Sunday, May 6, 2012

புனிதம்

வழமையாக எம்மவர் கொண்டாட்டங்கள் இந்த மண்டபத்தில்தான் நடை பெறும்.கலியாணவீடு,பிறந்தநாள் ,மனித சாமிமார்களின் பூஜை,மற்றும் கோவில்கள் கட்டமுதல் சாமியை இங்கு வைத்துதான் பூஜை செய்வார்கள் பின்பு கோவிலுக்கு எடுத்து செல்வார்கள் இப்படி பலவித எம்மவர்களின் சடங்குகள் இந்த மண்டபத்தில் நடை பெறும் நானும் பலதுக்கு சென்று இருக்கிறேன் .இனிமேலும் செல்வேன்.

நன்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கு நடை பெற்றது .பலர் வந்திருந்தார்கள் அநேகமானவருக்கு அறிமுகம் தேவைப்படவில்லை எல்லோரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள்.
பெண்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் சேர தொடங்கினார்கள் ,ஆண்களும் தண்ணி நன்பர்கள் ஒன்றாக சேரத் தொடங்கினார்கள். இளம் வயதினர் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டனர்.

நான் இருந்த இடத்திற்கு நன்பன் வந்து பார் திறந்திருக்கு வாங்கோ என்று அழைக்க எப்படா கூப்பிடுவான் என்று பார்த்து கொண்டிருந்த எங்களுக்கு அவன் கூப்பிட்டவுடனே எல்லோரும் எழுந்து மதுபானம் இருந்த மேசைக்கு சென்றோம்.

எல்லோரும் தங்களுக்கு தேவையான அளவில் ஊத்தி "கையில கிலாசு கிலாசு ஸ்கொட்ச்சு" என்ற தோரணையில் நின்று அடித்து கொண்டிருந்தார்கள்.

ஒரு காலத்தில் சுரேஸ் போராட்டத்திற்க்கு தன்னை அர்பணித்திருந்தவன் அவன் மீது ஒரு வித மரியாதை இருந்தது.நாங்கள் இப்படி தண்ணி அடிச்சு சந்தோசமாக வாழும் பொழுது மக்களுக்காக போராடியவன் என்ற எண்ணதில் அவனை மனம் புனிதனாக ஏற்று கொண்டுவிட்டிருந்தது.அதே எண்ணத்தில் அவனருகே சென்று,"எப்படிடப்பா இருக்கிறாய் கன காலமாக காணவில்லை"," "ஊருக்கு போய்விட்டு நேற்றுத்தான் வந்தனான் ஊர் அந்த மாதிரியிருக்கு ஒரு பிரச்சனையும் ஆர்மிக்காரன் நிற்கிறான் தான் ஆனாலும் சனத்துக்கு பிரச்சனை இல்லை நீ போரது என்றால் இப்ப போகலாம்".

10 தமிழனுக்கு ஒரு இராணுவம் என்றரீதியில் அங்கு அரச படைகள் இருக்கின்றன,அங்கு பிரச்சனை இல்லை இப்ப போகலாம் என சொல்லுகிறான் இவன் எல்லாம் என்னத்துக்கு ஆயுதம் தூக்கினான் எனக்கு புரியவேயில்லை .ஒரு இனத்தை இன்னொரு இனம் ஆயுதபலத்தோடு ஆளும் பொழுது அது ஒரு சாதாரண சூழ்நிலை என எப்படி இந்த புனித போராளியால் கூறமுடிகிறது.ஆயுதத்திற்க்கு பயந்து மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று கூறியிருந்தால் உண்மையிலயே அது ஏற்றுகொள்ளக்குடியதாக இருந்திருக்கும்.புலத்திலிருந்து நாம் உயிர் ஆபத்தில்லாமல் ஊருக்கு சென்று திரும்பி வந்தால் தாயக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என அர்த்தமில்லை என்பது எப்படி இவனுக்கு புரியப் போகிறது.
எனக்கு அடித்த வெறியும் சிறிது நேரத்தில் இறங்கிவிட்டது தொடர்ந்து அவனுடன் பேசுவதை தவிர்த்து கொண்டேன் .இன்னுமொரு கிலாஸ் எடுத்து அடிச்சேன் ,பழைய பாடல்கள் ஒலிக்க தொடங்கின,எழுந்து நடக்கவேணும் ,கையை காலை ஆட்ட வேண்டும் என்ற ஒரு உணர்வு வரதொடங்கியது.வேறு சிலர் அந்த உணர்வுக்கு செயல் வடிவம் கொடுத்தார்கள் .நானும் இணைந்து கொண்டேன்.சிலர் உடற்பயிற்சிசெய்த மாதிரி இருந்தது ஆனால் நான் மட்டும் வடிவாக ஆடுற மாதிரி எனக்கு தெரிந்தது.


அடுத்த நாள் அதே மண்டபம் எம்மவர்களின் பஜனை வழிபாடு நடைபெற்றது அதற்கு எனது சிறிய தாயாரை அழைத்து சென்றேன்.அவர் இந்த சாமியாரின் தீவிர ரசிகை,பக்தை,, எப்படியாவது எடுத்துக்கொள்ளலாம்.ஆண்கள்அதிகமானோர் வெள்ளை சேர்ட்,வெள்ளை காற்சட்டை அணிந்திருந்தார்கள் .நான் கறுத்த காற்சட்டை ,சாம்பல் நிற டிசேர்ட்டும் அணிந்து சென்றிருந்தேன்.
வாசலில் எல்லொரும் பாத அணியை கழற்றி வைத்திருந்தார்கள்.நானும் கழற்றி வைத்துவிட்டு சின்னம்மாவின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று ஒரு இருக்கையில் அமர்த்தி விட்டு அவரின் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.உடனே வெள்ளை சேர்ட் அணிந்திருந்த முதியவர் என்னை பார்த்து மற்ற பகுதியில் இருக்கும்படி சைகை காட்டினர்.பிறகுதான் புரிந்தது நான் இருந்த பகுதி பெண்கள் பகுதியாம் மற்றது ஆண்கள் பகுதியாம்.ஆண்கள் பகுதியிலிருந்து அந்த முதியவரை நோட்டம் விட்டேன்.அவர் பெண்கள் பகுதியை கவனித்து கொண்டிருந்தார் ஆனால் வாய் பஜனை பாடிக்கொண்டிருந்தது.
மண்டபத்திலிருந்த கதிரைக்கு முதல்மரியாதை கொடுக்கப்பட்டிருந்தது.பட்டால் போர்த்து பூவால் அலங்கரித்து தீபம் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இதே மண்டபத்தில் பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பாதணிகளுடன் உள்ளே வந்து தண்ணி அடித்து சினிமா பாட்டு பாடி குத்தடித்தோம்.ஆனால் இன்று அதே இடம் புனிதமாக அறிவித்து பலதடைகளை வித்தித்தார்கள்.இக்குழுவினரின் புனித பிரதேசத்தில் புனிதமில்லாத நானும் ஒரு அங்கத்துவனாக பஜனைபாடி ,பிரசாதம் உண்டு வெளியேறினேன்.அந்த பக்தர்களில் எத்தனை பேர் புனிதர்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்குதான் வெளிச்சம்.
இன்னோரு நாள் அதே மண்டபத்தில் கலியாண வைபவம் நடை பெற்றது மனைவியுடன் சமுகம்ளித்திருந்தேன்.வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது,வாசலின் இரு பக்கமும் சிறுமிகள் சந்தனம்,குங்குமம்,கற்கண்டு தட்டுகளுடன் வரவேற்றார்கள்.
சந்தனமும், குங்குமமும் நெற்றியை அழங்கரிக்க,கற்கண்டு வாய்க்கு ருசி அளிக்க ராஜ நடைநடந்து உள்ளே சென்றேன் .மேடையில் மணவறை பூக்களால் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இந்து சடங்குகள் நடைபெறுவதற்கு ஏற்ற முறையில் புனித பிரதேசமாக இருந்தது.
மணவறையிலிருந்த மாப்பிள்ளையை எங்கேயோ கண்டமாதிரி இருந்தது ,உடனே யார் என அடையாளம் காணமுடியாமல் மனிசியிடம் கேட்டேன் .மனிசியும் தெரியாது எனதலையாட்டினாள்.
நீண்ட ஆராச்சியின் பின் அவர் வேலை செய்யும் இடம் தெரிய வந்தது, எனது சந்தேகத்துக்கு விடை கிடைத்தது.பலதடவை இவரை வேறு ஒரு பெண்னுடன் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுத்ததை கண்டது ஞாபகத்தில் வந்தது.அந்த முத்ததின் கவர்ச்சியால் அவர்கள் இருவரும் எனது மனதில் இடம்பிடித்திருந்தார்கள்.
நல்ல காதலர்கள் என எண்ணியதுண்டு. ஆனால் இன்று வேறு பெண்னுடன் கலியாண மேடையில்,அன்றைய அவர்களின் அந்த முத்தம் நிச்சம் அவர்களை அந்தரங்கம் வரை எடுத்து சென்றிருக்கும் இன்று வேறு பெண்னுடன் புனிதனாக மாப்பிள்ளை கோலத்தில் .....

அர்ச்சகர் சமஸ்கிருத்தத்தில் மந்திரங்கள் சொல்லிகொண்டிருக்க இன்னுமொரு அர்ச்சகர் உதவி புரிந்துகொண்டிருந்தார்.அந்த அர்ச்சகரை பார்த்த கந்தர்
"உவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கு"
"அட எனக்கு இன்றைக்குத்தான் தெரியும்"
சிறிது நேரத்தின் பின்பு மணமக்கள் அர்ச்சகர் இருவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள். போனகிழமையும் இந்தாளின்ட காலில் சிலர் விழுந்து கும்பிட்டதை கண்டனான் .அநேகருக்கு அர்ச்சகர் என்றால் புனிதர்கள் என்ற நினைப்பு அவர்களும் மனிதர்கள் தப்பு தண்டவாளங்கள் செய்வார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
கலியாண சாப்பாட்டை ஒரு பிடிபிடித்துவிட்டு மணமக்களை வாழ்த்தி அன்பளிப்பு செய்து வீட்டை வெளிகிட்டேன்.

வானொலியில் பெண் அறிப்பாளர் நிகழ்ச்சி நடத்தினார்.சில பக்தி பாடல்கள் ஒலிபரப்பி குடும்ப வாழ்வு பற்றிய கட்டுரைகள் ,கணவன் மனைவிக்கு இடையில் அன்பு எப்படி உருவாகும் போன்ற நல்லவிடயங்களை தான் படித்த புத்தகத்திலிருந்து வாசித்து கொண்டிருந்தார்.இந்த பிள்ளை நல்ல கருத்துகள் சொல்லுது என்ற படியே வானோலியின் வோலியுமை கூட்டினேன்.ஒழுங்காக புருசனுடன் குடும்ப நடத்தாமல் வேறு ஒருத்தனுடன் ஒடிப்போட்டு இப்ப எங்களுக்கு அறிவுரை சொல்லுறாள் நீங்களும் அவளின்ட கருத்து நல்லம் என்று கேட்கிறீயள் ,நிற்பாட்டுங்கோ றேடியோவை கத்தினாள் என்ட மனிசி.
ஏன் ஒடினவள் என கேட்க வேணும் போல இருந்தது ஆனால் கேட்வில்லை வீண்வம்பு என்னத்துக்கு என தவிர்த்துவிட்டேன்.

"யாழ்களத்தில புனிதம் என்று ஒரு கிறுக்கள் புத்தன் என்ற ஒருத்தர் கிறுக்கியிருக்கார் .கிறுக்களை பார்த்தால் அந்த மனுசன் நல்லவர் போல இருக்கு நீங்களும் வாசியுங்கோ"

"அது நான் தான் நேற்று கிறுக்கினான்"

"அட சீ..................நாசமறுப்பு"


யாவும் கற்பனையே.....மீண்டும் சொல்லுகிறேன் இது கதையல்ல சும்மா எண்ணங்களின் கிறுக்கலே 

1 comment:

  1. உங்கள் பார்வைகளும் சிந்தனைகளும் இது வரை பார்க்காத ஒரு புதிய கோணத்தை நமக்குக் காட்டிச் செல்கின்றன புத்தன்.

    அத்தோடு தீர்ப்புகளைச் சொல்லாமல் வாசகனை தீர்மானிக்க - சிந்தனையைக் கிளறி விட்டுச் சென்றது இன்னும் சிறப்பு.

    இந்த word verification ஐ எடுத்து விடுங்கோவன். பலரும் வந்து சுலபமாகக் கருத்துச் சொல்ல அது சுலபமாக இருக்கும்.

    ReplyDelete