடவை வேண்டாம் அடுத்த முறை கூப்பிடுவோம்...என ஏகமனதாக முடிவு செய்தனர்.

பொம்பிளைகள் தவில் அடிச்சு நாதஸ்வரம் வாசிச்சா நல்லா  இருக்காது.என சில அம்மாமார்
ஆதங்கப்பட்டினம்.

(1970 களில் சின்னமேளம் அழிய தொடங்கிவிட்டது.)

சிட்னியில் நடைபெறும் கலை,கலாச்சார,பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு சுரேஸ் சமுக அளிக்க
தவறுவதில்லை.இலவச நிகழ்ச்சியான அரங்கேற்றத்திலிருந்து பணம் செலுத்தும் தென்னிந்திய நட்சத்திர இரவு வரை செல்வது அவனது பொழுது போக்கு என்றோ,அல்லது அடுத்த சந்ததியினருக்கு
கலை பண்பாட்டை எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு உயர்ந்த உள்ளம் என்றோ நீங்கள் நினைக்ககூடாது.....

சுவிங்கத்தை மென்றுகொண்டு குருத்தாரும், பாண்ட்ஸும் அணிந்து கலை ஆர்வமிக்க ந‌டுத்தர
வர்க்க கமானவான் போல அரங்கின் முன் அமர்ந்திருந்தான்.இடைக்கிடை தனது மீசையையும் தடவிக்கொள்வான்... நிகழ்ச்சி தொடங்கிய பின்புதான் தெரிந்த‌து அது மிருதங்க அரங்கேற்றம் எண்டு. வழ‌மையாக அரங்கேற்றம் என்றால் பரதநாட்டியம் தான் நடை பெறுவது வழக்கம். சனிக்கிழமைகளில் வீட்டில் இருந்தால் குடியும் குடித்தனமும் ஆக‌ இருப்பான் என்ற காரணத்தால் மனைவி இவனை இப்படியான நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுவிடுவாள்.ரசனை இருக்குதோ இல்லையோ நிகழ்ச்சியில் இருப்பான்.

திரைச்சேலை விலகியதும் செல்வன் கமேஸின் மிருதங்க அரங்கேற்றம் என அழகாக ஆங்கிலத்தில்
எழுதியிருந்தார்கள்.கமேஸும் தனது திறமைகளை ந‌ன்றாக வெளிப்படுத்தினான்.ஒவ்வோரு ஆவர்த்தன‌மும் முடிய சபையோர் பலத்த கரகோசம் செய்தனர்.

பிரதமவிருந்தினராக  வந்திருக்கும் "அடையாறு திரு சுப்பு சர்மா" அவர்களை மேடைக்கு வருமாறு தாழ்மையுடன் அழைக்கிறோம் என அறிவிப்பாளர் அறிவித்தவுடன் சுப்பு மேடைக்கு சென்றார்
சபையில் இருந்து பலத்த கரகோசம் எழும்பியது. சுப்பு சர்மா தனது சிஷ்யன் கமேஸ் பற்றி புகழ்ந்தார்
..இந்தியாவில் இருந்து கமேஸின் பெற்றோரின் பணத்தில் சிட்னிக்கு வந்து போட்டு கமேஸை
புகழாமல் உம்மடை பக்கத்து வீட்டுக்காரனையே புகழுவான் என நீங்கள் நினைப்பது புரிகின்றது.சுப்பு சர்மாவுக்கு பொன்னாடை போர்க்கப்பட்டது..கமேஸ் சர்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

அடையாறு கலைஞனுக்கு கிடைத்த முதல் மரியாதை அளவெட்டி கலைஞனுக்கு கிடைக்கவில்லை. மிருதங்கமும் தோல்கருவி,மேளமும் தோல் கருவி வாசிப்பது மனிதன் இருந்தும் பாகுபாடு
. அவனது சோசலிச மூளை சோசலிசம் பேசியது.

இப்படிதான் இன்னோரு நாள் எதோ வியுசன் முயுசிக் என்று போனான்.மேல‌த்தேய இசையும் கீழைத்தேய இசையும் ஒன்றாக கலக்கிற இடம் என்று சனம் சொன்னதை கேட்டுப்போட்டு இவனும் சென்றான்.

மேடையில் பலவிதமான இசைக்கருவிகள் இருந்தன‌ ஒரு சில இசைக்கருவிகள் மட்டும் இவனால் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. பெண் ஒருவர் நாதஸ்வரம் போன்ற கருவியை வைத்திருந்தார் நாதஸ்வரத்தை விட சிறியது. இன்னொரு பெண் நாதஸ்வரம் போன்ற வளைந்த ஒரு கருவியை வைத்திருந்தார்.இரு கருவிகளும் நல்ல பளபளப்பாய் மின்னியது.வெளிநாட்டுக்காரன்  நாதஸ்வரத்தை மாத்திப்போட்டாங்கள் என்று எண்ணினான்.

"இங்க பாரன் எங்கன்ட நாதஸ்வரத்தை இந்த வெள்ளைகள் என்ன செய்து வைத்திருக்குதுகள்,அதை வைச்சிருக்கிறது எங்கன்டஆட்களின் பிள்ளைகளே"என பக்கதில் இருந்த மனைவியிடம் கேட்டான்.

"நாசமாய் போச்சு அது நாதஸ்வரமில்லை,வலப்பக்கம் இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது கிலாரினட்,நடுவில இருக்கிற பிள்ளை வைச்சிருக்கிறது சக்சாபோன்,அந்த இரண்டு பிள்ளைகளும்
எவ்வளவு அழகாக  வாசிக்கினம்.....உதுக்குத்தான் சொல்லுறனான் இப்படியான‌ இசை நிகழ்ச்சிக்கு
வந்து பொதுஅறிவை வளர்க்க வேணும் என்று
...."

2 comments:

 1. அடையாறு கலைஞனுக்கு கிடைத்த முதல் மரியாதை அளவெட்டி கலைஞனுக்கு
  கிடைக்கவில்லை. மிருதங்கமும் தோல்கருவி,மேளமும் தோல் கருவி வாசிப்பது
  மனிதன் இருந்தும் பாகுபாடு . அவனது சோசலிச மூளை சோசலிசம் பேசியது.  இதிலை குத்தியிருக்கிறியள் குத்தூசியாலை :lol: :lol: .வேலிப்பொட்டு அடைபட்டால் சரி :D . பாராட்டுக்கள் புத்தா .

  ReplyDelete
 2. உங்களுக்குத் தெரியாது புத்தன், அடையாறுதான் பெஸ்டு, அளவெட்டி, வேஸ்டு

  ReplyDelete